உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/நல்ல நாடு!

விக்கிமூலம் இலிருந்து

111. நல்ல நாடு!

து நல்ல நாடாக விளங்கும்? நல்ல நாடு என்ற பெருமையைப் பெற வேண்டுமானால் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்!

மிகவும் சிக்கலான கேள்வி இது.

மிகவும் சிந்திக்க வேண்டிய கேள்வியும் இது.

ஆழமாக நுணுகி ஆராய்வதற்குரியதும் இது.

'பொருள் நிலையிலே வளமான நாடுதான் நல்ல நாடு’

'தொழில் வளம் சிறந்த நாடுதான் நல்ல நாடு'

'படைவலுவிற் பெருக்கமான நாடுதான் நல்ல நாடு'

'ஒழுக்க நெறியிற் செம்மை உடையதுதான் நல்ல நாடு'

'அறிவாற்றல் மிகுந்தோரால் ஆளப்படுவதுதான் நல்ல நாடு’

'ஆன்மீகத் துறையிலே உறுதியுடைத்தாயிருப்பதுதான் நல்ல நாடு’

இப்படிப் பலபடியாகப் பலரும் சொல்லுகின்றார்கள். நல்லதொரு நாட்டிலே இவை எல்லாம் இருப்பதும் இயல்புதான். ஆனால், இவையே நல்ல நாட்டிற்கான அடிப்படை ஆகிவிட முடியுமா?

இவ்வாறு சிந்திக்கத் தொடங்குவாரும் பலர். இதே கேள்வி ஔவையாரிடமும் கேட்கப்படுகின்றது. ஒரு நாடு, மக்கள் தொகை வாழும் பண்பட்ட சமவெளிப் பிரதேசங்களை மிகுதியாகப் பெற்றிருக்கலாம். அம்மக்கள், நிலத்தைப் பயன்படுத்தி விளைவித்து வளமான வாழ்வினராகவும் விளங்கலாம்.

ஒரு நாடு, காட்டுப் பகுதியை மிகுதியாகப் பெற்றதாக இருக்கலாம். மக்கள் காடுபடு பொருள்களைக் கொண்டு வாழ்வோராகவும் விளங்கலாம்.

ஒரு நாடு, மேட்டுப் பிரதேசமாக இருக்கலாம். ஒரு நாடு பள்ளத்தாக்குப் பகுதியாகவும் அமைந்து விடலாம்.

இப்படி நிலத்தின் அமைவை ஒட்டி, ஒரு நாட்டை நல்ல நாடென்றும், மற்றொன்றைக் கெட்ட நாடென்றும் கூறிவிட முடியுமா?

இப்படிக் கூறுவதுதான் பொருத்தமாகும்.

'நாடானால் என்ன? காடானால் என்ன?'

‘மேடானால் என்ன? பள்ளமானால் என்ன?'

'எவ்விடத்தே, அந் நிலத்தில் வாழும் ஆடவர் நல்லவர்களாக அமைகின்றனரோ, அவ்விடத்தேதான் நிலனும் நல்லதாகப் புகழடைகின்றது.'

இவ்வாறு, நல்ல நாடு என்பதற்கு மூலமாக அமைபவர், அந் நாட்டில் வாழும் ஆடவரே என்கின்றார் ஔவையார். மிகச் சிறந்த உண்மை இது!

ஆடவர் சிந்திக்க வேண்டிய உண்மையும் இது.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

இப்படி வாழ்த்துகின்றார் ஔவையார். நிலவுலகத்தே ஆடவரின் பொறுப்பு எத்துணை முதன்மையானது என்பதையும் இது நன்றாகப் புலப்படுத்தும்.