கனியமுது/பள்ளித் தோழி.

விக்கிமூலம் இலிருந்து


என்பள்ளித் தோழிதானே இராதா, எங்கள்
    இருவருக்கும் நெருக்கமாக இராதா நட்பு?
பண்புள்ள பெண்போலப் பாசாங் காகப்
    பழகிடுவாள், புரிந்துகொண்டும் மறைத்து வந்தேன்!
அன்புள்ள பெற்றோரும் அவளுக் கேற்ற
     அழகுமண மகனெருவன் தேர்ந்தெடுத்துப்
பெண்பார்க்க வருநாளில் எனைய ழைத்தார்.
பெருந்தன்மை யால்உடனே சென்று நின்றேன்.


எதிர்பாரா விந்தை அந்த இளைஞ ருக்கோ
    என்மேல்தான் பெருவிருப்பாம்; எழுதி விட்டார்!
புதிராகத் தோன்றிடினும், விளக்க மாகப்
    பொருள்பொதிந்த கடிதத்தில் வரைந்தி ருந்தார்!
“குதிர்போல வளர்ந்திருந்தும் குணத்தில் கோணல்,
    குறிப்பாக நான் உணர்ந்து கொண்டேன்!” என்றார்.
அதிர்ச்சிமிக அடைந்திருப்பாள் இராதா! அன்றே
    அவளுக்குச் சமாதானம் கூறச் சென்றேன்!

என்செய்வேன்? என்குற்றம் ஆகா தன்றே!
    இளமைமுதல் என்செழித்த முகத்தில் தேங்கும்
புன்சிரிப்பும், கன்னத்தில் குழியும்-காண்போர்
    புலனையெலாம் என்பாலே ஈர்க்கும்; தஞ்சை
நன்செய்போல் நயப்பார்க்கு நலன்வி ளைக்கும்
    நற்பண்பா டுடையவள்நான் என்றும்; மாறாய்
வன்செயலுக் கிருப்பிடம்என் தோழி என்றும்
    மற்றவர்கள் கூறுகின்ற வழக்கம் உண்டு!


பெருஞ்சிரிப்பு விரவுகின்ற முகத்தோ டொன்றும்
    பேசாது வரவேற்றாள் தனிய றைக்குள்!
“வருஞ்செய்தி தெரிந்ததனால் காத்தி ருந்தேன்;
    வாடி, என்றன் தோழி, உனக் கேற்ற தாகத்
தரும்பரிசை ஏற்றுக்கொள்!” என்று கூறித்
    தடாலென்று குரல்வளையை நெறிக்க லானாள்!
விரும்பியது கிட்டாத வெறுப்பால் வந்த
   வினையிதுவோ விரைந்தோடிப் பிழைத்தேன்யானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=கனியமுது/பள்ளித்_தோழி.&oldid=1382886" இலிருந்து மீள்விக்கப்பட்டது