உள்ளடக்கத்துக்குச் செல்

கண் திறக்குமா/காதலும் கண்ணீரும்

விக்கிமூலம் இலிருந்து

8. காதலும் கண்ணீரும்

றுநாள் பொழுது விடிந்ததும் யாரோ வந்து என் அறைக் கதவுகளைத் திறக்கும் சத்தம் கேட்டது. ஜெயில் வார்டர்தான் வந்து விட்டானோ என்று நான் தூக்கி வாரிப்போட்டவனாய் எழுந்து உட்கார்ந்தேன். “மூன்று வருஷத்துத் தூக்கத்தையும் சேர்ந்து ஒரே இரவில் தூங்கி விடுவதாக உத்தேசமோ?” என்று கேட்டுக்கொண்டே பாரிஸ்டர் பரந்தாமன் உள்ளே நுழைந்தார்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை; கண்கள் தூங்க விரும்பி னாலும் மனம் எங்கே தூங்கவிடுகிறது?” என்றேன் நான்.

“இன்று மாலை ஒரு பெரிய வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்வதென்று தீர்மானித்திருக்கிறேன்!” என்று ஆரம்பித்தார் அவர்.

“யாருக்கு வரவேற்பு?” என்றேன் நான். ‘'சரியாய்ப் போச்சு! உனக்குத்தான் ஐயா, உனக்குத்தான்!’

“என்னைத்தான் நேற்றே வரவேற்று விட்டீர்களே?”

“நான் மட்டும் வரவேற்றுவிட்டால் போதுமா? பொது மக்கள் திரண்டு வந்து உன்னை வரவேற்க வேண்டாமா?”

“அவ்வளவு தூரத்துக்கு நான் ‘பெரிய மனித’னா, என்ன!”

“அது எப்படியிருப்பான், பெரிய மனிதன்?”

“அறிவிலும் ஆற்றலிலும், வீரத்திலும் தீரத்திலும், தியாகத்திலும் சீலத்திலும் சிறந்தவனாயிருப்பான்!”

“சரி, அவற்றில் ஒன்றுமே உன்னிடம் இல்லையா?”

“என்னிடம் என்ன இருக்கிறது; நான் நேற்று முளைத்தவன்தானே?”

“ச்சூச்சூ! - இப்படி நினைத்து நினைத்துத்தான் நம்மவர்கள் குட்டிச்சுவராய்ப் போகிறார்கள் - என்னைக் கேட்டால் பெரிய மனிதனாவதற்கு நீ சொல்வதில் ஒன்றுமே இருக்க வேண்டாம் என்று சொல்வேன்.”

“வேறு என்ன இருக்க வேண்டுமாம்?”

“அப்படி வா, வழிக்கு! - பெரிய மனிதர்கள் என்றால் நாலு பேருக்குத் தெரிந்து அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருக்கக் கூடாது - கூடியிவரை நடமாட்டத்தைக்குறைத்துக்கொண்டு, ‘அவர் எப்படியிருப்பார், அவர் எப்படியிருப்பார்?’ என்ற ஆவலை ஏதும் அறியாத மக்களிடையே தூண்டிவிட வேண்டும்; அதற்காகத் தங்கள் வீரப் பிரதாபங்களைப் பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளியாகும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் - அப்படிச் சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லையென்றாலும் பாதகமில்லை; ‘நேற்று அங்கே போனார். இன்று இங்கே வந்தார்!’ என்பன போன்ற தகவல்களை மட்டும் வெளியிட்டால் கூடப்போதும் ‘ஏன் போனார், ஏன் வந்தார்?’, ‘யாருக்காகப் போனார், யாருக்காக வந்தார்!’ என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற பயம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேண்டாத சங்கதி - ஏன் தெரியுமா? - தமிழ் மக்கள் இன்னும் அவ்வளவு தூரம் ‘புத்திசாலிக’ளாகி விடவில்லை!”

“நாசமாய்ப் போச்சு!”

