கம்பராமாயணம்/அயோத்தியா காண்டம்/மந்திரப் படலம்

விக்கிமூலம் இலிருந்து
மந்திரப் படலம்

கடவுள் வாழ்த்து[தொகு]

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,

ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்பகூனும்

சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,

கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.


மந்திரப் படலம்[தொகு]

தயரதன் மந்திராலோசனை மண்டபம் அடைதல்[தொகு]

மண்ணுறு முரசுஇனம் மழையின் ஆர்ப்புற,

பண்ணுறு படர் சினப் பரும யானையான்,

கண்ணுறு கவரியின் கற்றை சுற்றுற,

எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான். 1


தயரதன் யாவரையும் போகச் சொல்லி தனித்திருத்தல்[தொகு]

புக்கபின், 'நிருபரும், பொரு இல் சுற்றமும்,

பக்கமும், பெயர்க' என, பரிவின் நீக்கினான்;

ஒக்க நின்று உலகு அளித்து, யோகின் எய்திய

சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான். 2


தயரதன் அமைச்சர்களை வருவித்தல்

சந்திரற்கு உவமை செய் தரள வெண்குடை

அந்தரத்தளவும் நின்று அளிக்கும் ஆணையான்,

இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த, தன்

மந்திரக் கிழவரை, 'வருக' என்று ஏவினான். 3

வசிட்டனின் வருகை[தொகு]

பூ வரு பொலன் கழல் பொரு இல் மன்னவன்

காவலின் ஆணைசெய் கடவுள் ஆம் என,

தேவரும், முனிவரும் உணரும், தேவர்கள்

மூவரின் நால்வர் ஆம், முனி வந்து எய்தினான். 4

அமைச்சர்கள் மாண்பு[தொகு]

குலம் முதல் தொன்மையும், கலையின் குப்பையும்,

பல முதல் கேள்வியும், பயனும், எய்தினார்;

நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார்;

சலம் முதல் அறுத்து, அருந் தருமம் தாங்கினார். 5


உற்றது கொண்டு, மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்;

மற்று அது வினையின் வந்தது ஆயினும், மாற்றல் ஆற்றும்

பெற்றியர்; பிறப்பின் மேன்மைப் பெரியவர்; அரிய நூலும்

கற்றவர்; மானம் நோக்கின், கவரிமா அனைய நீரார். 6


காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற

நூல் உற நோக்கி, தெய்வம் நுனித்து, அறம் குணித்த மேலோர்;

சீலமும், புகழ்க்கு வேண்டும் செய்கையும், தெரிந்துகொண்டு,

பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார்; 7


தம்முயிர்க்கு இறுதி எண்ணார்; தலைமகன் வெகுண்ட போதும்,

வெம்மையைத் தாங்கி, நீதி விடாதுநின்று, உரைக்கும் வீரர்;

செம்மையின் திறம்பல் செல்லாத் தோற்றத்தார்; தெரியும் காலம்

மும்மையும் உணர வல்லார்; ஒருமையே மொழியும் நீரார். 8


நல்லவும் தீயவும் நாடி, நாயகற்கு

எல்லை இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்;

ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்,

தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார். 9

அமைச்சர்கள் வருகை[தொகு]

அறுபதினாயிரர் எனினும், ஆண்தகைக்கு

உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம்;

பெறல் அருஞ் சூழ்ச்சியர்; திருவின் பெட்பினர்;-

மறி திரைக் கடல் என வந்து சுற்றினார். 10

அமைச்சர்கள் வசிட்டனையும் மன்னரையும் வணங்குதல்[தொகு]

முறைமையின் எய்தினர் முந்தி, அந்தம் இல்

அறிவனை வணங்கி, தம் அரசைக் கைதொழுது,

இறையிடை வரன்முறை ஏறி, ஏற்ற சொல்

துறை அறி பெருமையான் அருளும் சூடினார். 11


தயரதன் தன் மனக் கருத்தை வெளியிடுதல்

அன்னவர், அருள் அமைந்து இருந்த ஆண்டையில்,

மன்னனும், அவர் முகம் மரபின் நோக்கினான்;

'உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது;

