கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஞானி கன்பூசியஸ் வாழ்க்கை வரலாறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
5. ஞானி கன்பூசியஸ் வாழ்க்கை வரலாறு

சீன நாட்டின் மாபெரும் ஞானி மட்டுமல்ல; உலகம் முழுவதும் போற்றிக் கொண்டாடப்படும் பொதுவான ஒரு தத்துவ ஞானி கன்பூசியஸ்.

ஞானி என்றால், ஏதோ முற்றும் துறந்து, உலகியலை உதறி, இல்லற வாழ்க்கை விட்டு ஒதுங்கி வன வனாந்திரங்களைச் சுற்றிக்கொண்டு, காயோ கனியோ, கந்த மூலமோ, புற்றோ, புதரோ, கட்டாந்தரையோ என்று உண்டு உறங்கி, ஆடைகளற்று அல்லது அம்மணமாய் திரிந்து, போகியாக இருந்தவன் யோகியாக மாறி ஊர்களுக்கு உபதேசம் புரியும் புராணக் காலத்துப் பரமார்த்திக சந்நியாசியாகி, 'காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா' என்று பாடித்திரிந்த ஞானி என்ற பெயரை பெற்றுக் கொண்டவர் அல்லர் கன்பூசியஸ்.

உலகுக்கு அறம் போதித்த திருவள்ளுவர் பெருமானைப் போல, நல்லறமே இல்லறம்; பெண்ணின் பெருந்தக்க யாவுள?. மங்கலம் என்ப மனைமாட்சி, உலகுக்கு வாழ்வறம் வகுத்து, மக்களோடு மக்களாய் மாண்புடன் வாழ்ந்து, நடை முறை வாழ்வுக்கு அரசியல் ஞானம் போதித்து, சாதாரண ஏழை மக்களும் பின்பற்றக் கூடிய கர்ம மார்க்கத் தொண்டுகளாற்றி நானும் ஒரு மனிதன் தான் என்று வாழ்ந்துகாட்டிய ஞானி கன்பூசியஸ்!

கன்பூசியஸ் சீன நாட்டு மக்களுக்குக் கூறிய நல்லறங்களை, அந்த நாட்டு மக்கள் ஏதோ ஒரு மத போதனை போல பயபக்தியோடு ஏற்றுக் கொண்டார்கள் என்றாலும், அவர் மதவாதி அல்லர்; மதத்தை உருவாக்கிய மாபெரும் மகானும் அல்லர்!

கன்பூசியஸ் அறநெறிகள்-சீன மக்களை நல்வழி நடத்திச் செல்லும் ஞானோபதேசங்களாக இருந்தன! அதனால் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியும், இன்றும் அவர் சீனநாட்டு மக்களது நெஞ்சங்களிலே பக்தியுலாவாகப் பவனி வருகிறார் என்பவற்றுக்கு அடையாளமாக இன்றும் எண்ணற்ற திருக்கோயில்கள் கன்பூசியஸ் மகான் பெயரால் இருக்கின்றன.

இவ்வளவுக்கும் அவர், மதத்தைப் பற்றியும், மதத்தின் தலைவனான கடவுளைப் பற்றியும் மக்களுக்குப் போதித்தவர் அல்லர்; தனி மதம் எதையும் நிறுவியவரும் அல்லர்! மனிதன் என்பவன் பிறப்பதற்கு முன்பு எங்கிருந்து வந்தான், இறந்த பிறகு எங்கே போகிறது அவன் ஆவி என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து அவுற்கு மோட்சமா-நரகமா? என்ற கற்பனைகளை எழுப்பி மக்களைப் பயமுறுத்தியவரும் அல்லர். பலவீனப் படுத்தியவரும் அல்லர்; என்றாலும், அவருக்கு சீனா நாட்டிலே திருக்கோயில்கள் இன்றும் உள்ளன!

அந்த மகானுடைய மாணவன் ஒருவன் அவரிடம் மரணத்தைப் பற்றிய விவரம் கேட்டபோது; "வாழ்க்கையைப் பற்றியே ஒன்றும் அறியாத உனக்கு மரணத்தைக் பற்றி நீ என்ன தெரிந்து கொள்ள முடியும்? என்று அவனை திருப்பி விடை மூலம் வினா கேட்ட விந்தைமிகு ஞானி கன்பூசியஸ்.

இந்த பேரறிஞனை, சீன மக்கள் மகான்களில் மகான், ஞானக் களஞ்சியத்தின் வைரமணி என்றெல்லாம் இன்றும் பயபக்தியுடன் அவரைப் புகழ்ந்தாலும், அந்த ஞானிகளின் தலைவனான கன்பூசியஸ், மக்களை வியப்பில் ஆழ்த்தும் எந்த அற்புதங்களையும் உலகுக்கு செய்து காட்டியதால் புகழ் பெற்றவர் அல்லர்! அதனால், ஒரு கூட்டத்தையும் தன்பின்னால் சேர்த்துக் கொண்டு இயங்கியவரல்லர் !

அற்புதங்கள் ஆற்றல் காட்டும் வீரதீரச் செயல்கள், மாபெரும் கிளர்ச்சிகள், மகா ஞானிகள் பற்றியன எல்லாம் என்னிடம் யாரும், எதுவும் கேட்கக் கூடாது என்று அவர் உயிருடன் நாட்டில் ஞான உலா வந்தபோது கேள்வி கேட்டவர்களை எல்லாம் திட்டவட்டமாகக் கண்டித்தது மட்டுமல்ல; வழிகாட்டியாகவும் விளங்கியவர் கன்பூசியஸ்.

பர்ணசாலைகள், ஆசிரமங்கள், பங்களா வாழ்க்கைப் படாடோவங்கள் தேவாலயத் திருக்கோலத் திருமடங்கள் என்பனவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி, தனித்தனியாகக் காட்டுக்குப் போவதற்குப் பதிலாகநாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒதுங்கி வாழும் சில துறவிகளைப் பற்றி ஒரு மாணவன் அவரைக் கேட்டபோது; 'நாம் பறவைகளோடும் மிருகங்களோடும் உறவு கொள்ள முடியாது; சகமனிதர்களோடும் சரிசமத்துவமாக உறவு கொள்ள முடியவில்லை என்றால், வேறு யாரோடுதான் நம்மால் உறவு கொள்ள முடியும்' என்று தூயத் துறவுக்கே துறவாடை தந்த தூய நெஞ்சினர் கன்பூசியஸ்!

எந்தெந்த நல்லொழுக்க முறையில் மனிதன் ஏற்றத்தோடு வாழமுடியும் என்பதை எண்ணியெண்ணி, அதற்கான ஒரு சமுதாயத்தையும் நெறிகளையும் உருவாக்கிட அல்லும் பகலும் அயராது உழைத்து அரும்பாடுபட்ட மனிதகுல மாமேதை கன்பூசியஸ்!

'நான் கண்ணியமும் நேர்மையும் மிகுந்த மனிதனாகவே வாழ்ந்திட முயன்றேன். எனக்குத் தெரிந்தவற்றை மட்டும் பிறருக்கு சலிக்காமல் எடுத்துக் கூறினேன்' என்று மக்கள் இடையே மார்தட்டித் தைரியத்தோடு கூறியவர் கன்பூசியஸ்!

'மக்கள் என்றால், துன்பமும் வேதனையும்படுபவர்கள்; அல்லல் வாழ்விலே அவதிப்படுபவர்கள்; இப்படிப் பட்டவர்களோடுதான் நான் சேர்ந்து வாழ வேண்டியவனாக உள்ளேன்! நாடெங்கும் இவ்வாறு மண்டிக்கிடக்குக் கலவரம், ஒழுங்கின்மைகளை அகற்றவே என் வாழ் நாட்களைச் செலவழித்தேன்' என்று மக்கள் படும் துன்ப, துயர வேதனைகளுக்காக மெழுகுவத்தியைப் போல அவர்களுடன் இணைந்து வாழ்ந்து உருகி அழிந்தவர் கன்பூசியஸ் என்ற மனிதநேயாபிமான மகான்

இயேசு பெருமான் தோன்றுவதற்கு 550 ஆண்டுகளுக்கு முன்னர், சீன நாட்டின் வடகிழக்கில் 'ஷன்துங்' என்று இப்போது வழங்கப்படும் ஒரு மலைப்பிரதேசத்தில், 'லூ' என்ற மன்னனது ஆட்சியின் கீழ் அடங்கியிருந்த 'ட்சூப்வு' என்ற நகரில், 'சூ-லியாங்-கே என்ற ஓர் அதிகாரிக்கும்- சிங்-ட்சாய் என்ற பெண்ணுக்கும் மகனாக, ஒரு பிரபு குடும்பத்திலே கி.மு. 530-ஆம் ஆண்டில் பிறந்தவர், ஞான மகான் கன்பூசியஸ். இவரை "குங்-பப்யூ-ட்ஸெ என்ற பெயராலும் அழைப்பது உண்டு.

