கடவுள் வழிபாட்டு வரலாறு/மனத்தின் தோற்றம்

விக்கிமூலம் இலிருந்து

8. மனத்தின் தோற்றம்


உயிரின் தோற்றம் போலவே, மனத்தின் தோற்றமும் ஆராயத்தக்கது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்கு உட்கருவிகள் (அந்தக் கரணங்கள் - Inner seat of thought, feeling and volition, consisting of four aspects) இருப்பதாக இந்தியத் தத்துவவாதிகள் சிலர் கூறுகின்றனர். மனம் என்பது நெஞ்சில் (கழுத்தில்) இருப்பதாக அப்பாவிகள் சிலரும், மனம் என்பது இதயத்தில் இருப்பதாக வேறு சிலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.


ஆன்மாவே மனம் என்பது சிலரது கருத்து. மனம் ஒரு தனிப்பொருள்; அது மூளையில் தங்கியிருக்கிறது என்பர் சிலர். உடலிலேயே ஏற்படும் ஒருவகை உணர்ச்சியே மனம் என்பது ஒரு சாரார் கருத்து. மனம் ஓர் அணு என்பர் சிலர். அடிக்கடி மாறுதல், இன்ப துன்பங்களை உணர்தல் முதலிய செயல்களை நோக்குங்கால், உடலினின்றும் வேறாக மனம் என ஒன்று இருப்பது தெளிவு என்பது இன்னொரு சாரார் கூறுவது. உடல் இயக்கச் செயல்பாடுகளைக் கொண்டு, மனம் என்னும் ஓர் ஆற்றல் இருப்பது புலனாகிறது எனப் பரிணாமக் கொள்கையினர் கூறுகின்றனர். இனி, இக் கால உளவியல் அறிஞர்களின் (Psychologists) கருத்தைக் காணலாம்:


உளம் (மனம்) ஒரு தனிப்பொருள் அன்று; உயிரி (organism) வளர்ச்சி பெறுங்கால் பல படிகளில் காணப் படும் தொழிலே உளம்-வெளியிலிருந்து வரும் தூண்டல் களுக்கு இயையத் துலங்கும் தொழில்களின் தொகுதியே உளம் - என்பது உளவியல் கருத்து. தூண்டல்-துலங்கல் என்றால் என்ன? இந்தக் கருத்தைத் தெளிவு படுத்து வதற்குப் பின்வரும் விளக்கம் தேவைப்படுகிறது:


துண்டல்-துலங்கல்

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளும் சுரப்பிகளும் தசையும் தண்டு வடத்தின் (Spinal card) வாயிலாக மூளையோடு தொடர்பு கொள்கின்றன. அவ்வாறே மூளையும் நேராகத் தொடர்பு கொள்ளாமல், தண்டு வடத்தின் வாயிலாகவே பொறிகள், சுரப்பிகள் முதலியவற்றோடு தொடர்பு கொள்கிறது. மூளைக்குக் கீழே தண்டுவடம் உள்ளது. அஞ்சல் நிலையமும் தொலைபேசி நிலையமும் போல, தண்டு வடமானது இடையே இருந்து, பொறிகளிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து பொறிகளுக்கும் செய்திகளை வாங்கிக் கொடுக்கிறது. எனவே, தண்டுவடத்தை, பல மறிவினைகளின் (Reflexes) இருப்பிடம் எனக் கூறலாம். இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

