உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/பலிக்கு உழன்றீர்!

விக்கிமூலம் இலிருந்து
566348ஔவையார் தனிப்பாடல்கள் — பலிக்கு உழன்றீர்!ஔவையார் (தனிப்பாடல்கள்)

72. பலிக்கு உழன்றீர்!

ன்னிலத்திலுள்ள திருக்கோயில் இறைவன்மீது பாடிய நிந்தாஸ்துதி இச்செய்யுள். இறைவன் பிச்சை ஏற்று உண்ட அந்த திருவிளையாட்டை மனத்தே கொண்டு, அவனைப் பழிப்பது போல் போற்றுகின்றார்.

ஒருவன் இரந்து உயிர் வாழ்வதற்கு வேண்டியதொரு இக்கட்டான நிலைமையில் இருந்தான் என்றால், அவன் அந்த அளவிற்கு வறுமையினாலே உழலுகின்றவன் என்றுதான் பொதுவாகக் கொள்ளுதல் வேண்டும். சில சமயங்களில் சிலர்பால் இந்தப் பொதுவிதிக்கு முரண்பாடான நிலைமைகள் தோன்றுதலையும் காணலாம். வாழ்க்கை செவ்வையாக நிகழுவதற்கு வேண்டிய எல்லா வகையான வசதிகளுடனும் இருந்திருப்பார்கள் என்றாலும், ஏதோ மனவேறுபாடோ குழப்பமோ அவர்களை அனைத்தினின்றும் பிரித்துவிடும். இரந்து உயிர் வாழ்தலான ஓர் இழிநிலைக்கும் கொணர்ந்துவிடும்.

'இரந்து உயிர் வாழ்தல்' என்ற நிலையைச் சமூகத்தில் நிலவக்காணும் திருக்குறள் ஆசிரியர் உள்ளம் குமுறுகின்றார். 'பரந்து கெடுக உலகு இயற்றியான்' என்று உலக முதல்வனையே சபிக்கின்றார்.

இங்கே இறைவனே, உலக முதல்வனே இரக்கின்றான். பிட்சாடன மூர்த்தியாக வரும் பெருமான்! அவனுடைய திருக்கோலம்! ஔவையாரின் உள்ளத்தில் அதனையே நிரந்தரமாகக் கொண்டிருக்கும் இரவல்மாக்களின் நினைவை எழுப்புகின்றது.

"பெருமானே! நின் சொத்துக்களைக் கண்காணிக்க நினக்கு இரண்டு குமாரர்கள் உள்ளனரே! என்றும் மூப்படையாத தன்மையினை உடைய எருதும் உமக்கு உரியதாக இருக்கின்றதே!

விளக்கமுறத் தோன்றும் கங்கை நதியின் நீர்ப்பாய்ச்சலுக்கான வசதியும் இருக்கின்றதே! இவற்றுடன் நல்ல நில வசதியும் உண்டே!

மேலும், நும்மிடத்தில் பாற்பாக்கியவதியும் நீங்காது எப்போதும் உள்ளனளே!

இங்ஙனம் எல்லாமே இருந்தும், நீர் ஏன் ஐயனே பலிக்குச் சென்று வருந்தினீர்? அதன் காரணத்தை அறிவீரோ? அது நும்மிடத்து இரந்து நிற்பவர்களுக்கு நீர் அவர் கேட்பதை வழங்காததனால் அல்லவோ ஏற்பட்டது!

பெருங்கோயில் இறையவனே! இனியேனும் இரந்து மனமுருகிப் பணியும் அடியவர்களுக்கு அருள் செய்யீரோ"

இவ்வாறு அமைகின்றது பாடல்.

மேற்பார்க்க மைந்தரும் மூவா எருதும் விளங்குகங்கை
நீர்ப்பாய்ச்சலும் நன்னிலமும் உண்டாகியும் நின்னிடத்தில்
பாற்பாக் கியவதி நீங்கா திருந்தும் பலிக்குழன்றாய்
ஏற்பார்க் கிடாமலன் றோபெருங் கோயில் இறையவனே!

“பயிரிடுதலை மேற்பார்க்க இரண்டு குமாரர்கள் உள்ளனர். உழவுக்கு என்றும் மூப்படையாத எருது உளது. நிலைபெற்று விளங்கும் கங்கை நீரின் பாய்ச்சலும் வாய்த்துள்ளது. நன்கு விளையும் நிலமும் உளது. இவை இருந்தும் நீர் உழுது விளைவித்து உண்டு மகிழாது. ஏனோ பலிக்குச் சென்று உழன்றீர்?

அதுதானில்லை! நும்மிடத்தில் பாற்பாக்கியவதி நீங்காது உள்ளனள். பாலருந்தியாவது வாழ்ந்திருக்கலாமே? நும்மிடத்தில் வந்து இரப்பவர்களுக்குக் கொடுத்துதவும் குணம் இல்லாததால் அன்றோ எல்லாம் இருந்தும் நீர் அப்படி இரந்து வருந்தினர்" என்பது பொருள்.

மைந்தர் - கணபதியும் குமரனும் மூவா எருது - நந்தீசர். கங்கை - சடையில் விளங்கும் கங்கை, நன்னிலம் - நன்னிலம் என்னும் ஊரைக் குறிக்கும்; புவனத்தையும் குறிக்கும். நின் இடத்தில் பால் பாக்கியவதி - நின் இடப்பாகத்தில் நின்னில் ஒரு பகுதியாக விளங்கும் புண்ணியவதியான உமையம்மை. பலி - பிச்சை ஏற்று உண்டல். இவற்றையும் பொருத்திப் பொருள் கண்டு இன்புறுக