கனியமுது/பயந்தான் உண்டோ?

விக்கிமூலம் இலிருந்து


வண்டியோட்டுங் குப்பண்ணன் பருவக் காளை;
      வரவுக்குக் குறைவில்லை; இரவுப் போழ்தில்
கொண்டமட்டுங் குடித்திடுவான்; குதிரை தின்னக்
      கொள்வாங்கி வைத்திடுவான்; மீதிக் காசில்
உண்டுவிட்டும் படுப்பதுண்டு ! குடிசை காக்கும்
      உரிமையுளார் யாருமில்லை! ஊரார் பார்த்துக்
கண்டபடி அலைக்கழியா திருப்பா னென்று
      கன்னியம்மாள் என்பவளைக் கட்டிப் போட்டார்!

நிறுத்தவில்லை அவன்பழக்கம் ! நேர்மை கெட்டோர்
      நெறியற்ற அல்வழியில் காய்ச்சி விற்கும்
வெறுத்தொதுக்க வேண்டியதீச் சரக்கு தம்மை
      வீதியிலே புரளுமாறு விழுங்கி வீட்டுப்—
பொறுத்திருக்க ஒண்ணாத நீதி மன்றம்
      புத்திவர மூன்று மாதம் சிறையில் தள்ள—
மறுத்து வழக் காடுதற்கு வழியு மின்றி

      வதைந்திட்டான்; மனையாளும் தனியே ஏங்க!

மதுமலர் போல் இன்பத்தைத் தேக்கி வைத்து
       வாழ்க்கையதன் சுவைநுகரத் துடித்து வந்த
புதுமணப்பெண், வெறுங்குடிசை—குதிரை வண்டி
       பொல்லாத அயல்வீட்டார் கொல்லுங் கண்கள்-
அதுவரையில் அறிந்திராத பிரிவுத் துன்பம்—
       அடிவயிற்றில் வளர்கின்ற கருவின் தொல்லை—
எதுவரினும் துணிவதென ஓட்ட லானாள்,
       எங்குமிலாப் பெண் இயக்கும் குதிரை வண்டி!

குப்பண்ணன் சிறையினின்று வரும் மீண்டும்
       குதிரைக்குக் கடிவாளம் பிடிப்பான் சின்னாள்!
இப்புவியின் மக்களினம் பெருக்கு தற்கே
       இயன்றவரை ஒத்துழைக்க வந்த வன் போல்-
தப்பாமல் மனைவிக்குக் குழந்தைப் பேறு.
       தந்திடுவான் ! மறுபடியும் மதுவில் முழ்கி,
எப்போதும் குடியிருக்க ஏற்ற தென்றே

       ஏகிடுவான் சிறைக்கோட்டம்; இதுவா டிக்கை !

தாயாகிப் பிள்ளை பெறும் இயந்திரம் போல்
      தாங்கவொணாத் துயரத்தைச் சுமந்த தாலும்,
ஓயாத உழைப்பாலும் உடல்க லிந்தே—
      உணவுக்கே அனுதினமும் போராட்டத்தால்
நோயாகிப் படுக்கையுடன் கிடக்க லானாள் !
      கொடித்து வீழ்ந்த குதிரைக்குக் கால்முறிந்து
நாயாக நலிந்துயிரை விட்ட தாலே—
      நைந்துமனம் நெகிழ்ந்துருகித் தேய்ந்துபோனாள்

சிறையிலுள்ள கைதிகளை கண்காணிக்கும்
      செங்கோட்டான் குப்பண்ணன் பெயரைச் சொல்லி,
முறையுடனே அரைமாதம் விடுப்புத் தந்து
      முடுக்கிவிட்டார் ! ஊர்நோக்கி வருவ தற்குள்—
குறைவாழ்வில் தவித்திட்ட கன்னி யம்மாள்
      குழந்தைகளைக் கதறிவிட்டுப் போய் விட்டாளே!
நிறைவாழ்வின் கரைகண்டோன் தரையில் வீழ்ந்து

      நெற்றிமோதி அழுகின்றான்; பயன் தான் உண்டோ?