உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/வாழைத் தோற்றம்!

விக்கிமூலம் இலிருந்து

91. வாழைத் தோற்றம்!

வையார் ஒரு சமயம் திருக்குடந்தை நகருக்குச் சென்றிந்தார். அங்குச் செல்வனான ஓர் உலோபி இருந்தான். ஈயாத அவனுடைய தன்மைக்கு இரங்கினார் அவர். அதே ஊரில் வந்தவர்க்கெல்லாம் இல்லையென்னாது உணவளித்து உவக்கின்ற பண்பாளன் ஒருவனும் இருந்தான். ஔவையாரை வரவேற்று அவன் விருந்துட்டி இன்புற்றான்.

இந்த இருவரின் தன்மைகளையும் ஔவையார் நினைத்துக் கொண்டார். அவர்கள் வீட்டின் முற்றத்தே நின்றிருந்த வாழை மரங்களையும் கண்டார். இவ்வாறு பாடுகின்றார்.

திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்
மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தும்
இலையுமிலை பூவுமிலை காயுமிலை என்றும்
உலகில் வருவிருந்தோ டுண்டு.

“செல்வம் குறையாது தங்கியிருக்கும் அந்த உலோபியின் வீட்டு வாழை மரம் இனிதான பழக்குலையுடன் நிற்கின்றது. திருக்குடந்தை நகரிலுள்ள மருதன் என்பானுடைய வாழையிலோ குருத்தும் இல்லை, இலையுமில்லை, பூவுமில்லை; காயும் இல்லை. உலகில் எந்நாளும் வருகின்ற விருந்தினரோடு அவன் உண்ட தன்மையினால் அது எப்படி விளங்கும்; (எனினும் அதுவே சிறந்தது)” என்பது பொருள்.