உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/எவையும் போம்!

விக்கிமூலம் இலிருந்து

63. எவையும் போம்!

சின்னஞ்சிறு மகவாக உலகிலே பிறக்கின்றோம். தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்து பெரியவர்களும் ஆகின்றோம். அந்தத் தாயின் அன்பு அளவிடற்கும் அரியது. தன் குழந்தையைப் பேணி வளர்ப்பதில் அவளுடைய கருத்து முழுவதும் சென்றிருக்கும்.

உணவு உடலுக்கு ஆக்கந்தருவது, அறுசுவையோடும் கூடிய உணவில், எது உடலுக்கு நலந்தரும் என்றறிந்து கொள்வது நல்லுடலுடன் வாழ்வதற்கு உதவும். தாயோடு இந்த உணவும், இதனால் பெறுகின்ற பயனும் இல்லாமற் போய்விடும்.

உடலை வளர்க்கும் தாயன்பு என்றால், உள்ளத்தை வளர்க்கும் கருவியான கல்வி நலத்தைத் தருவது தந்தையின் செயலாக இருக்கிறது. தந்தையின் பராமரிப்பு இல்லாமற் போனால், கல்வி பெறும் வாய்ப்பும் அறவே போய்விடும்.

'செல்வம்' என்று போற்றத்தக்கது மக்கட்பேறு ஒன்றுதான். பிற செல்வங்கள் நிலையாமை உடையன. மக்கட்பேறோ தொடர்ந்து நிலைபெற்று நிலையான சிறப்பைத் தருவது. அதனை இழந்தால், செல்வ நலனை இழந்ததாகவே கருதுதல் வேண்டும்.

'சமூகம்' உற்றார் உறவினருடன் கூடிக் கலந்து வாழ்வது. கூடிக்கலந்த வாழ்வு இல்லையானால், வாழ்வில் சுவை என்பதும் இல்லாமல் போகும். இதனால் மாயமான வாழ்வு நலனும் உற்றாரை இழந்தபோது ஒழிந்து போய்விடும்.

உற்றவிடத்து உறுதுணையாக் உதவுவது 'தோள்வலி' எனப்படும். உடன்பிறந்த சகோதரர் இருக்கும்வரைதான் ஒருவனுக்கு தோள்வலி உளதாயிருக்கும். சகோதரர் இல்லாது போனால், தோள்வலியும் இல்லாமற் போகும்.

ஒருவனுடைய வாழ்வின் பிரியாத் துணையாக, இல்லத்து அரசியாக, இன்பத்து நாயகியாக விளங்குபவள் அவனுடைய மனைவியாகும். அவள் அப்படி இல்லையானால், எத்தகைய இன்ப நலனும் அவன் வாழ்விலே இல்லாது போய்விடும். இந்த உண்மைகளை எல்லாம் கூறுகிற செய்யுள் இதுவாகும்.

தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு
உற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்.

"அறுசுவையோடு உண்கின்ற இன்பம், பெற்ற தாயின் மறைவோடு போய்விடும். தந்தையின் பிரிவோடு கல்வி கற்பதற் கான வசதிகள் இல்லாது போய்விடும். பெற்ற குழந்தையின் மறைவோடு, ஒருவன் பெற்ற செல்வம் என்பதும் இல்லாதே போய்விடும். மாயமான வாழ்வு நலம் என்பதெல்லாம் உறவினரைப் பிரிந்ததும் போய்விடும். உடன் பிறந்தவர் இல்லாதபோது பக்கத்துணையான வலிமை போய்விடும். பொற்றாலி அணிந்த மனையாளின் மறைவோடு எல்லா நலனுமே ஒருவனுக்கு இல்லாமற் போய்விடும்" என்பது பொருள்.

'பொற்றாலியோடு எவையும் போம்' என்றதனால், தாலி போவதோடு எல்லாமே இல்லாமற் போய்விடும் எனப் பெண்ணைக் குறித்துச் சொல்லியதாகவும் இதனைக் கொள்ளலாம்.