கண் திறக்குமா/என் குருநாதர்!

விக்கிமூலம் இலிருந்து

20. என் குருநாதர்!

காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட எத்தனையோ துன்பங்களில் பாலுவைப் பிரிந்த துன்பமும் ஒன்றாயிற்று. இந்த நிலையில் என்னைப் போன்றவர்களின் சோர்வைப் போக்கும் திருப்பணியில் அடால்ப் ஹிட்லர் இறங்கினார். அதன் பயனாக இரண்டாவது உலக மகாயுத்தம் மூண்டது. பிரிட்டிஷ் சர்க்கார் வழக்கம் போல் இந்தியா நம்முடைய தேசம் என்பதை ஒப்புக்கொள்ள வில்லை; தங்களுடைய தேசமாகவே கருதி அதையும் யுத்தத்தில் இழுத்து விட்டுவிட்டனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு காங்கிரஸ் மகாசபை வெகுண்டெழுந்தது. காந்தி மகாத்மாவின் தலைமையில் மீண்டும் போர்க் கோலம் பூண்டது. அதன் பயனாக ஆரம்பிக்கப்பட்ட தனிப்பட்டோர் சத்தியாக்கிரகத்தில் வினோபா பாவே சர்க்காரின் முதல் விருந்தாளியானார். அவரைத் தொடர்ந்து பலர் சிறைக்குச் சென்றனர். பாரிஸ்டர் பரந்தாமனுக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது. ஆனால் என்னைப் போன்றவர்களுக்கோ? - அதுவும் கிட்டவில்லை. ஏன்? நாங்கள் சத்தியாக்கிரகம் செய்யவில்லையா? செய்யத்தான் செய்தோம். ஆனால் சர்க்கார் எங்களைக் கைது செய்யவில்லை; அதற்குப் பதிலாக லாரியில் ஏற்றிக் கொண்டு போய்ப் போக்குவரத்துக்கு வசதியில்லாத காட்டில் விட்டுவிட்டு வந்து விட்டார்கள்.

இந்த ஏமாற்றத்தால் வேறுவழியின்றி நான் மீண்டும் வாத்தியார் வேலையைக் கவனிக்கலானேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுதலையடைந்த பாரிஸ்டர் பரந்தாமன் என்னைக் கண்டதும், "நீர் எப்பொழுது விடுதலை அடைந்தீர்?" என்றார் வியப்புடன்.

எனக்கோ எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலிருந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், "நான் தான் சிறைக்கே செல்லவில்லையே?" என்றேன் உடைந்த உள்ளத்துடன்.

"ஏன், இம்முறை நீர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ளவில்லையா?"

"கலந்து கொண்டதென்னவோ உண்மைதான்; கைது தான் செய்யவில்லை!"

அப்படியானால் தயவுசெய்து என்னுடைய அனுதாபத்தை ஏற்றுக் கொள்ளும்" என்றார் பரந்தாமனார்.

“எதற்கு?”

“உம்மைக் கைது செய்யாமலிருந்ததற்குத்தான்!”

“எப்பொழுதுமே என்னைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களுடைய அனுதாபத்துக்கு உரியவர்களாகத் தானே இருந்திருக்கிறார்கள்” என்றேன் நான்.

“அதற்குக் காரணம் நாங்களல்ல, நீங்கள் தான்!”

“அது எப்படி?”

“அசட்டுத்தனமாக உம்மைப் போன்றவர்கள் நடந்து கொள்கிறார்கள்; அதனால் என்னைப் போன்றவர்களுடைய அனுதாபத்துக்கு உரியவர்களாகிறார்கள்!”

“அப்படி நான் என்ன அசட்டுத்தனமாக நடந்து கொண்டு விட்டேன்?”

“என்னைக் கேளாமல் நீர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டீரே, அந்த அசட்டுத்தனம் ஒன்றே போதாதா!”

“உங்களைக் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

“சத்தியாக்கிரகம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் உம்மையும் மூன்றுமாத காலமாவது சிறை வாசம் செய்ய வைத்துச் சத்தியத்தின் பாதுகாவலனாக நிச்சயம் ஆக்கியிருப்பேன்!”

“இது என்ன கூத்து! சிறைக்குச் செல்வதற்குக் கூடவா இன்னொருவருடைய தயவு வேண்டும்?”

“அவசியம் வேண்டும்; அதிலும் காங்கிரஸ் மகாசபை அதிகாரத்தைக் கைப்பற்றத் துணிந்திருக்கும் இந்த நாட்களில் அதில்லாமல் முடியாது. இன்னும் சொல்லப் போனால் உமக்கு மட்டும் என்ன? மாஜி மந்திரியான எனக்கே இன்னொருவருடைய தயவு வேண்டியிருந்ததே!"

