கம்பராமாயணம்/யுத்த காண்டம்/வருணன் அடைக்கலப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

வருணன் தோன்றுதல்

எழு சுடர்ப் படலையோடும் இரும் புகை எழும்பி எங்கும் வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான், அழுது அழி கண்ணன், அன்பால் உருகிய நெஞ்சன், அஞ்சித் தொழுது எழு கையன், நொய்தின் தோன்றினன், வழுத்தும் சொல்லான். 1

வருணன் அச்சத்தோடு இராமன் முன்னே வருதல்

'நீ எனை நினைந்த தன்மை, நெடுங் கடல் முடிவில் நின்றேன் ஆயினேன் அறிந்திலேன்' என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க, காய் எரிப் படலை சூழ்ந்த கருங் கடல் தரங்கத்தூடே, தீயிடை நடப்பான் போல, செறி புனற்கு இறைவன் சென்றான். 2

வந்தனன் என்ப மன்னோ, மறி கடற்கு இறைவன்; வாயில் சிந்திய மொழியன், தீந்த சென்னியன், திகைத்த நெஞ்சன், வெந்து அழிந்து உருகும் மெய்யன், விழுப் புகைப் படலம் விம்ம, அந்தரின் அலமந்து, அஞ்சி, துயர் உழந்து, அலக்கண் உற்றான். 3

இராமனைத் திருவடியில் விழுந்து, வருணன் அபயம் வேண்டுதல்

'நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின், கவயம் நின் சரணம் அல்லால், பிறிது ஒன்று கண்டது உண்டோ? இவை உனக்கு அரியவோதான்; எனக்கு என வலி வேறு உண்டோ? அவயம், நின் அவயம்!' என்னா, அடுத்து அடுத்து அரற்றுகின்றான். 4

'ஆழி நீ; அனலும் நீயே; அல்லவை எல்லாம் நீயே; ஊழி நீ; உலகும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே; வாழியாய்! அடியேன் நின்னை மறப்பெனோ? வயங்கு செந் தீச் சூழுற உலைந்து போனேன்; காத்தருள் - சுருதி மூர்த்தி! 5

'காட்டுவாய் உலகம்; காட்டிக் காத்து, அவை கடையில் செந் தீ ஊட்டுவாய்; உண்பாய், நீயே; உனக்கும் ஒண்ணாதது உண்டோ? தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய வீட்டுவாய்; நினையின், நாயேற்கு இத்தனை வேண்டுமோதான்? 6

'சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருட் காடு சாய்க்கும் மண்டலத்து உறையும் சோதி வள்ளலே! மறையின் வாழ்வே! பண்டை நான்முகனே ஆதி சராசரத்து, உள்ளப் பள்ளப் புண்டரீகத்து வைகும் புராதனா! போற்றி, போற்றி! 7

'"கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்! மறையில் கூறும் எள்ளல் ஆகாத, மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள வள்ளலே! காத்தி" என்ற மா கரி வருத்தம் தீர, புள்ளின்மேல் வந்து தோன்றும் புராதனா! போற்றி! போற்றி! 8

'அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே; பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே; என்னை, "நீ இகழ்ந்தது" என்றது எங்ஙனே? ஈசன் ஆய உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?' 9

பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை, மா இருங் கரத்தால், மண்மேல் அடியுறையாக வைத்து, 'தீயன சிறியோர் செய்தால், பொறுப்பதே பெரியோர் செய்கை; ஆயிர நாமத்து ஐயா! சரணம்' என்று அடியில் வீழ்ந்தான். 10

இராமன் சினம் தணிதல்

பருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படராநின்ற உருப் பெறக் காட்டி நின்று, 'நான் உனக்கு அபயம்' என்ன, அருப்பு அறப் பிறந்த கோபம் ஆறினான், ஆறா ஆற்றல் நெருப்பு உறப் பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான். 11

இரந்த போது வாராமல், சினந்த போது வந்த காரணத்தை இராமன் வினாவ, வருணன் தொழுது உரைத்தல்

'ஆறினாம்; அஞ்சல்; உன்பால் அளித்தனம் அபயம்; அன்பால் ஈறு இலா வணக்கம் செய்து, யாம் இரந்திட, எய்திடாதே, சீறுமா கண்டு வந்த திறத்தினைத் தெரிவதாகக் கூறுதி, அறிய' என்றான்; வருணனும், தொழுது கூறும்: 12

'பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு வார்த்தையின் அறிந்தது அல்லால், தேவர்பால் வந்திலேன், நான்; தீர்த்த! நின் ஆணை; ஏழாம் செறி திரைக் கடலில் மீனின் போர்த் தொழில் விலக்கப் போனேன்; அறிந்திலேன் புகுந்தது ஒன்றும்.' 13

இராமன், தம் அம்பிற்கு இலக்கு யாது என வருணனைக் கேட்டல்

என்றலும், இரங்கி, ஐயன், 'இத் திறம் நிற்க; இந்தப் பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என்? புகறி' என்ன, 'நன்று' என வருணன் தானும், 'உலகத்து நலிவு தீர, குன்று என உயர்ந்த தோளாய்! கூறுவல்' என்று கூறும்: 14

'மன்னவ! மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார், அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார், அவுணர் ஆயோர், தின்னவே உலகம் எல்லாம் தீந்தன; எனக்கும் தீயார்; மின் உமிழ் கணையை வெய்யோர்மேல் செல விடுதி' என்றான். 15

வருணன் வேண்டியபடி, இராமன் மருகாந்தாரத்து அவுணரை அழித்தல்

நேடி, நூல் தெரிந்துளோர்தம், உணர்விற்கும், நிமிர நின்றான், 'கோடி நூறு ஆய தீய அவுணரைக் குலங்களோடும் ஓடி நூறு' என்று விட்டான்; ஓர் இமை ஒடுங்கா முன்னம், பாடி நூறாக நூறி மீண்டது, அப் பகழித் தெய்வம். 16

ஆய்வினை உடையர் ஆகி, அறம் பிழையாதார்க்கு எல்லாம் ஏய்வன நலனே அன்றி, இறுதி வந்து அடைவது உண்டோ? மாய் வினை இயற்றி, முற்றும் வருணன்மேல் வந்த சீற்றம், தீவினை உடையார்மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே. 17

பாபமே இயற்றினாரை, பல் நெடுங் காதம் ஓடி, தூபமே பெருகும் வண்ணம், எரி எழச் சுட்டது அன்றே, தீபமே அனைய ஞானத் திரு மறை முனிவர் செப்பும் சாபமே ஒத்தது அம்பு; - தருமமே வலியது அம்மா! 18

வருணனிடம் இராமன் வழி வேண்டுதல்

'மொழி உனக்கு அபயம் என்றாய்; ஆதலான், முனிவு தீர்ந்தேன்; பழி எனக்கு ஆகும் என்று, பாதகர் பரவை என்னும் குழியினைக் கருதிச் செய்த குமண்டையைக் குறித்து நீங்க, வழியினைத் தருதி' என்றான், வருணனை நோக்கி, வள்ளல். 19

தன் மேல் சேது கட்டிச் செல்லுமாறு வருணன் உரைத்தல்

'ஆழமும் அகலம் தானும் அளப்ப அரிது எனக்கும், ஐய! ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை; வாழியாய்! வற்றி நீங்கில், வரம்பு அறு காலம் எல்லாம் தாழும்; நின் சேனை உள்ளம் தளர்வுறும் - தவத்தின் மிக்காய்! 20

'கல்லென வலித்து நிற்பின், கணக்கு இலா உயிர்கள் எல்லாம் ஒல்லையின் உலந்து வீயும்; இட்டது ஒன்று ஒழுகா வண்ணம் எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென், இனிதின்; எந்தாய்! செல்லுதி, "சேது" என்று ஒன்று இயற்றி, என் சிரத்தின் மேலாய்.' 21

சேது கட்டப் பணித்து, இராமன் இருக்கைக்குச் செல்ல, வருணனும் தன் இருக்கை நோக்கிச் செல்லுதல்

'நன்று, இது புரிதும் அன்றே; நளிர் கடல் பெருமை நம்மால் இன்று இது தீரும் என்னில், எளிவரும் பூதம் எல்லாம்; குன்று கொண்டு அடுக்கி, சேது குயிற்றுதிர்' என்று கூறிச் சென்றனன், இருக்கை நோக்கி; வருணனும் அருளின் சென்றான். 22

மிகைப் பாடல்கள்

என்று உரைத்து, இன்னும் சொல்வான்: 'இறைவ! கேள்: எனக்கு வெய்யோர் என்றும் மெய்ப் பகைவர் ஆகி, ஏழு பாதலத்தின் ஈறாய் நின்றுள தீவின் வாழ்வார், நிமல! நின் கணையால், ஆவி கொன்று எமைக் காத்தி!' என்றான்; குரிசிலும் கோறலுற்றான். 15-1