ஔவையார் தனிப்பாடல்கள்/சாடினாள்!
12. சாடினாள்!
வழிநடந்த களைப்பும், பசியின் களைப்பும் சேர்ந்து வருத்த, ஒரு சமயம் ஔவையார் ஓரிடத்தில் சோர்ந்து அமர்ந்திருந்தார். அவ் வழியாக வந்த ஒருவன் அவர் நிலையைக் கண்டு மிக மனம் வருந்தினான். அவருடைய தோற்றம் அவன் உள்ளத்தை உருக்கியது. அவரை அணுகி அன்போடு விசாரித்தான். அவருடைய பசியைப் போக்கக் கருதித் தன் வீட்டிற்கும் அவரை விரும்பி அழைத்துச் சென்றான்.
அதுவரை அவன் தன் மனைவியைப் பற்றி அடியோடு மறந்துவிட்டான். அவள் நினைவு.அப்போதுதான் எழுந்தது. அவன் உள்ளம் கவலையுற்றது. ஔவையாரை அழைத்து வந்த தன் அறியாமைக்கு வருந்தினான். எனினும், அவரை அப்படியே திரும்பிப் போகச் சொல்வதற்கும் அவன் மனம் இசையவில்லை. அவரைத் தன் வீட்டுத் திண்ணையில் அமரச் சொல்லிவிட்டு வீட்டினுள் மெல்லச் சென்றான்.
மனைவியிடம் விருந்துக்கு ஆள் வந்திருப்பதை எப்படிச் சொல்வது? அவள் சீறுவாளே? அவன் அவளருகே சென்று மெல்ல அமர்ந்தான். அவள் முகத்தை அன்புடன் வருடித் தடவிக் கொடுத்தான். அவள் தலைவாரிக் கொண்டிருந்தாள். அவனே தலையை வாரிவிட்டு, ஈரும் பேனும் எடுத்து, அவள் கூந்தலைப் புனைந்தான். அவள் முகத்தையும் பொட்டிட்டு ஒப்பனை செய்தான். அவள், தன் கணவனின் செயலுக்குக் காரணமறியாமல் சிரித்தாள். அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான்.
"வாசலில் ஒரு வயதான கிழவி இருக்கிறாள். நம் வீட்டிற்கு விருந்தாக வந்திருக்கிறாள்.அவளுக்கு நம் வீட்டில் உணவு படைக்க வேண்டும்” என்றான்.
அதனைக் கேட்டதும் அவள் சினங்கொண்டாள். தன் உடல் வருத்தமுறும் அளவுக்கு எழுந்து நின்று சினக் கூத்தாடினாள். அவன்மீது வசையாகப் பெரிதும் பாடினாள். பழமுறத்தை எடுத்து, வெறிகொண்டவளைப்போல ஓடஓட விரட்டி அவனைப் புடைத்தாள். அவன் என்ன செய்வான்? வெளியிலோ விருந்துக்கு வந்தவர் உள்ளே நடக்கும் கூத்தோ வெளியே தெரியக் கூடியதன்று வாய் திறந்து எதுவும் கூறாமல், அவள் கொடுமையை எல்லாம் சகித்துக்கொண்டு, வீட்டினுள் வளையவளைய வந்தான்.
உள்ளே நடப்பதை அறிந்த ஔவையார், அவன் நிலைக்குப் பெரிதும் பரிதாபப்பட்டார். அவளுடைய நடத்தை அவர் உள்ளத்தில் வெறுப்பை விளைத்தது. அதனைத் தாம் அறிந்துகொண்டதை அறியச் செய்தால் ஊர் பழிக்குமே என்று கருதியாவது அவள் சீற்றத்தை நிறுத்துவாள் என்று நினைத்தார்.
இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்.
என்று அவளும் கேட்குமாறு உரத்த குரலிற் பாடினார்.
அந்தப்பாட்டினைக் கேட்டதும், அந்தப் பழிகாரி அப்படியே செயலற்று நின்றுவிட்டாள். "எவரோ பெரியவர் போலிருக்கிறது! சாபம் ஏதாவது கொடுத்துவிட்டால் என்ன செய்வது?" என்று நினைத்து நடுங்கினாள்.
"அவரை உள்ளே அழைத்து வா, சோறு போடுகின்றேன்” என்று தன் கணவனிடம் கூறினாள்.
கணவனும் சற்றுமுன் நடந்ததை எல்லாம் மறந்தவனாக மகிழ்வுடன், ஔவையாரை உண்ண அழைப்பதற்கு வந்தான். பின்னும் நடப்பதை அறிய விரும்பிய அவரும் உள்ளே சென்றார்.
“அருகே அமர்ந்து அவளுடைய முகத்தைச் சீர் செய்து விட்டான். ஈரோடு பேனையும் தலையினின்றும் எடுத்தான். விருந்து வந்திருக்கிறது என்றும் சொன்னான். சொல்லவும், அவள் மிகவும் வருந்தினாள். சினத்தால் கூத்தாடினாள். அவன்மீது வசை பாடினாள். வெறிகொண்டவளாக ஆடி, அவனைப் பழ முறத்தால் ஓடஓடப்புடைத்தாள்” என்பது பாட்டின் பொருள். 'இப்படியுமா ஒரு பெண்’ என்பது ஔவைத்தாயின் ஏக்கம்.