கதை சொன்னவர் கதை 2/இலக்கியம் திரட்டிய இரட்டையர்
“நமக்குக் கல்யாணம் ஆகி எத்தனையோ வருஷங்கள் ஓடி விட்டன. ஆனாலும், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை கூட இல்லையே!” என்று தன் மனைவியிடம் கூறி வருத்தப்பட்டான் ஒரு விறகு வெட்டி.
“கட்டை விரல் அளவிலே ஒரு பிள்ளையிருந்தாலும் போதுமே! அதற்குக் கூட நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே!” என்று கவலைப்பட்டாள் அவன் மனைவி.
“கவலை வேண்டாம். கட்டை விரல் அளவிலே உங்களுக்கு ஒரு பிள்ளை கிடைப்பான்” என்று அப்போது ஓர் அசரீரி கேட்டது.
மறு விநாடி, “அம்மா, அம்மா! அப்பா, அப்பா!” என்ற குரல் கேட்டது. இருவரும் குரல் வந்த திசையைப் பார்த்தனர். கட்டை விரல் அளவிலே ஒரு பையன் தரையிலே நின்று கொண்டிருந்தான்.
உடனே அம்மா கீழே குனிந்து அவனைத் தூக்கினாள். உள்ளங் கையில் வைத்துக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்து விட்டாள். அப்பாவின் மகிழ்ச்சிக்கும் அளவில்லை.
அந்தப் பையனுக்கு, ‘டாம்’ என்று பெயரிட்டார்கள். கட்டை விரல் அளவே அவன் இருந்ததால், ‘டாம் தம்ப்’ என்று அழைத்தனர்.
டாம் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான். தினமும் அப்பாவோடு அவனும் குதிரை வண்டியில் ஏறிக் கொண்டு காட்டுக்குப் போவான். அப்பாவுக்கு ஒத்தாசையாகத் தன்னால் முடிந்ததையெல்லாம் மிகுந்த குதூகலத்துடன் செய்வான்.
ஒரு நாள், விறகு வெட்டியின் குதிரை வண்டி மட்டும் தனியாகக் காட்டை நோக்கிப் போவதை இரண்டு வழிப்போக்கர்கள் பார்த்தார்கள். அப்போது “ஹை, ஹை”, “வலது பக்கம் போ”, “இடது பக்கம் போ” என்று யாரோ கூறுவது கேட்டது.
“வண்டியில் யாருமே இல்லையே! யார் சத்தம் போடுவது?” என்று அவர்கள் வியப்போடு வண்டி யைப் பின்தொடர்ந்தார்கள்.
வண்டி காட்டை அடைந்ததும், “அதோ அப்பா! நில், நில்!” என்ற குரல் கேட்டது. உடனே குதிரை நின்றது. விறகு வெட்டி வண்டி அருகிலே ஓடி வந்தான். குதிரையின் காதுக்குள்ளே இருந்த டாம், அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினான்.
அந்தச் சிறிய உருவத்தைக் கண்ட வழிப்போக்கர்கள், ‘இவனை விலைக்கு வாங்கி, ஊர் ஊராகக் கொண்டு போய், வேடிக்கை காட்டினால், நிறையப் பணம் சம்பாதிக்கலாம்’ என்று நினைத்து விறகு வெட்டியிடம் பையனை விலை பேசினர். விறகு வெட்டி அதற்கு இணங்கவில்லை.
அப்போது டாம், விறகு வெட்டியின் கால் வழியாகக் காதுக்குப் பக்கத்திலே போய் நின்று கொண்டு, “யோசிக்காதே அப்பா.. நான் சீக்கிரம் திரும்பி வந்து விடுவேன். ‘சரி’ என்று சொல்” என்று ரகசியமாகச் சொன்னான். கடைசியில் விறகு வெட்டி இணங்கி விட்டான். நிறையப் பணத்தைக் கொடுத்து விட்டு, டாமை வாங்கிச் சென்றனர் வழிப்போக்கர்கள்.
