கம்பன் கவித் திரட்டு 4, 5, 6/009-009

விக்கிமூலம் இலிருந்து

 

இராமாயண ஸார ஸங்க்ரகம்

ங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்து அஷ்டமி திதியில் மாலைக் காலத்தில் இலங்கை நகரத்தில் இருந்த சுவேலை மலைமீது வானர சேனைகளுடனே ஏறி, அன்றிரவே அந்த நகரை முற்றுகையிட்டான் இராமன். மறுநாள் நவமி. அன்று பகற் பொழுதுக்குமேல் அரக்கரோடு போர் தொடங்கினான். யுத்தம் ஏழு நாள் நடைபெற்றது.

ஏழாம் நாள், அமாவாசை அன்று பிற்பகல் இராவணன் வதையுண்டான்.பிறகு பிரதமை. இராவணனுக்கு ஈமக்கடன் நிறைவேறியது. துவிதியையன்று விபீடணப் பட்டாபிஷேகம். திருதியையன்று சீதை நெருப்பில் புகுந்துவந்து இராமனையடைந்தாள்.

மறுநாள் சதுர்த்தி. விபீடணன் அளித்த புட்ப விமானத்தில் ஏறி வானரமகளிரை அழைத்துக் கொண்டு மறுநாள் பஞ்சமியன்று பாரத்துவாசர் ஆசிரமம் சேர்ந்தான்.அன்றைய தினமே பதினான்கு ஆண்டுகள் முடிகிறபடியால் தன் வருகையை அறிவிக்கும்படி அநுமனைப் பரதனிடம் போக்கினான் இராமன்.

அயோத்தியை அடைந்தான். திருமுடிசூட்டு விழாவும் நடந்தது.

இவ்வாறு இராமாயண ஸார ஸங்க்ரகம் கூறுகிறது.

வேண்டியதை வேண்டியவாறே அருளும்

கோதண்டராமன்

 

இராமாயணத்தைப் படித்தால், என்ன பலன்?


இராவணன் தன்னை வீட்டி
        இராமனாய் வந்து தோன்றி
தராதல முழுவதுங் காத்துத்
        தம்பியுந் தானு மாகப்
பராபர மாகி நின்ற
        பண்பினைப் பகருவார்கள்
தராபதி யாகிப் பின்னு
        நமனையும் வெல்லுவாரே


 

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>


அமரர் சக்திதாசன் சுப்பிரமணியன் அவர் தம் துணைவியார் திருமதி ஜலஜா சக்திதாசன் இருவரும் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத் தொண்டு ஆற்றியவர்கள். 1990-ம் ஆண்டிலே வெளியான அவர்களது திரு வி. க. உள்ளமும் உயர் நூல்களும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசு பெற்ற பெருமையுடையது.

இலக்கியமன்றி, அமரர் சக்திதாசன் சுப்பிரமணியன் 1933 முதல் 1983 வரை சிறந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர். திரு வி. க. வின் சீடரான இவர் தனியே எழுதிய நூல்கள் இருபத்தி ஆறு. திருமதி ஜலஜா சக்திதாசனுடன் சேர்ந்து எழுதிய நூல்கள் இருபது. திருமதி ஜலஜா சக்திதாசன் தனியாக எழுதிய நூல்கள் பதினாறு. இந்தத் தேசிய எழுத்தாளர்கள் எழுதிய ‘கம்பன் கவித்திரட்டில்’ முதல் காண்டம் - பாலகாண்டம் 1986-ல் வெளியிட்டோம்.

1990-ல் அயோத்தியா காண்டத்தையும் ஆரண்ய காண்டத்தையும் வெளியிட்டோம்.

1991-ல் மீதியுள்ள கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகியவற்றை வெளியிடுகிறோம்.

தமிழகம் எங்கள் வெளியீடுகளுக்குப் பேராதரவு அளிக்க வேண்டுகிறோம்.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>