கையில் ஒரிடத்தில் நெருப்புப் பட்டால், அந்த இடத்திலுள்ள உள்செல்லும் (Afferent) நரம்பு வழியாகச் செய்தி தண்டு வடத்துக்குச் செல்கிறது; அங்கிருந்து அச்செய்தி மூளைக்கு அனுப்பப்படுகிறது; நெருப் பினின்றும் கையை இழுத்துக் கொள்ளும்படி மூளை கட்டளையிடுகிறது; அக்கட்டளையைத் தண்டு வடத் தின் வழியாக வெளிச் செல்லும் (Efferent) நரம்பு’ கைக்கு எடுத்துச் செல்கிறது; உடனே கை நெருப்பி னின்றும் விலகுகிறது. இது, தண்டு வடம் செய்யும் ஒரு வகை மறிவினை (Reflex) ஆகும். இங்கே நெருப்பு தூண்டல்’ (Stimuius) ஆகும்; கையை இழுத்துக் கொள்வது துலங்கல் (Response) எனப்படும். உள் செல்லும் நரம்புகள் (Afferent Nerves) மூளைக்கு ஐம்புல நுகர்ச்சி கிடைக்கச் செய்வதால் புலன் நரம்புகள்’ (Sensory Netwes) என்றுங் கூடப் பெயர் வழங்கப் பெறும், வெளிச் செல்லும் நரம்புகள் (Efferent Nerves) மூளையிலிருந்து உறுப்புக்களுக்குக் கட்டளையை எடுத்துச் செல் வதால் கட்டளை நரம்புகள் (Connecting Nerves) என்றுங் கூடப் பெயர் வழங்கப் பெறும். இங்கே ஐம்பொறிகளுள் மெய் என்னும் ஒரு பொறியின் ஊறு” என்னும் புலன் தொடர்பான தூண்டல்-துலங்கலை அறிந்தோம். இதேபோன்று வாய், கண், மூக்கு, செவி என்னும் மற்ற நான்கு பொறிகள் (சுவை, ஒளி, நாற்றம் , ஓசை என்னும் புலன்கள்) தொடர்பாகவும் தூண்டலுக் துலங்கல் (Response to Stimulus) உண்டு. எடுத்துக்காட்டுகளாவன:-உணவுப் பொருள் தூண்டல்-அதனை வாங்குதலும் வாய்க்குக் கொண்டு செல்லுதலும் நாக்கு சுவைத்து உண்ணுதலும் போன்றவை துலங்கல்; எதிரே உள்ள ஒரு பொருள் தூண்டல்-கண் உற்றுப் பார்த்து அதற்கேற்பச் செயல் புரிதல் துலங்கல்; மலர் தூண்டல்மூக்கால் மணம் அறிந்து பறித்தலும் வாங்குதலும் சூடுதலும் மோந்து பார்த்தலும் போன்றவை துலங்கல்: மணியோசை தூண்டல்-அதனைக் காதால் கேட்டு அதற்கேற்ப வேலை தொடங்குதலும் செய்தலும் போன்றவை துலங்கல். இவ்வாறு வெவ்வேறு எடுத்துக் காட்டுகள் பல தரலாம்: மழை பெய்தால் குடை பிடிக்கிறோம்; இங்கே மழை துாண்டல்-குடை பிடித்தல், விரைந்து நடத்தல் போன்றவை துலங்கல். இவ்வாறு எல்லாச் செயல்களிலும் துாண்டல்-துலங்கல் இருப்ப தைக் காணலாம். - உள்செல் நரம்புகள் (Afferent Nerves) e.gyūLjääss லிருந்து மூளைக்குச் செய்தி எடுத்துச் செல்வதாகவும், வெளிச்செல் நரம்புகள் (Efferent Nerves) மூளையி லிருந்து கட்டளைகளை உறுப்புகளுக்குக் கொண்டு செல்வதாகவும் அறிந்தோம். எனவே, நரம்பு கயிறு போல் இருந்து மூளையையும் மற்ற பகுதிகளையும் இணைக்கிறது என்பது தெளிவு. இதனைச் சுமார். ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே, மாணிக்க வாசகர் என்னும் தமிழ்த் துறவி திருவாசகம் என்னும் நூலில்,

“மொய்ப்பால் நரம்பு கயிறாக
     மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம் புக்கு இருக்ககில்லேன்”

