கம்பன் கவித் திரட்டு 1/பாலகாண்டம்
கம்பன் கவித்திரட்டு
முதல் காண்டம்
பாலகாண்டம்
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே
எல்லாம் வல்ல இறைவனுக்கு வணக்கம் செலுத்துகிறார் கம்பர். இறைவன் இந்த உலகினைப் படைக்கிறான்; காக்கிறான்; அழிக்கிறான்.
படைத்தல், காத்தல் அழித்தல் ஆகிய இந்த மூன்று தொழில்களும் தொடர்ந்து நடக்கின்றன; நடந்து கொண்டே இருக்கின்றன. இடைவிடாது நடந்து கொண்டே இருக்கின்றன.
இது இறைவனின் திருவிளையாடல். இவ்விளையாடலுக்கு ஓர் எல்லை உண்டா? இல்லை, முடிவே இல்லை, இவ்விதம் விளையாடும் ஒருவனே நம் தலைவன், அவனே நம் இறைவன். அவனையே நாம் சரண் அடைவோம்.
⚪⚪⚪⚪
உலகம் யாவையும் — உலகங்கள் எல்லாவற்றையும்: அவற்றில் உள்ள உயிர் இனங்கள் எல்லாவற்றையும்; தாம் உள ஆக்கலும் — தோன்றச் செய்தலும்; நிலை பெறுத்தலும் — நிலைத்திருக்கச் செய்தலும்; நீக்கலும் — அழிந்து போகக் செய்தலும் நீங்கலா— (ஆகிய) இடைவிடாத; அலகு இலா— முடிவில்லாத விளையாட்டு திருவிளையாடலை உடையார்—உடையவராகிய; அவர்—அவ்வொருவரே தலைவர் நம் தலைவர்; அன்னவர்க்கே சரண்–நாங்கள் அந்த ஒருவரையே நாம் சரண் அடைவோம்.
⚪⚪⚪⚪
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு; அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
அநுமனுக்கு வணக்கம் தெரிவிக்கும் பாடல் இது. அஞ்சிலே ஒன்று பெற்றவன் எவன்? ஆஞ்சநேயன்; அநுமன். ஐந்து என்பது அஞ்சு என வழங்கப்பட்டது. ஐந்து எவை? ஐம்பெரும் பூதங்கள். நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி என்பன. இவை முறையே பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்பன.
அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றால் ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய காற்று பெற்றவன் என்று பொருள். வாயு புத்திரன்; காற்றுத் தேவன் மைந்தன் என்பன அநுமனின் பெயர்கள்.
அநுமன் என்ன செய்தான்? அஞ்சிலே ஒன்றைத் தாவினான். அஞ்சிலே ஒன்று எது? நீர். அதாவது கடல். கடலைத் தாவினான் அநுமன்.
எப்படித் தாவினான்? அஞ்சிலே ஒன்று வழியாகத் தாவினான். அதாவது வான வீதி வழியே தாவினான். தாவி அயலார் ஊர் சென்றான்
அயலார் ஊர் எது? இலங்கை. எதற்காக சென்றான்? ஆருயிர் காக்க. யாருடைய ஆர் உயிர்? சீதையின் ஆருயிர்
சென்று என்ன செய்தான்? அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டான். ஐம்பெரும் பூதங்களிலே ஒன்று நிலம்; பூமி. பூமி தேவியின் மகளாகிய சீதையைக் கண்டான்.
அயலார் ஊராகிய இலங்கைக்குத் தீ வைத்தான். அத்தகைய அநுமன் நம் எல்லாரையும் காப்பானாக.
⚬⚬⚬⚬
அஞ்சிலே ஒன்று—ஐம் பெரும் பூதங்களிலே ஒன்றாகிய காற்று; பெற்றான்—பெற்றவனாகிய அநுமன்; அஞ்சிலே ஒன்றைத் தாவி; பஞ்ச பூதங்களிலே ஒன்றாகிய நீரை (அதாவது கடலை) தாவி– அஞ்சிலே ஒன்று ஆறு ஆக—ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய வான் வழியாக; ஆருயிர் காக்க—சீதையின் அரிய உயிர் காத்தல் பொருட்டு; ஏகி—சென்று. அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய பூமி தந்த செல்வியைக் கண்டு. அயலார் ஊரில்–மாற்றார் ஊராகிய இலங்கையில். அஞ்சிலே ஒன்று வைத்தான் — ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய தீயை வைத்தவனாகிய அவன் — அந்த அநுமன் நம்மை அளித்துக் காப்பான்—நாம் வேண்டுவனவற்றை அளித்து நம்மைக் காப்பானாக.
⚬⚬⚬⚬
அசோக வனத்திலே சிறை இருந்த செல்வியைக் கண்டான் அநுமன். எந்நிலையில் கண்டான்? உயிர் விடும் நிலையில் கண்டான். ராம நாமத்தைக் கூறினான். கேட்டாள் சீதை, உயிர் விடும் முயற்சியைக் கைவிட்டாள். இவ்வாறு சீதா தேவி உயிர் காத்தான் அநுமன்.
⚬⚬⚬⚬
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவு நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ.
கதை சொல்வது என்ற முடிவுக்கு வந்தார் கம்பர். கதையும் சொல்லத் தொடங்கிவிட்டார். திடீரென்று கேள்வி ஒன்று எழுந்தது.
“உலகத்திலே எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது இந்த இராமன் கதையை நீ ஏன் சொல்கிறாய் ?”
இதுதான் கேள்வி. உடனே பதில் சொல்கிறார் கம்பர்.
“சக்கரவர்த்தி திருமகனாகிய இராமபிரானின் கதை மிகச் சிறந்த ஒன்று. எனவே இதை எல்லோருக்கும் எடுத்துக்கூறல் வேண்டும் என்ற ஆசை கொண்டேன். அந்த ஆசையினாலே இதைச் சொல்லத் தொடங்கினேன்” என்றார்.
‘இடி இடி’ என்று எவரோ சிரிப்பது போல் தோன்றியது. “இராமகாதை பெரியதொரு காவியம், அதைப் பாட முன்வந்திருக்கிறாய். ஆசை என்கிறாய், ஆசை என்பதன் பொருட்டு எதை வேண்டுமானலும் செய்யலாமா ?”
தாம் மேற்கொண்ட செயல் எவ்வளவு பெரிய ஒன்று என்பதை அப்போது தான் கம்பர் உணர்ந்தார். இராமகாதை ஒரு பெரிய கடல். அக்கடல் முன் தாம் ஒரு சிறு பூனை என்று கருதினார்.
பூனைக்குப் பால் மீது ஆசை. குடித்துவிடும். அதனாலே பால் பாத்திரத்தை மூடி வைப்பார்கள் வீட்டுப் பெண்மணிகள்.
சட்டியிலே உள்ள பாலுக்கு மூடி போடலாம். பால் கடலுக்கு மூடி போடுவது எப்படி? முடியாது.
பூனை என்ன செய்கிறது? கடலில் உள்ள பால் முழுவதையும் குடித்துவிட எண்ணிப் புறப்படுகிறது. குடிப்பது எப்படி? நாவினால் நக்கித்தானே குடிக்க இயலும்? அவ்விதம் எவ்வளவு பாலைக் குடித்துவிட முடியும்? கடலில் உள்ள பால் முழுவதும் குடித்துவிட முடியுமா? முடியாது அன்றோ?
இந்தக் காட்சி கண்முன் தோன்றியது கம்பருக்கு. தம்மைப் பூனையாகக் கருதினார்; இராமகாதையைப் பாற்கடலாகக் கருதினார்.
⚬⚬⚬⚬
ஓசை பெற்று உயிர்—ஒலித்து எழுந்து ஆரவாரம் செய்கிற; பால் கடல் உற்றுபால் கடலை அடைந்து; ஒரு பூசை–ஒரு பூனை; முற்றவும் நக்குபு–முழுவதும் குடித்துவிட எண்ணி; புக்கு என—புகுந்தது போல; காசு இல்—குற்றமில்லாத; கொற்றத்து இராமன்–வீரப்புகழ் மிக்க இராமன் உடைய; கதை—கதையை, அறையல் உற்றேன்—சொல்லத் தொடங்கினேன்; (எதனால்?) ஆசை பற்றி—ஆசையினால்.
⚬⚬⚬⚬
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் ‘இது இயம்புவது யாது?’ எனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கதை மாட்சி தெரிக்கவே.
“மாசு என்னை வந்து அடையுமே” என்று கலங்குகிறார். அடுத்த கணமே அந்தப் பெருமை மிக்க கதையை எடுத்துச் சொல்வதனால் ஏற்படும் மகிழ்ச்சியை எண்ணி உள்ளம் நிறைகிறார்.
“வையம் என்னை இகழட்டுமே! மாசு எனக்கு உண்டாகட்டுமே! இந்த தெய்வக் கதையை எடுத்துச் சொல்கிற அந்தச் செயல் பெரிது அன்றோ?” என்று மகிழ்ச்சி கொள்கிறார்.
‘பால் கடல் முற்றும் நக்கியே குடித்து விடலாம் என்று எண்ணி நாவினால் நக்கத் தொடங்குகிறதே! இந்தப் பூனையின் அறிவீனம் இருந்தவாறு என்னே! என்னே’ என்று உலகம் இகழ்வது காண்கிறார் கம்பர். உடனே தம்மைப் பற்றிய நினைப்பும் வருகிறது அவருக்கு.
“நம்மையும் இவ்வாறு தானே உலகம் இகழும்” என்று அஞ்சுகிறார்.
சிறுமை வருமோ என்று அஞ்சியவர் மனம் தேறுகிறார்.
“உலகம் என்னை இகழவும் களங்கம் எனக்குண்டாகவும் இந்த தெய்வப் பெருங்கதையைச் சொல்வது எதற்காக என்றால் இதன் பெருமையை எல்லாருக்கும் அறிவிக்கவே” என்கிறார்.
⚬⚬⚬⚬
வையம் என்னை இகழவும் – உலகினர் என்னை இகழ்ந்து கூறவும்; மாசு எனக்கு எய்தவும் – களங்கம் வந்து என்னை அடையவும்; இது – இந்த இராம காதையை; இயம்புவது யாது எனில் – சொல்வது எக்காரணம் பற்றி என்று கேட்டால்; பொய்யில் கேள்விப் புலமையினோர்—மெய்ஞானியராகிய வால்மீகி முனிவரும் காளிதாசரும்; புகல் சொல்லிய தெய்வமாக் – கதை தெய்வீகப் பெருங்கதையின் ; மாட்சி — பெருமையை ; தெரிவிக்கவே – தெரிவிப்பதன் பொருட்டே ஆகும்.
⚬⚬⚬⚬
இரவி தன் குலத்து எண்ணில் பார் வேந்தர்தம்
பரவும் கல் ஒழுக்கின்படி பூண்டது
சரயு என்பது; தாய்முலை அன்னது; இவ்
உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்
ஒரு நாடு வளம் பெறக் காரணமாயிருப்பது ஆறு. ஆறு இன்றேல் உயிர்கள் வாழ்தல் எங்ஙனம்? நிலம் விளைவது எப்படி? மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவு பெறுவது எப்படி?
கோசல நாட்டுக் குரிசிலாகிய இராமனைப் பாடப் புகுந்த கம்பர் அந்தக் கோசல நாட்டின் வளத்துக்குக் காரணமாக இருந்த சரயு நதியைப் பாடுகிறார்.
கதாநாயகனாகிய இராமன் தோன்றிய குலம் சூரிய குலம். அக்குலம் மிக்க பெருமை கொண்டது.
அக்குலத்தில் தோன்றிய மன்னர் பலரும் நல் ஒழுக்கம் பூண்டு விளங்கினர். அவ்வாறே நல்லொழுக்கம் பூண்டு விளங்கியது சரயுநதி. நல் ஒழுக்கம் உடையது என்றால் எப்படி? அந்த ஆறு பாயும் இடம் எங்கும் நலமே செய்தது; தீமை ஏதும் செய்யவில்லை. மக்கள் நலம் பெற்றார்கள்; நாடு நலம் பெற்றது.
கோசல நாடு வாழ் உயிர்களுக்கெல்லாம் தாய்போல விளங்கியது சரயு. தாய் எவ்வாறு தன் சேய்க்குப் பாலூட்டி வளர்க்கிறாளோ அவ்வாறே கோசல நாட்டு மக்களையும் உயிர் இனங்களையும் நீருட்டி வளர்த்தது சரயு என்ற அந்த ஆறு.
⚬⚬⚬⚬
இரவி தன் குலத்து — சூரிய குலத்தில் தோன்றிய ; எண் இல்—எண்ணில் அடங்காத; பார் வேந்தர் தம்—அரசர்களுடைய பரவும் — புகழ்ந்து பேசப்படும்; ஒழுக்கின்படி — நல் ஒழுக்கம் போலவே பூண்டது — நல் ஒழுக்கம் பூண்டது. சரயு என்பது — சரயு என்று சொல்லப்படுகிற ஆறு. இவ் உரவு நீர் நிலத்து உயிர்க்கு எலாம் — உலாவும் தன்மை உடைய — நீர் உள்ள கடலினால் சூழப்பட்ட இந் நிலை உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம்; தாய் முலை அன்னது — தன் சிறு குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்க்கும் தாயின் மார்பு போன்றது.
⚬⚬⚬⚬
தாது உகு சோலை தோறும்
சண்பகக் காடு தோறும்
போது அவிழ் பொய்கை தோறும்
புது மணல் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனம் தோறும்
வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிர் என
உலாயது அன்றே
சரயு என்று சொல்லப்பட்ட அந்த ஆற்றின் நீர் எங்கெல்லாம் பாய்ந்தது? மகரந்தம் சிந்துகின்ற சோலை தோறும் சென்று பாய்ந்தது; சண்பகத் தோட்டங்கள் தோறும் பாய்ந்தது; பொய்கைகள் தோறும் பாய்ந்தது; பாக்குத் தோட்டங்களுக்கெல்லாம் சென்று பாய்ந்தது வயல்களில் எல்லாம் பாய்ந்தது. இப்படியாக உடம்பு முழுவதும் உயிர் உலாவுவது போல சரயு நதியின் தண்ணீர் எங்கும் பாய்ந்தது.
⚬⚬⚬⚬
தாது உகு சோலை தோறும் – மகரந்தம் சிந்துகின்ற சோலைகளில் எல்லாம் ; சண்பகக் காடு தோறும் – சண்பக வனங்களில் எல்லாம் ; போது அவிழ் — அரும்புகள் மலரப் பெற்ற ; பொய்கை தோறும் —பொய்கைகளில் எல்லாம்; புது மணம் — புதிய மணம் வீசுகின்ற தடங்கள் தோறும் — தடாகங்களில் எல்லாம்;மாதவி வேலி — குருக்கத்திக் கொடிகளை வேலியாகக் கொண்ட ; பூக வனம் தோறும் — பாக்குத் தோட்டங்கள் எல்லாம் ; வயல்கள் தோறும் — வயல்களில் எல்லாம்; ஓதிய உடம்பு தோறும் உயிர் என — உடம்பு முழுவதும் உயிர் உலாவுவது போன்று; உலாயது — சரயு நதியின் நீர் சென்று உலாவியது.
⚬⚬⚬⚬
நீரிடை உறங்கும் சங்கம்;
நிழலிடை உறங்கும் மேதி ;
தாரிடை உறங்கும் வண்டு ;
தாமரை உறங்கும் செய்யாள் ;
தூரிடை உறங்கும் ஆமை ;
துறையிடை உறங்கும் இப்பி ;
போரிடை உறங்கும் அன்னம் ;
பொழிலிடை உறங்கும் தோகை.
இவ்வாறு அந்த ஆற்று நீர் பாய்வதனாலே கோசல நாடு செழித்து விளங்கிற்று.
எங்கு நோக்கினும் நீர் நிலைகள், அவற்றிலே சங்குகள் கிடக்கும், எருமைகள் மர நிழலிலே படுத்து உறங்கும், ஆடவரும் மகளிரும் சூடியுள்ள மலர் மாலைகளிலே வண்டுகள் மொய்த்து உறங்கும்.
ஆமை இருக்கிறதே! அது சேற்றிலே கிடக்கும் நீர்த்துறைகளிலே சிப்பிகள் இருக்கும், வைக்கோல் போர்களிலே அன்னம் படுத்து உறங்கும். தோப்புகளிலே மயில்கள் இருக்கும்.
தாமரை மலரிலே திருமகள் இருப்பாள்.
⚬⚬⚬⚬
சங்கம் – சங்குகள்; தீரிடை உறங்கும். நீரிலே கிடக்கும் ; மேதி – எருமைகள்; நிழலிடை உறங்கும் – மர நிழலிலே படுத்து உறங்கும், வண்டு —வண்டுகள்; தாரிடை உறங்கும் — ஆடவரும் மகளிரும் அணிந்திருக்கும் மலர் மாலைகளிலே படுத்துறங்கும், செய்யாள் – திருமகள்; தாமரை உறங்கும் —தாமரை மலரிலே வீற்றிருப்பாள்; ஆமை — ஆமைகள்; தூரிடை உறங்கும் — சேற்றிலே உறங்கும்; துறையிடை – நீர்த்துறைகளிலே; உறங்கும் இப்பி — முத்துச்சிப்பிகள் கிடக்கும்; போரிடை – வைக்கோல் போர்களிலே அன்னம் உறங்கும் — அன்னப் பறவைகள் படுத்து உறங்கும். தோகை — மயில்கள்; பொழில் இடை – தோப்புகளிலே உறங்கும்—இருக்கும்.
⚬⚬⚬⚬
வரம்பெலாம் முத்தம் ; தத்தும்
மடை எலாம் பணிலம் ; மா நீர்க்
குரம்பெலாம் செம்பொன் ; மேதிக்
குழி எலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பெலாம் பவளம் ; சாலிப்
பரப்பெலாம் அன்னம் ; பாங்கர்
கரம்பெலாம் செந்தேன் ; சந்தக்
கா எலாம் களிவண்டுக் கூட்டம்.
கழனிகளின் வரப்பு எங்கும் முத்துக்கள்! நீர் பாயும் மடைகளில் எல்லாம் சங்குகள்! வாய்க்கால்கள் எங்கும் சிவந்த பொன் கட்டிகள்! எருமைகள் விழுந்து புரள்கிற சேற்றுக் குட்டைகளில் எல்லாம் செங்கழு நீர் மலர்கள்; குவியல் குவியலாக! பரம்பு அடித்துச் சமன் செய்யப்பட்ட வயல்கள் தோறும் பவளம்! நெல் பயிர்கள் நடுவே அன்னப் பறவைகள்! நறுமணம் வீசும் பூங்கா எங்கும் வண்டுக் கூட்டம்.
⚬⚬⚬⚬
வரம்பு எலாம்—கழனிகளின் வரப்புகளில் எல்லாம்; முத்தம்—முத்துக்கள்; தத்து மடை எலாம்–நீர் தாவிப் பாய்கிற மதகுகளில் எல்லாம்; பணிலம்—சங்குகள்; மா நீர்க் குரம்பு எலாம்—பெரிய நீர்ப் பெருக்குடைய வயல் கரை எங்கும்; செம்பொன்—சிவந்த பொன் சட்டிகள்; மேதிக் குழி எலாம்—எருமைகள் விழுந்து புரள்கிற குட்டைகளில் எல்லாம்; கழுநீர்க் கொள்ளை—ஏராளமான செங்கழுநீர் மலர்களின் குவியல் பரம்பு எலாம்—பரம்பு அடித்துச் சமன் செய்யப்— பட்ட வயல்கள் எங்கும்; பவளம்–சாலிப் பரப்பு எலாம்—நெல் பயிராகிப் பரந்துள்ள இடங்களில் எல்லாம்; அன்னம்–அன்னப் பறவைகள்.
⚬⚬⚬⚬
ஆலை வாய்க் கரும்பின் தேனும்
அரிதலைப் பாளைத் தேனும்
சோலை வாய்க் கனியின் தேனும்
தொடை இழி இறாலின் தேனும்
மாலை வாய் உகுத்த தேனும்
வரம்பு இகந்து ஓடி வங்க
வேலை வாய் மடுப்ப உண்டு
மீன் எலாம் களிக்கும் மாதோ !
கரும்பு ஆலைகளிலிருந்து பாய்கின்ற கரும்புச்சாறும், பாளைகளை நுனி சீவுதலால் அவற்றிலிருந்து வடிகின்ற கள்ளும் ஒன்று கலந்து பெருகி ஓடுகின்றன.
மலை உச்சியிலே உள்ள தேன் அடை மீது வேடர்கள் அம்பு எய்து தேன் எடுக்கிறார்கள். எப்படி எடுக்கிறார்கள்? அம்பிலே நூலைக்கட்டி வீசுகிறார்கள். அம்பு தேன் அடை மீது பாய்ந்து சொருகி நிற்கிறது. நூல் வழியே தேன் சொரிகிறது.
ஆடவரும் மகளிரும் அணிந்துள்ள மலர் மாலைகளில் இருந்தும் தேன் வழிகிறது. இப்படி வழியப் பெற்ற தேன் ஒன்றாகி, ஆறு போல் பெருகி, மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் கடலில் கலக்கிறது. கடலில் உள்ள மீன்கள் எல்லாம் அத்தேனை உண்டுகளிக்கின்றன.
⚬⚬⚬⚬
ஆலை வாய்க் கரும்பின் தேனும்—கரும்பு ஆலைகளிலிருந்து வழிந்து ஓடுகின்ற தேன் போல் இனிய கரும்புச் சாறும்; அரிதலைப் பாளைத் தேனும்—அரிந்து நுனிகளை உடைய பாளையினின்றும் தோன்றியகள்ளும்; சோலை வாய்க் கனியின் தேனும்—சோலைகளில் பழுத்து விழுந்த கனிகளின் சாறும்; தாடை இழி இறாலின் தேனும்—அம்பு வழியே பாயும் தேனும்; மாலை வாய் உகுத்த தேனும்—மலர் மாலைகளில் இருந்து வழிந்த தேனும்; வரம்பு இகந்து—எல்லையில்லாது பெருகி; ஓடி=ஓடி, வங்க வேலை வாய் மடுப்ப—மரக்கலங்கள் நிறுத்தப் பட்டுள்ள கடலை அடைய; மீன் எலாம்——(அக்கடலில் உள்ள) மீன்கள் எல்லாம் உண்டுகளிக்கும்—(அத்தேனை) உண்டு மகிழும்.
○○○○
சேல் உண்ட ஒண்கணாரில்
திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப் பள்ளி
வளர்த்திய மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி
கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை
தாலாட்டும் பண்ணை
சிவந்த கால்களை உடைய அன்னங்கள் தங்கள் குஞ்சுகளைத் தாமரையிலே படுக்க வைத்து விட்டு மகிழ்ந்து திரிந்து கொண்டு இருக்கின்றன. முழங்கால் வரை சேறு பூசிக்கொண்ட எருமைகள் கன்றுகளை எண்ணிக் கனைக்கின்றன; அப்படிக் கனைத்த உடனே பால் சொரிகின்றன தாமரை மலரிலே படுத்திருக்கின்ற அன்னக் குஞ்சுகள் தூங்கியவாறே அந்தப் பாலைக் குடிக்கின்றன. அவ்வாறு பால் குடித்துத் தூங்கும் குஞ்சுகளுக்குத் தாலாட்டுப் பாட வேண்டாமா?
வயல்களிலே உள்ள பர்சைத் தேரைகள் எழுப்பும் ஒலி, அந்த அன்னக் குஞ்சுகளுக்குத் தாலாட்டுப் பாடுவது போல் இருக்கிறதால்.
⚬⚬⚬⚬
பண்ணை—வயல்களில்; சேல் உண்ட ஒண் கணாரில்—சேல் மீன் போன்ற அழகிய கண்களை உடைய பெண்கள் போல்; திரிகின்ற—நடந்து திரிகின்ற; செங்கால் அன்னம்—சிவந்த கால்களை உடைய அன்னப் பறவைகள்; மால் உண்ட—மயங்குதல் உற்ற; நளினப் பள்ளி—தாமரை மலராகிய படுக்கையிலே; வளர்த்திய கண்—வளரச் செய்த; மழலைப் பிள்ளை—இளம் குஞ்ஈகள்; கால் உண்ட சேறு—முழங்கால் வரை சேறு பூசிய; மேதி—எருமை. கன்று உள்ளி— தன் கன்றை நினைத்து; கனைப்ப—கனைக்க; சோர்ந்த—சொரிந்த; பால் உண்டு—பாலை உண்டு; துயில—தூங்க; பச்சைந் தேரை—பச்சை நிறங் கொண்ட தவளைகள்; தாலாட்டுப்—தாலாட்டும் பாடும்.
⚬⚬⚬⚬
குயிலினம் வதுவை செய்யக்
கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும்
அரங்கினுக்கு அழகு செய்ய
பயில் சிறை அரச அன்னம்
பன்மலர் பள்ளி நின்றும்
துயில் எழத் தும்பி காலைச்
செவ்வழி முரல்வ சோலை
சோலைகள் நிறைந்த அந்தக் கோசல நாட்டிலே ஆணும் பெண்ணுமாகக் குயில்கள் இன்புற்று இருக்கின்றன. மகளிர் நடனம் ஆடுகின்றார்கள். அவர்களுக்கு அழகு தரும் விதத்திலே மரங்களிலே மயில்கள் தங்கள் அழகிய தோகையை விரித்து நடனம் ஆடுகின்றன. தும்பிகள் ரீங்காரம் செய்கின்றன; ரீங்காரம் எப்படி இருக்கிறது ? விடியற் காலையிலே பள்ளி எழுச்சி பாடுவது போல் இருக்கிறது. அது வரை தாமரை மலரிலே தூங்கிக் கொண்டிருந்த அரச அன்னங்கள் அந்தப் பள்ளி எழுச்சி இசை கேட்டுக் கண் விழித்து எழுகின்றன.
⚬⚬⚬⚬
சோலை—சோலைகளில்; குயில் இனம். குயில் இனங்கள்; வதுவை செய்ய—ஆண் குயில்களுடன் கூடி இன்புற்று இருக்க; கொம்பு இடை—மரக்கிளைகளில்; மஞ்ஞை—மயில்கள்; குனிக்கும்—ஆடும். (அது எப்படியிருக்கிறது என்றால்) அயில் விழி மகளிர்—வேல் போலும் விழி படைத்த பெண்கள்; ஆடும் அரங்கினுக்கு—நடனம் செய்கிற அரங்கினுக்கு அழகு செய்ய—மேலும் அழகு செய்வது போலுளது. பயில் சிறை—நெருங்கிய சிறகுகள் கொண்ட; அரச அன்னம்—ராஜ ஹம்ஸங்கள்; பன் மலர்ப் பள்ளி நின்றும்—பல்வேறு தாமரை மலர்ப் படுக்கைளிலிருத்தும்; துயில் எழ—விழித்து எழ; தும்பி—வண்டுகள்: செவ்வழி—செவ்வழி எனும் ராகத்தைப்; முரல்வ—பாடுகின்றன.
⚬⚬⚬⚬
நில மகள் முகமோ ! திலகமோ !
கண்ணோ ! நிறை நெடு மங்கல நாணோ !
இலகு பூண் முலைமேல் ஆரமோ !
உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய
மலர் கொலோ மாயோன் மார்பின்
நல்மணிகள் வைத்த பொற்
பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ ஊழியின்
இறுதி உறையுளோ யாது உரைப்பாம் !
இதுவரை கோசல நாடு பற்றிக் கூறினார் கம்பர். இப்போது அந்த நாட்டின் தலைநகராகிய அயோத்தி பற்றிக் கூறுகிறார்.
இந்த நகரம் என்ன பூமி தேவியின் திருமுகமோ ! அம்முகத்தில் விளங்கும் திலகமோ ! நில மடந்தையின் கண்ணோ திருமங்கலச் சரடோ மார்பிலே விளங்கும் ரத்தின மாலையோ! திருமகள் இனிது வீற்றிருக்கும் தாமரை மலரோ! திருமால் மார்பிலே உள்ள நல் மணிகள் வைத்த தங்கப் பெட்டியோ ! வைகுண்டமோ ! ஊழிக்காலத்திலே எல்லாப் பொருளும் தங்கும் இடமாகிய திருமாலின் வயிறோ !
இவற்றுள் எது என்று சொல்வது !
இவ்வாறு வியந்து கூறுகிறார் கம்பர்.
⚬⚬⚬⚬
நிலமகள் முகமோ—பூமி தேவியின் திருமுகமோ; திலகமோ—அம்முகத்தில் விளங்கும் திலகமோ; கண்ணோ—அவளது கண்ணோ; நிறை நெடுமங்கல நாணோ—நிறைந்த நீண்ட மங்கலச் சரடோ; இலகுபூண் முலைமேல் ஆரமோ—மார்பிலே விளங்கும் ரத்ன மாலையோ; உயிரின் இருக்கையோ—உயிர் இருக்கும் இடமோ; திருமகட்கு இனிய மலர் கொலோ—திருமகள் இனிது வீற்றிருக்கும் தாமரை மலர் தானோ; மாயோன்—திருமாலின் மார்பில்—மார்பிலே விளங்கும் ; நல்மணிகள் வைத்த—உயரிய மணிகள் வைக்கப்பெற்ற; பொன் பெட்டியோ—தங்கப் பெட்டியோ; வானோர் உலகின்மேல்—தேவர் உலகுக்கும் மேலான; ஓர்—ஓப்பற்ற; உலகோ—வைகுண்டமோ, ஊழியின் இறுதி உறையுளோ—ஊழிக்காலத்தின் முடிவிலே எல்லாப் பொருளும் தங்கும் இடமாகிய திருமாலின் வயிறுதானோ; யாது உரைப்பாம்—இவற்றுள் எது என்று சொல்வது !
⚬⚬⚬⚬
தெள்வார் மழையும் திரை
ஆழியும் உட்க நாளும்
விள்வார் முரசம் அதிர் மாநகர்
வாழும் மக்கள்
கள்வார் இலாமைப் பொருள்
காவலும் இல்லை ; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பாரும்
இல்லை மாதோ.
அயோத்தியிலே முரசு ஒலிக்கிறது. எப்படி ஒலிக்கின்றது? இடிபோலவா ? கடல் போலவா ? இல்லை; இல்லை. இடியும், கடலும் தோற்று வெட்கம் அடைய வேண்டும். அந்த மாதிரி ஒலிக்கிறது முரசு.
அந்நகர மக்கள் தங்கள் பொருள்களுக்குக் காவல் போடுவது இல்லையாம். ஏன் ? கள்வர் இல்லை, களவாடுபவர் இல்லை அந்த நகரிலே. அதனாலே எவரும் தங்கள் வீடுகளுக்குப் பூட்டுப் போடுவது இல்லை. எதையும் பூட்டி வைத்துப் பாதுகாப்பது இல்லை. கொடுப்பார் எவரும் இலர், ஏன் ? ‘கொடு’ என்று கேட்பார் எவருமே இலர். அதனாலே கொடுப்பவர் இலர். இரப்பவரும் இலர், ஈவாரும் இலர்.
⚬⚬⚬⚬
தெள்வார் மழையும்—தெளிவான நீர் பொழிகின்ற மேகமும் ; திரை ஆழியும் அலை கடலும் ; உட்க—வெட்கம் அடையும் படியாக; நாளும்—நாள்தோறும்; வள் வார் முரசம்—தோல் கயிறுகள் கொண்டு கட்டப்பட்ட பெரிய பேரிகைகள் அதிர்—ஒலிக்கின்ற மாநகர் அப்பெரிய நகரில்; வாழ்—வாழ்கின்ற; மக்கள்— மக்களில்; கள்வார் இலாமையால்—திருடர் இல்லாமையால்; பொருள் காவலும் இல்லை—எவரும் தங்கள் பொருள்களைப் பூட்டி வைத்துப் பாதுகாப்பது இல்லை; கொள்வார் இலாமை ஈ என்று யாசிப்பவர் எவரும் இல்லாமையால் கொடுப்பாரும் இல்லை.
⚬⚬⚬⚬
கல்லாது நிற்பர் பிறர்
இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை ; அவை
வல்லர் அல்லாரும் இல்லை ;
எல்லாரும் எல்லாப் பெரும்
செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை ; உடையாரும்
இல்லை மாதோ !
மொத்தப் படித்தவர் என்போர் அங்கே இலர் ஏன் ? எல்லாருமே கல்வி வல்லவர். கல்லாது நிற்பவர் எவருமே இலர். அங்ஙனம் இருக்கும் போது ‘இவர் படித்தவர் இவர் படியாதவர்’ என்று சொல்வது எவ்வாறு ?
செல்வம் எல்லாரிடமும் சமமாக இருந்தது. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று இருந்தனர். அதனாலே ஏழையும் இல்லை; பணக்காரரும் இல்லை. இல்லாதவர் என்போர் இலர்; அதாவது பொருள் இல்லாதவர் இலர்; மெத்தப் பொருள் படைத்தவரும் இலர்.
⚬⚬⚬⚬
கல்லாது நிற்பர் பிறர் இன்மையின்—கல்வி கற்காமல் வீண் பொழுது போக்கித் திரிபவர் எவருமே இல்லாததால்; கல்வி முற்ற வல்லாரும் இல்லை—மிக்கப் படித்தவர் என்று கூறத்தக்கவர் எவருமே இலர்; அவை வல்லார் அல்லாரும் இலர்—கல்வியில்லாதவரும் இலர். எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே—எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்றிருத்தலாலே; இல்லாரும் இல்லை—செல்வம் இல்லாதவர் எவருமே இலர் உடையாரும் இல்லை—பெரும் செல்வம் உடையார் எவருமே இலர்.
⚬⚬⚬⚬
பந்தினை இளையவர் பயில் இடம் மயிலூர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்
சந்தன வனம் அல சண்பக வனமாம்
நந்தன வனம் அல நறை விரி புறவம்
இளம் பெண்கள் பந்து விளையாடியும், கல்வி பயின்றும் மகிழும் கல்விக் கூடங்கள் எங்கே இருந்தன? ஊர் நடுவிலா? சந்தடி மிக்க தெருக்களிலா? ஐந்தடுக்கு மாடிக் கட்டிடங்களிலா? இல்லை; இல்லை. சண்பகத் தோட்டங்களிலே இருந்தன. மயிலேறும் முருகன் போன்ற அழகிய இளம் பிள்ளைகள் போர்க் கலை பயிலும் இடங்கள் எங்கே இருந்தன? நந்தன வனத்திலா? இல்லை. நறுமணம் வீசும் முல்லை வனத்தில் இருந்தன.
⚬⚬⚬⚬
இளையவர்—இளம் பெண்கள்; பந்தினை பயில் இடம்—பந்து எறிந்து விளையாடும் இடம்; சந்தன வனம் அல—சந்தனக் காட்டில் இல்லை. சண்பக வனமாம்—சண்பகத் தோட்டங்களாம். மயில் ஊர்—மயில் வாகனத்தில் ஏறிச் செல்லும்; கந்தனை அனையவர்—பாலசுப்பிரமணியன் போன்ற இளம் ஆண் பிள்ளைகள்; கலை தெரி கழகம்—போர்க் கலை பயிலும் இடம்; நந்தன வனம் அல—நந்தன வனத்தில் இல்லை; நறை விரி புறவம்—மணம் வீசும் காடுகள்.
⚬⚬⚬⚬
கறுப்புறு மனமும் கண்ணில்
சிவப்புறு சூட்டுங் காட்டி
உறுப்புறு படையில் தாக்கி
உறுபகை இன்றுச் சீறி
வெறுப்பு இல களிப்பின் வெம்போர்
மதுகைய வீர வாழ்க்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம்
பொருத்து வாரும்.
அந்த மக்களின் பொழுது போக்கு பற்றிச் சொல்கிறார் கம்பர் பொழுது போக்கு எது? கோழிச் சண்டை தான் அவர்களது பொழுது போக்கு. சண்டை எப்படி!
வீர வாழ்வே விரும்பும் கோழிகள். அவ்வீர வாழ்வுக்கு இழுக்கு நேரின் கணமும் உயிர் வாழாக் கோழிகள். வெகுளியுற்ற மனம். சினத்தால் சிவந்த கண்கள். கண்களை விடச் சிவந்த உச்சிக் கொண்டை.
இத்தகைய கோழிகள் காலில் கட்டப்பட்ட ஆயுதம் கொண்டு போரிடுகின்றன. பகையின்றிச் சீறுவன. வெறுப்பில்லாதன. ஆனால் போரில் விருப்புள்ளன. மதத்தால் விளைந்த களிப்பில் வீரப் போர் புரிவன. இத்தகைய கோழிகளைப் போர் செய்ய விட்டு வேடிக்கை பார்ப்பார்களாம்.
⚬⚬⚬⚬
உறுபகை இன்றி—முன்னர் ஏற்பட்ட பகை இல்லாமல்; சீறி—சீற்றம் கொண்டு; கறுப்புறு மனமும்—சினங் கொண்ட மனமும்; கண்ணில் சிவப்புறு—கண்களை விடச் சிவந்த; சூட்டும் காட்டி—உச்சிக் கொண்டையையும் காட்டி; உறுப்புறு படையில் தாக்கி—தன்னை எதிர்க்கும் கோழிகளைத் தன் காலிலே கட்டப்பட்டுள்ள கத்தியினால் தாக்கி; வெறுப்பு இல—போர் செய்வதிலே சிறிதும் வெறுப்பு இல்லாதனவாகி; களிப்பின் வெம்போர் மதுகைய—மனக் களிப்புடன் வெம்போர் செய்யும் வலிமையுடையனவும்; வீர வாழ்க்கை மறுப்பட—தங்கள் வீர வாழ்வுக்கு மாசு வந்தால்; ஆவி பேணா—உயிரைப் பாதுகாக்க விரும்பாத; வாரணம்—கோழிகளை; செலுத்து வாரும்— போரிலே ஈடுபடுத்துகிறவர்களும்.
⚬⚬⚬⚬
பொருந்திய மகளிரோடு
வதுவையில் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல் சென்றன்ன
இயல் இசைப் பயன் துய்ப்பாரும்
மருந்தினும் இனிய கேள்வி
செவி உற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டு அன்ன
விழா அணி விரும்புவாரும்
அந்த நகரத்திலே ஒரு புறம் திருமண விழா. ஆண்கள் தாங்கள் விரும்பிய மகளிரோடு மணக்கோலம் பூண்டு இருக்கிறார்கள்.
மற்றொரு புறம் இசை விழா. பருந்தும் நிழலும் போல பக்க வாத்தியங்கள் முழங்க நடைபெறும் இசைக் கச்சேரிகள். இவற்றைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள் அந்த நகர மக்கள்.
இன்னொரு புறம். இலக்கியச் சொற்பொழிவுகள். அமுதினும் இனிய இச்சொற்பொழிவுகளைக் கேட்டு இன்புறுகிறார்கள் மக்கள்.
மற்றொரு புறம் விருந்து உபசாரங்கள். விருந்தினரை வரவேற்று அவர் மனம் குளிர உபசரித்து விருந்தளித்து அன்ன விழா எடுத்த வண்ணம் இருக்கிறார்கள் மக்கள்.
⚬⚬⚬⚬
பொருந்திய—மனம் ஒன்றுபட்ட மகளிரோடு—இளம் பெண்களுடனே வதுவையில்—மணக் கோலத்தில்; பொருந்து வாரும்—ஈடுபட்டிருப்பவரும்; பருந்தொடு நிழல் சென்றன்ன—பருந்து பறக்கும் போது அதன் கூடவே நிழலும் தொடர்வது போல; இயல் இசைப் பயன் துய்ப்பாரும்—பக்க வாத்தியங்கள் தொடர நடைபெறும்; இயல் இசைக் கச்சேரிகளைக் கேட்டு இன்புறு வாரும்; மருந்தினும் இனிய–தேவாமிர்தத்தினும் இனிய; கேள்வி–இலக்கியச் சொற்பொழிவுகளை செவியுற—காது குளிர; மாந்து வாரும்—கேட்டு மகிழ்வாரும்; விருந்தினர் முகம் கண்டு—வரும் விருந்தினர் முகம் கண்டு; அன்ன விழா அணி—சாப்பாடு அளிக்க; விரும்புவாரும்— விரும்புகிறவர்களும்.
𝑥𝑥𝑥𝑥
முந்து முக்கனியின் நானா
முதிரையின் முழுத்த நெய்யின்
செந்தயிர்க் கண்டம் கண்டம்
இடை இடை செறிந்த சோற்றில்
தம் தம் இல்லிருந்து தாமும்
விருந் தொடும் தமரினோடும்
அந்தணர் அமுதர் உண்டி
அயில் உறும் அமலைத்து எங்கும்
அந்த நகர மக்கள் உணவு அருந்தினார்கள். எப்படி அருந்தினார்கள்? ஒரே ஆரவாரம் செய்துகொண்டு உணவு அருந்தினார்கள். எங்கே அருத்தினார்கள்? தம் தம் வீடுகளில் இருந்து உண்டார்கள். தனியாகவா உண்டனர்? இல்லை; இல்லை. சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டனர். அந்தணர்க்கும் தேவர்க்கும் படைத்துப் பின்னரே உண்டனர். மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்து கொண்டு உண்டனர். உணவு எப்படி? சர்க்கரைப் பொங்கல் எத்தகைய சர்க்கரைப் பொங்கல்? நால்வகைப் பருப்பு! வெல்லம்! நிறைய நெய்! எல்லாம் கலந்து செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கல்! பிறகு தயிர்சாதம். நல்ல கட்டித் தயிர். சிவந்த கட்டித்தயிர். கட்டியாகப் பெய்து கலக்கப்பட்ட தயிர் சாதம். இவற்றுடன் பழங்கள். மா, பலா, வாழை முதலிய முக்கனிகளையும் சேர்த்து உண்டனர்.
இத்தகைய சாப்பாட்டு ஆரவாரம் வீடுதோறும் கேட்கும்.
𝑥𝑥𝑥𝑥
எங்கும்—எங்கு பார்த்தாலும்; உண்டி அயில்வுறும் அமலைத்து—விருந்துச் சோருண்ணும் ஆரவாரம். தம் தம் இல் இருந்து—அவரவர் தம் வீடுகளிலே அமர்ந்து; தமரோடும்—அவரவர் தம் சுற்றத்தவரோடும்; தாமும்—தாங்களும்; விருந்தோடும்—விருந்தனருடனும்; முந்து முக்கனியின்—பழங்களில் தலை சிறந்த மா, பலா, வாழை முதலிய மூவகைக் கனிகளோடும்; நானா முதிரையின்—பல்வகைப் பருப்புக்களும்; கண்டம்—வெல்லக் கட்டியும்; முழுத்த நெய்யின்—இவை மூழ்கும் அளவு பெய்யப்பட்ட நெய்யும்; இடை செறிந்த சோற்றில்—சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கல்; செந்தயிர் கண்டம்—சிவந்த தயிர் கட்டிகள்; இடை இடை செறிந்த சோற்றில்—சோறுடன் கலந்த சாதம் (இவற்றை உண்டார்கள்).
𝑥𝑥𝑥𝑥
பிறை முகத் தலைப் பெட்பின்
இரும்பு போழ்
குறை கறித் திரள் குப்பை
பருப்பொடு
நிறை வெண் முத்தின் நிறத்து.
அரிசிக் குவை
உறைவ கோட்ட மில்
ஊட்டிடம் தோறெலாம்.
அன்ன சத்திரம் ஒன்றை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் கம்பர். இந்தச் சோற்று மாடம் எக்காட்சி வழங்குகிறது? அரிவாள் மணையிலே நறுக்கப்பட்ட காய் கனிகளின் குவியல் ஒரு புறம். பருப்புக் குவியல் இன்னொரு புறம். வெண்முத்துப் போன்ற அன்னக் குவியல் மற்றொரு புறம். இம்மாதிரியாக சோற்று மாடங்கள் பல.
𝑥𝑥𝑥𝑥
கோட்டம் இல்—எவ்வித குற்றமும் இல்லாமல் நன்கு நடைபெறும்; ஊட்டு இடம் தோறும் – அன்ன சத்திரங்களில் எல்லாம். பிறை முகத்தலை இரும்பு—பிறை போன்ற வடிவுடையதும் இரும்பினால் செய்யப்பட்டதுமாகிய அரிவாள் மணை கொண்டு; பெட்பின்— விருப்பத்தோடு; போழ் குறை—பிளந்து நறுக்கிய; கறித்திரள்—காய்கறிக் குவியல்; குப்பை—குவியலாகக் கிடக்கும்; பருப்போடு – பருப்புடனே; நிறை வெண் முத்தின்—நிறைந்த வெண் முத்துப் போன்ற; அரிசிக் குவை—அன்னக் குவியல்களும்; உறைவ—கிடப்பன.
𝑥𝑥𝑥𝑥
கலம் சுரக்கும் நிதியம்
கணக்கிலா
நிலம் சுரக்கும் நிறை வளம்
நல் மணி
பிலம் சுரக்கும் ; பெறுவதற்கு
அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம்
குடிக்கு எலாம்
அந்த நாட்டு மக்களுக்கு வேண்டிய செல்வத்தை கொண்டு வந்து கொட்டிய வண்ணம் இருக்கும் கப்பல்கள். நிலமோ! நிறைந்த விளைச்சல் தரும். சுரங்கங்கள் நல்ல மணிகளைத் தரும். குடி மக்கள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாக இருந்தார்கள், காரணம் அவர்கள் நல்ல குடியிலே பிறந்தவர்கள்.
𝑥𝑥𝑥𝑥
குடி எலாம்—அந் நாட்டுக் குடிமக்களுக்கு எல்லாம்; நிதியம்—செல்வத்தை கணக்கிலா—அளவில்லாமல்; கலம்—வாணிபம் செய்யும் கப்பல்கள்; சுரக்கும்—கொண்டு வந்து சொரியும். நிலம்—பூமி; நிறை வளம்—நிறைந்த விளைச்சலை; சுரக்கும்—தரும்; பிலம்—சுரங்கங்கள்; நல்மணி—சிறந்த ரத்தினங்களை; சுரக்கும்—அளிக்கும். பெறுதற்கு அரிய— பெறுவதற்கு அரிய; ஒழுக்கம்—நல் ஒழுக்கத்தை; தம் குலம் சுரக்கும்—அவரவர் தம் குலம் அளிக்கும்.
𝑥𝑥𝑥𝑥
தாய் ஒக்கும் அன்பில்
தவம் ஒக்கும் நயம் பயப்பில்
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு
செல்கதி உய்க்கு நீரால்
நோய் ஒக்கும் எனில் மருந்து
ஒக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
எவர்க்கும் அன்னான்.
இது வரை கோசல நாடு பற்றியும், அந்நாட்டின் தலை நகரான அயோத்தி மா நகர் பற்றியும் கூறினார் கம்பர்.
இப்போது அந்த நாட்டு அரசனைப் பற்றிச் சொல்கிறார். கோசல நாட்டு அரசனாகிய தசரதன் எப்படியிருந்தான்?
தனது குடிமக்களிடம் அன்பு செலுத்துவதிலே தாய் போலிருந்தான். அதாவது தாய் எப்படித் தன் சேயை அன்புடன் பேணிப் பாதுகாப்பாளோ அம்மாதிரி பேணிப் பாதுகாத்து வந்தான். யாரை? குடிமக்களே.
குடிமக்களுக்கு நன்மை செய்வதிலே தவம் போலிருந்தான். அதாவது தவமானது எப்படி அளவற்ற நலன்களைத் தருமோ அப்படி அளவற்ற நன்மைகள் செய்தான்.
தன் குடிமக்களை எல்லாம் நல்ல வழியிலே நடத்திச் செல்வதில் சத்புத்திரர் போலிருந்தான். சத்புத்திரர்கள் என்ன செய்வார்கள்? நல்ல காரியங்களைச் செய்து தங்கள் பெற்றோர் நற்கதி அடையச் செய்வார்கள். அம்மாதிரி நல்ல காரியங்கள் செய்து தன் குடிமக்களை நல்வழியில் செலுத்தினான் தசரதன்.
வழியலா வழிச்செல்வோர் நோய் வாய்ப்படுவர். நோய் என் செய்யும்? அவரை வருத்தும்; வாட்டும். அதே போல தீய வழிச்செல்லும் குடிமக்களைத் தசரதன் வருத்தினான்; வாட்டினான். எனவே நோய் போன்றவன் ஆக இருந்தான்.
இருப்பினும், நோயினால் வருந்துவோரின் வாட்டத்தைத் தீர்ப்பது மருந்து அன்றோ? அதே போலத் தீய வழியில் சென்ற குடிமக்களைத் தண்டித்துப் பின் அவர்க்கு அதனால் ஏற்படும் வாட்டத்தையும் போக்கினான். எனவே நோய் தீர்க்கும் மருந்து போன்றவனாக விளங்கினான்.
𝑥𝑥𝑥𝑥
அன்னான்–அந்த தசரத மன்னன்; எவர்க்கும்—தனது குடிமக்கள் யாவருக்கும்; அன்பின்—மிகுந்த அன்பு பாராட்டுவதாலே; தாய் ஒக்கும்—பெற்ற தாய் போல இருந்தான்; நலம் பயப்பின்—வேண்டிய நன்மைகள் எல்லாம் செய்து தருவதில்; தவம் ஒக்கும்—தவம் போல இருந்தான்; முன் நின்று—தலைமை வகித்து முன்னே நின்று ஒரு செல்கதி உய்க்கு நீரால்—செல்வதற்குரிய நல்ல வழியில் நடத்திச் செல்வதால்; சேய் ஒக்கும்—மகனை ஒப்பான்; நோய் ஒக்கும்—தீய வழிச்செல்வோரை வருத்துவதில் நோய் போல இருப்பான்; எனின்—என்றாலும்; மருந்து ஒக்கும்—கருணை காட்டுவதில் அந்நோய் போக்கும் மருந்து போல இருந்தான்.
𝑥𝑥𝑥𝑥
இவ்வாறு நல்லாட்சி செய்து வந்த தசரதன், தனக்கு மகப்பேறு இல்லாமை குறித்து மிக வருந்தினான்; குல குருவாகிய வசிஷ்ட முனிவரிடம் தனது குறையை வெளியிட்டான். வசிஷ்டரின் ஆலோசனைப்படி, மகப்பேறு கருதி யாகம் ஒன்று செய்ய முடிவு செய்தான் தசரதன்.
𝑥𝑥𝑥𝑥
வருகலை அறிவு நீதி
மனு நெறி வரம்பு வாய்மை
தருகலை மறையும் எண்ணில்
சதுமுகற்கு உவமை சான்றோன்
திருகலையுடைய இந்தச்
செகத்துளோர் தன்மை தேரா
ஒரு கலைமுகச் சிருங்க
உயர் தவன் வருத வேண்டும்.
ரிசிய சிருங்கர் என்ற கலைக்கோட்டு முனிவர் வேதநூல் வல்லவர்; மனுதர்ம சாத்திரம் நன்கு அறிந்தவர்; கலை ஞானம் நிரம்பியவர்; பிரமதேவனுக்கு ஒப்பானவர்; ஆண் பெண் என்ற இந்த உலக வேறுபாடுகளை ஒரு சிறிதும் அறியாதவர்; முகத்திலே மான் கொம்பு உடையவர்; தவத்தில் சிறந்தவர். அவர் இங்கே வரல் வேண்டும்.
𝑥𝑥𝑥𝑥
வருகலை அறிவு—பலவாக உள்ள கலை அறிவிலும்; நீதி மனு நெறி வரம்பு—நீதிகளை விளக்கும் மனு தர்ம விதிகளிலும்; வாய்மை தரு—உண்மைப்பொருள்களை எடுத்துக்கூறும்; கலை மறையும்—பல பிரிவுகள் கொண்ட வேதங்களிலும்; எண்ணில்—ஆராய்ந்து பார்க்குங்கால்; சதுமுதற்கு—நான்முகனாகிய பிரமதேவனுக்கு; உவமை சான்றோன்—ஒப்பானவரும்; திருகலை உடைய—ஆண் பெண் என்ற வேறுபாடு கொண்ட; இந்தச் செகத்துனோர்—இந்த உலக மக்களின் இயல்புகளை; தேரா—சிறிதும் அறியாதவரும்; ஒரு கலை சிருங்கமுகம்—ஒற்றை மான் கொம்பு பொருந்திய முகம் உடையவரும் ஆன; உயர் தவன்—மேலான தவ முனிவர்; வரல் வேண்டும்—இங்கே வரல் வேண்டும்.
𝑥𝑥𝑥𝑥
பாந்தளின் மகுட கோடி
பரித்த பார் இதனில் வைகும்
மாந்தரை விலங் கென்று உன்று
மனத்தன் ; மாதவத்தன் ; எண்ணில்
பூந்தவிசு உகந்துளோறுப்
புராரியும் புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின்
தனையர்கள் உளராம். என்றான்.
அந்தக் கலைக் கோட்டு முனிவர் இந்த உலக மக்கள் எல்லாரையும் விலங்குகள் என்று கருதுபவர்; பிரமதேவனும் சிவபெருமானும் புகழத் தக்கவர் அமைதியானவர், சாந்த சொரூபர். அவரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் மகப்பேறு உண்டாகும்.என்றார் வசிஷ்டர்.
𝑥𝑥𝑥𝑥
பரந்தனின்—ஆதிசேடனுடைய; மகுடம் கோடி பரித்த—பலதலைகளாலும் தாங்கப் பெற்ற; பார் இதனில்—இந்த பூமியிலே, வைகும்—வசிக்கின்ற; மாந்தரை—மனிதர் எல்லாரையும்; விலங்கு என்று உன்னும்—விலங்குகள் என்று எண்ணும் தன்மை கொண்டவரும்; மாதவத்தன்—பெருந்தவமுடையவரும்; எண்ணில்–ஆராயுமிடத்து; பூ தவிசு உகந்து உளோனும்—தாமரை மலராகிய ஆசனத்தை விரும்பி வீற்றிருக்கிறவனும் (பிரமதேவனும்) புர அரியும்—திரிபுரங்களை அழித்த சிவபெருமானும்; புகழ்தற்கு ஒத்த–புகழ்வதற்குத்தக்கவனுமாகிய; சாந்தனால்—சாந்த குணம் மிக்க அக் கலைக்கோட்டு முனிவனால் (அம் முனிவனைக் கொண்டு) வேள்வி முற்றின்—யாகத்தை நன்கு முடிவுறச் செய்தால்; தனையர்கள் உளர்–உனக்கு மக்கள் பிறப்பார்கள்; என்றான்– என்று சொன்னார் (வசிஷ்டர்)
𝑥𝑥𝑥𝑥
தக்ஷப் பிரஜாபதியின் பெண்கள் பதின்மூவர். அவர்களைக் காசியபருக்கு மணம் செய்து கொடுத்தார் தக்ஷப்பிரஜாபதி, அவர்கள் மூலம் இந்த உலகத்து உயிர் இனங்கள் எல்லாம் பெற்றார் காசியபர். அதனாலே இந்த உலகுக்குக் காசினி என்ற பெயர் ஏற்பட்டது.
இந்தப் பதின்மூவர் அன்றி, வேறு சில பெண்கள் மூலம் மற்றும் சில ரிஷிகளைப் பெற்றார் காசியபர். அப்படிப் பெற்றவருள் ஒருவர் விபாண்டகர்.
விபாண்டக முனிவரின் அருளால் ஒரு மான் வயிற்றில் பிறந்தார் கலைக்கோட்டு முனிவர். இவர் பிறக்கும் போதே தலையில் ஒரு கொம்புடன் பிறந்தார். ஆதலின் கலைக்கோட்டு முனிவர் எனும் பெயர் பெற்றார் கலை என்றால் மான், கோடு என்றால் கொம்பு, கலைக்கோட்டு முனிவர் என்றால் மான் கொம்பு முனிவர் என்று பொருள். ரிசிய சிருங்கர் என்றாலும் இவரையே குறிக்கும்.
கலைக்கோட்டு முனிவர் தம் தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை விபாண்டகர் தவம் செய்து கொண்டிருந்தார்.
கலைக்கோட்டு முனிவர் இருந்த இடமே சிருங்கபுரம் என்றும், சிருங்ககிரி என்றும், சிர்ங்கேரி என்றும் இப்போது வழங்கப்படுகிறது.
அங்க தேசத்தை ஆண்டு வந்தான் உரோம பாதன். உரோம பாதன் என்றால் பாதத்திலே உரோமம் உள்ளவன் என்று பொருள். இவன் உத்தான பாதன் என்பவனின் மகன். இவனது நாட்டில் மழை பெய்யவில்லை. நாடு வறண்டது. மழை வளம் சுரக்க என் செய்வது? என்று பெரியோரைக் கேட்டான் உரோம பாதன்.
“கலைக் கோட்டு முனிவர் இங்கு வந்தால் மழை பெய்யும்” என்று அவர்கள் சொன்னார்கள்.
“கலைக்கோட்டு முனிவர் வருதல் எப்படி? உலக மக்கள் எல்லாரும் விலங்குகள் என்று கருதும் அவர்—பெருந்தவம் புரியும் அவர்—காடு விட்டு இந்த நாடு புகுவரா?” என்று யோசித்தான் உரோம பாதன்.
கணிகையர் சிலரை அனுப்பினான். கலைக் கோட்டு முனிவரை எங்ஙனமேனும் அங்க நாட்டுக்கு அழைத்து வருமாறு கூறினான்.
கணிகையரும் கலைக்கோட்டு முனிவர் இருப்பிடம் சென்று முனிவர் போல நடித்தனர். ஆண் பெண் வேற்றுமை அறியாத அம்முனிவரும் அவர் தம் சொல்லை மெய் என்று நம்பினார்; அவர் தம் அழைப்புக்கு இணங்கினார்.
அங்க நாடு போந்தார். முனிவரின் வருகை அறிந்த அங்க நாட்டு மன்னன் தனது நாட்டை அலங்கரித்தான். முனிவரை வரவேற்று விழாக் கொண்டாடினான்.
முனிவர் வரவே மழையும் வந்தது நாடும் செழித்தது.
“இப்போது அம் முனிவர் அங்க நாட்டில் இருக்கிறார்” என்று கூறினார் வசிஷ்டர்.
𝑥𝑥𝑥𝑥
என்றலுமே முனிவரன் தன்
அடி இறைஞ்சி, ‘ஈண்டு
ஏகிக் கொணர்வேன்’ என்னாத்
துன்று கழல் முடி வேத்தர்
அடிபோற்றச் சுமந்திரனே
முதலா உள்ள
வன் திறல் சேர் அமைச்சர்
தொழ மாமணித் தேர்
ஏறுதலும் வானோர் வாழ்த்தி
‘இன்று எமது வினைமுடிந்தது’
எனச் சொரிந்தார்
மலர் மாரி இடைவிடாமல்
இவ்வாறு வசிட்டமுனிவர் கூறிய உடனே தசரதன் என்ன செய்தான்? “இப்பொழுதே நான் சென்று அம்முனிவரை இங்கு அழைத்து வருவேன்” என்று கூறித் தன் தேர் மீது ஏறினான்.
சிற்றரசர்கள் வணங்கினார்கள். சுமந்திரனை முதல்வராகக் கொண்ட அமைச்சர்கள் தொழுதார்கள்.
“இன்றே நம் முறை தீர்ந்தது” என்று தேவர்கள் மலர் மாரி பெய்து தசரதனை வாழ்த்தினார்கள்.
⚬⚬⚬⚬
என்றலுமே–இவ்வாறு (வசிட்ட முனிவர்) கூறலுமே; முனிவரன் தன் அடி இறைஞ்சி—அந்த வசிஷ்ட முனிவரின் திருவடிகளை வணங்கி; ஈண்டு ஏகி—இப்பொழுதே சென்று; கொணர்வேன் எனா–அம் முனிவரை அழைத்து வருவேன் என்று கூறி; துன்று கழல்–வீரக் கழல்களையும்; முடி–கிரீடங்களையும் அணிந்த; வேந்தர்—சிற்றரசர் பலர்; அடி போற்ற—தனது திருவடிகளை வணங்க; சுமந்திரனே முதலாக உள்ளிட்ட–சுமந்திரனை முதல்வராகக் கொண்ட; வன்திறல் அமைச்சர்கள்—திறமை மிக்க மந்திரிகள்; தொழ—வணங்க; மாமணித் தேர் ஏறலும்-சிறந்த மணிகள் பதித்த தனது தேர் மீது ஏறிய உடனே; வானோர்—தேவர்கள்; இன்று எமது வினை முடிந்தது என இன்று எமது குறை தீர்ந்தது என்று; வாழ்த்தி-தசரதனை வாழ்த்தி; மலர்மாரி—கற்பகப் பூ மழையை; சொரிந்தனர் இடைவிடாமல்–தொடர்ந்து சொரிந்தார்கள்.
⚬⚬⚬⚬
தேரில் ஏறிய தசரத மன்னன் அங்க நாடு அடைத்தான். தசரதனின் வருகை அறிந்தான் உரோம பாதன்; சக்கரவர்த்தியை எதிர் கொண்டு அழைத்தான்; தனது தேரில் ஏற்றிக் கொண்டான்; அரண்மனை அடைந்தான்; மன்னர் மன்னருக்குத் தக்க மரியாதை பல செய்தான்; அவர் வந்த கருத்து யாதெனக் கேட்டான். தசரதனும் தனது நோக்கம் இன்னதென்று கூறினான்.
கலைக்கோட்டு முனிவரைத் தானே அயோத்தி நகருக்கு அழைத்து வருவதாக உறுதி கூறினான் உரோம பாதன். அந்த உறுதிமொழி கேட்டு உளம் மகிழ்ந்தான் தசரதன்; அயோத்திக்குத் திரும்பினான்.
தசரதனின் பெருமையையும், அயோத்திக்கு விஜயம் செய்ய வேண்டுவதன் அவசியத்தையும் முனிவருக்கு எடுத்துக் கூறினான் உரோமபாதன்; கேட்டார் முனிவர். உரோம பாதனின் வேண்டுதலுக்கு இணங்கினார்.
முனிவருடன் அயோத்திக்குப் புறப்பட்டான். உரோம பாதன். அவர் தம் வருகையைத் தூதுவர் மூலம் தசரத சக்கரவர்த்திக்கு அறிவித்தான்.
முனிவர் தம் வருகை அறிந்த தசரத சக்கரவர்த்தி மிக மகிழ்ந்தான். முனிவரை எதிர் சென்று அழைத்தான்.
மன்னன் தனது ஆசியை நாடிய காரணம் யாது என்று வினவி அறிந்தார் முனிவர். புத்திர காமேஷ்டி யாகம் செய்ய இசைந்தார்.
யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை விரைவிலே செய்யுமாறு பணித்தார்.
தசரதன் மகிழ்தான்; யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யுமாறு உத்திரவு பிறப்பித்தான். யாகமும் நடைபெற்றது.
அந்த யாகத் தீயினின்று எழுந்தது ஒரு பூதம்; எரியும் தீப்போன்ற தலைமயிரும், சிவந்த கண்களும் கொண்டு விளங்கியது; கையிலே பொன்தட்டு ஒன்று; ஏந்தி வந்தது. அத்தட்டிலே அமிர்தபிண்டம் ஒன்று இருந்தது. அத்தட்டைப் பூமியிலே வைத்தது; மீண்டும் தீயிலே மறைந்தது.
அந்தப் பிண்டத்தை எடுத்து முறைப்படி பகிர்ந்து தனது தேவியர்க்கு அளிக்குமாறு தசரத சக்கரவர்த்திக்குக் கூறினார் முனிவர். அங்ஙனமே செய்தான் மன்னர் மன்னன். முனிவரை வணங்கினான்; முகமன் பல கூறினான்; முனிவரும் அரசனை வாழ்த்தினார்; தமது ஊர் திரும்பினார்.
நாட்கள் சென்றன, தசரதனின் தேவிமார் மூவரும் கருக்கொண்டனர்.
புனர் பூச நட்சத்திரமும் கடக ராசியும் கொண்ட நன்னாளில் கெளசல்யா தேவி ஓர் ஆண் மகவை ஈன்றாள். அம்மகவுக்கு இராமன் என்று பெயரிட்டார் குல குருவாகிய வசிட்டர்.
மீன லக்கினத்திலே பூச நட்சத்திரம் கூடிய நல்ல நாளிலே கைகேயி தேவி ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அம்மகவுக்கு பரதன் என்று பெயர் வைத்தார் வசிட்டர்.
ஆயில்ய நட்சத்திரமும் கடக ராசியும் கூடிய நல்ல நாளிலே சுமித்திரா தேவி ஓர் ஆண் மகவு ஈன்றாள். அம்மகவுக்கு லட்சுமணன் என்று பெயர் வைத்தார் வசிட்டர்.
லட்சுமணனைத் தொடர்ந்து மற்றோர் ஆண் குழந்தையைப் பெற்றாள் சுமித்திரை. அக்குழந்தை பிறந்த ராசி சிம்மம் நட்சத்திரம் மகம். இக்குழந்தைக்குச் சத்துருக்னன் என்று பெயரிட்டார் வசிட்டர்.
ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கிய தசரத மன்னனுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.
தசரதனுக்கு மட்டிலா மகிழ்ச்சி. க்ஷத்திரியர்களுக்கு உரிய தர்மத்தின்படி அந்த நான்கு குழந்தைகளையும் வளர்த்து வந்தான் தசரதன். அரச குமாரர்கள் பயில வேண்டிய கலைகள் யாவும் கற்கச் செய்தான்.
சில ஆண்டுகள் சென்றன. ஒரு நாள், விசுவாமித்திர முனிவர் வந்தார்.
𝑥𝑥𝑥𝑥
வந்து முனி எய்து தலும்
மார்பில் அணி யாரம்
அந்தர தலத்து இரவி
அஞ்ச ஒளி விஞ்சக்
கந்த மலரில் கடவுள் தன்
வரவு காணும்
இந்திரன் எனக் கடிது
எழுந்து அடி பணிந்தான்.
விசுவாமித்திர முனிவரின் வரவு கண்டான் தசரதன். தனது சிம்மாசனத்தை விட்டு எழுந்தான்; விரைந்து ஓடினான்; விசுவாமித்திரரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்
அது எப்படி இருந்தது? பிரம்ம தேவனின் வரவு கண்ட இந்திரன் விரைந்து சென்று அப்பிரமதேவனின் திருவடிகளில் வீழ்ந்து எப்படி வரவேற்பானோ அப்படி இருந்தது.
விசுவாமித்திரரை பிரம தேவனுக்கும், தசரதனை இந்திரனுக்கும் ஒப்பிட்டுக் கூறுகிறார் கம்பர்
𝑥𝑥𝑥
முனி—அந்த விசுவாமித்திர முனிவர்; வந்து எய்தலும்—தனது சபாமண்டப வாயிலை வந்து அடைந்த உடனே; அந்தரதலத்து இரவி விண்ணிலே இருக்கின்ற கதிரவன்; அஞ்ச—அஞ்சி ஓடும் வகையில்; மார்பில் அணி ஆரம்—தனது மார்பிலே அணியப் பெற்ற மணி மாலைகள்; ஒளி விஞ்ச—மிக்க ஒளி வீச; கந்த மலரில்—தாமரை மலரில் வீற்றிருக்கின்ற; கடவுள் தன்—பிரம தேவனின் வரவு காணும்—வரக் கண்ட இந்திரன் என–தேவேந்திரன் என்று சொல்லும் வகையில்; கடிது எழுந்து அடி பணிந்தான்—விரைவில் எழுந்து சென்று—அவர் தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.
𝑥𝑥𝑥𝑥
என் அனைய முனிவர்களும்
இமைய வரும்
இடையூறு ஒன்று உடையரானால்
பன்னகமும் நகு வெள்ளிப்
பனி வரையும்
பாற் கடலும் பதும பீடத்
தன் நகரும் கற்பக நாட்டு
அணி நகரும் மணி மாட
அயோத்தி என்னும்
பொன்னகரும் அல்லாது
புகல் உண்டோ ?
இகல் கடந்த புலவு வேலோய்
விசுவாமித்திர முனிவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய தசரதன், அம் முனிவரை அழைத்து வந்தான்; ஆசனத்தில் இருக்கச் செய்தான். முனிவருக்கு ஏற்ற உபசாரங்கள் செய்தான்; அளவளாவினான். அவர் வந்த நோக்கம் யாது என்று கேட்டான். அப்போது முனிவர் சொன்னார்.
பகைவன் என்று சொல்லக் கூடியவன் எவனுமே இல்லாமல் ஒழித்த தசரத மன்னா! புலால் நாற்றம் வீசும் வேலை ஏந்தியவனே!
என் போன்ற முனிவர்களும், தேவர்களும் தங்களுக்குத் துன்பம் ஒன்று வந்தால் எங்கு செல்வார்கள்?
கைலாயம் போய் சிவபெருமானிடம் முறையிடுவார்கள்; பாற்கடலுக்குப் போய் திருமாலிடம் முறையிடுவார்கள்; பிரம்ம லோகம் சென்று பிரம்ம தேவனிடம் முறையிடுவார்கள்.
அமராவதி சென்று தேவேந்திரனிடம் முறையிடுவார்கள். அயோத்திக்கு வந்து உன்னிடம் தஞ்சம் புகுவார்கள் புகல் இடம் வேறு ஏது?
𝑥𝑥𝑥𝑥
இகல் கடந்த—பகைவரை முற்றிலும் வென்ற; புலவு வேலோய்—புலால் நாற்றம் கொண்ட வேலை ஏந்தியவனே! என் அனைய முனிவர்களும்—என்னையொத்த முனிவர்களும்; இமையவரும்—தேவர்களும்; இடையூறு ஒன்று உடையர் ஆனால்–யாதாயினும் துன்பம் ஒன்று ஏற்பட்டவரானால்; (அதைப் போக்க) பல் நகமும் நகு-பல்வேறு மலைகளும் தாழ்வுறும் படியான; வெள்ளிப் பணி வரையும்–பனி மூடிய வெள்ளி மயமான கயிலாய மலையும்; பால் கடலும்—திருப்பாற்கடலும்; பதும பீடத்தன் நகரும்—தாமரை மலரின் மீது இருக்கை கொண்டுள்ள பிரம தேவன் நகரும்; கற்பக நாடு அணி நகரும்—அழகிய தலைநகராகிய அமராவதியும்; மணிமாடம் அயோத்தி மணிகள் பதித்த மாளிகைகள் உடைய; அயோத்தி எனும் செல்வமிக்க இந்த நகரமும்: அல்லாது—அன்றி; புகல் உண்டோ—அடைக்கலம் புகுதற்கு வேறு இடமுண்டோ? (இல்லை என்ற படி)
𝑥𝑥𝑥𝑥
இன் தளிர்க் கற்பக நறுந்
தேனிடை துளிக்கு
நிழல் இருக்கை இழந்து போந்து
நின்று அளிக்கும் தனிக் குடையின்
நிழல் ஒதுங்கிக்
குறை இரந்து நிற்ப நோக்கி
குன்று அளிக்கும் குலமணித் தோள்
சம்பரனைக்
குலத் தோடும் தொலைத்து நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ
புரந்தரன் இன்று ஆள்கின்ற
அரசு என்றான்
அமராவதியிலே, கற்பக தருவின் நிழலிலே இனிய நறுமணம் வீசும் தேன் துளிக்க அரசு வீற்றிருந்தான் இந்திரன்.
அவனை வெற்றி கொண்டு அந்த அரசைக் கைப்பற்றிக் கொண்டு விரட்டி விட்டான் சம்பராசுரன்.
தேவந்திரன் உன்னிடம் வந்தான்; உனது வெண் கொற்றக்குடை நிழலில் ஒதுங்கி நின்றான்; உன்னிடம் தனது நிலை கூறினான்;
“நீ அவனது நிலை கண்டாய்; இரக்கம் கொண்டாய், அந்த சம்பராசுரன் மீது போர் தொடுத்தாய், போரிலே வெற்றி கண்டாய். அந்த அசுரனைப் பூண்டோடு அழித்தாய். அமராவதியை உனதாக்கிக் கொண்டாய். அதனைப் பின் இந்திரனுக்கு அளித்தாய்.
இவ்வாறு அன்று நீ அளித்த அரசு அன்றோ இன்று இந்திரன் ஆள்கின்ற அரசு.” என்று கூறினார் விசுவாமித்திர முனிவர்.
𝑥𝑥𝑥𝑥
புரந்தரன்—இந்திரன்; இன்தளிர் கற்பகம்—இனிய தளிர்களை உடைய கற்பக மரங்களின்; நறுந்தேன்–மணமுள்ள தேன்; இடை துளிக்கும் நிழல்—இடை இடையே,துளிக்கின்ற குளிர் நிழலிலே; இருக்கை இழந்து—அரசு வீற்றிருந்ததை இழந்து; போந்து-உன்னிடம் வந்து; நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி—என்றும் நிலையாய் நின்று உலகத்தைப் பாதுகாக்கும் ஒப்பற்ற உனது வெண் கொற்றக்குடையின் நிழலில் ஒதுங்கி; குறை இரந்து நிற்ப—தன் குறையைக் கூறி வேண்டி நிற்க; (நீ) நோக்கி—அவனது நிலை கண்டு இரங்கி; குன்று அளிக்கும்—குன்றுகள் என்று கூறத்தக்க; குலமணி தோள்—சிறந்த இரத்தின ஆபரணங்கள் அணிந்த தோள்களை உடைய; சம்பரனை—சம்பராசுரனை; குலத்தோடும் தொலைத்து—குலத்தோடும் அழித்து; கொண்டு-இந்திரன் இழந்த அந்த அரசினை உனதாக்கிக் கொண்டு; அன்று அளித்த அரசு அன்றோ—பிறகு அன்று நீ கொடுத்த அரசு அன்றோ; இன்று ஆள்கின்ற அரசு—இன்று இந்திரன் ஆளும் அரசு; என்றான்—என்று கூறினான்.
𝑥𝑥𝑥𝑥
உரை செய்த அளவில் அவன்
முக நோக்கி
உள்ளத்தில் ஒருவராலும்
கரை செய்ய அரிய தொரு
பேர் உவகைக்
கடல் பெருகக் கரங்கள் கூப்பி
‘அரசு எய்தி இருந்த பயன்
எய்தினன் மற்று
இனிச் செய்வது அருள்க’ என்று
முரசு எய்து கடைத் தலையான்
முன் மொழியப்
பின் மொழியும் முனிவன் ஆங்கே
இவ்வாறு முனிவர் கூறிய உடனே அளவிடற்கரிய மகிழ்ச்சியுற்றான் அரசன். தன் இரு கைகளையும் குவித்துக் கொண்டான். முனிவரை நோக்கினான் ‘நான் அரசு பெற்ற பயனை இன்றே அடைந்தேன். இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று அருள்க’ என்றான்.
விசுவாமித்திர முனிவரும் பின் வருமாறு கூறினார்.
𝑥𝑥𝑥𝑥
உரை செய்த அளவில்—முனிவர் இவ்வாறு கூறிய உடனே; முரசு எய்து–முரசங்கள் முழங்குகின்ற; கடைத் தலையான்–தலைவாயிலை உடைய தசரதன்; உள்ளத்தில்—தன் உள்ளத்திலே; ஒருவராலும் கரை செய்ய அரியது—ஒருவராலும் அளவிட்டுக் கூற இயலாத; ஒரு பேர் உவகைக் கடல் பெருக–பெரிய மகிழ்ச்சியாகிய கடல் பொங்க; அவன் முகம் நோக்கி—அந்த முனிவனை நோக்கி; கரங்கள் குவித்து— இரு கைகளையும் கூப்பிக் கொண்டு; அரசு எய்தி இருந்த பயன்—நான் அரசு பெற்ற பயனை; எய்தினன்–அடைந்துவிட்டேன்; இனி செய்வது அருளுக—இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று பணித்து அருள்க; என்று முன் மொழிய–என்று முன்னே சொல்ல; ஆங்கு–அப்பொழுது; முனிவன்—விசுவாமித்திர முனிவன்; பின்மொழியும்— பின்வருமாறு சொன்னான்.
𝑥𝑥𝑥𝑥
தரு வனத்துள் யான் இயற்றும்
தகை வேள்விக்கு
இடை யூறாத் தவம் செய்வோர்கள்
வெரு வரச் சென்று அடை
காம வெகுளி என
நிருதரிடை விலக்கா வண்ணம்
செரு முகத்துக் காத்தி என
நின் சிறுவர்
நால் வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என
உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்
சித்த வனத்திலே வேள்வி யொன்று செய்ய எண்ணி இருக்கிறேன். அந்த வேள்விக்கு அரக்கரால் எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் காப்பாயாக. அவ்விதம் காத்தற்கு நின் புதல்வர் நால்வருள் மூத்த குமாரனாகிய இராமனை என் உடன் அனுப்புவாயாக என்று தசரதன் மனம் துடிக்கும் வண்ணம் கூறினான், விசுவாமித்திர முனிவன்.
𝑥𝑥𝑥𝑥
தரு—தன்னை அடைந்தவர்க்கு நல்ல பலன் தர வல்ல; வனத்துள்– சித்த வனத்தில் யான் இயற்றும்-நான் செய்ய இருக்கும்; தகை வேள்விக்கு—சிறந்த வேள்விக்கு; இடையூறாக—தடையாக; தவம் செய்வோர்கள்—தவம் செய்கிறவர்கள்; வெகுவர–அஞ்சும் வண்ணம்; சென்று அடை—அவர்களிடம் சென்று அடைந்து அவர்களைத் துன்புறுத்தும்; காமவெகுளி என–காமம், சினம் போல; நிருதர்—அரக்கர்; இடை—இடையிலே வந்து; விலக்கா வண்ணம்-அந்த வேள்வியினின்றும் விலக்காதவாறு; செரு முகத்து—போர் முனையிலே நின்று; காத்தி—காப்பாயாக; என– என்று கூறி; நின் சிறுவர் நால்வருள்–நின் புதல்வர் நால்வரில்; கரிய செம்மல்-கரிய திருமேனியுடைய இராமனை; தந்திடுதி என–என்னுடன் அனுப்புவாயாக; என்று; உயிர் இரக்கும்–உயிர் தரும்படி யாசிக்கின்ற; கொடும் கூற்றின்—கொடிய இயமனைப் போல; உளைய–தசரதன் மனம் தவிக்கும் படியாக சொன்னான்- கூறினான்.
𝑥𝑥𝑥𝑥
எண்ணிலா அருந்தவத்தோன்
இயம்பிய சொல்
மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும் புழையில்
கனல் நுழைந்தால்
எனச் செவியில் புகுதலோடும்
உண்ணிலாவிய துயரம்
பிடித்து உந்த
ஆருயிர் நின்று ஊசலாட
கண்ணிலான் பெற்று இழந்தான்
என உழந்தான்
கடுந்துயரக் கால வேலோன்;
கணக்கிட முடியாத அரிய தவம் பல செய்தவன் விசுவாமித்திர முனிவன். அம்முனிவன் சொன்ன சொல் எப்படியிருந்தது?
வேல்பட்ட புண்ணிலே வெந்தீ பாய்ந்தது போல இருந்தது. மார்பிலே ஒரு புண். வேல் பாய்ச்சியதாலே ஏற்பட்ட புண். அந்தப் புண்ணிலே ஒரு கொள்ளிக்கட்டை கொண்டு சுட்டால் எப்படியிருக்கும்?
அப்படி இருந்தது தசரதனுக்கு. துயரம் பொங்கி எழுந்தது. உயிர் ஊசலாடிற்று. துடித்தான் மன்னன்.
பிறவிக்குருடன் ஒருவன் திடீரென்று பார்வை பெற்றான்; மகிழ்ந்தான்.
அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை மீண்டும் கண் இழந்தான் அவன்; துயரத்தில் ஆழ்ந்தான். அவனைப் போலப் பெருந்துயரத்தில் ஆழ்ந்தான் மன்னன்.
பிள்ளை வேண்டுமென்று பெரு வேள்வி செய்தான். பிள்ளைகளைப் பெற்றான். பெற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தான்.
பிள்ளையைப் பிரியும்படி முனிவன் சொன்ன சொல் அவன் கண்ணைப் பிடுங்குவது போலிருந்தது. துயரத்தில் அழ்ந்தான். “கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்” என்கிறார் கம்பர்.
𝑥𝑥𝑥𝑥
எண் இலா—எண்ணிக்கையில் அடங்காத; அருந்தவத்தோன்—அரிய தவங்கள் செய்த விசுவாமித்திர முனிவர்; இயம்பிய—கூறிய; சொல்—சொல்லானது; மருமத்தில்—மார்பிலே; எறிவேல் பாய்ந்த—வேல் பாய்ச்சியதால் ஏற்பட்ட புண்ணில்—காயத்தில்; கனல் நுழைந்தால் என—கொள்ளிக் கட்டை நுழைந்தது போல; செவியில் புகுதலோடும்—காதிலே வீழ்ந்தவுடனே; காலன் வேலான்-பகைவர்க்கு எமன் போன்ற கொடிய வேல் கொண்ட தசரத மன்னன்; உள் நிலாவிய—உள்ளே குமுறி எழுந்த; துயரம்-துயரமானது; பிடித்து உந்த-பிடித்துத் தள்ள; ஆர் உயிர்-அரிய உயிரானது; ஊசலாட–ஊஞ்சல் ஆடுவது போல உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்க; கண் இலான்—பிறவிக் குருடன் ஒருவன்; பெற்று–பார்வை பெற்று; இழந்தான் என–மீண்டும் அதை இழந்துவிட்டான் என்று சொல்லும்படியாக, கடுந்துயரம்—மிகக் கொடிய துன்பத்தால் உழந்தான்–வருந்தினான்.
𝑥𝑥𝑥𝑥
“முனிவரே! வருவீர்! நான் உம்முடன் கானகம் வருகிறேன். அரக்கரால் எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் பாதுகாப்பேன். இராமன் சிறுவன்; பன்னிரண்டு வயது பாலன். அவன் வேண்டாம். நான் வருகிறேன்” என்றான் மன்னன்.
அவ்வளவு தான். சினம் பொங்கி எழுந்தது முனிவருக்கு. இருக்கை விட்டு எழுந்தார். அது கண்டார் வசிஷ்டர்.
“மன்னர் மன்னா! சிறிதும் யோசியாதே. இராமனுக்குத் தீது என்றும் வராது. நலமே விளையும். முனிவருடன் அனுப்புக” என்றார்.
வசிட்டர் சொல் கேட்டான் மன்னன். இராமன் இலட்சுமணன் இருவரையும் அழைத்து வருமாறு கூறினான்.
இருவரையும் முனிவர் வசம் ஒப்புவித்தான். முனிவர் மகிழ்ந்தார். அரசகுமாரர் இருவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
முனிவர் முன் சென்றார். அரச குமாரர் இருவரும் வில் ஏந்தியவராகப்பின் சென்றனர்.
𝑥𝑥𝑥𝑥
வென்றி வாள் புடை
விசித்து மெய்மை போல்
என்றும் தேய்வுறாத்
தூணி யாத்து இரு
குன்றம் போன்று உயர்
தோளில் கொற்றவில்
ஒன்று தாங்கினான்;
உலகந் தாங்கினான்
உலகத்தைக் காக்கும் திருமாலின் அம்சமாக அவதரித்து இராமன் தனது இடது பக்கத்திலே வாளைக் கட்டினான்; தோள்களிலே அம்புப் பெட்டியைக் கட்டினான். வெற்றி தரும் வில்லை இடது கையிலே பிடித்தான்.
𝑥𝑥𝑥𝑥
உலகம் தாங்கினான்-உலகம் தாங்கும் திருமாலின் அம்சமாக அவதரித்த இராமன்; வென்றி வாள்—வெற்றிக்குரிய வாளை; புடை விசித்து—இடது பக்கத்திலே கட்டி; இரு குன்றம் போன்று—இரண்டு குன்றுகள் போல; உயர் தோளில்—உயர்ந்துள்ள தனது இரு தோள்களிலே; மெய்ம்மை போல—சத்தியமான தருமத்தைப் போல; என்றும் தேய்வு உறா—எந்த நாளிலும் குறைவு படாத; தூணி யாத்து—அம்புப்பட்டியலைக் கட்டி கொற்றம் வில் ஒன்று தாங்கினான்—வெற்றி தரும் வில் ஒன்றையும் இடக்கையிலே பிடித்தவனாகி
𝑥𝑥𝑥𝑥
அன்ன தம்பியும்
தானும் ஐயனாம்
மன்னன் இன் உயிர்
வழி கொண்டால் எனச்
சொன்ன மாதவன்
தொடர்ந்து சாயை போல்
பொன்னின் மா நகர்ப்
புரிசை நீங்கினார்.
இராமனைப் போலவே அவனுடைய தம்பி லட்சுமணனும் தனது இடது பக்கத்திலே வாளைக் கட்டிக் கொண்டான். தோள்களிலே அம்புப் புட்டிலைக் கட்டிக் கொண்டான். கையிலே வில் ஏந்தினான். தசரத மன்னனின் உயிர் நடந்து செல்வது போல முனிவனைப் பின் தொடர்ந்து மூவருமாக அயோத்தி மா நகரின் மதில் வாயிலைக் கடந்து சென்றனர்.
𝑥𝑥𝑥𝑥
அன்ன தம்பியும் தானும்—(தன்னைப் போலவே வாளும் அம்புப் புட்டிலும் வில்லும் தாங்கிய கோலம் கொண்ட) அத்தகைய தம்பி லட்சுமணனும் தானும்; ஐயன் ஆம் மன்னனின்– தந்தையாகிய தசரத மன்னனது; உயிர் வழி கொண்டால் என்ன–இனிய உயிர் வழி நடந்து செல்வது போல; சொன்ன மாதவன்—தன்னைத் தொடர்ந்து வருமாறு கூறிய பெருந்தவசியாகிய விசுவாமித்திர முனிவரை; சாயை போல் தொடர்ந்து—அவரது நிழல் போலப் தொடர்ந்து சென்று; மாநகர்—(மூவருமாக) சிறப்பு மிக்க அயோத்தி நகரின்; பொன்னின் புரிசை நீங்கினார்—பொன்மயமான மதில் வாயில் கடந்தனர்.
𝑥𝑥𝑥𝑥
மூவரும் காமனாசிரமத்தை அடைந்தனர். அங்குள்ள முனிவர்கள் விசுவாமித்திரமுனிவரை வரவேற்றார்கள்.
இராமனையும், இலட்சுமணனையும் மற்றைய முனிவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார் விசுவாமித்திரர். உடனே மற்றைய முனிவர்கள் அந்த அரச குமாரர்களை நன்கு உபசரித்தார்கள்.
“காமனாசிரமம் என்பது சிவபெருமான் யோக நிலையில் இருந்து மன்மதனை எரித்த இடம், சார்ந்த நாடு அங்க நாடு எனப்படும்” என்று இராம லஞ்சுமணர்களுக்குச் சொன்னார் விசுவாமித்திர முனிவர்.
மன்மதன் உடல் இல்லாதவன். அனங்கன் எனும் பெயர் கொண்டவன். ந+அங்கன் = அனங்கன். அங்கம்—உடல்.
மூவரும் காமனாசிரமத்தில் ஒரு நாள் தங்கினர்; மறுநாள் காலையில் புறப்பட்டனர்; கொடிய தொரு பாலைவனத்தை அடைந்தனர். பாலைவனத்தின் கொடுமை தெரியாதிருக்கும் பொருட்டு அரச குமாரர்களுக்கு இரு மந்திரங்களை உபதேசித்தார் முனிவர்.
பலை, அதிபலை என்ற அந்த இரு மந்திரங்களின் உதவியால் அப்பாலை நிலம் சோலை போல் குளிர்ந்தது. அதைத் தாண்டிச் சென்றார்கள்; தாடகவனத்தை அடைந்தார்கள். தாடக வனம் என்பது தாடகையின் வரலாற்றை அந்த அரச குமாரர்களுக்குச் சொன்னார் முனிவர்.
சுகேது எனும் யக்ஷன் மகப்பேறு கருதி பிரமனைக் குறித்து தவம் செய்தான். ‘ஒரு மகள் பிறப்பாள்’ என்று அருளினான் பிரமன்.
அவ்வாறே திருமகள் போன்ற அழகும், ஆயிரம் யானை பலமும் கொண்ட மகள் ஒருத்தி பிறந்தாள். அவளை மிக அருமையாக வளர்த்து வந்தான் சுகேது. தாடகை என்று பெயரிட்டான். அப் பெண்ணுக்கு மணப்பருவம் வந்தது. யக்ஷர் தலைவனாகிய சுந்தன் என்பவனுக்கு அவளை மணம் செய்து கொடுத்தான்.
சுந்தன் என்பவன் ஜர்ஜன் எனும் யக்ஷனின் மகன்.
சுந்தனும் தாடகையும் ரதியும் மன்மதனும் போல வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்குப் புதல்வர் இருவர் பிறந்தனர்.
அப்புதல்வர்களுக்கு மாரீசன், சுபாகு என்று பெயரிட்டனர். இவ்விருவரும் வலிமையும், மாயமும் பெற்று வளர்ந்தனர்.
அளவு கடந்த மதமும் மகிழ்ச்சியும் கொண்டு திரிந்தான் சுந்தன்; அகத்திய முனிவரது ஆசிரமம் சென்றான்; அக்கிரமங்கள் பல செய்தான்.
கடல் குடித்த குறு முனிவர் கோபம் கொண்டார். தீப்பொறி பறக்க விழித்தார். அந்தக் கணமே வெந்து நீறானான் சுந்தன்.
அறிந்தாள் தாடகை. கடும் சினம் கொண்டாள். ‘குறு முனியைக் கொன்று ஒழிப்பேன்’ என்றாள். தன் மைந்தரோடு அகத்தியர் ஆசிரமத்தை அடைந்தாள். முனிவர் முனிந்தார். மூவரையும் அரக்கராகுமாறு சபித்தார்.
மாரீசன், சுபாகு ஆகியோர் இருவரும் பாதாள உலகம் சென்றனர். அங்கு அரசு புரிந்து வந்த சுமாலி என்ற அரக்கனுடன் வாழ்ந்தனர்.
இராவணன் இலங்கை ஆட்சி பெற்ற உடனே அவனிடம் சென்றனர்; மாமன் முறை கொண்டாடினார். இராவணனது ஏவலால் அட்டூழியங்கள் பல செய்து வருகின்றனர்.
அகத்தியர் சாபத்தால் தனக்கும் தன் மக்களுக்கும் நேர்ந்த கதியை எண்ணி எண்ணி மனம் புழுங்கிய தாடகை இங்கே வசிக்கிறாள்.
இவ்வாறு கூறினார் விசுவாமித்திர முனிவர், இராமன் மிகுந்த ஆச்சரியம் அடைந்தான்; அந்தத் தாடகையைக் காண விரும்பினான். விரும்பிய அக்கணத்திலேயே தாடகையும் தோன்றினாள்.
𝑥𝑥𝑥𝑥
சிலம்பு கொள் சிலம்பிடை
செறித்த கழலொடும்
நிலம் புக மிதித்திட
நெளித்த குழி வேலைச்
சலம் புக அனல் தறுகண்
அந்த கனும் அஞ்சிப்
பிலம்புக நிலைக் கிரிகள்
பின் தொடர வந்தாள்
தாடகை வந்தாள், எப்படி வந்தாள்? மிக வேகமாக வந்தாள். அவ்விதம் அவள் வந்த வேகத்தினாலே நிலை பெயராத மலைகள் நிலை பெயர்ந்து அவள் பின்னே வந்தன.
நிலத்திலே அவள் அடி எடுத்து வைத்த போது என்ன ஏற்பட்டது? நிலத்திலே பள்ளம் ஏற்பட்டது. அந்தப் பள்ளத்திலே கடல் நீர் வந்து புகுந்தது.
அவளது காலிலே சிலம்பு அணிந்திருந்தாள். வீரக் கழல் அணிந்திருந்தாள். எத்தகைய சிலம்பு? எத்தகைய வீரக் கழல்? மலையையே சிலம்பாகவும், மலையையே வீரக் கழலாகவும் அணிந்திருந்தாள்.
⚬⚬⚬⚬
இடை செறித்த—அணிதற்குரிய இடத்திலே (அதாவது கால்களிலே) அணிந்த; சிலம்பு கொள் சிலம்பு–மலைகளைப் பரவலாகக் கொண்ட சிலம்புகளோடும்; (சிலம்புகொள்) கழலொடும்; – மலைகளாகிய வீரக் கழலோடும்; நிலம்புக மிதித்திட-பாதங்கள் நிலத்திலே பதியும்படி மிதிப்பதனால்; நெளித்த குழி—அப்பாதங்கள் உண்டாக்கிய குழிகளிலே; வேலை சலம் புக—கடல் நீர் வந்து பாயவும்; அனல்—கோபத்தீ வீசப்பெற்ற; தறுகண்–அஞ்சாமை கொண்ட; அந்தகனும்–எமனும்; அஞ்சி-இவளைக் கண்டு பயந்து பிலம்புக—பாதாளத்திலே போய் மறையவும்; நிலைகிரிகள்—நிலையாக உள்ள(இடம் பெயராத) மலைகள்; பின் தொடர—இவள் வரும் வேகத்தால் அடி பெயர்ந்து பின்னே தொடர்ந்து வரவும்; வந்தாள்
𝑥𝑥𝑥𝑥
இறைக் கடை துடித்த
புருவத்தள்; எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட
மடித்த பில வாயள்;
கறைக் கடை அரக்கி
வடவைக் கனல் இரண்டாய்
நிறைக் கடல் முளைத் தென
நெருப் பெழ விழித்தாள்.
பெண் குலத்துக்கே மாசு என விளங்கிய அந்த அரக்கி எப்படி இருந்தாள் ? கோபத்தினாலே புருவங்கள் துடித்தன. கடை வாயிலே பிறை போன்ற கோரப் பற்கள் இரண்டு. குகை போன்ற வாய், வடவைக் கனலை இரு கூறாக்கியது போன்ற கண்கள். தீப்பொறி பறக்க விழித்தாள்.
𝑥𝑥𝑥𝑥
கறை கடை அரக்கி–பெண் குலத்துக்கே ஒரு மாசு ஆகி மிக இழிந்த அந்த அரக்கி ; கடை இறை துடித்த புருவத்தள் – கோபத்தினால் துடிக்கின்ற புருவத்தினள்; எயிறு எனும் – கோரப் பற்கள் எனப்படும்; பிறை கடை பிறக்கிட மடித்த – இரண்டு பிறைகள் கடை வாயிலே விளங்க மடித்த, பிலவாயள் – குகை போன்ற வாய் உடையவள்; வடவை கனல் – வடவாமுக அக்கினி, இரண்டாய் – இரண்டு கூறு ஆகி; நிறை கடல் முளைத்தது என—கரை காணாத கடலில் முளைத்தது என்று சொல்லும்படியாக, நெருப்பு எழ – கண்களில் தீப்பொறி பிறக்க, விழித்தாள் — அவர்களை உறுத்து நோக்கினாள்.
𝑥𝑥𝑥𝑥
கடம் கலுழ் தடங்களிறு
கையொடு கை தெற்றா
வடம் கொள நுடங்கு
முலையாள் மறுகி வானோர்
இடங்களு நெடும் திசையும்
ஏழ் உலகும் எங்கும்
அடங்கலும் கடுங்க உரும்
அஞ்ச கனி ஆர்த்தாள்
பெரிய யானைகள். மதம் பொழியும் யானைகள். அவற்றின் துதிக்கை ஒன்றை இன்னொரு துதிக்கையுடன் பின்னி மாலையாக அணிந்திருந்தாள்.
வானோர் உலகும், எட்டுத் திசைகளும், பூமி முதலிய ஏழ் உலகங்களும் இவற்றில் உள்ள எல்லா உயிர்களும் கலங்கி நடுங்க இடியும் அஞ்சுமாறு ஆரவாரம் செய்தாள்.
𝑥𝑥𝑥𝑥
கடம் கலுழ் தட களிறு—மத நீர் சொரியும் பெரிய யானைகளை, கையொடு கை தெற்றா – ஒரு துதிக்கையோடு மற்றொரு துதிக்கை பின்னி; வடம் கொள—மாலையாக அணிந்ததினால்; நுடங்கும் முலையாள்—அசையும் தனங் கொண்ட தாடகை, வானோர் இடங்களும் — தேவர் உலகத்திலும்; நெடும் திசையும்—எட்டுத் திசைகளிலும், ஏழ் உலகும்—பூமி முதலாகிய ஏழு உலகங்களிலும்; எங்கும்—மற்றுள்ள எல்லா இடங்களிலும்; அடங்கலும் – உள்ள எல்லா உயிர்களும்; மறுகி நடுங்க – கலங்கி நடுங்கவும்: உரும் அஞ்ச—இடியும் அஞ்சவும்; நணி ஆர்த்தாள்—பெருத்த ஆரவாரம் செய்தாள்.
𝑥𝑥𝑥𝑥
அல்லின் மாரி அனய நிறத்தவள்
சொல்லு மாத்திரையில் கடல் தூர்ப்பதோர்
கல்லின் மாரியைக் கை வகுத்தாள் அது
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான்
இரவிலே தோன்றும் கருமேகம் போலும் நிறங்கொண்ட அந்த தாடகை என்ன செய்தாள்? ஒரு சொல் சொல்லி முடிக்கும் நேரத்துக்குள்ளே கல்மாரி பெய்தாள். தனது கைகளாலே வாரி வீசினாள். எத்தகைய கல்மாரி? கடலையும் தூர்க்கக் கூடிய கல்மாரி. வில் வீரனாகிய இராமன் என்ன செய்தான்? தனது வில்லினின்றும் அம்பு மாரி பெய்தான் தாடகை பெய்த கல் மாரியைத் தடுத்தான்.
𝑥𝑥𝑥𝑥
அல்லில் மாரி அனைய நிறத்தவள்—இரவு நேரத்திலே தோன்றும் கருமேகம் போலும் நிறங்கொண்ட அந்தத் தாடகை; சொல்லும் மாத்திரையில்—ஒரு சொல் கூறி வாய் மூடுமுன்னே; கடல் தூர்ப்பது ஓர் கல்லின் மாரியை — கடலையும் தூர்த்துவிடக் கூடிய கல் மழையை; கை வகுத்தாள் — தன் கைகளால் வாரி வீசினாள். அது – அந்தக் கல் மழையை, வில்லின் வீரன் – வில் வீரனாகிய இராமன்; மாரியின்—தன் வில்லினின்று விடுத்த கணை மாரியினாலே விலக்கினான் – தடுத்தான்.
𝑥𝑥𝑥𝑥
சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடு சரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
விடுதலும் வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது
அப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருள் எனப் போயது அன்றே
கரிய செம்மலாகிய இராமன். இருள் போலும் கருநிறங்கொண்ட அந்த அரக்கி மீது ஓர் அம்பு விடுத்தான். அது வெகு வேகமாகப் பாய்ந்து சென்று அந்த அரக்கியின் மார்பைத் துளைத்துக்கொண்டு பின்புறமாக வெளியேறிற்று. எதுபோல? கல்வி அறிவு இல்லாத அற்பர்களுக்கு நல்லோர் கூறிய நல்லுரை போல.
𝑥𝑥𝑥𝑥
கரிய செம்மல்—கரிய திருமேனி கொண்ட இராமன்; சொல் ஒக்கும்—முனிவர் தம் சாபச்சொல் போன்ற; கடிய வேகம்—மிக்க வேகமும்; சுடு–தவறாமல் சுட்டு அழிக்கும் தன்மையும் கொண்ட, சரம்–ஒரு கணையை; அல் ஒக்கும் நிறத்தினுள்–இருள் போலும் கரிய நிறங்கொண்டவளாகிய மேல் விடுதலும்—தாடகை மீது ஏவ; வயிரம் குன்றம் கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது—வைரம் பாய்ந்த மலையாகிய கல் போன்ற அவள் மார்பிலே பாய்ந்து அங்கே தங்கி விடாது; அப்புறம் கழன்று–பின்புறமாக உருவிக்கொண்டு; கல்லாப் புல்லர்க்கு—கல்வி அறிவு இல்லாத அற்பர்களுக்கு, நல்லோர்—நல்லவர்கள்; சொன்ன—எடுத்துக் கூறிய; பொருள் என – பொருள் செறிந்த சொற்களைப் போல; போயது—போய் விட்டது.
𝑥𝑥𝑥𝑥
பொன் நெடுங் குன்றம் அன்னான்
புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங்கால வன் காற்று
அடித்தலும் இடித்து வானில்
கல் நெடு மாரி பெய்யக்
கடை எழுந்த மேகம்
மின்னொடும் அசனி யோடும்
வீழ்வதே போல வீழ்ந்தாள்.
மேரு மலை போன்ற கம்பீரத் தோற்றம் கொண்ட இராமன் அம்பு விட்ட உடனே என்னாயிற்று? ஊழிக் காலத்திலே இடித்து முழங்கிக் கல்மாரி பொழிய எழுந்த மேகமானது மின்னலோடும் இடியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் தாடகை.
𝑥𝑥𝑥𝑥
பொன் நெடு குன்றம் அன்னான் – பொன்மயமான பெரிய மேருமலை போன்ற தோற்றமுடைய இராமனது; புகர்முகம் – கூரிய வாய் கொண்ட; பகழி எனும் அம்பாகிய; மன் நெடுங்கால வன்காற்று—மிகப் பெரிதாகிய ஊழிக் காலத்திலே தோன்றும் வலிய காற்று (சண்டமாருதம் அடித்தலும்—தாக்கிய உடனே; கடை உகத்து—யுகமுடிவு காலத்தில்; வானில்—வானிலே; இடித்து—பேரிடி இடித்து; கல்நெடுமாரி பெய்ய — கல்மழை பெய்யும் பொருட்டு எழுந்த; மேகம்—மேகமானது; மின்னொடும் அசனியோடும்—மின்னல் இடியுடன்; வீழ்வதே போல—கீழே வீழ்வது போல; வீழ்ந்தாள்—விழுந்து விட்டாள்.
𝑥𝑥𝑥𝑥
கண்டார் முனிவர். மகிழ்ந்தார். படைக்கலங்கள் பல அளித்தார். அவற்றின் அதிதேவதைகளையும், அவற்றிற்கு ஆன மந்திரங்களையும், இராமனுக்குக் கற்பித்தார்.
அப்படைக் கலங்களும் மகிழ்ச்சியுடன் இராமனை அடைந்தன. எந்த நேரமும் ஏவல் செய்யக் காத்திருப்பதாகக் கூறின.
பிறகு, மூவரும் வழிநடந்து இரண்டு காத தூரம் சென்றனர். அங்கே ஓர் ஆறு. அதன் பெயர் கெளசிகி என்பது. அதன் வரலாறு என்ன என்று கேட்டான் இராமன். முனிவர் சொன்னார்;
“குசன் என்பவன் ஓர் அரசன். அவனது புதல்வர் நால்வர். மூத்தவன் பெயர் குசாம்பன். இரண்டாமவன் பெயர் குசநாபன்; மூன்றாமவன் பெயர் ஆதூர்த்தன்; நாலாவது குமாரன் பெயர் வசு.”
“குசாம்பன் கெளசாம்பியைத் தலைநகராகக் கொண்டு அரசு செய்தான். குசநாபன் மகோதயம் எனும் நகரில் இருந்து அரசு செலுத்தினான். ஆதூர்த்தன் தர்மவனத்திலே செங்கோல் செலுத்தினான். வசு என்பவன் கிரிவிரஜன் எனும் நகரிலே ஆட்சி செய்தான்.”
“குசநாபன் நூறு பெண்களைப் பெற்றான். அப்பெண்கள் கட்டழகு வாய்ந்தவர்களாய் பருவச் சிறப்புடன் விளங்கினார்கள்.”
“வாயு தேவன் கண்டான். அவர்கள் மீது மையல் கொண்டான். ஒருநாள். அவர்கள் மலர் பறித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது வாயு தேவன் அவர்களை அணுகினான். தனது மையலைத் தெரிவித்தான்.”
“எங்கள் தந்தையை அணுகி, உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். அவர் உமது கருத்துக்கு இணங்கி நீர் வார்த்து எங்களை உங்களுக்கு அளிப்பாராகில் பின்னரே நாங்கள் உங்களை அணைவோம்' என்று அவர்கள் கூறினார்கள்.
வாயு தேவன் கோபம் கொண்டான். அவர்கள் அழகு கெட்டுக் கூனிக் குறுகிய வடிவம் கொள்ளுமாறு சபித்தான்.
பெண்கள் நூறு பேரும் கூனிக் குறுகித் தள்ளாடிச் சென்றார்கள். நடந்ததைத் தங்கள் தந்தையிடம் சொன்னர்கள்.
பெண்களின் உறுதி கண்டு மகிழ்ந்தான் குசநாபன். அவர்களைப் பாராட்டினான். பிரமதத்தன் என்பவனுக்கு அவர்களைத் திருமணம் செய்து கொடுத்தான்.
பிரமதத்தன் என்பவன் சூளி எனும் முனிவருக்கும், சோமதை எனும் கந்தருவப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன். அவன் தொட்ட உடனே பெண்கள் கூன் நீங்கப் பெற்றார்கள்; அழகுடன் விளங்கினார்கள்.
பிறகு குசநாபன் தனக்குப் பின் அரசாள ஒரு மகனை வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். ஓர் ஆண் மகவு பெற்றான். அவனுக்குக் காதி என்று பெயரிட்டான். உரிய காலத்தில் அவனுக்கு முடி சூட்டி அரசனாக்கினான்; பின் பிரம்மலோகம் சென்று விட்டான்.
காதிக்கு ஒரு பெண்ணும் ஓர் ஆணும் பிறந்தனர். பெண்ணின் பெயர் கெளசிகி; ஆணின் பெயர் கெளசிகன்.
அந்தக் கெளசிகியை இருசிகன் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்தான் காதி.
இருசிகன் என்பவன் பிருகு முனிவரின் புதல்வன். இவன் சிலகாலம் கெளசிகியுடன் இல்லறம் நடத்தினான். பிறகு தவம் செய்து பிரும்மலோகம் சென்றான். தனது கணவனின் பிரிவு ஆற்றாதவளாகி கெளசிகி ஓர் ஆறாகி அவனைப் பின் தொடர்ந்தாள்.
”இந்நதி வடிவிலே பூமியில் இருந்து மக்களின் பாவங்களைப் போக்கி பூமியை வளம் செய்வாயாக" என்று கட்டளையிட்டுச் சென்றான் அவளது கணவன், இருசிகன்.
“அன்று முதல் இப்படி ஆறாக ஓடுகிறாள் எனது தமக்கையாகிய கெளசிகி” என்று கூறினார் விசுவாமித்திரன் என்ற கெளசிகர்.
இது கேட்ட இராமனும் இலட்சுமணனும் பெரு வியப்பு எய்தியவராய் மேலே நடந்தனர். அப்போது அங்கே சோலை ஒன்று தென்பட்டது.
“இதற்குப் பெயர் சித்தாச்ரமம். இங்கேதான் நான் வேள்வி செய்யப் போகிறேன்” என்றார் முனிவர்.
“சித்தாச்ரமம் என்ற பெயர் வரக் காரணம் என்ன?” என்று கேட்டான் இராமன்.
முனிவர் சொன்னார்; “திருமால் இந்த வனத்திலேயிருந்து தவம் செய்தார். காசிப முனிவர் அதிதியுடன் இங்கிருந்து தவம் செய்து சித்தி பெற்றார். ஆதலின் இது சித்தாச்ரமம் என்று பெயர் பெற்றது."
“நானும் இங்கே தவம் செய்து சித்தி பெறுவேன்"
இவ்வாறு கூறிவிட்டு முனிவர் யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தார். வேள்வி தொடங்கினர்.
𝑥𝑥𝑥𝑥
எண்ணுதற்கு ஆக்க அரிது
இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய
முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற
மன்னவன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற
இமையில் காத்தனர்.
சித்தாசரமத்திலே ஆறு நாள் வேள்வி செய்தார் விசுவாமித்திரர். விண்ணவர் பொருட்டு விசுவாமித்திரன் செய்த, செயற்கரிய, எண்ணுதற்கும் அரிய இந்த வேள்வியைக் காத்தனர். யார்? மன்னன் மைந்தர்; மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர். அதாவது இராமனும் இலட்சுமணனும். எப்படிக் காத்தனர்? கண்ணினைக் காக்கின்ற இமைபோல் காத்தனர். கண் வேள்வி. இமை. இராம இலட்சுமணர். இமைகள் இரண்டு. மேல் இமை, கீழ் இமை, கீழ் இமை அசையாதிருப்பது. மேல் இமை அசைவது. இவ்வாறே இலட்சுமணன் வேள்விச் சாலையின் வாயில் நின்று காத்தான். இராமன் வேள்விச் சாலையைச் சுற்றி வந்து சுற்றி வந்து காத்தான். இலட்சுமணனைத் தொட்டுத் தொட்டு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தான்.
இவ்வாறு மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர் கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்.
𝑥𝑥𝑥𝑥
கண்ணினை — பூமியை; காக்கின்ற — அரசாளும்; மன்னவன் மைந்தர்கள் — தசரத மன்னனின் மைந்தர்கள்: விண்ணவர்க்கு — தேவர்களின் பொருட்டு; இரண்டு மூன்று நாள் — ஆறு நாட்கள்; முனிவன் ஆக்கிய — விசுவாமித்திர முனிவன் செய்த எண்ணுதற்கு — நினைப்பதற்கும்; ஆக்க — செய்வதற்கும்; அரிது — அரியதாகிய; வேள்வியை — யாகத்தை : கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர் — கண்களைக் காக்கும் இமைபோல் காத்தனர்.
𝑥𝑥𝑥𝑥
எய்தனர்; எறிந்தனர்; எரியும் நீருமாப்
பெய்தனர்; பெருவரை பிடுங்கி வீசினர்;
வைதனர். தெழித்தனர்; மழுக்கள் ஓச்சினர்;
செய்தனர் ஒன்றல தீய மாயமே.
யாகத்தைப் பாழ்படுத்த எண்ணிய அரக்கர்கள் அம்புகளை எய்தார்கள்; ஈட்டிகளை எறிந்தார்கள்; நெருப்பைக் கொட்டினார்கள்; நீரைப் பெய்தார்கள்; மலைகளைப் பிடுங்கி வீசினார்கள்; வைதார்கள்; அச்சுறுத்தினார்கள் இன்னும் பல தீய செயல்களைச் செய்தார்கள்.
𝑥𝑥𝑥𝑥
எய்தனர் – அம்புகளை எய்தனர்; எறிந்தனர்—ஈட்டிகளை எறிந்தார்கள். எரியும் நீரும் ஆகப் பெய்தனர் — நெருப்பும் நீரும் சொரிந்தனர். பெருவரை பிடுங்கி வீசினர் — பெரிய மலைகளை வேருடன் பிடுங்கி வீசினர்; வைதனர் — பலவித வசைச் சொற்களால் ஏசினர்; தெழித்தனர் — அதட்டினர். மழுக்கள் ஓச்சினர் — மழு ஆயுதங்களை எறிந்தனர்; ஒன்று அல தீய மாயம் செய்தனர்—இவ்வாறு அவர்கள் செய்த தீய செயல் ஒன்றன்று; பல மாயம் ஒன்றன்று; பற்பல.
𝑥𝑥𝑥𝑥
தூம வேல் அரக்கர் தம் நிணமும் சோரியும்
ஓம வெங்கனலிடை உகும் என்று உன்னி அத்
தாமரைக் கண்ணனும் சரங்களே கொடு
கோமுனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான்.
𝑥𝑥𝑥𝑥
தாமரைக் கண்ணனும் – செந்தாமரை போலும் கண்களை உடைய இராமனும்; தூமம் வேல் அரக்கர் தம்—புகை கக்கும் வேலாயுதங் கொண்ட அந்த அரக்கர் பெய்த, நிணமும் சோரியும் மாமிசமும் ரத்தமும், ஓமம் வெம்கனல்—ஓமம் செய்யும் வெந்தீ; இடை உகும்—நடுவே விழும்; என்று உன்னி—என்று கருதி; கோமுனி இருக்கை— ராஜ ரிஷியாகிய விசுவாமித்திர முனிவன் இருக்குமிடத்துக்கு மேலே; சரங்களே கொடு—அம்புகளையே கொண்டு; ஓர் கூடம் ஆக்கினான் – ஒரு கூரை வேய்ந்தான்.
𝑥𝑥𝑥𝑥
திருமகள் நாயகன் தெய்வ வாளி தான்
வெரு வரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அவ்
ஒருவனை அந்தகன் புரத்தில் உய்த்ததே.
இவ்வாறு அக்கிரமம் செய்தவர் தாடகையின் புதல்வர் ஆகிய மாரீசன் சுபாகு ஆகியவர் இருவருமே. அவ்விருவர் மீதும் இரண்டு கணைகளை எய்தான் இராமன். இருகணைகளில் ஒன்று ஆக்னேயாஸ்திரம்; மற்றொன்று மானவாஸ்திரம். ஆக்னேயாஸ்திரம் என் செய்தது? சுபாகுவை யமபுரம் அனுப்பியது. மானவாஸ்திரம் மாரீசனைக் கடலிலே கொண்டு போட்டது. எஞ்சிய அரக்கர்கள் ரகு வீரன் திறம் கண்டு அஞ்சி ஓடினார்கள்.
திருமகள் நாயகன்–லட்சுமி தேவியின் நாயகனாகிய (திருமாலின் அவதாரமாகிய) இராமன் ; தெய்வவாளி (விடுத்த) தெய்வத் தன்மை பொருந்திய அம்பு; வெருவரு–அஞ்சத் தக்க; தாடகை பயந்த வீரர் இருவருள்–தாடகை பெற்ற புதல்வர் இருவருள்; ஒருவனை– ஒருவனாகிய மாரீசனை; கடலில் இட்டது–கடலிலே கொண்டு போட்டது; ஒருவனை–அந்த மற்றொருவனாகிய சுபாகுவை; அந்தகன்புரத்தில் உய்த்தது–எம புரத்துக்குக் கொண்டு போய் சேர்த்தது.
𝑥𝑥𝑥𝑥
பாக்கியம் எனக்கு உனது என
நினைவுறும் பான்மை
போக்கி நிற்கு இது பொருள் என
உணர்கிலேன்; புவனம்
ஆக்கி மற்று அவை அனைத்தையும்
மணி வயிற்றடக்கிக்
காக்கு நீ ஒரு வேள்வி
காத்தனை எனுங் கருத்தே.
இராமன் திருமாலின் அவதாரமே என்பதை மனத்தில் கொண்ட விசுவாமித்திரர் இராமனைப் புகழ்ந்து கூறுகிறார்.
“பரம் பொருள் நீ. பிரமனாக இருந்து உலகைப் படைப்பவனும் நீயே. ஊழிக் காலத்தில் அவை அழியாமல் உன் வயிற்றில் அடக்கிப் பாதுகாப்பவனும் நீயே.”
“அத்தகைய நீ எனது வேள்வி காத்தாய் என்று உலகோர் எண்ணச் செய்தது வெறும் தோற்றமே. உனக்கு அது ஒரு பெரிய காரியம் அன்று. ஆனால் அது எனது பெரும் பாக்கியம்.”
𝑥𝑥𝑥𝑥
புவனம் ஆக்கி—உலகங்கள் எல்லாவற்றையும் படைத்து; மற்று—பின்பு; (ஊழிக் காலத்தில்) அவை அனைத்தையும்–அவை எல்லாவற்றையும்; மணி வயிறு அடக்கி—(உனது) வயிற்றிலே அடக்கிக் கொண்டு; காக்கும் நீ—அவை அழியாமல் காக்கும் நீ—ஒரு வேள்வி காத்தனை—நான் செய்த இந்த வேள்வி காத்தாய்; எனும் கருத்து—என்று உலகோர் கருதும்படி செய்தது; எனது பாக்கியம்—எனது பெரும் பாக்கியமாக; உளது—அமைந்து விட்டது. என—என்று நினைவுறும் பான்மை போக்கி—நினைப்பதேயன்றி; நிற்கு—உன்றனக்கு; இது பொருள் என—இது ஒரு பெரிய காரியம் என்று; எண்ணுகிலேன்—நான் கருதுகின்றேன் அல்லன்.
𝑥𝑥𝑥𝑥
“இனி நான் என்ன செய்ய வேண்டும்?” இது இராமனின் கேள்வி.
“நீ செய்ய வேண்டிய காரியங்கள் பல உள. அவற்றைப் பிறகு பார்ப்போம். மிதிலையர் கோனாகிய ஜனகன் ஒரு வேள்வி செய்கிறார். அதைக் காண்போம்” என்று கூறினார் முனிவர். மூவரும் மிதிலைக்குப் புறப்பட்டனர். அங்ஙனம் புறப்பட்டு நடந்த மூவரும் ஓர் ஆற்றின் கரை அடைந்தனர். அதன் பெயர் சோணை ஆறு என்பது. அவ்வளவில் பொழுதும் போயிற்று. மூவரும் ஆங்கு ஓர் பொழிலிடையே தங்கி இரவு போக்கினர்.
மறுநாள். இரவு நீங்கியது. பொழுது புலர்ந்தது. கதிரவன் தோன்றினான்.
மூவரும் தம் யாத்திரை தொடங்கினர். கங்கைக் கரை அடைந்தனர். கங்கையின் சிறப்பைக் கூறுமாறு கேட்டான் காகுத்தன் முனிவனும் மொழியலுற்றான்.
𝑥𝑥𝑥𝑥
இந்த மா நதிக்கு உற்றுள
தகைமை யாவும்
எந்தை கூறுக என்று இராகவன்
வினவுற, அனையான்
மைந்த! நின் திரு மரபுளான்
அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன் சகரன்
இம் மேதினி புரந்தான்.
“எங்கள் தந்தை போன்ற முனிவரே! இந்தப் பெருநதியின் சிறப்புக்களை எல்லாம் சொல்லி அருள்வீராக” என்று கேட்டான்; இராமன். உடனே முனிவர் சொல்லத் தொடங்கினார்.
“குழந்தாய் ! சகரன் எனும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் உனது மரபிலே தோன்றியவன்; வீர தீர பராக்கிரமம் மிக்கவன்.
அயோத்தியைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.”
𝑥𝑥𝑥𝑥
எந்தை — எம் தந்தை போன்ற முனிவரே ! இந்த மாநதிக்கு — பெருமை மிக்க பெருநதி இதற்கு உற்றுள — அமைந்துள்ள; தகைமை யாவும் — சிறப்புகளை எல்லாம்; கூறுக – சொல் வீராக; என்று இராகவன் வினவுற – என்று இராமன் கேட்க ; அனையான் — தந்தையே போன்ற அந்தக் கோசிக முனிவனும் ; மைந்த – (இராமனை நோக்கி) குழந்தாய்; நின் திரு மரபு உளான் — உன்னுடைய புகழ் மிகு மரபில் தோன்றியவனும் ; அயோத்தி மா நகர் வாழ் — அயோத்தி மாநகரிலே வாழ்ந்தவனும்; விந்தை சேர்புயன் – வீரலட்சுமி தங்கிய புய வலியுடையவனுமாகிய; சகரன் — சகரன் என்ற அரசன்; இ மேதினி புரந்தான் — இப்புவியினை ஆண்டு வந்தான்;
𝑥𝑥𝑥𝑥
சகரனின் மனைவிமார் இருவர். மூத்தவள் விதர்ப்ப நாட்டு மன்னன் மகள்; விதர்ப்பை எனும் பெயர் கொண்டவள். எனினும் கேசினி என்பதே இவளது இயற்பெயர்.
இரண்டாவது மனைவியின் பெயர் சுமதி; காசியபருக்கும் வினதைக்கும் மகனாகப் பிறந்தவள்; கருடனுக்கு இளையவள்.
கேசினிக்கு ஒரு மகன். அவன் பெயர் அசமஞ்சன். அசமஞ்சன் சிறு குழந்தைகளைத் தூக்கிச் செல்வான்; ஆற்று நீரிலே அமிழ்த்துவான், குழந்தை தவித்துத் துடித்துச் சாதல் கண்டு இன்புறுவான். இது இவனுடைய விளையாட்டு.
இந்த அசமஞ்சனுக்கு ஒரு மகன் பிறந்தான். அம்சுமான் என்று பெயரிட்டான் அசமஞ்சன். அம்சுமான் என்றால் என்ன பொருள்? ஒளி மிக்கவன் என்று பொருள்.
சுமதிக்கு முட்டை வடிவில் ஒரு பிண்டம் பிறந்தது. அது வெடித்தது; அதினின்றும் அறுபதாயிரம் பிள்ளைகள் தோன்றினார்கள். அவர்கள் வீராதி வீரர்களாக விளங்கி வந்தனர்.
தன் புதல்வர் அறுபதாயிரம் பேரும் வீரர்களாக இருப்பதால் எவ்வித இடையூறும் இன்றி அசுவ மேதயாகம் செய்யலாம் என்று கருதினான் சகரன்.
இதை அறிந்தான் இந்திரன், யாகக் குதிரையைப் பாதாள உலகில் கொண்டு போய்விட்டான். அங்கே தவம் செய்து கொண்டிருந்தார் கபிலர், அவர் பின்னே குதிரையை ஒளித்து வவத்தாள் இந்திரன்.
கபிலர் கண் விழிக்கும்போது முன் நிற்பவர் எவரோ அவர் வெந்து, சாம்பராவர், இதை அறிந்தே குதிரையை அவர் பின் நிறுத்தினான் இந்திரன்.
குதிரையைத் தேடிக்கொண்டு சகரபுத்திரர் அறுபது ஆயிரம் பேரும் பாதாள உலகம் செல்வர், அங்கே கபில முனிவர் பின்னே குதிரையைக் காண்பர். கபிலரின் தவத்துக்கு இடையூறு செய்வர். கபிலர் கண் விழிப்பர், எதிரேநிற்கும் சகரபுத்திரர் அறுபதாயிரம் பேரும் வெந்து சாம்பராவர்.
இவ்வாறு திட்டமிட்டுத்தான் இந்திரன் யாகக் குதிரையை அங்கே கொண்டு போய் நிறுத்தினான். இந்திரன் திட்டமிட்டபடியே நடந்தது.
யாகக் குதிரையை எங்கும் தேடினர் சகரனின் புதல்வர். எங்கும் கண்டிலர், பூமியைக் குடைந்தனர். பாதாள உலகு சென்றனர்.
அங்கே கபிலர் அருகே குதிரை நிற்றல் கண்டனர். முனிவர் முன் ஆரவாரம் செய்தனர்.
தவம் கலையப் பெற்றார். முனிவர். கண் விழித்தார். அந்தக் கணமே அறுபதாயிரம் பேரும் வெந்து சாம்பராயினார்.
சகரர் பூமியைக் குடைந்து பாதாளம் சென்ற பள்ளம் கடலாயிற்று. சகரனின் புதல்வர் தோண்டியதால் ஏற்பட்ட கடல் சாகரம் எனும் பெயர் பெற்றது.
தன் பிள்ளைகளுக்கு நேர்ந்த கதியை அறிந்தான் சகரன். மூத்த மகனின் மகனாகிய அம்சுமானிடம் கூறினான். யாகம் தடைபட்டது குறித்து வருந்தினான்.
அம்சுமான் பாதாள உலகம் சென்றான்; முனிவரை வணங்கினான். வருந்தினான். முனிவர் நடந்தவற்றைக் கூறினார். குதிரையைக் கொண்டு போய் யாகத்தை நிறைவேற்றுமாறு கூறினார்.
அம்சுமான் குதிரையைக் கொண்டு வந்தான். பாட்டனிடம் ஒப்புவித்தான். சகரனும் வேள்வி முடித்தான். பேரனாகிய அம்சுமானுக்கு முடி சூட்டி விட்டு விண்ணுலகு சென்றான்.
அம்சுமானுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் திலீபன். திலீபனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பகீரதன்.
பகீரதன் என்ன செய்தான்? தன் முன்னோராகிய சசுரபுத்திரர் வெந்து சாம்பலானது கேட்டான். அவர்கள் நல்ல கதி பெறச் செய்வது எப்படி என்று வசிஷ்டரைக் கேட்டான் அப்போது வசிஷ்டர் சொன்னார்.
“திருமால் திருவிக்கிரமனாகத் தோன்றி ஓங்கி உலகளந்த போது” அவரது திருவடி பிரம்ம லோகம் வரை சென்றது. பிரம்ம தேவன் அவரது திருவடிகளைத் தமது கமண்டல நீர் கொண்டு திருமஞ்சன மாட்டுவித்தான். அதுவே கங்கை ஆயிற்று. அவ்வாறு தோன்றிய புண்ணிய தீர்த்தத்தை மீண்டும் தனது கமண்டலத்தில் ஏற்றான் பிரமன்.
“அந்த கங்கை நீரைக் கொண்டு வந்து உனது முன்னோரின் சாம்பலை அதிலே கரைத்தால் அவர்கள் நல்ல கதி அடைவர்கள்.”
கேட்டான் பகீரதன், அரசைத் தன் மந்திரிகளிடம் ஒப்புவித்தான். காடு சென்றான். பிரமனைக் குறித்துத் தவம் செய்தான்.
நீண்டகாலம் தவம் செய்தான். முடிவில் பிரம தேவன் தோன்றினான். கங்கையைப் பூமிக்கு அனுப்புமாறு வேண்டினான் பகீரதன். அப்போது பிரமன் சொன்னான்.
“உனது விருப்பப்படியே கங்கையைப் பூமிக்கு அனுப்புகிறேன். கங்கை பூமியில் விழும்போது அவளுடைய வேகம் தாங்கமாட்டாள் பூமி. கங்கைமின் வேகம் தாங்கும் சக்தி படைத்தவர் ஒருவரே. அவரே சிவபெருமான், கங்கை பூமிக்கு வரும் போது அவளது வேகத்தைத் தாங்கிக்கொள்ள அவர் சம்மதித்தால் கங்கை வருவாள்.”
இவ்வாறு கூறினார் பிரமதேவன். எனவே பகீரதன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தான். நீண்ட காலம் தவம் செய்தான். முடிவில் சிவபெருமான் தோன்றினார்.
“கங்கை பூமிக்கு வர வேண்டும்” என்று கேட்டான் பகீரதன்.
“அப்படியே ஆகட்டும்!” என்று வரமளித்தார் சிவன்.
மிக்க கர்வத்துடனும் வேகத்துடனும் வானிலிருந்து கீழே வீழ்ந்தாள் கங்கை. அவளைத் தன் சடையிலே ஏந்தினார் சிவன். ஒரு சிறிதும் கீழே விழாமல் சடையை முடித்து விட்டார்.
‘தான் அரும் பாடுபட்டு கொண்டு வந்த கங்கை நீர் சிவபெருமான் முடியில் தங்கி விட்டமை கண்டான் பகீரதன். சிவ பெருமானை வேண்டினான், அவரும் அவன் வேண்டுதலுக்கு இரங்கினார். சிறிது வெளியில் விட்டார்.’
‘வேகமாக ஓடிவந்தாள் கங்கை, ஜான்ஹு என்ற முனிவரின் ஆசிரமத்தைப் பாழாக்கினாள். முனிவர் கோபம் கொண்டார். கங்கையைத் தம் உள்ளங்கையில் அடக்கிக் குடித்து விட்டார்.’
‘கண்டான் பகீரதன். முனிவரை வேண்டினாள். அந்த வேண்டுதலுக்கு இரங்கினார் முனிவர். தம் காது வழியே கங்கையை விட்டார்.’
‘அந்த நீரால் தனது முன்னோரை உய்வித்தான் பகீரதன். மீண்டும் அயோத்திக்கு. வந்தான். ஆட்சி புரியத் தொடங்கினான்.’
𝑥𝑥𝑥𝑥
அண்ட கோளகைக்கு
அப்புறத் தாதி அன்று அளந்த
புண்டரீக மென்மலரிடைப்
பிறந்து பூ மகனார்
கொண்ட தீர்த்தமாய் பகீரதன்
தவத்தினால் கொணர
மண்டலத்தின் வந்து அடைந்தது
இம் மாநதி மைந்த !
ஓங்கி உலகளந்த உத்தமனின் திருவடி பிரம்ம லோகம் வரை சென்றது. பிரமதேவன் அத் திருவடிகளுக்குத் திருமஞ்ச மாட்டுவித்தான். அதுவே கங்கை ஆயிற்று. அப்புண்ணிய தீர்த்தத்தைப் பிரமன் தனது கமண்டலத்தில் ஏற்றுக் கொண்டான். பகீரதனின் முயற்சியால் அது பூமிக்கு வந்தது.
𝑥𝑥𝑥𝑥
மைந்த—சக்கரவர்த்தி திருமகனே! இ மா நதி—சிறந்த இம் மா நதி, ஆதி—ஆதி மூலமாகிய திருமால்; அண்ட கோளகைக்கு அப்புறத்து—அண்ட கோளங்களுக்கு அப்பாலும் அளந்த அன்று—அளந்த அந்தக் காலத்திலே; மென் புண்டரீக மலரிடைப் பிறந்து–மென்மை பொருந்திய திருவடியாகிய தாமரையிலே (ஶ்ரீ பாத தீர்த்தமாகத்) தோன்றிய; பூ மகனார்—பிரமதேவன்; கொண்ட தீர்த்தமாய்—தனது கமண்டலத்திலே ஏந்திய புண்ணிய தீர்த்தமாகி; பகீரதன் தவத்தினால் கொணர —பகீரத மன்னன் தனது தவ வலிமையினாலே கொண்டு வர: மண்தலத்தின் வந்து அடைந்தது—பூமிக்கு வந்து சேர்ந்தது.
𝑥𝑥𝑥𝑥
என்று கூறலும் வியப்பினோடு
உவந்தனர் இறைஞ்சிச்
சென்று தீர்ந்தனர்; கங்கையை
விசாலை வாழ் சிகரக்
குன்று போல் புயத்து அரசன்
வந்து இணையடி குறுக
நின்று நல்லுரை விளம்பி
மற்று அவ்வயின் நீங்கா
இவர் தம் வருகை அறிந்த விசாலை நகர் அரசன் வந்து இவர்களை வணங்கினான். அவனுடன் அளவளாவி இனிய மொழிகள் பல பல கூறிய பின் மூவரும் அப்பால் சென்றனர்.
𝑥𝑥𝑥𝑥
தோள்களை உடைய அரசன் வந்து–இவர்கள் வரவு அறிந்து வந்து; இணை அடி குறுக – திருவடிகளிலே வணங்க; நின்று – அங்கே தங்கி; நல்லுரை விளம்பி—அந்த அரசனுக்கு இனிய நல்ல சொற்களைக் கூறி; மற்று—பின்பு; அவ் வயின் நீங்க–அவ்விடம் விட்டுச் சென்றார்கள். என்று கூறலும்—என்று இவ்வாறு (கங்கையின் வரவை) முனிவன் கூறலும்; (இராமனும் இலட்சுமணனும்) வியப்பினோடு—மிகுந்த ஆச்சரியத்துடனே; உவந்து– மகிழ்ந்தவர்களாய் கங்கையை இறைஞ்சி–கங்கையை வணங்கி; (பின்பு மூவரும்) சென்று தீர்ந்தனர்—ஆறு கடந்து அக்கரை சேர்ந்தனர். (அப்போது) விசாலை வாழ் – விசாலை எனும் நகரில் வாழ்ந்த; சிகரம் குன்று போல் புயத்து அரசன்—சிகரத்துடன் விளங்கும் குன்று போலும்.
𝑥𝑥𝑥𝑥
வரம்பில் வான் சிறை
மதகுகள் முழவொலி வழங்க
அரும்பு நாள் மலர் அசோகுகள்
அலர் விளக்கு எடுப்ப
நரம்பினான்ற தேன் தாரை
கொள் நறுமலர் யாழின்
சுரும்பு பாண் செயத் தோகை
நின்றாடுவ சோலை.
இந்த அருமையான இயற்கைக் காட்சியை வர்ணிக்கிறார் கம்பர்.
சோலைகள் எல்லாம் நடன அரங்குகள் போல் இருக்கின்றனவாம். அரங்கு என்று சொன்னால் ஆடுவதற்கு ஒரு பெண் வேண்டாமா ? அந்தப் பெண் யார்? மயில்கள் அழகிய தோகை விரித்து ஆடுவது பெண்கள் நாட்டியமாடுவது போலிருக்கிறதாம். வண்டுகள் ரீங்காரம் செய்வது யாழ் வாசிப்பது போலிருக்கிறதாம்.
தாளம் வேண்டுமல்லவா மதகுகளின் வழிவே சலசல என்று ஓடை நீர் பாய்வது எப்படியிருக்கிறதாம் ? ஆடலுக்கும் பாடலுக்கும் ஒப்ப மத்தளம் வாசிப்பது போலிருக்கிறதாம்.
நாட்டியம் என்றால் விளக்கு வேண்டாமா ? அசோக மரங்களிலே உள்ள மலர்கள் விளக்கு ஏந்தி நிற்பன போல் இருக்கின்றனவாம்.
𝑥𝑥𝑥𝑥
சோலை – விதேக நாட்டின் சோலைகளில்; வரம்பு இல்—கணக்கற்ற; வான் சிறை மதகுகள்—பெரிய நீர் நிலைகளின் மதகுகள்; முழவு ஒலி வழங்க—மத்தளம் முழங்க; அரும்பு நாள் மலர் – அவ்வப்போது மலரும் பூக்களை உடைய; அசோகுகள் – அசோக மரங்கள்; அலர் விளக்கு எடுப்ப—மலராகிய விளக்குகளை ஏற்றவும்; நரம்பின் நான்ற—யாழின் நரம்பு போல நீண்டு ஒழுகும்; தேன் தாரை கொள் – தேன் ஒழுக்கைக் கொண்ட; நறுமலர் யாழின் – மணம் கமழும் மலராகிய யாழிலே; சுரும்பு—வண்டுகள்; பாண் செய—இசை பாடவும்; தோகை நின்று ஆடுவ—மயில்கள் தோகையை விரித்து நின்று ஆடுவன.
𝑥𝑥𝑥𝑥
பட்ட வாள் நுதல் மடந்தையர்
பார்ப் பெனும் துதால்
எட்ட ஆதரித்து உழல்பவர்
இதயங்கள் வெறுப்ப
வட்ட நாள் மரை மலரின் மேல்
வயலிடை மள்ளர்
கட்ட காவி அம்கண் கிடை
காட்டுவ கழனி.
நெற்றிப் பட்டம் அணிந்த பெண்கள் மிக அழகாக விளங்குகிறார்கள். அவர்களது பார்வையிலே மயங்கிவிட்ட ஆண்கள் அவர்களை எட்டிப் பிடிக்க விரும்பத் திரிகிறார்கள். அந்தப் பெண்களோ அவர்களது கைக்கு எட்டாமல் ஓடி விடுகிறார்கள்.
அந்த சமயத்திலே வயல்களிலே களை பிடுங்கும் உழவர்கள் நில மலர்களைப் பிடுங்கி எறிகிறார்கள். அருகில் உள்ள நீர்நிலையிலே தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. உழவர் வீசிய நீல மலர்கள் அந்தத் தாமரை மலர் நடுவே விழுந்து கிடக்கின்றன.
அது எப்படியிருக்கிறது ? நீரிலே இறங்கிக் கழுத்து வரை மறைத்துக் கொண்டு அந்தப் பெண்கள்தான் தங்கள் முகம் காட்டுகிறார்களோ என்று கருதுமாறு இருக்கிறதாம்.
பெண்களின் கண் வீச்சிலே மயங்கி உழலும் ஆடவர் என்ன செய்கின்றனர்? ஆசையோடு ஓடுகின்றனர். கண் வீசிய பெண் கழுத்தளவு நீரில் மூழ்கி முகம் காட்டுகிறாள் என்று எண்ணி மிகுந்த ஆசை கொண்டு ஓடுகின்றனர்.
அருகில் சென்று பார்த்தால் பெண் இல்லை; முகமும் இல்லை; ஏமாந்தனர். ‘நமது ஆசை வீணாயிற்று’ என்று மனம் வெறுத்துத் திரும்புகின்றனர்.
𝑥𝑥𝑥𝑥
பட்டம் – நெற்றிப் பட்டம் அணிந்து; வாள் நுதல் – ஒளி பொருந்திய நெற்றியுடன் விளங்கும்; மடந்தையர்—பெண்களின்; பார்ப்பு எனும் பார்வை என்ற; தூதால்—தூதினாலே (உந்தப்பட்டு) எட்ட—அவர்களை எட்டிப்பிடிக்க; ஆதரித்து – விரும்பி; உழல்பவர் – திரிகின்ற ஆண்களின்; இதயங்கள் – மனம்; வெறுப்ப—வெறுப்படையும் வண்ணம்; வயல் இடை– வயல்களிலே; மள்ளர்—வேலை செய்யும் உழவர்கள்; கட்ட காவி களை பிடுங்கி எறிந்த நீலமலர்கள்; (அயலிடத்து நீர் நிலையிலே உள்ள) வட்டம் நாள் மரை — வட்ட வடிவமாக அன்று அலர்ந்த தாமரை மலர்கள் மேல் படிந்து; அம்கண் கிடை காட்டுவ—பெண்களின் அழகிய கண்கள் போல் காணப்பட்டனவாம்.
இனைய நாட்டிடை இனிது சென்று
இஞ்சி சூழ் மிதிலைப்
புனையு நீள் கொடிப் புரிசையின்
புறத்து வந்து இறுத்தார்
மனையின் மாட்சியை அழித்து உயர்
மாதவன் பன்னி
கனையும் மோட்டு உயர்
கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார்
இத்தகைய வளம் மிக்க விதேக நாட்டின் ஊடே மூவரும் சென்றனர்; மிதிலை நகரின் புறமதிலை அடைந்தனர். அங்கே வெட்ட வெளி ஒன்றிலே உயரமான கருங்கல் மேடு ஒன்று கண்டனர்.
கெளதம முனிவரின் பத்தினியாகிய அகலிகை சாபம் பெற்றுக் கல் உருக் கொண்டு கிடந்தாள்.
𝑥𝑥𝑥𝑥
இளைய நாடு இடை– இத்தகைய வளம் மிக்க விதேக நாட்டின் இடையே; இனிது சென்று – மகிழ்ந்து மூவரும் சென்று; இஞ்சி சூழ்மிதிலை – மதில்கள் சூழ்ந்த மிதிலை மாநகரின்; புனையும் நீள்கொடி அலங்கரிக்கப்பட்ட உயர்ந்த கொடிகளை உடைய; புரிசையின் புறத்து – வெளி மதிலின் புறத்தே; வந்து இறுத்தார்—வந்து அடைந்தனர். ஓர் வெள்ளிடை— (அங்கே) ஒரு வெளி இடத்திலே; மனையின் மாட்சியை அழித்து – மனைவிக்குரிய மாண்பு போக்கிக் கொண்ட; உயர் மாதவன் பன்னி—பெருந்தவ முனிவரின் பத்தினியாகிய அகலிகை, கனையும் மோடு உயர் கருங்கல்—மிக உயர்ந்து செறிந்து தோன்றிய கருங்கல்லாயிருக்க; கண்டார்—பார்த்தனர்.
𝑥𝑥𝑥𝑥
கண்ட கல் மிசைக் காகுத்தன்
கழல் துகள் இதுவ
உண்ட பேதைமை மயக்கற
வேறு பட்டு உருவம்
கொண்டு மெய்யுணர்பவன்
கழல் கூடியது ஒப்பப்
பன்டை வண்ணமாய் நின்றனர்
மாமுனி பணிப்பான்.
இயற்கையிலே தூய்மையான ஆன்மாவானது மாயை ஆகிய அஞ்ஞான வசப்பட்டுக் கர்ம சரீரத்தில் நின்று உழலும் போது, அதனின்றும் விடுபட முயன்று, அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பெற்று இறைவன் திருவடிகளிலே கலக்கும் போது பெறும். அது போல, தூய்மை மிக்க அகலிகை இடையே நேர்ந்த குற்றத்தால் சாபம் பெற்றாள்; கல் உருக்கொண்டாள்.
இராமனுடைய திருவடி தூசிபடவே சாபம் நீங்கப் பெற்றாள்; பண்டை உருவம் எய்தினாள்; எழுந்து நின்றாள். மீண்டும் தன் கணவனை அடையும் பேறு பெற்றாள்.
𝑥𝑥𝑥𝑥
கண்ட கல் மிசை – அவர்கள் கண்ட கல் உருவத்தின் மீது; காகுத்தன் கழல் துகள் கதுவ—இராமனுடைய திருவடித் தூசி படிந்த உடனே; மெய் உணர்பவன் – உண்மைப் பொருளை அறிய முயலும் ஆன்மா (அம்மெய்யுணர்வினால்) உண்ட பேதைமை மயக்கு அற—முன்பு தான் கொண்டிருந்த அஞ்ஞான மயக்கம் தீரப் பெற்று; வேறுபட்டு—மாயையினின்றும் விடுபட்டு; உருவம் கொண்டு – தன் உண்மை உருக்கொண்டு; கழல் கூடியது ஒப்ப—இறைவன் திருவடிகளிலே கலத்தல் போல – பண்டை வண்ணம் ஆய் நின்றனள்—தன் முன்னை உருப்பெற்று (எழுந்து) நின்றாள்; மாமுனி (அப்போது) பெருமை மிக்க விசுவாமித்திர முனிவர்; பணிப்பான்—சொல்லத் தொடங்கினான்.
𝑥𝑥𝑥𝑥
ஆகாயத்திலிருந்த புனிதமான கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்த பகீரதனின் வழித் தோன்றலே! இராம !
இந்த மான்விழியாள் கெளதம முனியின் பத்தினி. இவள் மீது இந்திரன் விருப்பம் கொண்டான்; அறிவு மயங்கினான்; முனிவன் தன் ஆசிரமத்திலிருந்து வெளியே போகுமாறு செய்தான். முனிவன் உருக் கொண்டான்; அகலிகையை அடைந்தான்.
வெளியே சென்ற முனிவர் திரும்பினார். இந்திரனின் சூழ்ச்சி அறிந்தார். கோபம் கொண்டார். சபித்தார். கல் உருக் கொண்டாள் முனிபத்தினி. உனது கால் தூசி படவே மீண்டும் பெண் உருக் கொண்டாள்.’
இவ்வாறு அகலிகை சாபம் பெற்ற கதையைக் கூறி விட்டு இராமனைத் துதிக்கிறார் முனிவர்.
𝑥𝑥𝑥𝑥
இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனி இந்த உலகுக்க எல்லாம்
உய் வண்ணம் அன்றி மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில்
மழை வண்ணத்து அண்ணலே நின்
கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன்
‘முகில் வண்ணா! இருள் நிற மேனியளாகிய அந்தத் தாடகையைக் கொன்றாயே! அப்போது உனது கைத்திறம் கண்டேன். இங்கே ஒரு கல்லைப் பெண்ணாக்கிய நின் திருவடிப் பெருமை கண்டேன். இனி இந்த உலகு உய்யும் வழி பிறந்தது. துன்பமே இல்லை.
𝑥𝑥𝑥𝑥
இவ்வண்ணம்—இந்த விதமாக; நிகழ்ந்த வண்ணம்—முன்பு நிகழ்ந்தது; இனி – இனிமேல்; இந்த உலகுக்கு எல்லாம் – இந்த உலகத்தில் உள்ள உயிர்களுக்கு எல்லாம். உய்வண்ணம் அன்றி—துன்பம் நீங்கி நலம் பெறுவதன்றி; மற்று ஓர் — வேறு ஒரு; துயர் வண்ணம்—துயர வாழ்க்கை; உண்டோ—உளதோ (இல்லை) மழை வண்ணத்து அண்ணலே—நீலமேக நிறத்தவனே . அங்கு—சித்தாசிரமத்திலே; மை வண்ணத்து–இருள் நிறத்தவனாகிய ; அரக்கி தாடகை ; போரில்—விழச் செய்த போரில் ; நின் கை வண்ணம் கண்டேன்—உனது கைத்திறம் கண்டேன்; இங்கு—இங்கே ; கால் வண்ணம் — உனது திருவடி மகிமை ; கண்டேன்
𝑥𝑥𝑥𝑥
பிறகு மூவரும் அகலிகையை அழைத்துக் கொண்டு கெளதம முனிவரின் ஆசிரமம் சென்றனர். இவர் தம் வரவு கண்ட கெளதமர் இவர்களை வரவேற்று உபசரித்தார் ; விசுவாமித்திர முனிவர் அகலிகையை ஏற்றுக் கொள்ளுமாறு கெளதம முனிவருக்குக் கூறினார். கெளதமரும் அகலிகையை ஏற்றார். பிறகு விசுவாமித்திரர் இராம லட்சுமணர்களை அழைத்துக் கொண்டு மிதிலை நகருள் புகுந்தார்.
𝑥𝑥𝑥𝑥
மையறு மலரின் நீங்கி யான்
செய் மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று
செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அத்தக் கடிநகர்
கமலச் செங்கண்
ஐயனை ‘ஒல்லை வா’ என்று
அழைப்பது போன்றது அன்றே.
"நான் செய்த தவத்தினாலே லட்சுமி தேவியானவள் தனது இருப்பிடமாகிய தாமரையை விட்டு இங்கே வந்து இருககிறாள். ஆகவே நீ விரைவில் வா விரைவில் வா;" என்று கூறி அழைப்பது போல் இருக்கிறதாம்.
XXXX
அந்தக் கடிநகர்-மிதிலை எனப்படும் அச் சிறந்த நகரமானது ; யான் செய் மாதவததின் - நான் செய்த பெருந்தவத்தினால; செய்யவள்-திருமகள் : மையறு மலரின நீங்கி-குற்ற மற்ற தனது இருப்பிடமாகிய தாமரை மலரைவிட்டு ; வந்து இருந்தாள்-இங்கே வந்து இருக்கிறாள் என்று என்று கூறி ; கமலம் செங்கண் ஐயனை-செந்தாமரை மலர் போன்ற அழகிய கண்களை உடைய இராமனை ; செழுமணி-வளம் மிகு மணிகள் கட்டப் பெற்ற; கொடிகள் என்று சொல்லப்படுகிற தன் கைகளை நீட்டி; ஒல்லை வா என்று-விரைவில் வருக என்று சொல்லி; அழைப்பது போன்றது-அழைப்பது போல் இருந்தது.
XXXX
தண்டுதல் இன்றி ஒன்றித்
::தலைத்தலை சிறந்த காதல்
உண்ட பின் கலவிப் போரில்
::ஒசிந்த மெல் மகளிரே போல்
பண்தரு கிளவியார் தம்
புலவியில் பரிந்த கோதை
வண்டொடு கிடந்து தேன்சோர்
மணி நெடுந் தெருவில் சென்றார்.
காதலர் இருவர். ஒத்த மனம். ஆண் எப்படியோ அப்படியே பெண். பின்னிய காதலர். தடுப்பார் எவரும் இலர். பின் கேட்க வேண்டுமா? கலவியில் ஈடுபடுகின்றனர். இன்பம் நுகர்கின்றனர். பன்முறை யுண்டபின் துவண்டு விடுகிறாள் பெண்.
மனம் கமழும் மாலை; தேன் கசியும் மலர், வண்டு மொய்க்கும் மலர். கலவியின்பத்துக்கு இடையூறாக இருந்த அம்மலர் மாலையைக் கழற்றி எறிகிறாள் அவள்; தேன் கசியவும், வண்டு மொய்க்கவும் துவண்டு கிடக்கிறது அம்மலர் மாலை, அவளைப் போலவே தெருவில் துவண்டு கிடக்கிறது. அந்தத் தெருவழியே மூவரும் சென்றனர்.
𝑥𝑥𝑥𝑥
தலைத் தலை சிறந்த காதல்–ஆண் பெண் ஆகிய இரு பாலரிடத்தும்; மேம்பட்ட காதலிலே ; தண்டுதல் இன்றி ஒன்றி – தடை ஏதும் இல்லாதபடி இருவரும் கலந்து ; உண்டபின் – காம இன்பத்தை இருவரும் நுகர்ந்த பின்பு ; கலவிப் போரில் ஏசித்த – அந்தக் கலவி மயக்கத்தினாலே துவண்டு விட்ட மெல் மகளிரே போல்—மெல்லிய இயல்பு கொண்ட பெண்களைப் போலவே, பண்தரு கிளவியார் – இசை போலும் இனிய மொழியினராகிய அப் பெண்கள் ; தம் புலவியில்—தங்களுடைய புணர்ச்சிக் காலத்திலே பரிந்த கோதை – கழற்றி எறிந்த மலர் மாலைகள்; வண்டொடு கிடந்து – தம்மில் மொய்த்த வண்டுகளுடனே வாடிக் கிடந்து ; தேன் சோர்—தேன் சிந்திய; மணி நெடு தெருவில் – அழகிய நீண்ட தெருக்களிலே; சென்றார் – நடந்து சென்றார்கள்.
𝑥𝑥𝑥𝑥
பொன்னின் சோதி போதின்
இன் நாற்றம் பொலிவே போல்
தென் உண் தேனில் தீஞ்சுவை
செஞ் சொல் கவி இன்பம்
கன்னிம் மாடத்து உம்பரின்
மாடே களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு
அங்கு அயல் நின்றார்.
அங்கே ஒரு கன்னிமாடம். அதன் முன்னே ஒரு நீர்த்துறை; அதிலே ஆண் அன்னங்கள் தங்கள் பெடையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன.
இந்தக் கன்னிமாடத்திலேதான் சீதா தேவி இருக்கிறாள் எப்படி இருக்கிறாள் ? பொன்போலும் ஒளி வீசிய மேனியுடனிருக்கிறாள் ; தேனின் இனிய சுவை போலிருக்கிறாள். பூவின் நறுமணம் போல் இருக்கிறாள் ; நல்லதொரு கவியின் சொல் இன்பம் போல விளங்குகிறாள்.
இந்தக் கன்னிமாடத்தின் அருகே மூவரும் நின்றனர்.
𝑥𝑥𝑥𝑥
பொன்னின் சோதி—செம் பொன்னின் பேரொளியும்; போதின இன்நாற்றம் மலரின் நறுமணமும் ; தேன் உண் தேனில் தீம்சுவை – தேன் வண்டுகள் உண்ணும் தேனில் உள்ள இனிய சுவையும் ; செம் சொல்—சிறந்த சொற்களால் ஆகிய ; கவி இன்பம்–கவிகளின் இன்பமும் (ஆகியவற்றின்) பொலிவே போல்—விளக்கமே போல ; கன்னி—கன்னியாகிய சீதா தேவி தங்குகிற; மாடத்து–கன்னியாமாடத்து உம்பரின் மாடு—மேலே ஒரு பால் ; அன்னம்—ஆண் அன்னங்கள் ; களிபேடு ஓடு ஆடும் — மகிழ்ச்சிக்குரிய பெட்டைகளுடனே குலாவுகின்ற ; முன் துறை கண்டு–நீர்த்துறை அமைந்த முன் இடத்தைக் கண்டு ; அங்குஅவ்விடத்தே ; அயல்—அம்மாளிகையின் பக்கமாக ; நின்றார் — மூவரும் நின்றனர்.
𝑥𝑥𝑥𝑥
பொன் சேர் மென் கால்
கிண்கிணி மார்பம் புனையாரம்
கொன் சேர் அல்குல் மேகலை
தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில்
காணச் சத கோடி
மின் சேவிக்க மின்னரசு
என்னும் படி நின்றாள்.
அங்கே சீதா தேவி நின்றாள், எப்படி நின்றாள் ? அழகிய கால்களிலே சதங்கை அணிந்து நின்றாள் ; மார்பிலே மணி மாலையும், மலர் மாலையும் அணிந்து நின்றாள். இடையிலே மேகலாபரணம் அணிந்து நின்றாள்.
தோழிமார் பலர் அவளைச் சூழ்ந்து நின்றனர். சீதையின் அழகைப் பாராட்டி நின்றனர்.
அது எப்படி இருந்தது ? கோடிக் கணக்கான மின்னல்கள் வணங்க மின் அரசு நிற்கிறது என்று சொல்லும் வண்ணம் நின்றாள்.
பொன் சேர் – அழகிய; மென்கால்—மென்மையான கால்களிலே; கிண்கிணி சதங்கைகளும்; மார்பம் புனை—மார்பிலே அணிந்த; ஆரம்–மணி மாலைகளும், மலர் மாலைகளும்; கொன்சேர் அல் குல்–பெருமை மிக்க இடையிலே மேகலை–மேகலா பரணமும்; தாங்கும்–அணிந்த கொடி அன்னார்—பூங்கொடி போன்ற தோழிமார் பலர்; (சூழ்ந்து) தன் சேர் கோலத்து என் ஏழில் காண—இயற்கையாகவே தனக்குள்ள அழகினை வியந்து பாராட்ட; சத கோடி மின் சேவிக்க–அளவற்ற மின்னல் கொடிகள் (தன் மேனி ஒளி கண்டு வணங்க) மின் அரசு என்னும்படி–மின்னல்களின் அரசு என்று சொல்லும்படியாக; நின்றாள்–மாடத்து மேல் நின்றாள் சீதை).
𝑥𝑥𝑥𝑥
பெருந் தேனின் சொல் பெண் இவள்
ஒப்பாள் ஒரு பெண்ணைத்
தருந்தான் என்றால் நான்முகன்
இன்னும் தரல் ஆமோ
அருந்தா அந்தத் தேவர்
இரந்தால் அமுது என்னும்
மருந்தே அல்லாது என் இனி
நல்கும் மணி ஆழி.
திருப்பாற்கடலிலே தோன்றிய திருமகள் இங்கே இருக்கிறாள். அங்ஙனம் இருக்க இவள் போலும் பெண் ஒருத்தியைத் தருமாறு அந்தத் திருப்பாற் கடலிடம் கேட்டால் அது அளிக்குமோ ? அளியாது. அமுதம் தான் அளிக்கும். சரி. படைத்தல் வல்ல பிரமதேவனிடம் சென்று இவள் போலும் பெண் ஒருத்தியைப் படைத்துத் தருமாறு இரந்தால் அவனால் இயலுமோ ? இயலாது ஏன் ? அவள் தான் இங்கு இருக்கிறாளே !
𝑥𝑥𝑥𝑥
மணி ஆழி — இரத்தினங்கள் கொண்ட திருபாற் கடல் ; அருந்த அந்த தேவர் – அமுதத்தையன்றி வேறு எதையும் அருந்தாத அந்த தேவர்கள்; பெரிதேன் இன்சொல்—பெருமை மிக்க தேன் போலும் இனிய சொல் உடைய ; பெண் இவள் ஒப்பாள் – பெண்ணாகிய இவளை ஒத்த சிறப்புடைய; ஒரு பெண்ணை — மற்றொரு பெண்ணை (அடைய விரும்பித் தன்னிடம் வந்து) இரந்தால் — யாசித்தால் ; தரல் ஆமோ — இப்போது தரல் இயலுமோ ? அமுது என்னும்—தேவாமிர்தம் என்று சொல்லப்படுகிற ; மருந்தே அல்லாது – சாவா மருந்தை அன்றி என் இனி நல்கும் — வேறு எதனைத் தர வல்லது ; இன்னும் – மேலும் ; நான்முகன் தான் தரும் என்றால் — பிரம தேவனே படைத்துத் தருவான் என்றாலும் ; தால் ஆமோ – அவனாலும் அவ்வாறு படைத்துத் தர முடியுமோ — (முடியாது).
𝑥𝑥𝑥𝑥
கொல்லும் வேலும் கூற்றமும்
என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் என்ன
மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று
அது குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருகப்
பெண் கனி நின்றாள்.
பெண் கனி நின்றாள் எப்படி நின்றாள் ? குன்றும், சுவரும், கல்லும் புல்லும் கண்டு உருக நின்றாள். மதர்க்கும் விழியாள் அவன். அந்த விழியிடத்தே வேல் தோற்கும்; கூற்றுவனும் தோற்பான், வேலும், கூற்றும் சென்று கொல்லும். ஆனால் இவளது விழிகளே இருந்த இடத்திலிருந்தே கொல்லும்.
அவள் நின்ற நிலையைச் சொற்களால் விவரிக்க இயலாது.
𝑥𝑥𝑥𝑥
கொல்லும் வேலும் – கொல்கின்ற வேலாயுதமும் ; கூற்றமும் — யமனும் ; இவை எல்லாம் — ஆகிய இவை எல்லாவற்றையும் ; வெல்லும் வெல்லும் என்ன – வென்றே தீரும் என்று சொல்லும் படியான ; மதர்க்கும் விழி கொண்டாள் — ஆழ்ந்து அகன்று பரந்த விழியுடையவளும்; பெண் கனி — பென்மை நலன் யாவும் கனியப் பெற்றவளும் (ஆன சீதை); குன்றும்—தொலைவில் உள்ள மலையும்; சுவரும்—அணித்தே மாளிகையில் உள்ள சுவரும் ; திண் கல்லும் — வலிய கருங்கல்லும் புல்லும் — மெல்லிய புல்லும்; கண்டு உருக — அவள் அழகையும், நிற்கும் நிலையின் சிறப்பையும் கண்டு நெகிழ; நின்றாள்—ஓரிடத்தில் வந்து நின்றாள் ; அது—அவள் நின்ற நிலையின் சிறப்பு ; சொல்லும் தன்மைத்து அன்று — சொற்களால் விவரிக்க இயலாதது.
𝑥𝑥𝑥𝑥
எண் அரும் நலத்தினாள்
இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி
ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது
உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்.
அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்.
𝑥𝑥𝑥𝑥
எண் அரும் நலத்தினாள் — நினைத்தற்கும் அரிய அழகுடைய சீதை; இனையள் நின்றுழி — இத்தன்மையளாய் நின்ற பொழுது; கண்ணோடு கண் இணை கவ்வி – ஒருவர் கண் இணையோடு இன்னொருவர் கண் இணை கவ்வி; ஒன்றை ஒன்று உண்ணவும்—ஒன்றையொன்று கவர்ந்து அநுபவிக்கவும்; உணர்வும் – இருவர் உணர்ச்சியும்; நிலைபெறாது — ஒரு நிலையில் இராது; ஒன்றிட—ஒன்றையொன்று கூடி ஒன்றாக; அண்ணலும் நோக்கினான்—இராமனும் சீதையைக் கண்டான்; அவளும் நோக்கினாள்—சீதையும் ராமனைப் பார்த்தாள்.
𝑥𝑥𝑥𝑥
வள்ளல் மணத்தை
மகிழ்ந்தனன் என்றால்
கொள் என முன்பு
கொடுப்பதை அல்லால்
வெள்ளம் அணைத்தவன்
வில்லை எடுத்து இப்
பிள்ளை முன் இட்டது
பேதைமை என்பார்.
ஜனக மன்னன் தன் மகளாகிய சீதையை இராமனுக்கு மணம் முடிக்க விரும்பினால் என்ன செய்திருக்க வேண்டும். “இந்தா! பெற்றுக்கொள்” என்று கூறித்தானே முன் வந்து தாரை வார்த்துக் கொடுத்திருக்க வேண்டும். அங்ஙனம் இன்றி இந்தச் சிவதனுசைக் கொண்டுவந்து நாணேற்றுமாறு இச்சிறு பிள்ளை முன் வைபபது அறிவீனம்.
இவ்வாறு மிதிலை வாழ் மகளிர் சிலர் பேசிக்கொண்டனராம்.
𝑥𝑥𝑥𝑥
வள்ளல்—கொடை வள்ளலாகிய ஜனகன்; மணத்தை—சீதைக்குத் திருமணம் செய்து காண; மகிழ்ந்தனன்—விரும்பி மகிழ்ந்தான் ; என்றால் — என்று சொன்னால் ; கொள்—இந்தா பெற்றுக்கொள் என—என்று ; முன்தானே முன் வந்து; கொடுப்பதை அல்லால்—தாரை வார்த்துக் கொடுப்பது அன்றி ; வெள்ளம் அணைத்தவன்—வெள்ளம் அணைத்த சிவனுடைய ; வில்லை எடுத்து—வில்லைக்கொண்டு வந்து; இப்பிள்ளை முன் இட்டது – நாணேற்றுமாறு இச்சிறு பிள்ளை முன் வைத்தது ; பேதைமை — அறிவினம் ; என்பார் — என்று பேசிக் கொள்வார்.
𝑥𝑥𝑥𝑥
‘ஞான முனிக் கொரு
நாண் இலை’ என்பார்
‘கோன் இவனில்
கொடி யோர் இலை’ என்பார்
‘மானவன் இச்சிலை
கால் வளையானேல்
பீன தனத்தவள்
பேறிலள்’ என்பார்
“மாபெரும் ஞானியாகிய விசுவாமித்திரனுக்குச் சிறிதும் வெட்கமில்லை” என்பார் சிலர்.
“நமது அரசன் ஜனகனைப் போல கொடிய மனம் கொண்டவர் வேறு எவருமிலர்” என்பார் மற்றும் சிலர்.
“இந்த நம்பி இந்த வில்லை வளைக்காவிட்டால் நம் சீதைக்கு அதிர்ஷ்டம் இல்லை” என்பார் வேறு சிலர்.
xxxx
ஞானம் முனிக்கு – ஞானமுடைய இந்த விசுவாமித்திர முனிவனுக்கு, ஒரு நாண் இலை–நாணம் சிறிதும் இல்லை; என்பார்– என்று பேசுவார் சிலர். கோன் இவனில் – அரசர்களிலே நம் ஜனகனைப் போன்ற; கொடியோர் இலை—கொடிய மனமுடையவன் எவனுமில்லை; என்பார்—என்று பேசுவார். மானவன்– பெருமை மிக்க இந்த நம்பி; இச்சிலை கால்வளையானேல்– இந்த வில்லைக் காலூன்றி வளைக்காவிடில்; பீனம் தனத்தவள்–பருத்த முலையுடைய நம் சீதை; பேறு இவள்–அதிர்ஷ்டம் இல்லாதவள். இவனைத் திருமணம் செய்து கொள்ளக் கொடுத்து வைக்காதவள்; என்பார்—என்று பேசிக்கொள்வார்.
xxxx
தோகையர் இன்னன
சொல்லிட நல்லோர்
ஒகை விளம் பட
உம்பர் உவப்ப
மாகம் அடங்கலும்
மால் விடையும் பொன்
நாகமும் நாகமும்
நாண நடந்தான்
பெண்கள் எல்லாரும் இப்படித் தங்கள் மனம் போனவாறு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இராமன் என்ன செய்தான் ? மேருமலையும், ஆண் யானையும், ரிஷபமும் சிங்கமும் நாணமடையும் படியாக நடந்து வில் இருந்த இடம் சென்றான். முனிவர் ஆசி கூறினர். தேவர்கள் மகிழ்ந்தார்கள்.
xxxx
தோகையர்—மயில்போலும் சாயல் கொண்ட பெண்கள்; இன்னன சொல்லிட– இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்க; (எழுந்து நின்ற இராமன்) நல்லோர் — சாதுக்களாகிய முனிவர்கள்; ஓகை விளம்பிட—மகிழ்ச்சியால் ஆசி மொழிகள் கூறவும்; உம்பர் உவப்ப – தேவர்கள் மகிழவும்; மாகம் மடங்கலும் —மிக்க சிறப்புடைய ஆண் சிங்கமும். மால் விடையும் – பெருமை மிக்க ரிஷபமும்; பொன் நாகமும் — பொன் மலையாகிய மேருவும்; நாகமும் – யானையும்; நாண — தன் நடை தோற்றது கண்டு நாண நடந்தான்—வில் அருகே நடந்து சென்றான்.
xxxx
தடுத்து இமையால்
இருந்தவர் தாளின்
மடுத்தும் நாண் நுதி
வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும்
அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டார்
இற்றது கேட்டார்.
இந்த இளங்குமரன் என்ன செய்வானோ என்ற வியப்புடன் கண் இமையாமல் இராமனையே நோக்கிய வண்ணம் இருந்தார்கள். அந்த வில்லைத் தன் கால் விரல் நுனி கொண்டு மிதித்ததும் கையில் வாங்கியதும் நாண் ஏற்றியதும் கண்டிலர். ஏன் ? அவ்வளவு விரைவில் எல்லாம் நடந்தன. வில்லைக் கையில் ஏந்தியது ஒன்றே கண்டார். அடுத்த நொடியில் ‘படார்’ என்ற சப்தம் கேட்டனர். வில் ஒடிந்தது.
xxxx
இமையாமல் தடுத்து - கண் இமைக்காமல் தடுத்து; இருந்தவர்-விழித்த கண் விழித்தபடியே பார்த்துக் கொண்டு இருந்தவர் (சபையோர்) தாளில் மடுத்ததும்--இராமன் தன் கால் கட்டை விரலால் மிதித்து எழச் செய்ததும்; நாண் நுதி வைத்ததும் - நாணேற்றியதையும்; கடுப்பினில் - அச்செயல்கள் விரைவாக நடந்ததினால், நோக்கார்- காணார்; அறிந்திலர்-அறியவும் இலர்; கையால் எடுத்தது கண்டார்; கைகளால் எடுத்தது ஒன்றே கண்டார்; இற்றது கேட்டார் - ஒடிந்த சப்தம் கேட்டனர்.
xxxx
இராமன் அந்த சிவ தனுசை நாணேற்றி விட்டான். வில் முறிந்தது என்ற செய்தி கேட்டு மிதிலை வாழ் மக்கள் மட்டிலா மகிழ்ச்சியில் மூழ்கினார்கள். சீதா கல்யாணமும் உறுதி ஆயிற்று.
xxxx
தயரதன் புதல்வன் என்பார்
தாமரைக் கண்ணண் என்பார்
புயல் அவன் மேனி என்பார்
பூவையும் பொருவும் என்பார்
மயல் உடைத்து உலகம் என்பார்
மானுடன் அல்லன் என்பார்
கயல் பொரு கடலுள் வைகும்
கடவுளே காணும் என்பார்
இவன் தசரத சக்கரவர்த்தி திருமகன். அதனாலேதான் இவ்வளவு லகுவாக இந்த வில்லை ஒடித்தான் என்பர் சிலர், இவன் வடிவழகு காண்பீர்! இவன் சாதாரண மனிதன் அல்லன். செந்தாமரைக் கண்ணனும் காயாம்பூ மேனியனும் ஆகிய கார்மேக வண்ணன், பாற்கடலில் துயிலும் பரந்தாமன் இவன். இவனை மனிதன் என்று சொல்லும் உலகம் அறியாமை உடையது என்பர் மற்றும் சிலர்.
𝑥𝑥𝑥𝑥
தயாதன் புதல்வன் என்பார் — தசரத சக்கரவர்த்தியின் திருமகன் என்பார் சிலர் , தாமரைக் கண்ணன் என்பார் – செந்தாமரைக் கண்ணனாகிய திருமால் போலும் என்பார் வேறு சிலர் புயல் அவன் மேனி என்பார்—அக்குமரனுடைய திருமேனி மேகமே என்பார் இன்னும் சிலர். பூவை பொருவும் என்பார்―அவன் திருமேனிக்குக் காயாம் பூவே பொருந்தும் என்பார் மற்றும் சிலர். மானுடன் அல்லன் என்பார் — இவன் மனிதன் அல்லன் என்பார் வேறு சிலர். (பின்ன எவன் எனில்) கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் — கயல் மீன்கள் ஒன்றுடன் மற்றொன்று பொருதற்கு இடமான திருப்பாற் கடலிலே பள்ளி கொண்ட பரந்தாமனே என்பார். உலகம் மயல் உடைத்து என்பார் — இவன் மனிதன் என்று கூறும் இவ்வுலகம் அறியாமை உடையது என்பார்.
𝑥𝑥𝑥𝑥
நம்பியைக் காண நங்கைக்கு
ஆயிரம் நயனம் வேண்டும்
கொம்பினைக் காணுந் தோறும்
குரிசிற்கும் அன்ன தேயால்
தம்பியைக் காண்மின் என்பார்
தவமுடைத்து உலகம் என்பார்
இம்பர் இந்நகரில் தந்த முனிவனே
இறைஞ்சும் என்பார்.
“புருஷோத்தமனாகிய அந்த இராமனைக் கண்டுகளிக்க ஆயிரம் கண்கள் வேண்டும் சீதைக்கு” என்றனர் சிலர்.
“சீதைதான் என்ன ? அழகில் குறைந்தவளா ? அவளைக் கண்டுகளிக்க அவனுக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும்” என்றனர் மற்றும் சிலர்.
“அஃதிருக்கட்டும் அவன் தம்பியைப் பாருங்கள். அவனும் அழகில் குறைந்தவனா ?” என்றனர் வேறு சிலர்.
“இவர்களைப் பெற்ற இந்த உலகம் பெரிதும் தவம் செய்திருக்க வேண்டும்” என்றனர் இன்னும் சிலர்.
“இவர்களை இந்த நகருக்கு அழைந்து வந்த முனிவனை வணங்குங்கள்” என்றனர் மற்றும் சிலர்..
𝑥𝑥𝑥𝑥
நம்பியை – புகுஷோத்தமனான; இவனை காண—முழுவதும் காண்பதற்கு ; தங்கைக்கு — நம் சீதைக்கு; ஆயிரம் நயனம் வேண்டும் — ஆயிரம் கண்கள் வேண்டும் (என்பார் சிலர்) கொம்பினை — பூங்கொடி போன்ற சீதையை ; காணும் தோறும் — பார்க்கும் நேரம் ஒவ்வொன்றிலும் ; குரிசிற்கும் — அரசிளங்குமரனுக்கும் அன்னதே—அவ்வாறே ; ஆயிரம் கண்கள் வேண்டும் ; (இது கிடக்கட்டும்) தம்பியைக் காண்மின் — இராமனுடைய தம்பியைப் பாருங்கள் அவனும் இவனில் குறைந்தவன் அல்லன் என்பார் ; உலகம் தவம் உடைத்து என்பார் — இவர்களைப் பெறுதற்கு இவ்வுலகம் நல்ல தவம் செய்துளது என்பார், (இவ்வளவுக்கும் மேலாக), இம்பர் — இவ்வுலகத்திலே ; இந்நகரில் – இந்த மிதிலை மாநகரிலே ; தந்த முனிவனை — இவர்களை அழைத்து வத்த விசுவாமித்திர முனிவனை; இறைஞ்சும் என்பார் — வணங்குங்கள் என்பார்.
𝑥𝑥𝑥𝑥
மானினன் வருவ போன்றும்
மயில் இனம் திரிவ போன்றும்
மீனினம் மிளிர்வ போன்றும்
மின் இனம் மிடைவ போன்றும்
தேன் இனம் சிலம்பி ஆர்ப்பச்
சிலம்பினம் புலம்ப எங்கும்
பூனனை கூந்தல் மாதர் ‘பொம்’
எனப் புகுந்து மொய்த்தார்.
தேர் மீது அமர்த்து அந்த மிதிலை மாநகரின் வீதி வழியே உலா வருகிறான் இராமன். அவனைக் காணும் பொருட்டு அந்த நகரத்துப் பெண்மணிகள் ஒருவரை மற்றொருவர் முட்டித் தள்ளிக்கொண்டு முன்வரிசையில் நெருங்கினார்கள் எப்படி ? தலையிலே மலர் கூடியதால் நனைத்த கூந்தலுடன். காலிலே அணிந்த சிலம்பு கலீர் கலீர் என்று ஒலிக்க மலரிலே மொய்த்த வண்டுகள் ரீங்காரம் செய்ய, மான்கள் கூட்டமாக வருவன போன்றும், மயில்கள் கூட்டமாகத் திரிவன போன்றும், மீன்கள் கூட்டமாக நீரிலே நீந்துவன போன்றும், மின்னல் கொடிகள் பளிச்சிடுவன போன்றும் ஒருவரை ஒருவர் நெருக்கித் தள்ளிக் கொண்டு வந்தார்கள்; கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.
𝑥𝑥𝑥𝑥
பூ நனை—பூச் சூடியதால் நனைந்த ; கூந்தல்–கூந்தலை உடைய; மாதர்—பெண் மணிகள்; மானினம் வருவபோன்றும்—மான் கூட்டங்கள் வருவன போலும்; மயில் இனம் திரிவ போன்றும்–மயில் கூட்டங்கள் திரிவன போலும்; மீன் இனம் மிளிர்வ போன்றும்—மீன்கள் கூட்டம் கூட்டமாக ஒளி வீசி நீரில் நீந்துவன போலவும்; மின் இனம் மிடைவ போன்றும்—மின்னல் கொடிகள் பளிச்சிடுவன போலவும்; தேன் இனம் கிலம்பி ஆர்ப்ப—தேன் வண்டுகள் ரீங்காரம் செய்து ஆர்ப்பரிக்க; சிலம்பினம் புலம்ப—காலிலே அணிந்த சிலம்பும். மணிகளும் ‘கலீர் கலீர்’ என்று ஒலிக்க; எங்கும்—எங்கும்; பொம் என—கூட்டம் கூட்டமாக; புகுந்து—ஒருவரை ஒருவர் முட்டிப் புகுந்து; மொய்த்தார்—இராமனைக் க௱ண நெருங்கினர்.
𝑥𝑥𝑥𝑥
விரிந்து வீழ் கூந்தல் பாரார்
மேகலை அற்ற நோக்கார்
சரித்த பூந்துகில்கள் தாங்கார்
இடை தடுமாறத் தாழார்
நெருங்கினர் நெருங்கிப் புக்கு
நீங்குமின் நீங்குமின் என்று என்று
அருங்கலம் அனைய மாதர்
தேனுகர் அளியின் மொய்த்தார்.
தெருவிலே தேர்மீது அமர்ந்து வருகிறான் என்ற செய்தி கேட்டார்கள் பெண்கள், அவ்வளவுதான். ஓடோடி வந்தார்கள், அப்படி ஓடி வந்த வேகத்தில் கூந்தல் அவிழ்ந்து விட்டது, ஆடை குலைந்து சரிந்து விட்டது. மேகலாபரணங்கள் அறுந்து சிதைந்து விட்டன, இவற்றைச் சிறிதும் பொருட்படுத்தினார் அல்லர். ‘விலகுங்கள் விலகுங்கள்’ என்று சொல்லி ஒருவரை ஒருவர் முட்டித் தள்ளிக்கொண்டு வந்து தேரைச் சூழ்ந்து கொண்டனர், அது எப்படியிருந்தது. தேன் அருந்தும் பொருட்டு வண்டுகள் ‘பொம்’ என மொய்ப்பனபோல் இருந்ததாம்.
𝑥𝑥𝑥𝑥
அரும் கலம் அனைய மாதர்—அருமையான அணிகலன்கள் போன்ற பெண்கள் ; (பரபரப்பினால்) விரிந்து வீழ் கூந்தல்—அவிழ்ந்து வீழ்ந்த தங்கள் கூந்தலை; பாரார் பாராமலும்; மேகலை அற்ற நோக்கார்—மேகலா பரணம் அறுந்து சிதறிப் போவதைப் பொருட்படுத்தாமலும்; சரிந்த—இடையினின்றும் நழுவிய; பூந்துகில்கள்—பூம்
பட்டாடைகளை; தாங்கார்—தாங்கிப் பிடித்துக் கொள்ளாமலும்; இடை தடுமாற—மெல்லிய இடைவருந்தவும்; தாழார்—அதன் பொருட்டு காலம் தாழ்த்தாமலும்; நெருங்கினர்—மிகவும் நெருங்கினவர்களாய்; நீங்குமின் நீங்குமின் என்று—விலகுங்கள். விலகுங்கள் என்று சொல்லிக்கொண்டு; நெருங்கிப்புக்கு— இராமன் வரும் தேரை அணுகி; தேன் நுகர் அளிமின்—தேன் உண்பதற்கு கூடும் வண்டுகளே போல்; மொய்த்தார்—மொய்த்துக் கொண்டார்கள்.
𝑥𝑥𝑥𝑥
தோ கண்டார் தோளே கண்டார்
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்.
இராமனின் தோள் அழகு கண்டவர்கள் அதிலேயே ஈடுபட்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவனது திருவடிகளைக் கண்டவர்கள் வைத்த கண் வைத்தபடி அதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனது அழகிய நீண்ட கை கண்டார் கையையே பார்த்து நின்றனர். ஆக இராமனின் திருவுரு முழுதுங் கண்டவர் எவருமிலர். அது எப்படியிருந்தது? பரம் பொருளை ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு கூறாகப் பார்த்தவர் அதுவே முற்ற முடிந்த ஒன்று என்று வாதிப்பது போல் இருந்தது.
𝑥𝑥𝑥𝑥
தோள் கண்டார்—இராமனது தோள் அழகு சுண்டவர்கள்; தோளே கண்டார்— அதன் அழகில் ஈடுபட்டவர்களாய் அதையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்; தொடுகழல்—வீரக் கழல் அணிந்த; கமலம் அன்ன—தாமரை மலரை ஒத்த; தாள் கண்டார்—திருவடிகளைக் கண்டவர்கள்; தாளே கண்டார்—அத்திருவடிகளையே பார்த்து நின்றார்கள்; தடக்கை கண்டாரும்—பெரிய திருக்கரங்களின் அழகைக் கண்டவரும்; அஃதே—அவ்வாறே; வாள் கொண்ட கண்ணார்—வாளினை ஒத்த கூறிய கண் கொண்ட மகளிர்; எவரே—எவர்தான்; வடிவினை முடியக் கண்டார் —இராமபிரானின் திருமேனி முழுவதும் கண்டார்? (அங்ஙனம் அப்பெருமானின் திருவுருவம் முழுவதும் காணாமல் ஒவ்வொரு பகுதியை மட்டும் கண்டவர்) ஊழ் கண்ட சமயத்து—பல்வேறு வகையான சமயங்களில்; அன்னான் உருவு கண்டாரை—இறைவனின் ஒரு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு இதுவே முற்ற முடிந்த உரு என்று வாதிடுவோரை ஒத்தார்—ஒப்ப இருந்தனர்.
𝑥𝑥𝑥𝑥
தோரண நடுவாரும்
தூணுறை இடுவாரும்
பூரண குடம் எங்கும்
புனை துகில் புனைவாரும்
காரணி நெடு மாடம்
கதிர் மணி அணிவாரும்
ஆரண மறை வாணர்க்கு
அமுது இனிது அடுவாரும்.
அயோத்திக்குத் தூதுவரை அனுப்பினான் ஜனகன். இராமன் வில் ஒடித்ததையும் சீதையைத் திருமணம் செய்து கொடுக்கத் தான் சித்தமாய் இருப்பதையும் தெரிவித்தான். தசரத மன்னனை அழைத்தான். அவ்வாறே தூதுவர் சென்றனர். தசரத மன்னனுக்கு ஜனசன் கூறியவற்றைத் தெரிவித்தனர். சேட்டான் தசரத மன்னன். மகிழ்ந்தான். மந்திரி பரிவாரங்களுடன் மிதிலைக்குப் புறப்பட்டான்.
மிதிலை மாதகர் திருமண விழாக்கோலம் பூண்டது.
𝑥𝑥𝑥𝑥
மிதிலை வாழ் மக்கள் நகர் எங்கும் தோரண கம்பங்களை நட்டார்கள். தூண்களை உறையிட்டு அலங்கரித்தார்கள். எங்கும் பூரணகும்பம் வைத்தார்கள், சித்திரச் சீலைகளால் அணிசெய்தார்கள். வீடுகளை மணிகளால் அழகு செய்தார்கள். அந்தணர்க்கு அளிக்கும் பொருட்டு இன்சுவை அமுது தயாரித்தார்கள்.
𝑥𝑥𝑥𝑥
தோரணம் நடுவாரும்—தோரண கம்பங்களை அவற்றிற்குரிய இடங்களிலே நடுபவரும்; தூண் உறை இடுவாரும்—பட்டினால் ஆன உறைகளைத் தூண்களுக்கு இடுவாரும்; எங்கும்—எவ்விடத்தும்; பூரண குடம்—பூரண கும்பங்களாலும்; புனை துகில்—சித்திரச்சீலைகளாலும்; புனைவாரும்—அழகு செய்பவர்களும்; கார் அணி நெடுமாடம்—மேகங்கள் தங்குவதால் அழகு தரும் நீண்ட உயர்ந்த மாளிகைகளிலே; கதிர் மணி அணிவாரும்—ஒளிமிக்க மணிகளால் அழகு செய்வாரும்; ஆரணம் மறைவாணர்க்கு பல சாகைகள் கொண்ட வேத நெறிவாழ் அந்தணர்க்கு (அளித்தற் பொருட்டு) இனிது அழுது அடுவாரும்—இனிய உணவு சமைப்போரும்.
𝑥𝑥𝑥𝑥
அன்ன மெல் நடையாரும்
மழு விடை அனையாரும்
கன்னி நல் நகர் வாழை
கமுகொடு நடுவாரும்
பன்னரு நிரை முத்தம்
பரியன தெரிவாரும்
பொன் அணி அணிவாரும்
மணி அணி புனைவாரும்
அன்னம் போன்ற நடை கொண்ட இளம் பெண்களும்; காளை போன்ற இளம் பிள்ளைகளும், வாழைகமுகு இவற்றைக் கொண்டு வந்து அவற்றிற்குரிய இடங்களில் நட்டார்கள்; பருமனான முத்து ஆரங்களைத் தெரிந்து எடுத்து அணிந்து கொண்டார்கள்; பொன் ஆபரணங்களாலும், இரத்தின ஆபரணங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள்.
𝑥𝑥𝑥𝑥
கன்னி நல் நகர்—இளமை நலம் மிக்க அந்த நகரத்திலே; அன்னம் மெல் நடையாரும்—அன்னம் போன்ற மெல் நடையுடைய இளம் பெண்களும்; மழவிடை அனை யாரும்—இளங்காளைகள் போன்ற இளைஞர்களும்; வாழை—வாழை மரங்களை; கமுகொடு – பாக்கு மரங்களோடு—கொண்டு வந்து நடுபவராயிருத்தனர்; பன்ன அரு–விலை மதிக்க முடியாத; நிரை முத்தம்—வரிசையான முத்து வடங்சளிலே; பரியன தெரிவாரும்—பருமனானவற்றை (அணிந்து கொள்ளம் பொருட்டு) தெரிந்து எடுப்பவராயிருந்தனர்; பொன் ஆணி அணிவாரும். பொன்னாலாகிய அணிகலன்களால் தங்களை அலங்கரித்துக் கொள்பவராயிருந்தனர்; மணி அணி புனைவாரும்–மற்றும் சிலர் இரத்தின ஆபரணங்கள் அணிந்து கொள்பவராய் இருந்தனர்.
𝑥𝑥𝑥𝑥
சந்தனம் அகில் நாறும்
சாந்தொடு தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும்
செழுமலர் சொரிவாரும்
இந்திர தனு நாணும்
எரிமணி நிறைமாடத்து
அந்தமில் விலையாரக்
கோவைகள் அணிவாரும்
வாசனை மிக்க சந்தனக் குழம்பு அகில் குழம்பு இவற்றையெல்லாம் தெரு வெங்கும் தெளித்துக் கொண்டு திரிந்தார்கள். மலர்களைக் கொண்டு வந்து குவித்தார்கள். வானவில்லைத் தோற்கடிக்கும் வகையில் பல நிறங் கொண்ட மணிகளால் தங்கள் மாளிகைகளின் மேல் மாடங்களை அணி செய்தார்கள்.
𝑥𝑥𝑥𝑥
நாறும்—நறுமணம் வீசும்; சந்தனம்—சந்தனக் குழம்பை; அகில் சாந்தொடு—அகில் கட்டை தேய்த்த குழம்போடு; தெரு எங்கும்—தெருக்களில் எங்கும், சிந்தினர் திரிவாரும்—தெளித்துக் கொண்டு செல்பவர்களும்; செழுமலர்—சிறந்த புதிய மலர்களை; சொரிவாரும்—கொண்டு வந்து அங்காங்கே குவிப்பாரும்; இந்திர தனி—வானவில்; நாணும்—வெட்கங்கொள்ளத்தக்க; எரிமணி—ஒளிவீசும் பல நிற மணிகள் பதித்த; திறை மாடத்து—வரிசையான மேல் மாடங்களிலே; அந்தம் இல் விலை—அளவிட முடியாத மதிப்புடைய; ஆரம் கோவைகள்; அணிவாரும்—முத்து மாலைக் கொத்துக்களைத் தொங்க விடுவாரும்.
𝑥𝑥𝑥𝑥
தளம் கிளர் மணி காலத்
தவழ் சுடர் உமிழ் தீபம்
இளம் குளிர் முளையார் நற்
பாலிகை இனம் எங்கும்
விளிம்பு பொன் ஒளி நாற
வெயிலொடு நிலவீனும்
பளிங் குடை உயர் திண்ணைப்
பத்தியின் வைப்பாரும்
அந்த நகரத்தின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை அணி செய்தார்கள். அவர்களுடைய வீட்டு மாடிகளிலே பதிக்கப் பெற்ற இரத்தினக் கற்கள் ஒளி வீசின, சுவர் ஒரங்களிலே பொன் வேலை செய்யப்பட்டிருந்ததாலே அது ஒளி வீசியது. திண்ணைகளிலே வரிசையாக தீபம் ஏற்றி வைத்தார்கள். பாலிகைகளை வரிசையாக வைத்தார்கள்.
𝑥𝑥𝑥𝑥
எங்கும்—நகரின் எல்லாப் பகுதிகளிலும்; தளம் கிளர்—மேல் மாடங்களில் பதிக்கப் பெற்ற; மணிகால—இரத்தினங்கள் ஒளி வீச; விளிம்பு—ஓரங்களில்; பொன் ஒளி நாற—பொன் வேலைப்பாடுகள் ஒளி வீசுதலால்; வெயிலொடு— வெயில் போன்ற ஒளியை ஈனும்—வெளியிடுகின்ற; உயர் திண்னை—உயர்ந்த திண்ணைகளிலே; தவழ் சுடர் உமிழ் தீபம்–பரந்த ஒளிதரும் விளக்குகளையும் இளம் குளிர் முளைஆர்–இளமை மிக்க குளுமையான மூளை பொருந்திய; நல் பாலிகை இனம்—நல்ல பாலிகை வகைகளையும்; பத்தியின் வைப்பாரும் –வரிசையாக வைத்தார்கள்.
𝑥𝑥𝑥𝑥
பண்டியில் நிறை வாசப்
பனி மலர் கொணர் வாரும்
தண்டலை இலையோடும்
கனி பல தருவாரும்
குண்டலம் ஒளி வீசக்
குரவைகள் புரிவாரும்
உண்டை கொள் மத வேழத்து
ஓடைகள் அணி வாரும்.
குளிர்ந்த நறுமணம் வீசும் மலர்களை வண்டிகளிலே கொண்டு வந்தார்கள். தோட்டங்களிலிருந்து வாழை இலை, மா இலை, வெற்றிலை முதலிய இலைகளைக் கொண்டு வந்தார்கள்; பழங்கள் கொண்டு வந்தார்கள்.
தாங்கள் அணிந்துள்ள குண்டலங்கள் ஒளி வீசச் குரவைக் கூத்து ஆடினர் சிலர், யானைகளுக்கு நெற்றிப் பட்டம் சூட்டினர் மற்றும் சிலர்.
𝑥𝑥𝑥𝑥
பண்டியில் – வண்டிகளில்; நிறை – நிறைந்த; வாசம் — வாசனை வீசுகின்ற; பனி மலர் — குளிர்ந்த மலர்களை; கொணர்வாரும்—கொண்டு வருபவர்களும்; தண்டலை – தோட்டங்களிலிருந்து இலையோடும்—வாழை இலை, மாஇலை, வெற்றிலை முதலியவற்றையும் ; கனிபல—பல்வகைப் பழங்களையும்; தருவாரும்—கொண்டுவந்து கொடுப்பவரும்; குண்டலம் ஓளி வீச—தம் காதில் அணிந்த குண்டலங்கள் ஓளி வீச; குரவைகள் புரிவாரும்—குரவைக் கூத்து ஆடுபவர்களும்; உண்டை கொள்—சோற்று உருண்டையை உட்கொள்ளுகின்ற; மதம் வேழத்து—மத யானைகளுக்கு; ஓடைகள் அணிவாரும்—நெற்றிப் பட்டம் சூட்டுவாரும்.
𝑥𝑥𝑥𝑥
கலவைகள் புனைவாரும்
கலை நல தெரிவாரும்
மலர் குழல் மலை வாரும்
மதி முகம் அணி ஆடித்
திலதம் முன் இடுவாரும்
சிகழிகை அணிவாரும்
இலவு இதழ் பொலி கோலம்
எழில் பெற இடுவாரும்.
கலவைச் சந்தனம் பூசிக் கொண்டார்கள், நல்ல ஆடைகளைத் தேர்ந்து எடுத்து உடுத்தினார்கள். கூந்தலிலே பூ சூடிக் கொண்டார்கள். கண்ணாடி முன் நின்று தங்கள் முகத்திலே பொட்டு வைத்துக் கொண்டார்கள். தலை முடியைப் பலவாறு முடிந்து அழகு செய்து கொண்டார்கள். இலவம் பூப் போன்ற உதட்டிலே செந்நிறக் குழம்பு பூசிக்கொண்டார்கள்.
𝑥𝑥𝑥𝑥
கலவைகள் புனைவாரும் – சந்தனக் கலவைகள் முதலியவற்றைப் பூசிக் கொள்பவரும்; கலை நல்ல தெரிவாரும்—நல்ல ஆடைகளைத் தேர்ந்தெடுத்து உடுப்பவரும்; மலர் குழல் மலைவாரும்—கூந்தலிலே மலர் சூடுவாரும்; அணி ஆடி முன் அழகிய கண்ணாடியின் முன்னே நின்று; மதிமுகம்—முழு மதி போன்ற தங்கள் முகத்தில்; தில தம் இடுவாரும்—பொட்டு இட்டுக் கொள்பவரும்; சிகழிகை அணி வாரும் — தலை முடியைப் பலவாறு முடிந்து அழகு செய்து கொள்பவரும்; இலவு இதழ் – இலவம் பூ போன்ற உதடுகளிலே; பொலி கோலம் இடுவாரும்—அழகிய செந்நிறம் பூசுவோரும்.
𝑥𝑥𝑥𝑥
மன்னவர் வருவாரும்
மறையவர் நிறைவாரும்
இன்னிசை மணி யாழின்
இசை மது நுகர்வாரும்
சென்னியர் திரிவாரும்
விறலியர் செறிவாரும்
கன்னலின் மணவேலைக்
கடிகைகள் தெரிவாரும்.
திருமணத்தைச் சிறப்பிக்கும் பொருட்டு மன்னர் பலர் வந்து குழுமினர்; மறை வல்லோர் பலர் வருவாராயினர்; இசை வல்லாரும், யாழ்வல்லாரும் இவர் தம் இசை மது பருகும் ரசிகரும் வந்து கூடுவோராயினர். பாணர் பலர் வந்தனர். விறலியர் பலரும் வந்து கூடினர், நாழிகை வட்டத்தைப் பார்த்துத் திருமண நேரத்தை அறிவிப்போரும் வந்து சோந்தனர்.
𝑥𝑥𝑥𝑥
மன்னவர் வருவாரும் – திருமண விழாவினைச் சிறப்பிக்கும். பொருட்டு அரசர் பலரும் வருவாராயினர்; மறையவர் நிறைவாரும் – மறை வல்லோர் பலர் வந்து நிறை வாராயினர். இன் இசை—இனிய இசையோடு கூடிய; மணி யாழின்—அழகிய வீணையின்; இசை மது—இசைத் தேனை; நுகர்வாரும்—ரசிப்பவர்களும்; சென்னியர் திரிவாரும்—திரியும் பாணர்களும்; விறலியர் செறிவாரும்—பாண்மகளிர் பலரும் வந்து கூடலாயினர்; கன்னலின்—நாழிகை வட்டிலைப் பார்த்து; (கடிகாரம்) மண வேலைக் கடிகைகள் முகூர்த்த தேரத்தினை; தெரிவாரும் – ஆராய்ந்து கூறுவோரும் (வந்தனர்)
𝑥𝑥𝑥𝑥
தேர் மிசை வருவாரும்
சிவிகையில் வருவாரும்
ஊர்தியில் வருவாரும்
ஒளிர் மணி நிறை ஓடைக்
கார் மிசை வருவாரும்
கரிணியில் வருவாரும்
பார் மிசை வருவாரும்
பண்டியில் வருவாரும்.
தேர் மீது வந்தனர் சிலர்; பல்லக்கில் வந்தனர் பலர்; வாகனங்களில் வந்தவர் வேறு சிலர்; ஆண் யானை மீது ஏறி வந்தனர்; பெண் யானை மீது ஏறி வந்தனர்; நடந்து வந்தோர் பலர்; வண்டிகளில் வந்தோர் மற்றும் பலர்.
𝑥𝑥𝑥𝑥
தேர் மிசை வருவாரும் தேரில் ஏறி வருபவர்களும்; சிவிகையில் வருவாரும்— பல்லக்கில் வருபவர்களும்; ஊர்தியில் வருவாரும்—வாகனங்கள் மீது ஏறி வருவோரும்; ஒளி மணி – ஒளி வீசும் மணிகள்; நிறை—நிறைந்த; ஓடை—தெற்றிப்பட்டம் அணிந்த; கார் மிசை வருவாரும் – மேகம் போல விரைந்து செல்லக்கூடிய கரிய ஆண் யானை மீது ஏறி வருவோரும்; கரிணியில் வருவாரும் – பெண் யானை மீது ஏறி வருவோரும்; பார் மிசை வருவாரும்—தரையிலே நடந்து வருவோரும்; பண்டியில வருவாரும்—வண்டிகளிலே வருகின்றவர்களும்.
𝑥𝑥𝑥𝑥
முத்தணி அணி வாரும்
மணியணி முனிவாரும்
பத்தியின் அவிர் செம் பொன்
பல் கலன் மகிழ்வாரும்
தொத்துறு தொழின் மாலை
சுரி குழல் அணிவாரும்
சித்திர நிரை தோயும்
செந்துகில் புனை வாரும்.
முத்துக்களாலான ஆபரணங்களை அணிந்து கொள்வோரும். முன்பு அணிந்த ஆபரணங்கள் மீது வெறுப்புற்றுக் கழற்றி வைப்போரும்; பொன் ஆபரணங்கள் பலவற்றை அணிந்து மகிழ்வோரும்; சுருண்ட தம் கூந்தலிலே அழகிய வேலைப்பாடுகள் கொண்ட மலர் மாலைகளைச் சூடிக் கொள்வோரும்; சித்திர. வேலைகள் சிறப்பாகச் செய்யப்பட்ட செம்பட்டு ஆடைகளை உடுத்துவோரும்.
𝑥𝑥𝑥𝑥
முத்து அணி—முத்துக்களால் ஆன் ஆபரணங்களை; அணிவாரும்—அணிந்து கொள்பவர்களும்; மணி அணி முனிவாரும்—முன்பு அணிந்திருந்து ஆபரணங்களை வெறுத்துக் களைவாரும்; பத்தியின்—வரிசையாக அவிர் செம் பென்—ஒளி வீசும் செம்பொன்னாகிய பல கலன்—அணிகலன்கள் பலவற்றை மகிழ்வாரும் — அணிந்து மகிழ்வாரும்; சுரிகுழல் — சுருண்ட கூந்தலில், தொத்து உறுதொழில்—பூங்கொத்துக்களால் சிறந்த வேலைப்பாடுகள் செய்யப் பெற்று அமைந்த; மாலை அணிவாரும் — மாலைகளை அணிந்து கொள்பவரும்; சித்திரம் நிறை தோயும் சித்திர வேலை நிறைய அமைந்த; செந்துகில் — சிவந்த ஆடைகளை; புனைவாரும்—உடுப்பவரும்.
𝑥𝑥𝑥𝑥
விட நிகர் விழியாரும்
அமுதெனு மொழியாரும்
கிடை புரை இதழாரும்
கிளர் நகை ஒளியாரும்
தட முலை பெரியாரும்
தனியிடை சிறியாரும்
பெடை அன நடையாரும்
பிடியென வருவாரும்
நஞ்சு நிகர் விழி கொண்ட பெண்களும், அமுது போன்ற மொழி பகரும் பெண்களும், சிவந்த நெட்டி போன்ற இதழ் உடைய பெண்களும், புன் முறுவல் பூத்த பெண்களும், முலை பெருத்த பெண்களும், இடை சிறுத்த பெண்களும், அன்னம் பேடு போலும் நடை கொண்ட பெண்களும், பெண் யானை போன்று அசைந்து அசைந்து நடக்கும் பெண்களும் வந்தார்கள்.
𝑥𝑥𝑥𝑥
விடம் நிகர் விழியாரும்—நஞ்சு போலும் கண் கொண்டவர்களும்; அமுது எனும் மொழியாரும் — அமுதம் என்று சொல்லத் தக்க — இனிய சொல் பேசுபவரும்; கிடை புரை இதழாகும்— சிவந்த நெட்டி போன்ற இதழ் கொண்டவரும்; கிளர் நகை ஒளியாரும் — அரும்பும் புன்னகை ஒளி வீசும் பெண்டிரும்; தட முலை பெரியாரும்—அடி பரந்த பெருத்த முலை கொண்ட பெரிய பெண்மணிகளும்; தனி இடை சிறியாரும் — ஒப்பற்ற இடை சிறுத்த பெண்களும்; பெடை அன — அன்னப் பேடு போன்ற நடை கொண்ட பெண்களும்; பிடி என வருவாரும்—பெண்யானை போல அசைந்து அசைந்து நடந்து வருவாரும்.
𝑥𝑥𝑥𝑥
மன்றலின் வந்து
மணித் தவிசு ஏறி
வென்றி நெடுந் தகை
வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும்
எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும்
யோகமும் ஒத்தார்.
திருமண மண்டபத்திலே அலங்கரிக்கப் பட்ட மேடை மீது இராமனும் சீதையும் வந்து வீற்றிருந்தார்கள். அது எப்படி இருந்தது? போகமும் யோகமும் போல் இருந்தது.
𝑥𝑥𝑥𝑥
மன்றலின் வந்து— திருமணத்தின் பொருட்டு வந்து; மணித் தவிசு ஏறி—அத் திருமணத்திற்காக அமைக்கப் பட்ட அலங்கார மேடை மீது ஏறி; வென்றி நெடுந்தகை வீரனும்—வெற்றியும் பெருமையும் பொருந்திய வீரனாகிய ராமனும்: ஆர்வத்து இன் துணை அன்னமும் — அந்த ராமன் பால் ஆர்வம் கொண்ட இன்பத் துணையாகிய சீதையும்; எய்தி இருந்தார்— வீற்றிருந்தார்கள். ஒன்றிய – ஒன்றுடன் ஒன்று நெருங்கிய; யோகமும் போகமும் ஒத்தார்—யோகமும் போகமும் ஒத்து இருந்தனர்.
𝑥𝑥𝑥𝑥
கோ மகன் முன் சனகன்
குளிர் நன்னீர்ப்
பூ மகளும் பொருளும்
என நீ என்
மாமகள் தன்னொடு
மன்னுதி என்னாத்
தாமரை அன்ன
தடக்கையின் ஈந்தான்.
நீயும் எனது மகளாகிய சீதையும், திருமாலும் திருமகளும் போல இனிது வாழ்வீராக என்று கூறி குளிர்ந்த நல்ல நீரினாலே தாரை வார்த்து இராமனின் பெரிய வலது கையிலே கொடுத்தான் சனகன்.
கோமகன் முன்—அரச குமாரனாகிய இராமன் முன் நின்று; சனகன்—சனக மன்னன்; நீ என் மாமகள் தன்னொடுநீ எனது அழகிய பெண்னாகிய சீதையுடன்; பூ மகளும் பொருளும் என—மலர் மகளாகிய லட்சுமியும் பரம்பொருள் ஆகிய திருமாலும் போல; மன்னுதி—நிலை பெற்று வாழ்வாயாக! என்னா – என்று கூறி, குளிர் நல் நீர் – குளிர்ந்த நல்ல நீரரல் தாரை வார்த்து; தாமரை அன்ன—தாமரை போன்ற தடக்கையின் ஈந்தான் — அந்த ராமனது பெரிய வலது கைவில் கொடுத்தான்.
𝑥𝑥𝑥𝑥
பங்குனி உத்திரம் ஆன
பகல் போது
அங்கண் இருக்கினில்
ஆயிரம் நாமச்
சிங்கம் மணத் தொழில்
செய்த திறத்தால்
மங்கல அங்கி
வசிட்டன் வளர்த்தான்.
பங்குனி மாதத்திலே உத்திர நட்சத்திரம் கூடிய நல்ல நாளிலே இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடைபெற்றது. ஆயிரம் பெயர் கொண்ட திருமாலின் அம்சமாகிய இராமன் திருமணம் செய்து கொண்டதற்கு ஏற்ற முறையில் வேத விதிப்படி வசிட்ட முனிவர் மங்கல ஓமம் செய்தார்.
𝑥𝑥𝑥𝑥
பங்குனி உத்தரம் ஆன பகல் போது – பங்குனி மாதத்து உத்தர நட்சத்திரம் கூடிய நன்னாளில்; அங்கண்—அவ்விடத்தில்; ஆயிரம் நாமச் சிங்கம் — ஆயிரம் பெயர் கொண்ட சிங்கம் போன்ற இராமன்; மணத் தொழில் செய்த திறத்தால் – திருமண வைபவம் செய்த முறைக்கு ஏற்ப; வசிட்டன்—வசிட்ட முனிவன்; மங்கல அங்கி வளர்த்தான் – மங்கலகரமான ஓமத் தீ வளர்த்தாள்.
𝑥𝑥𝑥𝑥
ஆர்த்தன பேரிகள்
ஆர்த்தன. சங்கம்
ஆர்த்தன நான்மறை
ஆர்த்தனர் வானோர்
ஆர்த்தன பல்கலை
ஆர்த்தன பல்லாண்டு
ஆர்த்தன வண்டினம்
ஆர்த்தன அணடம்
முரசுகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; மறைகள் எங்கும் முழங்கின; தேவர்கள் ஆரவாரம் செய்தார்கள்; பல் கலைகளும் ஒலித்தன; பல்லாண்டு முழங்கியது; வண்டுகள் ஒலித்தன; அண்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.
𝑥𝑥𝑥𝑥
பேரிகள் ஆர்த்தன— மங்கல முரசங்கள் எங்கும் அதிர்ந்தன; சங்கம் ஆர்த்தன—சங்குகள் முழங்கின; நான் மறை ஆர்த்தன வேத கோஷங்கள் எங்கும் நிரம்பின. வானோர் ஆர்த்தன—தேவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள்; பல்கலை ஆர்த்தன – பல்கலைகளின் ஆரவாரமும் ஒலித்தது; பல்லாண்டு ஆர்த்தன – பல்லாண்டு பல்லாண்டு என்று வாழ்த்தொலி வான முட்டியது; வண்டு இனம் – வண்டுக் கூட்டம்; ஆர்த்தன—ரீங்காரம் செய்து ஒலித்தன ஆர்த்தன அண்டம்—அண்டங்கள் எல்லாம் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தன.
𝑥𝑥𝑥𝑥
இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த அதே வேளையில் இராமனுடைய சகோதரர்களுக்கும் அங்கேயே திருமணம் நடைபெற்றது.
சனகனின் மகளாகிய ஊர்மிளையை இலட்சுமணன் திருமணம் செய்து கொண்டான். சனகனின் சகோதரன் ருசத்துவன் எனும் பெயர் கொண்டவன். அவனுடைய பெண்கள் இருவர். அந்த இருவரையும் பரத சத்துருக்கினருக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.
ஆக பங்குனி உத்திர நன்னாளிலே, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கினன் ஆகியோர் நால்வருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக் கெல்லாம் ஏராளமான தான தருமங்கள் செய்தான் தசரதன்.
“நான் வந்த வேலை முடிந்தது. செல்கிறேன்” என்று கூறினார் விசுவாமித்திரர். விடை பெற்றார். இமய மலைக்குச் சென்று விட்டார்.
அயோத்திக்குப் புறப்பட்டான் தசரத மன்னன்.
𝑥𝑥𝑥𝑥
தன் மக்களும் மருமக்களும்
நனிதன் கழல் தழுவ
மன்மக்களும் அயன் மக்களும்
வயின் மொய்த்திட மிதிலைத்
தொன் மக்கள் தம் மனம் உக்கு
உயிர் பிரிவென்பதோர் துயரின்
வன்மக் கடல் புக உய்ப்பதோர்
வழி புக்கனன் உரவோன்
அயோத்திக்குப் புறப்பட்டான் தசரதன். சக்கரவர்த்தியின் திருக்குமாரர் நால்வரும் அவர்தம் மனைவிமாரும் அவனை வணங்கிப் புறப்பட்டனர். மற்றைய அரச குமாரர்களும், பிற மக்களும் சூழ்ந்து சென்றனர். மிதிலை வாழ் மக்கள் வழியனுப்பி வைத்துப் பிரியா விடை நல்கி உயிர் பிரிவதே போன்ற துயரக் கடலில் மூழ்கினார்கள்.
𝑥𝑥𝑥𝑥
உரவோன்—அறிவாற்றல் மிக்க தசரத மன்னன்; தன் மக்களும்—தன் புதல்வர்களும்; மருமக்களும்— தன் மக்களின் மனைவியராகிய மருமக்களும்; நனிதன் கழல் தழுவ—தன் திருவடிகளை நன்கு வணங்கித் தொடர்ந்து வரவும்; மன் மக்களும்—அரச குமாரர்களும்; அயல் மக்களும்— அவர்கள் அல்லாத பிற மக்களும்; வயின் மொய்த்திட— பக்கங்களிலே வந்து நெருங்கவும், மிதிலை தொல் மக்கள்— மிதிலை நகரிலே வாழும் பழைமையான குடிமக்கள்; தம் மனம் உக்கு—தங்கள் மனம் உடைந்து; உயிர் பிரிவு என்பது ஓர்— (தம் தம் உயிர் பிரிவதே போலும்) துயரின் வன்மம் கடல் புக — வருத்தமாகிய கொடிய கடலிலே மூழ்கவும்; உய்ப்பது ஓர் வழி—தனது நகருக்குச் செல்லும் வழியிலே; புக்கனன்—செல்வான் ஆயினன்.
𝑥𝑥𝑥𝑥
முன்னே நெடுமுடி மன்னவன்
முறையில் செல மிதிலே
நன் மாநகர் உறைவார் மன
நனி பின் செல நடுவே
தன் நேர் புரை தரு தம்பியர்
தழுவிச் செல மழைவாய்
மின்னே எனும் இடையாளொடு
இனிதேகினன் வீரன்
𝑥𝑥𝑥𝑥
நெடுமுடி மன்னவன்—நீண்ட முடிதரித்த தசரத மன்னன்; முறையின்—முறைப்படி; முன்னே செல — முதலில் செல்லவும்; மிதிலை நல் மாநகர் உறைவார் மனம்—மிதிலையாகிய நல்ல பெரிய நகரில் வாழும் மக்களின் மனங்கள்; தனி பின் செல—தன்னைப் பெரிதும் பின்தொடர்ந்து வரவும்; வீரன்—ரகு வீரனாகிய இராமன்; நடுவே —நடுவில்; தன் நேர் புரை தருதம்பியர்—தனக்கு நிகரான மனம் ஒத்த தம்பியர் மூவரும்; தழுவி செல—தன்னைத் தொடர்ந்து வரவும்; மழை வாய்—மேகத்தில் தோன்றும்; மின்னே எனும்—மின்னல் கொடியே என்று சொல்லத்தக்க, இடையா ளொடும்—இடையுடைய சீதையுடனே இனிது ஏகினன் – மகிழ்ந்து சென்றான்.
𝑥𝑥𝑥𝑥
இவ்வாறு சென்று கொண்டிருந்த போது, மயில்கள் இடமிருந்து வலம் வந்தன. இது நல்ல நிமித்தம். பின்னே காகங்கள் வலமிருந்து இடம் சென்றன. இது தீ நிமித்தம். இவ்வாறு நிமித்தங்கள் ஏற்படவே அஞ்சா நெஞ்சம் கொண்ட தசரதன் அஞ்சிக் கலங்கினான். நிமித்தகனை அழைத்தான். நிமித்தங்களின் பயன் கூறுமாறு கேட்டான்.
“தீயன சில தோன்றும். எனினும் அவை விரைவில் நீங்கும். எனவே மனம் கலங்கவேண்டாம்” என்று கூறினான் நிமித்தகன்.
𝑥𝑥𝑥𝑥
என்னும் அறவையின் வானகம்
இருள் நின்றது வெளியாய்
மின்னும்படி புடை வீசிய
சடையான் மழுவுடையான்
பொன்னின் மலை வருகின்றது
போல்வான் அனல்கால்வான்
உன்னும் சுழல் விழியான் உரும்
அதிர்கின்ற தோர் உரையான்
இவ்வாறு அந்த நிமித்தகன் சொல்லிக் கொண்டிருந்த போதே வானத்தில் இருள் விலகியது; வெளிச்சம் உண்டாயிற்று; மின்னல் ஒளி வீசும் சடையுடனும், மழு என்ற கைக் கோடாலியுடனும் தீப்பொறி கக்கும் விழியுடனும், இடி முழக்கம் போன்ற சொல்லுடனும், பொன்மலையாகிய மேருவே நடந்து வருவது போல வந்தான் பரசுராமன்.
𝑥𝑥𝑥𝑥
என்னும் அளவையின் – என்று நிமித்தகன் சொல்லிய அளவில்; வானசம் — வானத்திலே; இருள் நின்றது வெளி ஆய் — இருந்த இருள் நீங்கி வெளிச்சம் உண்டாகி; மின்னும்படி புடை வீசிய பக்கங்களிலே மின்னல் ஒளி வீசிய; சடையான் — செஞ்சடையுடையவனும்; மழு உடையான் – மழு என்ற கைக்கோடாலியை உடையவனும்; பொன்னின் பல வருகின்றது போல்வான் பொன்மலையே நடந்து வருவது போன்ற தோற்றம் உடையவனும்: அனல் சால்வான் — தீயை உமிழ்கின்ற; உன்னும் சுழல் விழியான் — உற்று நோக்கும் சுழல் விழி கொண்டவனும்; உரும் அதிர்கின்றது ஓர் உரையான் – இடிபோல முழங்கும் சொற்களை உடையவனும் (ஆன பரசுராமன் வந்தான்)
𝑥𝑥𝑥𝑥
கம்பித்தலை எறிநீர் உறும்
கலம் ஒத்து உலகு உலையத்
தம்பித் துயர் திசை யானைகள்
தளரக் கடல் சலியா
வெம்பித் திரிதர வானவர்
வெருவுற்று இரிதர ஓர்
செம் பொற் சிலே தெறியா அயில்
முக வாளிகள் தெரிவான்
பொன் ஒளி வீசும் தன்னுடைய வில்லை நாண் ஏற்றி விட்டான் பரசுராமன். அம்புகளைத் தெரிந்தெடுக்கிறான். அந்த நேரத்திலே என்ன நடந்தது?
கொந்தளிக்கும் கடலில் அகப்பட்ட மரக்கலம் போல உலகமும் அதிலுள்ள சராசரங்களும் நடுங்கின; நிலை குலைந்தன. எட்டுத்திக்கிலும் உள்ள யானைகள் அசைவற்றுத் தளர்ந்து நின்றன. கடல்கள் எல்லாம் வெப்பங்கொண்டு கொந்தளித்தன. நிலை பெயர்ந்தன. தேவர்கள் அஞ்சி ஓடினார்கள்.
xxxx
அலை எறி நீர் உறும் கலம் ஒத்து—அலைமோதுகின்ற கடல் நீரில் அகப்பட்ட மரக்கலம் போல; உலகு கம்பித்து உலைய — உலகமும் அதில் உள்ள பொருள்களும் நடுங்கி நிலை குலையவும்; உயர் திசை யானைகள் – மேலான திசை யானைகள் எட்டும்; தம்பித்து தளர—அசைவற்றுத் தளர்ந்து நிற்கவும்; கடல்—எல்லாக் கடல்களும்; சலியா வெம்பித் திரிதர – கொந்தளித்து வெப்பங்கொண்டு நிலை பெயரவும்; வானவர்–தேவர்கள், வெருவுற்று இரிதர—அஞ்சி ஓடவும்; ஓர் செப்பொன் சிலை தெறியா ஒப்பற்ற பொன் மயமான தன் வில்லை, நாணேற்றித் தெரித்து; அயில்முகம் - கூரிய வாயினை உடைய; வாளிகள் தெரிவான்-அம்புகளை (எய்தற் பொருட்டு) தெரிந்தெடுப்பவனும்.
xxxx
போரின் மிகை எழுகின்ற தோர்
மழுவின் சிகை புகையத்
தேரின் மிசை மலை சூழ்
வருகதிரும் திசை திரிய
நீரின் மிசை வடவைக் கனல்
நெரு வானுற முடுகிப்
பாரின் மிசை வருகின்ற தோர்
படி வெம் சுடர் படர
அந்தப் பரசுராமனின் ஆயுதமாகிய கோடாலியின் உச்சியிலிருந்து புகை கிளம்பவும், அவனது வருகை கண்டு அஞ்சி கதிரவன் தனது நிலை தடுமாறவும், கடலிலே உள்ள வடவாமுக அக்கினியானது தனது இடம் விட்டு வான் அடைய எண்ணி விரைந்து வருவது போலத் தனது மேனியினின்றும் வெம்மை ஒளி வீச வந்தான்.
xxxx
போரின் மிசை–போரிலே; எழுகின்றது-—தலை நிமிர்ந்து எழும்; ஒர் மழுவின்—ஒப்பற்ற மழுப்படையின்; சிகை புடைய – தலை புகையவும்; தேரின்மிசை—ஒற்றையாழித் தேரிலே; மலை சூழ்வருகதிரும்—மேருமலையைச் சுற்றி வருகிற கதிரவனும்; திசைதிரிய—அச்சத்தினாலே தனது கதி தடுமாறிச் செல்லவும்; நீரின் மிசை–கடல் நீரிலே உள்ள; வடவைக் கனல்—வடவாமுக அக்கினியானது; நெடுவான்உற—தன் இடம் விட்டு நீண்டவானை அடையுமாறு; முடுகி—விரைந்து; பாரின் மிசை—பூமியின் மேலே; வருகின்றது ஓர் படி—நடந்து வரும் தன்மை போல; வெம் சுடர் படர—தனது உடலின் வெப்ப ஒளி படரவும்.
𝑥𝑥𝑥𝑥
விண் கீழுற என்றோ
படி மேல் பால் உற என்றோ
எண் கீறிய உயிர் யாவையும்
எமன் வாயிட என்றோ
புண் கீறிய குருதிப் புனல்
பொழிகின்றது புரைய
கண் கீறிய கனலான் முனிவு
யாதென்று அயல் கருத
பரசுராமனுடைய கோபத்துக்குக் காரணம் யாதோ ? வான் உலகினை மண் உலகிற்குக் கொண்டு வருதற்கோ ? அன்றி மண் உலகை வானிலே கொண்டு சேர்க்கவோ ? எண்ணற்ற உயிர் இனங்களை எமனுலகுக்கு அனுப்பவோ ? என்னவோ தெரியவில்லையே என்று அயல் நின்றார் நினைக்க.
𝑥𝑥𝑥𝑥
புண் கீறிய—புண்ணைக் கீறிய உடனே; குருதிப்புனல் பொழிகின்றது புரைய – இரத்தமானது சொரிவது ஒப்ப; கண் கீறிய கனலான் – கண்களினின்றும் வெளிப்படுகின்ற தீயுடைய பரசுராமனின்; முனிவு—கோபம்; விண் கீழுற என்றோ—மேலேயுள்ள விண்ணுலகைக் கீழே கொண்டு வருவதற்கோ (அல்லது) படிமேல் பால் உற என்றோ—பூமியானது மேலே (விண்ணை) அடைய வேண்டும் என்றோ; எண் கீறிய உயிர் யாவையும்–எல்லா உலகங்களிலும் உள்ள கணக்கற்ற உயிர்களை எல்லாம்; எமன்வாய் இட என்றோ—எமன் உலகு சேர்க்கவோ; யாது—இஃது என்னவோ (இவர் தம் கோபத்துக்குக் காரணம் யாதோ) என்று; அயல் கருத—என்று அருகில் உள்ளோர் நினைக்கவும்.
xxxx
பாழிப் புயம் உயர் திக்கிடை
அடையப் புடை படரச்
சூழிச் சடைமுடி விண் தொட
அயல் வெண்மதி தொத்த
ஆழிப் புனல் எரி கானிலம்
ஆகாயமும் அழியும்
ஊழிக் கடை முடிவில் திரி
உமை கேள்வனை ஒப்ப
கைகளை வீசி ஆரவாரம் செய்துகொண்டு வருகிறான் பரசுராமன். அவனது சடாமுடி வானளாவியது. அதிலே சந்திரன் தொத்திக் கொண்டான். ஊழிக் கால இறுதியிலே தோன்றும் உருத்திர மூர்த்தி போல விளங்கினான் அவன்.
xxxx
பாழி புயம்—வலிய தோள்கள்; உயர்திக்கு இடை அடைய—உயர்ந்த திக்குகளை எட்டும்படி; புடை படர–பக்கங்களிலே வீசவும்; சடை முடி சூழி -சடா மகுட உச்சியில் உள்ள கொண்டை மயிர் முடி; விண் தொட– வானை அளாவவும்; அயல்-அதன் ஒரு புறத்தே; வெண்மதி தொத்த-வெள்ளிய சந்திரன் தொத்திக் கொள்ளவும்; ஆழி புனல்-கடல் நீரும்; எரி – தீயும்; கால் – காற்றும்; நிலம்—மண்ணும்; ஆகாயமும்- வானும்; (ஆகிய ஐம்பெரும் பூதங்களும்) அழியும்-அழிதற்குரிய; ஊழி – ஊழிக்கால முடிவில்; திரி – சுழன்று நடம்புரிகின்ற; உமை கேள்வனை ஒப்ப – உமையாள் பங்கினனாகிய உருத்திரன் போன்ற தோற்றமும்.
xxxx
அயிர் துற்றிய கடல் மாநிலம்
அடையத் தனி படரும்
செயிர் சுற்றிய படையான்
அடல் மற மன்னவர் திலகன்
உயிர் உற்றது ஓர் மரமாம் என
ஓராயிரம் உயர் தோள்
வயிரப் பணை துணியத் தொடு
வடிவாய் மழு உடையான்
கார்த்த வீரியார்ச்சுனன் என்பவன் சந்திர வமிசத்திலே தோன்றியவன்; ஆயிரம் கைகள் கொண்டவன்; போர் வல்லான்; பெரும் படையுடையவன்; அரசர்க்கு எல்லாம் திலகம் போன்றவன். தன் புயவலியால் இராவணனையே கட்டிச் சிறை செய்தவன். அத்தகைய கார்த்த வீரியார்ச்சுனனோடு போர் செய்து தன்னுடைய கோடாலியினாலே அவனுடைய கைகள் ஆயிரமும் வெட்டி வீழ்த்தி உயிருடன் கூடிய மரம் போல நிற்கச் செய்தவன் பரசுராமன். அத்தகைய சிறந்த கோடாலியை ஆயுதமாகக் கொண்டவன்.
xxxx
அயிர் துற்றிய—நுண்ணிய மணல் நிறைந்த; கடல் மாநிலம் அடைய—கடலால் சூழப்பட்ட இந்தப் பரந்த உலகம் முழுவதும்; தனிபடரும் — தனக்கு ஒப்பின்றி பரந்து செல்லத் தக்க; செயிர் சுற்றிய – சினம் மிக்க; படையான்—படையுடையவனும்; அடல்மறம் – வலிமையும் வீரமும் கொண்ட; மன்னவர் திலகன்— அரசர்களுக்குத் திலகம் போல விளங்கிய கார்த்தவீரியார்ச்சுனன்; உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என—உயிருடையதொரு மரம்போல் நிற்கும்படி; ஓர் ஆயிரம் உயர் தோள் வயிரம்பணை – ஆயிரம் எண்ணிக்கை கொண்ட உயர்ந்த தோள்களாகிய வயிரம் பாய்ந்த கிளைகள்; துணிய—வெட்டுண்டு போக, தொடு—வீசிய; வடிவாய் மழு உடையான் — கூரிய வாய் கொண்ட மழு உடையவனும்;
𝑥𝑥𝑥𝑥
நிருபர்க்கு ஒரு பழி பற்றிட
நில மன்னவர் குலமும்
கருவற்றிட மழுவாள் கொடு
களைகட்டு உயிர் கவரா
இருபத் தொரு படி கால்
இமிழ் கடல் ஒத்து அலை எறியும்
குருதிப் புனல் அதனிற் புக
முழுகித் தனி குடைவான்.
பரசுராமன் கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்றனன். அதனாலே சினங்கொண்டார்கள் கார்த்தவீரியார்ச்சுனன் மக்கள். பரசுராமன் இல்லாத சமயம் பார்த்து அவனுடைய தந்தை ஜமதக்னி முனிவரைக் கொன்று பழிக்குப்பழி வாங்கினார்கள். பரசுராமன் கோபம் கொண்டான். இருபத்தொரு தலைமுறை கவித்திரிய அரசர்களைக் கொன்றான்; அவர் தம் குருதி வெள்ளத்திலே நீராடி வஞ்சம் தீர்த்துக் கொண்டான்.
𝑥𝑥𝑥𝑥
நிருபர்க்கு-அரசர்களுக்கு (அதாவது க்ஷத்திரியர்களுக்கு); ஒரு பழிபற்றிட– ஒரு பழியுண்டாகும்படி; நில மன்னவர் குலமும்—பூமியில் உள்ள அரசர் குலம் முழுவதும்; கரு அற்றிட–பூண்டோடு நாசமடைய; மழுவாள் கொடு—தன் கையிலே உள்ள கோடாலியைக் கொண்டு; இருபத்தொரு கால்படி—இருபத்தி ஒரு தலைமுறை; உயிர் கவரா – உயிர் கவர்ந்து.களைகட்டு—அரசர்குலத்துக்களை பறித்து; இமிழ் கடல் ஒத்து—ஒலிக்கின்ற கடல்போல; அலை எறியும்—அலைமோதுகின்ற; குருதி புனல் அதனில்—அந்த அரசர்களின் இரத்த வெள்ளத்திலே; புகமுழுகி—தனது உடம்பு நனைய மூழ்கி; தனி குடைவான் – எவரும் செய்யாத முறையில் நீராடியவனும்.
xxxx
பொங்கும் படை இரியக்
கிளர் புருவங் கடை நெரியக்
வெங்கண் பொறி சிதறக்
கடிது உரும் ஏறென விடையா
சிங்கம் என உயர் தேர் வரு
குமரன் எதிர் சென்றான்.
அங்கண் அழகனும் இங்கிவன்
ஆரோ எனும் அளவில்
தசரதனின் பெரிய படையும் அஞ்சும் வகையில் கண்கள் தீப்பொறி பறக்க, இடிபோல முழங்கிக் கொண்டு, சிங்கம் போல வரும் இராமன் எதிரே சென்றான் பரசுராமன். இவ்வாறு வரும் இவன் யாரோ என்று எண்ணினான் இராமன்.
xxxx
பொங்கும் படை இரிய— (தசரத மன்னனின்) மிகப் பெரும் படையும் தனது தோற்றம் கண்டு அஞ்ச; கினர்புருவம்—மேல் எழுந்த புருவங்கள்; கடை தெரிய–சினத்தின் அறிகுறியாக கடைப்பக்கம் தெரியவும்; வெம் கண் பொறி சிதற–கொடிய கண்கள் தீப்பொறி சிந்தவும்; உறும் ஏறு என-பேரிடிபோல கடிது விடையா—விரைந்து முழங்கிக் கொண்டு; சிங்கம் எனவரு–ஆண் சிங்கம் போல வந்து கொண்டிருந்த; குமரன் எதிர்சென்றான்—இராமன் எதிரே சென்றான்; அங்கண்—அப்போது; அழகனும்–பேரழகினனாகிய இராமனும்; இங்கு இவன் ஆரோ—இப்படி இங்கே வருகிறவன் யாரோ; எனும் அளவில்—என்று எண்ணிய அளவில்.
xxxx
இற்றோடிய சிலையின் திறம்
அறிவேன் இனியான் உன்
பொற்றோள் வலி நிலை சோதனை
புரிவான் நசை உடையேன்
செற்றோடிய திரள் தோள்
உறு தினவும் சிறிது டையேன்
மற்றோர் பொருளிலை இங்கிதென்
வரவென்றனன் உரவோன்.
“தீ ஒடித்த வில்லின் தன்மை என்ன என்பதை நான் அறிவேன். அது சொத்தை வில். ஆதலின் உனது புயவலி காண வந்தேன். அரசர் பலரை வென்று உயர்ந்த எனது தோள்கள் தினவு கொண்டுள்ளன. உன்னுடன் போர் செய்ய வந்திருக்கிறேன்.” என்றான் பரசுராமன்.
xxxx
உரவோன் – வலிமை மிக்க பரசுராமன்; (இராமனை நோக்கி) இற்று – ஓடிய உனது கைகளால் ஒடிக்கப் பெற்ற சிலையின் திறம்—சிவதனுசின் தன்மையை; அறிவேன்—நான் அறிவேன்: (அது முன்னரே பழுதுபட்டது) இனி–இப்போது; உன் பொன் தோள்—உனது அழகிய தோள்களின்; வலி நிலை—திறமையை; சோதனை புரிவான் பரிசோதித்துப் பார்க்கும்; நசை உடையேன் – ஆசை உடையேன், சென்று ஓடிய—அரசர் பலரை வென்று நிமிர்ந்த; திரள்தோள் உறுதினவும்—திரண்ட தோள்களிலே போர் செய்யும் தினவும்; சிறிது உடையேன் : இங்கு என் வரவு இது—இங்கு நான் வந்தது இதன் பொருட்டே; மற்று ஓர் பொருள் இலை–வேறு ஒன்றும் இல்லை.
xxxx
ஒரு கால் வரு கதிராம் என
ஒளி கால்வன உலையா
வருகார் தவழ் வடமேருவின்
வலி சால்வன மனனால்
அருகா வினை புரிவான் ஊன்
அவனால் அமைவன வாம்
இரு கார் முகம் உளயாவையும்
ஏலாதன மேனாள்
சூரியனைப் போல் ஒளி வீசுவனவும், மேருவைப் போல வலிமை பொருந்தியனவும் ஆகிய விற்கள் இரண்டை அந்த நாளிலே மயன் சிருஷ்டி செய்தான்.
xxxx
ஒருகால் வருகதிர் ஆம் என—ஒரு சக்கரத் தேரில் உலகைச் சுற்றி வரும் கதிரவனைப் போல; ஒளி கால்வன–ஒளி வீசுவனவும்; வருகார் தவழ் வடமேருவின்—மிக்க மேகங்கள் உலவுதற்கு இடமாக வடக்கேயுள்ள மேருமலை போல; உலையா வலி சால்வன—குன்றாத வலி மிக்கனவும்: யாவையும் ஏலாதன—வேறு வில் எதையும்; தனக்கு ஒப்பாக ஏற்றுக்கொள்ள இயலாதனவும்; மனனால் — மனத்தாலே; அருகா வினை புரிவான் – குறை சிறிதும் இன்றி நிர்மாணம் செய்கிற; அவனால்—அந்த விசுவகர்மாவினால்; அமைவன ஆம்—சிருஷ்டிக்கப்பட்டனவாய் ; இரு கார்முகம்—இரண்டு விற்கள்; மேல்நாள் உள– முன்னாளில் இருந்தன.
𝑥𝑥𝑥𝑥
ஒன்றினை உமையாள் கேள்வன்
உகந்தனன் மற்றை ஒன்றை
நின்றுல களங்த நேமி
நெடியவன் நெறியிற் கொண்டான்
என்றிது உணர்ந்த விண்ணோர்
இரண்டினும் வன்மை எய்தும்
வென்றியது யாவது என்று
விரிஞ்சனை வினவ அந்நாள்
அந்த விற்களில் ஒன்றைச் சிவபெருமான் எடுத்துக் கொண்டான் ; மற்றொன்றைத் திருமால் எடுத்துக் கொண்டான். இந்த இரண்டில் வலிமை மிக்கது எது என்று தேவர்கள் பிரம்மனைக் கேட்டார்கள்.
𝑥𝑥𝑥𝑥
ஒன்றினை—அந்த இரண்டு விற்களில் ஒன்றை உமையாள் கேள்வன—உமையவள் பாகத்தனாகிய சிவன் உகந்தனன்—விரும்பி எடுத்துக் கொண்டான்; மற்றை ஒன்றை—மற்றொரு வில்லை; நின்று உலகு அளந்த—ஓங்கி நின்று உலகெலாம் தன் ஈரடியால் அளந்த, நேமி நெடியவன் —சக்கரதாரியான திருமால்; நெறியின் கொண்டான்—முறையாகத் தனக்கு எடுத்துக் கொண்டான்; என்ற இது உணர்ந்த விண்ணோர் – இதனை அறிந்த தேவர்கள்; இரண்டினும்—இந்த விற்கள் இரண்டினுள்ளும்; வன்மை எய்தும் வென்றியது யாது—வலிமையால் அடையத் தகும் – வெற்றியுடையது எது என்று; விரிஞ்சனை வினவ – பிரம தேவனைக் கேட்க அந்நாள் – அந்த நாளில்.
𝑥𝑥𝑥𝑥
என்றனன் என்ன நின்ற
இராமனும் முறுவல் எய்தி
நன்று ஒளிர் முகத்தன் ஆகி
‘நாரணன் வலியினாண்ட
வொன்றி வில் தருக’ என்னக்
கொடுத்தனன் வீரன் கொண்டார்
துன்று இரும் சடையோன் அஞ்ச
தோளுற வாங்கிச் சொல்லும்
𝑥𝑥𝑥𝑥
இவ்வாறு பரசுராமன் கூறலும், அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமனும், ‘அந்த வில்லைத் தருக’ என்று கூறினான். பரசுராமனும் கொடுத்தான். வாங்கினான் ரகு வீரன். தோள்வரை இழுத்து நானேற்றிக் கூறினான்;
𝑥𝑥𝑥𝑥
என்றனன்—என்று பரசுராமன் கூறி முடித்தான்; என்ன—அவன் அவ்வாறு கூறி முடிக்கும் வரை; நின்ற இராமனும்—அவன் கூற்று முழுதும் கேட்டு நின்ற இராமனும்; முறுவல் எய்தி—புன்முறுவல் பூத்து; நன்று ஒளிர் முகத்தன் ஆகி—நன்றாக ஒளி வீசும் முகம் உடையவனாகி; (பரசுராமனை நோக்கி) நாரணன் —திருமால்; வலியின் ஆண்ட—வலிமையோடு கையாண்ட, வெற்றிவில்—வெற்றிக்குரிய அந்த வில்லை; தருக—இங்கே தருவீராக; என்ன – என்று சொல்ல; கொடுத்தனன் – பரசுராமன் அதைக் கொடுத்தான்; வீரன்—ரகு வீரனாகிய இராமன்; கொண்டான்—அதனை எளிதில் வாங்கிக்கொண்டு; துன்று இரும் சடையோன்—அடர்ந்த சடை கொண்ட அப்பரசுராமன்; அஞ்ச – அஞ்சும் வண்ணம்; தோளுற வாங்கி—தோள்வரை இழுத்து நாண் ஏற்றி.
𝑥𝑥𝑥𝑥
பூதலத்து அரசை எல்லாம்
பொன்று வித்தனை என்றாலும்
வேத வித்தாய மேலோன்
மைந்தன் நீ; விரதம் பூண்டாய்
ஆதலிற் கொல்லல் ஆகாது
அம்பு இது பிழைப்பது அன்றால்
யாது இதற்கு இலக்கமாவது?
இயம்புதி விரைவில் என்றான்
பரசுராமனிடமிருந்து வாங்கிய வில்லை எளிதில் வளைத்து நாணேற்றிய இராமன் சொல்கிறான்;
“பூமியில் உள்ள க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்த அரசர்கள் எல்லாரையும் நீ கொன்று குவித்தாய்; க்ஷத்திரிய குலத்தில் பிறந்த நான் உன்னைக் கொல்வதும் தக்கதே. ஆயினும் நான் அவ்விதம் செய்ய விரும்பினேன் அல்லன். காரணம், வேதங்களை ஓதி உணர்ந்த மேலோனாகிய ஜமதக்னி முனிவரின் மைந்தன் நீ; நீயும் தவ ஒழுக்கம் மேற்கொண்டுள்ளாய். எனினும் எனது பாணம் தவறுதலாகாது. இதற்கு ஓர் இலக்கினை அறிவி; சீக்கிரம்” என்றான்.
𝑥𝑥𝑥𝑥
பூதலத்து அரசை எல்லாம் – பூமியில் உள்ள அரசர் எல்லாரையும்; பொன்றுவித்தனை—நீ அழித்தாய்; என்றாலும் — க்ஷத்திரியனாகிய நான் உன்னைக் கொல்வது தகும் என்றாலும்; வேதவித்து ஆகிய மேலோன் மைந்தன் நீ— வேதங்களை எல்லாம் ஓதி உணர்ந்த மேலோனாகிய ஜமதக்னி முனிவரின் மைந்தன் நீ; விரதம் பூண்டாய்; தவ வேடம் தலைக்கொண்டுள்ளாய்: ஆதலின் கொல்லல் ஆகாது–ஆதலால் உன்னைக் கொல்வது தகாது; அம்பு இது—நான் தொடுத்துள்ள இந்த அம்பு; பிழைப்பது அன்று—தவறுவது ஆகாது. (ஆதலின்) இதற்கு இலக்கமாவது யாது – இந்த அம்புக்கு இலக்காவது எது? இயம்புதி — சொல்வாய்; விரைவில்—சீக்கிரம் என்றான்)
𝑥𝑥𝑥𝑥
நீதியாய் முனிந்திடேல்
நீ இங்கு யாவர்க்கும்
ஆதியாய் அறிந்தனென்
அலங்கல் நேமியாய்
வேதியா இறுவதே
அன்றி வெண்மதில்
பாதியான் பிடித்த வில்
பற்றப் போதுமோ!
தர்மத்தின் வடிவே ! எல்லாவற்றிற்கும் ஆதியே ! வேதங்களின் முதல்வ! நீ யார் என்பது அறிந்தேன். என் மீது கோபம் கொள்ளாதே. அந்தச் சிவதனுசு உன் வலிமைக்கு எம்மாத்திரம் ? அது முறிந்து போகாமல் எப்படியிருக்கும் ?
𝑥𝑥𝑥𝑥
நீதியாய்—தர்மத்தின் வடிவே; இங்கு யாவர்க்கும் ஆதியாய்—எல்லாவற்றிற்கும் ஆதியான ஜோதியே; அலங்கல் நேமியாய்–ஒளி வீசும் சக்கரதாரியே ! வேதியா – வேதங்களின் முதல்வ; அறிந்தனன்—நீ யார் என்று நான் அறிந்து கொண்டேன். முனிந்திடேல்–என்மீது கோபம் கொள்ளாதே; வெண்மதி பாதியான் – வெள்ளிய பிறைச் சந்திரனை அணிந்தவனும்; பாதி உடலைப் பார்வதிக்கு அளித்தவனும் ஆகிய சிவன்; பிடித்த வில் – கைக்கொண்ட வில்; பற்றப் போதுமோ. நீ பிடித்து நாணேற்றப் போதிய வலிமை உடையதோ (இல்லை, முறிந்துதான் போகும்)
𝑥𝑥𝑥𝑥
பொன்னுடை வனை கழல்
பொலங் கொள் தாளினாய்
மின்னுடை நேமியான் ஆதல்
மெய்ம்மையால்
என்னுடைத்து உலகு இனி
இடுக்கண்! யான் தந்த
உன்னுடைய வில்லும் உன்
உரத்துக்கு ஈடு அன்றால்
“காத்தல் தொழிலை உடைய திருமாலாகிய நீ நல்லாரைக் காத்து, அல்லாரை அழிக்கவே அவதரித்து உள்ளாய்; இனி இந்த உலகுக்குத் துன்பம் ஏது? யான் கொடுத்தேனே ! இந்த உனது வில்! இதுவே உன் வலிமைக்கு ஈடு கொடாது. அங்ஙனமிருக்க அந்தச் சிவன் வில் முறிந்ததில் வியப்பு ஏது?”
𝑥𝑥𝑥𝑥
பொன் உடை—பீதாம்பரமும்; வனைகழல் — சித்திர வேலைப்பாடு அமைந்த வீரக் கழலையும் அணிந்த, பொலம் கொள்—அழகிய; தாளினாய்—திருவடிகளை உடையாய்; மின் உடை—ஒளி வீசும்; நேமியான் ஆதல் – சக்கராயுதம் தரித்த திருமால் என்பது; மெய்ம்மையே — உண்மையே. உலகு இனி என் இடுக்கண் உடைத்து– உலகம் இனித் துன்பம் உடையதாவது எங்ஙனம்? யான் தந்த – நான் இப்போது கொடுத்த; உன்னுடைய வில்லும்—நாராயணனாகிய உனது வில்லும்; உன் உரத்துக்கு ஈடு அன்று—உன் வலிமைக்கு ஈடு கொடாது;
𝑥𝑥𝑥𝑥
எய்த அம்பு இடை பழுது
எய்திடாமல் என்
செய்தவம் யகவையும்
சிதைக்கவே எனக்
கையவன் நெகிழ்த்தலும்
கணையும் சென்று அவன்
மையறு தவம் எலாம்
வாரி மீண்டதே.
“நீ தொடுத்த அம்பு பழுது போக வேண்டாம். எனது தவப்பயன் முழுதும் சொள்க” என்றான் பரசுராமன். அவ்வளவில் இராமன் தனது பிடியைத் தளர்த்தினான். அந்தக் கனை பாய்ந்து பரசுராமனின் தவப்பயன் முற்றும் கொண்டு மீண்டது.
𝑥𝑥𝑥𝑥
எய்த அம்பு – நீ இப்போது தொடுக்கும் அம்பு; இடை பழுது எய்திடாமல்–இடையே குறை நேரா வண்ணம்; என் செய் தவம் யாவையும் – நான் செய்த தவத்தின் பயன் முழுவதையும்; சிதைக்க என—கொள்வதாக என்று சொல்ல; அவண் – அந்த இடத்திலே; கை நெகிழ்த்தலும் – அம்பு பற்றிய பிடியை நழுவவிடலும்; கணையும் சென்று—வில்லினின்று விடுபட்ட அந்த அம்பு போய்; அவன்—அப்பரசுராமனுடைய; மை அறுதவம் எல்லாம் – குற்றமற்ற தவப் பயனை எல்லாம்; வாரி–கவர்ந்து ; மீண்டது–திரும்பி வந்து இராமனுடைய அம்புப் புட்டியில் புகுந்தது.
𝑥𝑥𝑥𝑥
எண்ணிய பொருள் எலாம்
இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற
வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும்
களைகண் ஆகிய
புண்ணிய விடை எனத்
தொழுது போயினான்.
“நீலமணி வண்ணனே! யாவர்க்கும் பற்றுக் கோடாகிய புண்ணியனே ! வளமான திருத்துழாய் மாலை அணிந்த கண்ணியனே ! நீ எண்ணிய எண்ணியாங்கு எய்துக” என்று கூறி இராமனை வணங்கி, விடைபெற்றுப் போனான் பரசுராமன்.
𝑥𝑥𝑥𝑥
மண்ணிய மணிநிற வண்ண் – தூய்மை செய்யப்பட்ட நீலமணி போலும் திருமேனியனே ! வண் துழாய் கண்ணிய – வளம் பொருந்திய திருத்துழாய் மாலை அணிந்தவனே! யாவர்க்கும் களை கண் ஆகிய புண்ணியனே — எவ்வுலகத்தவர்க்கும் பற்றுக் கோடாகிய புண்ணியனே! எண்ணிய பொருள் எலாம் – நீ கருதிய யாவும்; இனிது முற்றுக—கருதியவாறே இனிது நடைபெறுக; விடை—நான் விடை பெறுகிறேன்: என – என்று கூறி; தொழுது – இராமனை வணங்கி போனான் – (பரசுராமன் விடைபெற்று சென்றான்)
𝑥𝑥𝑥𝑥
பரிவு அறு சிங்தை அப்
பரசு ராமன் கை
வரிசிலை வாங்கி ஓர்
வசையை நல்கிய
ஒருவனைத் தழுவி நின்று
உச்சி மோந்து தன்
அருவியங் கண்ணெனும்
கலச மாட்டினான்.
பரசுராமன் போன உடனே இராமனைக் கட்டித் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான் தசரதன்.
𝑥𝑥𝑥𝑥
பரிவு அறு சிந்தை – இரக்கமற்ற மனம் கொண்ட; அ பரசுராமன் கை – அந்தப் பரசுராமன் கையிலிருந்த; வரிசிலை வாங்கி – கட்டமைந்த வில்லை வாங்கிக் கொண்டு ; ஓர் வசையை நல்கிய—ஓர் பெரும் பழியினை அவனுக்கு அளித்த; ஒருவனை – ஒப்பற்ற இராமனை தழுவி நின்று – மகிழ்ச்சியோடு தழுவிக் கொண்டு; உச்சி மோந்து உச்சி முகந்து; தன் – தன்னுடைய; அருவி கண் எனும் கலசம்—அருவி போல இன்பக் கண்ணீர் பெருகும் கண்களாகிய கலசங்களால்: ஆட்டினான் – நீராட்டினான் (தசரதன்)
𝑥𝑥𝑥𝑥
பூ மழை பொழிந்தனர்
புகுந்த தேவர்கள்
வாம வேல் வருணனை
மான வெஞ்சிலை
சேமி என்று அளித்தனன்
சேனை ஆர்த்தெழ
நாம நீர் அயோத்திமா
நகர நண்ணினான்.
இந்த நிகழ்ச்சி காண வானத்திலே கூடியிருத்த தேவர்கள் பூ மாரி பொழிந்தார்கள். அப்போது இராமன் வருணனை அழைத்து அந்த வில்லைப் பத்திரமாக வைக்கும்படி கூறினான்.
சேனைகள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யப் புறப்பட்டு அயோத்தி மா நகர் அடைந்தான்.
𝑥𝑥𝑥𝑥
புகுந்த தேவர்கள் – அச்சமயம் ஆகாயத்திலே கூடியிருந்த தேவர்கள்; பூ மழை பொழிந்தனர்—மலர் மாரி பொழிந்தனர். (அப்போது இராமன்) வாமம் வேல் வருணனை —அழகிய வேல்படை கொண்ட வருணனிடம் – மானவம் சிலை; பெருமை மிக்க இந்த வில்லை; சேமி—பத்திரமாக வைத்திரு; என்று—என்று அளித்தனன்—கொடுத்து விட்டு; சேனை ஆர்த்து எழ—படைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய; நாமம் நீர்—அச்சம் தரும் அகழி நீர் சூழ்ந்த; அயோத்தி மாநகர ; அயோத்தி மா நகரை; நண்ணினான் — அடைந்தான்.
𝑥𝑥𝑥𝑥
அயோத்தியிலே ஒரே கோலாகலம். அந்நகரே இந்திரலோகமாக காட்சியளித்தது.
பரதனைக் காண விழைந்த அவன் பாட்டன் கேயராசனது கட்டளையை ஏற்று வந்திருந்தான் யுதாசித்து. இராமனை வணங்கி விட்டு, அண்ணலைப் பிரிய மனமின்றி, பிரியா விடைபெற்று பாட்டனாரைக் காணச் சென்றான் பரதன். சத்துருக்கனனும், அவன்பால், கொன்ட பக்தியால், பரதனுடன் சென்றான்.
அவர்கள் சென்ற பின், தசரதன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய நினைத்தான். நாளும் குறித்தான் ஆனால் இங்கே குறுக்கிட்டது ஊழ் என்று சூசகமாகக் காட்டி பால காண்டத்தை முடிக்கிறான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.
𝑥𝑥
பால காண்டம் முற்றிற்று
அமரர் சக்திதாசன் சுப்பிரமணியன் என்று சொன்னவுடன் நமக்கு அவர் எழுதிய நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் நினைவிற்கு வரும். முக்கியமாக அவர் எழுதிய ‘கலித்தொகை காட்சிகள்’ ‘குறுந்தொகை காட்சிகள்’ இரண்டும் தமிரறிஞர்கள் டாக்டர் மு. வரதராசனார், அ. ச. ஞானசம்பந்தன் ஆகியோரால் பெரிதும் பாராட்டப்பட்டவை. அவர் எழுதிய ஆன்மீக நூல்கள் பல. விஞ்ஞானம் பற்றி அவர் எழுதிய “உலகம் பிறந்த கதை” “அம்பு முதல் அணுகுண்டு வரை” போன்றவை புகழ் பெற்றவை. வாழ்க்கை வரலாற்றில் பாரதி லீலை - 1938ல் வெளி வந்தது. தமிழகம் அந்த நூலுக்கு நல்ல ஆதரவு தந்தது. பின்னர் வெளியான ‘பாரதி-ஒரு புதுமைக் கண்ணோட்டம்’ பாரதி இலக்கியத்தில் சிறந்த ஆய்வாளர் என்று பெயர் பெற்ற, திரு. ஆர். ஏ. பத்மநாபன் மட்டுமன்றி பலரால் போற்றப்பட்டது. அது போன்றே அவர் தம் ஆசான் திரு. வி. கவை பற்றி எழுதிய, “திரு. வி. க. வாழ்வும் தொண்டும்” என்ற நூலே எல்லோரும் பெரிதும் வரவேற்றனர். திரு. சக்திதாசன் சுப்ரமணியனின் “காந்தி நினைவு” என்ற எங்கள் பதிப்பும் புகழ் மாலை சூடியது.
இப்போது வெளியிடும் அமரர் சக்திதாசன் சுப்பிரமணியனின் “கம்பன் கவித்திரட்டு” என்ற நூலின் முதல் காண்டத்தை, தமிழகம் எப்போதும் போலவே ஆதரிக்கும் என நம்புகிறோம்.