கனியமுது/செல்வத்தைத் தேடி...

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கனியமுது.pdf


ஆங்கிலம் பேசும் அழகுத் திரைப்படத்தைப்
பாங்குடன் கண்டு, பரிந்துரைத்தார் நண்பர்.
விருப்போடு வேண்டியதால் சின்னாள் முன் சென்றேன்.
சிரிப்பினை மூட்டியே, சிந்தனைக்கும் நல்விருந்தாய்
நேர்ந்தது, மேனாட்டார் நேர்த்திமிகு வாழ்வுரைக்கத்
தேர்ந்த சிறந்தகதை; சீராம் கருத்துக்கள்!

பெண்டிர் பலமணம் பெற்றிடும் கொள் கையங்கு
உண்டென்ப தால்அஃது உணர்த்துங் கதையெனினும்
வெற்று நகைச்சுவை வீணாம் எனக்கருதி,
மற்றொரு நற்கருத்தும் மாண்போடு தந்தனரே!

அமெரிக்க நாட்டினில் செல்வம் மிகுதி
அதனைப் பெற்றிடும் அலைச்சலும் அதிகம்
ஈட்டிட முனைந்திடும் இயல்பினோ ராங்கு
இல்லற இன்பம் பெற்றிட வில்லை, என்பதைப்
பாங்குடன் அப்படம் காட்டு கின்றது.
மேலும் மேலும் செல்வம் சேர்த்திட
ஓயாதுருண்டு உழைத்திடும் அன்னார்
காதலின்பம் தனையும் இழந்துமே
கருவியாகிக்கிடக்கிறார் என்பதே பாடம்.

எத்தனைச் செல்வம் ஈட்டிக் குவிப்பினும்
மன துக்கோர் நல் மகிழ்ச்சி இல்லையேல்
எற்றுக்குப் பணம்! காகிதக் குவியல்!
மற்றவர் பார்த்து மதித்திட மட்டும்
மாநிதி சேர்த்திடல் மாபெரும் தவறு
என்பதை யெல்லாம் இயம்பிட வில்லை
காட்சிகள் காட்டிக் கருத்தளிக் கின்றார்.

செல்வம் குவித்துந் திருப்தி யடையாமல்
பல்வகை யாற்பாடு பட்டிடுவர், எப்போதும்
மென்மேலுஞ் சேர்க்க விழையும் அமெரிக்கர்,
நன்முறையில் இல்வாழ்வை நாடி அனுபவியார்;
காதலெனும் பேரின்பங் காணா இயந்திரமாய்
மோதிடுவர், என்று மொழியுந் திரைப் படமாம்!

எத்தனையோ மாநிதியை ஈட்டித் திரட்டிடினும்
சித்தங் களிப்படையச் செய்யாது போமாகில்
எற்றுக்குச் செல்வம் ; எதிரி மதித்திடவோ?
வெற்றுத்தாள் தாமே, விளைவென்ன ? என்பதெல்லாம்
காட்சிகள் வாயிலாய்க் காட்டித் தெளிவுறுத்தும்
மாட்சிமை வாய்ந்த மகத்தான வாய்ப்பாம்!

எளியதோர் குடும்பம், அதிலோர் மங்கை
தந்தை தூயவர் பணத்தை வெறுப்பவர்
பணமே எல்லா பாதகத்தின் வேர்
பணமே மக்களைப் பாவிக ளாக்கிடும்
பணத்திற் காக அலைந்திட வேண்டாம்
போதுமெனும் மனமே பொன்செய் மருந்து
இந்த விதமான அறிவுரைகள் தன்னை
அந்தப் பெரியவரும் நித்தம் தந்து வந்தார்.
இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த அப் பெண்ணும்
எளிய வாழ்க்கையே இன்ப வாழ்க்கையென்
உறுதியாய்க் கொண்டு உலவி வருகின்றாள்.
வாலிபனொருவன் காணுகின்றான். அவளை
வாழ்க்கையில் முன்னேற முயலுபவன் அவனும்
எண்ணம் அவனுக்கு அந்த எழிலாளிடமே
கண் இருந்தும் காளை காணானோ அழகை!

ஓர் நாள் இருவரும் மோட்டாரினில் ஏறி
உல்லாசப் பயணம் செய்யச் செல்கின்றார்.
வழியில், மற்றோர் இளைஞன் வருகின்றான்.

எளிய குடும்பத்தின் ஏழையாம் தந்தை,
துளியும் விரும்பார் தூய்மையற்ற செல்வத்தை;
பாதகத்தின் வேராயும், பாவத்தின் தூராயும்
தீதளிக்கும், நல்ல திறனழிக்கும் நாணயங்கள்
தேடி அலையாமல் சிந்தை நிறைபவராம்!

நாடுபோற்றும் அந்த நற்குணத் தந்தையின்
தத்துவம் அத்தனையும் தாங்கும் திடசித்தம்
மொத்தமாய்ப்பெற்றவொரு மோகனப் பெண்மடவான்
இன்பக் களஞ்சியமாய், ஏழ்மை நிலைவிரும்பி,
அன்பின் உருவாய், அழகியாய் வந்தவளைக்
கண்டான் எழில்காளை! காதல் உருவாக்கிக்
கொண்டாட எண்ணினான்! கூடுதற்கும் என்ன தடை?

ஒருநாள் இருவருமாய் உந்துவண்டி மீதேறி
ஊர்சுற்றி வந்தார்; ஒருவன் எதிர்ப்பட்டான் ?

எளிய உடை, தோற்றம், நடை யாவும்
இளைஞனவன் படிப்பாளி, இலட்சியம் கொண்டோன்
அவன் மீது மோடார் சேற்றை இறைத்தது
அவனோ அதற்காக ஆத்திரமும் கொள்ளாது
இனிய முகத்துடனே இருந்ததனைக் கண்டாள்.
இவனே எனக்கேற்ற மணவாளன்
எளிய வாழ்க்கையினில் திளைத்திடலா மென்று
வலிந்தவனைச் சந்தித்து மணம் செய்து கொண்டாள்,
ஏழையை மணந்து கொண்டேன் எனக்கூறத்
தாய், தீ மிதித்தன்ன துடித்திட்டாள் பதறி!

