கண் திறக்குமா/“சாந்தினி நீயா!”

விக்கிமூலம் இலிருந்து

2. “சாந்தினி நீயா!”

ழந்த ஒளியை என் கண்கள் மீண்டும் பெற்றபோது நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். என் உடல் முழுவதும் ஒரே ‘பாண்டேஜ்’ மயமாக இருந்தது; சுற்றுமுற்றும் பார்த்தேன். என்னுடைய கோலத்தில் இன்னும் பலர் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் வேதனையின் அளவை விதம் விதமாக முனகி வெளியிட்டுக் கொண்டிருந்தனர். “ஐயய்யோ!” என்று அலறுவான் ஒருவன்; ‘அம்மம்மா’ என்று துடிப்பான் ஒருவன்; ‘அப்பப்பா!’ என்று பதைப்பான் ஒருவன்; ‘ஆ, ஊ’ என்று அப்படியும் இப்படியுமாகப் புரண்டு புரண்டு படுத்துத் தவிப்பான் ஒருவன், வாய்விட்டு ஏதும் முனகாமல், “ஊம்... ஊம்” என்று ‘ஊங்’ கொட்டுவதோடு நிற்பவர்களும் அங்கே இல்லாமற் போகவில்லை. ஆனால் அவர்களுக்கெல்லாம் அவ்வளவாக வேதனையில்லை என்று சொல்லிவிட முடியாது, இயற்கையான சங்கோசம் அதற்குக் காரணமாயிருந்தாலும் இருக்கலாமல்லவா?

அங்குமிங்குமாக நடமாடிக்கொண்டிருந்த நர்சுகளோ, எங்கள் வேதனையைக் கொஞ்சமாவது உணரவில்லை. அவர்களுக்கு இயற்கையிலேயே இதயமில்லையோ - இல்லை, அதைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டுத்தான் வேலைக்கு வருகிறார்களோ - தெரியாது. அவர்கள் பாட்டுக்கு ஆடி அசைந்து நடப்பதும், அடிக்கடி தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரிப்பதுமாகக் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தனர். இடையிடையே எங்கள் முனகல் சத்தம் அவர்களுடைய பேச்சுக்கு இடையூறாக இருந்திருக்க வேண்டும். அதற்காகத்தானோ என்னவோ, “உஸ்... ஸைலன்ஸ்!” என்றுவேறு அவர்கள் அடிக்கடி உதட்டின்மேல் விரலை வைத்துக் கூறிக்கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது அந்தப் ‘பெண் தெய்வங்க’ளின்மேல் எனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. அவர்கள் அத்தனை பேரையும் நையப் புடைத்து, அவர்களையும் எங்களைப்போலவே அலறவைத்து, “உஸ், ஸைலன்ஸ்!” என்று நாமும் உதட்டின்மேல் விரலை வைத்துச் சொன்னால் என்ன என்று கூடத் தோன்றிற்று!

ஏனெனில் தங்களுக்குமேல் உயர்ந்த பதவி வகிக்கும் டாக்டர்களுக்குக்கூட அவர்கள் கொஞ்சமாவது அஞ்சியதாகத் தெரியவில்லை. அந்த டாக்டர்களும் தங்கள் கடமையை அவ்வளவு தூரம் உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை. பரஸ்பரம் பல்லை இளிப்பதன் மூலம் அவர்களில் பலர் தாங்கள் இருப்பது ஆஸ்பத்திரி என்பதையே அடியோடு மறந்துவிட்டிருந்தனர். தங்களுடைய நேரத்தில் ஒரு நோயாளிக்காகச் செலவழிப்பது ஒரு நிமிஷம் என்றால், ஒரு நர்சுடன் பேசுவதற்கு அவர்கள் ஒரு மணி நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருந்தனர்!

