ஔவையார் தனிப்பாடல்கள்/சோமன் பெருமை!
60. சோமன் பெருமை!
அந்த நாளிலே, சோமன் என்னும் பெயருடன் ஒரு வள்ளல் இருந்தான். அவன் கருணை உள்ளம் உடையவன். இரவலர்க்கு வழங்கி வழங்கி ஏற்றம் பெற்றுத் திகழ்ந்தவன்.
இரவலரின் வறுமையைப் போக்குவதற்கு உரிய மனப்பண்பு இல்லாத, செல்வச் செழுமையுடைய கொடியவர்கள் அன்றும் சிலர் இருந்தனர்.அவர்களுடைய செல்வ வளத்தினைக் கண்டும், போலிப் புகழைக் கேட்டும், அவர்களை நாடிச்சென்று பலர் ஏமாந்து மனவேதனையுற்று வருந்தினர். அவர்களுடைய இழிசெயலால் சோமனின் கொடைப் பெருமை மேலும் உயர்வு உடையதாயிற்று.
நிழல் அருமை உடையது. அந்த அருமையினை அறிய வேண்டுமானால், சற்றுக் கொடிய வெய்யிலிலே போய் நின்றால் தான், நன்கு உணர முடியும்.
கடுமையான தீவினையினாலே ஒருவன் வாட்டமுற்று நலிகின்ற பொழுதுதான், அவனுக்கு ஈசனின் திருவடி நிழலிலே நினைவு செல்லும் அவன்தான் ஈசன் கழல்களைச் சேருவதனால் உண்டாகும் பேரின்பப் பயன்களைப் பற்றி நன்கு அறிய முடியும்.
பழகு தமிழ்ச் சொற்கள், அருமையாக அமைந்துள்ளதனைக் காண விரும்பினால், நாலடியாரும் திருக்குறளுமே அதற்கு உதவுவன.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது பொருந்தும். ஒன்றுக்கொன்று எதிரான தன்மை. இவை போலவே, சோமனின் கொடை அருமையானது என்று சொன்னால் மட்டும் போதாது. அதனைச் சரியாக அறிந்து உணர வேண்டுமானால், கீழ்மக்களிடத்தே சென்று பழகினால்தான், அதனைச் செவ்விதாக அறிய முடியும்.வெயிலுக்கு நிழல் போலவும், வெவ்வினைக்கு ஈசன் திருவடி நிழல்போலவும், சொல்லருமைக்கு நாலிரண்டு போலவும், கொடைக்குச் சிறந்தோனாக விளங்கியவன் சோமன் என்கிறது செய்யுள்.
பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்றால் நாலும் இரண்டும் சொல்லருமைக்கு எதிரானதா? இல்லையே! இங்கே நேராகவே உரைப்பதாகக் கொள்ள வேண்டும்.
நிழல்அருமை வெய்யலில் நின்றறிமின் ஈசன்
கழல்அருமை வெவ்வினையின் காண்மின் - பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டிற் சோமன்
கொடையருமை புல்லரிடத் தேயறிமின் போய்
“நிழலின் அருமையினை வெய்யலிலே நின்றபோது எண்ணிக் காணுங்கள். கொடிய தீவினையிற் சிக்கி உழலுங் காலத்தே, இறைவனின் திருவடிகள் தரும் அரிய பயனைக் காணுங்கள். பயின்று வரும் தமிழ்ச் சொல்லின் அருமையினை நாலடியினும் திருக்குறளினும் காணுங்கள். சோமனின் கொடை அருமையைக் கீழோரான செல்வரிடத்தே போவதனாலே அறிந்து கொள்ளுங்கள்” என்பது பொருள்.