உள்ளடக்கத்துக்குச் செல்

கண் திறக்குமா/விரும்பிய விதமே!

விக்கிமூலம் இலிருந்து

13. விரும்பிய விதமே!

"இப்பொழுதுதான் ஊரிலிருந்து வந்தாற் போலிருக்கிறது!’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் பாரிஸ்டர் பரந்தாமன்.

‘'ஆமாம், ஸ்டேஷனிலிருந்து நேரே உங்களுடைய வீட்டுக்குத்தான் வந்திருந்தேன்; வெளியே போயிருப்பதாகச் சொன்னார்கள்’' என்றேன் நான்.

‘'ஒஹோ! இன்று நம் குருகுலத்தைக் கொஞ்சம் நேரில் சென்று கவனிக்க வேண்டியிருந்தது; அதற்குத்தான் போயிருந்தேன்.”

‘'அப்படி என்ன விசேஷம், அங்கே?’'

'‘அதைப் பற்றிக் கேள்விப்பட்ட பெரிய மனிதர் ஒருவர் பார்வையிட வந்திருக்கிறார்; அவரிடமிருந்து தர்மத்தின் பேரால் ஐயாயிரம், பத்தாயிரமாவது பிடுங்க வேண்டாமா?’

‘'அதற்கு?”

‘'இன்றாவது நம் குருகுலத்தில் வேலை செய்யும் பயல்கள்...’'

‘'குருகுலத்திலாவது, வேலை செய்யும் பயல்களாவது!’'

“சரி, படித்துக் கிழிக்கும் பயல்கள் என்றே வைத்துக் கொள். ‘தொழிற்கல்வி’ என்றால் என்ன ஐயா, அர்த்தம்? ஆதரவற்ற அனாதைச் சிறுவர்களிடம் சம்பளமில்லாமல் வேலை வாங்கிக்கொள்வது என்றுதானே அர்த்தம்?”

‘'இல்லை, அது உங்களுக்கென்று நீங்கள் தனியாகக் கற்பித்துக் கொண்டிருக்கும் அர்த்தம்!”

‘'ம், உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். வயிற்றுக்குச் சோறில்லாமல் யாராவது தொழிற் கல்வி கற்றுக் கொள்ள முடியுமா? என் வீட்டுச் சோற்றைப் போட்டு ஊரார் வீட்டுக் குழந்தைகளுக்குத் தொழிற் கல்வி கற்றுக் கொடுக்க எனக்கென்ன பைத்தியமா?”

'‘என்ன இருந்தாலும் “மனச் சாட்சி’ என்று ஒன்று இருக்கிறது, பாருங்கள்!’

‘'அட, நீ ஒண்ணு! மனச் சாட்சியாவது, மண்ணாங் கட்டியாவது? சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் அது சாட்சி சொல்லும் என்பது உனக்குத் தெரியாது போலிருக்கிறது! சொல்வதைக் கேள்; இன்றாவது அந்தப் பயல்கள் பெரிய மனிதரின் பேரைச் சொல்லிக் கொஞ்சம் நல்ல சாப்பாடாகச் சாப்பிடட்டுமே என்று சமையற்காரனைக் கூப்பிட்டு அவனிடம் ஐம்பது ரூபாயைக் கொடுக்க மனமில்லாமல் கொடுத்துவிட்டு வந்தேன்...’'

‘'மற்ற நாட்களில்?

‘'குருகுலத்துத் தோட்டத்தில் விளையும் கீரையோடு சரி ‘’

‘'இன்று?”

‘'முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், காரெட் டொமேட்டோ, பொட்டேட்டோ எல்லாம் இருக்கும்; நெய்யும் தயிரும் தண்ணீர் படுகிற பாடு படும். சாயந்திரம் வேறு பாதாம் ஹல்வா, பாஸந்தி, பஜ்ஜி, சொஜ்ஜி, டிக்ரி காப்பி எல்லாம் தயார் செய்யச் சொல்லியிருக்கிறேன் - பயல்களின் பாடு இன்று யோகந்தான்; தினந்தோறும் இப்படி யாராவது பெரிய மனிதர்கள் வரமாட்டார்களா என்று தவங்கிடப்பார்கள்! - அவர்களுக்கு மட்டுமென்ன எனக்குந்தான் இன்று யோகம். இன்றெல்லாம் செலவழிந்தால் என் கைப்பணம் நூறு ரூபாய்க்கு மேல் செலவழியாது; அதையும் பின்னால் குருகுலத்தின் செலவுக் கணக்கில் எழுதிவிடுவேன்; சாயந்திரம் அதற்குப்பதிலாக ஐயாயிரமோ, பத்தாயிரமோ அந்தப் பெரிய மனிதரிடமிருந்து வாங்கி என் சொந்தப் பைக்குள் போட்டுக் கொண்டு விடுவேன்!’

