கம்பன் கவித் திரட்டு 4, 5, 6/006-009

விக்கிமூலம் இலிருந்து




சுந்தர காண்டம்


1. கடல்தாவு படலம்

கடலைத் தாவும் அநுமனின் பேருருவையும், திருமேனியையும் தெய்வ பக்தியையும் திறம்பட வர்ணிக்கிறார் கம்பன். இப் படலத்தில் அநுமனே முக்கியமான பாத்திரமாகையால் அவனைப் பற்றியப் பாடல்கள் அதிகமாக உள்ளன. மாருதியைத் தவிர வேறு மூவரும் இப் படலத்தில் இடம் பெறுகின்றனர். மைந்நாகம், சுரசை, அங்காரதாரை ஆகியோரே மற்றைய மூவர். இவர்களுடைய வரலாற்றையும், அருமைப் பெருமைகளையும் திறம்பட வர்ணிக்கிறார் கம்பன். கடலைத் தாண்டிய வாயுவின் மகன் மலைமீது இறங்குகிறான்.

2. ஊர் தேடு படலம்

சுந்தர காண்டத்தின் மிகப் பெரிய படலங்களுள் ஒன்று. இலங்கையை அடைந்த அஞ்சனையின் மகன் அந்நகரின் அமைப்பையும், மக்களின் இணையற்ற ஆற்றலையும், அவர்களின் செல்வ வாழ்க்கையையும் கண்டு வியக்கிறான். கம்பன் நம் கண்முன் அந் நகரை நிறுத்துகிறார். நாமும் அந்த நகர நாட்டை (சிடி—ஸ்டேட்) காண்கிறோம். ஆன்மீகத்தோடு ஒட்டாத அந் நகர மக்களின் வாழ்க்கையைக் கண்டு அனுதாபப்படுகிறோம். நகருள் புகுந்த அநுமன் மனைகளையெல்லாம் ஆராய்கிறான். கும்பகருணன், விபீடணன், இந்திரஜித்து ஆகிய மூவரையும் அநுமன் காண்கிறான்; நமக்கும் அறிமுகப்படுத்துகிறான். மண்டோதரியையும் காண்கிறான் அநுமன். உறங்கும் இராவணனையும் பார்க்கிறான். பிராட்டியார்பால் அவன் கொண்ட பக்தி அதிகரிக்கிறது.

3. காட்சிப் படலம்

இப்படலத்தை சுந்தரகாண்டத்தின் இதயம் எனலாம். அநுமன், அல்லல் உறும் பிராட்டியைக் காண்கிறான்; இராவணன் அவளைக் கண்டு சென்றதும் தன்னை மாய்த்துக்கொள்ள சானகி துணிந்ததைக் கண்டு துடிக்கிறான். உடன் அங்குத் தோன்றி ஆறுதல் புரிந்த செய்திகளை இப்படலம் கூறுகிறது. இலங்கை முழுமையும் தேடியும் காணாமல் மனமுடைந்த மாருதி, அன்னையைக் கண்டவுடன் அடைந்த ஆனந்தத்திற்கு ஈடுண்டோ? உலகியலுக்கு ஏற்ப அன்னை அண்ணலைப் பிரிந்து தவிக்கும் நிலையை கவிச்சக்கரவர்த்தி தவிர யாரே கூறவல்லார்?திரிசடையின் கனவையும் அன்னையிடம் விபீடணன் மகள் கொண்ட ஆழ்ந்த அன்பையும் காண்கிறோம். அரக்கியரை தன் விஞ்சையால் அயர்வுறச் செய்யும் மாருதியின் அரிய சக்தியை பார்க்கிறோம். அத்துடனா? கம்பநாட்டாழ்வார் பிராட்டியாரின் கற்பு நிலையையும், தூய்மையையும், தவத்தையும் எத்துணைச் சிறப்பாக எடுத்து உரைக்கிறார்.

இப்படலத்தில் இராவணனை இருமுறை சந்திக்கிறோம். முதலில் அவன் உறக்க நிலையில் காட்சி அளிக்கிறான். அடுத்து பிராட்டியை சந்தித்து அச்சுறுத்துகிறான். ஆணவத்தால், தீய எண்ணத்தால் குழையும் அவன் கோலத்தை கவி நமக்குத் திறம்பட காட்டுவதோடு அல்லாமல், அற உருக்கொண்ட சீதையையும் ஆணவம் கொண்ட இராவணனையும் வேற்றுமைபடுத்தி காட்டுகிறார் கம்பன். அறத்தில் பாதுகாவலாக பதுங்கியிருக்கும் அநுமனைப் பார்க்கிறோம். கற்புக்கரசியின் ஒரு சிறு துரும்பு, திண்தோள் இராவணனை தடுத்துவிடுகிறது. பிராட்டிக்குத் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் அநுமன்.

4. உருக்காட்டு படலம்

இராமனின் அங்க வருணனைகளைக் கூறும் அநுமன் (மாருதி) உள்ளங்காலிலிருந்து உச்சி வரை வர்ணிக்கிறான். சாதாரண வர்ணனையா அது? இல்லை, இல்லை! தெய்வீக வர்ணனை—அத்துடனா? இராமபிரானுடைய நிலையையும், தன்னுடைய வரலாற்றையும் சொல்லி, இராமன் பிராட்டிக்கென கூறியனுப்பிய சில விசேட அடையாள உரைகளையும் கூறுகிறான். பின் அண்ணல் கொடுத்த கணையாழியையும் அன்னையிடம் கொடுக்கிறான்.

கணையாழியைக் கண்ட பிராட்டி உணர்ச்சிக் குவியல் ஆர்கிறார். ஆரண்ய கிட்கிந்தா காண்டங்களில் நடந்தவற்றை அறிந்த சனகனின் மகள் மென்மேலும் வேதனைப்படுகிறாள்.

5. சூடாமணிப் படலம்

பிராட்டி அநுமனுக்கு இராமபிரானிடம் சொல்ல சில செய்திகளைக் கூறினாள். அத்துடன் சூடாமணியையும் கொடுத்தாள். அன்னைக்குத் தன் பேருருவைக் காட்டினான் வாயுவின் மகன். சூடாமணிப் படலத்துடன் அநுமனை இலங்கைக்கு அனுப்பிய காரியம் வெற்றியுடன் முடிந்துவிட்டது. என்றாலும், ஆற்றலும் அறிவும் மிக்க இராம தூதன் அத்துடன் திரும்பவில்லை. தன் கோபத்தீயிக்கு தீனியும் போட்டான்.

6. பொழிலிறுத்த படலம்

7. கிங்கரர் வதைப்படலம்

8. சம்புமாலி வதைப்படலம்

9. பஞ்ச சேனாபதிகள் வதைப்படலம்

10. அக்ஷய குமாரன் வதைப்படலம்

சூடாமணி படலத்திற்குப் பின்வரும் இப்படலங்கள் யாவும் அரக்கர்களுடன் அநுமன் தனித்து நின்று போர் செய்த படலங்களாக அமைகின்றன. பொழிலிறுத்த படலம் முதல் அநுமன் இராவணனின் வளத்தை நிர்மூலமாக்கிப் பெருஞ் சேனைகளை அழித்த வீரத்தையும் ஆற்றலையும் காண்கிறோம். கவிச் சக்கரவர்த்தி இக் காண்டத்தில் நேர் எதிர் மாறான காட்சிகளை சித்தரிக்கிறார். ஊரினைச் சுற்றி இழுத்துச் செல்லப்பட்ட அநுமனுக்கும், இராவணனை சந்தித்த மாருதிக்கும், வாலில் எரியூட்டப் பெற்ற அஞ்சனையின் மைந்தனுக்கும், சூடாமணியை பிராட்டியிடமிருந்து பெற்ற அநுமனுக்கும் எத்தனை வித்தியாசம்! சீதையின் அறத்திற்கும் இராவணனின் மறத்திற்கும் உள்ள வேற்றுமையை எவ்வளவு அழகாகக் காட்டுகிறார் கம்பநாடார். பொழிலிறுத்த படலம் போருக்குத் துவக்கம். கிங்கரர், சம்புமாலி, பஞ்சசேனாபதிகள், அக்ஷயகுமாரன் ஆகியோரின் வதைப் படலங்கள்மூலம் இராம காதையை படிப்படியாக முன்னேறச் செய்கின்றான்.

11. பாசப் படலம்

இப் படலத்தில் இந்திரஜித்து அநுமனைப் பாசத்தால் கட்டினான். கட்டுப்பட்ட அநுமனுக்கு இது ஒரு வெற்றியே. அநுமனுக்கு இராவணன் வாலில் தீயூட்டினாலும், அது இலங்கைக்குத் தீயூட்டிய செய்கை அல்லவா?

12. பிணிவிடு படலம்

பாச படலத்துடன் போர் முடிவடைகிறது. அநுமன், இராவணனைக் காணவேண்டும் என்று விரும்பினான் இராவணனுக்கு இதுவரை தோல்வியே. தோல்வி கண்டறியாத இராவணன் தன் மகன் அக்ஷயகுமரனையும், சேனாபதிகளையும் இழந்தான். என்றாலும் ஆடம்பரத்தில் குறைச்சலில்லை. அநுமன் இராவணனின் இழிகுணத்தையும், இராகவனின் பரந்த குணத்தையும் ஒப்பிடும்போது இராவணன் சினங்கொண்டு சீறுகிறான். உடன் என்ன? தன் நகர் அழிவதற்குத் தானே வித்திடுகிறான். அநுமனின் வாலுக்குத் தீயூட்டுகிறான்.

13. எரியூட்டு படலம்

வாலில் இட்ட தீயுடன் இலங்கை மாநகரையே தீயிடுகிறான் அநுமன். இதுவே இராவணனின் அழிவுக்கு முன் அறிகுறியாக அமைகிறது.

14. திருவடி தொழுத படலம்

அநுமன் இலங்கைக்கு எரியூட்டிய பின், பிராட்டியைக் காணச் செல்கிறான். அன்னையின் தாள்களிற் பணிந்த அவனை, அன்னை வாழ்த்தி அனுப்புகிறாள். விரைந்து சென்று, குன்றிடை குதிக்கிறான், ஜெய மாருதி. நண்பர்கள் மகிழ்கின்றனர். விரைகிறான் அண்ணலிடம். பிராட்டியாரின் தவ நிலையையும் கற்பின் சிறப்பையும் மிக மிகச் சிறப்பாகக் கூறி, பிராட்டியின் பெருமையை வானளாவ புகழ்கிறான்.

பின்?

”தென்றிசைப் பரவைக் கண்டார்” என்று முடிக்கிறார் கம்பன்.

இதுவே அடுத்த காண்டத்தின் அஸ்திவாரமாகிறது.