கட்டடமும் கதையும்/வாத்திகன் நகரம்
7. வாத்திகன் நகரம்
வாத்திகன் (Vatican) என்ற சொல் கிறித்தவர்களுக்கு ஒரு மந்திரச் சொல். ஓர் இந்து காசி நகரை எவ்வாறு ஒரு புனிதமான இடமாகக் கருதுகின்றானோ, ஓர் இசுலாமியன் மக்காவை எவ்வாறு ஒரு புனிதமான இடமாகக் கருதுகிறானோ, அதுபோல ஒவ்வொரு கத்தோலிக்கக் கிறித்தவனும் வாத்திகன் நகரைக் கருதுகிறான். ஓர் இந்து காசி நகரையும், ஓர் இசுலாமியன் மக்கா நகரையும் தன் வாழ்நாளில் ஒரு முறை காணுவதைக் கிடைத்தற்கரிய பெரும் பேறாகக் கருதுவதைப்போல, ஒவ்வொரு கத்தோலிக்கக் கிறித்தவனும், தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது வாத்திகன் நகரைக் காண விரும்புகிறான். காரணம், கிறித்தவ சமயத்தின் இரண்டாயிரம் ஆண்டு வளர்ச்சியும், வரலாறும் இவ்வாத்திகன் நகரத்தோடு பிரிக்க முடியாதபடி பின்னிப் படர்ந்து கிடக்கின்றன. போப்பாண்டவரின் தலைமைப் பீடம் இந்நகரமே. உலகிலேயே மிகப் பெரிய கிறித்தவக் கோயிலான புனித பீட்டர் தேவாலயமும், மிகப் பெரிய மாளிகையான போப்பாண்டவர் மாளிகையும் வாத்திகன் நகரில் இருக்கின்றன. உலகில் வாழும் ஐம்பது கோடிக் கத்தோலிக்கரின் உள்ளங்களும் இந்நகரின் எல்லைக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
வாத்திகன் வரலாறு
வாத்திகன் உரோம் நகரின் ஒரு பகுதி. வாத்திகன் என்ற மலையின்மேல் இச்சிறு நகரம் அமைந் துள்ளது. 'வாத்திகன்' என்னும் சொல்லுக்குக் கடவுளிடமிருந்து வரும் வாழ்த்துச் செய்தியைப் பரப்பும் இடம் என்பது பொருள்.
இயேசு பெருமானுக்குப் பிறகு, அவருடைய சமயக் கொள்கைகளைப் பரப்பச் சீடர்கள் பலர் இருந்தனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் செயின்ட் பீட்டர் என்பார், இவரைத் தூய இராயப்பர் என்றும் வழங்குவர். இயேசு பெருமானுக்குப் பின், இவரே கிறித்தவ சமயத்தின் தலைவரானார்.
"பீட்டரும், இவருக்குப் பின்வரும் போப்பாண்டவர்களும் நேர்மை உள்ளத்தோடு இறைவனுக்குத் தொண்டு செய்கிறவர்கள் ; இவர்கள்பால் எவ்விதக் குற்றமும் இடம்பெறாது" என்று இயேசு பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு இயேசு பெருமானின் நல்லாசியைப் பெற்ற புனித பீட்டர், தாம் தலைமைப் பொறுப்பேற்ற கத்தோலிக்கத் திருச் சபையின் தலைமைப் பீடத்தை உரோமாபுரியில் அமைத்துக் கொண்டு பணிபுரிந்தார். புனித பீட்டருக்குப்பின் இலைனசு என்பார் சமயத் தலைவரானார். இவரும் இவருக்குப்பின் சமயத் தலைவராக வந்த போப்பாண்டவர்களும், உரோமாபுரியையே தங்கள் தலைமைப் பீடமாகக் கொண்டனர், அன்றையை நாள் தொட்டு இன்றுவரை போப்பாண்டவர்கள் தங்கிச் சமயப் பணி புரியும் இடமே வாத்திகன் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுவரை கிறித்தவ சமயம் செழித்துப் பரவியது. ஐரோப்பாக் கண்டம் முழுவதும் கிறித்தவ சமயம் பரவி விட்டது. எட்டாம் நூற்றாண்டில் போப்பாண்டவருக்கு அரசியலில் பெருத்த செல்வாக்கு ஏற்பட்டது. புனித உரோமானியப் பேரரசின் மன்னர்கள் போப்பாண்டவரால் முடி சூடப் பெறுவதைப் பெரும் பேறாகக் கருதினர். ஒரு காலத்தில் புனித உரோமானியப் பேரரசே போப் பாண்டவர்களின் ஆணைக்கு உட்பட்டிருந்தது. காலப் போக்கில் அரசியல் மாறுபாட்டால் இப்பேரரசின் எல்லை குறைந்துவிட்டது. கி. பி. 1870 ஆம் ஆண்டு இத்தாலியர் எஞ்சிய பகுதிகளையும் பிடுங்கிக் கொண்டனர். இப்போது போப்பாண்டவரின் ஆட்சியில் உள்ளவை, அவர் தங்கி வாழும் பெரிய மாளிகையும், புனித பீட்டர் தேவாலயமும், இவற்றைச் சூழ்ந்துள்ள தோட்டம் முதலியவையுமே. இவற்றின் மொத்தப் பரப்பு 108 ஏக்கர். போப் பாண்டவரின் ஆணைக்கு உட்பட்ட இச்சிறிய இடத்தையே வாத்திகன் நகரம் என்றும், வாத்திகன் மாளிகை என்றும் குறிப்பிடுகின்றனர்.
