கண் திறக்குமா/பிள்ளை மனம்
5. பிள்ளை மனம்
எதிர்பார்த்து நிகழும் எந்தச் சம்பவத்தையும் கண்டு மனிதன் திடுக்கிடுவதில்லை; எதிர்பாராமல் நிகழும் சம்பவத்தைக் கண்டுதான் திடுக்கிடுகிறான். இந்த இயற்கை நியதிக்கு விரோதமாக உலகம் தோன்றிய நாளிலிருந்து ஒரு காரியம் நடந்து வருகிறது. பிறக்கும் மனிதன் எவனும் என்றைக்காவது ஒரு நாள் இறந்தே தீருவான் என்பது யாரும் எதிர்பார்க்கக் கூடியதுதானே? அப்படியிருந்தும் அது மனிதனை என்ன பாடு படுத்திவிடுகிறது?
அந்தச் சம்பவத்தை நான் இதுவரை எத்தனையோ ஆயிரமாயிரம் முறை நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனாலும் நினைக்கும் ஒவ்வொரு முறையும் என் மனம் அமைதியை இழந்து தவிக்க ஆரம்பித்துவிடுகிறது. நாளடைவில் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்துவிடும் சுபாவம் அந்தச் சம்பவத்துக்குமட்டும் ஏனோ இன்றுவரை இல்லாமலே போய்விட்டது.
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் எத்தனையோ விஷயங்களில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர்களுக்குள் வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை - மக்கட்பேறைப் பற்றியதுதான் அது. வேறு எதிலும் போட்டியிடாத அவர்கள் பிள்ளை வரம் கேட்பதில் மட்டும் போட்டியிடுகிறார்கள். பாக்கப்போனால் குழந்தையில்லையே என்று பணக்காரன் கவலை கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கும் அவன் குழந்தையின் மழலை இன்பத்தையும் அனுபவிக்க ஆசை கொள்கிறான், அத்துடன் தனக்குப் பின்னால் தன் சொத்து சுதந்திரங்களை அனுபவிக்க வாரிசு வேறு அவனுக்கு வேண்டியிருக்கிறது.
அந்த வாரிசு இல்லாவிட்டாலோ கேட்கவே வேண்டாம். பாவம், பகவான் பழிக்கு ஆளாகிறார்! பசியும் ருசியும் அறியாத அவருக்கு எல்லாச் சொத்துக்களும் போய்ச் சேருகின்றன. அந்தப் பரமாத்மாவைப் பாதுகாப்பதற்கென்றே பிறந்திருக்கும் ஒரு சிறு கூட்டம் - நம்மைப்போல் பசியும் ருசியும் அறிந்த கூட்டம் - மேற்படி சொத்துக்களை அனுபவிக்கிறது. அதைப் பகவானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார், நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கடவுளுக்குப் பிரதிநிதிகளான ராஜாக்களும், ராஜாக்களுக்குப் பிரதிநிதிகளான ராஜப் பிரதிநிதிகளும், அவர்களுக்கெல்லாம் மேலானவர்கள் என்று தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் மக்களின் பிரதிநிதிகளுங்கூட அதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
மக்கட்பேறு இல்லாதவர்களுக்கு இன்னொரு மகத்தான கஷ்டமும் இருக்கிறது. இம்மையோடு அவர்களுடைய இன்னல்கள் தீர்ந்து விடுவதில்லையாம்; மறுமையிலும் அந்தப் பாழும் இன்னல்கள் அவர்களைத் தொடர்ந்து வருமாம். அங்கே - அதாவது, உங்களுக்கும் எனக்கும் தெரியாத - ஏன், அந்தப் பரம பக்த சிகாமணிகளுக்கே தெரியாத, தேவலோகத்திலே ‘புத்’ என்று ஒரு நரகம் பிரத்தியேகமாக இருக்கிறதாம். புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்களையெல்லாம் அந்த நரகத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார்களாம் - என்ன கொடூரமான தண்டனை! கேவலம், குற்றங்கள் நிறைந்த நாமாவது இங்கே கோர்ட்கீர்ட் என்று வைத்துக் கொண்டு, விசாரணை கிசாரணை என்று நடத்துகிறோமே! அங்கே அது கூடக் கிடையாதா? அப்படியிருந்தால் விசாரணை என்று ஒன்று நடக்காதா? அதன் பயனாக, ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்னும் அழியாமொழிக்குப் பாத்திரமான ஆண்டவன் தான் அந்த அப்பாவிகள் புத்திர பாக்கியம் பெறாததற்குக் காரணம்; அவன்தான் குற்றவாளி, என்று ஏற்படாதா? தண்டனையும் அவனுக்கே கிடைக்காதா?