“அதை வரவுக் கணக்கில் எழுத மாட்டீர்களா?” “எழுதாமலென்ன, பேஷாய் எழுதுவேன். அதற்கேற்றாற்போல் செலவைக் காட்டுவதுதானா பிரமாதம்?’'

‘'அதற்குத்தான் என்னைப் போன்ற சிலர் இம்மாதிரிக் காரியங்களையெல்லாம் சர்க்காரே மேற்கொண்டு நடத்த வேண்டுமென்று சொல்கிறார்கள்.’'

‘'ஐயையோ! இவையெல்லாம் தர்ம காரியங்களாயிற்றே; உடல், பொருள், ஆவி மூன்றையும் தேசத்துக்குத் தத்தம் செய்துவிட்டு அரூபிகளாக நடமாடும் உத்தமோத்தமர்களின் சத் காரியங்களாயிற்றே! இவற்றைச்  சர்க்கார் மேற்கொள்ள வேண்டுமென்று சொல்ல உன் நாவு கூசவில்லையா?”

‘கூசும், கூசும்; இன்னுங் கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள் - கூசுவதும் கூசாததும் தெரியும்!”

‘'எத்தனை நாட்கள் பொறுத்திருந்தால் தான் என்ன? சத்தியத்தின் பிறப்பிடமாகவா சர்க்கார் மாறிவிடப் போகிறது?”

“ஏன் மாறாது, நிச்சயம் மாறும்!”

'‘அப்படியே மாறட்டும். அதனாலென்ன, உரிய பதவிகளில் உட்கார்ந்து, அடிக்கும் கொள்ளையைச் சம்பளக் கொள்ளையாக அடித்துவிட்டுப் போகிறோம்!’

‘'நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்குத் தேச விடுதலை, சமூக விடுதலையெல்லாம். ஏதோ ‘பிஸினஸ்’ மாதிரியல்லவா இருக்கிறது?’’

‘'சந்தேகமென்ன, ‘பிஸினஸ் தான்! இதை நான் ஒப்புக்கொள்கிறேன்; மற்றவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். இதுதான் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். இல்லையென்றால் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு வக்கீல் தொழிலை உதறித்தள்ளி விட்ட நான் எப்படிப் பிழைப்பதாம்?’'

‘'இப்படிப் பிழைப்பதற்கு நீங்கள் வக்கீல் தொழிலை விட்டிருக்க வேண்டாமே!'’

‘'அது தெரியாதா, எனக்கு? நீ பேசாமலிருந்து நான் சொல்வதைக் கேள்: ஏதோ உனக்கும் என்னுடைய அனுபவம் பயன்படட்டுமே என்றுதான் இவ்வளவு தூரம் சொல்கிறேன். வேண்டுமானால் நீயும் சாயந்திரம் என்னுடன் குருகுலத்துக்கு வந்துப் பாரேன்; ஆறு மணி வரை அவர் அதைச் சுற்றிப் பார்வையிடுவார்; அதற்குப் பின் தம் பேரால் ஹாலோ, அறையோ கட்டுவதற்குப் பணமும் கொடுத்துவிட்டுப் போவார். அத்துடன் எங்கள் ‘நாடகம்’ நிற்காது. அவருடைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டி நான் பேசுவேன்; என்னுடைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டி அவர் பேசுவார். வேலையற்ற நிருபர்கள் அந்த வைபவத்தை பற்றிப் பத்திரிகைகளுக்குப் பத்தி பத்தியாகச் செய்தி அனுப்புவார்கள். இப்படியாக எல்லாம் ஒரே வேடிக்கையாகயிருக்கும். வருகிறாயா, உன்னையும் அந்தப் பெரிய மனிதருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். பாவம், அவரும் ஒருவிதத்தில் என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர் தான். நான் ஒரு வழியில் பிரபலமடையப் பார்க்கிறேன்; அவர் இன்னொரு வழியில் பிரபலமடையப் பார்க்கிறார். என்னுடைய வழியில் பணத்துக்குச் செலவில்லை; அவருடைய வழியில் பணத்துக்குச் செலவிருக்கிறது. ஆனால் பலன் என்னவோ ஒன்று தான்! - என்ன செய்வது, மக்கள் ஆட்டு மந்தையாக இருக்கும்வரை நாம் வேட்டை நாய்களாக இருக்க வேண்டியதுதானே? - என்ன சொல்கிறாய், இப்படிப்பட்ட வைபவங்களில் கலந்து கொண்டால்தான் நீயும் சீக்கிரத்தில் பெரிய மனிதனாக முடியும்...’

