உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/கோபாலனான குணம்!

விக்கிமூலம் இலிருந்து

89. கோபாலனான குணம்!

ராந்தகச் சோழனைப் பாடியதாக ஔவையார் பெயரால் வழங்குவது இந்தச் செய்யுள்.

ஒருமுறை, அவன் சென்றுகொண்டிருந்த வழியினை, எதிரில் வந்த பசுமந்தை அடைத்துக் கொண்டிருந்தது. ஒரு கொம்பினை எடுத்து அவன் அந்த மாடுகளை ஓட்டிவிட்டு, அதன்பின் தன் வழிமேற் சென்றான்.

இந்தச் சம்பவத்தை அறிந்த ஔவையார், அவனைப் போற்றி உரைத்த செய்யுள் இதுவாகும்.

கோலெடுத்துக் கோத்துரத்துங் கோகனகச் செங்கைவடி
வேலெடுத்துக் கோத்துரத்தல் விட்டிலனே - சீதமிகு
பூபால னானாலும் போமோ புரந்தகற்குக்
கோபால னான குணம்.

“தன் செம்பொன் கையிலே வடித்த வேலினை எடுத்துப் பகையரசரைத் துரத்தும் பணியினைச் செய்யும் கோமானான இவன், இப்போது, கொம்பினை எடுத்து இந்தப் பசுக்களையும் வெருட்டுகின்றான் பாரீர்!

ஒழுக்கமிகுந்த உலகினைக் காப்பவனாக இருந்தாலும், பராந்தகனுக்கு ஆநிரைகளை மேய்க்கின்றதாகிய அந்தத் தன்மையும் போய்விடுமோ?” என்பது பொருள்.

மன்னர்களைத் திருமாலின் அமிசமாகப் பிறந்தவர்கள் என்பார்கள். பராந்தகன் திருமாலின் அமிசமாகத் தோன்றியவர் என்பர். திருமால் கண்ணனாகி ஆநிரை மேய்த்த அந்தத் தன்மை அவனைவிட்டுப் போய்விடுமோ? என்கின்றார்.