என்று அறிவித்திருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. குப்பாயம் என்றால் சட்டை (Shirt) என்று பொருளாகும். சட்டையின் பாகங்கள் நூல் கயிற்றால் இணைத்துத் தைக்கப்படுவதுபோல, உடம்பு என்னும் சட்டையில் உள்ள மூளை-எலும்பு-உறுப்புக்கள், நரம்பு என்னும் கயிற்றால் தைக்கப்பட்டிருப்பதாக-தொடர்பு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமாயிருக்கிறதன்றோ! மாணிக்க வாசகர் தமது திருவாசகம்-போற்றித் திருவகவல் என்னும் பகுதியில் கூறியுள்ளபடி, கல்வி என்னும் பல் கடல் கடந்து பாண்டிய மன்னனுக்குத் தலைமை அமைச்சராய் இருந்தவர் அல்லவா? எலும்புகள் நரம்பு என்னும் கயிற்றால் பின்னப் பட்டிருப்பதாகத் திருத்தக்க தேவர் தமது சீவக. சிந்தாமணி என்னும் நூலில் கூறியுள்ள பாடல் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது:

என்பினை நரம்பிற் பின்னி
              உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
         புன்புறத் தோலைப் போர்த்து
             மயிர்புறம் பொலிய வேய்ந்திட்டு
         ஒன்பது வாயில் ஆக்கி
            ஊன்பயில் குரம்பை செய்தான்
        மன்பெருங் தச்சன் நல்லன்
            மயங்கினார் மருள என்றான்’

என்பது பாடல். மற்றும், செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதம் என்னும் நூலில் உள்ள

“இடையுறும் என்பினை நரம்பின் ஆர்த்திடாப்
புடையுறும் இறைச்சியால் பொதிந்து போக்கற
மிடைதரு தோலினான் வேயப் பட்டதோர்
உடலினை யானென உரைக்கல் ஒண்ணுமோ”


என்னும் பாடலும் (5, 2 : 31) உடலிடை நரம்புக்கு. உள்ள தொடர்பை அறிவிப்பது காணலாம். இக்கால அறிவியல் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே தமிழர்கள் நரம்பின் இயக்கத்தை அறிந்திருந்தனர் என்பதற்காக இவை ஈண்டு எடுத்துக்காட்டப்பட்டன. இனி அடுத்து முடிவுக்கு வருவோம் : குறிப்பிட்ட ஒரு தூண்டல்-துலங்கல் தொடர்பான செயல் முழுவதும் ஒரு மறிவினை அலகு” (Reflex Unit) ஆகும். இவ்வாறு பல அலகுகள் உள்ளன. இத்தகைய தூண்டல்- துலங்கல் செயல்களின் தொகுப்பே உளம் (மனம்) ஆகும் என்பது இக்கால உளவியல் கொள்கை. எனவே, ஒரு வகை உடல் இயக்கச் செயல்பாடே-குறிப்பாக மூளை இயக்கமே மனம் என உணரப்படுகிறது. இக்கொள்கை மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

இங்கே ஒரு சாராரின் மாறுபட்ட கருத்து ஒன்றுக்குப் பதில் தர வேண்டியுள்ளது. அஃதாவது:

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல நுகர்ச்சி மூளையால் நடைபெறுகிறது. என்பது உண்மை; ஆனால் மனத்தின் ஈடுபாடு இன்றி இந்நுகர்ச்சி நடைபெற முடியாது. நாம் தேடிக்கொண்டு போகும் ஒருவர் எதிரே வருவதை நம் கண் பார்த்தா லும், மனம் வேறொன்றில் நாட்டம் கொண்டிருந்தால் வருபவரை நாம் இனம் கண்டுகொள்ள முடியாது; இது போலவே, நாம் இருக்கும் இடத்தில் திடீரெனக் கெட்ட நாற்றம் வீசினும், மனம் வேறொன்றில் ஈடுபட்டிருப்பின் கெட்ட நாற்றம் நமக்குப் புலப்படாது-நாம் அங்கேயே இருப்போம். நம்மிடம் ஒருவர் ஏதாவது சொல்லுங்கால், மனம் ஈடுபடாவிடின் அவர் சொன்னது: கேட்காது-புரியாது. உண்ணுங்கால் மனம் வேறொன்றில் ஈடுபட்டிருப்பின் சுவை தெரியாது. மனம் வன்மையாக வேறொன்றில் நாட்டம் கொண்டிருப்பின், உடம்பில் எறும்பு கடித்தாலும் தெரியாது. இச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கின், மனம் என்னும், ஒர் உட்கருவி தனியாக இருப்பது புலனாகும்-என்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர். இதற்குரிய பதில் வருமாறு:

ஒரு பொறி ஏதேனும் ஒன்றில் முனைப்பாக ஈடுபட் டிருக்கும் போது, மற்ற நான்கு பொறிகளுமே அடங்கி யிருக்கக் கூடும். சுந்தரர் என்னும் சிவனடியார், கடவுள் திருமேனிச் சிலையை மிக்க ஆர்வத்துடன் கண்ணால் கண்டு வணங்கிக் கொண்டிருந்தபோது, மற்ற நான்கு பொறிகளும அடங்கிக் கண் என்னும்பொறியோடு ஒன்றி யிருந்ததாகச் சேக்கிழார் என்பவர், பெரியபுராணம் என்னும் நூலின் பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்:

“ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள”

(பெரிய புராணம்-தடுத்தாட் கொண்ட புராணம்-106)


என்பது அவரது பாடல் பகுதி. மூளை, முனைப்பாக ஏதேனும் ஒரு தூண்டலுக்குத் துலங்கிக்கொண்டிருக்கும் போது, மற்ற பொறிகளின் தூண்டலில் கவனம் இல்லாமல் இருப்பது இயற்கையே. இங்கே மனம் என்னும் ஒன்று தேவையில்லை. நாம் தேடிக் கொண்டு போகும் ஒருவர் எதிரே வந்து கொண்டிருப்பதை நம் கண் பார்த்தாலும், இந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்காமல், நாம் வீட்டிலிருந்து புறப்படும் போது மனைவியோ-மக் களோ கடையில் வாங்கிவரச் சொன்னதிலேயே முனைப்பாகப் பின் நோக்சி ஈடுபட்டிருந்தால், அந்தத் தூண்டலுக்கு ஏற்பவே நாம் துலங்கிக் கொண்டிருப்போம்: அதனால் எதிரே வருபவரை இனம் கண்டு கொள்ள முடியாமற் போகிறது. இவ்வாறு எல்லாப் பொறிகளின் தூண்டலுக்கும் கொள்ள வேண்டும். இது கவனக் குறைவு அன்று; இது கவன மாற்றம் ஆகும். அஃதாவது, ஒரு துண்டலுக்குத் துலங்கவேண்டிய நேரத்தில் வேறு துாண்டலுக்குத் துலங்கிக்கொண்டிருக்கிறோம் என்பது இதற்குப் பொருளாகும். இவ்வாறு ஒன்று நிகழ வேண்டிய நேரத் தில் வேறொன்று வந்து குறுக்கிட்டுத் தடுப்பதற்கு உள வியல் அறிஞர்கள் பின் செயல் தடை (Retroactive inhibition) எனப் பெயர் வழங்குவர்.


நினைவும் மறதியும்

ஈண்டு மறதி (Forgetfulness)என்பது ஒப்புநோக்கத்தக்கது. ஒன்றை நினைத் திருக்க வேண்டிய நேரத்தில், அதனைவிட்டு, வேறொன்றில் நினைப்பு இருப்பது தானே மறதி! எனவே, நினைவு மாற்றமே மறதி எனப்படும். நினைவும் மறதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் (Reciprocal) போன்றவை எனலாம். ஒன்றின்றி மற்றொன்றில்லை. ஒன்றை மறந்தால்தான் இன்னொன்றை நினைக்கலாம்-ஒன்றை நினைத்தால்தான் மற்றொன்றை மறக்கலாம். மரத்தால் செய்யப்பட்ட யானையை எடுத்துக்கொள்வோம். அதை மரம் என்று நினைக்கும்போது யானையை மறந்து விடுகிறோம் அதை யானை என்று நினைக்கும்போது மரத்தை மறந்து விடுகிறோம். இதைத் தான், திருமூலர் தமது திருமந்திர நூலில்,