பணமன்றோ பாதகத்தின் இருப்பிடம்
பணமில்லா வாழ்க்கையன்றோ பரமன் வழி
பணமற்றவனை மணந்ததனாலே என்று
பாவை அவள் பேசுகிறாள். தாய் ஒப்பவில்லை

தோற்றத்தில் நல்ல துணிவுடைமை, தூய்மை, அறிவு
ஆற்றல், எளிமை, அடக்கம் மிகுசான்றோன் !
அன்னவன் மீதே அவர் சென்ற உந்துவண்டி
தண்ணீரைச், சேற்றைத் தவறி இறைத்துமே—
ஆத்திரங் கொள்ளான்; அமைதியாய் நின்றிருந்தான் !
பார்த்திருந்தாள் நங்கை; அவன் பண்பிற் கடிமையாய்
ஏற்ற மணவாளன் இவ்வாய்மை யாளன்எனப்
போற்றி புகழ்ந்து புதியவனைக் கைப்பிடித்தாள் !
இல்லாதான் இல்லாளாய் ஏகினையே என்றவள் தாய்
பொல்லாச் சினங்கொண்டு பொங்கு வசைமொழிந்தாள்!

“அம்மா ! பணந்தான் அநீதியின் தோற்றுவாய்!
இம்மா நிலத்தில் எனக்குப் பொருள் வேண்டா!
செம்மையுற வாழ்வேன், சிறப்பான ஏழ்மையிலே.
எம்மைவாழ்த்” தென்றவள் ஏகிவிட்டாள், தாய்மறுத்தும்

ஓடைக்கருகினிலோர் பழங்கால வீடு
ஒய்யார ஒளியில்லை ஆடம்பரம் இல்லை
இஃதே இன்பமதை ஈந்திடும் இல்லமென
இருவரும் வாழ்ந்தனர் இணைபிரியா முறையில்
உள்ளதைக் கொண்டவர்கள் மகிழ்ந்திருக்கலுற்றார்
பேசிச் சிரித்தவர்கள் பேரின்பங் கண்டார்
வேலைகளை விருப்பமுடன் இருவரும் மேற்கொண்டார்
இல்லறமே நல்லறம் எனும் மொழிக் கேற்பத்தானே !

சொத்துசுகம் இல்லா நிலையினில் இவர்கள்
வாழ்க்கை நடத்தும் விதம் படமாக்கிடவே
வந்தனன் குறும்புமிகு வாலிபனுந்தானே
வனிதையைப் பெற்றிடமுதலில் முயற்சித்தவனே
அழுக்கேறிக் கிடந்ததுகாண் ஆடை
அலங்கோல நிலை அந்த இல்லம் ஆனாலும் அகமகிழ்வுடனே
அணங்கவளும் பம்பரமாய்ச் சுழன்றே
அடுக்களையில் வேலைபல செய்திடவே கண்டான்
அவள்கணவன் உடனிருந்து உதவிடவும் கண்டான்

நீரோடை ஓரத்தில் நீண்ட பழங்காலக்
கூரைவீ டொன்றிற் குடியேறி, இன்பமுடன்
ஆடம் பரமின்றி, அன்பால் அகமொன்றித்
தேடரிய வாழ்வில் திளைத்தார் இருவருமே!
ஒன்றாய்ப் பணியாற்றி உள்ளதைக் கொண்டுமனம்
நன்றாய் மகிழ்ச்சியுற நல்லறம் பேணிவந்தார் !

கனியமுது.pdf

உந்துவண்டி ஏற்றி, முன் ஊர்சுற்றிக் காட்டியவன்
வந்திட்டான்; இங்கிருவர் வாழ்வதனைக் கண்டறிய—
தன்னை மணக்காமல் தன்போக்கில் ஏழையின்
பின்னே நடந்திட்ட பெண்ணைப் படம்பிடிக்கக்—
கந்தலுடைக் கோலம் கண்டான்; வறுமையிலும்
சிந்தை தளராமல் சிற்றெறும்பாய்ச் சுற்றிவந்தாள்
சேர்ந்து சமையல்கள் செய்திட்டாள்;

ஒழுக்கல்மிகு கூரையினைச் செப்பனிட அவளும்
முயன்றதிலே தோற்றனள், மழைநீரில் நனைந்தே,
இந்தவித இடர்ப்பாட்டில் இவளுள்ளாள்
ஏழையை மணந்ததனால் நேரிட்ட கதியும்
என்றெல்லாம் ஏதேதோ எழுதலா மன்றோ?
சீற்றம் அவனுக்கு-ஆனால் சிந்தித்தான் வாலிபனோ மிகவும்

மறுநாள் மனைவிட்டுச் சென்ற மணவாளன்
மாலையும் வரவில்லை, இரவுங் காணோம்
என்னானான் என்றெண்ணி ஏக்கம் கொண்டவளும்
இல்லத்தில் காத்திருந்தாள் வரவு எதிர்பார்த்து
எங்கு சென்றனன் ? ஏனிந்த மர்மம்?
எனைத்தனியே வீட்டகன்றுமே வேதனைத்தீயை என் மூட்டினான்

என்று சினந்தனள் சிற்றிடைப் பெண்ணாள்
நெஞ்சினில் அவனைத்தாங்கி, நீர்சொரி கண்களோடு
சந்தைச் சதுக்கப்பக்கம் சென்றனள் சுந்தரியும்
விந்தையைக் கண்டாற்போல வீழ்ந்தடித்துக் கும்பல்
ஆங்கொரு கடையை நோக்கி விரைந்திடக் கண்டாள் பெண்ணாள்

பெய்மழையால்

நேர்ந்த ஒழுக்கினையே நேர்செய்காள்; மேல்நனைந்தாள்!
தாக்குந் துயரெல்லாம் தான்செய் பிழையென்று
நோக்கமாட் டாளோ? நொடியும் உணராளோ?”
என்பே றேங்கி நின்றான் ஏமாந்த வாலிபனும்!
சென்றதை எண்ணியதால் சீற்றம் பிறந்ததே !


கனியமுது.pdf


அன்று மறுநாள் அகன்ற மணவாளனை
நின்றெதிர் பார்த்தனள் : நேரந்தான் சென்றது !
மீண்டிட வில்லை ! விழிநீர் பெருகிடவே—
‘மாண்டிட என்னைவிட்டு மற்றெங்கே சென்றிட்டார்?
கண்டு வருவேன்’ எனக் கண்ணீர்க் கனலடக்கிக்
கொண்டு, புறப்பட்டாள்; கூடுகின்ற சந்தைக்கு!
மக்கள்; பெருவெள்ளம் மண்டியெதிர் பாய்ந்தது போல்
மிக்கவிரை வாகவொரு திக்கிற் செலக்கண்டாள்.