‘ஐயோ, வேண்டாம். அதைவிடச் சின்ன மனிதனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்!”

‘அதற்கு நீ உன் தொழிலை விட்டு விட்டுச் சிறைக்குச் சென்றிருக்கக் கூடாது?!’

‘அதனாலென்ன?”

‘'எது எப்படியானாலும் இப்போது குடும்பம் நடந்தாக வேண்டுமே?”

‘குடும்பம் நடக்காமல் எங்கே போகிறது? எல்லோரும் அவரவர்கள் குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தால் தேசம் உருப்படுவது எப்படி?”

'‘முதலில் நீ எப்படி உருப்படப் போகிறாய், அதைச் சொல்?”

‘'நானா, இந்த வீட்டை விற்றுவிட்டு உருப்படப் போகிறேன்!”

“என்ன!’

“ஆமாம், இந்த வீட்டை விற்றுவிட்டுத்தான் உருப்படப் போகிறேன்!’'

‘'சரி, இதை விற்ற காசு உன்னை எத்தனை நாட்கள் தாங்கும்?”

‘'அதற்குப் பின் நான் சும்மாவா இருக்கப் போகிறேன்? அந்தக் காசைக் கொண்டு பத்திரிகை நடத்தப் போகிறேன்!”

“அப்பொழுதும் பணக்காரனின் தயவு வேண்டுமே?”

“அது வேறு பத்திரிகை என்னுடைய பத்திரிகையோ பாட்டாளிகளின் சுகத்திலும் துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்ளும்.’'

‘'நாசமாய்ப் போச்சு! பாட்டாளிகளுக்காவது, சுகமாவது? அவர்களுக்கும் துக்கந்தான்; உனக்கும் துக்கந்தான்! வீணாகக் கெட்டலையாதே, பெற்றோர் ஞாபகார்த்தமாக இருக்கும் இந்த ஒரு வீட்டையும் விற்று விட்டு நிற்கக் கூட நிழலின்றித் தவிக்காதே! இப்போதைக்குச் சித்ராவிடம் முந்நூறு ரூபாய் கொடுக்குமாறு நான் சாந்தினியிடம் சொல்லியிருக்கிறேன்; அதை வைத்துக் கொண்டு குறைந்த பட்சம் ஒரு மாத காலமாவது நீங்கள் கஷ்டமில்லாமல் காலந் தள்ளிவிடலாம். அதற்குள் நீ வேண்டுமானால் உன்னுடைய விருப்பம்போல் பத்திரிகைத் தொழிலில் இறங்கு. ஆனால் அதற்காக வீட்டை விற்காதே; அந்தத் தொழிலுக்கு வேண்டிய பணத்தை நான் தருகிறேன். என்ன இருந்தாலும் பணக்காரரை வெறுத்துக் கொண்டு உன்னால் பத்திரிகை நடத்த முடியாது. ஆனானப்பட்ட காந்தியே அவர்கள் அடியோடு ஒழிய வேண்டுமென்று சொல்லவில்லை; கோயில் தர்மகர்த்தாக்களைப்போல அந்தப் பெருச்சாளிகள் ஏழைகளுக்கும் தர்மகர்த்தாக்களாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார். அத்தகைய பெருச்சாளிகளில் ஒன்றாக நீயும் ஏன் இருக்கக்கூடாது? அவரே அப்படிச் சொல்லும்போது நீ மட்டும் அதற்கு மாறாக ஏன் நடக்க வேண்டும்?’

‘'சரி, அப்படியானால் எனக்கு உங்களால் எவ்வளவு பணம் தரமுடியும்?’'

‘'எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்!'’

'‘இது என்ன வேடிக்கையாயிருக்கிறதே! உங்களுக்கு ஏது அவ்வளவு பணம்?'’

தேசபந்து நிதிக்குப் பத்து லட்ச ரூபாய் சேர்ப்பதென்று முடிவு செய்திருக்கிறார்களே, அது உனக்குத் தெரியாதா?”

‘'தெரியாமலென்ன, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’

‘'சம்பந்தமில்லாவிட்டால் என்ன, நாம் சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்!”

‘'இது அக்கிரமமில்லையா?”

