உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/கெட்டு விடும்!

விக்கிமூலம் இலிருந்து
565942ஔவையார் தனிப்பாடல்கள் — கெட்டு விடும்!ஔவையார் (தனிப்பாடல்கள்)

65. கெட்டு விடும்!

வாழ்வு பலப்பல திறத்தது. அதனிடையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையினை ஒட்டியபடியே வாழ்கின்றோம். அவரவர் அவரவருடைய நிலைக்கு ஏற்பச் செய்யும் காரியங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையானால் அவ்வாழ்வு கெட்டுவிடும்.

வேந்தன் மக்களிடம் வரி வாங்கும் உரிமை உடையவன், ஆனால் தன் உரிமையை எல்லைமீறிச் செயற்படுத்தினால், மக்களை வாட்டி வதைத்து அநியாயமாக வரி வாங்கினால், அவன் கெட்டழிந்து போவான்.

இரவலன், பிறரிடம் சென்று யாசித்து நிற்பவன். அவர்கள் மனமுவந்து தருவதனை நன்றியுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் செயலைப் பாராட்டவும் வேண்டும். இட்டதனைப் பெற்றும் மெச்சத் தெரியாத இரவலன் கெட்டழிந்து விடுவான்.

கற்புடைய பெண்ணுக்கு நிறைந்த நாணமே அணிகலன் ஆகும். முற்றவும் நாணமுடையவளாகத் தன் கணவன் ஒருவனையன்றிப் பிறனை ஏறெடுத்தும் காணாத குணமுடன் விளங்குதல் வேண்டும். அப்போதுதான் அவள் கற்பு சிறக்கும்; நாணத்தை மறந்தால், இக் காலத்துப் போலக் 'கிளப் லைவ்' வாழத் தொடங்கிவிட்டால், அவள் கெட்டு அழிவாள்.

வேசியின் தொழில், பொருள் தருகின்ற ஆடவரை இன்புறுத்தி மகிழ்விப்பது. அவர்களை மயக்கி தன்பால் வரச்செய்து, அவள் வெட்கம் உடையவளாக விளங்கினால், அவள் வருமானம் ஒழிந்துபோக, அவளும் நிலைகெட்டுச் சீரழிவாள்.

இந்த உண்மைகளைத் தெரிவிப்பது இந்தச் செய்யுள் :

நிட்டூர மாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரவலனும் - முட்டவே
கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும்.

“கொடுமையான முறையிலே பொருள் சேர்க்கின்ற மன்னவனும், இட்ட பிச்சையினைப் பெற்றும் புகழ்ந்து உரையாத யாசகனும், முற்றவும் கூசியவளாகத் தன் கற்பு நிலையில் நில்லாதுபோன குலமகளும், வெட்கிய வேசியும் விரைவிலே கெட்டு விடுவார்கள்” என்பது இதன் பொருள்.