செல்லும் போது, டாம் அவர்களில் ஒருவனுடைய குல்லா விளிம்பிலே உட்கார்ந்து கொண்டான். கால் மேல் கால் போட்டு, ராஜா மாதிரி உட்கார்ந்து கொண்டான். வழி நெடுக, வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றான். இரவு வந்ததும், “அசதியாக இருக்கிறது. கீழே இறக்கி விடுங்கள்” என்றான். அவனைக் கீழே இறக்கி விட்டார்கள் சிறிது நேரத்தில், அவன் அங்கிருந்த ஓர் எலி வளைக்குள் ஓசைப்படாமல் புகுந்து, மறைந்து கொண்டான். வழிப்போக்கர் இருவரும், தேடு தேடென்று தேடினர். வெகு நேரம் தேடியும் அகப்படாததால், அலுத்துப் போய், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
அவர்கள் போனதும், டாம் வெளியில் வந்தான். ஒரு நத்தை ஓடு வழியில் கிடந்தது. அதில் படுத்துத் தூங்கலாம் என்று நினைத்து அதன் மேல் ஏறினான். அப்போது அந்த வழியாக இரு திருடர்கள் பேசிக் கொண்டு செல்வதைக் கேட்டான். “அந்தப் பிரபு பணம் வைத்திருக்கிற அறைக்குள் நுழைவதே கஷ்டம். இரும்புக் கம்பியல்லவா போட்டிருக்கிறார்! உள்ளே நுழைந்து, எப்படித் திருடுவது?” என்றான் ஒருவன்,
“கவலை வேண்டாம். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்” என்றான் டாம்.
“ஐயோ, யாரது?” என்று பயந்து போய், அலறினர் அந்தத் திருடர்கள்,
“நான்தான். கீழே குனிந்து என்னை நன்றாகப் பாருங்கள்” என்றான் டாம்.
இருவரும் குனிந்து உற்றுப் பார்த்தனர். உடனே, அவர்களுக்கு ஒரே ஆனந்தம்! “கம்பி வழியாக இவனை உள்ளே அனுப்பி வைக்கலாம். உள்ளேயிருந்து, நமக்கு வேண்டியதையெல்லாம் எடுத்து, எடுத்துத் தருவான்” என்று நினைத்து, அவனைத் தூக்கிக் கொண்டு நேராகப் பிரபு வீட்டுக்குச் சென்றார்கள். கம்பி வழியாக டாமை உள்ளே அனுப்பினார்கள். உள்ளே சென்றதும், டாம் திருடர்களுக்கு உதவி செய்யவில்லை; ஒரேயடியாகக் கூச்சல் போட ஆரம்பித்து விட்டான். கூச்சலைக் கேட்டு, வீட்டிலிருந்த எல்லோரும் எழுந்தார்கள்; விளக்கை ஏற்றிக் கொண்டு, அறைக்குள் ஓடி வந்தார்கள். நிலைமை அறிந்து, ‘தப்பித்தோம். பிழைத்தோம்’ என்று தலை தெறிக்க ஓடி விட்டார்கள் திருடர்கள்! டாமும் மெதுவாக நழுவி, பின்புறமிருந்த தோட்டத்திற்குச் சென்றான். அங்கிருந்த வைக்கோல் போரில் ஒளிந்து கொண்டான்.
சிறிது நேரம் சென்றது. டாம் வைக்கோல் போரில் படுத்து, நன்றாகத் தூங்கலானான். வெகு நேரம் ஆனதும், விழித்துப் பார்த்தான். சுற்றிலும் ஒரே இருள்! மூச்சுத் திணறியது. எங்கே இருக்கிறோம். என்பது அவனுக்குப் புரியவில்லை. பாவம், வைக்கோல் போரில் படுத்திருந்த அவனை அப்படியே, வைக்கோலுடன் கொண்டு வந்து, பசுவுக்குப் போட்டு விட்டாள் அந்த வீட்டு வேலைக்காரி, நல்ல வேளையாக, அந்தப் பசுவின் பற்களில் அவன் அகப்படாமல் நேராக வயிற்றுக்குள்ளே போய்ச் சேர்ந்து விட்டான். உள்ளேயிருந்த அவன் மேலும், மேலும் வைக்கோல் வந்து விழுவதைக் கண்டான். நெருக்கடி. அதிகமானது. உடனே, “போதும், போதும், நிறுத்து, நிறுத்து” என்று கத்தினான்.
