கடவுள் கைவிடமாட்டார்/கனவு நினைவாயிற்று!
மறுநாள் இராமேசுவரத்திற்குத் தருமலிங்கமும் மீனாட்சியும் வந்தார்கள். அவசர அவசரமாக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்கள். அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம், தன் வைரக்கற்களை அடையாளம் காட்டினார் புகாரும் எழுதித் தந்தார் தருமலிங்கம்.
தருமலிங்கத்தின் நண்பர்தான் அந்த இன்ஸ்பெக்டர். இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். நண்பருக்கு உதவி செய்ய தன் கடமையை சரிவர நிறைவேற்ற கிடைத்த சந்தர்ப்பம் குறித்த திருப்தி, அவர் முகத்தில் தெரிந்தது.
தனது நகையும் வைரக்கற்களும் நடேசனால் கடத்தப்பட்டுவிட்டது என்று தருமலிங்கம் பதறியபோது கணக்கப் பிள்ளை ரகசியமாகப் பேசினாரே! அவர் தெரிவித்த யோசனை இதுதான்
போலீஸ் ஸ்டேஷனில் போய் ரிப்போர்ட் கொடுத்து விட்டு, இராமேசுவரத்தில் இருக்கும் அவரது நண்பருக்கும் தெரிவித்தால், அவர் மேற்கொண்டு உதவி செய்வார், என்பதுதான் அவர் கூறிய யோசனை. தருமலிங்கமும் கணக்கப் பிள்ளையின் பேச்சுக்கு மதிப்புகொடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து விட்டுப் போகும்பொழுது, எதிரே வேலைக்காரன் வேம்புலி வந்தான்.
எசமான்! எசமான்!
வேம்புலி வேகமாக எதையோ சொல்வதற்கு முயற்சித்தான். ஆனால், பேச முடியவில்லை. மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. ‘என்ன விஷயம் வேம்புலி?’ தருமலிங்கம் தன் மனதில் படபடப்பு இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிதானமாகக் கேட்டார். ஆனாலும், என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவல் அவர் கண்களில் அலைமோதி நின்றன.
எசமான்! நடேசனைக் கண்டு பிடிச்சிட்டேன்! வேம்புலி ஒரு முக்கியமான சேதியைச் சொல்லி, தான் ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் என்பதைக் காட்டிக் கொள்கின்ற பெருமையுடன் சொன்னான்.
‘எங்கே பார்த்தாய் வேம்புலி?’ ஏன் அழைத்துக் கொண்டு வரவில்லை? என்றார் தருமலிங்கம்!
எசமான்! இன்னிக்கி பெரிய ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன். என் தம்பிக்கு காய்ச்சல். அவனுக்கு மருந்து வாங்கனும்னு போனேன். அப்பொ தாங்க பார்த்தேன். பார்த்தா பாவமா இருந்ததுங்க!
பாவமா துரோகம் பண்ணுனவன் முகம் கொடூரமா இல்லே இருக்கும். பாவமாவா இருக்கும்? அவர் குரலில் கோபமும் கிண்டலும் கலந்து உறவாடிச் சென்றன. போ போய் அழைத்துப் பார்! இல்லையென்றால் கட்டி இழுத்துவா! என்று ஆணையிட்டார் தருமலிங்கம்.
முடியாதுங்க! அவரை புலி அடிச்சு போட்டுட்டு போயிடுச்சுங்க! ஐயோ! புலி அடிச்சா எப்படி இருக்குங்க! என்று வேம்புலி பயந்தவன் போல் நடித்து காட்டினான். அவர் எழுந்திருக்க முடியாதுங்க. கால் இரண்டையும் கட்டி தூக்கிலே மாட்டுனெ மாதிரி உயரமா தொங்கப் போட்டிருக்காகங்க!
என்ன? ஆஸ்பத்திரியில் படுக்கையிலே கிடக்கிறாரு! அப்ப வா போய் பார்க்கலாம்' என்று வேகமாகப் புறப்பட்டார். தருமலிங்கத்தின் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் வேம் புலி பின்னால் ஓடிக்கொண்டிருந்தான்.
எதிர்பார்த்த நேரத்திற்கு முன்னதாகவே, இருவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். நடேசனைப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தில், நடேசனைப் போட்டிருந்த படுக்கையை நோக்கிப் போனார்கள். அங்கே போய் பார்த்தபொழுது, தருமலிங்கத்திற்கே மிகவும் மனக் கஷ்டமாக இருந்தது.
நடேசன் மருத்துவமனையில் இரண்டு காலை தூக்கிக்கட்டிய நிலையில் கிடப்பதைப் பார்த்தார்.
பதறி ஓடிப் போய் பார்த்தார் தருமலிங்கம், நின்று கொண்டிருந்த தருமலிங்கத்தின் கால்களைக் கட்டிப் பிடித்தவாறு படுத்தபடியே புலம்பினார் நடேசன்.
