ஔவையார் தனிப்பாடல்கள்/மடந்தை நட்பு!
113. மடந்தை நட்பு!
நட்பு என்பது சிரித்து விளையாடியும், உண்டு களித்து உறவாடியும் மகிழ்தற்கு மட்டுமே உரியதாகாது. இவை நட்பினரின் இயல்பாயினும், இவற்றினும் மேலாக, என்றும் இன்பத்தினும் துன்பத்தினும் ஒன்று கலந்தவராக உறவு பூண்டிருக்கும் நட்பினை உடையவரே சிறந்த நட்பினராவர்.
இப்படிப்பட்ட சிறந்த நட்பிற்கு எடுத்துக்காட்டாகத் தமிழ் ஆசிரியர்கள் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் கொண்டிருந்த நட்புச் செறிவைக் கூறுவார்கள்.
சோழன் வளவாழ்வினனாக ஆட்சிப் பீடத்திலே அமர்ந்திருந்தபோது, தம்முடைய நட்பினைக் கொண்டு, அவனை அடைந்து களித்திருக்கப் பிசிராந்தையார் கருதினார் அல்லர். அவனைக் காணாதேயே அவனுடைய உள்ளன்பைப் பிறர் சொல்லக் கேட்ட அளவாலேயே, அவனை நட்பாகக் கொண்டு விட்டவர் அவர்.
இப்படியே சோழனும், பிசிராந்தையாரின் தமிழ்ச் செவ்வியினைக் கேட்டும், உளப்பண்பினை அறிந்தும் அவர்பால் நட்புக் கொண்டான். இருவரது நட்பும் வளர்ந்தது. அதற்கு இருவரது நேரடியான சந்திப்புக்கூட வேண்டியிருக்கவில்லை.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்து, அதனை மேற்கொண்டும் விட்டான். பொத்தியார் போன்ற புலவர்கள் பலர், அதனைக் கண்டு கலங்கினர். சிலர் அவனைப் பிரிந்து வாழ்வதற்கு மனமற்றவராகத் தாமும் அவனுடன் வடக்கிருக்கலாயினர்.
"பிசிராந்தை வருவாரோ?” என்றார் ஒருவர்.
"தவறாமல் வருவார். என் நல்ல காலத்தில் வராதிருந்தாலும், என்னுடைய அல்லற் காலத்தில் வராதிருப்பார் அல்லர்” என்று உறுதியுடன் சொன்னான் சோழன்.
சொன்னபடியே அவரும் வந்தார். அவருடைய உள்ளம் சோழனுக்குத் துயரஞ்சூழ்தலை அவருக்கு உணர்த்த, அவர் தாமே விரைந்து நடந்து, சோணாட்டை அடைந்தார்.
"பிசிராந்தையார் வந்தார்” என்றதும், பலரும் வியப்புடன் மெய்மறந்து அவரைப் போற்றினர். அவர் சோழனை உவகையோடு கண்டார். அவனருகே தாமும் அமர்ந்தார். இருவரது உயிரும் ஒரே வேளையிற் பிரிந்தது. சாவின் செயல் அவர்களை ஒன்றுபடுத்தியது.
இப்படியே, காதல் கொண்ட தலைவன் தலைவியராகிய இருவரும் தமக்குள் பிரிக்கவியலாத நட்புப் பூண்டு ஒழுகுவது பண்டைத் தமிழகத்தில் இயல்பாயிருந்தது.
இளைஞன் ஒருவனுக்கும் கன்னி ஒருத்திக்கும் இடையே காதல் முகிழ்கலாயிற்று. அது மலர மலர, அவர்களது நெருக்கமும் உறுதியாகத் தொடங்கியது. பெற்றவரை அறியாதே அவர்களின் களவுறவும் நிகழத் தொடங்கிற்று.
கன்னியின் செவிலித்தாய் தன் மகளது மேனியில் தோன்றிய புதுப் பொலிவுகளைக் கண்டாள்! அவள்மனம் சிதறியது. தெய்வக் குற்றமோ என ஐயுற்றாள். வேலனை அழைத்து, வெறியாட்டு அயர்வதற்கும் ஏற்பாடு செய்தாள்.
வாயாடிப் பெண்கள் சிலருக்குக் கன்னியின் களவு உறவைப் பற்றிய செய்திகள் காற்றுவாக்கிற் கிடைத்து விட்டன. அவர்களின் வாய்மடை திறந்தது; வார்த்தைகள் வரைகடந்து வெளிப்பட்டன.
“ஒன்றுமறியாத கன்னியைப் பாருங்கள்! இவள் உறவுக்குச் சோலை மரங்கள் சான்று சொல்லுமே”
"இவள் காதலன் எவனோ? இவளை மயக்கிய அவனது எழில்தான் எத்துணைப் பேரழகோ?”
