உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/நகைக்கப் பெற்றாள்!

விக்கிமூலம் இலிருந்து

50. நகைக்கப் பெற்றாள்!

ர் அரசகுமாரி, ஒருநாள் அழகியனாகிய இளைஞன் ஒருவனைச் சோலையிடத்தே கண்டு, கண்டதும் காதலும் கொண்டாள். தன் காதலை ஓர் ஓலை நறுக்கில் எழுதித் தன் தோழியிடம் கொடுத்து அனுப்பினாள். அன்றிரவு நகருக்குப் புறத்தேயுள்ள ஒரு மண்டபத்தில் தன்னைச் சந்திக்குமாறு அந்த இளைஞனை அவள் அந்த ஓலையில் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவனோ அறவே படிக்கத் தெரியாதவன். அந்த ஓலையைக் கொண்டுபோய்.ஒரு கயவனிடம் காட்டினான். அவன் இராச குமாரியைத் தானே அடையத் திட்டமிட்டான்."உனக்கு ஆபத்து: இன்று மாலைக்குள் ஊரைவிட்டு ஓடிப்போய்விட வேண்டும்" என்று எழுதியிருப்பதாக மிகக் கவலையோடு சொன்னான்.

அந்த முட்டாளும், அதனை உண்மையென்று நம்பினான். அப்போதே ஊரைவிட்டு ஓடிப் போய்விட்டான். இரவில், அரசகுமாரி மண்டபம் சென்றாள். காத்திருந்த கயவன் அவளைக் கெடுக்க முனைந்தான். அவள் உள்ளம் பதைபதைத்தாள். காதலனைக் காணாத ஏமாற்றமும் கயவனின் தீய எண்ணமும் அவளைத் தற்கொலைக்குத் தூண்டின. தன் உடைவாளால் குத்திக்கொண்டு செத்துப் போனாள்.

அவளுடைய ஆவி நெடுநாள் அந்த மண்டபத்தைச் சுற்றிக்கொண்டே இருந்தது. எவரும் அங்கு இரவில் தங்குவது கிடையாது. காலப்போக்கில் அந்த மண்டபமும் பாழ் மண்டபமாயிற்று. ‘பேய் வாழும் மண்டபம்’ என்ற பெயரையும் அது பெற்றது.

ஔவையார், ஒருநாள் அந்தப் பக்கமாக வந்தார். பொழுதும் இருட்டிக் கொண்டிருந்தது. இரவில் அந்த மண்டபத்தில் தங்குவதற்கு முடிவு செய்தார். இரவில் வழக்கம்போலப் பேய் வந்தது. அவரைப் பயமுறுத்த முயன்றது.

அப்போது அதன் முற்பிறப்பினை உய்த்து அறிந்த அவர், இவ்வாறு அதற்கு அறிவுரையாகப் பாடுகிறார்.

"பேயே! நீ காதலித்தவனோ படிக்கத் தெரியாதவன். படித்துக் காட்டினாலும் புரிந்து கொள்ள இயலாதவன். பிறர் நகைக்குமாறு, அப்படி ஒரு முட்டாளைப் பெற்றாளே ஒருத்தி, அவளைப் போய்த் தாக்கு என்னிடம் வந்து ஏன் தொல்லை செய்கிறாய்” என்ற முறையில் பாட்டு அமைந்தது.

வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

"இருமுறை எடுத்துச் சொல்லியும் வெண்பாவின் பொருளை அறியாமற் போனவனை, வெள்ளிய ஓலையில் கண்ணால் பார்த்துச் செய்தியை அறிந்து கொள்ளச் செய்யும் படியாகத் தன் கையால் எழுத அறிந்திராதவனை, பாவஞ் செய்த ஒரு பெண் தானும் பெற்றுவிட்டாளே? பிறர் கண்டு நகைக்கும்படி அப்படி அவனைப் பெற்றுவிட்டாளே! பேயே! அவளைப் போய்த் தாக்குக! தாக்குக! தாக்குக!” என்பது பொருள்.

இதனைக் கேட்ட பேய், தான் தொடர்ந்து செய்துவரும் முட்டாள்தனத்தை உணர்ந்து கொண்டது. எனினும், பேய்க்குணம் போகுமா? மீளவும் அது தன் குணத்தைக் காட்டத் தொடங்கியது.