‘நான் செய்த துரோகத்திற்குத் தெய்வம் புலியைத் தாக்கச் செய்து சரியான தண்டனையைத் தந்து விட்டதுங்க! நம்பிக்கையுடன் தந்த நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிய இரண்டு கால்களையும் என்னால் அசைக்க முடியாது போயிற்று. எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்! என்று அழுதார் நடேசன்.
‘பரவாயில்லை நடேசன்’ நடந்தது நடந்ததாக இருக்கட்டும். கவலைப்படாமல் இருங்கள். உடல் நலமானதும் வீட்டுக்கு வாருங்கள். உங்களைக் காப்பாற்றும் எல்லா பொறுப்பும் என்னைச் சார்ந்தது’ என்று ஆறுதல் கூறினார்.
‘ஆமாம் நடேசன்! நீங்கள் வைத்திருந்த வைரக்கற்கள் எங்கே? இப்பொழுது கொடுத்துவிடுங்கள். அது மிகவும் புனிதமான கற்கள் ஆயிற்றே என்று கேட்டார்.
அந்த வைரக்கற்கள் எங்கே போயிற்று என்று எனக்குத் தெரியவில்லையே என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் நடேசன்.
‘நீங்கள் அழவேண்டாம்! நிதானமாகக் கூறுங்கள். அதுவரை காத்திருக்கிறேன்’ என்று தருமலிங்கம் கூறினார்.
நான் கரும்புக் காட்டிற்குள் அடிபட்டுக் கிடந்தேங்க! இராத்திரி முழுதும் அப்படியே மயக்கமாகவே கிடந்தேங்க காலையில் வேலைக்கு வந்த ஆளுங்க என்னைப் பார்த்ததும், அப்படியே தூக்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டுப் போனாங்க.
‘இல்லாட்டி நான் இந்நேரம் செத்துப் போயிருப்பேங்க,’ என்று இன்னும் ஒருமுறை குலுங்கிக் குலுங்கி அழுதார் நடேசன்.
அவரை அழவிட்டு விட்டு, தருமலிங்கம் யோசனையில் ஆழ்ந்து போனார். வைரக்கற்கள் எங்கேபோயிருக்கும்? அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்னும் கேள்விகளே அவர் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தன.
இதோ பாருங்கய்யா! அந்தப் படுக்கையில் படுத்திருக்காரே ஒருத்தர்! அவர் பேரு துரைசாமி. சர்க்கஸ்ல ரிங் மாஸ்டராம். அவர் தாங்க என்கிட்டே இருந்து எடுத்திருக்காரு. அவரை அடிச்சு போட்டுட்டு அடுத்த படுக்கையில் கிடக்கிறாங்களே ரெண்டு பேர். அவங்ககொண்டு போயிட்டாங்க.
அவங்களுக்குள்ளே சண்டை, ரெண்டுபேரும் ஆத்தோட போனாங்க!
அப்போ, வைரக் கற்கள் ஆற்றோடு போயிட்டதா? என்று மிகவும் வேதனையுடன் கேட்டார்.
இல்லிங்க! அதை எடுத்துகிட்டு அந்தப் பொண்ணு ஓடியிருக்கா! அவளும் குதிரை வண்டியிலமோதி, இந்த ஆஸ்பத்திரியில கிடக்குறாங்க! அதுக்கப்புறம் அந்தப் பொட்டலம் எப்படி போச்சுன்னுதாங்க தெரியலே...
நடேசன் தான் செய்த தவறுக்கு வெட்கப்பட்டவராக தலையைக் குனிந்து கொண்டார். அவர் தலையணையை கண்ணீர் நனைத்துக்கொண்டிருந்தது.
நடேசனைப் பார்த்துவிட்டு, அப்படியே பார்வையை அந்தப் பக்கம் செலுத்தினார்.
ரிங்மாஸ்டர் துரைசாமி படுக்கையில் கண்ணை மூடியபடிக் கிடந்தார். இரத்தம் உறிஞ்சும் அட்டை, அவரது ரத்தத்தை உறிஞ்சி விட்டது. அடிபட்ட மயக்கம், இரத்தம் இழந்த மயக்கம் மிகவும் களைப்புடன் காணப்பட்டார்.
‘உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் அவர் படுக்கையை விட்டு எழுந்திருக்க’ என்று பக்கத்தில் பேசிக்கொண்டார்கள்.
அதற்கடுத்த படுக்கை ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவராகப் போட்டிருந்தார்கள். முத்தையாவும் ஏகாம்பரமும், தான் காலில் சேறுபட்டதற்காக கவலைப்பட்டவர்கள், வயிறு தெரியாமல் செய்த தவறுக்கு, தலையிலே பட்ட சிறு காயத்துடன் தப்பித்துக் கொண்டாள் பத்மா. பிச்சையெடுத்துப் பிழைக்கும் அவள் பிழைப்பை மாற்றி ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தருமலிங்கம் மனதில் உறுதி செய்து கொண்டார்.