என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால்! 12


'வெய்யவன் குல முதல் வேந்தர், மேலவர்,

செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே,

வையம் என் புயத்திடை, நுங்கள் மாட்சியால்,

ஐ-இரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன். 13


'கன்னியர்க்கு அமைவரும் கற்பின், மாநிலம்

தன்னை இத் தகைதர தருமம் கைதர,

மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்;

என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். 14


விரும்பிய மூப்பெனும் வீடு கண்டயான்

இரும்பியல் அனந்தனும், இசைந்த யானையும்

பெரும்பெயர்க் கிரிகளும் பெயர, தாங்கிய

அரும்பொறை இனிச்சிறிது ஆற்ற ஆற்றலேன். 15


'நம்குலக் குரவர்கள், நவையின் நீங்கினார்

தம் குலப் புதல்வரே தரணி தாங்கப் போய்,

வெங் குலப் புலன் கெட, வீடு நண்ணினார்;

எங்கு உலப்புறுவர், என்றுஎண்ணி, நோக்குகேன். 16


'வெள்ளநீர் உலகினில் விண்ணில் நாகரில்,

தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான்

கள்ளரில் கரந்துறை காமம் ஆதியாம்

உள்ளுறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ? 17


'பஞ்சிமென் தளிரடிப் பாவை கோல்கொள

வெஞ்சினத்து அவுணத்தேர் பத்தும் வென்றுளேற்கு,

எஞ்சலில் மனமெனும் இழுதை ஏறிய

அஞ்சுதேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ? 18


'ஒட்டிய பகைஞர்வந்து உருத்த போரிடைப்

பட்டவர் அல்லரேல் பரம் ஞானம்போய்த்

தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு' என

விட்டவர் அல்லரேல் யாவர் வீடுளார். 19

'இறப்பெனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்

மறப்பெனும் அதனின்மேல் கேடு மற்றுண்டோ?

துறப்பெனும் தெப்பமே துணைசெய் யாவிடின்

பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்க லாகுமோ? 20


'அருஞ்சிறப்பு அமைவரும் துறவும் அவ்வழித்

தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய், வரும்

பெருஞ் சிறை உள எனின், பிறவி என்னும் இவ்

இருஞ் சிறை கடத்தலின் இனியது யாவதோ? 21


'இனியது போலும் இவ் அரசை எண்ணுமோ

துனி வரு புலன் எனத் தொடர்ந்து தோற்கலா

நனி வரும் பெரும்பகை நவையின் நீங்கிஅத்

தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே? 22


'உம்மையான் உடைமையின் உலகம் யாவையும்

செம்மையின் ஓம்பிநல் லறமும் செய்தனென்;

இம்மையின் உதவி, நல்லிசை நடாயநீர்

அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால். 23


'இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல்

தழைத்த பேர் அருளுடைத் தவத்தின் ஆகுமேல்,

குழைத்தோர் அமுதுடைக் கோரம் நீக்கி, வேறு

அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ? 24


'கச்சையம் கடக் கரிக் கழுத்தின்கண் உறப்

பிச்சமும் கவிகையும் பெய்யும் இன்னிழல்

நிச்சயம் அன்றுஎனின் நெடிது நாளுண்ட

எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ? 25


'மைந்தரை இன்மையின் வரம்பில் காலமும்

நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான்

வந்தனன் இனியவன் வருந்தயான் பிழைத்து

உய்ந்தனென் போவதோர் உறுதி எண்ணினேன். 26


'"இறந்திலன் செருக்களத்து இராமன் தாதை; தான்,

அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும்

துறந்திலன்" என்பதோர் சொல்லுண் டானபின்

பிறந்திலன் என்பதில் பிறிதுண் டாகுமோ? 27


'பெருமகன் என்வயின் பிறக்கச் சீதையாம்

திருமகள் மணவினை தெரியக் கண்டயான்

அருமகன் நிறைகுணத்து அவனி மாதுஎனும்

ஒருமகள் மணமும்கண்டு உவப்ப உன்னினேன். 28


'நிவப்புறு நிலனெனும் நிரம்பு நங்கையும்


சிவப்புறு மலர்மிசைச் சிறந்த செல்வியும்

உவப்புறு கணவனை உயிரின் எய்திய

தவப்பயன் தாழ்ப்பது தருமம் அன்றரோ. 29


'ஆதலால், இராமனுக்கு அரசை நல்கி இப்

பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குறும்

மாதவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்

யாதுநும் கருத்து?' என இனைய கூறினான். 30

தயரதன் சொல்லைக் கேட்ட அமைச்சர்களின் நிலை[தொகு]

திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும் சிந்தை

புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர், ஆங்கே

வெருண்டு, மன்னவன் பிரிவெனும் விம்முறு நிலையால்,

இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆவென இருந்தார். 31


அன்ன ராயினும் அரசனுக்கு, அதுவலது உறுதி

பின்னர் இல்லெனக் கருதியும், பெருநில வரைப்பின்

மன்னும் மன்னுயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை

என்ன உன்னியும், விதியது வலியினும், இசைந்தார். 32

வசிட்டன் உரை[தொகு]

இருந்த மந்திரக் கிழவர்தம் எண்ணமும் மகன்பால்

பரிந்த சிந்தை அம் மன்னவன் கருதிய பயனும்,

பொருந்து மன்னுயிர்க்கு உறுதியும், பொதுவுற நோக்கித்

தெரிந்து, நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும். 33


'நிருப! நின்குல மன்னவர் நேமிபண்டு உருட்டிப்

பெருமை எய்தினர்; யாவரே இராமனைப் பெற்றார்?

கருமமும் இது; கற்று உணர்ந்தோய்க்கு இனிக் கடவ

தருமமும் இது; தக்கதே உரைத்தனை;- தகவோய்! 34


'புண்ணியந்தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த

அண்ணலே! இனி அருந்தவம் இயற்றவும் அடுக்கும்;

வண்ண மேகலை நிலமகள், மற்று, உனைப் பிரிந்து

கண் இழந்திலள் எனச் செயும், நீ தந்த கழலோன். 35


'புறத்து, நாமொரு பொருளினிப் புகல்கின்றது எவனோ,

அறத்தின் மூர்த்திவந்து அவதரித் தான் என்ப தல்லால்?

பிறத்தி யாவையும் காத்தவை பின்னுறத் துடைக்கும்

திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும், அத் திறலோன். 36


'பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவியெனும் திருவும்

"இன்னுயிர்த்துணை இவன்" என நினைக்கின்ற இராமன்

"தன் உயிர்க்கு" என்கை புல்லிது; தற்பயந்து எடுத்த

உன்னுயிர்க்கென நல்லன், மன்னுயிர்க்கெலாம் உரவோய்! 37


வாரம் என் இனிப் பகர்வது? வைகலும் அனையான்

பேரினால்வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால்,

வீர! நின்குல மைந்தனை வேதியர் முதலோர்

யாரும் "யாம்செய்த நல்லறப் பயன்" என இருப்பார். 38


'மண்ணினும் நல்லள்; மலர்மகள், கலைமகள், கலையூர்

பெண்ணினும் நல்லள்; பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்-

கண்ணினும் நல்லன்; கற்றவர், கற்றிலா தவரும்,

உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார். 39


'மனிதர், வானவர், மற்றுளோர், அற்றம்காத்து அளிப்பார்

இனிய மன்னுயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை;

அனையது ஆதலின், அரச! நிற்கு உறு பொருள் அறியின்,

புனித மாதவம் அல்லது ஒன்று இல்' எனப் புகன்றான். 40

வசிட்டனின் உரை கேட்டு தயரதன் மகிழ்ந்துரைத்தல்[தொகு]

மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும், மகனைப்

பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடிக்கும் அப் பெருவில்

இற்ற அன்றினும், எறிமழு வாள் அவன் இழுக்கம்

உற்ற அன்றினும், பெரியதோர் உவகையன் ஆனான். 41


அனையது ஆகிய உவகையன், கண்கள்நீர் அரும்ப,

முனிவன் மா மலர்ப் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி,

'இனிய சொல்லினை; எம்பெரு மான் அருள் அன்றோ,

தனியன் நானிலம் தாங்கியது; அவற்கு இது தகாதோ? 42


'எந்தை! நீ உவந்து இதம்சொல எங்குலத்து அரசர்

அந்தம் இல் அரும் பெரும்புகழ் அவனியில் நிறுவி

முந்து வேள்வியும் முடித்துத்தம் இருவினை முடித்தார்

வந்தது அவ்வருள் எனக்கும் என்று உரைசெய்து மகிழ்ந்தான். 43

அமைச்சர்களின் கருத்தை சுமந்திரன் கூறுதல்[தொகு]