கன்பூசியஸ் சாதாரண ஒரு குடும்பத்திலே பிறந்தாலும் அவரது பரம்பரை 'சுங்' என்ற வம்சத்தைச் சேர்ந்தது என்பது அவரைப்பற்றிக் கூறப்படும் விவரமாகும்.

கன்பூசியஸ் தந்தை நெஞ்சுரமிக்க ஒரு வீரர்; அரசின் அதிகாரி; அவரது முதல் மனைவி பெற்றதெல்லாம் பெண்கள்; அதனால், ஆண் குழந்தை ஒன்று தேவை-வம்ச வளர்ச்சிக்காக என்று எண்ணித் தனது 70-ம் வயதில் 17வயதுடைய ஒருபெண்ணை அவர் மணந்து கொண்டார்.

பாலைவனத்து மணல் திட்டுக்களிலே 'ஓயெசஸ்' என்ற பசுஞ்சோலை ஒன்று தென்பட்டதைப் போல, அவருக்கு ஓர் ஆண் குழந்தை அடுத்த ஆண்டே பிறந்தது!

பாலைவனமும் பசுஞ்சோலையும் சேர்ந்து பெற்றெடுத்தக் குழந்தை; அதாவது 70-ம்-17-ம் சேர்ந்து பெற்றெடுத்த பேரழகுக் குழந்தை; இளமையும் முதுமையும் இணைத்து ஈன்றெடுத்தக் குழந்தை என்பதனாலோ என்னவோ-கன்பூசியசின் இளமையிலே 'ஞானப்பூ' பூத்தது. தனது தாயின் வயதுப் பண்புக்கு ஏற்றவாறு அந்த ஞானத்துக்குரிய ஞானச் சுவையைப் பிழிந்து கொடுத்தது எனலாம்.

இதற்குரிய காரணம், பாலைவனத்தின் வெட்கமும் பசுஞ்சோலையின் தட்பமும்-பருவ - ஞான எழுச்சிகளின் உணர்ச்சிகளும்தான், கன்சிபூசியஸ் என்ற கரு உருமூலமாக அறிவுப் புரட்சி உருவாக்கிய காலத்தின் கட்டாய அருமைச் சம்பவமாகும்.

கன்பூசியஸ் இளமையிலேயே வறுமைக் கடலிலே ஆழம் அனுபவித்தவர்; காரணம் தந்தையார் இறப்பும்; தாயார் வருவாய் போதாமையும்தான்!

நம் நாட்டுக் குழந்தைகள் சிறு பருவத்திலே கூடி மகிழ்த்து அம்மா அப்பா பொம்மை வைத்து விளையாடும் வழக்கத்தை நாமும் பார்த்துள்ளோம். ஆனால், சிறுவன் கன்பூசியஸ் தனது ஆறாம் வயதிலேயே மற்ற சிறுவர்களைக் கூட்டித் தெய்வங்களுக்கு பூசை செய்து ஞான விளையாட்டுக்களை ஆடுவாராம்!

கன்பூசியஸ் இளமையிலேயே காதலாட்டம் ஆடியவர். கல்வித் துறையில் பதினைந்தாவது வயதில் எப்படியாவது தான் ஞானிவாகி விட வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்கான பழங்கால நூல்கனையும், பண்பாடுகளையும், மற்ற வரலாறுகளையும், வானவியல் கலைகள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் படித்து முதிர்ந்த ஞானம் பெற்றவரானார்!

அவரே ஓரிடத்தில் இதைக் கூறும்போது, என்னுடைய இளம் வயதில் நான் மிகவும் தாழ்வான நிலையில் அடங்கி இருந்தேன். அதனால்தான் எதையும் சமாளித்துப் பல்திறப்பட்ட விஷயங்களிலும் என்னால் திறமைபெற முடிந்தது, என்று கன்பூசியசே கூறுகிறார் என்றால், நாம் எப்படி இருந்தாக வேண்டும் என்பதற்கோர் எச்சரிக்கை அல்லவா இது?

கன்பூசியசின் பல்துறை கல்வித் திறமை அவரைத் தனது பதினேழாவது வயதிலேயே குருகுல ஆசானாக மாற்றி விட்டது. மாற்றிற்று என்றால் அந்நகரத்துச் சான்றோர்கள் எல்லாம், மரணத் தருவாயில் உள்ள முதியோர்கள் எல்லாம், அவரவர் வாரிசுகளை, கன்பூசியசிடம் படிக்கப் போங்கள் என்று வலிந்து-வற்புறுத்தி அவரது குருகுலத்திற்கு அனுப்பி வைத்தார்கள் என்றால், எப்படி இருந்திருக்கும் கன்பூசியசின் போதனாமுறை அறிவுத் திறம்? சற்றே எண்ணிப் பார்ப்பவர்களுக்குத் தான் இந்த 17 வயதின் ஞானப்பழ அருமையைச் சுவைக்க முடியும்.

பத்தொன்பதாம் வயதில் அவருக்குத் திருமணமானது; ஒரே மகன்; இரு பெண்கள்; இதனால் குடும்ப பந்தம்; இருப்பினும் பழுத்த அறிவாளியாக மட்டுமல்லாமல் சிறந்த ஆட்சியாளனாகவும் மாறவேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருந்தது!

கலைக்கழகம் என்ற ஒரு கல்விக் கோட்டத்தைத் தனது 22-ம் வயதில் துவக்கினார்! மனிதனின் மனப் பண்பு எப்படி அமைய வேண்டும்; எப்படி அவனுக்குப் பழக்க வழக்கங்களை உருவாக்கிட வேண்டும்; வாழ்க்கை முறை, ஆட்சி முறை முதலான வகைகளை எல்லாம் துறைதோறும் விளக்கிக்கூறும் கலைக்கழகமாக அவர் குருகுலம் இருந்ததால், கன்பூசியஸ் கல்வி ஞானத்தைத் தேடி-நாடி சீன நாட்டு மாணவர்கள் திரண்டு வந்து சேர்ந்தார்கள் பயன் பெற்றார்கள்! அந்தக் கலைக்கழகத்தை அவர் துவக்கும்போது கூறுகையில்: ஒரு விஷயத்தின் ஒரு மூலையை நான் கற்பித்தால், மற்ற மூன்று மூலைகளையும் தாமாகவே புரிந்து கொள்ளாத மாணவர்களுக்கு நான் தொடர்ந்து கல்வி கற்பிக்க மாட்டேன். இடம் தரமாட்டேன் என்று கறாராகவே கல்வி மீது அக்கறை காட்டிப் போதித்தார்.

தனது தாயார் இதற்கிடையில் இறந்தபோது, அவர் தாயாருக்காகத் துக்கம் காத்த தனது இரண்டரை ஆண்டு காலத்தில், அறம், இசை அரசியல், தத்துவம் முதலிய வகைகளை எல்லாம் ஆராய்ந்து பண்பட்டார்! அப்போதும், அவரிடம் பலர் நாடிவந்து தமது ஐயங்களைக்கேட்டும் புரிந்து கொண்டார்கள்.

இருபத்தேழாம் வயதில் கன்பூசியஸ், தனது நாட்டின் பழமையான நீதிகளை ஆராய்ந்தார்! அதுதான் அப்போதைய ஞானமாக இருந்ததால், அக்கால ஞானியான வேஓ-ட்ஸே என்பவரை அவரே சென்று நேரிடையாகப் பார்த்து, தங்களது தத்துவங்களின் ஆய்வுகள், முரண்பாடுகள் வேறுபாடுகள் ஆகியன அனைத்தையும் அவர்கள் மனம் திறந்து வாதம் செய்தார்கள். அதனால், இருவருக்குமே ஏதாவது பயனுண்டா என்றால்-ஒன்றுமில்லை.

ஆனால், கன்பூசியஸ், லேஒ-ட்ஸே என்ற அந்தத் தத்துவ ஞானியிடம் விடைபெற்றுப் புறப்பட்டபோது, அந்த அந்த தத்துவ ஞானி கன்பூசியசிடம் என்ன கூறி வழியனுப்பி வைத்தார் தெரியுமா? இதோ அது:

"பெரும் பணக்காரர்களும், பிரபல ஊர் முக்கியஸ்தர்களும் கூடிச் சந்தித்து உரையாடி விடைபெற்றுப் போகும் நேரத்தில் விலை உயர்ந்தப் பரிசுகளை ஒருவருத்து ஒருவர் வழங்கிக் கொள்வது வழக்கம்.

