கண்ணன் பாட்டு/12. கண்ணன் - என் - காதலன் -3

விக்கிமூலம் இலிருந்து

(காட்டிலே தேடுதல்)


ஹிந்துஸ்தானி தோடி - ஆதி தாளம்

ரசங்கள்: பயாநகம், அற்புதம்.


திக்குத் தெரியாத காட்டில் - உனைத்

தேடித் தேடி இளைத்தேனே.


1.

மிக்க நலமுடைய மரங்கள், - பல

விந்தைச் சுவையுடைய கனிகள், - எந்தப்

பக்கத்தையும் மறைக்கும் வரைகள், - அங்கு

பாடி நகர்ந்து வரு நதிகள், - ஒரு ... (திக்குத்)


2.

நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும்

நீளக் கிடக்குமலைக் கடல்கள் - மதி

வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள்

மண்டித் துயர்பொடுக்கும் புதர்கள், - ஒரு ... (திக்குத்)


3.

ஆசை பெறவிழிக்கும் மான்கள், உள்ளம்

அஞ்சக் குரல்பழகும் புலிகள், - நல்ல

நேசக் கவிதைசொல்லும் பறவை, - அங்கு

நீண்டே படுத்திருக்கும் பாம்பு, - ஒரு ... (திக்குத்)


4.

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் - அதன்

சத்தத் தினிற்கலங்கு யானை அதன்

முன்னின் றோடுமிள மான்கள் - இவை

முட்டா தயல்பதுங்குந் தவளை - ஒரு ... (திக்குத்)


5.

கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு

கண்ணும் துயில்படர லானேன் - ஒரு

வேல்கைக் கொண்டுகொலைவேடன் - உள்ளம்

வெட்கம் கொண்டொழிய விழித்தான் - ஒரு ... (திக்குத்)


6.

பெண்ணே உனதழகைக் கண்டு - மனம்

பித்தங்கொள்ளு தென்று நகைத்தான் - அடி

கண்ணே, எனதிருகண் மணியே - எனைக்

கட்டித் தழுவமனம் கொண்டேன்.


7.

சோர்ந்தே படுத்திருக்க லாமோ? - நல்ல

துண்டக் கறிசமைத்துத் தின்போம் - சுவை

தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் - நல்ல

தேங்கள் ளுண்டினிது களிப்போம்.


8.

என்றே கொடியவிழி வேடன் - உயிர்

இற்றுப் போகவிழித் துரைத்தான் - தனி

நின்றே இருகரமுங் குவித்து - அந்த

நீசன் முன்னர் இவை சொல்வேன்:


9.

அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை

அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா - பிறன்

கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணே - என்றன்

கண்ணற் பார்த்திடவுந் தகுமோ?


10.

ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின

தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன்

மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல மொந்தைப் பழையகள்ளைப் போலே


11.

காதா லிந்தவுதை கேட்டேன் - 'அட

கண்ணா!' வென்றலறி வீழ்ந்தேன் - மிகப்

போதாக வில்லையிதற் குள்ளே - என்றன்

போதந் தெளியநினைக் கண்டேன்.


12.

கண்ணா! வேடனெங்கு போனான்? - உனைக்

கண்டே யலறிவிழுந் தானோ? - மணி

வண்ணா! என தபயக் குரலில் -எனை

வாழ்விக்க வந்தஅருள் வாழி!