பழுதில் மாதவன், பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான்

முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர்தம் முகத்தால்

எழுதி நீட்டிய இங்கிதம் இறைமகற்கு ஏற்கத்

தொழுத கையினன், சுமந்திரன் முன்னின்று சொல்லும். 44


'"உறத்தகும் அரசு இராமற்கு" என்று உவக்கின்ற மனத்தைத்

"துறத்தி நீ" எனும் சொல்சுடும் நின்குலத் தொல்லோர்

மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கன்று

அறத்தின் ஊங்குஇனிக் கொடிதுஎனல் ஆவதுஒன்று யாதோ. 45


'புரசை மாக்கரி நிருபர்க்கும், புரத்து உறைவோர்க்கும்,

உரைசெய் மந்திரக் கிழவர்க்கும், முனிவர்க்கும், உள்ளம்

முரசம் ஆர்ப்ப, நின் முதல்மணிப் புதல்வனை, முறையால்

அரசனாக்கிப்பின் அப்புறத்து அடுத்தது புரிவாய்!' 46

தயரதன் இராமனை அழைத்துவரக் கூற சுமந்திரன் செல்லுதல்[தொகு]

என்ற வாசகம், சுமந்திரன் இயம்பலும், இறைவன்,

"நன்று சொல்லினை; நம்பியை நளி முடி சூட்டி

நின்று, நின்றது செய்வது; விரைவினில் நீயே

சென்று, கொண்டுஅணை, திருமகள் கொழுநனை" என்றான். 47

சுமந்திரன் இராமனைத் திருமனையில் கண்டு செய்தி தெரிவித்தல்[தொகு]

அலங்கல் மன்னனை, அடிதொழுது அவன்மனம் அனையான்,

விலங்கல் மாளிகை வீதியின் விரைவொடு சென்றான்,

தலங்கள் யாவையும் பெற்றனன் ஆம் எனத் தளிர்ப்பான்

பொலங்கொள் தேரொடும் இராகவன் திருமனை புக்கான். 48


பெண்ணின் இன்னமுது அன்னவள் தன்னொடும், பிரியா

வண்ண வெஞ்சிலைக் குரிசிலும் மருங்கினி திருப்ப

அண்ணல் ஆண்டிருந் தான்; அழகு அருநறவு எனத்தன்

கண்ணும் உள்ளமும் வண்டெனக் களிப்புறக் கண்டான். 49

தந்தையின் கட்டளை கேட்டு இராமன் தேர் ஏறுதல்[தொகு]

கண்டு, கைதொழுது, 'ஐய, இக் கடலிடைக் கிழவோன்,

"உண்டு ஒர் காரியம்; வருக!" என, உரைத்தனன்' எனலும்,

புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து, ஓர்

கொண்டல்போல் அவன், கொடி நெடுந் தேர்மிசைக் கொண்டான். 50

இராமன் தேர்மீது செல்லுதல்[தொகு]

முறையின் மொய்ம்முகில் எனமுரசு ஆர்த்திட, மடவார்

இறைகழன்று சங்கார்ந்திட, இமையவர், 'எங்கள்

குறைமுடிந்தது' என்று ஆர்த்திடக் குஞ்சியைச் சூழ்ந்த

நறை அலங்கல்வண்டு ஆர்த்திடத் தேர்மிசை நடந்தான். 51

இராமன் தேரில் செல்வதைக் கண்ட பெண்களின் நிலை[தொகு]

பணை நிரந்தன; பாட்டு ஒலி நிரந்தன; அனங்கன்

கணை நிரந்தன; நாண் ஒலி கறங்கின; நிறைப்பேர்

அணை நிரந்தன, அறிவு எனும் பெரும் புனல்; அனையார்,

பிணை நிரந்தெனப் பரந்தனர்; நாணமும் பிரிந்தார். 52


நீள் எழுத் தொடர் வாயிலில், குழையடு நிகிழ்ந்த

ஆளகத்தினோடு அரமியத் தலத்தினும் அலர்ந்த;

வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க,

சாளரத்தினும் பூத்தன, தாமரை மலர்கள். 53


மண்டலம் தரு மதி கெழு, மழை முகில் அனைய,

அண்டர் நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல்,

தொண்டை வாய்ச்சியர் நிறையடும், நாணொடும், தொடர்ந்த

கெண்டையும் உள; கிளை பயில் வண்டொடும் கிடந்த. 54


சரிந்த பூவுள, மழையடு கலை உறத் தாழ்வ;

பரிந்த பூவுள, பனிக் கடை முத்துஇனம் படைப்ப;

எரிந்த பூவுள, இள முலை இழை இடை நுழைய;

விரிந்த பூவுள, மீனுடை வானின்றும் வீழ்வ. 55


வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம்

தள்ளுறச் சுமந்து, எழுதரும் தமனியக் கொம்பில்,-

புள்ளி நுண் பனி பொடிப்பன, பொன்னிடைப் பொதிந்த,

எள்ளுடைப் பொரி விரவின, -உள சில இளநீர். 56

இராமன் தம்பியோடு தயரதன் இருந்த இடத்தை அடைதல்[தொகு]

ஆயது, அவ்வழி நிகழ்தர, ஆடவர் எல்லாம்

தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப,

தூய தம்பியும், தானும், அச் சுமந்திரன் தேர்மேல்

போய், அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான். 57

தயரதன் இராமனைத் தழுவுதல்[தொகு]

மாதவன் தனை வரன்முறை வணங்கி, வாள் உழவன்

பாத பங்கயம் பணிந்தனன்; பணிதலும், அனையான்,

காதல் பொங்கிட, கண் பனி உகுத்திட, கனி வாய்ச்

சீதை கொண்கனைத் திரு உறை மார்பகம் சேர்த்தான். 58


'நலம் கொள் மைந்தனைத் தழுவினன்' என்பது என்? நளிநீர்

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,

விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும்

அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். 59

தயரதன் இராமனிடம் தன் உளக் கருத்தைக் கூறுதல்[தொகு]

ஆண்டு, தன் மருங்கு இரீஇ, உவந்து, அன்புற நோக்கி,

'பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக

நீந்த தோள் ஐய! நிற் பயந்தெடுத்த யான், நின்னை

வேண்டி, எய்திட விழைவது ஒன்று உளது' என, விளம்பும். 60


'ஐய! சாலவும் அலசினென்; அரும்பெரு மூப்பும்

மெய்யது ஆயது; வியல் இடப் பெரும் பரம் விசித்த

தொய்யல் மா நிலச் சுமை உறு சிறை துறந்து, இனி யான்

உய்யல் ஆவது ஓர் நெறி புக, உதவிட வேண்டும். 61


'"உரிமை மைந்தரைப் பெறுகின்றது, உறுதுயர் நீங்கி,

இருமையும் பெறற்கு" என்பது பெரியவர் இயற்கை;

தருமம் அன்ன நின் -தந்த யான், தளர்வது தகவோ?

கருமம் என்வயின் செய்யின், என் கட்டுரை கோடி. 62


'மைந்த! நம் குல மரபினில் மணி முடி வேந்தர்,

தம் தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க,

ஐந்தொடு ஆகிய முப் பகை மருங்கு அற அகற்றி,

உய்ந்து போயினர்; ஊழி நின்று எண்ணினும் உலவார். 63


'முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப்

பின்னை எய்திய நலத்தினும், அரிதினின் பெற்றேன்;

இன்னம், யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்,

நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ? 64


'ஒருத்தலைப் பரத்து ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி

எருத்தின், ஈங்கு நின்று, இயல்வரக் குழைந்து, இடர் உழக்கும்

வருத்தம் நீங்கி, அவ் வரம்பு அறு திருவினை மருவும்

அருந்தி உண்டு, எனக்கு; ஐய! ஈது அருளிடவேண்டும். 65


'ஆளும் நன்னெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக

நாளும் நம்குல நாயகன் நறைவிரி கமலத்

தாளின் நல்கிய கங்கையைத் தந்துதந் தையரை

மீள்வில் இலா உலகு ஏற்றினான் ஒருமகன் மேனாள். 66


'மன்னர் வானவர் அல்லர்; மேல் வானவர்க்கு அரசாம்

பொன்னின் வார்கழல் புரந்தரன் போலியர் அல்லர்;

