உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/ஓங்கும் கோவலூர்!

விக்கிமூலம் இலிருந்து

27. ஓங்கும் கோவலூர்!

ருணன் பொன்மாரி பெய்தான். பெண்ணை நெய்யும் பாலுமாகப் பெருகி வந்தது. மூவேந்தர்களும் தம் பரிவாரத்துடன் வந்து மணவிழாவிற் கலந்துகொண்டனர்.

பருத்திகள் ஆடைகளை வந்தவர்க்கெல்லாம் உவப்புடன் வழங்கின. வயல்கள் அரிசியை வழங்கின. திருமண விழாவும் நாடு வியக்க நன்முறையில் நடந்தேறியது.

பாரியின் காலத்தும் நடந்திருக்க முடியாத அளவு சிறப்புடன், அங்கவையும் சங்கவையும் தத்தம் நாயகன்மாரைக் கைப்பிடித்தனர்.

அந்த ஒப்பற்ற நிகழ்ச்சி நடந்த ஊரும் புதுப்பொலிவு பெற்று விளங்கிற்று. அதன் ஆரவாரப் பெருமிதம் ஔவையாரையும் கவர்ந்தது. அவர் அதனைப் போற்றி வாழ்த்துகின்றனர்.

பெய்யும்.ஊர் பூம்பருத்தி யாடையாய்
அந்நாள் வயலரிசி யாகுமூர் - எந்நாளும்
தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில்
ஓங்கும் திருக்கோவ லூர்.

"எக்காலத்தும் நிறைந்த புகழ் படைத்தது இந்தச் சேதிமா நாடு. இதன்கண் விளங்குவது திருக்கோவலூர். இது பொன் மாரியாகப் பெய்கின்ற ஊர். அழகிய பருத்தி ஆடை வழங்கும் ஊர். இத் திருமண நாளில் வயல்கள் அரிசியை வழங்கிய ஊர். இது என்றும் புகழால் உயரும்” என்பது பொருள்.

இந்தத் திருக்கோவலூர் இன்றும் தென்னார்க்காடு மாவட்டத்துள் ஓருராக விளங்குகின்றது. அந்த ஊரும், அங்கு ஓடும் பெண்ணையாறும் இந்தப் பழம் புகழினைப் பெற்ற பெருமையினால், இன்றும் ஓரளவு புகழுடனேயே விளங்குகின்றன.