வருக! விரைக! பெறுக! வருக! விரைக!
பெரும் கவர்ச்சிகொள் விதமதாக
இவ்வொலி எழுப்புகின்றான் இனிய முகத்தினன் ஆங்கு
எக்களிப் புடனேகூட்டம்; ஏகமாய் விற்பனை தான்!
பொங்கிடும் மகிழ்ச்சி ஆங்கு ததும்பக் கண்டாள்
பொருள் மிகுதியும் விரைந்து குவியக் கண்டாள்.
இவ்விதம் கடைநடத்தும் காளையையும் கண்டாள்
அன்னவன் யாரோ என்னில், மணாளன் ! ஆமாம்!
திகைத்தனள் மாது ஓர் கணம் தீ மிதித்தாற்போல்
சிரித்தனள் அவன் நிலையைக் கண்டு மறுகணம்
கண்டனன் காதலின்ப வல்லியைத் தான்
கடைதனில் இருந்தவாறே புன்னகை உதிர்த்தான்
நெருங்கியே வந்த நேரிழையாளிடமே
நேரம் அதிகம் செலவிட முடியா நிலையில்
சென்று செப்பினன் சிந்தையில் மகிழ்ச்சி பொங்க ;
புதுமுறை வாணிபத்தால் பொருள் குவியுதென்று!
வளர்ந்தது! வளர்ந்தது! விந்தை வாணிபம் !!
குவிந்தது! குவிந்தது! மாபெரு நிதி !!

ஆங்கொருவன் கூவும் அமுதக் குரல் கேட்டாள் :-
“வாங்கிடவே வாரிரோ, வண்ணப் பொருட்களையே?
இப்பெரிய வாய்ப்பினிமேல் எப்போதும் கிட்டாது!
தப்பினால் மிக்க தவறாகும், செப்பிடுவேன்!”

கேட்டார்ப் பிணிக்குங் குரல் கேட்டு, மக்களின்
கூட்டம் விரைந்து குவித்தது வாணிபத்தை!
மங்கை திகைத்து மயங்கி விழுமுன்னர்—
தன்கணவன் தான் வணிகன் என்ப துணர்ந்தாளே !
தன்னையவன் நோக்கித் தலைகுனிந்த ஓர்கணத்தில்
புன்னகை பூத்துப் புகுந்திட்டான் வாணிபத்தில் !
ஏக்கம் பெருகிடவே ஏந்திழையாள் தானெருங்கி
நோக்கினாள்; “நேரம் நொடிப்பொழுதும் வீணாக்கேன்!
பார்த்தனையா, மாமலைபோல் பண்டம் குவிகிறதை?
தீர்த்திடுவேன் நம்வறுமை; செல்க நீ நிம்மதியாய் !”
என்றான், முழுகினான் ஈடற்ற வாணிபத்தில் !
ஒன்றல்ல பற்பலவாய் ஓங்கியதே பல்கி,

குருதி குடித்திட்ட கொல்புலியும்
பிறிதோர் சுவை தேடிப் பெற்றிடாதாம்
வெறி மிகுந்துமே மக்களைக் கொல்லுமாம்
காட்டு முறையது என்கின்றார் கற்றோர் !
நாட்டினிலும் உண்டு அது போலோர் வெறி
பொருள் தேடிப் பெற்றதும் போதுமென் றெண்ணாது
புதிது புதிதாகப் பொருள் தேடி அலைவது
வெறிதான் ! அடக்கிட இயலாது என்பர்.
எளிய வாழ்க்கையில் இன்பங் கண்டவன்
ஏளனம் செய்தவன் கிளப்பிய சூட்டினால்
பொருள் தேடிடப் புறப்பட்ட ஆர்வமும்
வெற்றி தந்தது; உடன் வெறியுங் கிளம்பிற்று.
வீடு மறந்தனன், வேல்விழியாள் நினைவும் மறந்தனன்
பெருங்காற் றசைத்திட ஆடும் மரமானான்
பெருநிதி! புதுமாளிகை! ஏற்றம் மிகவும்;
ஆடம்பரம் அவளை அலங்கரித்து நின்றது காண்
சுற்றிலும் பார்க்கின்றாள்! பளபளப்பு ! மினுமினுப்பு!
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆள் அம்பு!

‘குருதி குத்திடும் கொல்புலியின் நாவிற்
பிறிதோர் சுவையும் பிடிக்காதாம்! மாந்தரையே
கொன்று சிவப்பிரத்தம் கொள்ள வெறியாகும்’—
என்றுரைப்பர் காட்டு விலங்கின் இலக்கணமாய்
பொன்னாசை கொண்டோரும் போதுமென எண்ணாமல்
எந்நாளும் பித்தமிக ஏறி அலைவாராம்!

கனியமுது.pdf


இந்நிலையில் ஆயினான் இன்பவல்லி காதலனும்;
தன்னிலையை மற்றவன் தாழ்வாகப் பேசியதால்—
சூடு பிறந்ததும், சூறைப் பெருங்காற்றால்
ஆடும் மரம்போல ஆசை அலைக்கழிக்க,
வெற்றி பெறுமட்டும் வேறெதையுங் காணாமல்
உற்ற மனையாளின் உண்மையன்புந் தான் துறந்து,

பூந்தோட்டம்! புதுப்பொலிவு ! பொன் ! மணி!
எல்லாம் இருந்தது அவன் மட்டும் அங்கில்லை,
இவளிங்கு ஏங்குகிறாள் பழைமை தனைஎண்ணி
அவன் அங்கு அலைகின்றான் பொருள் குவித்து!
இவளைச் சுற்றிலும் ஓர்பாலை, வெப்பம் மிகுதி
அவனைச்சுற்றிலும் பெருஞ்செல்வம், பெருகு செல்வம்
ஓயாமல் உடை வழக்கின்றான் வேறு நினைப்பற்று
போர் போராய்க் குவிந்திடுது பணமூட்டை
கண்டதால் வெறி மேலும் கொண்டிட்டான்
காளையவன் பணந்தேடும் பாடதிலே மாள்கின்றான்!
கைம்பெண்ணாகிவிட்டாள் கருப்புடை யணிந்தாள்
காதல் உலகினில் வாழ்ந்து வந்த எம்மைக்
காசு தேடிடும் வெறி பாழாக்கிற் றந்தோ !
இல்லறத்தில் எளிமையுடன் இருந்து வந்தேன்.
என்னை மறந்தும் அவர்பொருள் பித்துக்கொண்டு
ஓயாதுழைத்து ஒரு துளியும் பயன்பெறாது
உயிர்நீத்தாரே அந்தோ! உலகை அறிந்திடுவாய்
பணத்தாவே சுவையில்லை பாழாக்குது வாழ்வை

பூந்தோட்டம், மாடு,மனை, பொன், மணிகள், புத்தாடை
நீந்தியெழும் செல்வ நிலைக்களனாய் ஆள் அம்பும்—
எங்கும் பளபளப்பும், ஏற்ற மிகுவாழ்வும்,
தங்கியிவை தான் துய்க்கத் தக்கதாய் ஓய்வில்லை!
பின்னும் பொருள்குவிக்கப் பித்தாய் அலைகின்றான்!
பொன்னாள் தனியாய்ப் பொசுங்குகிறாள் வெம்மையினால்
ஓடுகின்றான்; போர் போராய் ஓங்கியெழும் செல்வத்தைத்
தேடுகின்றான்; அவ்வழியில் தேய்ந்து மடிந்தானே!!