பின்னும், மாதவம் தொடங்கிநோன்பு இழைத்தவர் பிறரார்

சொல்ம றாமகன் பெற்றவர் அருந்துயர் துறந்தார். 67


'அனையது ஆதலின், "அருந்துயர் பெரும்பரம் அரசன்

வினையின் என்வயின் வைத்தனன்" எனக்கொளல் வேண்டா

புனையும் மாமுடி புனைந்திந்த நல்லறம் புரக்க

நினையல் வேண்டும் யான் நின்வயிற் பெறுவதுஈது என்றான். 68

தயரதன் கட்டளையை ஏற்று இராமன் முடிசூடிக் கொள்ள இசைதல்[தொகு]

தாதை அப் பரிசு உரைசெய, தாமரைக் கண்ணன்

காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; 'கடன் இது' என்று உணர்ந்தும்,

'யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ,

நீதி எற்கு?' என நினைந்தும், அப் பணி தலைநின்றான். 69

இராமன் உடன்பட்டதை அறிந்து தயரதன் மகிழ்ந்து, தன் அரண்மனை போதல்


குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான்,

'தருதி இவ் வரம்' எனச் சொலி, உயிர் உறத் தழுவி,

சுருதி அன்ன தன் மந்திரச் சுற்றமும் சுற்ற,

பொரு இல் மேருவும் பொரு அருங் கோயில் போய்ப் புக்கான். 70

இராமன் தன் அரண்மனை அடைதல்[தொகு]

நிவந்த அந்தணர் நெடுந்தகை மன்னவர் நகரத்து

உவந்த மைந்தர்கள், மடந்தையர், உழைஉழை தொடரச்

சுமந்திரன் தடந் தேர்மிசை, சுந்தரத் திரள் தோள்

அமைந்த மைந்தனும், தன் நெடுங் கோயில் சென்று அடைந்தான். 71

தயரதன் மன்னர்களுக்கு செய்தி தெரிவிக்குமாறு ஓலை போக்குதல்[தொகு]

வென்றி வேந்தரை 'வருக' என உவணம் வீற்றிருந்த

பொன் திணிந்த தோட்டு அரும் பெறல் இலச்சினை போக்கி,

'நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு, நல்லோய்!

சென்று, வேண்டுவ வரன்முறை அமைக்க' எனச் செப்ப, 72

வந்திருந்த மன்னர்களிடம் இராமனுக்கு முடிபுனைவிக்கக் இருப்பதை தயரதன் தெரிவித்தல்[தொகு]

உரிய மாதவன் ஒள்ளிதென்று உவந்தனன், விரைந்தோர்

பொருவில் தேர்மிசை அந்தணர் குழாத்தொடும் போக-

'நிருபர்! கேண்மின்கள் இராமற்கு நெறிமுறை மையினால்

திருவும் பூமியும் சிந்தையில் சிறந்தன' என்றான். 73

தயரதன் கூறியதைக் கேட்ட மன்னர்கள் மகிழ்து தம் கருத்தை தெரிவித்தல்[தொகு]

இறைவன் சொல்லெனும் இன் நறவு அருந்தினர் யாரும்,

முறையில் நின்றிலர்; முந்துறு களியிடை மூழ்கி,

நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர,

உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார். 74


ஒத்த சிந்தையர் உவகையின்; ஒருவரின் ஒருவர்

தத்தமக்கு உற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர்;

முத்த வெண்குடை மன்னனை முறை முறை தொழுதார்;

'அத்த! நன்று' என, அன்பினோடு அறிவிப்பது ஆனார். 75


'மூவெழு முறைமை எம் குலங்கள் முற்றுறப்

பூவெழு மழுவினால் பொருது போக்கிய

சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு

ஆவ இவ்வுலகம்; இ·து அறன்' என்றார் அரோ. 76

மன்னர்களின் கருத்தை மீண்டும் அறிய தயரதன் வினவுதல்[தொகு]

வேறிலா மன்னரும் விரும்பி, இன்னது

கூறினார்; அது மனம் கொண்ட கொற்றவன்,

ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான்,

மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான். 77


'மகன்வயின் அன்பினால் மயங்கி, யான் இது

புகல, நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம்,

உகவையின் மொழிந்ததோ? உள்ளம் நோக்கியோ?