“சொல்வதைக் கேளப்பா! - இன்னும் பெரிய மனிதர்களானவர்கள் - அல்லது, ஆக்கப்பட்டவர்கள் அடிக்கடி அறிக்கைகள் வெளியிடலாம். அவற்றைத் தயார் செய்யத் தங்களுக்குத் தெரியவில்லையென்றால், தெரிந்தவர்களைக் கூலிக்கு மாரடிக்க வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று - அந்தக் ‘கூலிக’ளுக்கு நம்முடைய பலவீனம் தெரிந்துவிடக் கூடாது. அதற்காக அவர்கள் செய்யும் காரியங்களிலெல்லாம் வேண்டுமென்றே ஏதாவது குற்றங்குறைகள் கண்டுபிடித்து, ‘அது சொத்தை, இது சொள்ளை’ என்று சொல்லி, அவர்களை அடிக்கடி மட்டந்தட்டிக் கொண்டிருக்க வேண்டும் - எந்தப் பைத்தியக்காரனாவது நம்மை ‘அபூர்வப் பிறவி’ என்று நினைத்துக் கொண்டு பார்க்கவந்தால், அவனுக்கு லேசில் பேட்டி அளித்துவிடக் கூடாது - ‘அவர் அவசர வேலையாயிருக்கிறார்’, ‘டாக்டர் யாரையும் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்’, அவர் ஊரில் இல்லை, நாளை வேண்டுமானால் பார்க்கலாம்’ ‘இப்பொழுது உங்களைப் பார்க்க முடியாததற்காக வருந்துகிறார்!’ - இப்படி ஏதாவது சொல்லி, அவனுடைய பொறுமையை முடிந்தவரை சோதிக்க வேண்டும். அதற்குள், ‘அவன் சுரணையுள்ளவனா, இல்லாதவனா?’ என்று தெரிந்துவிடும். அதற்குப் பிறகு சுரணையில்லாதவனாயிருந்தால் அவனுக்குப் பேட்டியளிக்கலாம்; சுரணையுள்ளவனாயிருந்தால் பேட்டியளிக்கக் கூடாது - அது ஒரு வேளை ஆபத்தில் கொண்டு வந்து விட்டாலும் விடலாம் - இப்படியெல்லாம் நடந்து கொண்டு வந்தால் சமூகத்தில் நமக்குத் தானாகவே மதிப்பு ஏற்பட்டுவிடும். அப்புறம் யாராவது ஏதாவது கூட்டத்தைக் கூட்டி அதில் கலந்துகொள்ள நம்மை அழைப்பார்கள். அப்படி யாரும் அழைக்காவிட்டாலும் அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை; நம்முடைய செலவிலேயே ஏதாவது ஒரு காரணத்தை நாம் முன்னால் வைத்துக் கூட்டத்தைக் கூட்டலாம்; அந்தக் கூட்டத்தில் ஆகாயத்திலிருந்து திடீரென்று கீழே குதித்தவனைப் போலப் பிரசன்னமாகலாம்; பிரசங்கமாரி பொழியலாம். மக்கள் அவனுடைய பேச்சைக் கேட்க வராவிட்டாலும், அவனைப் பார்ப்பதற்காகவாவது நிச்சயம் விழுந்தடித்துக் கொண்டு வருவார்கள்!”

என்னால் பொறுக்க முடியவில்லை. கட்டிலை விட்டுச் சட்டென்று கீழே குதித்து, “ஐயோ, என்னிடம் ஏன் இந்த அபத்தங்களையெல்லாம் சொல்லித் தொலைக்கிறீர்கள்? - நீங்கள் நினைப்பதுபோல் நான் நிச்சயம் பெரிய மனிதனாகப் போவதில்லை!” என்றேன் வெறுப்புடன்.

இதைக் கேட்டதும் அவர் துள்ளிக் குதித்து, “அடிசக்கை, இதுகூடப் பெரிய மனிதனாவதற்கு நல்ல வழிதான்! - அதாவது, பெரியமனிதனாகப் போவதில்லை’ என்று சொல்லிக்கொண்டே ‘பெரிய மனிதனாவது! ஆனால் இதற்கெல்லாம் முதலில் வேண்டியது பணம். அதை முதலில் ஏதாவது பித்தலாட்டங்கள் செய்து சேர்த்துக்கொள்ள வேண்டும்; பின்னால் அதைக் கொண்டு அந்தப் பித்தலாட்டங்களை மறைத்துவிடலாம். இதுதான் பெரிய மனிதனின் லட்சியம் - ஏன், லட்சணங்கூட இதுதான்; இதுவேதான்!” என்றார்.