இவை மட்டுமல்ல; இன்னொரு காட்சியும் என்னைத் திகைக்க வைத்தது. எத்தனையோ பேருடைய வேதனையைக் கொஞ்சங்கூடக் கவனிக்காமலிருந்த டாக்டர்களும் நர்சுகளும், ஒரு சிலரை மட்டும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் யாராவது ஒருவர் ‘உம்’ என்றால் போதும், ஓடோடியும் வருவார்கள். அந்த மனிதரோ அவர்களை ஆச்சரியத்துடன் பார்ப்பார். “என்னவேணும், உங்களுக்கு?” என்று அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கேட்பார்கள். அந்த மனிதருக்கு என்ன சொல்வதென்றே புரியாது; “ஒன்றுமில்லையே!” என்று திரும்பிப் படுத்துக் கொள்வார். - வந்தவர்கள் அத்தனை பேரும் ஏமாந்து திரும்புவார்கள்.!

ஒருமுறை இருமுறையல்ல, இப்படி எத்தனையோ முறை - இதைப்பற்றிப் பின்னால் விசாரித்தபோது, அந்த ஒரு சிலர் பெரும் பணக்காரர்களாகவும், பெரிய பெரிய மில் முதலாளிகளாகவும், 'கிருஷ்ண லீலை'யின் காரணமாக ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களாகவும் இருந்தார்கள்.

பணம் நுழையாத இடமோ, அதனால் சாதிக்க முடியாத காரியமோ உலகில் என்னதான் இருக்கிறது?

இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது, ‘என்ன, மிஸ்டர் செல்வம்’ என்று ஒரு பழகிய குரல் - ஏற்கெனவே பரிச்சயமான குரல் - என் காதில் விழுந்தது; திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். கையில் பத்திரிகையுடன் என் பள்ளிக்கூடத்து நண்பனான பாலு நின்றுகொண்டிருந்தான்.

நின்றவன் சும்மா நிற்கவில்லை; என் கட்டிலை ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு நின்றான் - அவன் தலையிலும் காலிலும் கூடப் பலமான அடி!

‘'என்ன பாலு, நீயும்...'’

“ஆமாம், உனக்கு எதிர்த்தாற்போல் தான் நானும் இத்தனை நேரம் படுத்துக்கொண்டிருந்தேன்!”

“அப்படியா? நான் பார்க்கவேயில்லையே!”

'‘எப்படிப் பார்க்கமுடியும்? இன்றுதானே நீ இந்த உலகத்துக்கு வந்திருக்கிறாய்?’’

‘'ஒஹோ! அதற்குள் நீ படுக்கையை விட்டு எழுந்து விட்டாயே? டாக்டர்கள் பார்த்தால்...’'

'‘ம்... நம்மையெல்லாம் பார்க்க அவர்களுக்கு எங்கே நேரமிருக்கிறது? நீ இந்தப் பத்திரிகையைப் பார்த்தாயா?”

“என்ன விசேஷம்? "சர்க்கார் அறிக்கை விட்டிருக்கிறார்கள்!"

'என்னவாம்!"

"ஊரெல்லாம் என்னவோ பிரமாதப்படுகிறதே, சர்க்கார் என்ன சொல்கிறார்கள். தெரியுமா? பொதுஜன நன்மைக்காகச் சட்டத்தையும் அமைதியையும் காப்பது தங்கள் கடமையென்றுக் கருதி, முதலில் நம்மைக் கலைந்து போகும்படி அவர்கள் கேட்டுக்கொண்டார்களாம். கலைய மறுக்கவே, துரதிர்ஷ்டவசமாய் லேசாகத் தடியடிப் பிரயோகம் செய்து கலைக்க நேர்ந்துவிட்டதாம்; அதற்காக அவர்கள் மிகமிக வருந்துகிறார்களாம்!"

"அட, பாவிகளா! லேசாகத் தடியடிப் பிரயோகம் செய்ததின் பலன்தானா, நீ நிற்க முடியாமல் தவிப்பதும், நான் எழுந்திருக்க முடியாமல் விழிப்பதும்?”

"நாமாவது தேவலையே! சம்பவம் நடந்து இன்றுடன் மூன்று நாட்களாகிவிட்டன - இன்னும் எத்தனையோ பேர் இந்த உலகத்தை எட்டிக்கூடப் பார்க்காமல் இருக்கின்றனர். மற்றும் சிலர், இந்த உலகமே வேண்டாம், என்று மறு உலகத்திற்குப் போய்விட்டனர். தப்பித் தவறி, இதுவரை உயிருடன் இருப்பவர்களுக்கும் மொத்தம் எத்தனை இடங்களில் எலும்புகள் முறிந்திருக்கின்றனவாம், தெரியுமா? ஐம்பது இடங்களில், அறுபது இடங்களில்!"

