உள்ளடக்கத்துக்குச் செல்

கடவுள் வழிபாட்டு வரலாறு/கடவுள் உண்மைப் பொருளா ?

விக்கிமூலம் இலிருந்து
417288கடவுள் வழிபாட்டு வரலாறு — கடவுள் உண்மைப் பொருளா ?பேரா. சுந்தரசண்முகனார்

6. கடவுள் உண்மைப் பொருளா?

அடுத்து-ஊழ்வினைப்படி உயிர்களைப் படைப்பதாகவும், அவதாரங்கள் எடுப்பதாகவும் சொல்லப்படுகின்ற கடவுள் என்னும் ஒர் உயர் பொருள் உண்டா என ஆராய வேண்டும். கடவுள் என ஒரு பொருள் இல்லை என்பது உறுதிப்படின் ஊழ்வினைக் கொள்கை, அவதாரக் கொள்கை முதலிய மூட நம்பிக்கைக் கொள்கைகள் எல்லாம் தாமே அடிபட்டுப் போகும்.


ஆத்திகமும் நாத்திகமும்

கடவுள் உண்டு என்னும் கொள்கையின் கூடவே கடவுள் இல்லை என்னும் கொள்கையும் உடன் இருந்து வருகிறது. கடவுள் உண்டு என்னும் கொள்கை ஆத்திகம்’ (Theism) என்னும் பெயராலும், கடவுள் இல்லை என்னும் கொள்கை நாத்திகம்’ (Atheism) என்னும் பெயராலும் சம்சுகிருதத்தில் வழங்கப்படுகின்றன.


“அஸ்தி என்னும் சம்சு கிருதச்சொல்லுக்கு ‘உள்ளது' . என்பது பொருளாகும்; எனவே, கடவுள் உண்மைப் பொருள்” என்னும் கொள்கை ஆஸ்திகம் (ஆத்திகம்) எனப்பட்டது. இதற்கு எதிரான கடவுள் இன்மைக் கொள்கை நாஸ்திகம் (நாத்திகம்) எனப்பட்டது. இவ்விரண்டையும் முறையே, உண்மை அல்லது உண்மைக் கொள்கை, இன்மை அல்லது இன்மைக் கொள்கை என நாம் தமிழில் வழங்கலாம்.


ஆத்திகர், நாத்திகர் என்னும் பெயர்களைத்தமிழில் என்னென்ன பெயர்களால் வழங்கலாம் என்பதைத் திருவள்ளுவர் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். உலகத்தார் உண்டு என்பதை இல்லையென்பவன் பேயாகக் கருதப்படுவான் என்று அவர் கூறியுள்ளார்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் (850)

'

என்பது அவரது திருக்குறள் பாடலாகும். எனவே, ஆத்திகர், நாத்திகர் என்னும் சம்சுகிருதப் பெயர்கட்கு நேராக முறையே உண்டென்பவர், இன்றென்பவர்’ என்னும் பெயர்களைத் தமிழில் வழங்கலாம். வள்ளுவனார் உண்டு என்னும் கொள்கையினரே. இக்காலத்தில் ஆத்திகர் பலராகவும் நாத்திகர் மிகச் சிலராகவும் உள்ளனர்; ஆயினும், நாத்திகர் பற்றிய குறிப்பு பல்லாண்டுகட்கு முன்பே நூல்களில் ஏறிவிட்டது.


இற்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகட்ரு முற்பட்டவரான மாணிக்கவாசகர் என்னும் பெரியார், நாத்திகம் பற்றி,

(1) காத்திகம் பேசி காத்தழும்பு ஏறினர்

எனக் கூறியுள்ளார். மறைஞான சம்பந்தர் என்பவர்.

(2) காத்திகர் என்றே உளத்துள் நாடு

எனவும், சிவஞான முனிவர் என்பவர்,

(3) காத்திகச் சொற்கு ஒரு கரிபோய் இழிந்தேனை எனவும் நாத்திகர் பற்றிக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திகத்தோடு நாத்திகமும் போட்டிபோட்டுக்கொண்டு வளர்ந்து வருகிறது எனலாம். அவ்வளவு ஏன்? சுமார் இர்ண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, திருவள்ளுவர், கடவுளை வணங்காவிடின் கற்றதனால் பயனில்லை என்று கூறியுள்ளார்.

(4) “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
கற்றாள் தொழாஅர் எனின்.’


என்பது அவரது பாடல். இஃதும் நாத்திகரையே சுட்டுகிறது. மிகப் பழைய வட மொழி வேதத்திலேயே நாத்திகர் பற்றிய குறிப்பு உள்ளது.

(1) திருவாசகம்-போற்றித் திருவகவல்-47
(2) சைவ சமய நெறி-பொது. 408-உரை
(3) காஞ்சிப் புராணம்-கழுவா. 208
(4) திருக்குறள்-பாயிரம்-கடவுள் வாழ்த்து-2.

மக்கள் தோன்றிய தொடக்கக் காலத்தில் அஃறிணை உயிரிகள்போல் அவர்கள் வாழ்ந்த காலத்தில்-காட்டு மிறாண்டிகளாய் வாழ்ந்த காலத்தில் அவர்களிடையே, இப்பொழுது உள்ளது போன்ற கடவுள் கொள்கை இருந்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், கடவுள் கண்ணுக்குத் தெரிய வில்லை யாதலின்-வேறு பொறி புலன்களாலும் உணர முடியவில்லையாதலின் கடவுள் என்ற உணர்வு ஒரு சிறிதும் தொடக்கக் காலத்தில் இருந்திருக்க முடியாது. அவ்வளவு ஏன்? இப்போதும் பத்துக் குழந்தைகளைத் தனியிடத்தில் வைத்து, கடவுளைப் பற்றிய அறிமுகமே செய்து வைக்காமல் வளர்த்து வருவோமேயானால், அவர்கள் இறுதிவரையும் கடவுளைப் பற்றி எண்ணவே மாட்டார்கள். எனவே, மக்களினம் தோன்றி நெடுங்காலம் சென்றபிறகு இடையிலே கண்டுபிடிக்கப்பட்ட சரக்கே கடவுள் என்பது. நாள் ஆக ஆகக் கடவுளுக்குக் கண்-காது-மூக்கு முதலியவை வைக்கப்பட்டன; கடவுள் பெயரால் கட்டுக் கதைகள் பல பெருகின; மூட நம்பிக்கைகள் முகிழ்த்தன; அதனால் எவ்வளவோ சடங்குகள் புற்றீசல்கள் போல் தோன்றின; இவற்றை அப்படியே பின்பற்றுபவர்கள் ஆத்திகர் எனப்பட்டனர். வேண்டாத இந்தச் சுமையை வெறுத்து ஒதுக்குபவர்கள் நாத்திகர் எனப்பட்டனர்.