இப்படிப் பேச்சுக்கள் மலிந்தன. இதனால், அவர்களுடைய களவுச் சந்திப்புக்கள் குறைந்தன. பகற்போதில் அவளை தனியாகப் பார்ப்பதே அவனுக்கு அரிதாயிற்று. அவள் குளிக்கச் சென்றாலும், மலர் கொய்யப் போனாலும், ஆடற்கு ஏகினாலும், அவளைத் தோழியர் சூழ்ந்து மொய்த்தபடி கண்காணிக்கத் தொடங்கினர்.
இரவு வேளையிற் சந்திக்கும் வாய்ப்புஞ் சில நாட்களே கை கூடிற்று. அதன்பின் காவல் கடுமையாயிற்று.
அவளை மறக்க முடியாமல் அவன் மெலிந்தான்.
அவனை அடைய இயலாமல் அவள் தவித்தாள்.
அவன், தன் பெற்றோரிடம் நிகழ்ந்ததைச் சொன்னான். அவர்கள் அவனுடைய எண்ணத்தை மறுக்கவில்லை. சான்றோர் சிலரைக் கன்னியின் வீட்டிற்கு, உரிய பரிசுப் பொருள்களுடன் அனுப்பி வைத்தனர்.
அவர்கள் சென்று மணம் பேசினர். கன்னியின் பெற்றோர்க்கு அவர்களின் களவுறவு தெரியாது. அவர்கள் அவளைத் தம் உறவில் ஓரிளைஞனுக்கு மணமுடிக்கக் கருதியிருந்தனர். அதனால், சான்றோரின் வேண்டுதலை ஏற்காது மறுத்தனர்.
தலைவியின் உள்ளம் படாதபாடுபட்டது. தான் காதலித்தவனை மறந்து, மற்றொருவனுடன் வாழ்வதென்பதை, அவளால் நினைக்கவும் முடியவில்லை. அவள் புழுவாகத் துடித்தாள். அவள் கண்கள் கண்ணிர்க் குளமாயின.
"ஏனடீ! இந்தப் பிடிவாதம்? எவனையோ கண்டாளாம்? காதல் பிறந்ததாம்? அவனையே மணக்க வேண்டுமாம்? இது நடக்கக் கூடியதா? நீ பிறந்தபோதே உன் கணவன் என்று நாங்கள் உறுதி செய்தவன், உனக்காகக் காத்திருக்கின்றான். அவனை விட்டு, இன்னொருவனை எப்படியடி நீ நினைத்தாய்?"
இப்படிப்பட்ட கண்டனக் கணைகள் பல அவளைத் தாக்கின. பிரிவுத் துயரம் ஒருபுறமும், இல்லத்தாரின் காவற் கடுமையும், கடுஞ்சொற் கொடுமையும் மற்றொரு புறமுமாக அவளைத் தாக்கின. அவள் கண்கள் நீரூற்றுக்கள் ஆயின. அவள் பூச்சும் மறந்தாள்; புனைவும் துறந்தாள்! ஊணும் மறந்தாள், உறக்கமும் இழந்தாள்!
அவளுடைய ஆருயிர்த் தோழி ஒருத்திக்கு இந்த அவலமான போக்கை நினைக்க நினைக்கப் பெரிதும் வேதனையாக இருந்தது. அதனை எப்படியும் போக்கி விடுதற்கு அவள் திட்டமிடலானாள்.
கன்னியின் காதலனைக் கண்டு பேசினாள். “எப்படியாவது வீட்டிலிருந்து அவளைக் கடத்திக் கொண்டு வந்து விடுகின்றேன். உன்னுடன் அவளை அழைத்துப்போய் விடு. உன்னுடைய ஊருக்குச் சென்று இருவரும் மணந்து கொள்ளுங்கள்” என்றாள்.
அவனும் அதற்கு இசைந்தான். அவளுக்காகக் குறித்த இடத்திற்குச் சென்று காத்துக் கிடக்கலானான்.
ஒரு நாள் இரவின் கடைசிச் சாம வேளையில், அவனை யாரோ எழுப்ப, அவன் திடுக்கிட்டு விழித்தான். உறக்கத்தின் அணைப்பிலே, தன் காதலியோடு உறவாடியிருந்த கனவு கலைந்து போனதை நினைந்த வருத்தத்துடன், தோழியை நிமிர்ந்தும் நோக்கினான்.
"இதோ பார்.சீக்கிரமாக எழுந்திரு.உன் காதலி அந்த வேங்கை நிழலில் உனக்காகக் காத்திருக்கின்றாள். உடனேயே சென்று விடுங்கள்” என்றாள்.