ஒருவேளை இங்கே நாஜிஸம், பாஸிஸம், இம்பீரியலிஸம் என்றெல்லாம் இருக்கிறதே. அப்படி அங்கேயும் ஏதாவது இருக்குமோ, என்னமோ!
எது இருந்தாலும் எது இல்லாமற் போனாலும் மேற்கூறியவற்றுக்கெல்லாம் பணக்காரர்கள் பயப்பட வேண்டியதுதான். இகலோகத்தில் சகல செளகரியங்களோடு வாழும் அவர்கள், பரலோகத்திலும் அவ்வாறு வாழ முயற்சி செய்ய வேண்டியதுதான்! - ஆனால் இந்த ஏழைகளுக்கு என்ன வந்தது? இவர்கள் வாழும் பூலோக நரகத்தைவிடவா ‘புத்’ என்னும் நரகம் மோசமாயிருக்கும்?
அட கடவுளே! அத்தகைய புத்திர பாக்கியம் பெற்றிருக்கும் ஏழைகள் வீட்டில் தான் எத்தகைய காட்சிகள்!
வயிற்றுக்கின்றி ஒட்டி உலர்ந்து போயிருக்கும் தன் தாயின் ஸ்தானத்தைப் பசியால் வாடும் குழந்தை பற்றி இழுக்கும்; தாயாருக்கோ வலி தாங்கமுடியாமற் போகும். குழந்தையோ பசிக்கு ஒரு துளிப் பாலைக்கூடக் காணாமல் முக்கி முனகும் - தாயார் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் பொறுத்துப் பார்ப்பாள்; அவளுக்கு ஆத்திரம் மேலிட்டு விடும் - ‘சீ! இதென்ன பேயோ, பிசாசோ தெரியவில்லையே? என்னமாய்ப் பிடுங்கித் தொலைக் கிறது!’ என்று குழந்தையைத் தூக்கிக் கீழே தொப்பென்று போடுவாள். அது ‘அம்மம்மா,ங்கங்கா என்று தாயாரைத் தாஜா செய்யப் பார்க்கும். ‘அம்மாவுமாச்சு, குட்டியுமாச்சு’ என்று அவள் வாசலைப் பார்த்து நடையைக் கட்டிவிடுவாள்!
அப்பா வருவார்; அழுது கொண்டிருக்கும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே போவார்; ஏதாவது தின்பண்டம் வாங்கிக் கொடுத்துச் சமாதானம் செய்வதற்காக மடியைத் தடவிப் பார்ப்பார் - செல்லாத காசுக்கூட இராது; தான் ஏமாற்றமடைவதோடு, குழந்தையையும் ஏமாற்றமடையச் செய்வார் - அது ‘குவா குவா, என்று கத்தும், பசியால்; அந்தச் சமயம் அதற்கு வேண்டியது பால் என்று அறிந்தோ அறியாமலோ, ‘“நாயைப் பார்த்தியா, பூனையைப் பார்த்தியா!” என்று வேடிக்கை காட்டிக்கொண்டே வீடு திரும்புவார்; அதன் கத்தல் உச்ச நிலையை அடையும் - கடைசியில் என்ன? அப்பாவும் பொறுமையிழந்து விடுவார். வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அதைக் கீழே உட்கார வைத்து, “கத்தாதே, கத்தாதே!” என்று கன்னத்தில் அறைவார்; அதுவோ பின்னும் ‘வீல், வீல்’ என்று கத்தித் தொலைக்கும்.
இரவு எப்படியாவது ஒரணாவுக்கு அபின் வாங்கி அந்தக் குழந்தைக்குக் கொடுத்துத் தூங்க வைத்த பிறகு தான், தம்பதிகள் இருவரும் சற்று நேரம் இந்த அழகான உலகத்தை மறந்திருக்கச் சிறிது நேரமாவது தூங்குவார்கள்.