“அந்த லட்சணங்கூட என்னிடம் இல்லையே?” என்றேன் நான்.

“இல்லாவிட்டால் என்ன, இருப்பதாகக் காட்டிக் கொண்டால் போச்சு! - அதற்கு முதற்படியாகத்தான் இன்று மாலை நான் நடத்தப்போகும் வரவேற்பு விழாவில் உன்னைக் கலந்து கொள்ளும்படி வேண்டுகிறேன்!”

“மன்னிக்க வேண்டும்; இப்படி வலுவில் புகழ் தேடிக் கொள்வதை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன். உண்மையான லட்சியவாதி என்றால், புகழ்தானாகவே அவனைத் தேடி வரும்; அவன் புகழைத் தேடிக்கொண்டு போக வேண்டியதில்லை.”

“நீ சொல்வதும் ஒருவிதத்தில் உண்மைதான்! - உண்மையான லட்சியவாதி என்றால், அவன் எதற்காகப் புகழைத் தேடிக்கொண்டு போகவேண்டும்? அதற்குள் மரணம்தான் அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடுமே!”

“விட்டது, கவலை! - இந்த அழகான உலகத்திலிருந்து என்னைப் போன்றவர்களுக்குச் சீக்கிரம் விடுதலையளிக்கும் அந்த மரணம் நீடுழி வாழட்டும்!”

“அப்படியானால் சரி! - நீ வாழ ஆசைப்படுவாயாக்கும் என்று நினைத்தேன்; உனக்கோ சாக ஆசையாய் இருக்கிறது - ம், அதற்கு நான் என்ன செய்ய?”

“நல்ல விஷம் ஏதாவது இருந்தால் ஒரு துளி கொடுங்களேன்!” என்றேன் நான் சிரித்துக் கொண்டே.

“ஸ்நானம் செய்துவிட்டு வாருங்கள்; தருகிறேன்!” என்றார், அவரும் சிரித்துக் கொண்டே.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஸ்நானம் செய்து விட்டு வந்து, “எங்கே விஷம்?” என்று கேட்டேன்.

மேஜை மீதிருந்த காப்பியைச் சுட்டிக் காட்டினார்; எடுத்துக் குடித்தேன்.

அதற்குள் சாந்தினி வந்து, “நான் வரட்டுமா, அப்பா!” என்று ஆஸ்பத்திரிக்குச் செல்ல விடை கேட்டாள்.

“போய் வா, அம்மா!” என்றார் அவர்.

போகிற போக்கில் அவள் என்மீது ஒரு கடைக்கண் பார்வையை வீசிவிட்டு, வாசலில் காத்திருந்த காரில் ஏறிக் கொண்டாள். நான் பாரிஸ்டரை நோக்கி, “உங்களுடைய பெண்ணைப் போலவே நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் புருஷனை நம்பி வாழாத புதுமைப் பெண்ணாக மாறிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்றேன்.

“அதற்கு எல்லாத் தகப்பன்மார்களும் என்னைப் போலவே வக்கீலாயிருந்து நியாயத்தைக் கொல்ல வேண்டுமே!” என்றார் அவர்.

நான் சிரித்தபடி, “நாடு விடுதலையடைந்துவிட்டால் அதற்கு அவசியம் இருக்காது; எல்லாக் குழந்தைகளையும் சர்க்கார் தங்கள் செலவிலேயே படிக்க வைத்து விடுவார்கள்!” என்றேன்.

“பலே, பிரசாரத்துக்கு இது ஓர் அருமையான வார்த்தையப்பா! - நாடு விடுதலையடையும் வரை இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கலாம், விடுதலையடைந்த பிறகு நாட்டின் பொருளாதார நிலையைச் சுட்டிக் காட்டி அதைச் சுலபமாகத் தட்டிக் கழித்து விடலாம்!”

“உங்களுடைய அவநம்பிக்கையை நீங்கள் முதலில் விட்டொழிக்க வேண்டும்.”

“சரி, விட்டொழித்து விடுகிறேன்.”

