உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/சேடன் வாழ்வு!

விக்கிமூலம் இலிருந்து
565525ஔவையார் தனிப்பாடல்கள் — சேடன் வாழ்வு!ஔவையார் (தனிப்பாடல்கள்)

36. சேடன் வாழ்வு!

கோரைக்கால் ஆழ்வானைப் போலவே, சேடன் என்னும் பெயரோடு ஒருவன் இருந்தான். இவனும் ஏராளமாகச் செல்வத்தைச் சேமித்து வைத்திருந்தான். இவனும் எவருக்கும் எதுவும் வழங்கி அறியாதவன்.

ஔவையார் அவனை ஒரு சமயம் சென்று கண்டார். அவனுடைய கருமித்தனம் அவரை மிகவும் வாட்டியது. ஆனால், ஒரு வகையில் இவன் நல்லவன். ஆழ்வானைப் போல இவன் எவரையும் தருவதாகச் சொல்லி வரவழைத்து ஏய்த்ததில்லை. 'இல்லை' என்ற சொல்லை மிகவும் அழுத்தமாகவே சொல்லி விடுவான்.

பாவாணராக வருவார்க்கு அவன் யாதும் வழங்கியதில்லை. அவராற் பாடப்பெற்ற பெருமையும் அவனுக்குக் கிடையாது. அதற்காக அவன் கவலைப்படவும் இல்லை.

பலரும் மெச்சும்படி ஆர்ப்பாட்டமாக வாழ்வதும் அவனுக்குப் பிடிக்காது. அதனால் அவன் மிகவும் சாதாரணமாகவே ஓர் ஏழைபோலவே வாழ்ந்து வந்தான்.

'நாடெங்கும் நற்செயல்கள் செய்தவன் அவன்’ என்ற பேச்சினை எழுப்புதற்கும் அவன் முயலவில்லை. ஆனால், அவன் வாழ்க்கையில் எவ்வகைப் பொருளுக்கும் குறைவு இல்லாமல் நிறைந்திருந்தது.

அவனைப் பற்றிப் பழி தூற்றினர் பலர். அவன் வாழ்வு கவிழ்ந்துவிடும் என்றனர் சிலர். “அது எங்கே கவிழப் போகிறது? நாளுக்கு நாள் செழிக்கிறதே" என்றனர் மற்றுஞ் சிலர்.

ஔவையார், அவனைப் பற்றிப் பாடினார் ஒரு செய்யுள். அதுவே இதுவாகும்.

'பெருங் கடலாற் சூழப்பெற்றது இந்த உலகம். இதன்கண் இவன் வாழும் வாழ்க்கை எப்படிப் போனால்தான் என்ன? கவிழ்ந்தால்தான் என்ன? மலர்ந்தால்தான் என்ன? எல்லாமே ஒன்றுதான்' என்றனர்.

செல்வம் சேர்வது பூர்வத்துப் புண்ணியப் பயனால் ஆகும். அப்படிச் சேரும்பொழுது, அதனைக் கொண்டு முறையாகப் பெறக்கூடிய நல்ல பயன்களையெல்லாம் பெறுதல் வேண்டும். அதுவே, அதனைப் பெற்றதனால் ஒருவன் அடைகின்ற பயன்.

பாடல் பெறுதல், பலர் மெச்ச வாழுதல், நாடறிய நல்ல செயல்களைச் செய்வதில் ஈடுபடுதல் என்பவை செல்வத்தால் பெறக்கூடியவை. இவற்றின்பாற் செல்வரின் கருத்துச் செல்லுதல் வேண்டும். அப்படிச் செல்லாதவர் உலகிற் பிறந்ததன் பயனையே இழந்தவராவர்.

இந்த உண்மையின் சிறந்த விளக்கமாக விளங்கும் செய்யுள் இதுவாகும்.

பாடல் பெறானேல் பலர்மெச்ச வாழானேல்
நாடறிய நன்மணங்கள் நாடானேல் - சேடன்
இவன்வாழும் வாழ்க்கை இருங்கடல்குழ் பாரில்
கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்.

“நல்ல பாவலரால் பாடப் பெற்றுப் புகழடையானேல், பலரும் மெச்சுமாறு வாழ்ந்து வருவதும் செய்யானேல், நாடு அனைத்தும் தெரிந்து போற்றுமாறு நற்காரியங்களைச் செய்வதற்கும் விரும்பானேல், சேடனாகிய இவன், செல்வத்தோடு வாழும் வாழ்வானது, பெருங் கடலாற் சூழப்பெற்ற இவ்வுலகிலே அழிந்தாலென்ன, செழித்தால் என்ன? அதனால் யாதும் பயனில்லை" என்பது கருத்து.

கவிழ்தல் - இருப்பதும் அழிதல். மலர்தல் - இருப்பது மேலும் பெருகுதல். நன்மணம் - நற்காரியங்கள்.