உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/பாவையர்க்குத் தோற்றான்!

விக்கிமூலம் இலிருந்து

105. பாவையர்க்குத் தோற்றான்!

ம்பி என்றொரு தாசி இருந்தாள். அவளுக்குத் தமிழ்ப் பாடலில் மயக்கம் ஏற்பட்டது. பொய்யாமொழியாரிடம் சென்றாள். அவர் ஆயிரம் பொன் கேட்டார்.

அம்பிக்கு ஒரு நம்பிக்கை ஐந்நூறு பொன்னைக் கொடுத்துப் புலவர் பாடும் புகழினைத் தான் அடைந்துவிட நினைத்தாள். அப்படியே சென்று பொன்னைப் பொய்யாமொழியாரிடம் வைத்து வணங்கி நின்றாள்.

அவரும், அவளுடைய கருத்தைப் புரிந்து கொண்டார். ஐந்நூறு பொன்னைப் பெற்றுக்கொண்டு,

பத்தம்பிற் பாதி யுடையான் இரண்டம்பிற்
கொத்தம்பி என்பாள் கொளப்புக்கு

என்று, வெண்பாவின் முதலிரண்டு அடிகளை மட்டும் பாடினார். அவள், தன் செயலுக்கு நாணினாள். மீண்டும் அவள் பொன் தர முன்வந்தாள். தன்னை மன்னிக்குமாறும் வேண்டினாள். புலவரோ மறுத்துவிட்டார்.

அம்பிக்கு ஒரே வருத்தமாகப் போயிற்று. அவள் தேம்பித் தேம்பி அழுதாள். புலவரை ஏமாற்ற முயன்ற தன் செயலுக்கு தானே மனம் உளைந்து நலிந்தாள். அவளுடைய தொழிலும் சிதைவுற்று நின்றது.

ஔவையார் அந்தச் செய்தியைக் கேட்டார். அவருள்ளம் பெண்ணுள்ளம் அதனால், இரக்கங் கொண்டது. மேலும், தமிழ் நாவலர்கள் பொன்னைப் பெரிதாக மதித்தல் கூடாது என்ற கருத்தினையும் அவர் கொண்டிருந்தவர். ஆகவே, அந்தச் செய்யுளை அவரே பாடி முடித்தார்.

அவருடைய அருளுக்கு, அம்பியின் உள்ளம் இணையற்ற, நன்றியைக் கொண்டதாகக் களித்ததொன்றே போதுமானதாய் இருந்தது. அவள் கொடுத்த பொன்னையும் மறுத்துவிட்டு, அவளை வாழ்த்திவிட்டுச் சென்றார் ஔவையார். அந்தப் பாடல் இது!

பத்தம்பிற் பாதி யுடையான் இரண்டம்பிற்
கொத்தம்பி என்பாள் கொளப்புக்குச் - சுத்தப்
பசும்பொன் அரவல்குற் பாவையர்க்குத் தோற்று
விசும்பிடைவைத் தேகினான் வில்.

"பத்து அம்புகளிற் பாதியான ஐந்து மலரம்புகளை உடையவன் மன்மதன். அவன் கண்களாகிய இரண்டு அம்புகளையே உடைய கொத்தாக மலர்சூடி நின்ற அம்பி என்பவள் எதிர்கொள்ள, அவளோடு போரிற் புகுந்தான். தூய பசும்பொன் போன்றதும், அரவுப்படம் போன்றதுமான அல்குல் தடத்தினையுடைய அந்த அம்பிக்கு அவன் தோற்றுப்போயினான். தன் வில்லை வானத்தே வீசி எறிந்துவிட்டு, அவன் போய் விட்டான்!" என்பது பொருள்.

அவள் அழகிற்கு மதனனும் தோற்றான். எனவே, அவளுடைய எழிலின் ஏற்றத்தை மிகவும் சிறப்பித்துப் பாடியதாயிற்று. அம்பியும், அதன்பின் பொலிவுற்றுச் சிறந்தனள்.