"என்ன!"

"மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்து விடாதீர்! எனக்கு மட்டும் மாஜிஸ்ட்ரேட்டின் தயவு இல்லாமலிருந்தால் என்னையும் உம்மைப்போல்தான் போகிற போக்கில் சர்க்கார் விட்டிருப்பார்கள்!"

"நிஜமாகவா சொல்கிறீர்கள்?"

"ஆமாம் ஐயா, ஆமாம்!"

"என்னால் நம்பவே முடியவில்லையே?"

"நீர் எதைத்தான் நம்புகிறீர்? கண்ணுக்கு முன்னால் நடப்பதை நம்பும் வழக்கங்கூட உம்மைப் போன்றவர்களிடந்தான் கிடையவே கிடையாதே; பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, பார்க்கவேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து....."

அவர் முடிக்கவில்லை; அதற்குள் ஸ்நான அறையை நோக்கி விறுவிறுவென்று நடந்தேன். பாரிஸ்டர் பரந்தாமன் திடுக்கிட்டு, "இந்நேரத்தில் ஸ்நானம் எதற்கு?" என்று கேட்டார்.

"காங்கிரஸுக்கு!" என்றேன் நான்.

"ஏன்?"

"என்னைப் போன்றவர்களுக்கு இனிமேல் அதில் இடமில்லாததால்!"

அவ்வளவுதான்; பாரிஸ்டர் பரந்தாமன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடைய சிரிப்பைப் பொருட்படுத்தாமல் நான் ஸ்நானம் செய்துவிட்டு வந்து, "குருநாதா, எல்லா வகையிலும் தங்களைப் பின்பற்ற துணிந்துவிட்ட என்னைத் தாங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்!” என்றேன்.

***

மறுநாள் என்னைக் கண்டதும் நண்பர்களில் சிலர் சூழ்ந்து கொண்டார்கள்.

‘'வரவேணும், வரவேணும். நீங்கள் காங்கிரஸிலிருந்து விலகி விட்டீர்களாமே? இன்று காலைப் பத்திரிகையில் செய்தி வந்திருந்தது; உண்மைதானா?” என்றான் ஒருவன்.

‘இவரைப் போன்றவர்கள் காங்கிரசை விட்டு விலகனால் தலைவர்கள் சும்மா இருப்பார்களா? ‘தங்களுடைய ராஜினாமாவை உடனே ரத்துச் செய்யுங்கள் என்று தந்தி அடிப்பார்கள்’' என்றான் இன்னொருவன்.

‘'அடிப்பார்கள், அடிப்பார்கள்; அதைப் பொருட்படுத்தாமல் இவர், தம்முடைய ராஜினாமாவுக்குக் காரணம் இன்னதென்பதை விளக்கி அறிக்கை மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டே இருப்பார்; பத்திரிகைகளில் அது பத்தி பத்தியாக வெளியாகும்!” என்றான் மற்றொருவன்.

‘'வெளியாகும் வெளியாகும், ‘தீனபந்து' சாகாமல் இருந்திருந்தால் கட்டாயம் வெளியாகும்’' என்று சொல்லி விட்டுக் 'குபீ' ரென்று சிரித்தான் மற்றும் ஒருவன்.

‘'அப்படியானால் இவரைப் போன்றவர்கள் தங்களைப் பற்றி ஏதாவது எழுதிக்கொள்ள வேண்டுமானால் சொந்தப் பத்திரிகை அவசியம் இருக்க வேண்டுமென்று சொல்லுங்கள்’ என்றான் முன்னவன்.

‘'இல்லையென்றால் அ.பி. செய்தி ஸ்தாபனமும், யு.பி. செய்தி ஸ்தாபனமும் இவரிடம் போட்டி போட்டுக் கொண்டா வந்து நிற்கப் போகின்றன" என்றான் பின்னவன்.

எல்லோரும் 'கொல்' லென்று சிரித்தனர்.

நான் வாயைத் திறக்கவில்லை . ஏனெனில், இவர்கள் அனைவரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். இத்தகையவர்களுக்குப் பத்திரிகையே உலகம்; உலகமே பத்திரிகை. தனி மனிதனுடைய யோக்கியதை, ஒழுக்கம் இவற்றைப் பற்றி இவர்களுக்கு அக்கறையே கிடையாது. பத்திரிகையில் என்ன வருகிறதோ, அதுதான் வேதவாக்கு. வேத வாக்கில் எப்படி உண்மை கிடையாதோ, அப்படியே இன்றையப் பத்திரிகை உலகிலும் உண்மை கிடையாது என்பதை இவர்களைப் போன்றவர்கள் உணர்வதேயில்லை. அப்படி உணர்ந்தால்தான் உலகமும் உருப்படும்; இவர்களும் உருப்பட்டு விடுவார்களே!