காதலித்து வாழவந்தாள் கைம்பெண்ணாய் மாறியே
தீதளிக்கும் செல்வத் திரளையே மேல்சுமந்து,
“விந்தை மிகுபணமே, வீணாய் உனைத்தேட
அந்தோ! என் அன்பர் அரிய உயிர் நீத்தாரே!”
விம்மினாள்; எண்ணியே வெய்துயிர்த்தாள்; பாழானாள் !
அம்மவோ; ஆரணங்கு கைம்மைக் கருப்புடையில்

எத்தனை இன்பமுடன் இருந்துவந்தோம் முன்னம்
செல்வத்தைத் தேடாமல் செந்தேன் உண்டு மகிழ்ந்தோம்
பணம் தேடும் ஆவலது பாம்பாகியும் வந்து
பண்பாளன் என்கணவன் உயிர்குடித்திட்டதந்தோ !
பொருளிருக்குது எனக்காக மலைபோல—
புன்னகைதான் இல்லை! புருடனவன் இல்லை!
மாளிகை இங்குளது மயக்கு பொருளுடனே
மன்னவன் இங்கில்லை; எனக்காவி இல்லை !
இந்த விதமெல்லாம் எண்ணமிட்ட பெண்ணாள்
பாடிக் காட்டிடவில்லை அவள் மனத்தின் நிலையை!
பார்வை! பெருமூச்சு ! திகைப்பு இதனாலே
பார்ப்போர்க்கு உணர்த்திவிட்டாள் இப்பாடந்தனையே!
எங்கேனும் நெடுந்தொலைவு சென்றிடவே வேண்டும்
ஏகாந்த நிலை பெற்று இருந்திடவும் வேண்டும்
இங்கிருந்து முன்னாளை எண்ணியெண்ணி விம்மி
இருந்திடுதல் இறத்தலினுங்கொடிதாகும் அம்மா!
இந்தவிதம் எண்ணி அவள் புறப்பட்டாள்காண்
‘வானரதம்’ ஏறி நெடுந்தொலைவு செல்ல —

கண்ணாளன் இன்னுயிரைக் கவ்வுங் கடும்பாம்பாம்
மண்ணாகும் செல்வத்தை வைதாள், சபித்திட்டாள் ;
கொட்டிக் கிடக்கின்ற கோடுயர்ந்த மாமலைபோல்
கிட்டியுள்ள செல்வத்தால், கெட்டுவிட்ட இல்வாழ்வும்
மன்னவனும் மீண்டும் வரவகையும் இல்லையன்றோ?
என்னே, என் ஆவலெலாம் ஏகியதே; ஆவியில்லாக்
கூடாகி ஏன் நான் இக்கோடிபொருள் தானடைந்தேன்
வாடா மணவாழ்வு வாய்ப்பதற்கு யாது செய்வேன்?

என்பதெல்லாம் வாய்விட் டியம்பவில்லை; நெஞ்சத்துத்
துன்பமெல்லாம் ஒண்முகத்தில் தோய உணர்த்திட்டாள்
இங்கே இனி மேலும் தங்கினால் முன் நினைவால்
சங்கடங்கள் மேவிவரும்; சாவே சிறப்பென்னும்
எண்ணம் மிகும்; எனவே ஏக்கம் மறைப்பதற்கு—
விண்ணூர்தி ஏறி வெளியூர் புறப்பட்டாள்;

அங்கு குறுக்கிட்டது மற்றோர் அரவு
அழகுளது! ஓர் வாலிபன் உருவினது!
அன்னவனோ செல்வத்தில் புரள்பவன்! சீமான்!
விநாடிக்கு விநாடி அவன் வேலை செய்கின்றான்
விண்ணிலே பறக்கையிலும் வேலை செய்கின்றான்
விழியாலே அவன் நுழைந்தான் பெண்மனத்தில் அன்றே
அவனை மணக்கின்றாள் ஆரணங்கு மகிழ்ந்து
பொருள் தேடி அலைந்திடத் தேவையில்லை அதனாலே
பொங்கிடும் காதலுடன் வாழ்ந்திடுவான் என்று
நம்பிக்கொண்டாள் அந்த நங்கை; அய்யோ, பாவம்!
ஆடலிலும் பாடலிலும் விழா தனிலும் மிகவும்
ஆவலுடனே அன்னவன் ஈடுபடுகின்றான்.
பூங்காவில் உலவுகிறார் புதுக்கீதம் பாடி
காண்போர்கள் வியந்திடவே கவர்ச்சிகரமாக !
அவள் அணியும் ஆடைகள் அலாதி அழகு!
ஆபரணம் புதுவிதம், அலங்காரமுங்கூட
விருந்துகளில் அவள்! பலர் விழிக்கு விருந்தாக—
சிறந்ததொரு வாழ்வு சிங்காரமாக.

வானிற் பறக்கையிலும் வற்றாச் சுறுசுறுப்பாய்த்
தேனின் இனியாளின் சிந்தை கவர்ந்திட்டான்
சீமான் மகனொருவன்; செல்வத்தின் மேற்புரண்டும்
சாமான்ய மாகச் சகியின் மனம்புகுந்தான்!

மீண்டும் புதுவாழ்வு மேவியது மங்கைக்கு!
தூண்டிடும் அன்பால் துவங்கினாள் இல்லறத்தை!
சொத்து மிகவுண்டு; சுகந்தானே தேவையெனச்-
சத்தான காதலிலே சார்ந்திருக்க முந்தினாள்.