“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை”

(எட்டாம் தந்திரம்-பராவத்தை-2290)

என்னும் பாடலில் மிகவும் நயமாகக் கூறியுள்ளார். ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம்- நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'-என்று கூறும் முதுமொழி, கல்லால் ஆன நாயின் தொடர்பாக எழுந்ததே. இந்தக் கருத்தைத் திருவள்ளுவர் என்னும் தமிழ் அறிஞர் திருக்குறள் என்னும் நூலின் பாடல் ஒன்றில் மிகவும் நுட்பமாகப் பொதித்து வைத்துள்ளார். மனைவியைப் பிரிந்து வெளியூர் சென்றிருந்து திரும்பிய கணவன், மனைவியை நோக்கி, உன்னை நான் அடிக்கடி நினைத்தேன்’ என்று கூறினானாம். உடனே அவள், நீங்கள் என்னை அடிக்கடி மறந்திருந்ததனால்தானே அடிக்கடி நினைக்க வேண்டி நேர்ந்தது; ஏன் அவ்வாறு மறந்: தீர்கள்?’ என்று கூறி, அவனைத் தழுவாமல் ஊடல் கொண்டாளாம்.

“உள்ளினேன் என்றேன் மற்று என்மறந்திர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக்க னள்’. - (1316)'

(திருக்குறள்-காமத்துப்பால்-புலவிநுணுக்கம்)

என்பது அப்பாடல். மனைவி என்னும் தூண்டலுக்குத் துலங்காமல், வேறொன்றிற்குத் துலங்கியதை இது குறிக் கின்றது. எனவே, மனம் என ஒன்று தனியே இருப்ப தாகவும், அது வேறு எங்கேயோ-வேறு எதிலோ ஈடுபட்டிருப்பதாகவும், சிலர் கூறுவது பொருந்தாது. அன்னார் வேறொன்றும் கூறுவர் : திறமை மிக்க ஒருவர் ஒரே நேரத்தில் பல செய்திகளுக்கு ஈடு கொடுக்கிறார். ஒரே நேரத்தில் எட்டுச் செய்திகளைக் கவனிப்பதற்கு அட்டாவதானம்’ என்றும், பத்துச் செய்திகளைக் கவனிப்பதற்குத் தசாவதானம்’ என்றும்,பதினாறு செய்திகளைக் கவனிப்பதற்குச்சோட சாவதானம் என்றும் பெயராகும். மனம் என்னும் ஒன்று தனியே இருப்பதால்தான், அது, எல்லாச் செய்திகளிலும்-செயல்களிலும் விரைந்து மாறி மாறி ஈடுபாடு கொண்டு பதில் தர முடிகிறது- என்று அவர்கள் கூறுகின்றனர். இதற்குரிய பதிலாவது :- மனம் என ஒன்று: தனியே இருந்து கொண்டு விரைந்து மாறி மாறிச் செயல்படுவதாக இதற்குப் பொருள் இல்லை; அட்டாவதானமாகிய எட்டுத் துண்டல் துலங்கல்களும், தசாவதானமாகிய பத்துத் தூண்டல் துலங்கல்களும், சோடசாவ தானமாகிய பதினாறு தூண்டல் துலங்கல்களும் உடனுக்குடன் மிகவும் விரைந்து-விரைந்து நடைபெறுகின்றன என்பதே இதற்குப் பொருளாகும். அனைவராலும் இது செய்யவியலாது. ஆற்றல் மிக்க ஒரிருவரே இதனைச் செய்யவியலும். அவர்களும் சில நேரத்தில் தவறிப் போவதுண்டு எனவே, மனம் எனத் தனியாக ஒன்றும் இல்லை; உடற் கூற்றின் ஒருவகை இயக்கமே மன உணர்வாகும்.