தகவு என நினைந்தது எத் தன்மையால்?' என்றான். 78

இராமனுக்கு முடிசூட்ட இயைந்ததற்கான காரணத்தை மன்னர்கள் இயம்புதல்[தொகு]

இவ்வகை உரைசெய இருந்த வேந்துஅவை,

'செவ்வியோய்! நின் திருமகற்குத் தேயத்தோர்

அவ்வவர்க்கு, அவ்வவர் ஆற்ற ஆற்றும்

எவ்வம் இல் அன்பினை, இனிது கேள்' எனா, 79


தானமும், தருமமும், தகவும், தன்மைசேர்

ஞானமும், நல்லவர்ப் பேணும் நன்மையும்,

மானவ! எவையும் நின் மகற்கு வைகலும்

ஈனமில் செல்வம் வந்து இயைக என்னவே. 80


'ஊருணி நிறையவும், உதவும் மாடுயர்

பார்கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்

கார் மழை பொழியவும் கழனி பாய்நதி

வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்? 81


'பனை அவாம் நெடுங்கரப் பரும யானையாய்!

நினையவாம் தன்மையை நிமிர்ந்த மன்னுயிர்க்கு,

எனையவாறு அன்பினன் இராமன், ஈண்டு அவற்கு

அனையவாறு அன்பின அவையும்' என்றனர். 82

மன்னர்கள் கூறியதைக் கேட்டு தயரதன் மகிழ்ந்துரைத்தல்[தொகு]

மொழிந்தது கேட்டலும், மொய்த்து நெஞ்சினைப்

பொழிந்த பேர் உவகையன், பொங்கு காதலன்,

'கழிந்தது ஓர் இடரினன்' எனக் களிக்கும் சிந்தையன்,

வழிந்த கண்ணீரினன், மன்னன் கூறுவான்: 83

தயரதன் இராமனை மன்னர்க்கு அடைக்கலம் எனல்[தொகு]

'செம்மையின், தருமத்தின், செயலின், தீங்கின்பால்

வெம்மையின் ஒழுக்கத்தின், மேன்மை மேவினீர்,

என்மகன் என்பதுஎன்? நெறியின், ஈங்கு, இவன்

நும் மகன்; கையடை; நோக்கும் ஈங்கு' என்றான். 84

தயரதன் முடிசூட்டு விழாவிற்கு நல்ல நாள் பார்த்தல்[தொகு]

அரசவை விடுத்தபின், ஆணை மன்னவன்,

புரை தபு நாளடு பொழுது நோக்குவான்

உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு, ஒரு

வரை பொரு மண்டபம் மருங்கு போயினான். 85

மிகைப் பாடல்கள்[தொகு]

'மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்துநீ

பன்னரும் தவம்புரி பருவம் ஈது' எனக்

கன்ன மூலத்தினில் கழற வந்தென

மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்


தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்

ஆங்கொரு நரையது ஆய் அணுகிற் றாம் எனப்

பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி

ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்.

[இவ் இரு பாடல்களும் முதல் பாடலின் முன் படலத்தின் துவக்கத்தில் உள்ளன]