பால் கறக்க வந்த வேலைக்காரி பசு பேசுகிறது என்று நினைத்துப் பயந்து விட்டாள்; பதறியடித்துக் கொண்டு எஜமானரிடம் ஓடினாள். விஷயத்தைக் கேட்ட எஜமானர் நேரிலே வந்து பார்த்தார். அப்போதும்,‘நிறுத்து, நிறுத்து’ என்ற குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. உடனே அவர், “இனி இந்தப் பசுவை வைத்திருந்தால் ஆபத்து! யாரோ சூனியம் வைத்து விட்டார்கள். உடனே இதைக் கொன்று விடுங்கள்” என்று உத்தரவிட்டார். அவ்வாறே வேலைக்காரர்கள் பசுவைக் கொன்று, அதன் குடலைத் தூக்கிக் குப்பை மேட்டில் எறிந்தார்கள்.
குடலுக்குள் சிக்கிக் கொண்ட டாம் வெளியில் வருவதற்குள், அங்கே வந்த ஓர் ஓநாய், ‘லபக்’கென்று குடலுடன் அவனைச் சேர்த்து விழுங்கி விட்டது. ஓநாயின் வயிற்றுக்குள்ளிருந்த டாம் மூளையில் ஒரு யோசனை உதித்தது. உடனே அவன், “ஓநாயாரே! உமக்கு அருமையான ஒரு விருந்து காத்திருக்கிறது” என்றான்.
“எங்கே?” என்று கேட்டது ஓநாய்.
டாம் தன்னுடைய வீட்டு அடையாளத்தைச் சொல்லி, “அங்கே போனால் வகை, வகையான பண்டம், பட்சணமெல்லாம் கிடைக்கும்” என்றான்.
மறு நிமிஷம் ஓநாய் அவனுடைய வீட்டை நோக்கி ஓடியது. அப்போது இரவு நேரம். வீட்டின் பின்பக்கமுள்ள கதவிலே ஒரு துவாரம் இருந்தது. அதன் வழியாக, ஓநாய் உள்ளே புகுந்தது. அங்கிருந்த ஆகாரத்தை வயிறு முட்டத் தின்றது, பிறகு வெளியே வர முயன்றது. வயிறு உப்பியிருந்ததால், ஓநாயால் கதவுத் துவாரத்தின் வழியாக வெளியில் வர முடியவில்லை.
அந்தச் சமயம் பார்த்து, டாம் சத்தம் போட ஆரம்பித்து விட்டான். “அப்பா, அப்பா! ஓடி வா அப்பா, சீக்கிரம் வர அப்பா” என்று கூக்குரலிட்டான். சத்தத்தைக் கேட்ட விறகு வெட்டியும், அவன் மனைவியும் எழுந்து, ஓடி வந்தனர். ஓநாயைக் கண்ட தும், “இது என்ன! ஓநாய் பேசுகிறதே!” என்றான் விறகு வெட்டி.
“இல்லையப்பா, சத்தம் போடுவது நான்தானப்பா. உங்கள் மகன் டாம்தானப்பா. ஓநாய் வயிற்றுக்குள்ளே அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றான் டாம்.