“எது அக்கிரமமில்லை? சொல்வதைக் கேள், தம்பி! நானோ இதுவரை தேசபந்து நிதிக்காக ரூபாய் ஐம்பதினாயிரம் வரை சேர்த்திருக்கிறேன், எல்லாம் எனக்காகக் கொடுத்தது தான்; ஸி.ஆர்.தாஸாக்காக யாரும் கொடுத்து விடவில்லை. அப்படிக் கொடுத்தவர்களில் சிலர் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? தன்னடக்கத்தால் அல்ல; வேறு யாராவது நிதிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தினால் தான்! அதிலும் இந்த இன்-கம்-டாக்ஸ் தொல்லை என்று ஒன்று இருக்கிறதே, அந்தத் தொல்லையை நிதியினால் ஓரளவு குறைத்துக் கொள்ளலாம். அதற்காகவே நல்ல வழியில் சம்பாதிப்பவர்கள் ஐந்தும் பத்துமாகக் கொடுத்தால், கெட்ட வழியில் சம்பாதிப்பவர்கள் ஐயாயிரம், பத்தாயிரமென்று கொடுக்கிறார்கள். அப்படியிருக்கும் போது நாம் ஏன் அக்கிரமத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? நல்ல வழியில் சம்பாதித்துக் கொடுத்தவர்களின் பணத்தை வேண்டுமானால் ஸி.ஆர். தாஸ் நிதிக்கே அனுப்பி விடுவோம்; கெட்ட வழியில் சம்பாதித்துக் கொடுத்தவர்களின் பணத்தை...’'

என்னால் தாங்க முடியவில்லை; எழுந்து கைகூப்பிய வண்ணம், “வணக்கம்; என்னை இத்துடன் விட்டு விடுங்கள்!’ என்று எழுந்தேன்.

‘ம், நீ எப்படித்தான் பிழைக்கப் போகிறாயோ!’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சென்றார் அவர்.

***

அன்று மாலை; நான் விட்டாலும் பாரிஸ்டர் பரந்தாமன் என்னை விடுவதாயில்லை. ஆகவே வேறு வழியின்றி அவருடன் திலகர் குருகுலத்துக்குச் சென்றேன். அதைப் பார்வையிட வந்திருந்த பெரிய மனிதருக்குப் பரந்தாமனார் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்ட பிறகு, எல்லோருமாகச் சேர்ந்து குருகுலத்தைச் சுற்றி வந்தோம். பாரிஸ்டர் பரந்தாமன் அதுவரை தாம் அதற்காகச் செய்திருக்கும் தன்னலமற்ற சேவையைப் பற்றித் தன்னடக்கத்துடன் வந்திருந்த பெரிய மனிதரிடம் சொல்லிக் கொண்டே வந்தார். அவற்றைக் கேட்டுப் பாரிஸ்டர் எதிர்பார்த்தபடி அவரும் பிரமித்துப் போனார் - ஆம்! உண்மைக்கு வசப்படுவதைக் காட்டிலும் மனிதன் பொய்க்கு அதிகமாக வசப்பட்டு விடுகிறானல்லவா?

இந்த நிலையில் குருகுலம் முழுவதையும் பார்வையிட்ட பிறகு, தமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பெரிய மனிதர் பேசினார். குருகுலச் சிறுவர் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கேட்கும் விஷயத்தைப் பகுத்தறிவுக் கண் கொண்டு பார்க்கும் சக்தி அவர்களுக்கு இல்லாவிட்டாலும், எடுத்ததற்கெல்லாம் கரகோஷம் செய்யும் சக்தி மட்டும் அவர்களுக்கு இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், பாரிஸ்டர் பரந்தாமனைப் பற்றி வந்திருந்தவர் ஏதாவது சொல்லும்வரை கூட அவர்கள் காத்திருக்கவில்லை; அவருடைய பெயரை எடுக்கும்போதே கை தட்ட ஆரம்பித்துவிட்டார்கள் - இப்படி ஒரு முறை இரு முறையல்ல; பிரசங்கம் முடியும் வரை அவருடைய பெயர் எத்தனை இடங்களில் வந்ததோ அத்தனை இடங்களிலும் அவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள் - எல்லாம் ஏற்கெனவே நடத்தியிருந்த ஒத்திகையின் விளைவு போலும்!