கலைச் செல்வங்கள்
உலகில் வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களில் முதன்மையானது, இப்போது இத்தாலி நாட்டின் தலை நகரமாக விளங்கும் உரோமாபுரி நகரம்தான். மேலை நாட்டு மக்களுக்குக் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாடு ஆகிய உயர்ந்த செல்வங்களை வழங்கிய பெருமையில் பெரும்பங்கு இந்நகரையே சாரும். சீசர், பாம்பே,ஆண்டனி போன்ற மாபெரும் வீரர்களையும், சிசெரோ போன்ற பெரும் பேச்சாளர் களையும், வர்ஜில் போன்ற மாகவிஞர்களையும் உலகிற்கு நல்கிய பெருமையும் இந்நகருக்கு உண்டு. ஏறத்தாழ 1500 ஆண்டுகள் உலகைக் கட்டியாண்ட உரோமப் பேரரசின் வரலாற்றுச் சின்னங்கள் யாவும் இந்நகரில் குவிந்து கிடக்கின்றன. எனவே உலகில் வேறு எந்த நகரிலும் கூடாத அளவு பெருந்திரளான மக்கள் இந்நகரைக் காண நாள்தோறும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நகரில் பயணிகளின் வசதிக்கென நூற்றுக்கணக்கான விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் இரண்டு மணிக்கொருமுறை பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்துகள் நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகின்றன. உரோமாபுரி நகரில் பார்க்கத்தக்க இடங்களில் குறிப்பிடத்தக்கவை வாத்திகனில் உள்ள போப்பாண்டவர் மாளிகையும், புனித பீட்டர் தேவாலயமும்தாம்.
வாத்திகன் மாளிகை
உலகிலேயே மிகப் பழமையான கட்டடம் வாத்திகன் மாளிகைதான். இம்மாளிகை எந்த ஆண்டில் கட்டப்பட்டது என்று திட்ட வட்டமாகக் கூற முடியவில்லை. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் பேரரசர் சிலரால் இம்மாளிகை கட்டப்பட்டிருக்க வேண்டும். இம்மாளிகை போப்பாண்டவர் வாழும் இடம் மட்டுமன்று; உலகிலுள்ள கத்தோலிக்கச் சமயத்தினரின் தலைமை அலுவலகமும் ஆகும். போப்பாண்டவரின் அமைச்சர்களும், அலுவலர்களும், நூற்றுக்கணக்கான துறவிகளும் இம்மாளிகையிலேயே வாழ்கின்றனர். வாத்திகன் நகரின் மொத்தக் குடிமக்கள் ஆயிரம் பேர்.
வாத்திகன் மாளிகை மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கட்டடம். இதன் சுவர்களின் அகலம் 4 மீட்டர். ஆயிரக் கணக்கான தூண்களும், ஓராயிரம் அறைகளும் இதில் உள்ளன. நூறு இடங்களில் மாடிப்படிகள் அமைந்துள்ளன. இருநூறு அறைகளில் போப்பாண்டவரும், அவருடைய உயர் அலுவலர்களும் பணியாட்களும் வாழுகின்றனர்.
