உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/சுற்றத்தாரின் இயல்பு!

விக்கிமூலம் இலிருந்து
566615ஔவையார் தனிப்பாடல்கள் — சுற்றத்தாரின் இயல்பு!ஔவையார் (தனிப்பாடல்கள்)

101. சுற்றத்தாரின் இயல்பு!

வையார், ஒரு சமயம் ஒரு சத்திரத்தில் இளைப்பாறும் பொருட்டாக அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய உள்ளம் உலகத்தின் பல்வகைப் போக்குகளையும் எண்ணி, ஒரு நன்னெறியைப் பேணி மேற்கொள்ளாது சிதறிக் கிடக்கும். தன்மையினை நினைந்து வருத்தமுற்றதாக இருந்தது. எதிரே சற்று நோக்கினார். அங்கே கோலூன்றிக் கொண்டே முடவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். தள்ளாடிச் சோர்ந்து மெலிவுற்று நலிந்து வந்து சேர்ந்த அவனை ஔவையார் கூர்ந்து நோக்கினார். அவனை அதற்கு முன்பு எங்கோ கண்டிருக்கின்றார். அவன் முகம் அவருக்குப் பழக்கமானது. அவர் மனம் பழைய நினைவுகளில் சென்றது. அவனைப் பற்றிய ஆராய்வில் அவர் ஈடுபட்டார்.

அவரை நெருங்கி வந்துவிட்ட அவன், அவரை மிகவும் அன்புடன், 'தாயே! என்னை உங்கட்கு நினைவிருக்கிறதா? நீங்கள் நலந்தானா? எங்கிருந்து வருகின்றீர்கள்?’ என வினவினான்.

நின்னைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஆமாம்! நின்னைப் புரிந்துகொண்டேன். உனக்கு ஏனப்பா இந்த நிலை? என்றார் ஔவையார்.

"தாயே! நன்றி மறந்த உலகம் இது. அன்று நல்லுடலுடன் இருந்தேன். என்பாற் செல்வ வளம் பெருகி இருந்தது. என்னைக் காண்பதற்குக் காத்திருந்தோர் பலர். என் உறவினர் என்று பெருமைப்பட்டுக் கொண்டவரும் பலர்.

இன்றோ! என் செல்வங்கள் போயின. என் போதாத வேளை! என் காலும் நொண்டியாகப் போயிற்று. என்னைக் காணக் காத்திருந்த உறவும் சுற்றமும், நான் சென்று காண முயன்றபோதும் கதவடைத்துத் தாளிடுகின்றனர்.

அன்று உலகைப் புரியாதவன் நான். செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நடந்தேன். இன்றோ, உலகினைப் புரிந்து கொண்டேன். அதனைவிட்டு ஒதுங்கி நிற்கின்றேன் என்று தன் கதையைக் கூறினான் அவன். அவன் கண்கள் கலங்கின. ஔவையாரின் உள்ளமும் கசிந்தது.

அவருடைய நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது உலகத்தின் போக்கு அதன் போலித்தகைமையை நினைந்து வருந்தினார்.

உடையராய்ச் சென்றக்கால் ஊரெல்லாம் சுற்றம்
முடவராய்க் கோலூன்றிச் சென்றக்கால் சுற்றம்
உடையானும் வேறு படும்.

என்றுசொல்லி அவனைத் தேற்றினார். இவனும் மனத்தெளிவு கொண்டு அவரைப் போற்றினான். பின்னர், ஔவையாரின் முயற்சியினால், அவனுடைய வாழ்வுக் கவலை ஒழியவும் செய்தது.

"வளமும் நலமும் உடையவர்களாகச் சென்றனரானால் ஊரெல்லாம் சுற்றமாகத் திகழ்ந்து அவரை உபசரிப்பார்கள். முடவர்களாகக் கோலூன்றியபடி இரவலராகச் சென்றால், சுற்றத்தினை உண்மையாகவே உடையவனும்கூட, வேறு நிலைக்கே உட்பட நேரும்” என்பது பொருள்.