அவன் காதுகளில் அச் சொற்கள் விழவும், அவனிடம் புதுக் கிளர்ச்சியும் வலிமையும் தோன்றின. தோழிக்கு நன்றி சொல்லக் கூட அவன் நிற்கவில்லை. வேங்கை மரத்தடிக்கு விரைந்தான்.
அவர்களின் நினைவை மீண்டும் உலகிற்குத் திருப்பத் தோழி பட்டபாடு பெரிதாயிருந்தது. அவர்கள் சென்று விட்டனர்.
பொழுது விடிந்ததும், தலைவியின் இல்லத்திலே ஒரே பரபரப்பு உண்டாயிற்று. அவளைத் தேடியவாறு ஆட்கள் நாலாபுறமும் சுற்றித் திரிந்தனர்.
செவிலித்தாய்க்கு ஒரு நிலைப்படவில்லை. அவள் தன் மகளான, கன்னியின் காதற் தோழியைத் தன்னருகே அழைத்தாள். தலைவியைக் கண்டனையோ எனவும் கேட்டாள்.
"இதற்குள் அவர்களின் மணம் நிறைவேறியிருக்கும், அவர்கள் ஊரில்" என்றாள் மகள்.
தோழியின் கவலையற்ற முகபாவம், அவள் சொற்களின் உறுதியைக் காட்டின. செவிலித்தாயின் கவலைகள் மறைந்தன. அவளது ஏக்கம் நீங்கிற்று. அவள் நேராகத் தலைவியின் தாயிடம் சென்றாள்.
"மிகப் பழையதான ஆலமரத்தின் அடிக்கண்ணுள்ள பொதுவிடத்தே தோன்றிய, நாலூர்க்கோசரின் நன்மொழி பின்னர் உண்மையாகியதை நாம் கண்டுள்ளோம். அதைப் போலவே, அழகிய வீரக்கழலையும், செவ்விய வெள்வேலையும் கொண்ட தலைவனோடு, தொகுவளை முன்கையினளான நம் மடந்தை கொண்ட நட்பும் பொய்யாகிப் போகவில்லை. மணப்பறை ஒலிக்கவும், சங்கம் முழங்கவும் மணவினை நிகழ, உண்மையே ஆயிற்று.”
அவள் இப்படிச் சொன்னாள். அவள் உள்ளம் மகளின் மணவினைக் காட்சிகளைத் தன்னுட்கண்டு, மகளை வாழ்த்துவதாயிற்று பெற்ற தாயும், மகளின் நல்வாழ்வைக் குறித்து வாழ்த்தத் தொடங்கினாள்! பிறரும் அவர்களுடன் கலந்து கொண்டனர்.தந்தையும் பிறரும் முதலில் ஆத்திரம் அடைந்தாலும், அடுத்து 'அவள் கற்புச் செல்வி, அதனால் அவள் காதலை அவள் நிறைவு செய்து வெற்றி கண்டாள்' எனத் தெளிவுற்றனர்.
அனைவரும் அந்த மணவிழாவிற் கலந்துகொள்ளப் புறப்பட்டனர். அவளை வாழ்த்தவும் அவள் மணக் கோலத்தைக் கண்டு களிக்கவும், ஒருவருக்கொருவர் முந்திச் செல்வாராயினர்.
இவ்வாறு, நிகழ்ந்த அறவாழ்வின் செப்பத்தைத் தாய்க்குச் செவிலித்தாய் சொன்ன செய்தியைக் கொண்டு காட்டுகின்றார் ஔவையார்.
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி - ஆய்கழல்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே(குறுந். 15)
பறை - மணப்பறை. இறை கொள்ளல் தங்கியிருத்தல். தொன்மூதாலம் - மிகப் பழைய ஆல மரம். பொதியில் - பொது விடம்: ஊர் மன்றம் நாலூர் - ஒருர் கோசர் - ஒரு சாதியார்; மறமாண்பினும், சொல் தவிராமையினும் சிறந்தவர். இவர் தாம் வாக்களித்தபடி மோகூர்ப் பழையனைத் தாம் காத்து நின்றனர். சேயிலை - சிவந்த இலைப்பகுதி, சிவப்பு, குருதிக் கறையால் உண்டாயது; அது வீரத்தின் அடையாளம். விடலை - இளைஞன். கழல் - வீரக்கழல்
இவ்வாறு, சமுதாயத்தின் மரபுகளையும் ஔவையார் மிகவும் நுட்பமாக உரைத்துள்ளார். இத்தகைய செய்யுட்கள் பலவற்றையும், அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய அகத்துறை நூல்களுட் காணலாம்.
◇ ◇ ◇
◇