நற்குணமிக்க நல்லவர்கள் கூடிப் பிரியும்போது, அறிவு பூர்வமான ஞானம் செறிந்த நல்ல வாக்குகளையே பரிசுகளாக ஒருவருக்கு ஒருவர் வழங்குவதும் உண்டு.

நல்ல மனிதனாக நாட்டவரால் எண்ணப்படும் நான், ஒரு சீமான் அல்லன் செல்வமுடையவனும் அல்லன் நாம் இருவரும் கூடிப் பிரியும் இந்த வேளையில் சில வார்த்தைகளைத்தான் என்னால் உமக்குக் கூற முடியும்.

எதையும் கருத்துடன் கூர்ந்து நோக்குபவர்களுக்கும், திறமையுடையவர்களுக்கும், அறிவு நயம் உடையவர்களுக்கும், மரணம் வெகு அருகாமையில் உள்ளதுவாம். ஏனென்றால், இவர்கள் பிற மனிதர்களின் குற்றங்குறைகளைப் பிறரிடம் அடிக்கடி எடுத்துச் கூறியவாறு இருப்பர்.

எதையும் கற்றுத் தெளிந்த வித்தகர்கள் மக்களிடம் பார்க்கக் கூடிய குற்றம் குறைகளை எடுத்து விவரிப்பதால் இவர்கள் உயிரும் எந்த நேரமும் ஆபத்தினால் சூழப்பட்டு பிரிந்து விடும். அதனால், நீயும் உம்மை மன்னரவையின் அமைச்சராக எண்ணிக் கொள்ளக் கூடாது" என்று கன்பூசியசிடம் கூறினார்.

கி மு. 522-ம் ஆண்டின் போது, கல்வியிலே கன்பூசியஸ் கடலாகக் காட்சி தருகிறார்; பல்கலை வித்தகராகவும் விளங்குகிறார் என்ற கல்விப் புகழ் அவரது ஊர் எல்லைகள் கடந்தும் அவருக்குப் பரவ ஆரம்பித்தது. அதனால், மாணவர்கள் எங்கிருத்தும் திரண்டு வந்து அவரின் மாணவர்கள் ஆனார்கள்.

517-ஆம் ஆண்டில் அதாவது, கன்பூசியசுக்கு 83வது வயதான போது, அவரது சொந்த ஊரில் சேவல் சண்டை வழக்கம் போல நடந்தது. இந்த சண்டையால் ஊரெங்கும் கலவரமும், பூசலும், கோஷ்டி மோதல்களும் நடந்தன.

அதன் விளைவாக கன்பூசியசின் 'லூ' அரசைச் சேர்ந்த 'செள' சீமானுக்கும், "சி"நாட்டின் 'பிங்' சீமானுக்கும் மனக்கசப்பு உருவாகி அது போராட்டமாக மாறியது. இந்தப் போரில், நகரத்து 'சௌ' சீமான் தோல்வி கஸ்டான். அதனால் 'சி' அரசில் சரணடைந்தான். 'லூ' அரசில் கலகமும்-குழப்பமும் பலமாக உருவானது.

இந்தச் சூழ்நிலையின் விளைவாக, கன்பூசியஸ் 'சீ' அரசுக்கு ஓடி செனகோ என்ற சீமானிடம் செயலாளராகப் பதவி வகித்து வாழ்ந்து வந்தார். இந்தப் பதவிக் காலத்தில்தான் இவர் நடனம், சங்கீதம் முதலிய கலைகளை ஆர்வமுடன் கற்றார், அதே நேரத்தில் 'சிங்’ சீமானின் சிநேகமும் அவருக்குக் கிடைத்தது. இருவரும் அரசியல் முதலான பல விஷயங்கனைப் பற்றித் தங்களுக்குள் அறிவு வாதம் செய்து கொண்டார்கள்.

கன்பூசியஸ் வாதத்தின்போது எதிர்பாராமல் வந்து வீழ்ந்த அரசியல் கருத்து வீச்சுக்கள் சிங் சீமானின் மனதை முழுமையாக சரித்து விட்டன. நிஷி என்ற பகுதியைச் சேர்ந்த எண்ணற்ற நிலங்களை கன்பூசியசிற்கு அன்பளிப்பாகக் கொடுக்க அவர் முன்வந்தபோது, 'யீங்' என்ற அவருடைய அமைச்சன் குறுக்கிட்டான்.

கன்பூசியசின் அரசியல் வாதங்களைக் கொண்டு ஓர் அரசு வாழமுடியாது. அதை ஏற்றால், மக்களுக்கும் அரசுக்கும் மோதல், கலகம், குழப்பம் மூண்டு அழிவுதான் சூழும். அதனால், அவர் கூறுவதையெல்லாம் நம்பி ஆட்சி செய்யமுடியாது, என்று கோள்மூட்டி, இவரைப் பதவியை விட்டு நீக்கித் துரத்திவிட்டான்!

என்ன செய்வார் கன்பூசியஸ்? தமது குருகுல மாணவர்கள் பின் தொடர, ஒவ்வொரு சீன நாட்டு அரசவைப் படிகட்டுகளில் ஏறி ஏறி இறங்கினார்! என்ன லாபம்?

அப்போதைய அரசுகளின் புரட்சிகளுக்கு இடையே நாடோடி போல இவ்வாறு சென்று கொண்டிருந்த கன்பூசியசும் அவரது மாணவர்களும், ஒரு மலையோரப் பாதையிலே இருந்து அலையலையாக ஓடிவரும் அழுகை ஓசையைக் கேட்டு, யாரோ ஒரு பெண், இந்த நேரத்தில் தனியாக, பயம் சூழ்ந்த மலையோர இடுக்கில் புலம்புகின்றாளே என்று கண்டு, கன்பூசியஸ் தனது மாணவன் ஒருவனை அவனிடம் அனுப்பி விசாரிக்கச் சொன்னார்.

அந்த மாணவனிடம் அழுது கொண்டே அந்தப் பெண் கூறும்போது, என்னுடைய தந்தை புலியினால் கொல்லப்பட்டார்; அதே புலி என் கணவனையும் சாகடித்தது; அதே மரணம் எனது மகனுக்கும் இப்போது ஏற்பட்டு விட்டதே' என்று மீண்டும் புலம்பிக்கொண்டே இருந்தாள்.

உடனே அந்தச் சீடன் அந்த பெண்ணின் அழுகையை நிறுத்தி, 'இந்தக் கொடுமைகளுக்குப் பிறகும் கூட நீ எப்படி உயிருடன் வாழ்கிறாய்?' என்று அந்த மாணவன் புலம்பியதைக் கேட்டதற்கு, அதற்கவள், 'நான் வாழும் அரசு கொடுமையானது அல்ல' என்றாளாம்.

இந்த விவரத்தை மாணவன் கன்பூசியசிடம் கூறியதும், அதற்கு அவர், கொடுமை நிறைந்த அரசானது கொடும் புவியைவிடப் பயங்கரமானது, என்று குறிப்பிட்டு மேலால் நடந்தபடியே சென்றார்.

'லு' அரசின் 'டிங்' சீமான் ஆட்சியில், தனது ஐம்பதாவது வயதில், குங்ஷான் புன்யூ என்பவர் ஹூவான் சீமானை எதிர்த்துப், 'பீ' பட்டினத்தில் ஒரு கலகத்தை ஆரம்பித்தார்.

அதைக் கன்ட ஹுவான் சீமான், தனக்கு யோசனை கூறவருமாறு கன்பூசியசை அழைத்தான். புறப்பட்ட அவர் தனது மாணவர் ஒருவர் ஏதோ கூறியதைக் கேட்டு பயணத்தை நிறுத்திவிட்டார்.

அதற்குப் பிறகு, கன்பூசியஸ் 'ட்சி' அரசுக்குச் சென்று சேவை ஆற்றிய போது, அந்த சீமான் கன்பூசியசின் தொண்டுக்கு ஏற்ற உபகாரச் சம்பளம் கொடுத்தான். அதை அவர் பெறவில்லை.

'ஒருவன் திறமையைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவனிடம் இருப்பதால், யாருக்கும்-எந்தவித மான பயனும் ஏற்படாது" என்றுணர்ந்த அவர், அந்த இடத்தை விட்டுத் தனது மாணவர்களுடன் உடனடியாகப் புறப்பட்டார்.