மருத்துவ மனையில் முக்கியமான டாக்டரை சநதித்தார் தருமலிங்கம். அவர்கள் எல்லோரைப் பற்றியும் எடுத்துக் கூறினார். தான் வைரத்தோடு செய்யத் தொடங்கியதால் தான் இவ்வளவு பேரும் இப்படிக் கஷ்டம் அடைந்திருக்கிறார்கள் என்று சொன்னார்.
டாக்டர் அவருடைய நல்ல மனதைப் புரிந்து கொண்டு ஆறுதல் சொன்னார். இவர்களைப் பற்றி நீங்கள் கவலையே படவேண்டாம். அவர்களை ஒரு சில நாட்களிலே குணப்படுத்தி அனுப்பிவைத்து விடுவேன். உங்கள் வைரக்கற்களைப் பற்றித்தான் எனக்குக் கவலை, என்றார் டாக்டர்.
‘நான் வைரக்கற்களைப் பற்றி கவலையேபடவில்லை டாக்டர். அது ஆண்டவனுக்காக் கொடுத்து விட நான் முடிவு செய்த அன்றே, அது கடவுளின் சொத்தாகி விட்டது. அதைக் கண்டு பிடித்துக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பு கடவுளின் பொறுப்பு. என்னுடையதல்ல’ என்று பேசிய தருமலிங்கத்தின் கடவுள் பக்தியைக் கண்டு டாக்டர் ஆச்சரியமடைந்தார்.
வீட்டுக்கு வந்தார் தருமலிங்கம், வேகமாகப் போன தன் கணவன், இன்னும் வரவில்லை என்ன ஆனதோ தெரியவில்லையே என்ற கவலையில், வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள் மீனாட்சி. அவர் வந்ததைக் கண்டதும் தான் அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
தருமலிங்கம் அவசரப்படாமல், அதே சமயத்தில் கோபப்படாமல் எல்லா விஷயத்தையும் விவரித்தார்.
மீனாட்சிக்கோ எல்லாம் கனவு காண்பது போலவே தோன்றியது. இப்படியும் நடக்குமா உலகத்தில் என்று ஆச்சரியம் அடைந்தாள். இருவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தார்கள்.
சார், தந்தி!
தந்தி சேவகன் கொடுத்த தந்தியை, கையெழுத்து போட்டு பெற்றுக் கொண்டார் தருமலிங்கம்.
‘என்ன தந்திங்க’ என்று பயத்துடன் கேட்டாள் மீனாட்சி.
இராமேஸ்வரத்திலிருந்து தந்தி வந்திருக்கிறது. என்னுடைய நண்பர் இன்ஸ்பெக்டர் தந்தியடித்திருக்கிறார். அங்கே வந்தால் எல்லாம் விவரமாகக் கூறுகிறேன் என்பதுதான் முக்கிய சேதி.
உடனே இராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டார்கள். இவ்வாறு தருமலிங்கமும், மீனாட்சியும் இராமேஸ்வரம் வந்து, வைரக்கற்களை அடையாளம் காட்டி உறுதி செய்தார்கள்.
எல்லாம் நல்ல படியாகக் கிடைத்தது என்று தருமலிங்கம் மகிழ்ந்தார்.
வெளி நாட்டுக்கு கடத்தப்படாமல், தனக்கு சேர வேண்டிய வைரக் கற்களை தானே காத்துக் கொண்டாள் அம்பிகை என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தாள் மீனாட்சி.
‘தீமை செய்ய முயற்சி செய்தால், ஆரம்பத்தில் வெற்றி பெறுவது போலத் தோன்றினாலும், முடிவில் உண்மையே வெல்லும் தீமை தோல்வியே அடையும்’ என்று நடேசன் மட்டும் நினைக்கவில்லை. துரைசாமியும் நினைத்தார். அந்த விவசாயிகளும் நினைத்தார்கள்.
கடவுள் எப்பொழுதும் கைவிடமாட்டார் என்று தருமலிங்கமும் மீனாட்சியும் அம்பிகைக் கோயிலில் பூசை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
உழைத்து சம்பாதித்த பொருட்கள் தான் ஒருவருக்கு ஒட்டும். ஏமாற்றி சேர்க்கும் பொருட்கள் ஆரம்பத்தில் இன்பம் தருவது போலத் தோன்றினாலும், தொடர்ந்து துன்பத்தையே தரும் என்பது தான். உலகத்தில் நாம் அன்றாடம் காண்கின்ற காட்சியாக இருக்கிறது.
மனதிருப்தியும் மகிழ்ச்சியும், பொன்னாலும் பொருளாலும் மட்டும் வருவதில்லை. உண்மையான உழைப்பில், நன்மை செய்வதில், பிறரை மதிப்பதில், ஆபத்தில் உதவுவதில், அன்புகாட்டுவதில் தான் வருகிறது.
நாமும் இதை நினைப்போம். உண்மையுடன் உழைப்போம். உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என்ற நல்ல லட்சியத்துடன் உழைப்போம். நல்ல பாதையில் நடப்போம். இந்த லட்சியத்தை நெஞ்சிலே உறுதியாகக் கொண்டவர்களைக் கடவுள் என்றும் கைவிடவே மாட்டார்!