மாற்றுக் கொள்கையினர், இன்னும் நிறைவு கொள்ளாமல், மற்றொரு மறுப்பு கூறலாம்; அஃதாவது; மனி தன், படுக்காமல்-துரங்காமல், விழித்துக் கொண்டு செயலாற்றும்போது, பல தூண்டல்கள் இடையிடையே ஏற்பட, அவற்றிற்குத் துலங்கிக் கொண்டிருக்கலாம்என்பதையாவது ஒத்துக் கொள்ளலாம். ஆனால், அவன், இரவில்-இருளில், தனியறையில், தனியாகப் படுத்துக் கொண் டிருக்கும்பொழுது, நெடு நேரம் தூக்கம் வராமல், எதை எதையோ மணிக் கணக்கில் மாறி மாறி எண்ணிக் கொண் டிருக்கின்றானே-இது எவ்வாறு நிகழ்கிறது? எந்தத் தூண்டலும் அங்கே இல்லாமலேயே, பல எண்ணங்களின் மேல் எவ்வாறு துலங்கிக் கொண்டிருக்கிறான்? எனவே, மனம் என ஒன்று இருந்து கொண்டே அவ்வாறு செய்துகொண்டிருக்கிறது என்பது புலனாக வில்லையா?-என்பதாக, மாற்றுக் கொள்கையினர் வினவலாம். இதற்குப் பதில் வருமாறு :

மூளையில் பல மடிப்புகள் உள்ளன. மனிதன் ஐம் பொறி புலன்களால் அறிந்த செய்திகள் அனைத்தும். அவ்வப்போது மூளையில் பதிவாகிவிடுகின்றன. மேலோடு கவனம் செலுத்திய செய்தி, மேலோடு மூளையில் பதிவாகிறது; இது விரைவில் மறந்து போகக்கூடும். விரைவில் நினைவுக்கு வராமலும் இருக்கக்கூடும். ஆனால், ஆழ்ந்து கவனிக்கும் செய்தி மூளையில் நன்றாகப் பதிவாகிறது; விரைவில் மறக்காது-விரைவில் நினைவுக்கு வரும். தாளின் மீதோ-வேறு எதன் மீதோ-பல முறை மேலும் மேலும் எழுதினால் ஒன்றும் படிப்பதற்குப் புரியாது. ஒரு முறை எழுதியதை அழித்தால்தான், மறுமுறை எழுது வது புரியும். அதே போல, நாடாவில் (டேப் ரிகார்டர் Tape Recorder) ஒலியை ஒரு முறை மட்டும் பதிவு செய்தால் தான், மீண்டும் அவ்வொலியைக் கேட்க முடியும். இன்னொரு முறை அதிலேயே ஒலியைப் பதிவு செய்ய வேண்டுமெனில், முதலில் செய்த பதிவை அழித்த பிறகே மறுபதிவு செய்ய முடியும்-கேட்கவும் முடியும். நம் மூளை மேற்கூறிய பொருள்கள் போன்ற தன்று; ஆண்டுக் கணக்கில், புதிய புதிய செய்திகள், மேலும் மேலும், மூளையில் எத்தனை முறை பதிவாகிக் கொண் டிருந்தாலும், அத்தனை செய்திகளும், குழப்பம் இன்றி, எப்போது வேண்டுமானாலும் நினைவுக்கு வரும்; எல்லாம் தெளிவாகவே இருக்கும். இத்தகைய வியத்தகு ஆற்றலும் அமைப்பும் மூளைக்கு உண்டு.