எய்திய முனிவரன் இணைகொள் தாமரை

செய்ய பூங் கழலவன் சென்னி சேர்ந்த பின்,

'வையகத்து அரசரும் மதி வல்லாளரும்

வெய்தினில் வருக' என மேயினான் அரோ. 4-1


ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைவினன் ஆகி,

நாளும் நல் தவம் புரிந்து, நல் நளிர் மதிச் சடையோன்

தாளில் பூசையின் கங்கையைத் தந்து, தந்தையரை

மீள்வு இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன், மேல்நாள். 66-1


'நறைக் குழற் சீதையும், ஞால நங்கையும்,

மறுத்தும், இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ-

கறுத்த மா மிடறுடைக் கடவுள் கால வில்

இறுத்தவற்கு அன்றி?' என்று இரட்டர் கூறினார். 76-1


'ஏத்த வந்து உலகு எலாம் ஈன்ற வேந்தனைப்

பூத்தவன் அல்லனேல், புனித வேள்வியைக்

காத்தவன் உலகினைக் காத்தல் நன்று' என,

வேத்தவை வியப்புற, விதர்ப்பர் கூறினார். 76-2


'பெருமையால் உலகினைப் பின்னும் முன்னும் நின்று

உரிமையோடு ஓம்புதற்கு உரிமை பூண்ட அத்

தருமமே தாங்கலில் தக்கது; ஈண்டு ஒரு

கருமம் வேறு இலது' எனக் கலிங்கர் கூறினார். 76-3


'கேடு அகல் படியினைக் கெடுத்து, கேடு இலாத்

தாடைகை வலிக்கு ஒரு சரம் அன்று ஏவிய

ஆடக வில்லிக்கே ஆக, பார்!' எனாத்

தோடு அவிழ் மலர் முடித் துருக்கர் சொல்லினர். 76-4


'கற்ற நான்மறையவர் கண்ணை, மன்னுயிர்

பெற்ற தாய் என அருள் பிறக்கும் வாரியை,

உற்றதேல் உலகினில் உறுதி யாது?' என,

கொற்றவேல் கனை கழல் குருக்கள் கூறினார். 76-5


'வாய் நனி புரந்த மா மனுவின் நூல் முறைத்

தாய் நனி புரந்தனை, தரும வேலினாய்!

நீ நனி புரத்தலின் நெடிது காலம் நின்

சேய் நனி புரக்க!' எனத் தெலுங்கர் கூறினார். 76-6


'வையமும் வானமும் மதியும் ஞாயிறும்

எய்திய எய்துப; திகழும் யாண்டு எலாம்,

நெய் தவழ் வேலினாய்! நிற்கும் வாசகம்;

செய் தவம் பெரிது!' எனச் சேரர் கூறினார். 76-7


'பேர் இசை பெற்றனை; பெறாதது என், இனி?

சீரியது எண்ணினை; செப்புகின்றது என்?

ஆரிய! நம் குடிக்கு அதிப! நீயும் ஒர்

சூரியன் ஆம்' எனச் சோழர் சொல்லினார். 76-8


ஒன்றிய உவகையர்; ஒருங்கு சிந்தையர்

தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும்,

'என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற,

நின்றது நிலை' என நினைந்து கூறினார். 76-9


'வாள் தொழில் உழவ! நீ உலகை வைகலும்

ஊட்டினை அருள் அமுது; உரிமை மைந்தனைப்

பூட்டினை ஆதலின், பொரு இல் நல் நெறி

காட்டினை; நன்று' எனக் கங்கர் கூறினர். 76-10


'தொழு கழல் வேந்த! நின் தொல் குலத்துளோர்

முழு முதல் இழித்தகை முறைமை ஆக்கி, ஈண்டு

எழு முகில் வண்ணனுக்கு அளித்த இச் செல்வம்

விழுமிது, பெரிது!' என மிலேச்சர் கூறினார். 76-11


'கொங்கு அலர் நறு விரைக் கோதை மோலியாய்!

சங்க நீர் உலகத்துள், தவத்தின் தன்மையால்,

அங்கணன் அரசு செய்தருளும் ஆயிடின்' -

சிங்களர்-'இங்கு இதில் சிறந்தது இல்' என்றார். 76-12


ஆதியும் மனுவும் நின் அரிய மைந்தற்குப்

பாதியும் ஆகிலன்; பரிந்து வாழ்த்தும் நல்

வேதியர் தவப் பயன் விளைந்ததாம்' என,

சேதியர் சிந்தனை தெரியச் செப்பினார். 76-13


'அளம் படு குரை கடல் அகழி ஏழுடை

வளம் படு நெடு நில மன்னர் மன்னனே!

உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள்

விளம்பினை பெரிது!' என விராடர் கூறினார். 76-14