இந்த நிலையிலும் அந்தப் பரிதாபத்துக்குரியவர்கள், ‘குழந்தை இல்லை’ என்று சந்தோஷப்படுகிறார்களா? - இல்லை; வருத்தப்படுகிறார்கள். பணக்காரர்களைப்போல் தீர்த்த யாத்திரை செய்யாவிட்டாலும், வீட்டருகே இருக்கும் வேப்பமரத்தையாவது சுற்றிச் சுற்றி வருகிறார்கள்!
தாயுள்ளமும் பிள்ளைப் பாசமும் உலகத்தில் அவ்வாறு ஒன்றோடொன்று பிணைந்து கிடக்கின்றன.
நானும் என் தாயாரும் மட்டும் அதற்கு மாறுபட்டிருக்க முடியுமா? பிரிவின் துன்பத்தைப் ‘பிள்ளை மனம்’ ஒருவாறு சகித்துக்கொள்ளும்; ‘பெற்ற மனம்’ சகித்துக் கொள்ளுமா?
இந்த எண்ணத்துக்கேற்றாற்போல் என் தங்கை சித்ரா எனக்கு எழுதிய ஓரிரண்டு கடிதங்களிலும் நான் எத்தகைய ஆறுதலையும் காணவில்லை. அந்தக் கடிதங்களெல்லாம் ஒரே அழுகைதான்! - அம்மா படுத்த படுக்கையாகி விட்டார்களென்றும், தம்முணர்வை இழந்து தவியாய்த் தவிக்கிறார்களென்றும், அவர்களுடைய வாய் மட்டும் அடிக்கடி ‘செல்வம், செல்வம்’ என்று முனகிக் கொண்டிருக்கிறதென்றும், அந்த நிலையிலே அவர்களை விட்டுவிட்டுத் தன்னால் அப்படி இப்படி ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லையென்றும், அதனால்தான் ஆறு மாதங்களாகியும் என்னை ஒரு முறைகூட வந்து பார்க்க முடியவில்லையென்றும் அவள் எழுதியிருந்தாள். இன்னும் அம்மாவை வந்து பார்க்கும் டாக்டர்கள் நம்பிக்கையிழந்த முகத்துடன் காண்கிறார்கள் என்றும் அவள் தெரிவித்திருந்தாள்.
அவளால்தான் நம்மை வந்து பார்க்க முடியவில்லையே, நாமாவது பரோலில் சென்று அவளையும் அம்மாவையும் பார்த்து வருவோமே என்று எண்ணி, அதற்கு வேண்டிய முயற்சி செய்து பார்த்தேன்; அதிகாரிகள் அசையவில்லை!
✽✽✽
அன்றிரவு சிறைக்கென்றே உண்டான ஒரு பிரத்தியேக வாசனை என் மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது. அதை நான் அனுபவித்த வண்ணம் படுத்துக் கொண்டிருந்தேன். என்னதான் புரண்டு புரண்டு படுத்தாலும் எனக்கு வெகுநேரம் வரை தூக்கமே வரவில்லை. அதற்கு எத்தனையோ காரணங்கள் - மனமோ ஒரு நிலையில் இல்லாமலிருந்தது: தலையோ தலையணையில்லாமல் அதலபாதாளத்தில் விழுந்து கிடப்பது போலிருந்தது. அதிகாரிகளான அரக்கர்கள் அந்தத் தலைக்கு ஒரு செங்கல்லைக்கூடக் கொண்டுவந்து வைத்துக்கொள்ள என்னை அனுமதிக்கவில்லை - ஏன் தெரியுமா? கல்லைக் கொண்டு கைதி தற்கொலை செய்துகொண்டு விடுவானாம் - என்னக் கவலை, என்னக் கவலை! - அந்தக் கவலையில் அவர்களுக்குத் தூக்கம் பிடித்ததோ என்னவோ, எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை!
பொழுது புலரும் சமயம்; சிறிது கண்ணயர்ந்தேன். என்னுடைய கவலையை அதிகமாக்கக்கூடிய ஒரு கனவு:
அம்மா அசைவற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். மூச்சு மட்டும் லேசாக உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறது. நானும், சித்ராவும் கண்ணீர் வழியும் கண்களுடன் கட்டிலின் அருகே நின்று கொண்டிருக்கிறோம். அம்மாவின் கண்கள் அடிக்கடி இப்படியும் அப்படியுமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த நிலையில் அடிக்கொரு தரம் அவர்கள் வாசலை நோக்கி யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு யாரோ வரும் காலடி ஓசை கேட்கிறது. அம்மா கண் விழித்துப் பார்க்கிறார்கள். வருபவர் டாக்டர் என்று அறிந்ததும், அவர்கள் முகத்தில் ஏமாற்றத்தின் சாயை படர்கிறது. அவர் வந்து அம்மாவைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பேசாமல் போகிறார். சித்ரா ஓடோடியும் சென்று அவரை ஏதோ விசாரிக்கிறாள். அப்பொழுதும் அவர் பேசாமல் கையை விரித்துவிட்டுச் செல்கிறார்.