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்!”

"நான் சொல்லவில்லை; டாக்டர்களின் "ரிப்போர்ட்” சொல்கிறது.!”

"ம்... இதற்குத்தான் சர்க்கார் பாஷையில் ‘லேசான தடியடிப் பிரயோகம்’ என்று பெயர்போலும்!”

“ஆமாம், எப்படியிருக்கிறது கதை?" 'ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது; நீ போய்ப் படுத்துக்கொள்!" என்று சொல்லிவிட்டு, நான் கால்களை நீட்டிப் படுத்தேன். 

“என் கண்ணே! இப்படிக்கூட என் தலையில் கல்லைத் தூக்கிப் போடலாமா?" என்று கதறிக் கொண்டே என் தாயார் வந்தார்கள்.

அவர்களைத் தொடர்ந்து என் தங்கை சித்ராவும் வந்து கொண்டிருந்தாள்.

"நேற்றுக்கூட இவர்களை நான் இங்கே பார்த்தேன்; நர்சுகள் உன்னைப் பார்க்கவிடாமல் இவர்களை விரட்டி விட்டார்கள்!” என்று சொல்லிக்கொண்டே, பாலு தன் படுக்கைக்குச் சென்றுவிட்டான்.

அம்மாவுடன் சேர்ந்து அழ எனக்கு விருப்பமில்லை. எனவே, வழக்கமான தோரணையிலேயே ஆரம்பித்தேன். "நான் என்ன செய்வேன் அம்மா? வெள்ளைக்காரன் தலையில் கல்லைத் தூக்கிப் போடவேண்டுமென்பதுதான் என் ஆசை. அந்தப் பாழுங்கல் தவறி உன் தலையிலே விழுந்துவிட்டதாக்கும்?"

'இது என்ன, அண்ணா? எந்தச் சமயத்தில் யாரிடம் எப்படிப் பேசவேண்டும் என்றுகூட உங்களுக்குத் தெரியாதா?" என்று குறுக்கிட்டுக் கேட்டாள் சித்ரா.

“சரி, எப்படிப் பேசவேண்டும்?”

"நாசமாய்ப் போச்சு! உங்களைப் பற்றிக் கேள்விப் பட்டவுடனே அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழந்து விட்டார்கள். டாக்டரைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டும் வரை அவர்கள் பிழைத்து எழுந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லாமற் போய்விட்டது. அதிலும் அம்மாவுக்குத் தன் குடும்பமும் அதன் கெளரவமுந்தான் பெரிது. அதற்கான வழியில்தான் அவர்கள் உங்களை வளர்த்து வந்தார்கள். வெள்ளைக் காரன் தலையில் கல்லைத் துக்கிப் போடவா வளர்த்தார்கள்?" ‘'அம்மாவைப்போலவே எல்லாரும் அவரவர்கள் குடும்ப கெளரவத்தையே பெரிதாகக் கருதுவது என்று ஆரம்பித்துவிட்டால் தேசத்தின் கதி என்ன? நாற்பது கோடி மக்கள் எப்போதும் வறுமையிலேயே வாடிக் கொண் டிருக்க வேண்டியதுதானா?”

‘'சுத்தப் பொய்! நாற்பது கோடி மக்களும் எங்கே வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறார்கள்? வடநாட்டி லுள்ள ஜி.டி. பிர்லா கோஷ்டியும், தென்னாட்டிலுள்ள வடபாதி மங்கலம் கோஷ்டியும் கூடவா வறுமையால் வாடிக்கொண்டிருக்கின்றன? உயர்தர உத்தியோக வர்க்கமும் நடுத்தர உத்தியோக வர்க்கமும் கூடவா பசியால் துடித்துக் கொண்டிருக்கின்றன?”