இதுபோன்ற அறிவுரைகளை சமயம் நேரும் போதெல்லாம் கன்பூசியஸ் அடிக்கடி கூறி மாணவர்களுக்கு விழிப்பணர்வை உருவாக்கி வந்தார். இந்த நேரத்தில், அவரது 51-வது வயதில், அவருக்கு 'கந்டு' நகரின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றும் பதவியைப் பெற்றார்.

இந்தப் பதவியில், அவரது திறமையை நன்கு வெளிப்படுத்த இது ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தது. கன்பூசியஸ் திறமையான, பணியால் நாளுக்கு நாள் பயனும், பலனும் கிடைத்து வந்தது.

அதற்குப் பிறகு அவர், பொது நிறுவனங்களின் கண்காணிப்பாளருக்கு உதவியாளரானார். பிறகு, காவல்துறை அமைச்சரானார். எந்தப் பணியை அவர் ஏற்றாலும் அந்தப் பணியிலே ஒரு வியப்பை உருவாக்கினார் நாட்டிற்குள் அமைதியை உருவாக்கினார்.

அமைதியின்மையை விளைவிப்பவர்களுக்குத் தக்க தண்டனைகளைக் கடுமையாக வழங்கினார். நீதித்துறைப் பணிகளிலும் தனது கடுமையைக் காட்டினார். குறிப்பாகக் கூறுவதானால், கன்பூசியஸ் காவல் துறையிலும், நீதித் துறையிலும் பணியாற்றியக் காலத்தில் திருடர்களோ, அல்லது அவர்களது பயமோ நாட்டில் ஏற்பட்டதில்லை.

'டிங்' சீமானின் ஆட்சியின் பதினான்காவது ஆண்டில், கி.மு.495-ம் ஆண்டின் போது கன்பூசியசுக்கு வயது அறுபது. நீதித்துறையில் அவர் ஒரு முக்கிய மந்தரியாகப் பதவியேற்றார். அதனால், மகிழ்ச்சி அடைந்த கன்பூசியசிடம் ஒரு மாணவர் கேள்வி ஒன்று கேட்டபோது:

'குருவே! நேர்மையான மனிதன் தன்னுடைய வாழ்க்கைப் போக்கில் வரும் இன்ப துன்பத்தை சமாதான மன நிறைவுடன் தானே வரவேற்க வேண்டும் என்றார்.

அதற்கு கன்பூசியஸ், "ஆமாம், அவ்வாறுதான் என்றாலும், சாதாரண மனிதர்களைவிட, உயர்ந்த ஒரு பதவியை ஏற்க எந்த மனிதனும் விரும்பத்தான் செய்வான்’ என்றார்.

இப்பதவியை அவர் ஏற்ற பிறகு, கன்பூசியஸ் அரசியலில் நல்ல பல மாறுதல்களையும் காரியங்களையும் தோற்றுவித்து மிகத் திறமையுடன் செயல்பட்டதை மக்கள் விரும்பி வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

சீரும் சிறப்புமாக 'லூ' அரசு ஆளப்பட்டு வருவதைக் கண்ட 'ட்ரீ' அரசின் சீமானுக்குப் பொறாமை ஏற்பட்டது. 'லூ' அரசின் மக்கள் வாழ்வைக் கண்டு, தனது அரசின் மக்களும், ஊழியர்களும் 'லூ' ஆரசு வாழ்க்கை வசதிகளைப் போல எமக்கும் வேண்டும் என்று விரும்பிக் கேட்பார்களோ என்று கூட 'ட்ரீ' அரசின் சீமான் அஞ்சினான்.

அதனால், அந்த மன்னனைச் சார்ந்தவர்கள் சிலர் கன்பூசியசை அந்த நாட்டின் அரசியலில் இருந்து வெளியேற்றிட சில நயவஞ்சகமானத் திட்டங்களைத் தீட்டினர். முதலமைச்சருக்குக் காணிக்கை என்ற பெயரில், லஞ்சமாகச் சில நிலங்களையும்-பணத்தையும் ஓர் அமைச்சர், சில முக்கியஸ்தர்கள் மூலமாக அனுப்பி வைத்தனர்.

கன்பூசியசின் அரசியல் நேர்மையைத் திசை திருப்பிட அவரை அரசியலிலே இருந்து கவிழ்க்கும் நோக்குடன் செய்த சூழ்ச்சிகள்; அவரிடம் வெற்றி பெறாததால், "ட்சி" அரசினர் அழகிகளை அனுப்பி அவரை வீழ்த்த முயற்சித்தார்கள்.

'ட்சி' அரசன் அனுப்பிய ஆடல் பாடல் அழகிகள் எண்பது பேர்களுடன் 'லூ' அரசின் அதிகாரிகளும், மன்னனும் மயங்கிக் கிடந்தார்கள் அவர்களை அந்த சுகபோகக் களியாட்டங்களிலே இருந்து மீட்டிட கன்பூசியஸ் செய்த முயற்சிகள் எல்லாம் பாழாயின.

கன்பூசியஸ் தனது சீடர்களிடம், பெண்ணின் நாவைக் கண்டு பயப்படு; அது உன்னைத் தீண்டிடும் பாம்பின் விஷம்" என்று கூறிவிட்டு, தனது மாணவர்களுடன் அந்த நாட்டை விட்டே வெளியேறிச் சென்றுவிட்டார்.

ஆனால், அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறி விட்டதற்கு வரலாறு வேறு ஒரு சம்பவத்தைக் கூறுகின்றது. அதாவது, கன்பூசியசின் நேர்மையான ஆட்சி மக்கள் இடையே எதிர்ப்புகளை ஏற்படுத்தியதாகவும், அவர் நாட்டில் சிதறிக்கிடக்கும் எல்லா சக்திகளையும் ஒன்று திரட்டி ஒரே தலைமையின் கீழ் குவித்து நாட்டின் சக்தியை ஒரு முகப்படுத்தி, ஒரே ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்று திட்டம் போட்டார் என்றும், அதனால் சிறிய சிறிய குறுநில அரசர்களும், பதவியாசைப் பிடித்த இளைய தலைமுறையினரும், அவரை நாட்டைவிட்டே விரட்டியடித்து விட்டார்கள் என்றுக் காரணம் கூறுகிறது வரலாறு.

எது உண்மையோ; ஆனால் ஒன்று மட்டும் உண்மை என்று புரிகிறது. கன்பூசியஸ் தனது நாட்டைச் சொந்த ஒரு அரசாங்கத்தின் கீழ், அதிக செல்வாக்குடன் வெற்றிகரமாக, தனது அரசியல் பணிகளையும் பரிசோதனைகனையும் நடத்தி வந்தது பலருக்குப் பிடிக்கவில்லை; அதனால் அவரை வெளியேற்றச் சதி செய்து துரத்தி விட்டார்கள்.

ஆனால், இந்த நேரம் கன்பூசியஸ் என்ற ஞான மகானுக்கு ஒரு சோதனைக் காலமாக அமைந்து விட்டது. தனது நடுத்தர வயதையும் தாண்டி வயோதிகத்தின் வாசலிலே அவர் நுழைந்து விட்டார்; தனக்கு என்ற ஓர் ஆதரவை வழங்கிடும் நாடு இல்லை; தங்கவோ ஒரு வீடு இல்லை; உற்றார் உறவினர் யாருமில்லை; தனது மாணவர்கள் உண்டு; தன்னிடமுள்ள ஞானச்செறிவு உண்டு என்ற நிலையிலே அவர் நாடோடியாகவே அலைந்துகொண்டு இருந்தார்.

தனது மாணவர்கள் மனதிலே அவர் கருத்து விதைகளை விதைத்தார். அந்த வித்துக்கள் இந்த நாட்டுக்குரிய எதிர்கால அறுவடையினையாவது வழங்காதா என்ற ஏக்கத்துடன், ஒருவித மனத் திருப்தியுடன் ஊர் ஊராக அவர் அலைந்தார். இதுதான் கன்பூசியஸ் மகானின் அன்றைய வாழ்க்கை அவலம்.

வெறும் ஞானம் போதிக்கும் ஜைன ஞானி மகா வீரரைப் போலவோ, அவர் வாழ்ந்த அதே நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த போதி மாதவன் புத்தரைக் போலவோ, இவருடைய நாட்டிலேயே அவர் காலத்தில் இருந்த ஞானி 'ஓட்சே'வைப் போலவோ கன்பூசியஸ் வாழ்ந்தவர் அல்லர்!