“தேச விடுதலைக்காகத் தியாக அக்கினியில் குதித்திருக்கும் காங்கிரஸ்காரர்களை நீங்கள் நம்ப வேண்டும்.”

“நம்புகிறேன் அப்பா, நம்புகிறேன்; அவர்களைப் பின்பற்றி, “நானும் தியாக அக்கினியில் குதித்திருப்பதிலிருந்தே அது உனக்குத் தெரியவில்லையா? ஆனால் மக்களின் நல்வாழ்வுக்குக் கடவுளையும், கைராட்டையையும் அவர்கள் நம்புவதைப் பார்க்கும்போதுதான் என்னுடைய நம்பிக்கை ஆட்டங் கண்டு விடுகிறது. ஏனெனில், கடவுளாலும், கைராட்டையாலும் இந்த நாட்டின் பொருளாதாரம் ஒரு நாளும் முன்னேறாது என்பது என் அபிப்பிராயம். பொருளாதார முன்னேற்றமின்றி இந்த நாட்டுக் குழந்தைகள் சர்க்கார் செலவில் கல்வியறிவு பெறுவதென்பது கனவிலும் நடக்காத காரியம்.”

“இந்த அபிப்பிராயம் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு உண்டு. ஆனால், அதைத் தைரியமாக எடுத்துச் சொல்வதற்குரிய காலம் இன்னும் வரவில்லை. அந்தக் காலம் வரும்போது நாங்கள் காங்கிரஸைக் கைப்பற்றிக் கடவுளையும், கைராட்டையையும் ஒழித்துக் கட்டத் தயங்க மாட்டோம்!”

“இது நடக்காத காரியம் தம்பி, நடக்காத காரியம்! அந்தக் காலம் வருவதற்குள் என்னைப் போன்றவர்கள் காங்கிரஸை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு விடுவார்கள். அப்புறம் எங்களுடைய செல்வாக்கை மீறி நீங்கள் ஒன்றும் செய்துவிட முடியாது!”

இந்தச் சமயத்தில் சாந்தினியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருந்த கார் திரும்பி வந்து வாசலில் நின்றது. அதிலிருந்து டிரைவர் கீழே இறங்கி வந்து, “அம்மா சாயந்திரம் வண்டி வேண்டாம்னு சொன்னாங்க!” என்றான்.

“ஏனாம்?” என்று பரந்தாமன் கேட்டார்.

“யாரோ ஒரு சிநேகிதி வீட்டுக்கு அம்மா போறாங்களாம்; திரும்பி வருவதற்குக் கொஞ்ச நாழியாகும்னு சொல்லச் சொன்னாங்க!” என்றான் அவன்.

“சரி, போ!” என்று சொல்லிவிட்டுப் பரந்தாமன் கைக் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பத்தரை ஆகியிருந்தது - “சாப்பிடுவோமா?” என்றார்.

அதே சமயத்தில், “இலை போட்டாச்சு!” என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்து நின்றான் சமையற்காரன். இருவரும் எழுந்து சென்று சாப்பிட்டுவிட்டு வந்தோம்.

“பகலில் நீங்கள் தூங்குவதுண்டா?” என்று கேட்டார் பரந்தாமன்.

எனக்குப் பகலில் தூங்கும் பழக்கம் இல்லையென்றாலும் அவருடைய தொணதொணப்பிலிருந்து தப்புவதற்காக “உண்டு” என்று சொல்லி வைத்தேன்.

“சரி, படுத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி விட்டு அவர் எழுந்தார்.

“இன்னொரு விஷயம்; மூன்று மணிக்கெல்லாம் இங்கிருந்து கிளம்பிவிடப் போகிறேன்!” என்றேன் நான்.

“எதற்காக?” என்று அவர் கேட்டார்.

“ஊருக்குப் போவதற்காகத்தான்!”

“இரவு எட்டரை மணிக்குத்தானே வண்டி?”