திருவாளர் பரந்தாமனைப் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்வதற்காக எழுந்த பெரிய மனிதர் இருநூறு வார்த்தைகளுக்கு மேல் பேசிக் கொண்டே போனார். ‘உலகத்தில் பலனை எதிர்பாராமல் கருமத்தைச் செய்யும் மிகச் சில கர்மயோகிகளில் பாரிஸ்டர் பரந்தாமன் குறிப்பிடத்தக்க ஒருவர்!’ என்று அவர் பெருமிதத்துடன் உறுமினார். சர்க்கார் ஆதரவில் நடைபெறும் கல்லூரிகளைப் பகிஷ்கரித்துவிட்டு இம்மாதிரிக் குருகுலங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர் வற்புறுத்தினார். நடுநடுவே தம்மைப்பற்றியும் தர்ம காரியங்களில் தமக்குள்ள சிரத்தையைப் பற்றியும், சற்றே குறிப்பிட அவர் மறந்துவிடவில்லை!

அடுத்தாற்போல் என்னையும் ஏதாவது பேசுமாறு கேட்டுக்கொண்டார் பரந்தாமனார்.

‘'சர்வகலாசாலை அளிக்கும் யோக்கியதாம்சங்களுக்குத் தக்கபடிச் சர்க்கார் உத்தியோகம் கிடைக்கும் வரை இம்மாதிரிக் குருகுலங்களால் மாணவர்களுக்கு அவ்வளவாக நன்மையில்லை என்பது என் அபிப்பிராயம்; அதைப்பற்றி வேண்டுமானால் பேசட்டுமா?’’ என்றேன் நான்.

‘'கடைசியில் கூட்டத்தைக் கசப்புடன் முடிக்க நான் விரும்பவில்லை; வந்தனோபசாரம் கூறி இனிப்புடன் முடித்து விடுகிறேன்!'’ என்றார் அவர். ‘ அப்படியே செய்யுங்கள்!’' என்று சொல்லிவிட்டு நான் பேசாமல் இருந்துவிட்டேன்.

பாரிஸ்டர் பரந்தாமனார் எழுந்து பதிலுக்குப் பதில் கணக்கைத் தீர்த்துக் கொள்வது போலப் பெரிய மனிதரின் உதார குணத்தைப் பற்றி வானளாவப் புகழ்ந்தார். கடைசியில், வந்திருந்தவர்களுக்கெல்லாம் தம் வந்தனத்தைத் தெரிவித்துக்கொண்டு கூட்டத்தைக் கசப்பின்றி முடித்தார்.

அவ்வளவுதான்; கையில் தயாராக வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் செக்கைப் பரந்தாமனாரிடம் நீட்டினார் பெரிய மனிதர். அகமும் முகமும் ஒருங்கே மலர அதைப் பெற்றுக்கொண்டு, ‘'தங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை என்னைப் போன்றவர்கள் இன்னும் எத்தனை தர்ம  காரியங்களில் வேண்டுமானாலும் துணிந்து இறங்கலாம்!’ என்றார் பாரிஸ்டர்.

அவர் சொன்னதும் ஒருவிதத்தில் உண்மைதானே?

***

கூட்டம் கலைந்த பிறகு மூவரும் பேசிக்கொண்டே குருகுலத்தின் வாயிலை அடைந்தோம். எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அதை நிவர்த்தி செய்துகொள்வதற்காக, ‘'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’' என்று பெரிய மனிதரைக் கேட்டேன்.

‘'மூன்று குழந்தைகள். அவர்களில் இருவர் ஆண் குழந்தைகள், ஒன்று பெண் குழந்தை’' என்றார் அவர்.

‘'சரி; அவர்கள் எங்கே படிக்கிறார்கள்?’'

'‘ஒருவன் பிரஸிடென்ஸி காலேஜில் படிக்கிறான்; இன்னொருவன் லயோலா காலேஜில் படிக்கிறான்; பெண் குழந்தை க்வீன்மேரீஸ் காலேஜில் படிக்கிறது - ஏன், எதற்காகக் கேட்கிறீர்கள்?’'

‘'இல்லை, பாரிஸ்டர் பரந்தாமனுக்குத்தான் சாந்தினியைத் தவிர வேறு குழந்தைகள் எதுவுமில்லை. அதனால் தம் குழந்தைகளை முதலில் குருகுல வாசம் செய்ய விட்டுப் பிறருக்கு வழி காட்ட அவரால் முடியாமலிருக்கிறது. நீங்களாவது உங்கள் குழந்தைகளை இந்தக் குருகுலத்தில் விட்டுப் பிறருக்கு வழி காட்டியிருக்கலாமே?’ என்றேன் நான்.