வாத்திகன் மாளிகையில் போப்பாண்டவர் தங்கி வாழும் அறை மிகவும் அழகானது. பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இவ்வறை கண்ணைப் பறிக்கும் கலையழகு வாய்ந்தது. இவ்வறையின் நடுவில் போப்பாண்டவர் அமர்வதற்கென்று அமைக்கப்பட்ட சிம்மாசனம் உள்ளது. இது பொன்னாலானது. இச் சிம்மாசனத்திற்கு அருகில் போப்பாண்டவர் பயன் படுத்தும் தங்கத்தாலான தொலை பேசி வைக்கப்பட்டுள்ளது. போப்பாண்டவர் தம் துயில் நீங்கிப் படுக்கையை விட்டு எழுந்ததும், புனித பீட்டர் தேவாலயம் அவர் கண்ணில் நேராகப் படும்படி அவ்வறை அமைக்கப்பட்டுள்ளது.
போப்பாண்டவரின் குளிக்கும் அறையில் பலவித நூதனப் பொறிகள் அமைக்கப் பட்டுள்ளன. அவ்வறையில் உள்ள நீராடும் அமைப்புக்கள் கலைச் சிறப்புடன் கூடியவை. சுவரில் பொருத்தப்பட்டுள்ள விசையைத் தட்டி விட்டதும் இக்கருவிகள் இயங்கத் தொடங்கும், மின்விசையின் துணையால் இயங்கும் முகம் மழிக்கும் கருவிகளும் (Shaving set) குளியல் அறையில் உள்ளன. பன்னாட்டு மக்களால் பரிசளிக்கப்பட்ட அக் கருவிகள் யாவும் பொன்னால் ஆனவையே.
வாத்திகன் மாளிகையைக் குளிர் காலங்களில் சூடாக்குவதற்காகவும் சில அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவ்வமைப்புக்களில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், போப்பாண்டவர் இருக்கிற அறையைச் சூடாக்குவதற்குத் தனியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புனித பீட்டர் ஆலயம் தில்லையிலுள்ள நடராசப் பெருமான் கோவிலை நாம் அறிவோம். அங்கு ஆனந்தக் கூத்தாடும் இறைவனுக்குப் பொன்னம்பலவன் என்றும், அவன் காலைத் தூக்கி ஆடும் மேடைக்குப் பொன்னம்பலம் என்றும் பெயர்களுண்டு. தில்லை நடராசன் கோவில் கொண்டிருக்கும் கருவறை பொன்னோடுகளால் வேயப் பெற்றது. தில்லைக் கோவிலுக்குப் பொன் வேய்ந்த பெருமை பிற்காலச் சோழர்களையே சாரும்.
இதே போல வாத்திகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தின் மேல் முகடு பொன் தகடுகள் பதித்து மெருகிடப் பட்டுள்ளது. இயேசு நாதருக்குப் பிறகு கிறித்தவ சமயத்தலைவரான புனித பீட்டரின் நினைவாகக் கட்டப்பட்டதே இத் தேவாலயம். புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் இவருடைய சமாதியைக் கண்டறிந்து பல அரிய உண்மைகளை வெளிப்படுத்தினர்.இக்கோவில் கி. பி. நான்காம் நூற்றாண்டில், உரோமானியப் பேரரசராக விளங்கிய கான்ஸ்டன்டைன் (Constantine) என்பவரால் கட்டப்பட்டது. மிகவும் தொன்மையான கிறித்தவக் கட்டடக் கலைக்கு இக் கோவிலே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் இறுதி வரையில் மேலை நாட்டுக் கிறித்தவர்களுக்கு இதுவே தலைசிறந்த தேவாலயமாகக் கருதப்பட்டது. கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சியினால் மக்கள் உள்ளத்திலும், கலை உலகிலும் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தன. எனவே புனித பீட்டர் தேவாலயத்தைக் காலத்திற்கேற்ப மாற்றிப் புதுப்பிக்க விரும்பினர்.