எனவே, என்னைப் போன்றவர்கள் என்னதான் உண்மை நிலையை எடுத்துச் சொன்னாலும் இவர்களுக்குப் புரியவே புரியாது. இவர்கள் கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; ஒரே வார்த்தையில் சொல்லப் போனால், உலகத்தில் உண்மைக்கு இடமில்லாமல் போவதற்குக் காரணமே இவர்கள்தான். கீழ்த்தர வகுப்பார் 'படிக்காமல் கெட்டவர்கள்' என்றால், இதர வகுப்பார் படித்துக் கெட்டவர்கள் - அவ்வளவுதான் இவர்களுக்கும் அவர்களுக்குமுள்ள வித்தியாசம்!

இத்தகைய மக்கள் நிறைந்த உலகத்தைத் தன்னலமற்ற சேவையினாலோ, தியாகத்தினாலோ யாரும் வெற்றி கொள்ள முடியாது; பணத்தினாலும், பொய்யினாலுமே வெற்றி கொள்ள முடியும். இந்த உண்மையை அறிந்தவர்களுக்கு வாழ்வு; அறியாதவர்களுக்குச் சாவு!

நான் சாக விரும்பவில்லை; வாழ விரும்பினேன். என்னை நாணயத்தோடு வாழ உலகம் அனுமதிக்கவில்லை; எனவே என்னையும் என்னுடைய யும் விழுங்கி ஏப்பம் விடுவதற்கு நான் அதை அனுமதித்தேன்.

எந்த ஸ்தாபனத்தையும் ஆரம்பத்தில் வளர்ப்பவர்கள் என்னைப் போன்ற சாதாரண மக்கள்தான். பின்னால் அதைப் பணக்காரர்கள் விலை கொடுத்து வாங்குவது போல் வாங்கி விடுகிறார்கள். அதற்குப் பிறகு என்னைப் போன்றவர்களுக்கு அதில் எங்கே இடமிருக்கிறது?

இந்த உண்மையை அறிந்து என்னிடம் அனுதாபம் கொண்ட ஜீவன் ஏதாவது ஒன்று இந்த அழகான உலகத்தில் உண்டு என்றால் அந்த ஜீவன் சாந்தினிதான். அவளைத் தவிர வேறு யாரையும் நான் பொருட்படுத்த வில்லை. ஏனெனில், எல்லாவற்றுக்கும் ஜீவாதாரமானது பணம் என்பதை இப்போது நான் உணர்ந்துகொண்டுவிட்டேன். அந்தச் சர்வ வல்லமையுள்ள பணத்தைத் தேடுவதில் என்னுடைய கவனம் முழுவதையும் நான் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.

அதற்கேற்றாற்போல் அந்தக் காலத்தில் பணம் பண்ணுவது அவ்வளவு கடினமான காரியமாகவும் இல்லை. யுத்த காலத்தை முன்னிட்டுச் சர்க்கார் எடுத்ததற்கெல்லாம் ‘காண்ட்ராக்ட்’ என்றார்கள். குப்பை, கூளம் ‘காண்ட்ராக்ட்’ எடுத்தவர்களெல்லாம் குபேரர்களாகிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய ‘காண்ட்ராக்ட்’களின் விஷயத்தில் பாரிஸ்டர் பரந்தாமனின் கவனமும் சென்றது. ஆனால் காங்கிரஸ்காரர்கள் யுத்தத்துக்கு எந்தவிதமான உதவியும் செய்யக் கூடாதென்று காந்தி மகானின் கட்டளை எதிர்கால நன்மையை முன்னிட்டு அதை மீறப் பாரிஸ்டர் பரந்தாமன் விரும்பவில்லை; அதற்காக காங்கிரஸை விட்டுத் தலை முழுகவும் அவர் தயாராகயில்லை. எனவே, இந்த இரண்டுக்கும் மத்தியில் அவர் என்ன செய்வது என்று யோசித்தார். கடைசியில் என்னுடைய உதவியை நாடினார். காங்கிரஸுக்கு முழுக்குப் போட்டிருந்ததோடு, சத்தியத்துக்கும் முழுக்குப் போட்டிருந்த நான், உடனே அவருடைய கோரிக்கைக்கு இணங்கினேன். அதன் பயனாக எந்த 'காண்ட்ராக்ட்' எடுத்தாலும் அதை என்னுடைய பெயரால் எடுப்பதென்றும், கிடைக்கும் லாபத்தை இருவரும் பங்கு போட்டுக் கொள்வதென்றும் முடிவாயிற்று.

