கட்டடமும் கதையும்/தோற்றுவாய்
1. தோற்றுவாய்
"விண்மறைக்கும் கோபுரங்கள்
வினைமறைக்கும் கோயில்கள்
வேறு எந்த நாட்டில் உண்டு
வேலையின் விசித்திரம்!!"
என்று மெய்ம்மறந்து பாடுகிறார் நாமக்கல் கவிஞர். தமிழன் பெருமையோடு தலை நிமிர்ந்து நிற்பதற்கு நம் நாட்டின் கட்டடக் கலையும் ஒரு காரணமாகும். திரும்பிய பக்கமெல்லாம் மலை போன்ற பெருங்கற் கோவில்களையும், சிற்பக் கலையழகு கொழிக்கும் குகைக் கோவில்களையும் தமிழக மெங்கும் காணலாம். இவை யாவும் பண்டைத் தமிழர் கட்டடக் கலையில் அடைந்திருந்த மேம்பாட்டிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாம்.
மாந்தன் ஆறறிவு படைத்தவன் ; சிந்திக்கக் கற்றவன். ஆனாலும் அவன் நாகரிகத்தின் துவக்க வளர்ச்சி, பின்பற்றும் ஊக்கத்தாலேயே (imitation) ஏற்பட்டுள்ளது. மாந்தனின் கட்டடக்கலையுணர்வுக்கு முதற் காரணமாக அமைந்தவை பறவைகளும் விலங்குகளுமேயாம். தென்னங்கீற்றில் ஊஞ்சலாடும் தூக்கணங்குருவியின் கூடும்.ஆலின் உச்சியில் அழகாக அமைக்கப்பெறும் காக்கைக் கூடும் பறவைகளுக்கு இயற்கை வழங்கிய பேராற்றலின் விளைவுகள். நாரினாலும், குச்சியினாலும், வைக்கோலினாலும் அமைக்கப்பட்ட இக்கூடுகளைப் பார்த்துத்தான் இன்று மாந்தன் வைக்கோற் பலகைகள் (Straw Boards) செய்யக் கற்றுக் கொண்டான்.
நிலத்தினடியில் பெருஞ்சுரங்கங்களை அமைத்து அங்குப் பெரும் நகரத்தையே அமைக்கிறோம். அமெரிக்க நாட்டிலும், உருசிய நாட்டிலும் நிலத்தினடியில் ஒடும் சுரங்க வண்டித் தொடர்கள் (Metro Trains) நிறைய உண்டு. அவற்றின் சிறப்பைக் கண்டு வியவாத வெளி நாட்டார் இலரென்றே சொல்லலாம். இக்கலைக்கு முன்னேடிகளாக இருந்தவை எலிகளே! பொறியியற் கல்வியில் மண்ணியற்கலை (Soil Mechanism) என்ற தனித் துறையே உண்டு. இத்துறையைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. இத்துறையின் முதல் ஆசான் யார்? இறைவன் படைப்பில் இழிந்ததாகக் கருதப்படும் எலியே அன்றோ?
அமெரிக்க நாட்டில் நூற்றுக்கணக்கான மாடிகளையுடைய மாபெருங் கட்டடங்கள் விண்ணை அளாவி நிற்கின்றன. இக்கட்டடங்களை எழுப்பிய சிற்பிகளை வியந்து பாராட்டுகிறோம். ஆனால் மரக் கிளையில் தொங்கும் தேனடையைக் காணும் போது, சிற்பிகளின் பேராற்றல் நமக்குச் சிறிதாகத் தோன்றும்.தமிழ் அறிஞர்கள் கலைகளை அறுபத்து நான்கு வகைகளாகப் பிரித்தனர். அவற்றுள் ஒவியக்கலை, இசைக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றை நுண்கலைகள் என்றனர். சிற்பக்கலைக்குத் தாயாக விளங்கும் கட்டடக் கலையும் நுண்கலையே. நாகரிகமறியாக் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள், பசி வந்தபோது காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டனர்; நீர் வேட்கை கொண்டபோது காட்டில் ஓடி வரும் ஆற்றுநீரை அருந்திக் களை தீர்ந்தனர்; மழைக்கும், வெயிலுக்கும், பனிக்கும் அஞ்சி மலை முழைஞ்சுகளிலும், மரத்தின் கிளைகளிலும் வாழ்ந்தனர், எலி வளைகளையும் பறவையின் கூடுகளையும் கண்ட நாகரிகமற்ற அம்மக்கள், அவ்வுயிர் இனங்களைப் போலத் தாமும் நிலைத்த பாதுகாப்பான தங்குமிடங்களை அமைத்துக் கொண்டு வாழ விரும்பினர். இவ்வாறு அவர்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணம்தான் கட்டட நாகரிகத்தின் முதற்படி என்று கூறவேண்டும்.
