ஔவையார் தனிப்பாடல்கள்/திருமண விருந்து!
74. திருமண விருந்து!
பாண்டியன் தமிழன்பு மிகுந்தவன். தமிழைப் பேணிப்புரந்து வளர்ந்தவன். தமிழ்ப் பாவலர்கட்கு வாரி வழங்கி மகிழ்ந்தவன். இவற்றுடன், அவனே வளமையான தமிழறிந்த புலமையினனாகவும் விளங்கினான்.
ஒரு சமயம், அவனுடைய வீட்டில் ஒரு திருமண வைபவம் நடைபெற்றது. தமிழ்ப்பெரும் புலவரான ஔவையாரையும் அவன் மிகவும் விரும்பி அழைந்திருந்தான். அவனுடைய அன்பின் மிகுதியை எண்ணிய ஔவையாரும், அத் திருமணத்திற்குச் சென்றிருந்தார்.
பாண்டிய மன்னன் வீட்டுத் திருமணம் அல்லவா? நாடெங்கும் உள்ள மன்னர்கள் பலரும் தத்தம் பரிவாரப் பெருக்குடன் அங்கே வந்து நிறைந்திருந்தனர். ஔவையார் அந்தக் கூட்டத்தின் நடுவே பட்ட தொல்லைகள் மிகுதியாக இருந்தன. திருமண விழாவும் ஒருவாறாக முடிந்தது. ஔவையாரும் பாண்டியன் உவப்புடன் அளித்த பல பரிசில்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.பசியோ வயிற்றை வாட்டியது. ஒரு வீட்டுத் திண்ணையிலே அமர்ந்தார். அந்த வீட்டுத் தலைவி அவர் சோர்வைக் கண்டு உணவுண்ண அழைத்தாள். 'ஏன் பாட்டி, திருமண வீட்டிலே உண்ணவில்லையோ?' என்றும் கேட்டாள்.
அவளுக்கு அந்தக் கல்யாணத்தின் சிறப்பைக்கூற நினைத்த ஔவையார், தாம் உணவுண்ணக்கூட இயலாதுபோன அந்த நிலையினைக் கூறுகின்றார். அவர் கூறிய அந்தப் பாடல் இதுவாகும்.
வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
கருக்குண்டேன் சோறுண்டி லேன்.
"தமிழ் வளமையானது, அதனைக் கற்றுத் தெளிந்தவன் பாண்டியன். அவன் வீட்டுத் திருமணத்தில் யான் உண்டு மகிழ்ந்த சிறப்பினைச் சொல்லுவேன் கேட்பாயாக!
கூட்டத்திற் சேர்ந்து நெருக்கமுண்டேன். தள்ளுண்டேன். நெடிதாக வருத்திய பசியினால் உடல் சுருக்கண்டேன். இவற்றை உடையவளானேனே அல்லாமல், யான் சோறு உண்டவள் அல்லேன்” என்பது பொருள்.
சோறுண்ணாததைச் சொன்னாலும், அதற்குப் பாண்டியன் மீது ஏதும் தவறில்லை என்றும் நயமாகக் கூறுகின்றார் ஔவையார்.