அவ்வளவுதான் - அவருடைய மீசை துடித்தது; கண்கள் ஜிவ்வென்று சிவந்தன. கையிலிருந்த ஊன்று கோலை அப்படியும் இப்படியுமாக ஆட்டிய வண்ணம், ‘'ஏதேது, இவன் பெரிய அதிகப்பிரசங்கியாயிருப்பான் போலிருக்கிறதே; இவனைப் போன்றவன்களிடத்திலெல்லாம் நீங்கள் சிநேகமே வைத்துக்கொள்ளக் கூடாது, ஸார்! மரியாதை தெரியாத பயல்கள்; பண்பாடு தெரியாத பயல்கள்!’ என்று அவர் மரியாதையையும், பண்பாட்டை யும் சற்றே மறந்து என்னைத் தீர்த்துக் கட்ட ஆரம்பித்து விட்டார்.

‘'மன்னிக்க வேண்டும்; இவ்வளவு சீக்கிரத்தில் உங்களுடைய வேஷத்தை நீங்கள் கலைத்துவிடுவீர்கள் என்று நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை!’ என்றேன் நான்.

பாவம், பரந்தாமனார் என்ன செய்வார்? மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவியாய்த் தவித்தார்!

அதற்குள் காரை நெருங்கினார் அவர். டிரைவரைக் காணோம்.

‘'முனிசாமி! ஏய், முனிசாமி!'’

பதில் இல்லை; சற்றுத் துரத்தில் அவன் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கருகே ஒரு சிறுமி தலைவிரி கோலத்துடன் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் ஏனோ கலங்கியிருந்தன. அவனிடம் அவள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த முனிசாமியின் காதிலோ பெரிய மனிதரின் குரல் விழவில்லை!

இந்த நிலையில் தம்முடைய காரியம் முடிந்து விட்டதால் பரந்தாமனார் அவரைச் சீக்கிரமாக வண்டியில் ஏற்றி அனுப்பிவிட நினைத்தாரோ என்னமோ, ‘பாம், பாம்’ என்று ஹாரன் அடிக்க ஆரம்பித்து விட்டார். அதைக் கேட்டதும் அவன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

“ஏண்டா, நாயே! உனக்காக நான் காத்திருப்பதா, எனக்காக நீ காத்திருப்பதா? - ஏறு வண்டியில்!” என்று அதட்டினார் பெரிய மனிதர்.

“எசமான்! ஒரு சேதிங்க; குழந்தை என்னைத் தேடிகிட்டு வந்திருக்கு. வீட்டிலே இடுப்பு வலியாம்; பிரசவ ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டுப் போகப் பத்து ரூபாயாச்சும் கேட்டு வாங்கிகிட்டு வரச்சொன்னாங்களாம். இந்தச் சமயத்திலே நீங்கதான் கொடுத்து உதவணும்; சம்பளத்திலே தள்ளிடறேனுங்க!” என்றான் அவன் கையைப் பிசைந்துகொண்டே.

“என்னை என்ன, லேவாதேவிக்காரன்னு நினைச்சுட்டியா? - சீ, ஏறு வண்டியிலே!” என்று அவன் கழுத்தைப் பிடித்து வண்டிக்குள் தள்ளினார் அவர்.

கார் கிளம்பிற்று. “அப்பா, அப்பா!” என்று கதறிக் கொண்டே அதைத் தொடர்ந்து ஓடினாள் சிறுமி.

பாவம், அவளை இதயம் என்று ஒன்று படைத்திருந்த பெரிய மனிதரும் பொருட்படுத்தவில்லை; இதயம் என்று ஒன்று படைத்திராத காரும் பொருட்படுத்தவில்லை. முனிசாமி மட்டும் கலங்கிய கண்களுடன் திரும்பி, “நீ போம்மா, நான் இதோ வந்துட்றேன்னு சொல்லு!” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.


இந்தக் காட்சி என்னைத் தொட்டது; என் இதயத்தைச் சுட்டது. சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பார்த்தேன்; பாழும் பணம் என்னைக் கைவிடவில்லை; ‘நானும் மனிதன்’ என்று காட்டிக்கொள்ள ஒரே ஒரு ஐந்து ரூபாய் நோட்டு அதில் இருந்தது. அதை எடுத்து அந்தச் சிறுமியிடம் கொடுத்தேன்; அவள் அதைப் பெற்றுக்கொண்டு ஓடினாள், நான் திரும்பினேன்; அதற்குள் தமது காரில் ஏறி உட்கார்ந்து என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பரந்தாமனார், “என்னால் உனக்கு இன்று ஐந்து ரூபாய் நஷ்டம்; அப்படித்தானே?” என்றார் வழக்கம்போல்.

