உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/குதிரையும் கிழவியும்

விக்கிமூலம் இலிருந்து
564108ஔவையார் தனிப்பாடல்கள் — குதிரையும் கிழவியும்ஔவையார் (தனிப்பாடல்கள்)

2. குதிரையும் கிழவியும்

வையார் சிறந்த சிவபக்தர். சிவபெருமானை மனங்கனிந்து வழிபட்டு வந்ததுடன், அவருடைய மூத்த குமாரரான பிள்ளையார்ப் பெருமானையும் பூசித்து வந்தார். விநாயகரைப் பூசிக்கும்போது, தம்மையும் மறந்து, தியானத்தில் முற்றவும் ஈடுபட்டு விடுவது, இவரது இயல்பாக இருந்தது.

ஒருநாள், ஔவையார் விநாயக பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சேரமான் பெருமாளும் சுந்தரரும் கயிலாயம் செல்லப் புறப்படும் செய்தி அவருக்கு கிடைத்தது.

ஔவையாருக்குத் தாமும் அவர்களுடன் கயிலாயம் போக வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. பூசையை விரைவாக முடித்துவிட்டுத் தாமும் அவர்களுடன் சென்று பயணத்தில் கலந்துகொள்ள எண்ணினார். அந்த எண்ணத்தால், பூசையை விரைவாகச் செய்யவும் தொடங்கினார்.

ஔவையாரின் எண்ணத்தை அறிந்து கொண்டான் விநாயகப் பெருமான். 'ஔவையே! அவசரம் ஏதும் வேண்டாம் அவர்களுக்கு முன்னதாக நின்னைக் கயிலாயத்திற்சேர்த்துவிடுகின்றேன். நீ வழக்கம் போலவே நின் பூசையைச் செய்க' என்றான்.

ஔவையாரும் விநாயகப் பெருமானின் ஆணைப்படியே நடந்துகொண்டார். பூசை முடிவுபெற்றது.விநாயகப்பெருமானின் அருளினை நினைந்து ஔவையார் அகமகிழ்ந்தார்! 'சீதக்களபம்' என்னும் அகவலைப் பாடி, அப் பெருமானை மனங்கனிந்து துதித்துப் போற்றினார்.

தமிழ் உவக்கும் பிள்ளையார்ப் பெருமானின் உள்ளமும் அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தது. அவன் தன்னுடைய பேருருவை எடுத்து நின்றான். வானகம்வரை உயர்ந்து நின்றது அவன் திருமுடி; பாதலம் வரை சென்று நின்றன பாதங்கள், உலகெங்குங்கும் வியாபித்தது அவன் திருமேனி. ஔவையார் அந்தத் தெய்வக்காட்சியிலே சித்தம் கலந்து மகிழ்ந்தார். வாக்களித்தபடியே அவரைத் தன் துதிக்கையால் எடுத்துக் கைலாயத்திற் சேர்த்து விட்டான் அந்தப் பெருமான்.

சேரமான் பெருமாள் அழகிய குதிரைமீது சென்று கொண்டிருந்தார். சுந்தரமூர்த்திகள் யானையின் மீதமர்ந்து சென்று கொண்டிருந்தார். இருவரும் வழியனைத்தும் கடந்து கைலை சென்று சேர்ந்தனர். தம்முடன் ஔவையாரும் வந்தனரில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்குள்ளே இருந்தது.

கைலைக்கு வந்ததும், தங்களுக்கும் முன்பாக அங்கே வந்ததிருந்த ஔவையாரைக் கண்டு வியப்புற்றனர். அந்த வியப்பினைச் சேரமானால் கட்டுப்படுத்த முடியவில்லை!

‘எங்கட்கு முற்பட நீங்கள் வந்து சேர்ந்தது எவ்வாறோ? என்று கேட்டான் அவன். அப்போது, அவனுக்கு ஔவையார் சொன்னதாக வழங்குவது இந்தச் செய்யுள்.

மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை
முதிரநினை யவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
அதிரவருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும்
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!

"சேரர் குடியாகிய உயர்குடியிலே தோன்றிய மன்னனே! இனிதான சொற்களைக் கூறுகின்ற நன்மையைத் தருகின்ற உமையம்மையின் குமாரன் விநாயகப் பெருமான். அவனுடைய திருவடித் தாமரைகளை அழுத்தமாக நினைந்து தமக்குரிய பற்றுக்கோடாகக் கொள்வதற்கு வல்லமையுடையவர் யாம். எமக்கு, நுமக்கு முன்பாக இவ்விடம் வந்து சேர்தலும் அரிதாகுமோ? மேகத்தின் இடிமுழக்கத்தினைப்போல முழங்கிக் கொண்டு, தாம் நடக்கும் நிலமும் அதிரும்படியாக வருவன், நீங்கள் வந்த யானையும், தேரும், அதன் பின்னாகவே வந்து கொண்டிருந்த குதிரையும் எல்லாம். அவை நாழிகைக்குக் காதவழி நடந்தால், வழி நடக்கவியலாத இந்தக் கிழவியும், கணபதி கருணையால் காதவழி கடந்துவிடுவாள் என்பதனை அறிவாயாக" என்பது பொருள்.

'முதிர நினைய வல்லார்க்கு' என்றதால், அவர்களிடம் அத்தகைய அன்பின் முதிர்ச்சி நிலைபெறவில்லை என்றும், அதனாலேயே அவர்கள் தாம் முன்னாக வந்ததற்கு வியந்தனர் என்றும் கூறினார். பக்திமையில் தம்மை முற்றவும் இழந்த தனிநிலையே சிறந்த பெருநிலை என்பதைக் காட்டுவது இதுவாகும்.

'இறையருள் எதனையும் எளிதாக அடைவிக்கும்' என்ற கருத்தும் இச் செய்யுளால் வலுப்பெறும்.