விஷயத்தைப் புரிந்து கொண்ட விறகு வெட்டி, உடனே மூலையிலிருந்த தடியைக் கையிலே எடுத்தான், ஓநாயின் தலையில் ஓங்கி ஓர் அடி போட்டான். மண்டை பிளந்து ஓநாய் கீழே விழுந்து இறந்தது. பிறகு பக்குவமாக ஓநாயின் உடலைக் கிழித்தான். விறகு வெட்டி. உள்ளேயிருந்து, ஒரு தாவுத் தாவி வெளியில் வந்தான் டாம். “என் கண்ணே! உன்னைக் காணாமல், என் மனம் என்ன பாடு பட்டது!” என்று அவனை அன்போடு தூக்கி, ஆசையோடு முத்தமிட்டாள் அவனது அருமை அம்மா. டாம், தான் செய்த வீர தீரச் செயல்களையெல்லாம் அம்மா, அப்பாவிடம் சொல்லி அவர்களை மகிழ்வித்தான்.
இந்த அருமையான கதையை, ஒரு காலத்தில் ஜெர்மன் தேசத்துக் குழந்தைகள் மட்டுமே கேட்டுக் கேட்டுக் குதூகலமடைந்து வந்தார்கள். ஆனால், இப்போதோ உலகத்திலுள்ள பல தேசத்துக் குழந்தைகளும் படித்துப் பரவசமடைந்து வருகிறார்கள். இந்தக் கதையையும், இதைப் போன்ற நூற்றுக்கணக்கான கதைகளையும் உலகத்துக்குத் தந்தவர் யார்? ஒருவரல்லர்; உடன் பிறந்த இருவராவர்! அந்த இருவரும், இந்தக் கதைகளைத் தாங்களாகவே கற்பனை செய்து எழுதவில்லை பரம்பரை பரம்பரையாக, ஜெர்மன் தேசத்திலே வழங்கி வந்த கதைகளைத்தான் திரட்டித் தந்தனர் ஊர் ஊராகச் சென்று, வீடு வீடாக ஏறித் திரட்டப்பட்டவைகளே இந்தக் கதைகள்.
அந்த இருவரில் மூத்தவர் பெயர் ஜாகோப் கிரிம் (Jakob Grimm); இளையவர் பெயர் வில்ஹெல்ம் கிரிம் (Wilhelm Grimm) இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். 1785-ல் மூத்தவரும், 1786-ல் இளையவரும் ஜெர்மன் தேசத்தில் பிறந்தனர். சின்னஞ்சிறு வயதிலே, அவர்களது தந்தை இறந்து விட்டார். குழந்தைகளைக் காப்பாற்றத் தாயாரால் இயலவில்லை. ஆனாலும், சிறிய தாயார் கொஞ்சம் லசதியாக வாழ்ந்து வந்ததால், அவர்கள் அதிகமாகக் கஷ்டப்படவில்லை. சிறிய தாயார்தான் அவர்கள் இருவரையும் படிக்க வைத்துக் காப்பாற்றி வந்தார்.
இருவரும், ஆரம்பத்தில் ஒரே பள்ளியில் சேர்ந்தனர்; ஒன்றாகவே படித்தனர்; ஒரே பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றனர். பிறகு, அதே பல்கலைக் கழகத்தில், இருவரும் ஆசிரியராய்ப் பணியாற்றினர். ஆரம்ப காலத்தில் அவர்கள் மாணவர்களுக்கு ஏற்ற பாட புத்தகங்களையே எழுதி வந்தனர். பிறகு சொற்களின் வரலாறு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதைப் பற்றிக் கூடப் புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர். ஆயினும், அவர்களது புகழை நிலை நாட்டியவை வேறு எவையுமல்ல; அவர்கள் திரட்டிய நாடோடிக் கதைகளே!
ஜாகோப் மிகவும் உற்சாகமுள்ளவர்; பழமையில் அதிகமான பற்றுக் கொண்டவர். அவர் கிராமம், கிராமமாகச் சென்று, அங்கிருந்த வயதானவர்களிடம் கேட்டுப் பல கதைகளைச் சேகரித்தார். இளையவரான வில்ஹெல்ம் அந்தக் கதைகளை, உயிருள்ள நடையிலே எழுதலானார். அழகாக எழுதும் ஆற்றல் அவருக்கு அதிகமாயிருந்தது. மிகவும் மெதுவாகவே, அவர் எழுதுவார். எந்த, எந்தச் சொற்களை, எந்த, எந்த இடத்தில் உபயோகப்படுத்த வேண்டும் என்று, ஒரு தடவைக்கு தடவை யோசித்துத்தான் அவர் எழுதுவார்.