தேவாலயத்தைப் புதுக்கும் திருப்பணி கி. பி. 1506 ஆம் ஆண்டு துவங்கியது. இவ்வாண்டில் துவங்கிய திருப்பணி 120 ஆண்டுகள் தொடர்ந்து நடை பெற்றது. இக் கோவிற் புதுக்குத் திருப்பணி முதன் முதலாக, பிராமண்டி என்ற ஒரு சிற்பியின் கையில் ஒப்படைக்கப்பட்டது. அவர் கோவிலின் ஒரு பகுதியை விரிவு படுத்தினார். எட்டாண்டுகள் அவர் பணி தொடர்ந்தது. கி. பி. 1514 ஆம் ஆண்டு அவர் இறந்ததும் கோவில் திருப்பணி சில ஆண்டுகள் தடைப்பட்டு நின்றது; முப்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் தொடர்ந்தது. இம்முறை கட்டட வேலையின் பொறுப்பை மேற்கொண்டவர் மைக்கேல் ஆஞ்சலோ என்ற மாபெரும் சிற்பி, மேலைநாட்டுச் சிற்பக் கலையின் மறுமலர்ச்சிக்குக் காரணமாக விளங்கியவர் இவரே. இவர் விரிவான திட்டமிட்டுப் பீட்டர் தேவாலயத்தைப் பெரிதாக அமைத்தார். தற்போது கோவிலில் உள்ள நடுமன்றமும், அதன் இரு புறமும் அமைந்துள்ள வண்ண வளைவுகளும், நாற்புறமும் தலை நிமிர்ந்து நிற்கும் கொத்தளங்களும் இவரால் அமைக்கப்பட்டவை.
இக்கோவிலின் நடுமன்றம் ஒரு கலைக் கருவூலம். பளிங்குக் கல்லாலும், கருங்கல்லாலும் விவிலிய நூலில் வரும் கதை நிகழ்ச்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பச் செல்வங்கள் காண்போரிடம் நேரில் பேசுவது போலக் காட்சியளிக்கின்றன, இத்தேவாலயத்தின் மேல் விதானத்தில் மிகவும் அழகான வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் யாவும் அக்காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஓவியக் கலைஞர்களின் கலைத் திறமைக்குச் சான்றுகளாக இன்றும் விளங்குகின்றன.
இக்கோவிலின் முன்னால் பெரிய முற்றம் ஒன்றுள்ளது. இது மிகவும் பெரியது. முந்நூறாயிரம் மக்கள் ஒரே சமயத்தில் திரளாகக் கூடி இம்முற்றத்தில் நிற்க முடியும். இவ்வெளி முற்றத்திலிருந்து கோவிலை நிமிர்ந்து பார்க்கும்போது மேலே பளிங்கில் பதிக்கப் பெற்றுள்ள எழுத்துக்கள் நம் கண்களுக்குப் புலப்படும். இவ்வெழுத்துக்கள் பார்ப்போருக்கு நன்றாகத் தெரிவதற்காக மிகப் 'பெரிய வடிவத்தில், மேலே செல்லச் செல்ல ஒவ்வோர் எழுத்தின் அளவும் கீழே இருப்பதைவிடப் பெரிதாக அமைந்துள்ளன. நெடுந் தொலைவிலிருந்து பார்த்தாலும் இந்தக் கோவிலின் சிகரம் நன்கு தெரியும். மிகப் பழமையானதும், பல நூற்றாண்டுகள் புனிதமானதென்று கருதப்பட்டதுமான இம்மண்ணிலிருந்து 141 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தளத்தில் பொன்னாலான சிலுவையொன்று வைக்கப்பட்டுள்ளது. இப் பொற் சிலுவையும், போப்பாண்டவருடைய இருக்கையும் எல்லாருக்கும் தெரியும்படி கோவில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் நடுமன்றத்தில் 43,000 மக்கள் ஒரே சமயத்தில் கூடி மண்டியிட்டுத் தொழுகை நடத்தலாம். இறந்துபோன போப்பாண்டவர்களின் சவங்கள் இம்மன்றத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இக்கோவிலில் வழிபாட்டிடங்களாகத் தனித்தனியே இருபத்தேழு இடங்கள் உள்ளன. பல மொழிகளில் அங்கு விவிலிய நூல் படிக்கப்படுகிறது. புனித பீட்டர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பாதிரிகள் சென்று பாவ மன்னிப்புக் கேட்பர்.