என்னுடைய நிலைமை தர்மசங்கடமாகப் போய் விட்டது. இந்தக் கேள்விக்கு அரிச்சந்திரனாயிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பானோ? - ஒருவேளை, ‘உங்கள் அருமைக் குமாரி சாந்தினி என்னை நாலு மணிக்கெல்லாம் ஜெனரல் ஆஸ்பத்திரியின் வாயிலுக்கு வந்து காத்திருக்கும்படி சொல்லியிருக்கிறாள்!” என்று அவன் உள்ளது உள்ளபடியே சொல்லியிருக்கலாம் - அவனுக்கென்ன, நிலைமை மோசமாகும்போது பரமசிவன் வந்து காட்சியளிப்பார் என்ற தைரியம் இருக்கும். அடியேனுக்கு அம்மாதிரி தைரியம் ஒன்றும் இல்லை யல்லவா? - எனவே; போனாற் போகிறதென்று ‘நரக’த்துக்கும் துணிந்து நான் ஒரு மகத்தான பொய்யை அவரிடம் சொன்னேன் - அதாவது, நண்பன் ஒருவனைப் பார்த்துவிட்டுப் போகப் போகிறேன் என்று!”

“அப்படியானால் சரி! - நான் இப்போது திலகர் குருகுலம் வரை போய்விட்டு வரலாமென்று இருக்கிறேன்; நீங்களும் வேண்டுமானால் வருகிறீர்களா?” என்றார் அவர்.

“மன்னியுங்கள்; இன்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம்!” என்றேன் நான்.

அவர் போய்விட்டார்; நான் படுக்கையில் சாய்ந்தேன் என் மனம் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தது - என்னுடைய இருண்ட வாழ்க்கை ஒளி பெறுவதற்காக அன்பெனும் விளக்கை ஏற்றி எடுத்துக்கொண்டு வருகிறாள் சாந்தினி. அர்த்தமற்ற சமுதாயக் கட்டுப் பாட்டுக்கு முன்னால் அந்த உத்தமமான காரியத்தை அவள் உலகத்துக்குத் தெரியாமல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே, அப்படியும் இப்படியுமாகத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அவள் பதுங்கிப் பதுங்கி வருகிறாள். பயத்தால் அவளுடைய விழிகள் அப்படியும் இப்படியுமாகப் பாய்ந்து பாய்ந்து சென்று மீள்கின்றன. அதைப் பார்க்கும்போது, ‘அந்தப் பயம் அவளை விட்டு என்றும் நீங்காமல் இருக்கட்டும்!’ என்று எனக்கு வாழ்த்தத் தோன்றுகிறது - ஆம்; அந்த அழகிலே நான் அவ்வளவு தூரம் சொக்கி விடுகிறேன்! - அவளுடைய தளிர்க்கரங்களின் ஒன்றிலே அந்த விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது; இன்னொரு கரமோ புடவைத் தலைப்பை இழுத்து அந்த விளக்குக்கு முன்னால் பிடித்துக் கொண்டிருக்கிறது - ஏன்? - அந்த விளக்கைச் சமூக மென்னும் சூறைக் காற்றிலிருந்து காப்பாற்றவா? - அப்படியானால் அவளுடைய எண்ணம் ஈடேற வேண்டுமே!

எப்படி ஈடேறும்? - ஒருவேளை பெற்றோர் அந்த விளக்கைப் பிடுங்கிக் கீழே எறிந்துவிட்டால்? - பெரியோர் ஓடோடியும் வந்து அதை ஊதி அணைத்து விட்டால்?

ஐயோ, அதற்குப் பின் என்னுடைய வாழ்க்கை! - என்றும் இருண்ட வாழ்க்கையாகவே இருந்துவிட வேண்டியதுதானா?

‘பொய் சொல்வது பாவம்’ என்று உலகம் பயமுறுத்துகிறது - ஆனால், அதே உலகம் உண்மையைச் சொல்லிக் காதலை வளர்க்க எங்களை அனுமதிக்கிறதா?

எனவே, காதல் வசப்பட்டுவிட்ட நாங்கள் எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்கிறோம் - ஏன், எங்கள் காதல் வளர்வதற்காக; அந்தக் காதலில் நாங்கள் ஒருவரை யொருவர் உள்ளது உள்ளபடி அறிந்து உயிர் வாழ்வதற்காக!

இதைக் குற்றம் என்று சொல்லும் உலகம், ‘நீங்கள் வாழ வேண்டாம்; செத்துப் போங்கள்!’ என்றாவது சொல்லித் தொலையட்டுமே!

இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் ‘டாண் டாண், டாண்’ என்று ஒலித்து மணி மூன்று என்பதை எனக்கு அறிவித்தது - அவ்வளவுதான்; அவசர அவசரமாக எழுந்து முகத்தை அலம்பிக் கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தேன்.

மனத்தில் இனந்தெரியாத மகிழ்ச்சி, அர்த்தமில்லாத அச்சம் - இரண்டும் ஒன்றாய்க் கலந்ததும் ஏதோ ஒருவித மான இன்பம்! - எதிரே வருபவர்களைக்கூட ஏறெடுத்துப் பார்க்காமல் சிறிது தூரம் ‘விறு விறு’ என்று நடப்பேன். பிறகு, ஒரு காரணமுமின்றித் திரும்பிப் பார்ப்பேன். பின்னால் வருபவர்களை நோக்கி என் கண்கள் ஊடுருவிச் செல்லும் ஏனோ?

இருவரும் தனிமையில் சந்திக்கப் போகிறோம் - ‘என்ன பேசப் போகிறோமோ?’ என்று என் மனம் ஒரு கணம் நினைக்கும். அடுத்த கணம், ‘அந்தக் கவலை நமக்கெதற்கு, அவளே முதலில் பேச்சை ஆரம்பித்து வைப்பாள்?’ என்று தானே தீர்மானித்துக்கொள்ளும்.

இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? - ஒன்றுமில்லை யல்லவா? - எனினும் காணாத எதையோ கண்டு விட்டவை போல என் கண்கள் மலரும்; இதழ்கள் விரியும் - இதயத்தோடு இதயம் ஒன்றித்தான்.

ஆஹா! - இந்தக் கள்ளக் காதலில் உள்ள இன்பத்தைக் காணும்போது கல்யாணத்தைப் பற்றிக் கனவு கூடக் காணாமல் இருந்துவிடலாம் போலிருக்கிறதே!

எண்ணத்தில் இனித்த பெண்ணுடன் கண்ட இந்த இன்பப் போதையிலே, ‘பாரிஸ் கார்னர்’ வரை சென்று விட்ட பிறகு தான் ‘சென்ட்ரல் ஸ்டேஷ’னைக் கடந்து வந்து விட்டோம் என்ற நினைவு என் கவனத்திற்கு வந்தது. அசட்டுச் சிரிப்புடன் அவசர அவசரமாகத் திரும்பினேன். அவள் வந்தாள்; என்னைக் கண்டதும் முதல் தடவையாக அவள் ‘மோன நகை’ புரிவதை விட்டு ‘முத்து நகை’ புரிந்தாள்.

அந்த நகைக்கு இந்த உலகத்தில் ஈடேது, இணைதான் ஏது?

அடுத்த கணம் அவள் கண்ணால் அழைத்தாள்; காந்தக் கல்லைக் கண்ட ஊசி போல என்னை ஏதோ ஒரு சக்தி உந்தித் தள்ள, நான் அவள் நிற்குமிடத்தை அடைந்தேன். அவள் அங்கிருந்த ஒரு ‘ரிக்ஷாவாலா’வைக் கூப்பிட்டாள்; அவன் வண்டியுடன் விரைந்தோடி வந்து அவளுக்கு முன்னால் நின்றான்.

நிலையில்லாத உயிரின்மீது அவனுக்கு ஏன்தான் அவ்வளவு ஆசையோ, தெரியவில்லை - இல்லை யென்றால் மனிதனாய்ப் பிறந்த அவன் ஏன் மாட்டின் தொழிலை மேற்கொண்டிருக்கப் போகிறான்? - மனிதர் நோக மனிதர் பார்க்கும் சமுதாயத்தைத்தான் அவன் ஏன் சும்மா விட்டிருக்கப் போகிறான்?

அந்த ஜீவனிடம் ‘சில புண்ணியாத்மாக்க’ளைப் போல இரக்கங் காட்ட என் மனம் இடங் கொடுக்கவில்லை - அப்படிக் காட்டுவது ஆட்டுக்குட்டியிடம் ஓநாய் இரக்கங் காட்டுவது போலாகுமல்லவா? - ஆகவே, அந்தப் பக்கமாக அப்போது xடிக்கொண்டிருந்த டிராம் வண்டியில் நான் தொத்திக்கொண்டு, அவளையும் வந்து ஏறிக்கொள்ளும்படி என் கண்ணால் அழைத்தேன்.

