கண் திறக்குமா/குப்பையிலே குருக்கத்தி!
15. குப்பையிலே குருக்கத்தி!
"ஊரிலிருந்து இப்பொழுதுதான் வருகிறாயா? என்றாள் செங்கமலத்தின் தாயார்.
"இல்லை சித்தி, நேற்றே வந்துவிட்டேன்" என்றான் பாலு.
"அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்கிறது?"
"தேவலை; அவர்களைச் சேர்ந்தவர்கள் பகவான் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார்கள். ஒரு பாவமும் அறியாத அவர் மீது ஒரேயடியாய்ப் பாரத்தைப் போடுவது அவ்வளவு சரியல்ல என்று நான் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கொண்டேன்; அதன் பயனாக அவர்களும் நோய் வாயிலிருந்து மீண்டு விட்டார்கள்."
"அப்படிச் சொல்லாதே, அப்பா! அதுவும் அவருடைய சித்தப்படித்தான் நடந்திருக்கிறது !"
"ஒருவேளை அவர்கள் செத்துப்போயிருந்தால்?"
"நீ போடா, அப்பா! உன்னுடன் நான் பேச வரவில்லை; சின்ன வயதிலேயே நீ அதிகப்பிரசங்கியாயிற்றே!"
"அறிவுக்கு வேலை கொடுப்பவன் அதிகப்பிரசங்கி! அதுதானே உங்கள் எண்ணம்? - சரி, இருக்கட்டும் - எனக்குத் தெரியாமலே ஏன் செங்கமலத்துக்குக் கல்யாணம் செய்துவிட்டீர்கள்?"‘'நான் கல்யாணம் செய்யும் வரை அவள் எங்கே காத்திருந்தாள்!”
‘'அப்படியானால் அவளே செய்து கொண்டு விட்டாளோ!’'
‘'அந்த அக்கிரமத்தை ஏன் கேட்கிறாய்? எல்லாவற்றையும் இவரிடம் சொல்லியிருக்கிறேன்; கேட்டுத் தெரிந்துகொள்!’' என்று என்னைச் சுட்டிக் காட்டி விட்டு, கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே அவள் உள்ளே சென்றுவிட்டாள்.
நடந்த கதையனைத்தையும் நான் அவனிடம் சொல்லி விட்டு,' ‘எப்படி உங்கள் 'இந்து' லா;’' என்றேன்.
‘'அதனாலென்ன, சட்டம் வழங்காத நீதியை நான் வழங்கிவிடுகிறேன்!” என்றான் அவன்.
‘'அதெப்படி வழங்க முடியும்? உன் தாயார் அதற்குக் குறுக்கே நிற்க மாட்டாளா?”
“நிற்கட்டுமே, பிறரை வஞ்சிக்கும் விஷயத்தில்கூட மகன் தாயாருடன் ஒத்துழைக்க வேண்டுமா, என்ன?”
‘மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் தருமமாயிற்றே!’'
‘'அதனாலென்ன, அவர்களைத் தெய்வமாக்குபவர்கள் ஆக்கட்டும்; நாம் மனிதர்களாக்குவோம். வாழ்க்கைக்காகத் தருமமா, தருமத்துக்காக வாழ்க்கையா? ஒன்று மாறும்போது இன்னொன்றும் மாறித்தானே தீர வேண்டும்?’
‘'அதற்கு வேண்டிய தைரியம்...”
“நிச்சயமாக இருக்கும், எனக்கு!’'
“அப்படியானால்...?""என்னுடைய சொத்தில் பாதியை இன்றே வேண்டுமானாலும் சித்திக்கு நான் எழுதி வைத்துவிடுகிறேன்!"
"உண்மையாகவா?"