கன்பூசியஸ் ஒரு யதார்த்தவாதி; தத்துவ ஞானி மட்டுமல்ல அவர்; எதையும் எண்ணியபடி செய்துகாட்டவேண்டும் என்ற ஒரு செயல் ஞானி; ஒரு நாடு நல்ல நிலையில் வளமாக வாழக்கூடிய அடிப்படை அம்சங்களான அரசு நிர்வாகம், சமூகச் சீரமைப்பு, அரசியல் சட்டம், ராணுவ தந்திரம், குடும்ப வாழ்வு, பொது ஒழுக்கம், உலக சமுதாயம், தனிமனித ஒழுக்கங்கள் அனைத்தையும் உருவாக்கவல்ல ஒரு பேரறிவாளர்; அவற்றைப் பற்றி யாரிடமும் விவாதிக்கக் கூடிய அறிவு பலம் வாய்ந்தவர்; செயலிலே செய்து காட்டும் எல்லா வகைத் திறமைகளும் உடையவர்; அவர் கதி-அப்போது அப்படி! பாவம்; பாவம்!

அத்தகைய ஓர் அற்புத மகானை யார் அரசியல் குருவாக ஏற்கவல்லார்? இந்த நிலையில் எல்லாம் இழத்த கன்பூசியஸ், தனது மாணவர்களோடு 'வெல்' என்ற நாட்டை அடைந்தார்! அங்கிருந்தும் பொறாமைக்காரர்களால் விரட்டப்பட்டார்!

விரட்டப்பட்ட அவர், ஒரு மலைப்பாதை வழியாக மாணவர்களுடன் கால்கடுக்க நடந்து கொண்டிருந்த போது தங்களுக்குக் கேடுகள் பல செய்த 'யாங்யூ' என்று என்று அவரைத் தவறாக ஆள் மாறாட்டம் செய்து கொண்ட மலைப்பகுதி மக்கள், கன்பூசியசைப் பிடித்துக் கொண்டு போய் சிறையில் அடைத்தார்கள். ஐந்து நாட்கள் கழித்தபின், அவர் ஒரு நாடோடி ஞானி என்று தெரிந்த பின்பு அவர்கள் அவரை விடுதலை செய்தார்கள்,

விடுதலையான கன்பூசியஸ் 'பூ' என்ற அரசுக்குச் சென்று சில நாட்கள் தங்கி விட்டு மீண்டும் 'வெய்' என்ற நாட்டிற்கே வந்த தங்கியிருந்தார்; ஒரு நாள் 'வெய்' சீமான் தனது அரசியுடன் பல்லக்கில் பவனி வந்து கொன்டிருந்தார்.

அந்நகரத்து மக்கள் பெருந்திரளாக ராணியின் கவர்ச்சியை அழகை, பகட்டான பல்லக்குப் பவனியை பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு மாணவன் குருவைப் கார்த்துக் கேட்டக் கேள்விக்கு அவர் பதில் கூறியபோது; "மக்கள் எழிலரசிகளின் அழகு முகப் பொலிவைக் கண்டு அகமகிழ்ச்சிக் கொள்வதுபோல, எல்லாம் கற்றுத் தெளிந்த ஞானியின் முகத்தைக் கண்டு கவர்ச்சி அடைய மாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

பிறகு, 'ட்சாங்' அரசில் இவர் ஒரு மரத்தடியில் தங்கி தமது மாணவர்களுக்கு அறிவு போதனை செய்தார். அதை அறிந்த அந்த நாட்டின் தளபதி ஒருவன் மரத்தடிகளை எல்லாம் வெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான், வெட்டிய மரம் தனது தலைமேலே விழுவதற்குள் கன்பூசியஸ் தப்பித்துக் கிளம்பி விட்டார்.

தப்பித்துவிட்ட கன்பூசியஸ் தனது மாணவர்களிடம் பேசும்போது, 'நான் மேலுலகம் பணித்ததைச் செய்து வருபவன் இந்த அற்ப சேனைத் தலைவனால் எனது லட்சியப் பணியைத் தடுத்துவிட முடியாது" என்று கூறி விட்டுத்தம் மாணவர்களுடன் செங் என்ற அரசுக்கும் புறப்பட்டுவிட்டார்.

'செங்' அரசுக்குச் சென்றபோது, தனது மாணவர்களை விட்டுப் பிரிந்து அவர் மட்டும் தனியாக அந்த அரச கோட்டை வாயிலிலே சென்று நின்றார். அதைப்பார்த்த காவலன் உடனே 'ட்சேமுல்' என்பவரிடம் ஓடி 'நம் நகர்க் கோட்டை வாசலில் கம்பீரமானத் தோற்றத்துடன் சிலைபோல் ஒருவர் திக்கின்றி சுற்றியலையும் நாயைப்போல நிற்கின்றார் என்றான்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட கன்பூசியஸ் ஆமாம் எனது தோற்றத்தைப் பற்றிக் கூறியவை முக்கியமல்ல! திக்கில்லாமல் சுற்றியலையும் நாய்க்கு என்னை ஒப்பிட்டது மிகப் பொருத்தமானானதே என்றார்.

அந்த இடத்தை விட்டு அகன்ற அவர், 'யென்’ அரசிற்குச் சென்று மூன்றாண்டுகள் தங்கினார். பிறகு 'பூ' அரசைக் கடந்து மீண்டும் மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்களில் சிலர் அவரை வழிமறித்துக் கொண்டார்கள். அவர்களை எல்லாம் அவரது மாணவர்கள் அப்புறப்படுத்தினார்கள். வழிமறித்த மக்கள் கன்பூசியசைப் பார்த்து, 'வெய்' அரசுக்குச் செல்வதில்லை என்று வக்குறுதி கொடுக்குமாறு கேட்டார்கள்; சரி, என்று ஒப்புக்கொண்ட அவர், மீண்டும் அந்த அரசுக்கே தான் கொடுத்த வாக்குறுதியை மீறிச்சென்றார்.

கொடுத்த வாக்குறுதியை நீங்களே இப்படி மீறலாமா? என்று அவரை மாணவர்கள் கேட்டபோது, "கட்டாயப்படுத்தி வாங்கப்பட்ட வாக்குறுதியைக் கைதவற விடுவதில் அதர்மம் ஒன்றுமில்லை. அதுபோன்ற சூழ்நிலைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் கடவுளின் காதுகளுக்குப் போய் சேர்வதில்லை"

அப்போது, 'பிஷ்ச்' என்பவன் 'கல்மெங்' பட்டினத்தின் நீதிபதியாக இருந்தார். தனது நகரை விரோதிகள் தாக்குவதைத் தடுக்க, அதற்குரிய யோசனைகளைக் கேட்பதற்காகக் கன்பூசியசைத் தன் நகருக்கு வருமாறு கேட்டுக் கொண்டான்.

அந்த நேரத்தில் 'ட்பூலூவி' என்ற அவரது மாணவன், 'ஆசானே, நெறி தவறிய வாழ்க்கை நடத்தக்கூடிய ஒருவனுக்கு நீங்கள் உதவி புரிவதா?’ என்றான். அதற்கு அவர், 'உண்மையாக, கடினமான பொருளானது அரைக்கப்படுவதற்கு அஞ்சுவதில்லை. நல்ல தூய்மையான வெண்ணிறம் உள்ள பொருளானது வெளிப்புறக் கலவைகளால் தன் வெண்மை நிறத்தை இழக்காது. நான் எத்தனை நாட்களுக்குப் புடலங்காயைப் போல துவண்டுத் தொங்கிக் கொண்டிருப்பேன்?' என்றார்.

ஹுவான் சீ என்ற சீமான் தனது மரணப்படுக்கையில் இருக்கும்போது, ஒரு காலத்தில் 'லூ' அரசு சீரும் சிறப்புமாக இருந்தது. தான் ஒரு சமயம் கன்பூசியஸ் மனதைப் புண்படுத்திவிட்டேன். அதனால் அந்த நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டது. என்று கூறிய அந்த சீமான், தனது அருகே இருந்த 'காங்சீ' சீமானை நோக்கி, நான் இறந்த பிறகு நீ தலைமை அமைச்சன் ஆவாய்; அப்போது ஞானி கன்பூசியசை இந்த நாட்டின் உயர்ந்த நிர்வாகத்தில் அமர்த்து என்று உருக்கமாகக் கூறினார்.