டாக்டரைப் போல் சித்ராவால் எந்த விதமான உணர்ச்சியையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவள் ‘கோ’வென்று கதறிக்கொண்டே அம்மாவின் அருகே வருகிறாள். அம்மா அவளைத் தன் அருகே உட்காரும்படி சமிக்ஞை காட்டுகிறார்கள். சித்ரா உட்கார்ந்ததும் தலையைக் கோதி விட்டுவிட்டு அவளுடைய வாயைப் பொத்துகிறார்கள்.
இந்தச் சமயத்தில் ‘டாக்ஸி’ ஒன்று வந்து எங்கள் வீட்டு வாசலில் நிற்கிறது. அதிலிருந்து ஒரு பெரிய மனிதர் இறங்கி வருகிறார். அவரைத் தொடர்ந்து ஜவ்வாது வாசனை வந்து ‘கட்டியம்’ கூறுகிறது - அறையில் பஞ்சகச்சம், மேலே சட்டை, அதற்கு மேலே கோட்டு, அதற்கும் மேலே ஜரிகைக்கரை மேலாடை - அது தரையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது!
தலையில் தலைப்பாகை, காதுகளில் வைரக் கடுக்கன்கள், மார்பில் கோட்டுப் பித்தானுக்கும் பைக்குமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கக் கடிகாரச் சங்கிலி, நெற்றியில் சந்தனப் பொட்டு - ஆகியவற்றுடன் இரு புறமும் அழகாக மீசையை முறுக்கி விட்டுக் கொண்டிருக்கும் அவர், கையில் அவசியமில்லாத தடியுடன் ஒரு தினுசாக உள்ளே வந்துகொண்டிருக்கிறார்.
அவர் வேறு யாருமல்ல; என் அம்மான் - அதாவது, என் தாயின் ஒரே சகோதரன். அந்தக் காலத்தில் தஞ்சை குற்றாலலிங்கம் என்றால் யாருக்கும் சாதாரணமாகத் தெரியும். அவர் பரம்பரைப் பணக்காரர் மட்டும் அல்ல; பிரபல மிராசுதாருங்கூட.
அவரைத்தான் என்னுடைய தாயார் அத்தனை நேரமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் போலிருக்கிறது. ஆனால் அந்த நிலையில் அவர்களைப் பார்த்து அவருடைய முகம் மட்டும் வாடவில்லை!
தம்மைக் கொஞ்சம் தூக்கி உட்கார வைக்கும்படி அம்மா எங்களுக்குச் சமிக்ஞை செய்கிறார்கள்; நாங்களும் அவ்வாறே செய்கிறோம்.
“என்ன அக்கா, என்ன உடம்புக்கு?” என்று சம்பிரதாயத்தை யொட்டி விசாரிக்கிறார் அவர்.
அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்களுக்குப் பதிலாக, “எல்லாம் இந்தப் புண்ணியவானால் வந்தது!” என்று என்னைச் சுட்டிக் காட்டி ஆரம்பிக்கிறாள் சித்ரா. நான் தலையைக் கீழே தொங்கவிட்டுக் கொள்கிறேன்.
“ஏன், இவன் என்ன செய்தான்?” என்று கேட்கிறார் அவர்.
“பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கவிழ்ப்பதற்காக இவர் சிறைக்குப் போனார்; அன்றைய தினத்திலிருந்து அம்மா இப்படிப் படுத்துவிட்டார்கள்.”