ஆனால், ஜாகோப் அவருக்கு நேர் மாறானவர், இந்த விஷயத்திலே! பேனாவைக் கையிலே அவர் பிடித்து விட்டால், அது நிற்காது; ஓடிக் கொண்டேயிருக்கும். அடித்து, அடித்து எழுதுவது, எழுதியதைத் திரும்பப் படிப்பது, இவையெல்லாம் அவருக்குப் பிடிக்காதவை.
ஜாகோப் பார்ப்பதற்கு நன்றாயிருப்பார். உடற்கட்டும், நோயற்ற வாழ்வும் உடையவராயிருந்தார். நாள் முழுதும், ஓயாது வேலை செய்வார். ஆனால், வில்ஹெல்ம் மிகவும் மெலிவாயிருப்பார். பிள்ளைப் பிராயத்திலே அவர் பல நாள் படுக்கையில் இருந்திருக்கிறார். அதிலிருந்து, அவர் எப்போதும் பலவீனமாகவே இருப்பார்.
உருவத்திலே மாறுதல் இருந்தாலும், உள்ளத்திலே அவர்கள் மாறுபட்டிருக்கவில்லை; இலட்சியத்திலே, அவர்கள் மாறுபட் டிருக்கவில்லை. ஒரே நோக்குடன், ஒன்று சேர்ந்து 1859 வரை பணியாற்றினர். வில்ஹெல்ம் அந்த ஆண்டில் இறந்து விட்டார். அவர் பிரிவால், ஜாகோப் மிகவும் வேதனைப்பட்டார். வலது கை ஒடிந்தது போல் ஆயிற்று. ஆயினும், தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அதே பணியில் ஈடுபட்டார். 1803-ல் அவரும் காலமானார்.
அவர்களது பூத உடல் அழிந்தாலும், புகழ் உடம்பை அழியாமல் காத்து வருபவை அவர்கள் அரும் பாடுபட்டுத் திரட்டித் தந்த கதைகளேயாகும். கிரிம்ஸ் கட்டுக் கதைகள் (Grimm's Fairy Tales) என்றால், உலகத்தில் யாருக்குத்தான் தெரியாது? அவர்களது இடை விடாத உழைப்புக்கும், முயற்சிக்கும் அறிகுறியாக, இன்றும் அந்தக் கதைகள் விளங்கி வருகின்றன.
கிரிம் சகோதரர்கள் முயற்சி எடுத்திராவிடில், அக்கதைகளின் கதி என்ன ஆகியிருக்குமோ? ஆரம்பத்தில், ஜெர்மன் மொழியில், அவர்களால் எழுதப்பட்ட கதைகள், விரைவில் ஆங்கிலத்திலே வெளி வந்தன. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் அக்கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிறகு, உலகின் பல பாகங்களிலும், பல மொழிகளில், பல வகைப் படங்களுடன், பல பதிப்புக்கள் வெளி வரத் தொடங்கின.
இன்று ஆண்டர்சன் கதைகளுக்கு உள்ள மதிப்பு, கிரிம்ஸ் கதைகளுக்கும் இருக்கின்றது. ஆண்டர்சன் கதைகளை விரும்பிப் படிப்பது போலவே, கிரிம்ஸ் கதைகளையும் ஆவல், ஆவலாகப் படித்து மகிழ்கின்றனர், குழந்தைகள். குழந்தைகளை மகிழ்விக்கும் இலக்கியச் செல்வத்தை, உலகுக்குத் தேடித் தந்த இந்த இரட்டையரை மறக்க முடியுமா? பெரியவர்கள் மறந்தாலும், மறக்கலாம்; குழந்தைகளால் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது!