உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பன் கவித் திரட்டு 2, 3/004-005

விக்கிமூலம் இலிருந்து

ஆரண்ய காண்டப் படலங்கள் நிகழ்ச்சிகள் சுருக்கம்

1. விராதன் வதைப்படலம்

இப் படலம் இராம லட்சுமணர் விராதனைக் கொன்ற கதையைக் கூறுகிறது. தண்டகாரணியம் செல்லும் வழியில் அத்திரி முனிவரின் ஆசிரமம் அடைந்தனர். அங்கு அனசூயை சீதைக்கு ஆபரணங்களும், பட்டாடைகளும் அளித்தாள். தண்டகாரணியத்தில் சீதையை விராதன் தூக்கிச் சென்றான். தசரத மக்கள் இருவரும் அவனது தோள்களைத் துண்டித்தனர்; விராதனின் வரலாறும் இதிலுள்ளன.

2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்

பின்னர்ச் சரபங்கனது ஆசிரமத்திற்கு அருகே சென்றனர். பிரமனது கட்டளையால் அம்முனிவனைச் சத்திய லோகத்திற்கு அழைத்துப் போக வந்திருந்த தேவேந்திரன் இராமனைக் கண்டு துதித்துவிட்டு ஏகினான். இராமபிரானது சேவைக்குக் காத்திருந்த அந்த முனிவர், அப்பிரான் எழுந்தருளியவுடனே அவரை வணங்கி, துதித்து பின் இராகவன் எதிரிலேயே அக்கினிபிரவேசஞ் செய்து, பிறப்பு நீங்கினார்.

3. அகத்தியப் படலம்

சீதையுடனும் லட்சுமணனுடனும் அகத்தியர் ஆசிரமம் சென்றடையும் வழியில் கழிந்த காலத்தையும் சுதீட்சண முனிவர் பற்றியும், பஞ்சாப்ஸரஸ் தடாக வரலாற்றையும் கூறுகிறது இப் படலம்.

4. சடாயு காண்படலம்

இப்படலம், சடாயுவைப் பற்றிக் கூறுவதாகும். தசரத சக்கரவர்த்திக்கு உயிர்த் தோழன் சடாயு, மிக்க ஆயுளுடையவன்; கழுகுக்கரசன் தசரதனுக்கு பற்பல உதவிகள் செய்தவன். சடாயுவை இராம லட்சுமணர் காண, அவன் இவர்களை தன் சொந்த மைந்தர்களாகவே நினைத்துப் பாதுகாத்தான். பின் பஞ்சவடியை அவ்விரு வரும் அடைந்த வரலாற்றைக் கூறுகிறது.

5. சூர்ப்பனகைப் படலம்

இராவணனின் தங்கையான சூர்ப்பணகை தண்டகாரணியத்தில் தூஷணன் கரன் ஆகியவர்களுடன் அங்குள்ள வனவாசிகளை வருத்தி வந்தாள். இராம லட்சுமணனைக் கண்டவுடன் இராமனின் மேனியழகில் மயங்கினாள். அழகியவடிவங்கொண்டு இராமனைக் கவர முயன்ற இவள், சீதையைக கண்டாள். சீதையே இராமன் தன்னை உதாசீனம் செய்யக் காரணம் என்று, சீதையைக் கவர்ந்துச் செல்ல யத்தனித்தாள். காவல் புரிந்த லட்சுமணனோ, சூர்ப்பணகையின் மூக்கைத் தன் வாளால் அறுத்தெறிந்தான் ஏமாற்றமடைந்த அரக்கி அவமானம் தாங்காது, பழிவாங்க திட்டமிட்டாள்.

6. கரன் வதைப்படலம்

இராம லட்சுமணரிடம் கருவிக்கொண்டு சென்ற சூர்ப்பனகை கரன் காலில் விழுந்து புலம்பி முறையிட்டாள். போருக்கு வந்த கரனுடைய இராக்கத வீரர்கள் இராமனுடைய அம்புக்கு இரையாயினர். கரன் மிகப்பெரிய சேனையோடு வந்தான். தூஷணனும் கரனுடன் சென்றான். வருணன் தனக்குத்தந்த விஷ்ணு தனுசை எடுத்து நாணேற்றி, கரனை வெற்றிக்கொண்டான். இரகு வீரன். கண்டாள் சூர்ப்பனகை; ஓடினாள்; இலங்கைக்கு இச்செய்தியை இராவணனுக்குச் சொல்ல.

7. மாரீசன் வதைப் படலம்

மிக்க மாயைச்செய்ய வல்லவன் மாரீசன். சூர்ப்பணகை இராவணனிடம் ஏற்படுத்திய பெருஞ்சினமும் சீதையிடம் மூண்ட பெருங்காதலும் இராவணனை சீதையை வஞ்சனையால் கவர்ந்து வருவதற்குத் தூண்டியது. அதற்கு உதவியாக மாரீசனை நாடினான். முதலில் இதற்கு இணங்க மறுத்தாலும், பின்னர் பொன்மான் உருக்கொண்டு சீதை எதிரில் சென்றான் மாரீசன், சீதை அந்த மானைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டினாள். லட்சுமணன் “இது, பொய் மான்” என்று உண்மை கூறித் தடுக்கவும், கேளாமல், சீதை வற்புறுத்தவே இராமன் அதை பிடிக்கச் சென்றான். நெடுந்துாரம் சென்றுவிட்ட அந்த மானை இராமனின் அம்பு வீழ்த்தியது. தன் மெய் வடிவுக்கொண்ட மாரீசன் “ஹா சீதா! லட்சுமணா”! என்று இராமனின் குரலில் கூவினான். இக்குரல் கேட்டு, சானகி மிகவும் துயருற்றாள்.

8. சடாயு உயிர் நீடித்த படலம்

சீதை பதறினாள். லட்சுமணனை இராமனைக் காக்கச் செல்லுமாறு வற்புறுத்தினாள். தன்னை விட்டு இராமனிடம் ஏகுமாறு செய்தாள். சீதை தனித்திருந்த சமயம் இராவணன் சந்நியாசி வேடங்கொண்டு வந்தான். சீதை அவனுடைய தவக் கோலத்தை நம்பினாள். இராவணன் தன் சுய உருவைக் கொண்டான். விரும்பாத ஒரு பெண்ணைத் தொட்டால் தனக்குடனே இறுதி உண்டாகும் என்ற சாபம் நினைவுக்கு வந்தது. எனவே சீதை இருந்த நிலத்தையே பெயர்த்து தேரில் வைத்துச் செல்லலானான். சீதையின் கூக்குரல் சடாயுவின் காதில் விழுந்தது. உடன் இராவணனை எதிர்த்து வீரமாகப் பொருதான். ஆனால் இறுதியில் சடாயு அவன் எறிந்த தெய்வீக வாளினால் வீழ்ந்தான். அரக்கன் சீதையை இலங்கையில் அசோகவனத்தில் கொடிய அரக்கியர் நடுவே சிறை வைத்தான். இராமனும் லட்சுமணனும் பன்னசாலையையடைந்து சானகியைக் காணாது அவளை தேடிச் சென்றபோது, குற்றுயிராகச் சடாயுவைக் கண்டனர். விவரங்களை அறிந்தனர். இராமபிரான் சடாயுவுக்கு ஈமக்கடன் செய்தான்.

9. அயோமுகிப் படலம்

இராகவன் தன் தம்பியோடு, வனத்தில் செல்கையில் அவனுக்குத் தாகம் ஏற்பட்டது. லட்சுமணனை நீர் கொண்டு வரச் சொன்னான். லட்சுமணனும் சென்றான். வழியில் அயோமுகி என்றொரு அரக்கி. இளையவன்மீது ஆறாக் காதல் கொண்டாள். அழகிய உருவங்கொண்டு, லட்சுமணனை எடுத்துச் சென்றாள். இராமனின் தம்பியோ அவளுடைய மூக்கை அறுத்து, அவளிடமிருந்து மீண்டான்.

10. கவந்தப் படலம்

கவந்தன், சாபத்தினால் அரக்கனானவன். கவந்தன் வசித்த வனத்தை அடைந்தபோது, தன் இரண்டு கைகளையும் நீட்டினான். இராமனும் லட்சுமணனும் சிக்கவே, வயிற்றில் அவர்களைத் திணிக்க முற்பட்டான். இராமனும் இளையவனும் தங்கள் வாளினால் அவன் இரண்டு தோள்களையும் வெட்டித் தள்ளினர். சாபம் நீங்கினான் கவந்தன். இருவரையும் தொழுதான். இனி அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினான்.

11. சபரி பிறப்பு நீங்கு படலம்

சபரி மதங்கரது சீடர்களுக்கு உபசாரஞ் செய்துகொண்டு அவ்வாசிரமத்திலேயே வசித்து வந்த தவப்பெண். இந்த ஆசிரமத்திற்கு தசரதனின் இரு மகன்களும் வரும் செய்தி கேட்டாள். அவ்வனத்தில் உள்ள நல்ல கனிகளைச் சேர்த்து வைத்தாள். அப்பழங்களைக் கொடுத்து இராம லட்சுமணரை உபசரித்தாள். இராமபிரானின் அருளால் சபரி பிறப்பு நீங்கிய படலமாகிய இதுவே ஆரண்ய காண்டத்தின் பதினோறாவது படலம்.