நாத்திக வாதம்

கடவுள் என ஒருவர் இருப்பின் அவர் தனி உருவத்துடன் வெளியில் வரலாமே! வெளிப்படையாகக் காட்சியளிக்கலாமே! மறைந்து இருப்பதன் மர்மம்’ என்ன? அவரைக் காண மக்கள் ஏன் எவ்வளவோ தொல்லைப் பட வேண்டும் - துன்பப்பட வேண்டும்? தொல்லைப்பட்டும் காண முடிந்ததா-முடிகிறதா? யார் யாரோ எங்கே எங்கேயோ கண்டதாகக் கூறியுள்ளார்களே!இப்போதும் சிலர் கடவுளைக் காண்பதாகக் கூறுகின்றார்களே! இவர்கள் எல்லாம் என்ன கண்டனர்-என்ன காண்கின்றனர்? கடவுள் எப்படி இருந்தாராம்- - இருக்கிறாராம்? அவர் என்ன கூறினாராம்- கூறுகிறாராம்? கடவுளைக் காணாதவரினும் கண்டவர்கள் தனிச்சிறப்பான பயனாக என்னபெற்றனர்? கண்டவர்கள் ஏதேனும் பயன் பெற்றிருப்பின், காணாதவர்களும் அப்பயனைப் பெறும்படி கடவுள் எளிமையாக வெளிவந்து எல்லாருக்கும் காட்சி தந்து அருள் புரியலாமே! இவ்வாறு செய்வதனால் அவருக்கு என்ன குறைந்து போகும்? கடவுள் இருப்பது உண்மையானால் அவர் எல்லாருக்கும் காட்சி தந்து அருள் புரிவாரே! அவ்வாறு நடைபெறாததால், கடவுள் என ஒரு பொருள் இருப்ப தாக நம்புவதற்கு இல்லை. எனவே, கடவுள் பெயரால் கூறப்படுவனவெல்லாம் கட்டுக் கதைகளே-மூட நம் பிக்கைகளே. கடவுள் பெயரால் செய்யப்படும் செயல்கள் யாவும் வீண் முயற்சியே. கடவுள் பெயரால் செய்யப்படும் செலவுகள் அத்தனையும் வெறும் பாழே. எனவே, மக்கள் இனத்திற்கு இந்த வீண்சுமை வேண்டியதேயில்லை - என்பதாக, இன்னும் பலவாறாக நாத்திக வாதம் பேசப்படுகிறது.


ஆத்திக வாதம்

மேற்கூறிய நாத்திக வாதத்தை மறுத்து ஆத்திகக் கொள்கையை நிலைநாட்டி நிமிர்த்த, எவ்வளவோ சப்பைக் கட்டு-சிம்புக் கட்டு-மாவுக் கட்டு எல்லாம் ஆத்திகர்களால் கட்டப்படுகின்றன. அவர்களின் வாதமாவது:-கடவுள் ஒருவர் உறுதியாக உண்டு. அவரே உலகங்களையும் உயிர்களையும் படைத்தார். அவர் அருளாலேயே எல்லாம் இயங்குகின்றன. அவர் இன்றி ஒர் அணுவும் அசையாது. கடவுளை வழிபடுவோரே புண்ணியவான்கள்-அவர்கட்கே எல்லா நன்மைகளும் கிடைக்கும். அவரை வழிப்டாதோர் பாவிகள் இவர்கள் நன்மையொன்றும் பெறுதல் அரிது. கடவுள் உயிர்கட்கு உடம்பைத் தந்தது அவரை வழிபட்டு அவரை அடைவதற்கேயாம். அவரை வழிபடுவோரே பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து வீடுபேறாம் உயர் கரையை அடைய முடியும்; அல்லாதார், பல பிறவிகள் எடுத்து இந்த உலகத்திலேயே உழன்று கொண்டு கிடக்க வேண்டியதுதான். * கடவுளுக்குப் பிறப்பும் இல்லை - இறப்பும் இல்லை; அவர் அனாதி. கடவுள் எல்லாம் வல்லவர்; எல்லாம் அறிந்தவர்; எங்கும் நிறைந்தவர்-எதிலும் நிறைந்தவர்; எங்கு எது நடந்தாலும் எல்லாம் அவருக்குத் தெரியும்: அவர் தூணிலும் இருப்பார்-துரும்பிலும் இருப்பார். ஆனால் அவரை வெளிப்படையாக எளிதில் காண வியலாது; எல்லாரும் காணவியலாது. அரும்பாடுபட்டு அவரை வழிபடுவோரும்-அவருக்குத் தொண்டு புரிப வரும்-தியானிப்பவரும்-தவம் புரிவோரும்-யோகம் செய்பவரும் ஆகிய அணுக்கத் தொண்டர்களே அவரைக் காண முடியும்; ஆழ்ந்த அன்பர்களே அவரை நேரில் கண்டு களிக்க முடியும்.


‘கண்டவர் விண்டிலர்-விண்டவர் கண்டிலர்’ என்பது முதுமொழி. எனவே, கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாததால் கடவுள் இல்லை என்று கூறமுடியாது. கடவுள் மறைந்துள்ளார். விறகுக்குள் தீயும், பாலுக்குள் ந்ெய்யும் எள்ளுக்குள் எண்ணெயும் மறைந்திருப்பது போல் கடவுள் நமக்குள்ளேயும் மறைந்துள்ளார். தீக்கடை கோலால் கடைந்து தீயை வெளிப்படுத்துதல் போல, மத்தால் கடைந்து பால்-தயிரிலிருந்து நெய்யை வெளிப்படுத்துதல் போல, உறவு (பக்தி) என்னும் கோல் நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் கடவுள் தம் முன் வந்து நிற்பார்-என்றெல் லாம் ஆத்திகர்கள் கூறுகின்றனர். கடவுளை வெளிப்படச் செய்யும் முயற்சியைப் பற்றிய பாடல் ஒன்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் உள்ளது. -

[1]

*“விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய கின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல் கட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் கிற்குமே”

பாலில் நெய்போல் என்னும் ஒப்புமையை நம்மாழ்வாரும் திருவாய் மொழியில் கூறியுள்ளார்:


‘சிறந்த கால்தீ நீர்வான் மண்
பிறவும் ஆய பெருமானே கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டுகொள்”.