அதுபோலவே கன்பூசியசை சம்பந்தப்பட்ட சீமான் பதவியில் அமர்த்தியபோது, அவனது சகோதரன் ஒருவன் இடைமறித்து, கன்பூசியசை உயர்பதவியில் உட்கார வைக்காமல்! அவருக்குப் பதிலாக அவரது மாணவனான ஜான் ச்யூவை அரசியலுக்கு அழைக்கச் சென்றபோது ஒரு மாணவன் ஜான் ச்யூவை பார்த்து "உண்மையான அதிகாரத்தை உன்னிடம் வழங்கிட 'லூ’ அழைக்கிறது" என்றான்.

மற்றொரு சீடன் ஜான் ச்யூவைப் நோக்கி, 'நீ பதவியில் அமர்ந்ததும் நமது குரு கன்பூசியஸை உன்னிடம் அழைத் துக் கொள்’ என்று கேட்டுக் கொண்டான். அடுத்த ஆண்டு கன்பூசியஸ் 'யெய்' அரசுக்குச் சென்றபோது, நல்ல முறையில் நடந்து வரும் ஓர் அரசின் முக்கிய அம்சம் என்ன? என்று கேட்டான்.

'தன்னுடைய ஆட்சியில் இருக்கும் மக்களின் தன்னம்பிக்கையைப் பெறுவது; வேற்று நாட்டு மக்களின் நேச உறவைப் பெறுவது; இவை நல்ல ஆட்சியின் அம்சங்களாகும் என்று கன்பூசியஸ் பதில் கூறினார்.

'உங்களுடைய கன்பூசியஸ் எப்படிப்பட்டவர்?’ என்று அவரது மாணவனிடம் 'யெய்' சீமான் கேட்டான். சீடன் அதற்குப் பதில் கூறாமல் அந்தக் கேள்வியை அப்படியே குருவிடம் வந்து கூறினான். அப்போது அவர் பதில் கூறும்போது, உண்மையைக் கண்டறிய உழைப்பவன், தனக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கு எடுத்துரைப்பவன்; எந்த ஒரு விஷயத்திலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது தனது உணவையும் மறந்திருப்பவன்; முதுமைப்பருவம் வந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பவன்; இவற்றிலே ஈடுபடும்போது சிறிதும் சளைக்காமல் பொறுப்புடன் இருப்பவனும் தான்-கன்பூசியஸ் என்று, அந்தச் சீமானிடம் போய்க்கூறு என்று அவனை அவர் அனுப்பிவைத்தார்!

இதற்குப் பிறகும் பல இடங்களில் கன்பூசியஸ் சுற்றி அலைந்தார். அப்போது, 'பூ' அரசுக்கும் 'சென்' அரசுக்கும் இடையே கடும்போர் மூண்டது. சென் அரசுக்கு உதவி செய்திட 'சூ' அரசு முன்வந்தது. அரசின் சேனை 'செங்பூ' என்ற இடத்தில் முகாமிட்டது. இந்த இரு அரசுகளின் எல்லைகளுக்கிடையில் அப்போது கன்பூசியஸ் பயணம் வந்து கொண்டிருந்தார் 'சூ' அரசினர் அவரை, வரவேற்றிட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்

சென் அரசு மந்திரி, ட்சாய் அரசின் மந்திரியோடு சேர்த்து, சூ அரசுக்குக் கன்பூசியஸ் போவதைத் தடுக்கப் படைகளை அனுப்பி அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்பகுதி வறண்ட பகுதி, அதனால் படைகளில் பலர் பட்டினி கிடந்தார்கள். கன்பூசியஸ் மாணவர்களில் சிலரும் நோய்வாய்ப்பட்டார்கள்.

இக்கட்டான அந்த நேரத்தில், கன்பூசியஸ் அமைதியோடு சங்கீதம் பாடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த தேரத்தில், நாம் சிக்கிக்கொண்டது இயல்புதானா? என்றான்.

உடனே கன்பூசியஸ், "இயல்புதான்! ஆனால், அந்தச் சமயத்தில்தான் அவன் மிகுந்த பொறுமையோடும், அமைதியான முறையிலும் நடந்து கொள்ள வேண்டும். அற்பனைப்போல முட்டாளாகக்கூடாது; அற்பமான செயல்களைச் செய்யக்கூடாது" என்றார். இந்த வார்த்தைகள் சில மாணவர்களின் மனதைக் கவர்ந்தன.

கூர்ந்து அதைக் கவனித்த கன்பூசியஸ், "எல்லா விஷயங்களையும் நான் எனது நினைவில் வைத்திருக்கிறேன். அந்த நினைவிற்காகவே பல விவரங்களை நான் கற்றுள்ளேன் என்றும் எண்ணுகிறாயா நீ?" என்று ஆவர் கேட்டதற்கு, மாணவன் 'ஆம்' என்றான்.

இதைச் சிந்தித்த கன்பூசியஸ், நமது மாணவர்கள் நமது மாணவர்கள் நம் மீது அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதைக் கண்ட அவர், அவர்களது மனத்தை ஆராய விரும்பினார், உடனே தனது மாணவன் ‘ட்சூலு'வை அழைத்து, நாம் இந்த காட்டில் உலாவரும் புலிகளா? காண்டா மிருகங்களா? நான்கூறும் தத்துவங்கள் பொய்களா? நாம் இந்தச் சூழ்நிலையில் ஏன் கஷ்டப்படுகிறோம்? காரணம் என்ன? என்று பொறுமையாகக் கேட்டார்.

அதற்கு அந்த மாணவன்; "பொது மக்களின் மனதை ஈர்க்கும் வகையில் எதைக் கூறினோம்? என்ன காரியம் அதற்காகச் செய்தோம்? நமது தத்துவங்கள் மக்கள் மனதைக் கவரவில்லை; நாம் அவர்களுக்குக் காட்டும் மனதை அவர்களால் பின்பற்றமுடியாதவை; பொருத்தமற்றவை என்று நினைக்கிறேன்" என்றான்.

'உண்மைதான் உண்மையான தத்துவங்கள் மக்கள் மனதைக் கவர்வது கஷ்டம்தான்' என்றார் கன்பூசியஸ் பிறகு, அடுத்த சீடனை அழைத்து, நாம் என்ன புலிகளா? காண்டாமிருகங்களா? கானகத்தில் நடமாடி நமது நாட்களை நகர்த்திட இந்தச் சூழ்நிலையில் நாம் இங்கே இருப்பதற்கு என்ன காரணம் என்று அவர் கேட்டார்.

'தங்களுடைய கருத்துக்கள் மக்கள் பின்பற்றக் கூடிய அளவுக்குச் சுலபமாக்கப்பட வேண்டும்' என்று அந்த மாணவன் பதில் கூறினான். அப்போது அவனுக்குப் பதில் கூறும்போது கன்பூசியஸ்; உழுது விதை விதைக்கும் நேரத்தில் அறுவடையின் பயன் எப்படி இருக்கும் என்று உழவனால் கூறமுடியாது.

கலைநுட்பமும் செறிந்த ஒரு பொருளை உருவாக்கும் கலைஞன், அந்தப் பொருள் மக்களைக் கவர்ந்து விடமுடியும் என்று கணக்கும் போடுவது வெறும் கனவே.

உன்னைப் போன்றவர்கள் தன்னைப் பண்படுத்திக் கொள்வதில் தனது அக்கறையைச் செலுத்தாமல் மக்களின் மனதை எவ்வாறு கவரமுடியும் என்ற நோக்கத்திலேயே மூழ்கிப் போய் விடுகிறார்கள்.

உன்னைப் போன்றவர்கள் தனக்குத்தானே அமைத்து கொள்ளும் முடிவு சரியானதல்ல என்று கன்பூசியஸ் சற்றுக் கடுமையாகவே பதில் கூறினார்.

மற்றொகு சீடனை அழைத்து பேசும்போது புலிகள், காண்ட மிருகங்களைப் போல நாம் ஏன் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறோம்! இந்த நிலைக்குக் காரணம் யார்? என்றார்.

அதற்கு அந்த மாணவன், 'தன்னுடைய கருத்துக்களும்-தத்துவங்களும் மிக உயர்ந்தவை. ஆனால், அதை மக்கள் எளிதில் பின்பற்றுவது கஷ்டம் அதற்காக அதை நாம் போதிப்பதிலேயே நிறுத்திவிடக்கூடாது. பிறரால் அக்கருத்துக்கள் ஏற்கப்படவில்லை என்ற கவலை உங்களுக்கு ஏன்?

மற்றவர்களால் உங்களுடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற உண்மையே நீங்கள் நேர்மையான மனிதர் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.