"அது மட்டுமல்ல; என்னிடமிருந்து அவர்களைப் பிரிப்பதற்குக் காரணமாயிருந்த இந்தப் பூணூலையும் இன்றே நான் அறுத்தெறிந்துவிடுகிறேன்! இனி நான் பார்ப்பனனல்ல; அவர்களும் திராவிடரல்ல - எல்லோரும் மனிதர்கள்!" என்று முழங்கியவண்ணம், அந்த நிமிஷமே தன் சட்டையைத் தூக்கி அதற்குள்ளிருந்த பூணூலை அவன் அறுத்தெறிந்துவிட்டான்.
"ஆஹா! இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரும் உன்னைப் பின்பற்றினால் எவ்வளவு நன்றாயிருக்கும்? திராவிடக் கழகத்தை ஒழித்துக்கட்ட இதை விடச் சிறந்த வழி வேறு ஏதாவது இருக்க முடியுமா?" என்றேன் நான்.
அதே சமயத்தில் செங்கமலத்தின் தாயார் ஓடோடியும் வந்து ஏனோ பாலுவைக் கட்டித் தழுவிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்!
இருவரும் வெளியே வந்தோம். "செங்கமலம் என்னுடன் பிறக்கவில்லைதான்; ஆயினும் அவள் என் தங்கை!" என்றான் அவன், அழுத்தந்திருத்தமாக.
"யார் இல்லையென்றார்கள்?" என்றேன் நான்.
"அவளுக்குத் தீங்கிழைத்தவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களை நான் சும்மா விடப்போவதில்லை!" என்று சூளுரைத்தான் அவன்.
"விடக்கூடாது, விடவே கூடாது!" என்றேன் நான்.
"இம்மாதிரி விஷயங்களில் என்னுடைய கட்சி என்ன தெரியுமா? மனிதன் உயிரைப் பணயமாக வைத்துவிட வேண்டும் என்பதுதான்! எதிரி பணக்காரனாயிருக்கலாம்; அதற்காக ஏழை அஞ்ச வேண்டியதில்லை. அவனுக்குப் பணம் துணையாயிருந்தால் இவனுக்குப் பலம் துணையா யிருக்க வேண்டும்!"
"உண்மை ; இறந்த காலப் பலாத்காரந்தானே எதிர்காலத்தில் வீரமாக வர்ணிக்கப்படுகிறது? - அதைப் புரிந்து கொள்ளாமல் அஹிம்சையைப் பற்றிப் பேசி என்ன பிரயோசனம்?"
"இருந்தாலும் முதலிலேயே நான் இந்த விஷயத்தில் என்னுடைய பலத்தைப் பிரயோகித்து விடப்போவதில்லை; உன்னைப் போலவே நானும் நேரில் சென்று அவனுக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்வேன். அதற்கு அவன் சம்மதிக்காவிட்டால் சட்டத்தின் துணை கொண்டு நடவடிக்கை எடுப்பேன். அதிலும் நீதி கிடைக்கவில்லையென்றால், அந்த நீதியை வழங்க நான் ஆண்டவனை நாட மாட்டேன்; நானே வழங்கிவிடுவேன்! ஆம், நானே வழங்கி விடுவேன்!" என்று தன் முஷ்டியை உயர்த்திக் காட்டினான் அவன்.
"செய்; அப்படியே செய்! இம்மாதிரி அக்கிரமங்களை ஒழிக்க ஒரு தலைமுறை செத்தால்தான் இன்னொரு தலைமுறையாவது மானத்தோடு வாழமுடியும்!" என்று நான் அவனை உற்சாகப்படுத்தினேன்.
"ரொம்ப சந்தோஷம் செல்வம்; இதனால் நமது நட்புரிமைக்குப் பங்கம் வராமலிருந்தால் சரி!" என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.
வீறு கொண்ட அவன் நடை, 'வெற்றி அல்லது வீர மரணம் - வெற்றி அல்லது வீர மரணம்' என்று பறை சாற்றுவது போலிருந்தது!
