உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/பகட்டுக்கு மதிப்பு!

விக்கிமூலம் இலிருந்து

4. பகட்டுக்கு மதிப்பு!

வையார் சிறந்த நாவலர். எனினும், எளிமையினையே விரும்புகின்ற பண்பும் உடையவர். தம் கவிதையைப் போற்றிச், செல்வர்கள் உவந்து தமக்குப் பரிசளித்துப் பாராட்ட வேண்டும் என்ற ஆடம்பர நினைவு அறவே இல்லாதவர். மக்களொடு கலந்து தம்முடைய உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளைக் கவிதைகளாக வடிக்க வேண்டும்; அதுதான் தமக்கு உவகை தருவது என்ற எண்ணம் உடையவர்.

அரசர்களால் உபசரிக்கப் பெற்றாலும், பரிசுகள் வழங்கிப் பாராட்டப் பெற்றாலும், அவர் மனம் உவப்படைவதில்லை. அதேசமயம், ஏழையின் குடிலில் அன்புடன் இடுகின்ற உப்பற்ற கூழ் அவர் நெஞ்சிலே இடம் பெறும் அங்கே கவிதையும் மலர்ந்து இலக்கிய நிலைபெறும்!

சோழனின் அவையிலே கம்பர் பெரிதும் போற்றப்பெற்று விளங்கியவர். அரசவைக் கவிஞருள் ஒருவராக அதற்குரிய ஆடம்பரங்கள், அணிவகைகள் முதலியவற்றுடன் விளங்கியவர். அரசனிடம் தனிப்பட்ட செல்வாக்கும் அவருக்கு இருந்தது. அதனால், கம்பரைச் சுற்றிப் பலர் அவரைப் போற்றியபடியே இருந்தனர். அவர் எது சொன்னாலும் அதனைப் பாராட்டினர். அதன் சிறப்பை ஆராய்வதுகூட இல்லை."கம்பரின் வாக்கு அதன் இனிமையே இனிமை! அதன் பொருள் வளமே வளம்?” என்று வாயோயாது வியந்து வியந்து பாராட்டி வந்தனர்.

ஔவையாருக்கு, கம்பரின் அந்த அளவற்ற ஆடம்பரமும், அவரைச் சுற்றியுள்ள போலிப்புலவர் கூட்டமும் வெறுப்பையே தந்தன.

ஒருசமயம், கம்பரின் பாட்டொன்றை மன்னன் வியந்து பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டில் அத்துணைச் சிறப்பு எதனையும் காணாத ஔவையார், அந்த உரைகளைக் கேட்டுச் சிரித்தவண்ணம் இருந்தார்.

தற்செயலாக அவர் பக்கம் திரும்பிய மன்னன், அவரது முகபாவத்தை நோக்கினான். தன் கருத்தை அவர் ஏற்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. "தங்கள் கருத்து யாதோ?” எனக் கேட்டு விட்டான். அப்போது, ஔவையார் சொன்னது இச்செய்யுள்.

“கவிதை ஒன்றைப் பாராட்டும்போது, அதன்கண் அமைந்துள்ள சொல் நயம், பொருள் நயம் ஆகியவற்றையே கருதுதல் வேண்டும். இங்கேயோ 'கம்பரின் பாட்டு' என்பதற்காகவே அனைவரும் அதனைப் புகழ்கின்றீர்கள். அந்த நிலைமையை நினைத்துத்தான் நான் சிரித்தேன்".

“எளிமையும் புலமை நலமும் பெற்றவர்கள் இங்கே எளிதில் பாரட்டுப் பெறுவது நிகழாது. இந்த அவையின் மதிப்புக்கு உரியவராவதற்குப் பிற பிற ஆரவாரத் தகுதிகளும் நிறைய வேண்டியதிருக்கின்றது” என்றார் ஔவையார்.

"விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும்-அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

"அரசவைக்குப் பரிசினை நாடி வந்துள்ள புலவரின் அருகே, தந்திரக்காரர்களாக இருவர் அமர்ந்துகொண்டு, அவரைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தப் புலவரது விரல்களுள் நிறைய மோதிரங்கள் விளங்க வேண்டும். அவர் இடுப்பிலே பஞ்சாடையோ பட்டாடையோ கவினுற விளங்குதல் வேண்டும். அங்ஙனமாயின், அவருடைய கவிதை நஞ்சுபோலப் பிறருக்குக் கேடு விளைவிப்பதானாலும், வேம்பினைப் போலக் கசப்புச் சுவையுடையதாக இருந்தாலும், அதுவே நல்லதென்று இந்த அவையில் ஏற்றுப் போற்றப்பெறும்” என்பது பாடலின் பொருள்.

'விரகர் புகழ்ந்திட' எனவே, அது உண்மையான புகழ்ச்சியாகாது என்றார். சோழனின் அவை புலமைக்கு மதிப்புத் தரவில்லை; புலவரின் புறத்தோற்றத் தகுதியை நோக்கியே மதிக்கிறது என்றும் உரைத்தார். அதனைக் கேட்ட மன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அந்த நிலையே இன்றைக்கும் நிலவுகின்றது. வெளிமயக்கும், விளம்பரப் பெருக்கும், பிறவுமே இன்றைக்கும் ஒருவருக்குச் சிறப்பைத் தருகின்றன.