‘'அவர்கள் சிறுபான்மையோர்தானே? பெரும்பான்மையோரைப் பற்றித்தானே இப்பொழுது பேச்சு?’’

‘'அந்தப் பெரும்பான்மையோருக்காக நீங்கள் என்ன செய்துவிட முடியும்?”

‘'அவர்களைப் பீடித்த வறுமை ஒழிய வேண்டுமானால் தேசத்தைப் பீடித்த அன்னிய ஆதிக்கம் முதலில் ஒழிய வேண்டாமா? அதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம்.’

‘'இப்படித்தான் எத்தனையோ பேர் சொல்கிறார்கள், ஆனால் எனக்கென்னவோ இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை என்று படுகிறது!”

‘இதென்ன, சித்ரா? நாலுந் தெரிந்த நீயே இப்படிப் பேச ஆரம்பித்து விட்டாயே!”

‘'பின் என்ன, அண்ணா? தேசத்தைப் பீடித்த அன்னிய ஆதிக்கம் ஒழிந்தால் மக்களைப் பீடித்த வறுமை எப்படி ஒழியும்?”

‘'அவர்களுடைய நலத்தை தங்கள் நலமாகக் கருதும் தேசத்தலைவர்களின் கைக்கு அரசாங்க அதிகாரம் மாறும்;

அவர்கள் மக்களைப் பீடித்த வறுமையை ஒழித்து விடுவார்கள்!”

“இந்த இடத்தில்தான் எனக்குச் சந்தேகம். இப்பொழு திருக்கும் தேசத் தலைவர்களெல்லாம் உண்மையிலேயே மக்களின் நலத்தைத் தங்கள் நலமாகக் கொண்டவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“இல்லாமல் என்ன?”

“எனக்கு நம்பிக்கையில்லை; மக்களின் ஆதரவைப் பெற்றுத்தான் அவர்கள் தலைவர்கள் ஆனார்கள் என்று கூட என்னால் நம்ப முடியவில்லை. வெறும் பிரசார பலன் அவர்களை ஏன் தலைவர்களாக்கியிருக்கக் கூடாது?”

“இதென்ன கூத்து...!”

“நீங்கள் வேண்டுமானால் மக்களைக் கவனித்துப் பாருங்கள் - ‘வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போனாலன்றி நாம் சுக வாழ்வைக் காணமுடியாது. ஆகவே, அவனை முதலில் விரட்டுங்கள்!’ என்று சொல்பவருக்கும் அவர்கள் ‘ஜே’ போடுகிறார்கள்; ‘வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னால் இந்த நாடு எப்படியிருந்தது? எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழித்தல், தீ வைத்தல் - மீண்டும் அதே கதிக்கு நாம் ஆளாக வேண்டுமா? ஆகவே காங்கிரஸ் காரனை முதலில் விரட்டுங்கள்!” என்று சொல்பவருக்கும் அவர்கள் ‘ஜே’ போடுகிறார்கள். இந்த லட்சணத்தில் வெறும் பிரசார பலத்தைக் கொண்டு ஒரு சிலர் அவர்களை மாற்றிவிடுவது சுலபமாக இருக்கிறது. இதன் பலன் கடைசியில் என்ன ஆகும். தெரியுமா? வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போனாலும் அரசாங்க அதிகாரம் உண்மையான மக்கள் தலைவர்களின் கைக்கு வராது. பணத்தாலும் பக்க பலத்தாலும் தலைவர்களானவர்களின் கைக்கே போய்ச் சேரும். எனவே, தேசத்தைப் பீடித்த அன்னிய ஆதிக்கம் ஒழிந்தாலும் ஏழைகளைப் பீடித்த பணக்கார ஆதிக்கம் ஒழியாது!”

“நாங்களெல்லாம் அதைப் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்போம்?”