ஆடலும், பாடலும், ஆரவா ரத்தோடு
கூடலும், கும்மாளம் போடலும், கோலமுடன்
ஒப்பனை செய்தே உலகம் பின்பற்றச்
செப்பனிட்டாள் வாழ்வைத் திருப்திதான் பெற்றாளோ?


கனியமுது.pdf

ஆயின் அத்தனையும் அவ்விருவர்க்காகத் தானா?
அல்ல ! அவனியோர் கண்டிடும் படத்தினுக்காக?
ஆடை அணிமுறைகள் தமை அறிவிக்க
வாணிபம் பெருக்கிட–விளம்பரம் தனுக்கே!
அலுத்துக்கொண்டாள் சலித்துப் போனாள் அழகுமிக்காள்
ஆடம்பரச் சூழலில் மன அமைதிதான் ஏது?
ஏதுக்குப் பொருள் தேடி அலையும் இவ்வாழ்வு?
இருப்பதுடன் வசித்திடுவோம் சிற்றூரும் சென்று
கொஞ்சுமொழிக் குமரி கூறிடவே அவனும்
கோலாகல மிக்க வணிக உலகு விட்டுப்
பச்சைப் பசேலெனும் பாங்குள்ள இடத்தில்
மாடு கன்றுகளுடன் விவசாயம் மேற்கொண்டான்
அங்கு, வயலிலே சிறந்தது என்வயலே எனவும்
விளைச்சல் மிகுவது என்னுடையதே எனவும்
பசுவில் உயர்ந்தது என்னிடமே எனவும்
பாங்குபெற முனைந்தாலும் வெற்றியே கண்டான்
சிறிதளவு நிம்மதியும் பெற்றிட்டாள் மாது!

அல்லவே! எல்லாம் அவட்காகவே அன்று!
நல்ல விளம்பரத்தால் நானிலம் கொண்டாட!

சூழல் அலுத்தது, சுற்றிச் சலித்திட்டாள்!
"வாழ விரும்பினால் வாணிபத்தைக் கைவிட்டுக்
கொஞ்சுமெழில் கூடிக் குலவும் இயற்கையுடன்
தஞ்சம் அடைந்திடுவோம் சாந்தம் நிலவு"மென்றாள்.

சம்மதித்தான் ; வேளாண்மை சார்புள்ள மாடு கன்று;
நிம்மதிதான்! ஓரளவு நீள நிலைத்ததோ?

கனியமுது.pdf

இந்தவித வாழ்வதுவும் நிலைத்திட விலையே
ஏமாந்த நேரத்தில் - கொழுத்த பசு ஒன்று
கொம்பாலே குத்தி அவனைத் தூக்கிப் போட்டதாலே
வீழ்ந்தான், இறந்திட்டான் இதயம் அளித்தவனும்
மீண்டும் கண்ணீர்! மீண்டும் கருப்புடை!
மீண்டும் கைம்பெண்! மீண்டும் பெருநிதி!
வழக்கறிஞர் வாழ்விழந்த அவளுக்கு
மறைந்தவன் விடுத்துச் சென்ற மாநிதிஅளித்திட்டார்
பொருள்மேல் பொருளாய் வந்து சேருது-
பொன்னவிர் மேனியாள் மனமோ வேகுது.
பொருள்தேடி அலைந்தலைந்து வாழ்விழந்தாரே
பொருளே! எனக்கென்ன உன்னாலே பயனே!
விம்முகிறாள் பெண்ணவளும் செல்வச் சுமைதாங்கி
விழிஅழித்துப் பொன்னாலே திரைதேடிடல் போல்
வாழ்வழித்துப் பணம் என்னை வந்தடையுதந்தோ!
போயொளிவேன் எங்கேனும் பிறர்காணா வண்ணம்
எனை அறிந்தார் கண்டால் என்ன பேசுவரோ!

எம்பசுவுக் கீடில்லை என்றே மகிழ்ந்தவனைக்
கொம்பினால் குத்திக் கொலையில் முடித்திடவே
அய்யகோ!! மீண்டும் அருவியாய்க் கண்ணீரைப்

கனியமுது.pdf

பெய்தனளே; யாதொன்றும் செய்வ தறியாளே!
கைம்மைநிலை யுற்றாளைக் கண்டு, வழக்கறிஞர்
கைம்முதல் கோடி கணவன் வீடுத்ததெனத்
தந்து திரும்பினார்; சிந்தைமிக நொந்தனளே!


வந்து வந்து வெள்ளமாய் வற்றாமல் சேர்கின்ற
செல்வத்தால் யாது பயன்? சீரழிந்து போனபின்னே.
நல்வழியில் வந்ததன்றே நாதர் இருவரையும்
வாரிக் கொடுத்திட்டு வாழ்வை இழந்திட்டேன்
கூரிய கண்ணை விற்றுக் கோடிபொன் வாங்கியென்ன

“போகின்றாள் பார் இவட்கு இலட்சம் பல இலட்சம்
செல்வத்திலே புரண்டிட வல்ல சீமாட்டி
அவ்வளவும் கணவன்மார் தந்திட்ட தய்யா
அவளைத் தொட்டவர்கள் பிணமாவர் மெய்யாய்!
எவ்வளவு செல்வம் இருந்தென்ன இவளுக்கு
இல்லற இன்பமதோ நீடிப்பதில்லை
கொண்டவனை உருட்டிவிடும் கொடிய வளிவளைக்
குவலயம் சுமந்திடுதல் குற்றம், பெருங்குற்றம்.”
இவ்விதமும் இன்னும் பலவிதமும்—
பேசிடுவர் ஏசிடுவர் பற்பலரும் என்றெண்ணி
நாடுதை னைக் கடந்து செல்கின்றாள் பாரீஸ்,
நளினிகளும் நாயகரும் நடமாடும் நகரம்—
ஆங்கவளும் காணுகின்றாள் ஓவியன் ஒருவனையே!
ஓவியம் தன்னால் ஊதியம் கிடைக்கா தென்பதனால்
மோடார் ஓட்டுகின்றான் வாடகைக்கு — ஊர்சுற்றுவோர்க்கு
முரட்டுக் குணம், ஆனால் உள்ளம் வெள்ளை;
எப்படியோ அவனை ஒப்புக்கொள் கின்றாள்
எளிய வாழ்க்கையிலே ஈடுபடு கின்றாள்

"கெட்டவளே, கீழ்மகளே! காதற் கிழத்தியெனத்
தொட்டார் பிணமாவர்! துன்பச் சுரங்கமிவள்!"