என்பது அவரது பாடல் (8-5-10) பகுதியாகும். செக்கில் இட்டு ஆட்டினால், வெளிவருகிற எள்ளுக்குள் எண்ணெய் என்னும் உவமையை மாணிக்கவாசகர் மொழிந்துள்ளார்:

“கள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்கின்ற எங்தையே”

(திருவாசகம்-திருச்சதகம்-46)


என்பது இவரது பாடல் பகுதி. எனவே, கடவுள் உண்டு; அவர் மறைந்துள்ளார்-என்பதாகக் கூறுகின்றனர். ஆத்திகர் கூறும் மற்றும் ஒரு கருத்தையும் ஈண்டு மறப்பதற்கில்லை. அஃதாவது:-தந்தையின்றி மைந்தர் எவ்வாறு பிறக்க முடியும்? தச்சரும் கொல்லரும் இன்றிக் கருவிகள் எவ்வாறு உண்டாக முடியும்? கொத்தனார் இன்றிக் கட்டடம் எவ்வாறு எழும்பும் நெய்வோர் இன்றித் துணிகள் இல்லை. தீட்டுவோர் இன்றி ஒவியம் ஏது? ஆட்டுவோர் இன்றிப் பதுமைகள் ஆடுமா? மீட்டுவோர் இன்றி யாழிசை ஏது? உழவர் இன்றி உணவுப் பொருள்களும், தொழிலாளர்கள் இன்றி மற்ற பொருள்களும் எவ்வாறு உண்டாகும்? எல்லாவற்றுக்கும் காரணங்கள் வேண்டும். காற்று இன்றி மரம் அசையுமா? தீ இன்றிப் புகை உண்டா? மலர் இன்றி மணம் ஏது? காரணம் இன்றிக் காரியம் நடைபெறாது. இவை போலவே, மூல காரணர் ஒருவர் இல்லாமல் உலகங்களும் உயிர்களும் உண்டாகியிருக்க முடியாது. காரண காரிய வாதம் :

ஈண்டு, வேத நாயகம் பிள்ளை நீதிநூல் என்னும் நூலில், காரண காரியவாதத்தின்படி கடவுள் உண்டு என்பதை நிறுவும் வகையில் பாடியுள்ள நான்கு பாடல்கள் வருமாறு :


1.

மண்டப மாதி கண்டோர் மயனுளன் என்னல் போலும்
குண்டல முதல் கண்டோர் பொற்கொல்லனுண் டென்னல் போலும்
ஒண்டுகில் கண்டோர் நெய்தோன் ஒருவனுண் டென்னல் போலும்
அண்டமற் றகண்டம் செய்தோன் உளனென அறிவாய் நெஞ்சே


2.

தீட்டுவோன் இன்றி யாமோ சித்திரம் திகழ்பொற் பாவை
ஆட்டுவோ னின்றித் தாமே ஆடுமோ திவவி யாழின்
மீட்டுவோ னின்றிக் கீதம் விளையுமோ சரா சரங்கள்
நாட்டுவோ னொருவனின்றி கன்கமைந் தொழுகுங் கொல்லோ

3.

மரமுதல் அசைதலால் காலுளதென மதிப்பார் எங்கும்
பரவிய புகையால் செந்தீ யுளதெனப் பகர்வார் சுற்றும்
விரவிய மணத்தால் பாங்கர் வீயுள தென்று தேர்வார்
பரனுளன் எனும் உண்மைக்குப் பாரெலாம் சான்று மன்னோ

4.

வானின்றி மழையுமில்லை வயலின்றி-விளைவு மில்லை
ஆனின்றிக் கன்றுமில்லை அரியின்றி ஒளியுமில்லை
கோனின்றிக் காவலில்லை குமரர் தாயின்றி யில்லை
மேனின்ற கடவுளின்றி மேதினி யில்லை மாதோ

எனவே, காரண காரிய (Logical) வாதத்தின்படி நுணுகி நோக்குங்கால், யாதோ ஒர் ஆற்றல் இன்றி யாரோ ஒருவர் இன்றி, உலகங்களும் உயிர்களும் தோன்றி யிருக்க முடியாது. யதோ ஒர் ஆற்றல் எனில், அந்த ஆற்றல்தான் கடவுள் ஆகும். எனவே, கடவுள் என ஒரு பொருள் உண்டு என்பது உறுதி-இவ்வாறாக, இன்னும் பலவாறாக, ஆத்திக வாதம் பேசப்பட்டுப் பீடு நடை போடுகிறது.


ஆத்திகமா-நாத்திகமா?

ஆத்திகம் நாத்திகம் என்னும் இரு கொள்கைகளுள் எது சரியானது எனத் தீர்வு காண வேண்டும். நாத்திகர் வினவும் வினாக்கட்கு உண்மையில் ஆத்திகர்கள் நேரான -சரியான பதில் கூறவியலாது. ஏதாவது சுற்றி வளைத்துப் பேசிச் சரிகட்ட முயலலாம்-அவ்வளவுதான்! கடவுள் என ஒன்று இருப்பது உண்மையாயின், கண்ணாலேயோ மற்ற பொறி புலன்களாலேயோ அறிய முடியா திருப்பதேன்? முதலில் இந்த ஒரு கேள்விக்கு நேராகப் பதில் கூற முடியுமா? காற்று என்பது கண்ணுக்குத் தெரியவில்லை; ஆனால் அஃது உடம்பில் உற்று உரசி அறியப்படுகிறது. இனிப்பு என்னும் சுவை கண்ணுக்குத் தெரியவில்லை. அது வாயால்-நாக்கால் சுவைத்து அறியப்படுகிறது.


மணம் (வாசனை) கண்ணுக்குப் புலப்படவில்லை தான்; ஆனால் அது மூக்கால்-மோந்து இழுத்து உணரப்படுகிறது. ஒலி (ஒசை) கண்ணுக்குத் தோன்றவில்லை தான்; ஆனால் அது காதால் கேட்டு அறியப்படுகிறது. இவை போலக் கடவுள் எந்தப் பொறி புலனாலாவது அறியப்படுகிறாரா? முதலில் இந்த வினாவுக்கு விடை வேண்டும்-விடை வராது-விடை இல்லை. அளவைகள்

ஆத்திகர்கள் சுற்றிவளைத்து ஒரு கருத்து சொல்வர். அன்பு என்னும் பண்பு தனியுருவமாகக் கண்ணுக்குத் தெரியவில்லைதான்-மற்ற பொறி புலன்களாலும் அறியப்படவில்லைதான். ஆனால், தாய் தன் சேய்க்குச் செய்யும் அரிய பெரிய உதவிகளைக் காணுங்கால். அன்பு என ஒன்று உள்ளது எனக் கருத்தினால் உணரமுடிகிறது. ஒருவர் நோயினால் மிகவும் துன்புற்றாலோ-இறந்து விட்டாலோ, அவரைச் சேர்ந்தவர்கள் விடும் கண்ணீரைக் கொண்டு, அன்பு என ஒன்று உள்ளது எனக் கருத தினால் அறிய முடிகிறது. இவ்வாறே பொறாமை, சினம், இரக்கம் முதலிய பண்புகளையும் தனித்தனி உருவமாகக் கண்ணால் காண முடியாவிடினும்-மற்ற பொறி புலன்களாலும் உணர முடியாவிடினும், அன்புக்குச் சொன்ன செயல்களைப் போன்ற தொடர்புடைய செயல்களைக் கொண்டு கருத்தினால் அறிய முடிகிறது.


இவ்வாறு, பொறி புலன்களால் அறிய முடியாமல் கருத்தினால் அளந்து நுனித்து (யூகித்து-அனுமானித்து) அறிவதற்குக் கருத்தளவை’ என்று பெயர் வழங்குவர். இதனை அனுமானப் பிரமாணம் என்னும் பெயரால் வடமொழியில் வழங்குவர். தனியுருவமாகக் கண்ணுக்குத் தெரிவதைக் காட்சியளவை எனத் தமிழிலும் பிரத்தியட்சப் பிரமாணம் என வடமொழியிலும் வழங்குவர். நூல்களைப் படிப்பதன் வாயிலாகத் தெரிந்து கொள்வதற்கு நூல் அளவை எனத் தமிழிலும் ‘ஆகமப் பிரமாணம்’ என வடமொழியிலும் பெயர் வழங்குவர்.


இந்த மூவகை அளவைகளுள் நூல் அளவையைக் கொண்டு-நூல்களைப் படித்த அறிவு கொண்டு கடவுள் உண்மையை நம்பிவிட முடியாது கண்ணுக்குத் தெரியாததால் காட்சியளவை கொண்டும் கடவுள் உண் மையை ஒத்துக்கொள்ள வியலாது. ஆனால், நெருப்பின்றிப் புகையாது-புகைவதைக் கொண்டு நெருப்பு உண்மையை நம்பமுடிகிறது; காரணம் இன்றிக் காரியம் நிகழாது-காரியம் நிகழ்ந்திருப்பதைக் கொண்டு காரணம் ஒன்று உண்டு என்பதை ஒத்துக்கொள்ள முடிகிறது, இவை போலவே, உலகங்களும் உயிர்களும் தோன்றியிருப்பதைக் கொண்டு அவற்றைத் தோற்றியவர் ஒருவர் (கடவுள்) இருப்பது உண்மை என அனுமானத்தால் கருத்தளவையால் கடவுள் உண்மையை நம்பவேண்டும் என ஆத்திகர்கள் அடித்துக் கூறுகின்றனர். நூல் அளவையையும் கருத்தளவைக்குள் (அனுமானப் பிரமாணத்துக்குள்) அடக்கிவிடலாம்; நூல்களைப் படிப்பதன் வாயிலாகவும் ஒன்றை அனுமானிக்கலாம் அல்லவா? எனவே கண்ணுக்குத் தெரியவில்லை என்பதைக் கொண்டு கடவுள் இல்லை எனக் கூறமுடியாது; கருத்தளவையைக் கொண்டு கடவுள் உண்மையை நம்ப வேண்டும்-காரண காரிய வாதத்தின்படி கடவுள் உண்மையை ஒத்துக்கொள்ள முடியும் என்பது ஆத்திகரின் வாதம்.


சரி-ஆத்திகர்களின் காரண காரிய வாதத்தையே ஒத்துக்கொள்ளலாம்-அஃதாவது, காரணம் இன்றிக் காரியம் நிகழாது -நெருப்பின்றிப் புகையாது-கொத்தனார் இன்றிக் கட்டடம் உருவாகாது-மூலகாரணர் ஒருவர் (கடவுள்) இல்லாமல் உலகங்களும் உயிர்களும் உண்டாகியிருக்க முடியாது-என்ற காரண காரிய வாதத்தை ஒத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த் வாதத்தின்படி நோக்குங்கால், தமக்கு மூலகாரண்ர் ஒருவர் இல்லாமல் கடவுள் எவ்வாறு உண்டானார்? கடவுளுக்கு மூல காரணமாயிருப்பது-தோன்றுவதற்கு மூல காரணமாயிருப்பது எது? இந்த மூல காரணத்துக்கு மூல காரணம் எது?-என்று வினாக்களை அடுக்கிக் கொண்டே போனால் விடை கிடையாது. கடவுள் தாமாக உண்டானார்; அவர் தோன்றுவதற்கு மூல காரணம் எதுவும் கிடையாது; எதுவும் தேவையில்லை; கடவுள் ஆதி அந்தம் இல்லாத-தோற்றமும் ஒடுக்கமும் இல்லாத அனாதிப் பொருள் என்ற விடையையே ஆத்திகர்கள் திரும்பத் திரும்பத் திரும்பக் கூறுவர். அங்ஙனமாயின்-கடவுளுக்கு மூல காரணம் தேவையில்லையெனில், உலகங்களும் உயிர்களும் மூலகாரணம் இன்றித் தாமாகத் தோன்றின என்று ஏன் கூறக்கூடாது-ஏன் நம்பக் கூடாது? எனவே, காரண காரிய வாதத்தின்படிகருத்தளவையாம் அனுமானப் பிரமாணத்தின்படி கடவுள் உண்மையை நிலைநாட்டிவிட முடியாது.


உலகில் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு-ஆண்டுக்கு ஆண்டு-நாளுக்கு நாள்-புதிய பொருள்கள் பல அறிவியலாரால் கண்டுபிடிக்கப்படுகின்றன; முற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அறியாத பொருள்கள் பல, இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுப் பலராலும் அறியப்படுகின்றன. இயற்கையில் மறைந்திருக்கும் (இரகசியமாயிருக்கும்) உண்மைகள்-உட்பொருள்கள் அறிவியலாரால் கண்டு பிடிக்கப்பட்டு வெளிக் கொணரப படுகின்றன; இவை, கண்-ஒளி முதலான பொறி புலன்களால் உணரவும் படுகின்றன, அங்ஙனம் இருக்க, கடவுள் என்னும் பொருள் மடடும் பொறிபுலன்களுக்குத் தெரியும்படி கண்டுபிடிக்கப்பட்டு வெளிக்கொணரப்படாதது ஏன்? விஞ்ஞானிகளால் இயலாவிடினும் மெய்ஞ்ஞானிகளாவது இதைச் செய்தார்களா? வித்தை காட்டுபவன் ஒரு கூடையைக் கவிழ்த்து வைத்து விட்டு, என்னவோ உள்ளே இருக்கிறது-இருக்கிறது என்று ஏய்த்துக் கொண்டிருப்பான்; அது போலே, கடவுள் இருக்கிறார் இருக்கிறார் என்று வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கடவுள் இதோ இருக்கிறார்-இன்ன வித மாக இருக்கிறார் என்பதாக, பொறி புலன்கள் உணரும் வகையில் யாராவது கொண்டு வந்து அறிவித்தார்களா? இனிமேலாவது இயலுமா? வித்தை காட்டிக் கொண் டிருக்கக் கூடாது; வெளிக் கொணர வேண்டும். நம்மை இல்லை என்று சொல்கிறார்களே என்று மானம் ரோஷம்) வந்து, இதோ இருக்கிறேன் பாருங்கள் என்று கடவுள் தாமாகவாவது மக்கள் இனத்தின் கண்ணெதிரில் வந்து காட்சி தருவாரா?


கடவுள் முன்னொரு காலத்தில் வெளி வந்து ஒருவருக்குக் காட்சி தந்தார்-பின்னர் மற்றொரு காலத்தில் வெளிவந்து மற்றொருவர்க்குக் காட்சி தந்தார்-பின்பு வேறொரு காலத்தில் வெளி வந்து வேறொருவர்க்குக் காட்சி தந்தார்-என்பதாகப் புராணங்களிலிருந்து எடுத்துக் கதையளப்பது வித்தை காட்டுவது போன்றது தான்! அப்போது வெளிவந்தது உண்மையாயின் இப்போதும் வெளிவரட்டுமே! இனி எப்போது வெளிவருவார்? உலகில் ஒவ்வொரு துறையும் அறிவியல் அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு-திங்களுக்குத் திங்கள்நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதை-வளர்க்கப்பட்டு வருவதை நாம் கண்டு வருகிறோம். எடுத்துக்காட்டாக, உழவு, பல்வகைப் பொருள்களின் உற்பத்தி, கல்வி, இலக்கியம், மருத்துவம், மின்சாரம், அணு ஆராய்ச்சி முதலிய துறைகள் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருவதை-வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். அங்ஙனம் இருக்க, கடவுள் துறை மட்டும் ஏன் மேன்மேலும் வளர்ச்சி பெறவில்லை.


இங்கே, மதங்களின் வளர்ச்சியை-மதவாதிகளின் வளர்ச்சியை - சமயச் சடங்குகளின் வளர்ச்சியைகோயில் குளங்களின் வளர்ச்சியை-தேர்த் திருவிழாக்களின் வளர்ச்சியை - பூசனை வழிபாடுகளின் வளர்ச்சியை எடுத்துக் கொள்ளக் கூடாது; இவையாவும், சிறுபிள்ளைகள் தெருவில் என்னென்னவோ விளையாடுவதைப் போல, பெரிய பிள்ளைகள் (ஆத்திகர்கள்) கடவுள் பெயரால் விளையாடும் ஒருவகைப் பெரிய விளையாட்டுகளேயாகும். இவையெல்லாம் கடவுள் துறையின் வளர்ச்சியாக மாட்டா.


இந்த வேடிக்கை விளையாட்டுகளை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம். உண்மையான கடவுள் துறை வளர்ச்சியாவது:- கடவுள் அந்தக் காலத்தில் அங்கே அவருக்குக் காட்சிதந்தார்- இந்தக் காலத்தில் இங்கே இவருக்குக் காட்சி கொடுத்தார் - எந்த எந்தக் காலத்திலேயோ எங்கே எங்கேயோ எவர் எவருக்கோ காட்சியளித்தார் - என்றெல்லாம் கதையளக்கிறார்களே - அந்தக் காட்சி தரும் கடவுள் செயல் எப்போதும் நடந்து கொண்டிருக்க வேண்டும்.


ஒரு காலத்தில் பதின்மருக்குக் காட்சியளித்தார் எனில், பின்னர் நூற்றுக் கணக்கானவர்க்கும் அதன் பின்னர் ஆயிரக் கணக்கானவர்க்கும் அதன் பிறகு நூறாயிரக் கணக்கானவர்க்கும், பின்னர்ப் பின்னர்க் கோடிக் கணக்கானவர்க்கும் கடவுள் காட்சியளித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இவ்வாறு நடப்பதே, கடவுள் துறையின் உண்மையான வளர்ச்சியாகும். உலகில் மற்ற மற்ற துறைகள் எல்லாம் மேன்மேலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, கடவுள் காட்சியளிப்பது மட்டும் ஏன் வளரவில்லை - ஏன் வளரக்கூடாது? உண்மையில் கடவுள் என ஒரு பொருள் இருந்து யாருக்காயினும் உண்மையில் காட்சி கொடுத்திருந்தால் அல்லவா, அந்தக் காட்சி இந்தக் காலத்தும் கோடிக் கணக்கானவர்க்குக் கிடைக்கும்? இல்லாத பொருளைப் பற்றிப் பேசி என்ன பயன் காணமுடியும்? உண்மையான அன்பு (பக்தி) இருந்தால் அல்லவா கடவுளைக் காண முடியும் என்று கதைப்பவர்கள், போகாத ஊருக்கு வழி சொல்பவர் ஆவார்கள்! அப்படியே வைத்துக் கொள்வோம், மற்ற துறைகள் வளர்ந்து கொண்டிருக்கும்போது, அந்த உண்மையான அன்பும் வளர வேண்டியதுதானே? என்மேல் சினம் கொள்ளக்கூடாது; சிந்திக்க வேண்டும். ஆமாம்-நன்கு ஆர அமரச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


காத்திகச் சார்பு

மேற் கூறியவற்றிலிருந்து, ஆத்திகவாதம் உண்மையானதன்று: நாத்திக வாதமே உண்மையானது - பொருத்தமானது என்பது புலப்படும். இது சார்பாக இன்னும் சில சொல்ல வேண்டியுள்ளது. புத்தர் பெருமானையே நாத்திகர் எனப் புகலும் ஆத்திகர்கள் உள்ளனர். புத்தர், கடவுள் பற்றியும் பூசனை-நோன்பு -வழிபாடு பற்றியும் விவரிக்கவில்லை; இறுதியில் அடைவதாகச் சொல்லும் வீடுபேறு (மோட்சம்) பற்றியும் அவர் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை: நல்லொழுக்க நன்னெறிகளைப் பற்றியே அவர் பெரிதும் வற்புறுத்தினார். நல்லொழுக்க நன்னெறிகளைப் பற்றி இந்தக் காலத்துச் சமூகச் சீர்திருத்தக்காரர்களும் வலியுறுத்துகின்றனர் அல்லவா? இக்கொள்கை காரணமாக ஆத்திகர் சிலரால் புத்தர் நாத்திகர் எனப் புகழப்படுகிறார்.


புத்தரைப் போலவே ஆதி சங்கரரையும் நாத்திகர் என நவில்பவர் உளர், இவர்கள், ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையை நாத்திகம் என நவில்வதும் உண்டு. அத்வைதம் என்ற சொல்லுக்கு ‘இரண்டு அற்றது’ (அஃதாவது ஒன்றே) என்பது பொருள் ஆகும். கடவுளும் உயிர்களும் வேறல்லர்; பொன்னும் பணியும் போல - அஃதாவது - பொன் ஒன்றே பலவகை அணிகலன்களாக ஆகியிருப்பது போல, கடவுள் ஒருவரே எல்லா உயிர்களுமாக ஆகியுள்ளார். கடவுளே உயிர் - உயிரே கடவுள். “அஹம் ப்ரம்ஹாஸ்மி” என்பது, அத்வைதிகளின் உரைகளுள் ஒன்றாகும். இதன் பொருள், ‘நானே கடவுள்’ என்பதாகும். நானே என்பது உயிர் தன்னையே (Self) குறிப்பதாகக் கொள்ள வேண்டும். அகம் (அஹம்) என்ற சம்சுகிருதச் சொல்லுக்கு நான் என்ற பொருள் உண்டு.


எனவே, கடவுளும் உயிரும் வேறு வேறு இல்லை - ஒன்றே, என்பது அத்வைதக் கொள்கை. இதற்கு ‘ஏக ஆன்ம வாதம்’ என்ற பெயரும் உண்டு. கடவுள் என ஒருவர் தனியே உயிர்களைப் படைத்துக் கொண்டிருக்கவில்லை; கடவுளே உயிர்கள்-உயிர்களே கடவுள் - என்னும் அளவில் அத்வைதக் கொள்கை போய்க் கொண்டிருப்பதால், இதனை ஒரு வகை நாத்திகம்” எனச் சிலர் நவில்கின்றனர். எனவே, கவுதமப் புத்தரின் கொள்கையும், ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையும் நாத்திகச் சார்புடையவை என்பது ஒருவகைக் கருத்து.


புத்தர் கொள்கையும் சங்கரர் கொள்கையும் ஒரு வகையில் சீர்திருத்தக் கொள்கைகளாகக் காணப்படினும், அவ்விருவரையும் பின்பற்றுபவர்கள், பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாய், அக்கொள்கைகளுக்குக் கண்-மூக்கு-காது எல்லாம் வைத்துப் பல வகையான பழைய மூட நம்பிக்கைப் பழக்கவழக்கங்களாம் பாழ்ங்கிணற்றிலேயே விழுந்து கிடக்கின்றனர்; அக்கொள்கைகளின் அடிப்படை உண்மையைக் காற்றில் பறக்கவிட்டனர்; இதனால் யாது பயன்? முப்பொருள் உண்மை

இதன் தொடர்பாக ஈண்டு சைவ சித்தாந்த சமயத்தின் முப்பொருள் உண்மைக் கொள்கையும் சிந்திக்கத் தக்கதாகும். முப்பொருள் என்பன, கடவுள், உயிர், உலகம் ஆகும். இவற்றை முறையே பதி, பசு, பாசம் என வடமொழியில் கூறுவர். கடவுளைப் போலவே உயிரும் உலகமும் அனாதியாகும். அனாதி என்றால், தான் தோன்றுவதற்கு வேறொரு மூல காரணம் இல்லாதது- அஃதாவது-தானே தோன்றியது என்று பொருளாகும். இம்மூன்றுமே காலம் கணக்கிட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒரு காலத்தில் ஒரே சமயத்தில் தோன்றியவையாகும். மூன்றுமே என்றும் அழியாமல் நிலைத்தனவாகும். உலகமாகிய பாசத்தினின்றும் விடுபட்டு, பசுவாகிய உயிர், பதியாகிய கடவுளை அடைய வேண்டும்.


செம்பில் களிம்பு போலப் பாசம் பசுவைப் பற்றிக் கொண்டிருக்கும்; அப்பாசத்தினின்றும் விடுபட்டுப் பசுவானது பதியை அடைந்துவிடின், வறுத்த நெல் மீண்டும் முளைக்காதது போலப் பசுவாகிய உயிர் மீண்டும் பாசமாகிய உலகத்தில் பிறக்காது; இந்த நிலைதான் வீடு பேறு (மோட்சம்) ஆகும்-என்பது சை சித்தாந்த சமயக் கருத்து.


இந்த முப்பொருள் உண்மைக் கொள்கை நமது ஆய்வுக்கு மிகவும் உதவுகிறது. கடவுள் உயிர்களையும் படைக்கவில்லை என்பது இக்கொள்கையால் புலனாகிறது. கடவுள் தோன்றியபோதே உயிர்களும் உலகங்களும் தோன்றி அனாதிகளாய் இருந்தனவாம். இதனைத் திருமூலர் அருளிய திருமந்திரம் என்னும் நூலில் உள்ள

“பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி”


என்னும் (115-ஆம்) பாடல் பகுதியாலும், தாயுமானார் என்னும் துறவியார் கடவுளை நோக்கி,

“என்று நீ அன்று நான்”

எனக் கூறியிருக்கும் கூற்றாலும் தெளியலாம். இதனால் கடவுளே உயிர்களைப் படைத்து, அவற்றின் நன்மைக்காக உலகங்களையும் தனித்தனியே படைத்தார் என்னும் படைப்புக் கொள்கையினரின் (Creationists) வாதம் அடிபட்டுப் போகிறது. மற்றும், நெருப்பின்றிப் புகையாது- காரணம் இன்றிக் காரியம் நிகழாது-கடவுள் என ஒருவர் இல்லாமல் உயிர்களும் உலகங்களும் தோன்றி இயங்கமுடியாது என்னும் அனுமானப் பிரமாணக் கொள்கையும் காரணகாரியவாதக் கொள்கையுங்கூட இதனால் அடிபட்டுப்போகின்றன. எனவே, கடவுள் என ஒரு பொருள் இருப்பின் அது தோன்றுவதற்கு எது காரணமோ, அதுவே உயிர்களும் உலகங்களும் தோன்றுவதற்கும் காரணமாகும் என எளிதில் கூறிவிடலாம். அந்தக் காரணம் யாதாயிருக்கலாம்? யாராலும் ஒன்றும் விவரிக்க முடியாத ஏதோ ஒர் இயற்கை ஆற்றலே அந்தக் காரணமாகும் என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, இப்போது கண்-மூக்கு-காதுகள் எல்லாம் வைத்துப் “பெரிது படுத்திப் பேசப்படுகின்ற கடவுள் என்பது ஒரு வகைக் கற்பனையே என்ற முடிவுக்கு எளிதில் வர முடியும்.

இயற்கையின் திருவிளையாடல்

இதற்கு இன்னொரு வகைச் சான்றும் தரமுடியும்: கடவுள் என ஒருவர் இருந்து உயிர்களைப் படைக்கின் றார் எனில், இப்போது இப்பூவுலகில் உள்ள சுமார் ஐந்நூறுகோடி மக்கள் உயிர்களும் ஆயிரம்-ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் எங்கே இருந்தன? கடவுள் அவற்றை எங்கே வைத்திருந்தார்? ஒரு காலத்தில் நூறு கோடி மக்களே இருந்தனர்; பிறகு பிறகே நாளடைவில் மக்கள் இனம் பெருகிற்று- பெருகுகிறது- இப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மக்கள் முயல்கின்றனர்- படிப்படியாக வெற்றியும் காண்கின்றனர். இந்திய நாட்டுக் கவியாகிய சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) இற்றைக்குச் சுமார் அறுபத்தேழு ஆண்டுகட்கு முன்பு இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்ததாகக் கணக்கு வைத்து, ‘முப்பது கோடி முகம் உடையாள்’ என இந்தியாவாகிய தாயைப் பாடினார். இப்போது இந்தியாவின் மக்கள் தொகை எழுபது கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத் தின் விழுக்காடு இப்போது குறைக்கப்பட்டு வருகிறது: இவ்வாறு வேறு பல நாடுகளையும் கொள்ளலாம்.