நாம் பிறர் மனதில் உண்மையான கருத்துக்களை விதைக்கவில்லை என்றால் அது நம்முடைய தவறு. ஆனால், நாம் வித்திட்டும் அவை மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அது நமது தவறு அல்ல. அதற்குப் பெறுப்பு ஆட்சி நிர்வாகத்திலே உள்ளவர்களை சேரும்.

உங்கள் கருத்துக்களைப் பிறரால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே தங்களை ஞானியாக்கிவிட்டது என்றான். அதைக் கேட்ட கன்பூசியஸ் சிரித்துக் கொண்டார்.

கன்பூசியல், சூ அரசுக்கு தனது மாணவன் ட்சே குக் என்பவனை அனுப்பினார். அரசரின் ஆட்கள் உடனே வந்து அவரையும், அவரது மாணவர்களையும் விடுவித்துக் கொண்டு போனார்கள்.

அந்த மன்னன் அவருக்கு தர இருந்த நிலங்களை அங்குள்ள அமைச்சன் தடுத்து நிறுத்தி விட்டான். பிறகு அந்த அரசன் கி.மு. 489-ம் ஆண்டு மறைந்து விட்டான்.

'வெய்' அரசுக்கு மீண்டும் கன்பூசியஸ் தனது 63வது வயதில் வந்தார். அப்போது அவரது மாணவர்களிலே சிலர், பலவித அரசியல் பதவிகளைப் பெற்று வந்தர்கள் அந்த அரசன கூட அவரது ஆலோசனைகளை வெற்று ஆட்சிமுறையை நெறிபடுத்தலாமா என்று கூட நினைத்தான்.

'வெய் அரசில் உங்களுக்கு முக்கிய பதவி தந்தால் முதலில் என்ன செய்வீர்கள்?’ என்று மாணவன் ஒருவன் கன்பூசியசைக் கேட்ட் போது, "முதலில் அரசின் நிர்வாகத்திலே பயன்படுத்தப்பட்டு வரும் வார்த்தைகளை எல்லாம் திருத்தி அமைப்பேன். அவற்றை எந்த பொருளில் எப்போதெல்லாம் உபயோகிக்க வேண்டும் என்ற ஒழுங்கை நிலைநிறுத்துவேன்" என்றார்.

உடனே அந்த மாணவன், எதற்காக அதை முதல் காரியமாகச் செய்ய வேண்டும்? என்று அக்கறை ததும்பக் கேட்டான். அதற்கு அவர் என்ன பதில் கூறினார் என்பதை இன்றைய ஒவ்வோர் அரசும் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியப் பிரச்சினையாகும்.

ஓர் அரசின் நிர்வாகத்தில் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் மிக முக்கியமானவை. ஒருவர் தனது கருத்தைப் பேசும்போது சரியான வார்த்தைகளால் அதை வெளிப்படுத்த முடியவில்லை.

ஓர் அதிகாரி தனது ஆணைகளைப் பிறப்பிக்கும்போது அதற்குரிய சரியான மொழிச் சொற்களால் குறிப்பிட முடியவில்லை. அந்த மாதிரியான ஒரு நிலை உருவாகும் போது, அந்த அதிகாரி விரும்பும் அளவுக்கு அந்த ஆணை பயன்தராமல் போய்விடுகின்றது.

இதுபோலவே, தொழுகை முறையிலும், சமூக உறவு முறைகளிலும் சரியான பதங்களைப் பயன்படுத்தத் தவறும் போது, அந்தத் துறைகளில் பலவிதமான பொருட்பேதங்களும் விளைகின்றன.

நாட்டின் நீதி நிர்வாகங்களிலும், பொருட் பேதங்களும், அனர்த்தங்களும், தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலைகள் ஓர் ஆட்சியில் ஏற்படுமானால் மக்கள் இடையே குழப்பங்கள், சூழ்ச்சிகள், கலகங்கள், கொலை, திருட்டுப் புரட்டுக்கள் எல்லாம் உருவாகி, அந்த நாட்டின் நல்வாழ்வே நாசமாகி விடும்.

இதனால் நாட்டின் நிர்வாகத்தில் நேர்மை, நீதி நிலைக்காது; அறம் கெடும்; அதனால் நேர்மையான மனிதன் எந்த நேரத்திலும் எதற்கும் சரியான சொற்களை, பதங்களை, சொற்கோவை வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது என்று கன்பூசியஸ் கூறிய பதிலைக் கேட்டு மாணவன் திகைத்து விட்டான்!

இப்போது மகான் கன்பூசியசுக்கு வயோதிகம் ஆட்கொண்டு விட்டது; இறுதிக் காலமும் நெருங்கி வந்துவிட்டது. மனமுடைந்த ஞானப்பழமாய் தனது 63-ம் வயதிலே தனது சொந்த ஊரான 'லூ' அரசு மண்ணுக்கு வந்து சேர்த்தார்.

ஏறக்குறைய சீன நாட்டு மண்ணின் மூலை, மூடுக்குகளில் எல்லாம் பதினைந்து ஆண்டுகள் நாடோடி ஞானியாக அலைந்து திரிந்தார். இறுதிக் காலத்திலும் கூட, இவ்வளவு அறிவும், புகழும்-ஞானமும், சகலத் திறமையும், வல்லமையும் கொண்ட ஒரு பழுத்த ஞானியைப் பாராட்டி அவரது மண்கூட அவருக்கு மதிப்பளிக்கவில்லை, பாவம்! அவருடைய யோசனைகளைக் கூட கேட்க யாருமில்லை! ஆனால், சீனத்துப் பொதுமக்கள் மட்டும் அவரை வந்து பார்த்து உரையாடி மகிழ்வித்து, ஞானோபதேசம் பெற்றுப் போய்க் கொண்டிருத்தார்கள்.

கன்பூசியஸ் மீண்டும் குருகுல போதகர் ஆனார்! மாணவர்கள் எங்கெங்கோ இருந்து வந்து குவிந்தார்கள். அந்த சீடர்களின் தகுதி, தரத்துக் கேற்றவாறு அவர் அறிவாசானாக விளங்கினார்! அவர்களிடம் உரையாடியே தனது பொழுதைப் போக்கிக் கொண்டார்.

சமயக் கோட்பாடுகள், பழைய சரித்திர நூல்கள், இலக்கியங்கள், ஆசாரப் பண்பாடுகள் பற்றியெல்லாம், தமது மாணவர்களைத் துணையாக வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தார்! அவற்றைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியராகவும் இருந்தார்!

கி.மு. 722-ம் ஆண்டு முதல் கி.மு. 461-ம் ஆண்டு வரை நடந்த சம்பவங்களை எல்லாம் ஒன்று திரட்டினார்; வரலாற்று வடிவமாக்கினார்; அவற்றை நூல் வடிவத்தில் வெளியிட்டார்.

கன்பூசியஸ், நியாயமும் நேர்மையும் இல்லாத கருத்துக்கள், ஆணவமும் அகந்தையும் உடைய குணங்கள், குறுகிய மனப்பான்மையால் விளைந்த சம்பவங்கள், தற்புகழ்ச்சியால் மனிதநேயத்தை மாசுபடுத்திய தன்மைகள் ஆகிய நான்கு வகை பொருந்திய கருத்துக்களை எல்லாம் குப்பையென ஒதுக்கிவிட்டார். அவர் வெளியிட்ட நூலில் மேற்கண்டவைகள் எதையும் பார்க்க முடியாது.

ஆனால், மனித சமுதாயத்திற்குத் தேவையான மூன்று குணங்களுக்குரிய செய்ல்கட்கு மரியாதையும் மதிப்பும் தந்தார். அவை; தொழுகைக்கு மூன் குளிக்கும் முறை, போர், நோய் போன்றவைகளாகும்.

கன்பூசியஸ் மன வேதனைப்பட்டு வருந்திய சம்பவங்கள்:

◯ விதி, இலாபம், சுவர்க்கத்தின் ஆணை இவற்றை பற்றி அபூர்வமாகவே பேசியவர் கன்பூசியஸ்.

◯ ஒரு மனிதன் தனது மனதைப் பண்படுத்தாமல் இருப்பது.

◯ சரியான முறையில் கல்வி பயின்றும், சகல விஷயங்களைப் பற்றியும் கற்றுத் தெளியாமல் இருப்பது:

◯ நேர்மையான பாதை என்று தெரிந்தும், அதைப் பின்பற்றாமல் இருப்பது;

◯ தன்னுடைய தவறுகளை உணர்ந்தும் அவற்றை விலக்காமல் இருப்பது;

இவை, கன்பூசியஸ் என்ற ஞானியை வருத்தபட வைத்த சம்பவங்கள்:

◯ நம்பிக்கைக்குப் புறம்பான புராண இதிகாசங்களில் காணப்பட்ட அதி வினோதமான செயல்களைப் பற்றி எப்போதும் பேசாதவர்.

