உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/வாராயேல் சபிப்பேன்!

விக்கிமூலம் இலிருந்து
565510ஔவையார் தனிப்பாடல்கள் — வாராயேல் சபிப்பேன்!ஔவையார் (தனிப்பாடல்கள்)

21. வாராயேல் சபிப்பேன்!

ந்தப் பெண்களுடைய அன்பினை வியந்து பாடினார் ஔவையார். அவர்களைப் பாரியின் மகளிர் என்று அறிந்ததும் பெரிதும் கவலை கொண்டார். அவர்களின் எளிய நிலையைக் கண்டுகண் கலங்கினார்.அவர்களை வாழ்விக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.

அவர்களுடைய காதலர்கள் திருக்கோவலூர் மலையமானின் மக்கள் என்று தெரிந்து கொண்டார். அவர்களின் விருப்பப்படி அவர்களுக்கு மணமுடித்து வைக்கவும் திட்டமிட்டார்.

அவரை ‘ஔவையார்’ என்றறிந்த அந்தப் பெண்களும் பெரிதும் மகிழ்ந்தனர். அவருடன் திருக்கோவலூர் செல்லவும் இசைந்தனர்.

திருக்கோவலூர் வந்து மலையமானின் மக்களிடம் கலந்து பேசி, திருமண உறுதியும் செய்துகொண்டார் ஔவையார். அதன்பின், திருமண ஓலையினை எழுதுவதற்கு விக்கினங்களைப் போக்கியருளும் விநாயகப் பெருமானையே அழைக்கின்றார்.

எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன்னால், அச்செயல் இடையூறின்றி முடிவதன் பொருட்டாக விக்கினங்களைப் போக்கிக் காக்கின்ற விநாயக் கடவுளைத் தவறாது வேண்டி வழிபட வேண்டும் என்பார்கள். அந்த விநாயகரோ ஔவையாரின் வழிபடு தெய்வமாகவும் இருந்தார். தாம் அன்புகொண்ட அங்கவை சங்கவை ஆகியோருக்கு மணமுடிக்க உறுதி செய்ததும், அவர்களின் திருமண ஒலையை எழுதுமாறு அவ் விநாயகரையே வேண்டுகிறார் அவர்.

விநாயகர், முன்னர் வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கப் பாரதத்தை எழுதினார். அப்போது, தம் எழுத்தாணியாகத் தம்முடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து வைத்துக்கொண்டு எழுதினார். அதனால், அவர் ஒற்றைக் கொம்பனாகவும் விளங்குபவராவர்.

“அன்று பாரதம் எழுதினாய். இன்று இந்தப் பெண்களின் துயரைத் தீர்த்து நல்ல நிலையிலே மணமுடித்துக் காண்பதற்கு விரும்பும் எனக்கும் நின் உதவியைத் தருக பெருமானே! நீயே வந்து இவர்களின் திருமண ஓலையினை எழுதித் தருக" என்று துதித்து வேண்டுகின்றனர் ஔவையார்.

ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்க்
கரியரிவைக் கங்காளன் காளாய் - பரிவுடனே
கண்ணால வோலை கடிதெழுத வாராயேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து.

“ஒற்றைக் கொம்பனே! இரு செவிகளையும், மும்மதங்களையும், தொங்குகின்ற வாயினையும் உடையவனே! யானைத் தோலைப் போர்த்தும், எலும்பு மாலைகளை அணிந்தும் விளங்கும் சிவபிரானின் திருக்குமாரனே! இப் பெண்களிடத்து இரக்கம் உடையவனாக இவர்களின் கல்யாண ஓலையினை எழுதுவதற்கு விரைந்து வருவாயாக! நீ வராதிருந்தால், நின் ஆற்றல்கள் அனைத்தும் நீங்கிப்போக நின்னைச் சபித்து விடுவேன் நான்” என்பது பொருள்.

விநாயகன் அடியவர்க்கு எளியவன். ஔவையார் அழைத்தாலே போதுமானது. அவன் அவர்க்கு அருள்புரிந்து நிற்பான். எனினும், அவருடைய ஆசையின் தீவிரம் அவருடைய செய்யுளில் எதிரொலிக்கின்றது. நிலை தளர்ந்தாரிடையே உலகினர் காட்டும் அலட்சிய மனோபாவத்தைத் தெளிவாக உணர்ந்தவர் ஔவையார். அதே மனோபாவம் விநாயகனுக்கும் இருந்துவிடக் கூடாதே என்றுதான், 'வாராயேல் சபிப்பேன்' என்கின்றனரோ!

ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க்
கரியுருவக் கங்காளன் செம்மல் - கரிமுகவன்
கண்ணால வோலை கடிதெழுத வாரானேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து.

எனவும் இச்செய்யுள் வழங்கப்பெறும்.

“ஒற்றைக்கையும், இரட்டைக் கொம்புகளும், மூன்று மதங்களும், தொங்குகின்ற வாயும், யானை உருவமும் கொண்டோன் எலும்பணியும் சிவனின் சிறந்த மகன் யானை முகவன்! அவன் கல்யாண நாளோலை எழுதுவதற்கு விரைந்து வாராதிருந்தான் என்றால், அவனைச் சபித்து, அவன் ஆற்றலையே போக்கிவிடுவேன்” என்பது பொருள்.

இது விநாயகரை வேண்டிய ஔவையாரை நோக்கி, 'விநாயகர் வராதிருந்தால்?’ என்று வினவின ஒருவரிடம் சொல்லியது என்பர்.

கடவுளரையும் சபிக்கும் ஆற்றல் உடையவர் உண்மைத் தொண்டர்கள். அந்த ஆற்றலைக் குறிப்பிட்டுக் காட்டுவதும் இச்செய்யுள் ஆகும்.