"ஐயா, காங்கிரஸ்காரரே என்னைக் கொண்டு, நீங்கள் காண்ட்ராக்ட் எடுப்பதே பிசகு; அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு பெறுவது அதைவிடப் பெரிய பிசகல்லவா?" என்றேன் ஒருநாள் சிரித்துக் கொண்டே.

"உண்மைதான்; ஆனால் என்னுடைய வாழ்க்கையை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ள இன்னும் எத்தனை தவறுகள் வேண்டுமானாலும் செய்ய நான் தயாராயிருக்கிறேன். பார்க்கப்போனால் உலகத்தில் எது சரியான காரியம், எது தவறான காரியம் என்று தீர்மானிப்பது கடினம். உமக்குத் தவறாகத் தோன்றுவது எனக்குச் சரியானதாகத் தோன்றலாம்; எனக்குச் சரியாகத் தோன்றுவது உமக்குத் தவறானதாகத் தோன்றலாம் - இல்லையா?" என்றார் அவர்.

"சொல்லுங்கள், சொல்லுங்கள். எதைச் சொன்னாலும் இப்போது நான் கேட்கத் தயாராயிருக்கிறேன். சொல்லுங்கள், சொல்லுங்கள்" என்றேன் நான்.

"சொல்லுகிறேன், அவசியம் சொல்கிறேன். உம்மைப் போன்றவர்கள் எதிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் வெகு சீக்கிரத்தில் சாவை நெருங்கி விடுகிறார்கள். வாழ விரும்புபவன் எவனாயிருந்தாலும் சரி, எதிலும் பட்டும் படாமல் இருக்க வேண்டும். மனச் சாட்சிக்கு அவன் மறந்தும் இடங்கொடுத்துவிடக்கூடாது!"

"குருநாதனின் சித்தம் எதுவானாலும் சீடனின் சித்தமும் அதுவே!" என்றேன் நான்.

"பேஷ்! அப்படிச் சொல்லும்; அப்படிச் சொல்லும்!" என்று அவர் என்னைத் தட்டிக் கொடுத்தார்.

"அப்புறம் கேட்க வேண்டுமா? சர்க்கார் புத்தம் புது நோட்டுகளை எங்களுக்கென்றே அச்சிட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். மனங் கொண்ட மட்டும் நாங்கள் வாரிக் குவித்தோம். மறு வருடமே எனக்கும் சாந்தினிக்கும் கல்யாணமாயிற்று. சித்ராவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பாரிஸ்டர் பரந்தாமனை அவள் வாயார வாழ்த்தினாள்; அவரால்தான் அண்ணன் வாழக் கற்றுக் கொண்டதாக அவள் நம்பினாள் - உண்மையும் அதுதானே?"




நண்பர் திரு. முருகு சுப்பிரமணியம் அவர்களை 'பொன்னி' வாசகர்களிடம் திண்டாட வைத்த கதையே 'கண் திறக்குமா?' கதை; அதற்காக நான் எடுத்த அவதாரமே 'நக்கீரன்' அவதாரம்!

ஏன் எடுத்தேன்? காலமெல்லாம் என்னைத் தொழுது, கடைசியில் இரணியன் கையிலோ முதலையின் வாயிலோ சிக்கிக்கொண்ட பக்தனைக் காப்பாற்றவா? இல்லை, என்னை நானே காப்பாற்றிக் கொள்ளத்தான்!

வாழ்வதற்காக வயிறு செய்யத் தூண்டும் எத்தனையோ தவறுகளில் அதையும் ஒன்றாகப் பாவித்து என்னை அன்று மன்னித்து விட்ட ஆசிரியர் கல்கி அவர்களோ இன்று அமரராகி விட்டார்; அந்தத் தவறைத் தாம் செய்த தவறாகக் கருதி இன்னல் பலவற்றுக்கு உள்ளான திரு. முருகு சுப்பிரமணியம் அவர்களோ இன்று தமிழ்ப் பெருமக்களால் நாடு கடத்தப்பட்டு விட்டார்! - ஆம், அவர்களுக்காக அசல் தமிழ்ப்பத்திரிகையொன்றை நடத்தியதே அவர் செய்த குற்றம் - அதற்காகவே இன்று அவர் மலேயாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்!

இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பின் நூல் வடிவம் பெற்று வரும் இக்கதை, என்னை இன்னும் என்ன பாடுபடுத்தப் போகிறதோ, தெரியவில்லை.

1.4.1956

அன்பு

சென்னை

விந்தன்