என்னுடைய அழைப்பை அவள் தட்டவில்லை; ஏறிக் கொண்டாள். இருவரும் திருவல்லிக்கேணியில் இறங்கி, கடற்கரையை நோக்கி நடந்தோம்.

“அநேகமாக எல்லாக் கதாநாயகர்களுக்கும் கடற் கரையில்தானே காதல் உதயமாகியிருக்கிறது? நம்முடைய காதலும் அங்கேயே உதயமாகட்டுமே!” என்றாள் அவள்.

“அதுதான் ஆஸ்பத்திரியிலேயே உதயமாகி விட்டதே!” என்றேன் நான்.

“ரொம்ப அழகுதான்? - போயும் போயும் காதல் ஆஸ்பத்திரியில்தானா உதயமாக வேண்டும்?” என்றாள் அவள்.

நான் சிரித்துவிட்டு, ‘சிறையில் இருந்தபோது எனக்கு நீ ஏன் கடிதங்கூட எழுதவில்லை?’ என்று கேட்டேன்.

“அதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா, என்ன?’ என்று அவள் திடுக்கிட்டுக்கேட்டாள்.

‘எதிர்பார்க்காமல் கூட இருந்திருக்க முடியுமா?”

‘எனக்குக் கடிதம் எழுதவேண்டுமென்று ஆசைதான். ஆனால், உங்கள் அமைதியை அது குலைத்து விடுமோ என்று பயந்து பேசாமல் இருந்துவிட்டேன்.”

“என்று நீ என்னை மறவாதீர்’ என்று சொல்லி விட்டுப் போனாயோ, அன்றேதான் என் அமைதி குலைந்து விட்டதே!’

“அப்படியானால் நான் குற்றவாளிதான்!”

‘'நீ மட்டுமென்ன, நானும் குற்றவாளிதான்!”

‘அது சரி, உங்கள் மாமாவின் குடும்பம் சோம்பேறிக் குடும்பமோ?”

இந்தக் கேள்வி என்னைத் தூக்கி வாரிப் போடுவது போலிருந்தது. ஒன்றும் புரியாமல், ‘ஏன், இல்லையே?’’ என்றேன்.

‘பின், பரம்பரை பரம்பரையாகவே பணக்காரக் குடும்பமோ?”

“ஆமாம்.”

“அதைத்தான் நானும் சொல்கிறேன் - சோம்பேறிக் குடும்பம் என்றால் என்ன, பணக்காரக் குடும்பம் என்றால் என்ன? - இரண்டும் ஒன்றுதானே?”

அவள் சிரித்தாள்; நானும் சிரித்தேன்.

“ஆமாம், உங்கள் மாமாவின் மகன் ஒருவன் ஒரு வேலையும் செய்யாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக் கிறானாமே, உண்மைதானா?” 

“இருக்கலாம்; தலைமுறை தலைமுறையாகவே அவன் குடும்பத்தில் யாரும் வேலை செய்வதில்லை. அதைப் பின்பற்றி அவனும் வேலை செய்யாமல் திரிந்துகொண்டிருக்கலாம் - ஏன், அவனுக்கென்னவாம்?”

‘அவனுக்கு ஒன்றுமில்லை; அவனால் உங்கள் தங்கை சித்ராதான் அவதிப்படவேண்டியிருக்கிறது!”

“என்ன அவதி?’ ‘அடிக்கடி அவன் அவளிடம் விளையாட வந்துவிடு கிறானாம் - அந்த விளையாட்டு அவளுக்கு விரசமாகப் படுகிறது; அவனுக்கோ சரசமாகப் படுகிறது!”

‘ஏன், மாமாவும் மாமியும் வீட்டில் இல்லையா?” ‘இருந்து என்ன பிரயோசனம்? - அவர்கள், ‘உன் மாமன்தானேடி, சும்மா விளையாடட்டுமே!’ என்கிறார்களாம்.’

‘அக்கிரமமாகவல்லவா இருக்கிறது!’