“அது எப்படி நஷ்டமாகும்? தெருவிலா வீசி எறிந்து விட்டேன்?” என்றேன், நானும் ஏறி அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே.

“சந்தேகமென்ன, தெருவில் வீசி எறிந்த மாதிரி தான்! அதனால் உனக்கு ஏதாவது லாபம் உண்டா?”

“ஐயா! எதைச் செய்தாலும் நீங்கள் லாபத்தோடு செய்துகொண்டு போங்கள்; எனக்கு லாபமும் வேண்டாம்; நஷ்டமும் வேண்டாம் - மனிதனாக மதித்து இரங்கும் மனம் இருந்தால் போதும்!” என்றேன் நான்.

“ம், நான் சொன்னால் நீ கேட்கவா போகிறாய்? சொல்பவர்கள் சொன்னால் அவசியம் கேட்பாய்!” என்றார் அவர் பெருமூச்சு விட்டுக்கொண்டே.

“ஒரு நாளுமில்லை. யார் என்ன சொன்னாலும் சரி, எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் எடுத்துக் கொள்வேன்!” என்றேன் நான்.

“உண்மையாகவா!”

“ஆமாம்.”

“எங்கே, இன்னொரு முறை சொல், பார்ப்போம்?”

“எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன் - எனக்கு எது சரி என்று படுகிறதோ, அதைத்தான் எடுத்துக் கொள்வேன்!”

அவர் சிரித்துவிட்டு, “சாந்தினி சொன்னால் கூடவா கேட்கமாட்டாய்!” என்றார் விஷமத்தனத்துடன்.

ஒரு கணம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை; மறு கணம் என்னை நானே ஒருவாறு சமாளித்துக்கொண்டு,  ‘'சாந்தினி சொன்னால் நான் ஏன் கேட்க வேண்டுமாம்?” என்றேன்.

‘'என்ன மாப்பிள்ளை ஸார், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்துக்கொண்டீரா? எல்லாம் தெரியும் ஸார், தெரியும். வேண்டுமானால் நீரே இந்த ‘டயரி"களைப் பாரும்!” என்று அவர் இரண்டு டயரிகளை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

வியப்பும் திகைப்பும் ஒருங்கே அடைந்தவனாய் அவற்றை நான் பிரித்துப் பார்த்தேன். பின் வரும் வரிகள் என் கண்களில் பட்டுத் தெறித்தன:

.... காந்திஜியின் விடுதலையைக் கோரி எழுந்த கிளர்ச்சியில் அவர் பங்கெடுத்துக் கொண்டதை நினைக்க நினைக்க எனக்கு எவ்வளவோ பெருமையாயிருக்கிறது; அவரைப் பற்றிப் பிறர் பேசுவதைக் கேட்கக் கேட்க என்னை என்னவோ செய்கிறது. அதற்கு முன் அப்பா வுடன் அவர் போட்ட சண்டையைத்தான் என்னால் எப்படி மறக்க முடியும்?....

- - - - - இன்று ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன், அப்பாவுக்குத் தெரியாமல்தான். என்ன துணிச்சல் எனக்கு, இப்பொழுதுதான் அவரை நான் முதன்முறையாகப் பார்க்கிறேனாக்கும்?

நான் அவரைப் பார்த்தேன்; அவர் என்னைப் பார்த்தார். முதலில் நானா பேசுவேன்? அதுதான் இல்லை; அவரே பேசினார். அதிகமாக ஒன்றும் பேசவில்லை; ‘சாந்தினி, நீயா!’ என்று எண்ணி ஒரே ஒரு வார்த்தைதான் பேசினார். நான் மட்டும் அதிகமாகப் பேசிவிடுவேனா? ஊஹாம்; என்னை மறவாதீர்!’ என்று பதிலுக்கு நானும் எண்ணி ஒரே ஒரு வார்த்தை பேசிவிட்டு எடுத்தேன் ஒட்டம்’...

... பாவம், தாயாரின் தகனக் கிரியையின் போதுகூட அருகிலிருக்கும் பாக்கியம் அவருக்குக் கிட்டவில்லை; பாழும் சர்க்கார்தான் அவரை பரோலில் விடக்கூட மறுத்து விட்டார்களாமே!....

... இந்தச் சித்ராவுக்கு அவர்மேல் ஏன்தான் இவ்வளவு ஆத்திரமோ தெரியவில்லை. ம், என்ன இருந்தாலும் பெண்; அவளுக்காக நாம் இரங்கத்தான் வேண்டும்.