◯ எதற்கும் அடங்காத அகம்பாவிகளின் அக்கிரமச் செயல்களைப் பற்றி, யாரிடமும் எப்போதும் பேசமாட்டார்.

◯ மதம்பற்றி அவர் பேசிய போதும் கடவுள் சிலை சிலைகள் முன்பு அவர் பயபக்தியோடு பணிந்து நின்றபோதும், தம்மால் மதத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ சரிவரப் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றே திட்டவட்டமாகக் கூறினார்.

◯ அமைதியான முறையில், இதயப் பூர்வமாக கடவுளைத் தொழுவதையே ஆவர் விரும்பினார்.

◯ பாவச் செயல்களைப் புரிந்துவிட்டு, அவற்றுக்குப் பிராயசித்தம் தேடும் வகையில் பிரார்த்தனை செய்வது அவர் மிகவும் வெறுத்த விஷ்யமாகும்.

◯ தனது சொந்த ஊருக்கு கன்பூசியஸ் திரும்பி வந்து குருகுல-மாணவ வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த போது. அவரது மகன் 'பெயிபு' மரணமடைந்தார்! அவரது தலையாய மாணவர்களுள் ஒருவரான 'யென்யு யேய்' என்பவரும் இறந்துபோனார்.

◯ இந்த இரு பெரும் சாவுக் கொடுமைகளைக் கண்ட வயோதிக வளமேறிய ஞானி கன்பூசியஸ் பெருமூச்செறிந்தார்! 'இறைவா என்னை அழித்தி விட்டாயா? இறைவா என்னை அழித்து விட்டாயா!' என்று விம்மி விம்மி அழுதார்.

◯ தனது மாணவர் உயிர் பிரிந்தபோது, என்னுடைய இலட்சியப் பணியை என்னிடம் இருந்து பிரிந்து விட்டது. என்று அனல்பட்ட மெழுகு போல உருகினார்.

◯ உச்சிக் கொம்புடன் அமைந்த ஒரு காண்டாமிருகம் ஒன்றை அவர் பார்த்தபோது, அது கெட்ட சகுனத்தின் அறிகுறி என்று உணர்ந்தார்! அதனால், எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிய அவர், எனது முடிவின் அறிகுறியே இது என்று நம்பினார்! அப்போது இந்த உலகில் என்னைச் சரியாக யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்று கூறி ஆற்றமுடியாத சோக வெள்ளத்திலே மிதந்து போனார்!

◯ தனது கடைசி காலத்தில் 'வசந்தமும்-பின் பனியும்' என்ற நூலை எழுதினார்! இந்த நூலிலேதான் கி.மு. 727-ம் ஆண்டில் ஆட்சி செய்த 'யின்’ சீமானின் காலம் கி.மு. 48-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த 'யெய்' சீமானின் ஆட்சிக்காலம் வரையுள்ள பன்னிரண்டு சீமான்களின் ஆட்சிக்காலம் வரை வரலாற்றுச் சம்பவங்களையும், அவர்கள் செய்த அக்கிரமச் செயல்களையும்-நன்றாக, தெளிவாக விளக்கி, அந்த மனிதத் தன்மையற்றச் செயல்களைக் கண்டித்து அத்துடன் இவர் எழுதியுள்ள கண்டனங்களையும் ஒன்று சேர்த்து நூலாக வெளியிட்டார்.

◯ கன்பூசியஸ் இவ்வாறு அந்த வரலாற்று நிகழ்ச்சிகளை ஏன் எழுதினார்? வருங்காலத்தில் ஆட்சிப்பொறுப்பு வகிப்பவர்கள் இத்தகைய ஒரு வரலற்று அவமானங்களை நடத்தக்கூடாது என்பதற்காகத்தான் அந்த நூலை அவ்வாறு எழுதி வெளியிட்டார்.

கன்பூசியஸ் என்ற ஞான வேளான் விவசாயத்திலே வளர்ந்து அறுவடைப் பயிர்களுல் ஒருவரான 'ட்சூலு' கி.மு. 480 ஆம் ஆண்டு மறைந்து விட்டான்! இந்த நேரத்தில் வேளாண் பெருமகனான கன்பூசியஸ் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

பழுத்துப் பழமான கன்பூசியஸ் பெருமானைப் பார்ப்பதற்க அவரது அறிவு வளர்ப்புச் செல்வன் 'ட்சேகுங்', தனது பேராசானைக் காண ஓடோடி வந்தான்!

வயோதிகத்திலும் ஒரு சிறு கோபம் வந்த அந்தப்பேரறிவாளன் இவ்வளவு காலம் கடந்து என்னைப் பார்க்க இப்போது ஏன் வந்தாய்? என்று கேட்டுவிட்டு,

"மாபெரும் மலையும் தானே
பொடியாகி மறைந்து போகும்! உறுதியான தூண்களும் ஒருநாள்
உடைந்து ஒழிந்து போகும். செடிபோன்ற் இந்த ஞானி
வாடி மறையலானேன்"

என்று துன்பமும் துயரமும், சோகமும் சோர்வுமான தளர்ந்த குரலில் ஞானி கன்பூசியஸ் தத்தித் தத்திப் பாடிக் காற்றோடு காற்றாகிக் காலமானார்!

கி.மு. 479-ம் ஆண்டு, உலகத்தின் பெரும்தத்துவ ஞானியான மகான் கன்பூசியஸ், தனது 73-ம் வயதில் உயிர்துறந்தார். அவரது மரணப் படுக்கை அருகே அவரது ஒரு பெயரன் மட்டுமே அமர்ந்திருந்தான். வேறு யாரும் இல்லை!

'நான் பிறந்த இந்த உலகில் எதையும் சாதிக்காமல் இந்த உலகை விட்டுப் போவது என்க்குப் பெருத்த அவமானம்! இதற்காக வருங்கால மக்கள் என்னைத் தூற்றாமல் இருக்க வேண்டுமே' என்று வருத்தம் தழுவிய ஏக்க இழுப்போடு, தனது பெயரக் குழந்தையிடம் கூறிய கடைசி வாசகம் இதுதானோ..!

எந்த அறிவுள்ள அரசனும், என்னை ஆசானாக ஏற்றுக்கொள்ள எழுந்து வரவில்லை! நான் மரணத்தை அணைத்துக் கொண்டே காலமாகிறேன் வானகமாகிறேன்.

ஞானமகான் கன்பூசியஸ் உடலும் 'லூ' பட்டினத்தின் 'சே'நதியின் கரையிலே அடக்கம் செய்யப்பட்டது. அவரது ஞானத்தால் வளம்பெற்ற மாணவப் பயிர்கள் எல்லாம் இவருடைய கல்றை அருகே மூன்றாண்டுகள் வரைக் கண்ணீர் சிந்தினார்கள்.

எந்த மாணவனைப் பார்த்து தனது மரண சங்கீதத்தை இசைத்தாரோ, அந்த மாணவனான, 'ட்சே குங்' மட்டும் தனது ஞானப் பெருமான் கல்லறை அருகே ஆறாண்டுக் காலம் குரு பக்தி விசுவாசப் பயிராக வளைந்து, வணங்கி, வளர்ந்து மறைந்தான்!

எனது பேனா முனையால் உலகத்தையே மாற்றியமைப்பேன் என்று சூளுரைத்த பேனாவீரர் வால்டேர், கன்பூசியஸ் என்ற பேரறிவாளனைச் 'சீனாவின் முடி சூடா மன்னர்' என்று போற்றியுள்ளார்.

மனிதன் மகிழ்ச்சியோடும், நெறியோடும் வாழ்வது எப்படி எனபதைக் கன்பூசியஸ் என்ற ஞானியைப்போல அழகாகவும், தெளிவாகவும் மக்களுக்கு எடுத்துக் கூறியவர் வேறு எவருமில்லை. என்றார்!

மனித இனத்திற்குப் பயன்படும் முறையில் அறநெறி வழிகளை விளக்கி, தனி மனிதனுக்காகவும், பொதுமனிதச் சமுதாயத்திற்காகவும் சிந்தித்து அரும்பாடுபட்டவர் இவரை விட வேறு யாருமே இல்லை என்று அறிவு முரசு கொட்டலாம் என்று கூறியவர் வால்டேர்! வாழ்க கன்பூசியஸ் வளர்க கன்பூசியனிசம்!