என்று பலவாறாய் ஏசுமன்றோ இவ்வுலகம்?
அன்றவள் நெஞ்சுபடும் அல்லல் அறியாதே!

நாடுவிட்டு நாடு சென்று நலிந்த உளந்தேற
நாடுகின்றாள் பாரி செனும் நாகரிகப் பேரூர்!

கனியமுது.pdf

ஓவியந் தீட்டி, வரும் ஊதியம் போதாமல்
ஆவிவண்டி ஓட்டி அதனைச் சரிக்கட்டும்
கள்ளமிலா வெள்ளைமனப் பிள்ளை ஒருவனது
உள்ளம் பிடித்ததால் ஒப்பிவிட்டாள் வாழவே!

செல்வமில்லை ஆகச் சிறப்பான ஏழ்மையிலே
நல்விதமாய் இல்லம் நடத்தி மகிழ்ந்தனளே!

119

அவனில்லா வேளை தன்னில் ஆளனிடம் ஓர் குரங்கு
வண்ணம் குழைத்து ஓவியம் வரைகிறது ஆங்கு
இவனும் வரைகின்றான் அதனையுந் திருத்தி
இன்னார் இவர் என்று எவரும் அறியா நிலையில்
ஓர்நாள் அவன் ஓவியம் ஒன்று
புதுமை கலந்தது புரட்சி மிக்கது என்று
பொருள் அதிகம் கொடுத்தொரு ரசிகன்
வாங்கி விடுகின்றான் வருகிறது விபத்து!
‘ஓவியக் கலைதனிலே ஒப்புயர் வற்றவன் காண்!
காவியம் தெரிகிறது இவன் காட்டும் திரை தன்னில்
என்றெல்லாம் புகழ்கின்றார் பொருளும் குவிகிறது!
‘இசையைத் திரையினிலே காட்டிடுவேன்
ஒலியும் ஓவியமாய்த் தெரிந்திடவே நான் செய்வேன்’
என்றுரைத்துக் கருவிகளை அமைத்துமே ஓவியனும்
ஏதேதோ தீட்டுகின்றான்; எல்லாமே அற்புதம் ஆகுதுகாண்
எங்கெங்கோ விழாக்கள் ! எங்கும் அவன் பவனி !
எளிமை வாழ்வளித்த இனிமை மாய்கிறது
ஏந்திழையாள் இழந்திட்டாள் இல்லற வாழ்வதனை !

தோழன் குரங்கொன்று தூரிகையால் தீட்டுவதை
ஆளன் திருத்தி அழகாய் மெருகூட்டி
விற்பனை செய்வான் விலையும் அதிகமில்லை !
அற்புதமாய் ஓர்நாள் அதிகப் பொருள் தந்தே
ஒப்பற்ற ஓவியம் என்றே உயர்த்திவிட —
அப்பொழுதே ஆபத்தும் ஆரம்பம் ஆகியதாம்!

கோடுகளே காவியமாய்க்—கொட்டியதே ஓவியமாய்
நாடு புகழ்ந்தது; நாடிவந்து செல்வம்
குவிந்தது ! கோல மயிலனையாள் கொள்கை
அவிந்தது ! மாய்ந்தது அவள் வேண்டும் ஏழ்மை!

விழா எடுத்தார்; ஓவியனும் வெற்றி உலாவந்தான்;
அழாக் குறையாய்ப் பெண்ணழகி அங்கே குமைந்திட்டாள்
தேவை மிகுதியினால் தேர்ந்த பொறியமைத்தான்
ஓவியங்கள் ஏராளம் உற்பத்தி செய்து விற்றான்!

இந்தவிதம் விந்தைமிகு கலையினிலே ஈடுபட்டுக்
கருவிகளே அமைத்தவனும் கலையினைப் பெருக்கி வர—
கருவிகளுக்கிடையே சிக்கியே ஓர்நாள்
செத்துவிட்டான் ஓவியனும்; செல்வி விதவையானாள்!
ஓவியன் திரட்டிவைத்த பெருநிதியும்
ஒயிலிழந்து ஒடிந்த மனமுடைந்த பெண்ணுக்கே!
கருப்புடையில் அவளைக் கண்ட கல்மனமும் உருகும்
களிப்பான வாழ்வுதேடி அலைந்தவளின் கதியைக் காணீர்

சின்னாட்களுக்குப் பிறகு சித்தச் சோர்வுடனே
சிற்றுண்டிக் கடையொன்றில் சென்றவள் இருக்கையிலே
கோமாளி கூத்தாடிக் குபீர் சிரிப்பெழுப்பி
ஆங்கொருவன் ஆடியுமே அகமகிழ வைத்திட்டான்.
ஊதியம் அதிகமில்லை; உயர்ந்த நிலையுமில்லை
எப்படியோ சிரிப்புமூட்டி வாழவழி கண்டிட்டான்
இவனுடனே வாழ்ந்திட்டால் இடர் ஏதும் ஏற்படாது
என்றெண்ணி அன்னவளும் அவனை மணந்தாளே!

கண்டு பிடித்த கருவியே காலனாய்
உண்டதே ஆவி; உடன்விதவை ஆயினளே!
ஓவியன் ஈட்டிவைத்த ஒப்பரிய பொற்காசும்
பாவியவள் மாநிதிபின் பண்டாரஞ் சேர்ந்தனவே!
கல்நெஞ் சுருகும் கறுப்புடையிற் கண்டவர்க்கே;
உள்நெகிழும் உல்லாச வல்லி உயிர்வாதை!
சோர்ந்தடங்குஞ் சித்தத்தின் தொய்வு நிறைவதற்குள்
தீர்ந்தது. சின்னாளே! சீமாட்டி ஓர்தினத்தில்
சிற்றுண்டி மாளிகை சென்றாள் அமர்ந்திருந்தாள்.
உற்றவர் உள்ளம் உவகைக் களிகொள்ள
ஆடினான் கோமாளி ஆங்கொருவன்; எக்களிப்பால்
பாடினான்; யாவரும் பல்தெரியத் தாம் சிரித்தார்!
"ஏழையாய் உள்ளான்; எனக்கும் நகைப்பூட்டி
வாழவழி காட்டுவான் வாராது துன்பமெனக்
கண்மணி நான்காம் கணவனாய்க் கல்யாணம்
பண்ணீனாள், நல்ல பயனடைவோம் என்றெண்ணி!