அவர்கள் சிறிது நாகரிகம் பெறத் தொடங்கியதும் மண்ணாற் சுவர் எழுப்பி, அதன் மேல் இலை தழைகளைப் பரப்பிக் கூரைவேய்ந்து அதிலே குடியிருக்கத் தொடங்கினர். பிறகு மனித இனத்தின் நாகரிக வளர்ச்சிக் கேற்பக் கட்டடக் கலையும் வளர்ச்சி பெற்றது. மண்ணால் சுவர் எழுப்பிய மக்கள், பச்சைச் செங்கற்களையும், பிறகு சூளையில் வைத்துச் சுட்டெடுத்த செங்கற்களையும் பயன்படுத்தி வீடு கட்டத் தொடங்கினர். சங்க காலத்திலேயே தமிழ் மக்கள் அழகிய மாளிகைகளை எழுப்பி அவற்றில் வாழ்ந்தனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. நெடுநல்வாடை என்னும், சங்க நூலில் பாண்டியன் அரண்மனையின் சிறப்புப் பேசப்படுகின்றது. அவ்வரண்மனையில் மானின் கண்போன்ற சாளரங்கள் (மான் கண் அதர்) இருந்தன வென்றும், கழுநீர் வெளியிற் செல்லச் சிறந்த அமைப்புகள் அதில் இருந்தன வென்றும், அழகிய வேலைப்பாடமைந்த மரக்கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன வென்றும் நாம் அந்நூலிலிருந்து படித்தறியலாம். அவ்வரண்மனையில் பாண்டிமாதேவி பள்ளி கொள்வதற்கென்று அமைக்கப்பட்டிருந்த அறை கலைச் சிறப்புடன் விளங்கியதென்றும், அவ்வறையின் விதானத்தில் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன வென்றும் அறியலாம்.
ஐம்பெருங்காப்பியங்களில் தலைசிறந்தவை யென்றும், காலத்தால் முற்பட்டவை என்றும் போற்றிப் பாராட்டப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் கட்டடக் கலையின் சிறப்புக்கள் விரித்துக் கூறப்படுகின்றன. இந்திர விழாவைக் காண்பதற்கு வந்த மக்களெல்லாரும் அழகிய மாளிகைகளின் முற்றங்களில் சுண்ணாம்புச் சாந்தினால் அமைக்கப்பட்டிருந்த உருவங்களைக் கண்டு வியந்து நின்றனர் என்று மணிமேகலை கூறுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரன், சூரியன், சம்பாதி, சிவன், முருகன், திருமால் ஆகியோருக்கு எழுப்பப்பட்டிருந்த கோவில்களின் சிறப்பைச் சிலப்பதிகாரம் பலபடக் கூறுகின்றது.ஆனால் அக்கட்டடங்களெல்லாம் காலத்தால் அழிவுற்றன. மன்னர்கள் வாழ்ந்த மாபெரும் அரண்மனைகள் யாவும் மண்ணோடு மண்ணாக மறைந்தன. பண்டைத் தமிழ் மன்னர்கள் தங்களுடைய பெருமையை நிலைநாட்டுவதற்காக மாபெரும் கோவில்களை எழுப்பினர். அவைகளுள் பல அழிந்துவிட்டன. சங்க காலத்தில் கோவில்களெல்லாம் செங்கற்களாலும், மரத்தாலுமே கட்டப்பட்டன. முதன்முதலாக நாடெங்கும் பெருங்கோவில்களை எழுப்பியவன் சைவ சமயப் பற்றுமிக்க செங்கணான் என்ற சோழ மன்னனே. அவன் சிறப்பைச் சேக்கிழார் போன்ற பெரும் புலவர்கள் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். அம்மன்னன் செங்கற்களாலும் மரங்களாலுமே அக்கோவில்களே எழுப்பினான். அக்கோவில்கள் காலத்தால் அழிவுற்றன.
ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பல்லவர்கள் தமிழகத்தை ஆளத் தொடங்கினர். கட்டடக் கலையில் புதிய திருப்பத்தையும், மறு மலர்ச்சியையும் உண்டாக்கியவர்கள் இவர்களே. இவர்கள் காலத்திலேயே, பெரிய கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட கற்றளிகள் தோன்றின. முதல் முதலாகக் கற்றளிகளைத் தமிழகத்தில் எழுப்பிய மன்னன் இராச சிம்ம பல்லவன் என்பவன். காஞ்சியில் உள்ள ஏகாம்பர நாதர் கோயில் இவனால் கட்டப்பட்டதாகும். அஃது இன்றும் அழியாமல் இவன் சிறப்பைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.பல்லவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சிறப்போடு ஆட்சி புரிந்தவர்கள் பிற்காலச் சோழர்கள் (Imperial Cholas). இவர்கள் தஞ்சையையும், கங்கை கொண்ட சோழபுரத்தையும் தலைநகரங்களாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்களில் இராசராச சோழனும் அவன் மகனான இராசேந்திர சோழனும் குறிப்பிடத் தக்கவர்கள். இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோவிலும் இராசேந்திரன் எழுப்பியுள்ள கங்கை கொண்ட சோழபுரக் கோவிலும் தமிழ்நாட்டுச் சிற்பக் கலையின் சிகரங்களாகும். இச் சோழர்கள் வாழ்ந்த அரண்மனைகள் யாவும் அழிவுற்றன. எனவே சோழர் காலத்து அரண்மனைகளின் அமைப்பைப் பற்றி அறிந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது.
சோழர்களின் ஆட்சிக்குப் பிறகு, தஞ்சை மராட்டிய மன்னர்களின் கட்டடக் கலையும், மதுரை நாயக்க மன்னர்களின் கட்டடக் கலையும் குறிப்பிடத்தக்கவை. தஞ்சையிலுள்ள அரண்மனையும், கலைக்கூடமும் மராட்டியக் கட்டடக் கலையின் சிறப்பை விளக்குகின்றன. மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் மகால், நாயக்கர் காலத்துக் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
வட இந்தியாவில் அமைந்துள்ள கட்டடங்களுக்கும் தமிழ் நாட்டில் அமைந்துள்ள கட்டடங்களுக்கும் வேறுபாடுண்டு. தமிழகக் கோவில்களில் காணப்படுவதுபோன்ற சிற்பக் கலையழகை வட இந்தியக் கோவில்களிலோ கட்டடங்களிலோ காணமுடியாது. எனவே தமிழகக் கட்டடக் கலையை அவைகளினின்றும் வேறுபடுத்தி வேறு பெயர் கொடுத்து வழங்குகின்றனர்.
தக்கணத்தில் உள்ள அஜந்தாச் சிற்பங்களும், எல்லோராக் குகைக் கோவில்களும் குறிப்பிடத் தக்கவை. இவை முறையே சாளுக்கியர்களாலும், இராட்டிரகூடர்களாலும் உருவாக்கப்பட்டவை. தில்லி, ஆக்ரா, பதேபூர்சிக்ரி, தௌலதாபாத் ஆகிய இடங்களில் காணப்படும் கோட்டைகளும், மசூதிகளும், மாளிகைகளும், சமாதிகளும் இசுலாமியக் கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
இந்திய நாட்டில் மட்டுமன்றி, உலகில் வேறு பகுதிகளிலும் கட்டடக் கலை சிறப்புற்று ஓங்கியுள்ளது. எகிப்து நாட்டுக் கட்டடக்கலை தமிழ்நாட்டுக் கட்டடக் கலைக்குக் காலத்தால் முற்பட்டது. அங்குக் காணப்படும் பிரமிடுகளின் அமைப்பு உலக விந்தைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இராசராச சோழன் தஞ்சையில் எழுப்பிய கலைக்கோவிலைப் பற்றியும், உலகத்தின் மிகப் பழைய சின்னங்களான பிரமிடுகளைப் பற்றியும், இந்திய நாட்டின் பெருமைக்கு நிலைக்களனாக விளங்கும் பளிங்கு மாளிகையாம் தாஜ்மகாலைப் பற்றியும், போப் ஆண்டவரின் வாத்திகன் மாளிகையைப் பற்றியும் இந்நூலின்கண் விளக்கிக் கூறியிருக்கிறேன். இனிக் கதை தொடரும்.