சிநேகம் செய்து கொள்வதாயிருந்தாலும் சரி, சண்டை பிடித்துக் கொள்வதாயிருந்தாலும் சரி - பெண்களைத்தான் யாரும் மிஞ்ச முடியாதே!... -

  • - - - - அப்பாடா! மூன்று வருடங்களுக்குப் பின் அவர் இன்றுதான் எங்கள் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். மனங்கனிந்து அவரை வரவேற்கச் சமூகம் என்னை அனுமதிக்க மாட்டேன் என்கிறது. என்ன செய்வேன், கழுத்தில் தாலி ஏறினால்தான் அந்த அனுமதி எனக்குக் கிடைக்கும் போலும்?...

.... அடாடா, கல்யாணமாவதற்கு முன்னால் இந்த ஆண்கள் எவ்வளவு நல்லவர்களாயிருக்கிறார்கள்! சொன்னது சொன்னபடி வந்துவிட்டாரே?

இருவரும் கடற்கரைக்குச் சென்றோம். அதுவரை என்ன வெல்லாமோ பேசவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நான், அவரைக் கண்டதும் என்ன பேசுவதென்றே தெரியாமல் விழித்தேன். அதனாலென்ன, எங்கள் கண்கள்தான் பேச வேண்டியவற்றை யெல்லாம் பேசி விட்டனவே!

அடுத்தாற்போல் அங்கிருந்த ஒரு படகின் மறைவில் சற்றே விலகி உட்கார்ந்தேன் நான்; சற்றேநெருங்கி உட்கார்ந்தார் அவர். நான் விலக அவர் நெருங்க, அவர் நெருங்க, நான் விலக, நான் விலக அவர் நெருங்க, அவர்நெருங்க நான்விலக, இருவரும் கடைசியாக வாய் விட்டுச் சிரித்து விட்டோம். நாங்கள் சிரித்தால் இந்த நீலக்கடல் அலைகளுக்கு என்ன வந்ததாம்? அவை ஏன் எங்கள் நெஞ்சின் அலைகளோடு மோதிச் சிரிக்கவேண்டுமாம்?.....

இதற்குமேல் டயரிகளைப் பார்க்க நான் விரும்ப வில்லை ; மூடி வைத்துவிட்டு முகத்தில் அசடு வழியப் பரந்தாமனாரைப் பார்த்தேன். "இப்போது சொல்லும்! சாந்தினி சொன்னபடி நீர் நடந்தது உண்மையா, இல்லையா?" என்றார் அவர். என்றைக்கும் இல்லாத 'உம்'மை அன்று நான் எதிர்பாராத விதமாகப் போட்டு.

"உண்மைதான்; என்னை மன்னியுங்கள்!" என்றேன் நான், தயங்கிய வண்ணம்.

அவர் என்னைத் தட்டிக்கொடுத்தபடி, "சரி, உம்மை நான் மன்னிக்கிறேன்; சாந்தினியை யார் மன்னிப்பது?" என்று கேட்டார்.

"நீங்கள் தான் மன்னிக்கவேண்டும்!"

"அதுதான் முடியாது! தவறுக்கேற்ற தண்டனையை இருவரும் அனுபவித்தே தீரவேண்டும்; இறங்கும் கீழே!" என்றார் அவர்.

அப்பொழுதுதான் அவருடைய வீட்டு வாயிற்படியில் கார் வந்து நின்றிருப்பது எனக்குத் தெரிந்தது; பரபரப்புடன் கீழே இறங்கினேன்.

என் கரத்தை அழுத்திப் பற்றியபடி, "சாந்தினி, சாந்தினி!'" என்று அவர் இரைந்தார்.

"என்ன, அப்பா!" என்று கேட்டுக் கொண்டே அவள் வெளியே வந்தாள்.

"இப்பொழுது சொல், இவரும் நீயும் சேர்ந்து என்னைத் தாத்தாவாக்கச் சதி செய்தது உண்மைதானே!" என்றார் அவர்.

அவ்வளவுதான். என்னை அவள் ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை; "போங்கள், அப்பா!" என்று சொல்லிக் கொண்டே ஓடிவிட்டாள்.

"சரி, முடிந்தது விசாரணை! தண்டனையை ஆயுள் தண்டனையாகவே ஏற்றுக்கொள்ள நீர் தயாரா?" என்றார் அவர் என்னை நோக்கி.

"எங்கள் சதிக்கு நீங்களும் உடைந்தையாயிருந்தால் அவசியம் ஏற்றுக்கொள்கிறேன்!" என்றேன் நான்.