சிற்றுண்டிக் கடையினிலே வருவோர்கள்
மனமகிழ வேடமிட்டுப் பலவேடிக்கைதான் காட்டிக்
கிடைத்ததைக் கொண்டவனும் கிள்ளை ஆவலுடனே
தொல்லை தாக்காத வாழ்வினைப் பெற்றிருந்தாள்.

படமெடுக்கும் கூட்டத்தார் கண்களிலே பட்டுவிட்டான்
பட்டம் ஏதும் பெறாது பகட்டு துளியும் இராது
கோமாளி ஆட்டமதைக் குடம்பிக்காகக் கொண்ட
நடிகனவன் ! நாடி அவள் பெற்றிட்ட நாயகன்
அவ்வளவே! அந்தரத்தினிலே அவனை ஏற்றி வைத்திட்ட
அவன் நடிப்பு! அவன் அழகு! அவனிமெச்ச உயர்ந்தது காண
அரண்மனையோ என்றெவரும் வியந்திடும் வீடுபெற்று
அடிவருடப் பல்லோர்கள், ஆடம்பரம் அமோகம்!

அவளிருக்கும் நிலையினையும் அவன்காண நேரமில்லை
ஓயாமல் படப்பிடிப்பு! ஒய்யார மிகுவாழ்வு
சிரித்துப் பேசிடவோ நேரமில்லை அவனுக்குச்
சேல்விழியாள் கண்டுகொண்டாள் செந்தேன் வந்ததென

வேடம் பலபூண்டு வேடிக்கை காட்டிடுவான்,
ஆடம் பரமில்லை, ஆர்ப்பரிப்பு தானுமில்லை,
தொல்லையில்லை; தூயோன்; துளியும் பணத்தாசை
இல்லையில்லை; என்றும் எனைப்பிரியான்; போதுமே!
கிட்டிவந்த சொற்பத்தில் கிள்ளை மகிழ்வுடனே
எட்டிவிட்டோம் இன்பத்தின் எல்லை எனஇருந்தாள்.
பேரிடி தாக்கியது பேதைப் பசுமரத்தில்!
ஆரிடம் கூவி அரற்றுவாள் இந்நிலையை?
கும்பி கழுவமட்டும் கோமாளி வேடத்தை
நம்பியிருந்த அவள் நாயகனைச் சூழ்ந்துகொண்டார்.
"என்னே உன தழகுக் கெங்கள் திரைப்படத்தில்
முன்னேற்றங் காண முயல்வோம்; விரைவாக
உச்சிக்குச் செல்வாய்; உயர்வாய்!" எனக்கூறி
மெச்சினார். இச்சையுற்றான் மேல்நிலைக்கும் சென்றிட்டான்.
மன்னன் அரண்மனை போல் மாளிகை, வாகனம்,
பின்னே அடிவருடப், பேச்சைச் செயலாக்கப்
பல்லோர் நிறைந்திட்டார் ! பம்பரமாய்ச் சுற்றியே

அல்லும் பகலும் அயராப் படப்பிடிப்பாம்!

ஓர்நாள் அவனுடைய உயர்திறத்தைப்
பாராட்டக் கூடிவிட்ட பல்லாயிரவர்
ஓடோடி அவனைச் சூழ்ந்து கொண்டதாலே
அவர் நடுவே சிக்கி அவன் மிதியுண்டு மாண்டான்!
மீண்டும் வந்தது அந்தக் கருப்புடை
மேலும் சேர்ந்தது அவட்குப் பெருநிதி-
'இத்தனை தொல்லையைத் தந்திட்ட பணமே
இனி உன்னை நான்சேர்த்து வைத்திடவோ கூடாது
சேச்சே! நீ வேண்டாம்! சென்றுவிடு உடனே'
எனச் செப்பாமற் செப்பி ஓர் திட்டம் வகுத்தாள்
"அத்தனை பணத்தையும் அளித்திட வந்தேன்
அரசாங்கம் இதனை அருள்கூர்ந்து ஏற்று
அல்லல்தனைத் துடைத்து ஆதரிக்க!" என்றாள்.
இதனைக் கேட்டவுடன் மயக்கம் அதிகாரிக்கு.
இவளுக்குச் சித்தம் குழம்பற்று என்று
மருத்துவ நிபுணரிடம் அழைத்துமே சென்றார்
அவரிடம் கதை தன்னை அன்னவளும் கூற-
மயங்கிக்கீழே அவரும் வீழ்ந்துவிட்டார், அந்தோ!

ஓய்யாரம், உல்லாசம், உற்சாகம் உண்டெனினும்-
அய்யோ தன் அன்பிற் கரசியிடம் இன்பமாய்
வாய்ச்சொல்லும் பேச வகையில்லை; நேரமில்லை!
காய்ச்சிய நெய்யாகக் கண்ணாள் உருகுகின்றாள்!
பண்பட்ட வீரனைப் பாராட்டிப் போற்றிட
நண்பர்கள் கூட்டம் நடத்திய ஓர்விழாவில்-
பல்லாயிரம் பேர்கள் பார்த்த நெருக்கடியில்
கொல்லாமல் செத்தான்; குவளைக்கண் மோதியழ!
மீண்டும் கருப்புடையும், மீண்டுமந்தக் கண்ணீரும்!
மாண்டவன் செல்வம் வேண்டாது வந்ததால்
திட்டமொன்று தீட்டித் - திரளான தன்சொத்தைக்
கெட்டழிந்து போனவரின் கீழ்மை அகற்றுதற்கே
எண்ணி அரசாங்கம் ஏற்ற அலுவலர்பால்
நண்ணி அவள் திட்டம் நவின்றதுதான் தாமதம்....
அன்றவரும் அஞ்சி "அழைத்துச்செல் வைத்தியர்பால்!
சென்றிவளின் சித்தம் திடுமென்று பேதலித்த
செய்திசொல்!" என்றார்; சீமாட்டி அங்ஙனமே
எய்தி, மருத்துவர்க்கு யாவு ; விரித்துரைத்தாள்?

பணியாள் ஒருவன் வந்திட்டான் இங்கு
பழைய ஆள் அவன்! பரிகாசம் செய்யப்
படமெடுக்க வந்தானே - அவனே தான்?
நிலைதாழ்ந்து வேலையாளானான் அவனும்.

அவனே இனி நமக்கு வாழ்வளிக்க வல்லான்
வாழ்ந்து கெட்டுவிட்டான் வலிவிழந்து விட்டான்
வாரிச் செல்வமதைக் குவித்திடவே மாட்டான்
வாழ்வு எளிமையுடன் இனிமை காண்போம் என்று
அவனைத் தன் கணவனாய் ஆக்கிக் கொண்டாள் மாது

இனிமையாய்ச் சென்றது சில ஆண்டு தாமும்
மக்கள் மூவர் பெற்று மகிழ்ந்திருந்தாள்.
மாளிகை வாசமில்லை ! மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை.