இச்செய்தியை உற்றுநோக்குங்கால், மக்கள் தொகையைப் பெருக்குவதோ அல்லது சுருக்குவதோ மக்கள் கையிலேயே உள்ளதே தவிர, கடவுள் கையில் ஒன்றும் இல்லை என்பது புலப்படும். இந்த ஆற்றல் கடவுள் கையில் இருக்குமானால், எல்லா உயிர்களையும் ஒரே சமயத்தில் அவிழ்த்துக் கொட்டியிருக்கலாமே! கொஞ்சங் கொஞ்சமாக அனுப்புவதின் நோக்கம் என்ன? மற்றும், நிலாவுலகில் சில கோடிகளைத் தள்ளி விட்டிருக்கலாமே! அங்கே உயிர்க்காற்று, தண்ணீர், உணவுப் பொருள் முதலானவற்றை ஏன் உண்டாக்கவில்லை? எனவே, இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், கடவுள் என ஒருவர் இருந்து கொண்டு ஒன்றும் செய்யவில்லை; எல்லாமே, இனம் கண்டு கொள்ள முடியாத ஒருவகை இயற்கையின் திருவிளை யாடலேயாகும் என்பது வெளிப்படை.

கடவுள் என ஒருவர் இல்லை என்பதைப் பெரும்பாலார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; அது மட்டுமா? இல்லையென்பவர்மேல் சினம் கொள்வர் -பகையுணர்வு கொள்வர். கடவுள் என ஒருவர் இல்லையென்பதனால் என்போன்றோர்க்கு எந்த நன்மையும் இல்லை; மாறாகச் சமூகத்தின் பகையும் பழிப்புமே பயனாகக் கிடைக்கும். கடவுள் இருப்பது உண்மையானால், அவர் வேண்டா என்று கூறவில்லை. தாராளமாக மேள தாளத்தோடு கடவுள் இருக்கட்டும்! உலகத்துக்கு -உயிர்கட்கு அவர் நன்மைகள் பல புரியட்டும்! போட்டி-பொறாமை, பகை-போர், பிணி-வறுமை, பசி-பஞ்சம், கொலை-கொள்ளை, சூது-வாது, கள்ளம்-கபடு, ஏமாற்று - பித்தலாட்டம் முதலிய கேடுகள்-தீமைகள் இல்லாதபடி உலகை நடத்தட்டும்! கடவுள் முயன்றால்தான் எல்லாம் முடியுமே! ஒரு வகைத் துன்பமும் இல்லாமல் உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றட்டும்! தம்மை வழிபட்டால்தான் நன்மை புரிவது என்று கைம்மாறு (இலஞ்சம்) வேண்டாமல், வழிபடுபவர்-அல்லாதார் அனைவரையும் நல்லவராக்கி, சரி நிகராக அனைவருக்கும் நன்மை புரியட்டும்! தீவினை புரிபவருக்கு நரகம்-நல்வினை செய்வோர்க்குச் சொர்க்கம் என்ற பாகுபாடின்றி, அனைவரையுமே உயர்செயல் புரியச் செய்து அனைவருக்குமே வீடுபேறு அளிக்கட்டும்! வேண்டா என்று சொல்லவில்லை. இவ் வாறு செய்வதானால், உலகில் ஒரு'கடவுள் என்னஎத்தனை கடவுளர்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும்! அத்தனை கடவுளர்களையும் வரவேற்போம்வணங்குவோம்-வாழ்த்துவோம்! ஆனால் இங்கே நமது கவலையெல்லாம், மேற்கூறியவாறு செய்யக் கூடிய கடவுள் ஒருவர் கூட இல்லையே என்பதுதான்! கருத்து ஒற்றுமை காண்டல்

இங்கே, கருத்து ஒப்புமை காண்டல்’ என்ற முறை யில் இங்கர் சால் (R.G. Inger Sol) என்னும் அறிஞர் அறிவித்துள்ள கருத்துகளைக் காணலாம்:


“மேலே இருந்து உதவி நாடுவதை மக்கள் விட்டு விடவேண்டும். நம் முறையீட்டைக் கேட்கக் கடவுளுக்குக் காதும் இல்லை-உதவி புரியக் கையும் இல்லைஎன்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பகுத்தறியும் அளவில், இயற்கை என்பவள், மன மாறுபாடு இன்றியும் நோக்கம் ஏதும் இன்றியும் எப்போதும் உலகப் பொருள்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள் அவ்வுருக்களை மாற்றவும் செய்கிறாள்-மீண்டும் மீண்டும் மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு அழுகையும் இல்லை-மகிழ்ச்சியும் இல்லை. அவள் நோக்கமின்றி மாந்தரைப் படைக்கிறாள்-இரக்கம் இன்றிப் பின்பு அழித்தும் விடுகிறாள். நல்லவர்-கெட்டவர், அமிழ்தம்-நஞ்சு, இன்பம்-துன்பம், வாழ்வுசாவு, கலகலத்த சிரிப்பு-கண்ணிர்-ஆகிய யாவும் அவளுக்கு ஒரே நிகரானவை. அவள் இரக்கம் உடையவளும் அல்லள்-கொடுமை உடையவளும் அல்லள். வாழ்த்துதலால் அவளை வயப்படுத்தவும் முடியாது கண்ணீரால் அவளைக் கரைத்து உருக்கவும் முடியாது. பாம்புகளின் பற்களில் உள்ள நஞ்சுக்கும் மாந்தரின் உள்ளத்தில் உள்ள இரக்கத்துக்கும் அவள் வேறுபாடு கொள்வதில்லை.

கடவுள் வணக்கமும் வழிபாடும் செல்வத்தையும் செழிப்பையும் உண்டாக்குவதில்லை. இயற்கைக்கு மேல் (கடவுள் என) ஏதோ ஒர் ஆற்றல் இருந்து கொண்டு, கொடுமைக்கு உள்ளானவர்களைக் காத்ததும் இல்லை-உடையும் உணவும் இல்லார்க்கு அவற்றை அளித்த்தும் இல்லை-குற்றமில்லாதவர்களை மீட்டதும் இல்லை-கொள்ளை நோயைத் தடுத்ததும் இல்லை - அடிமையை விடுவித்ததும் இல்லை. எனவே, மாந்தர். இயற்கைக்கு மேல் எந்த ஒர் ஆற்றலும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்-தம் முழுக் கவனத்தையும் முழு முயற்சியையும் இயற்கையின்பாலும் உலகத்தின்பாலும் திசை திருப்ப வேண்டும். மக்கள் தம்மைத் தாமே தாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்-மக்களைப் பற்றிக் கவலைப்படவோ கவனிக்கவோ இயற்கைக்கு மேல் வேறு எந்த ஓர் ஆற்றலும் இல்லை - என்னும் பேருண்மை உலக மாந்தர் அனைவருக்கும் உணர்த்தப்பட வேண்டும்.’ -


இவை இங்கர் சால் அவர்களின் கருத்துகள் ஆகும். இவ்வாறு இன்னும் அறிஞர்கள் பலர் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.