எனவே, ஒருவன்-இரவில் இருளில்-தனி அறையில் தனியாகப் படுத்துக் கொண்டு, மூளையில் முன்பு பதிவாகி யுள்ள எத்தனைச் செய்திகளை மாறி-மாறி நினைத்தாலும், அத்தனைச் செய்திகளும் மாறி-மாறி நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கும். இங்கே தூண்டல் எதுவும் இல்லையே என்று வினவலாம். ஏன் தூண்டல் இல்லை! அவன் அன்றைக்கு அனுபவித்தவை தொடர்பான சூழ்நிலையும், அதன் விளைவாக மறு நாளோ-எதிர் காலத்திலோ செய்ய வேண்டியவை தொடர்பான சூழ்நிலை யும், தூக்கம் வராமல் ஏற்படும் தொல்லை காரணமான சூழ்நிலையும், இன்ன பிறவும், தூண்டல்களாக இருந்து கொண்டு, அவனைப் பலப் பல எண்ணங்களின் மீது துலங் கச் செய்கின்றன. எனவே, இதற்கு மனம் என ஒன்று தனியாக இருக்க வேண்டிய தில்லை, ஆகவே. எவ்வாறு நோக்கினும், உடற் கூற்றின் ஒருவகை இயக்கமே-சிறப்பாக மூளையின் இயக்கமே மன உணர்வாகும் என்பது. வெளிப்படை.


மக்களாகிய உயர் திணை உயிரிகட்கே யன்றி, அஃறிணை உயிரிகட்கும் தூண்டல்-துலங்கல் செயல் பாடுகள் இருப்பதைப் பரக்கக் காணலாம். எனவே, அவையும் மன உணர்வு உடையன என்பது விளங்கும். அங்ஙன மாயின், அஃறிணை உயிரிகளும் மக்களைப் போல் ஏன் சிறப்புச் செயல்கள் புரியவில்லை எனில், அவற்றிற்கு மக்களைப்போல். கைகள் உள்ள உடல் அமைப்பு இல்லை-என்பதே அதற்குரிய காரணமாகும்.

உயிர் பற்றியும் உள்ளம் (மனம்) பற்றியும் யான் கூறியுள்ள கருத்துக்களை மேலும் வலியுறுத்த, என் பட்டறிவு (அனுபவ) நிகழ்ச்சிகள் இரண்டினை ஈண்டு தருகிறேன்.

ஒன்று :- இற்றைக்குப் (1988) பதினைந்து ஆண்டுகட்கு முன்பு, புதுச்சேரி வள்ளலார் சன்மார்க்க சங்கம் என்னும் நிறுவனத்தில் ஒரு நாள் யான் சொற்பொழிவாற்றிய போது, மனம் என ஒன்று தனியே இல்லை; மூளையின் இயக்கமே மனம் என்னும் என் கருத்தைக் கூறினேன். எனக்குப் பின் சொற்பொழி வாற்றியவர், என் கருத்தை மறுத்து, மனம் எனத் தனியே ஒன்று உண்டு என்று கூறினார். உடனே யான் எழுந்து மீண்டும் என் கருத்தை வலியுறுத்திப் பேசினேன். அதோடு அவர் நிறுத்திக் கொண்டார். இரண்டாவது :- 1982-83ஆம் ஆண்டு காலத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொகுப்பியல் துறைப் பேராசிரியராகவும் தலைவராகவும் யான் பணி யாற்றிய போது, ஒவ்வோர் உடற் கூற்றுத் துறையிலும் வல்ல மருத்துவர்கள் (டாக்டர்கள்) சிலரைப் பல்கலைக் கழகம் அழைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தியது. அப்போது மருத்துவர் ஒருவர் சொற்பொழிவாற்றிய போது. மனம் என ஒன்று தனியே இல்லை; மூளையின் இயக்கமே மனம் என்னும் எனது கருத்தைத் தற்செயலாகக் குறிப்பிட்டார். உடனே யான் எழுந்து, மனம் என்பது மூளையின் இயக்கமே என்று கூறினீர்கள் - அது பொருத்தமே - அதே போல் உயிர் என ஒன்று தனியே இல்லை-இதயத்தின் இயக்கமே உயிர் என்றும் கூறலாம் அல்லவா?-என்று வினவினேன். அதற்கு அவர், அரை குறை மனத்தோடு ஒப்புக் கொண்டவர் போல் அப்படியும் கூறலாம்-என்று மொழிந்தார். இச்செய்தி ஈண்டு ஒப்பு நோக்குதற்கு உரியது.

  1. சீவக சிந்தாமணி- கனக மாலையார் இலம்பகம்-21.