சித்ராவுக்குச் சிரிப்பு வந்தது, “நீங்கள் அவர்களை என்ன செய்ய முடியும்? மாடிக்குச் செல்பவர்களுக்கு உபயோகமாயிருக்கும் படிகளைப்போல் வேண்டுமானால் இருக்கலாம்! மக்களோ, நீங்கள் என்னதான் உண்மையை எடுத்துச் சொன்னாலும் உங்களை நம்ப மாட்டார்கள். பணக்காரன் சிறைக்குப் போனால், ‘ஆஹா, என்ன தியாகம், என்ன தியாகம்! ஏழைகளுக்காக அவன் தன் சுக போகங்கள் அனைத்தையும் எப்படி உதறித் தள்ளி விட்டான், பார்த்தீர்களா?’ என்று அவர்கள் புகழ்வார்கள். ஏழை சிறைக்குப் போனாலோ, ‘பாவம்’ வெளியே இருந்துகொண்டு வயிற்றுக்கு என்ன செய்வான்? அதனால்தான் சிறைக்குப் போய்விட்டான்!” என்பார்கள். பத்திரிகைகளைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை; பணக்காரர்களை ஆதரிக்காவிட்டால் அவற்றின் கதி அதோகதிதான்! நேற்றைக்கு முன் தினம் நடந்த சம்பவத்தைத்தான் எடுத்துக் கொள்வோமே? உங்களைப் பற்றி எந்தப் பத்திரிகையிலாவது ஒரு வார்த்தை உண்டா, மொத்தத்தில் ஊர்வலம் ஒன்று கலைக்கப்பட்டது என்பதைத் தவிர! அதே பத்திரிகைகள் வீட்டுக்குள் இருந்தபடி காந்திஜி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துப் பணத்தாலும் பட்டம் பதவிகளாலும் அந்தஸ்து வாய்ந்தவர்கள் என்று ஒரு சிலரால் கருதப்படுபவர்களின் அறிக்கைகளை மட்டும் பிரமாதப்படுத்திப் பிரசுரித்திருந்தன; அந்த அறிக்கைகளோடு அவர்களுடைய படங்களையும் சேர்த்து வெளியிட்டிருந்தன. சில பத்திரிகாசிரியர்கள் அவர்களுடைய அறிக்கையை வரவேற்றுத் தலையங்கங்கள் கூட எழுதியிருந்தார்கள். இந்த லட்சணத்தில் மக்களுக்கு உங்களிடம் மதிப்பிருக்குமா, அவர்களிடம் மதிப்பிருக்குமா?” என்றாள்.

“மதிப்பும் மரியாதையும், அவற்றால் ஏற்படும் பெயரும் புகழும் எனக்கென்னத்துக்கு, சித்ரா? யார் ஒருவன் அவற்றையெல்லாம் விரும்பாமல் இருக்கிறானோ, அவன்தான் உண்மையான தேசத்தொண்டனாயிருக்க முடியும்” என்றேன் நான்.

“இருக்கலாம், அண்ணா! ஆனால் அவனால் யாருக்கு என்ன பிரயோசனம்? அவனுக்கும் பிரயோசனமில்லை; அவன் குடும்பத்துக்கும் பிரயோசனமில்லை; மக்களுக்காவது அவனால் ஏதாவது பிரயோசனம் உண்டா, என்றால் அதுவும் கிடையாது. அவன் என்னவோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நினைக்கலாம்; ஆனால் முடியாது. அவ்னுக்குத்தான் மக்கள் ஏதாவது உதவி செய்யவேண்டியிருக்கும். இந்த நிலையில் அவன் தொண்டனாயிருப்பதைவிட, இல்லாமல் இருப்பதே மேலல்லவா?”

“இதென்ன அதிகப்பிரசங்கித் தனம்? வர வர நீ ரொம்பப் பொல்லாதவளாகப் போய்விட்டாயே!”

“நான் ஒன்றும் பொல்லாதவளாகப் போகவில்லை; உலகம் அவ்வளவு பொல்லாத உலகமாகப் போய் விட்டது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஜனநாயக நாடுகளைத்தான் பாருங்களேன். அங்கெல்லாம் உண்மையிலேயே மக்களின் ஆட்சியா நடக்கிறது? பணக்காரர்களின் ஆட்சிதான் நடக்கிறது; பட்டம் பதவி பெற்றவர்களின் ஆட்சிதான் நடக்கிறது; ராஜதந்திரம் என்று சொல்லிக் கொண்டு மறந்தும் உண்மை பேசாத பொய்யர்களின் ஆட்சிதான் நடக்கிறது; பொதுஜனத் துரோகிகளின், சுயநலப் புலிகளின், பணப் பேய்களின் ஆட்சிதான் நடக்கிறது. ஏழைகளின் விமோசனம் வெறும் எழுத்தளவில், பேச்சளவில்தான் இன்னும் அங்கெல்லாம் இருந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா, என்ன?”