நம் நாட்டுக் கோவில்களில் உக்கிராண அறை ஒன்றுண்டு. அதே போல இக்கோவிலிலும் உக்கிராண அறை உண்டு. இதைப் புனிதக் கருவூலம் (Treasury of Sacristy) என்பர். இவ்வறையில் கோவிலைச் சேர்ந்த நகைகளும், தங்கத்தால் செயயப்பட்ட சிலுவைகளும் வைக்கப் பட்டிருக்கின்றன. உலகத்திலுள்ள எல்லா வகையான நாணயங்களும் பதக்கங்களும் இங்கு உள்ளன. விலை மதிப்பற்ற மாணிக்கங்களும், நவரத்தினக் கற்களும் இங்கு அளவு கடந்து சேர்த்து வைக்கப் பட்டிருக் கின்றன. 28,000 வகையான உயர்ந்த இரத்தினக் கற்கள் இங்கு உள்ளன. இவற்றை வகைப்படுத்தித் தனித்தனியே சிறு அறைகளுடைய மரப்பெட்டியில் பேணிவைத்திருக்கிறார்கள்.
சிற்பக்கலையும் ஓவியக்கலையும் செழித்து வளர்வதற்கு நம் நாட்டிலும் சரி, மேலை நாட்டிலும் சரி, சமயங்களே பெருந்துணையாக இருந்திருக்கின்றன. சமயக் கடவுளரின் உருவங்களையும், புராண நிகழ்ச்சிகளையும் சிற்பங்களாகச் செதுக்கியும், ஓவியங்களாகத் தீட்டியும் கலைஞர்கள் இவ்விரு கலைகளையும் வளர்த்தனர். பௌத்தர்கள் புத்த பெருமானின் திருவுருவத்தைப் பல வடிவங்களில் செதுக்கினர். இந்துக்கள் கோவில்களில் இறை வடிவங்களையும், புராண நிகழ்ச்சிகளையும் கல்லில் வடித்தனர். இந்நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த இந்திய ஓவியரான இராசா இரவிவர்மா அவர்கள் கூட கண்ணன், இலக்குமி, கலைமகள் ஆகிய கடவுளரின் ஓவியங்களைத் தீட்டியே ஓவியக் கலையை வளர்த்தார்.
இதே போன்று மேலை நாட்டுச் சிற்பக்கலையில் ஏசுவின் திருவுருவம் பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது. விவிலிய நூலில் கூறப்பட்டுள்ள கதை நிகழ்ச்சிகள் ஓவியக் கலையில் பெரிய புரட்சியை உண்டு பண்ணின. ஏசுவின் திருவுருவத்தை எவ்வெவ்வாறெல்லாம் வடிக்க முடியுமோ அவ்வவ்வாறெல்லாம் வடித்து மேலை நாட்டுச் சிற்பிகள் அழகு பார்த்தனர், இக்கலைச் செல்வங்களையெல்லாம் கத்தோலிக்கர்கள் இக்கோவிலில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். போப்பாண்ட வரின் மாளிகையிலும், புனித பீட்டர் கோவிலிலும் இக்கலைச் செல்வங்கள் யாவும் தொகுக்கப் பெற்றுக் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன. கிரேக்க நாட்டுக் கலைச்செல்வங்களே இங்கு ஏராளமாக உள்ளன.
இக்கோவிலில் வண்ண வளைவுகளும், பகுதி பகுதிகளாக அமைக்கப்பட்ட மண்டபங்களும், நயமான செதுக்கு வேலையுடன் கூடிய உயர்ந்த தூண்களும் நிறைய உள்ளன. கிரேக்கர்களின் அரிய படைப்புக்களான மனித உருவப் படங்களும், வெள்ளைப் பளிங்கிலும் வண்ணப் பளிங்கிலும் தீட்டப்பட்ட உயிரினங்களின் வடிவங்களும், இராஃபியேல் போன்ற இத்தாலிய மேதைகளால் தீட்டப்பெற்ற 463 ஓவியங்களும் நம்மை வியப்பிலாழ்த்தும் கலைப்பொருள்களாக உள்ளன, 5 மீட்டர் உயரமுள்ள பளிங்குச் சிலைகள் பலவற்றை இங்குக் காணலாம். வாத்திகன் நகரத்தைச் சில மணித்துளிகளில் நடந்து கடந்து விடலாம். ஆனால் இங்குள்ள கலைச் செல்வங்களைக் கண்டு மகிழப் பல்லாண்டுகள் வேண்டும்.