‘அந்த அக்கிரமம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதாம். அதற்கேற்றாற்போல் அப்பாவும் அம்மாவும் அவன் கட்சியில் சேர்ந்துகொண்டு, ‘தொட்டில் எல்லாம் போய் விடுமோ? புருஷன் வாடையே படாமல் இருந்துவிடு வாயோ?” என்றெல்லாம் சொல்லி, மேலும் மேலும் அவள் பொறுமையைச் சோதித்துக் கொண்டே இருக் கிறார்களாம் - வேதனை தாங்காமல் அழுதால், நீலி! எத்தனைபேர் தலையை வாங்கிவிட்டு இல்லையென்பாயோ?” என்கிறார்களாம் - இந்த நரகத்திலிருந்து உன்னால் என்னை விடுதலை செய்ய முடியாதா?’ என்று அவள் இரண்டு நாட்களுக்கு முன்னால் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன் - நல்ல வேளையாக நீங்கள் வந்து விட்டீர்கள்!” 

இதைக் கேட்டதும் என் மனம் எப்படியிருந்திருக்கும்? பரபரப்புடன் எழுந்து நின்று, ‘சாந்தினி, இனி ஒரு நிமிஷங்கூட என்னால் இங்கே தாமதிக்க முடியாது!’’ என்றேன்.

‘ஆத்திரப்படாதீர்கள்! - அசம்பாவிதமாக இதுவரை ஒன்றும் நடந்துவிடவில்லையென்றும், அப்படி ஏதாவது நடப்பதற்குள், தான் அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவது நல்லதென்றும் அவளே எழுதியிருக்கிறாள். மேலும், அவர்களோ, உங்களுக்கு உறவினர்களாயிருக் கிறார்கள். அவசரப்பட்டு நீங்கள் அவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது - இந்த விஷயத்தில் சித்ரா சொல்வதுதான் சரி; அவள் சொற்படி நீங்கள் உடனே சென்று அவளை இங்கே அழைத்து வந்துவிடுங்கள். அதற்குள் உங்கள் வீட்டைக் காலி செய்து வைக்கும்படி அங்கே சென்றதும் என் அப்பாவுக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதி விடுங்கள் - நடந்ததைப் பற்றிச் சிந்திப்பதைவிட இனி நடக்கப்போவதைப் பற்றிச் சிந்திப்பதுதான் நல்லது!” என்றாள், அவளும் என்னோடு எழுந்து நின்றுகொண்டே.

எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை - அப்போது என் உள்ளத்தைப் பிரதிபலிப்பது போலிருந்த அலைகடலை வெறித்துப் பார்த்த வண்ணம் நான் பெருமூச்சு விட்டேன்.

‘இந்தாருங்கள்!” என்று சொல்லி, அவள் என் கைக்குள் எதையோ சுருட்டி வைத்தாள் - என்னவென்று பார்த்தேன்; ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்கள் என் கைக்குள் இருந்தன.

‘தீபாவளியின்போது எனக்குப் பிடித்த புடவையாகப் பார்த்து எடுத்துக்கொள்ளும்படி அப்பா இருநூறு ரூபாய் கொடுத்தார். அதில் சமயத்துக்கு உதவட்டும் என்று ஐம்பது ரூபாயை எடுத்து வைத்திருந்தேன் - அது இப்போது உதவிற்று!’ என்றாள் அவள், ‘'சாந்தினி, நீ எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறாய்; இன்னும் செய்கிறாய், இதற்கெல்லாம் கைம்மாறாக உனக்கு நான் என்ன செய்யப் போகிறேனோ?’ என்றேன் நான்.

‘உங்கள் இதயத்தில் எனக்குக் கொஞ்சம் இடங் கொடுங்கள், போதும்!” என்றாள் அவள், எங்கேயோ பார்த்தபடி.

நான் அவளுடைய முகத்தைத் திருப்பி, ஏதோ சொல்ல முயன்றேன். ஆனால் வார்த்தைக்குப் பதில் கண்ணிர்தான் கசிந்தது.

‘களுக்கென்று சிரித்தபடி என் கண்ணிரைத் துடைத்துவிட்டு, ‘போய் வாருங்கள்!” என்றாள் அவள்.

நான் தயங்கினேன்; அவள் கலகல'வென்று சிரித்த வண்ணம் என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்.