கனியமுது.pdf

கேட்ட நிபுணருமே கீழே மயங்கிவிழப்-
பாட்டாளி ஆடையிற் பண்டைய ஆள்வந்தான்!
உந்துவண்டி ஏற்றிமுன் ஊர்சுற்றி வந்தானே-
முந்திப் படமெடுக்க முன் வந்து தோற்றானே-
அன்னோன் வளங்குன்றி ஆளாய்ப் பணிபுரிந்தான்!
"முன்னாளில் நம்மை முதன்முதலாய்க் காதலித்தோன்
வாழ்வு நலம் கெட்டு வறுமையில் வாடுகின்றான்,
வாழ்வளிக்க வல்லான் வளரா எளிமையினால்
என்றுந் துணையிருப்பான், இன்பந் தனிமையுடன்
குன்றாதென் றெண்ணிக் குறித்தாள் கணவனாக!ஆண்டுகள் சிற்சில ஆயின மேன்மையாக!
தீண்டுங்கால் மெய்க்கின்பஞ் சேர்க்கும் மழலைகள்
மூன்று பிறந்தன; மோகம் குறையவில்லை!
ஈன்றவள் நெஞ்சறிந்தே ஏழை உழவனாய்
ஏர்முனையிற் பாடுபட்டான், ஏற்றமுடன் வாழ்ந்தானே

ஓர்நாள் அவன் வீட்டோர வயலில்
இயந்திரக் கலப்பை கொண்டு உழுதிட்டபோது
பீறிட்டுக் கிளம்பிற்று எண்ணெய் ஆறாக!
எண்ணெய்! எண்ணெய் என்று எக்களிப்புடனே
துள்ளிக் குதித்தவனாய் கூவிடவே
மாது, வந்தது புதிய ஆபத்து என்று
திடுக்கிட்டுப் போனாள் விழியில் நீர்சோர
எண்ணெய் கிடைத்திடுது நம்வயலில்
எண்ணெய் தங்கமதைத் திரட்டியே தருமே
செல்வம் மிகுந்திடுமே மனைமாட்சி அறுமே
மீண்டும் கருப்புடையோ! கண்ணீரோ என்று
மாதவளும் பல எண்ணி மருண்டு கிடந்திட்டாள்

ஓர்நாள் உழுகையிலே நற்கழனி உள்ளிருந்து
பீறிட்டு மேற்கிளம்பிப் பேரருவி போற்பாய்ந்தே
ஆறாய்ப் பெருகியதே அத்தனையும் மண்ணெண்ணெய்

துள்ளிக் குதித்தான் துணைவனவன் கள்வெறிபோல்!
உள்ளங் துணுக்குற்றாள் : 'உற்றதே தீமையினி-
ஏராளத் தங்கமும் எண்ணெய் வயல் மூலம்
சேரத் துவங்கிடுமே! தீர்ந்திடுமே இல்வாழ்க்கை!
எம்மவர் சாவாரோ? ஏனிந்தச் செல்வநிலை!
அம்மவோ, மீண்டும் அகலாக் கருப்புடையோ?'
என்று புலம்பி இதயங் குமுறுகையில் ......

கனியமுது.pdf

அண்டை வயலிருப்போர் அக்கணமே வந்து
அறியாது எமது எண்ணெய்க் குழாயினையே
பழுதாக்கிப் போட்டாயே! பார் எண்ணெய் வெள்ளம்
எனப் பதறிக்கூறினர், பாவை மனமகிழ்ந்தாளே!

எண்ணெய் நமதல்ல! செல்வம் குவிந்து பெருகாது
ஆகவே ஆபத்து நமக்கில்லை அதனால்
இல்லற வாழ்வுக்கு இடையூறு இல்லை
இனிதாக வாழ்ந்திடலாம் ஏற்றவருடனே
என்றெண்ணிப் பூரித்தாள் ஏந்திழையாள்
பலதோல்விக்குப் பிறகு வாழ்வில்
இன்பம் பெற்றிட்டாள்-

கனியமுது.pdf

"அன்று நீ ஏர்முனையில் ஆழத் துளைத்தது
நீளப் புதைத்த எம் நெய்செல் குழாயாகும்! பாழாக்கிப்போட்டனையேபாவி"யென அண்டையுளார்
கூவியது கேட்டாள், குதூகலித்தாள் கோவையிதழ்ப்
பாவை தவித்தாள் பதற்றமும், "தேவையில்லா

ஆபத்துச் சூழ்ந்ததென அஞ்சினேன், அம்மம்மா!
பாபத்தைத் தூண்டிவிடும் பண்பற்ற செல்வமே!

இல்லறத்தால் ஏற்படும் ஈடற்ற இன்பத்தைக்
கொல்ல வரும் நச்சரவே! கோடி கொடுத்தாலும்
எத்தனையோ தோல்வி இடையூறு நேர்ந்தபின்னர்க்
கொத்து மலராய்க் குவிந்திட்ட பேரின்பம்
வாய்த்திடுமோ?" என்றாள் -மனமகிழ வாழ்ந்திட்டாள்!

பணம்படுத்தும் பாடுதனை உணர்ந்திடவும்
பணம் தேடும் அரிப்பினால் ஏற்பட்டு விடும்
பாழ்நிலையை, விபத்தை விளக்கிடவே
படம் மெத்தத் தரமாகப் பலன் அளித்திடவே-

பார்த்ததில் சிரித்து மகிழ்ந்ததுடன்
சிந்தைக்கு விருந்து பெற
வழி இருந்திடக் கண்டு
மகிழ்ந்திருந்தேன் நானே!

கனியமுது.pdf

பார்த்துவந்த பின்புநான் பாடம் மறக்கவில்லை!
"செல்வத்தைத் தேடித் திரிவதால், ஓடுவதால்,
பல்விபத்தும், பாழும், பயனில்லா வாழ்வுமே
சித்திக்கும்; என்று சிரிப்பூட்டும் நற்படத்தில்
தித்திக்கும் நன்மருந்து சிந்தனைக்கும் தந்தாரே!

ஆளுந் திறனென்ன அற்புதமாய் என்றெண்ணி
நாளும் மகிழ்ந்திருந்தேன் நன்கு!

கனியமுது.pdf
கனியமுது.pdf