◎◎◎
செய்யாமங்கலத்தில் கோரக்கொலை
தன்னை பலாத்காரம் செய்யவந்த பாதகனை ஒரு பெண் வெட்டி வீழ்த்தினாள்!
- தஞ்சை, 27
தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த செய்யாமங்கலத்தில் நேற்று இரவு தன்னைக் கற்பழிக்க வந்த ஒரு காதகனை வீராங்கனையொருத்தி வெட்டி வீழ்த்திவிட்டாளாம். இந்தப் படுகொலைக்கு உள்ளானவன் செய்யாமங்கலம் ஜமீனைச் சேர்ந்த சிவகுமாரன் என்பவன், செய்தி கேட்டு ஓடிவந்த போலீஸாரிடம் அந்தக் கற்புக்கரசி தன் குற்றத்தைத் தீரத்தோடு ஒப்புக்கொண்டாளாம். அவளுடைய துணிச்சலைப் பற்றி ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. (ந.நி.) இதைப் படித்து முடித்ததும், "முந்திக்கொண்டு விட்டாள்; பாலுவை யாரோ ஒருத்தி முந்திக்கொண்டு விட்டாள்!" என்று நான் என்னையும் அறியாமல் கத்தினேன்.
"என்ன அண்ணா , என்ன விஷயம்?" என்று பரபரப்புடன் கேட்டாள் சித்ரா.
நான் விஷயத்தைச் சொன்னேன். "இப்பொழுது தான் எனக்கு நம்பிக்கை உதயமாகிறது!" என்றாள் அவள்.
"நம்பிக்கையா?"
"ஆமாம், தமிழ்நாட்டின் மேல் எனக்கு இப்பொழுது தான் நம்பிக்கை உதயமாகிறது!" என்றாள் அவள் அழுத்தந் திருத்தமாக."உண்மை; அவளும் உன்னைப்போல் அவனுக்குப் பயந்து ஓடி வராமல் இருந்தாளே, அதைச் சொல்!" என்றேன் நான்.
அவள் சிரித்தாள், "ஏன் சிரிக்கிறாய், சித்ரா?" என்று கேட்டேன் நான்.
"ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை அண்ணா திருப்பிக் காட்டும் போது தங்கை என்ன செய்வாள்?" என்றாள் அவள்.
"இல்லை: உன் அண்ணனுக்கு அந்த விஷயத்தில் மட்டும் நம்பிக்கை இல்லவே இல்லை!"
"இருக்கலாம்; ஆனால் செங்கமலத்தின் விஷயத்தில் நீதி வழங்க உங்களால் முடியவில்லையே?"
"அதற்கு நீதான் குறுக்கே இருந்தாய்; அதனால் தான் அந்தப் பொறுப்பை நான் பாலுவிடம் விட்டு விட்டேன்!"
இந்தச் சமயத்தில் அங்கு வந்த செங்கமலம் ஒன்றும் புரியாமல் எங்களைப் பார்த்தாள். "விஷயம் வேறொன்று மில்லை; நீயும் நானும் செய்ய வேண்டிய காரியத்தை இன்னொருத்தி செய்துவிட்டாள்!" என்றாள் சித்ரா!
"ஆமாம். இதுவரை நாகரிகம் ஒழுக்கத்தைக் கொன்று வந்தது; இப்போது ஒழுக்கம் நாகரிகத்தைக் கொன்று விட்டது!" என்றேன் நான்.
"எந்த ஒழுக்கம் எந்த நாகரிகத்தைக் கொன்று விட்டது?" என்றாள் செங்கமலம் ஒன்றும் புரியாமல்.
பத்திரிகையில் வந்திருந்த செய்தியை நான் அவளுக்குக் காட்டினேன். அதன் பலன், மறுநாள் காலை எங்கள் வீட்டுக் கொல்லைக் கிணற்றில் அவளுடைய உயிரற்ற உடலைத்தான் எங்களால் பார்க்க முடிந்தது!