‘அதற்காகத்தான் யார் எப்படிப் போனாலும் என் உயிரை ஏழைகளின் நன்மைக்காக அர்ப்பணம் செய்து விடுவதென்று நான் தீர்மானித்து விட்டேன்?’

‘ஏழைகளுக்கு வேண்டியது உங்கள் உயிரா, அண்ணா? அதனால் அவர்களுக்கு ஏதாவது பிரயோசனம் உண்டா? இதெல்லாம் வீண் நம்பிக்கை; வேண்டாம். கடைசி காலத்தில் அம்மாவைக் கவலைக்கு உள்ளாக்க வேண்டாம்.’

‘அம்மாவுக்குக் குறுகிய மனப்பான்மை கூடாது; பரந்த மனம் வேண்டும். என்னை மட்டும் அவர்கள் புத்திரனாகப் பாவிக்கக்கூடாது; நாற்பது கோடி மக்களையும் புத்திரர்களாகப் பாவிக்க வேண்டும்.’

‘உங்களைப்போல அம்மாவுக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல அவர்கள் நாற்பது கோடி மக்களையும் தம் புத்திரர்களாகப் பாவித் தாலும் அந்த நாற்பதுகோடி மக்களும் அவர்களைத் தங்கள் அம்மாவாகப் பாவிக்கத் தயாராயிருக்க மாட்டார்கள்!’

‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்கப்போவதில்லை. வீணாக என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்?’ என்று எரிந்து விழுந்தேன் நான்.

‘ஒரே ஒரு வரி அண்ணா, ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்று சர்க்காருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுங்கள்; அம்மாவின் கவலை தீர்ந்து போகும்.’ என்று கெஞ்சினாள். சித்ரா.

‘இந்த உடம்பில் உயிர் இருக்கும் வரை ஒருநாளும் அப்படி எழுதிக் கொடுக்க மாட்டேன்!’ என்று சொல்லிவிட்டு நான் குப்புறப் படுத்துக்கொண்டேன்.

‘செல்வம், சொல்வதைக் கேள்: பிடிவாதம் பிடிக்காதே! எனக்கு இருப்பது நீ ஒருத்தன்; உன்னையும் சிறைக்கு அனுப்பிவிட்டு நான் எப்படி உயிரை வைத்துக் கொண்டிருப்பேன்?’ என்று கண்ணிரும் கம்பலையுமாக என்னைத் தடவிக் கொடுத்தார்கள் என் தாயார்.

அதே சமயத்தில் பார்வையாளரின் நேரம் முடிந்து விட்டதை அறிவிக்கும் ஆஸ்பத்திரியின் மணி அடித்தது. சித்ராவும், தாயாரும் என்னைப் பிரிய மனமின்றிப் பிரிந்தார்கள்.

அவர்கள் மறைந்ததுதான் தாமதம்; நாகரீக யுவதி ஒருத்தி, கவலை நிறைந்த கண்களுடன் என் படுக்கையருகே வந்து, என்னைத் தன் மலர்க் கரங்களினால் மெல்லத் தீண்டினாள்.

நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்; அவளுடைய அகன்ற விழிகள் என்னை அனுதாபத்துடன் நோக்கின.

அடுத்த நிமிஷம் என் புருவங்கள் சற்றே உயர்ந்து தாழ்ந்தன. இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவித உணர்ச்சியும் வியப்பும் ஒருங்கே அடைந்தவனாய் அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.

அவள் கண்கள் கலங்கின; அதற்குமேல் என்னால் மெளனம் சாதிக்க முடியவில்லை. ‘சாந்தினி, நீயா!’ என்றேன், கனவுலகில் சஞ்சரிப்பவனைப்போல.