“என்ன, இருக்கிற காங்கிரஸ்காரப் பயல்கள் இருந்து ஊரைக் கெடுப்பது போதாதென்று இவனும் காங்கிரஸ்காரனாகி விட்டானா? - அப்பப்பா, இப்பொழுதெல்லாம் எங்கே பார்த்தாலும் இந்தத் தொல்லைதான்! அதற்கு முன்னெல்லாம் கிராமங்களில் வார்க்கிற கூழை வார்த்துக் கொடுக்கிற காசைக் கொடுத்தா எத்தனையோ நாய்கள், கழுதைகளாய் வந்து உழைக்கும். இப்பொழு தென்னடாவென்றால் நிலமே எனக்குத்தாண்டா சொந்தம், உனக்குச் சொந்தமில்லை, என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். எல்லாம் இந்தப் பயல்களாலே வந்ததுதான்! சரி சரி, அப்போதே நான் சொன்னேன்: பட்டணத்திலேயிருந்தால் இந்தத் தட்டிக் கேட்க ஆளில்லாத பிள்ளை சரிப்பட்டு வராது, நீ பேசாமல் என்னுடன் வந்துவிடு என்று - கேட்டால்தானே? - படட்டும், படட்டும்!” என்கிறார் அவர்.
அம்மா மெளனமாக அவருடைய கரத்தைப் பற்றுகிறார்கள்; அதில் என்னுடைய கையையும் சித்ராவின் கையையும் சேர்த்து வைத்து மூடுகிறார்கள் - அத்துடன் தம் கண்களையும் மூடிக்கொண்டு விடுகிறார்கள்.
அவ்வளவு தான்; “அம்மா, அம்மா!” என்று அலறிக் கொண்டே எழுந்து நான் வெளியே வந்தேன்.
“என்ன, அண்ணா?” என்று கேட்டுக் கொண்டே எனக்கு எதிரே வந்து நின்றாள் சித்ரா.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அதுகூட ஒரு வேளை கனவோ என்று எண்ணிக் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தேன் - சந்தேகமேயில்லை; எனக்கு எதிரே வந்து நின்றவள் சித்ராவேதான்!
என்னுடைய சிறைக் கோலத்தைக் கண்டு அவளுடைய கண்கள் கலங்கின. “இது என்ன கோலம்! இப்படியும் உங்கள் புத்தி போகுமா? எவ்வளவோ அழகாக வாழ்க்கை நடத்தவேண்டிய நீங்கள் இப்படிக் குட்டிச் சுவராய்ப் போய்விட்டீர்களே?” என்றாள் அவள்.
“அதுகிடக்கட்டும்; அம்மா எப்படியிருக்கிறார்கள்?”
வேறு எப்படியிருப்பார்கள்? - நாளை எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! - நீங்கள் பரோலிலாவது வந்து அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு வரக் கூடாதா?”
“உனக்கு முன்னால் நானே கேட்டுப் பார்த்தேன்; விடமாட்டேன் என்கிறார்கள்!”
“அதற்காக நீங்கள் அம்மாவைப் பார்க்காமலே இருந்துவிடப் போகிறீர்களா? - சொல்வதைக் கேளுங்கள், அண்ணா! - அவர்களை நீங்கள் இன்னொரு முறை பார்க்கப் போவதில்லை; அம்மாவுக்கும் அது தெரிந்து விட்டது. அதனால்தான் தஞ்சைக்குத் தந்தி கொடுத்துத் தம்பியை உடனே வரவழைக்கச் சொன்னார்கள். அவரும் வந்தார். இல்லையென்றால் அவர்களைத் தனியே விட்டுவிட்டு இன்று கூட என்னால் இங்கே வந்திருக்க முடியாது - இப்பொழுது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? - பேசாமல் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வெளியே வருகிறீர்களா, இல்லையா?
எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரிய வில்லை; தரையைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.
‘'பெற்ற தாய்க்கும் மேலாக உலகத்தில் வேறு என்ன இருக்கிறது அண்ணா? - ஒரு வரி, ஒரே ஒருவரி - ‘'என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று எழுதிக் கொடுத்து விடுங்கள்.’'
அதற்குமேல் ஒரு கணங்கூட நான் அங்கே நிற்க வில்லை - நின்றால் என் மனம் பேதலித்து விடும்போல் இருந்தது. சட்டென்று உள்ளே வந்து கதவை அடைத்துக் கொண்டு விட்டேன். அதற்குப்பிறகு 'அவள் என்ன ஆனாள்?’ என்றுகூட நான் கவனிக்கவில்லை; கவனிக்கவேயில்லை!
இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி கிட்டியது - ‘தாயார் மறைந்தார்கள்’ என்னும் செய்திதான் அது.