இதனால்தான், கடவுள் பற்றியும் வீடுபேறு பற்றியும் புத்தர் பெருமான் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை போலும் கடவுளே உயிர்-உயிரே கடவுள் என்னும் அத்வைதக் கொள்கையும் ஒரு வகையில் சரிதான் போலும்! கடவுள் உயிர்களையும் உலகங்களையும் படைக்கவில்லை; இம்முப்பொருளுமே ஒரே சமயத்தில் தாமே தோன்றியவை என்று குறிப்புக்காட்டும் சைவ -சித்தாந்த சமயத்தின் அடிப்படைக் கொள்கையில் ஓரளவேனும் உண்மை இருக்கலாம்.

ஆனால், இளமையிலிருந்து சைவ சித்தாந்தியாகத் தயாரிக்கப் பெற்ற யானே-சைவ சித்தாந்தச் சமயமே மற்ற எல்லாச் சமயங்களினும் சிறந்ததாகும் என முன்பு பல்லாண்டுகளாக வாதிட்டுவந்த யானே, இப்போது (1988) சைவ சித்தாந்தச் சமயக் கொள்கை முழுவ: தையும் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கில்லை:

உள்ளத்துள் உள்ளமை

கடவுள் உயிர்களின் உள்ளத்துள் உள்ளார்;வேறெங்கும் இல்லை-என்பதாகப் பெரியோர்கள் சிலர் கூறியுள்ளனர். சிலர் கூற்றுகளைக் காண்போம்:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கோவில் வழிபாடு என்னும் தலைப்பில் பின்வரும் பாடல்களைத் தந்துள்ளார்:

1. கோவில் முழுதும் கண்டேன்-உயர்
                      கோபுரம் ஏறிக் கண்டேன்
               தேவாதி தேவனை யான்-தோழி
                     தேடியும் கண்டிலனே.


2. தெப்பக் குளம் கண்டேன்- சுற்றித்
                   தேரோடும் வீதி கண்டேன்
             எய்ப்பில் வைப்பாம் அவனைத்-தோழி
                    ஏழையான் கண்டிலனே.


3. சிற்பச் சிலை கண்டேன்- நல்ல
                    சித்திர வேலை கண்டேன்
             அற்புத மூர்த்தியினைத்-தோழி
                    அங்கெங்கும் கண்டிலனே.


4. பொன்னும் மணியும் கண்டேன்-வாசம்
                     பொங்கு பூ மாலை கண்டேன்
              என்னப்பன் எம்பிரானைத்-தோழி
                      இன்னும் யான் கண்டிலனே.

5. தூபம் இடுதல் கண்டேன் தீபம்
      சுற்றி எடுத்தல் கண்டேன்
   ஆபத்தில் காப்பவனைத் தோழி
      அங்கே யான் கண்டிலனே.


6. தில்லைப் பதியும் கண்டேன்-அங்குச்
      சிற்றம் பலமும் கண்டேன்
   கல்லைக் கணிசெய்வோனைத் தோழி
      கண்களால் கண்டிலனே.


7. கண்ணுக்கு இனிய கண்டு-மனத்தைக்
      காட்டில் அலைய விட்டு
   பண்ணிடும் பூசையாலே-தோழி
      பயனொன் றில்லையடி.


8. உள்ளத்தில் உள்ளான் அடி-அது நீ
       உணர வேண்டும் அடி
   உள்ளத்தில் காண்பாய் எனில்-கோவில்
       உள்ளேயும் காண்பாய் அடி.


அடுத்து, இதுபற்றிப் பட்டினத்தார் கூறியிருக்கும் ஒரு பாடலைக் காண்போம்:-


“சொல்லிலும் சொல்லின் முடிவிலும்
          வேதச் சுருதியிலு
மல்லிலு மாசற்ற வாகாயங் தன்னிலு
           மாய்ந்து விட்டோ
சில்லிலு மன்ப ரிடத்திலும்
            ஈசனிருக்கு மிடம்
கல்லிலும் செம்பிலுமோ இருப்பான்
           எங்கள் கண்ணுதலே?”

-பட்டினத்தார் பாடல் - பொது-6 அடுத்துச்.சிவ வாக்கியர் என்னும் சித்தர் இதுபற்றிக் கூறியுள்ள பாடல் ஒன்று வருமாறு:

“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’

சிவ வாக்கியர் பாடல்-520.


கடவுளைக் கோவிலிலோ வேறெங்குமோ காண முடியவில்லை; கடவுள் உயிர்களின் உள்ளத்தில் உள்ளார் எனக் கவிமணி கூறியுள்ளார்.

நாம் கடவுள் என்று எண்ணி வழிபடும் கல் சிலையிலும் செம்புச் சிலையிலும் கடவுள் இல்லை; சொல்லிலும் சுருதியிலும் அன்பர் உள்ளத்திலும் கடவுள் உள்ளார் எனப் பட்டினத்தார் கூறியுள்ளார்.


கடவுள் உள்ளத்துள் உள்ளார்; நட்ட கல்லில் கடவுள் இல்லை; கல் பேசாது; கல்லுக்குச் செய்யும் பூசனைகள், பயனற்றவை. கறி காய் ஆக்கிய சட்டியும் அதை எடுத்து இடும் அகப்பையும் (சட்டுவமும்) கறி காயின் சுவையை அறியாதது போலவே, எந்த வழிபாட்டையும்-பூசனையையும் நட்ட கல் அறியாது-என்று சிவ வாக்கியர் என்னும் சித்தர் ஆணித்தரமாக அறைந்துள்ளார்:


கடவுள் கொள்கையின் தோல்வியை இந்தப் பெரியவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்; கடவுள் வெளியில் எங்கும் இல்லை என்று உறுதியாகக் கூறியுள்ளனர்; வேறு வழியின்றி, உள்ளத்துள் உள்ளார் என்று உரைத்துள்ளனர். இது ஒப்புக்குக் கூறியதேயாகும். கடவுள் உள்ளத்துள் உள்ளார் என்பதையும் ஒத்துக் கொள்வதற்கில்லை. உள்ளத்துள் எங்கே இருக்கிறார்உள்ளத்துள் ஏன் இருக்கவேண்டும்-உள்ளத்துள் இருந்து கொண்டு என்ன செய்கிறார். கடவுள் உள்ளத்துள் இருப்பதனால், மக்கள் தீமை செய்யாமல் இருக்கின்றார்களா-எல்லாக் கொடுமைகளையும் புரியும் மக்கள் உள்ளத்துள் மாதேவன் இருப்பதால் ஒரு பயனும் இல்லையே-உள்ளத்துள் கடவுள் உள்ளமைக்கு அடையாளம் என்ன?


கடவுள் நம் உள்ளத்துள் இருந்து கொண்டு எல்லாவற்றையும் சுவனித்துக் கொண்டிருக்கிறார் -எனவே, நாம் தவறு செய்யக்கூடாது-என்று எண்ணி மக்கள் நேர்மையாக நடப்பதற்கு வேண்டுமானால் இந்தக் கருத்து உதவலாம்.

  1. திருநாவுக்கரசர் தேவாரம்-பொது-தனித்திருக் குறுந்தொகை.