கனியமுது/தாய்மைப் போர்.

விக்கிமூலம் இலிருந்து


பரந்தாமன் சீத்தாவை மணம்புரிந்து
    பத்தாண்டு காலத்தைக் கழிப்ப தற்குள்-
வருங்தாத நேரமில்லை ; குலங்த ழைக்க
    வழித்தோன்றல் ஒன்றேனுங் காணோ மென்று !
சிறந்ததெனப் பெரியோர்கள் மொழியைக் கேட்டுச்
    செல்லாக திருத்தலங்கள் எங்கு மில்லை!
“இறந்தாலும் ‘புத்’ என்ற நரகுக் கன்றே
    ஏகிடுவோம்!” என்றஞ்சி நாளும் செத்தான் !


ஏங்காதோ பெண்ணுள்ளம் தாய்மைக் காக ?
    ஏற்றிடுமோ மலடியெனும் இழிந்த சொல்லை ?
தாங்காத துயரத்தை மறைத்த வாறே
    தனிமையிலே தான்பெருக்கும் கண்ணிர் ஒடை !
நீங்காத வாஞ்சையுடன் கணவன் கொண்ட
    நெருக்கத்தில் சிறு பிளவு தோன்றக் கண்டாள்.
தீங்கான பாதையிலே போகான் என்ற
    சிறப்புக்கும் மாசுவர நடக்க லானான் !

கொஞ்சி மனம் மகிழுதற்குக் குழந்தையில்லாக்
    குற்றமெலாம் பெண்மீத மட்டுந் தானோ ?
கிஞ்சிற்றும் தன்குறையை எண்ண மாட்டான் !
    கெட்டொழியத் திட்டமொன்று திட்டி விட்டான்
நஞ்சனைய கருத்தளித்தார் சுற்றத் தார்கள்:-
    நல்லதொரு பெண் தேடி மணந்து கொண்டால்
எஞ்சியுள்ள வாழ்நாளில் மகன்பிறப்பான் :
    ஏராள சொத்துக்கும் வாரி சுஆவான் !


மூத்தாளின் சம்மதத்தைப் பெறுவ தற்கு
    முனைந்திட்டான் ! கடிதமொன்றை எழுதிக் கொண்டு
கூத்தாடும் கரங்களொடு, குழறும் வாயால்,
    குனிந்த தலை நிமிராத தோற்றங் காட்டிச்
“சீத்தா ஓர் கையொப்பம்...” என்பதற்குள் :
    சிற்றத்தால் முகஞ்சிவக்கச் சீறி நின்று,
“சாத்தானின் கையாளாய் ஆனிர், அத்தான் !
    சரியான முடிவொன்றை நானே சொல்வேன்:

தங்களுக்கு மகவில்லை; எனக்குந் தானே?
    தனியாக இன்னெருத்தி வருவ தாலே
தங்களுக்கு மகன்பிறந்தால், எனக்கு நேரும்
    செளகரியம் ஏதுமுண்டோ ? அதனால் இந்தச்
சங்கடத்தைத் தீர்ப்பதற்கு, நானும் மற்றோர்
    தகுதியுள்ள கணவரையே தேட வேண்டும்!
இங்கிருவர் மனக்குறையும் தீரு மன்றோ ?
    என்ன பதில்?” எனக்கேட்டாள் வீர மங்கை !


இடியோசை கேட்டவனாய்த் திடுக்கிட் டுப்போய்
எதிர்நிற்கும் திறனற்ற கணவன் நோக்கி,
“அடியாளை மன்னிப்பீர், அத்தான்! இந்த
அலங்கோலம் யாதொன்றும் நிகழ வேண்டாம் !
முடியாத செயலுண்டோ உலகில் இன்று ? -
முதிர்ந்ததோர் உடற்கூறு வல்லா ராலே
விடியாத நம்வாழ்வில் வெள்ளி தோன்றும் ,
விரைந்திடுவோம்! “என்றிட்டாள், வெற்றி பெற்றாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=கனியமுது/தாய்மைப்_போர்.&oldid=1382877" இலிருந்து மீள்விக்கப்பட்டது