கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/வாழ்த்து
மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவரும்,
மலேசிய பொதுப்பணி அமைச்சருமான
மாண்புமிகு டத்தோஸ்ரீ. ச. சாமிவேலு அவர்கள்
வழங்கிய வாழ்த்துச் செய்தி
தமிழர்கள் எதனையும் துருவி, ஆராய்ந்து, கண்டெடுத்து, வகைப்படுத்தி, தொகைப்படுத்தி செயற்பட்டு வருவதில் முதன்மை வகிக்கின்றனர். இதைக் கண்டவர்கள் தமிழகத்துச் சான்றோர் பெருமக்கள். இது இன்று நேற்றல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. அந்த அரிய வரிசையில் வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா அவர்களும் நிற்கின்றார்.
இது அறிவியல் உலகம், அணு அண்டத்தையே ஆட்டி வைத்துக்கொண்டிருக்கின்றது. இதனால், உலக மக்கள் ஒவ்வொரு நாளும் அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் கண்டு வருகின்றனர். அதற்கேற்ப தங்களது வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொள்கின்றனர். இது காலத்தின் வளர்ச்சியாக இருப்பினும், அந்தக் கட்டாயத்திற்குள் வாழ வேண்டிய சூழ்நிலையில் உலக மாந்தர் உள்ளனர். இந்த வகையில் தமிழ்பாட நூல்களிலும் அறிவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பிறமொழியிலுள்ள அறிவுத்துறை செய்திகளை தமிழர்களுக்கு ஏற்ற முறையில் தமிழில் இருப்பது முக்கியம் என்று கருதியே கணினி கலைச் சொல் களஞ்சிய அகராதி நூலை திரு. மணவை முஸ்தபா அவர்கள் எழுதியுள்ளார். தமிழ்மொழி தெரிந்த எவரும் கணினி வளர்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், திரு. மணவை முஸ்தபா அவர்கள் வெளியிடும் இந்நூல் காலத்திற்கேற்ற ஒரு தேவையான நடவடிக்கை.
தமிழ் உலகுக்கு அறிவுப் பாங்குடன், விலை கொடுத்தாலும் பெற முடி யாத அறிவியல் அறிவைப் பெற்ற வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா அவர்களின் இம்முயற்சி அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இவரின் அறிவியல் சிந்தனைகள் தமிழில் மேலும் பெருகி, அவை ஆக்கச் செயல் களாய் உருவம் பெற வேண்டும் என்று கூறி, திரு. மணவை முஸ்தபா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கின்றேன்.
இணையத்தின்வழி உலகத் தமிழர் இதயங்களுடன் இணைந்து முன்னேறுவோம்!
அன்புடன்
டத்தோஸ்ரீ ச. சாமிவேலு.
SPMP, SPMJ, DPMS, AMN, PCM.