உள்ளடக்கத்துக்குச் செல்

கருத்துக் கண்காட்சி/ஈழம் தந்த தாமோதரனார்

விக்கிமூலம் இலிருந்து

அச்சுப் பதிப்புப் பகுதி

7. ஈழம் ஈந்த தாமோதரனார்

‘பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க வேண்டும்’ என்னும் ஒரு தொடரை நாம் அடிக்கடிப் பலர் வாயிலாகக் கேட்டு வருகின்றோம். பெற்ற பிள்ளையினையும் நன்கு பேணிக் காக்க வேண்டும். இந்தக் கருத்து இலக்கியத் துறைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

உலகத்தின் மூத்த மொழிகளுள் ஒன்றாகிய தமிழ் மொழியில் இப்போது பல நூல்கள் இருப்பதை நாம் அறிவோம். இதற்குமுன் இருந்து அழிந்துபோன மிகப் பலவான நூல்களை நோக்க, இப்போது இருக்கும் பல நூல்கள் எனப்படுபவை, சில நூல்கள் என்று சொல்லத்தக்க அளவில் சிறுபான்மையினவேயாகும். தமிழ் நூல்களுள் சென்றன போக நின்றன சிலவே. சென்றனவே பல. இந்த இமாலயப் பேருண்மையை, தமிழ்நாட்டு வரலாறும் தமிழ்மொழி-இலக்கிய வரலாறும் அறிந்தவர்கள் நன்கு உணர்வர்-ஒத்துக்கொள்வர்.

பிறந்த இலக்கியம், இலக்கணம், இன்னும் மற்ற மற்ற கலை நூல்களையெல்லாம் பேணிக் காக்காமையினாலன்றோ பெரும்பாலன அழிந்து போயின. இந்நிலையில், பிறந்த இலக்கிய இலக்கண நூல்களுள் சிலவற்றையாயினும் பேணிக் காத்து நமக்குக் கிடைக்குமாறு செய்த பெருமக்களைப் பற்றி எவ்வளவு போற்றிப் புகழினும் தகுமே! இலக்கிய இலக்கணக் கலைநூல்களையெல்லாம் இயற்றிய பேரறிஞர்களைப் போலவே, அவற்றை இறவாமல் பேணிக் கரத்து நம் கையில் கிடைக்கச் செய்த பெருமக்கள் மிகவும் இன்றியமையாதவர்கள் அல்லவா? அத்தகைய மாபெருஞ் சான்றோர்களின் வரிசையில் முன்னணியில் குறிப்பிடத் தக்கவர் ஈழம் ஈன்ற தமிழ்ப் பேரறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களாவார்.

தமிழகத்தில் தமிழ் ஒரளவு ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் திகழ்கின்ற இந்தக் காலத்திலுங் கூட, அச்சிட்ட உயரிய பழம்பெருந்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை விரும்பிப் படிக்கும் தமிழர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இந்நூல்கள் அச்சிடப் படாமல் பனையோலைச் சுவடிகளிலேயே இருக்குமாயின், படிக்க முன்வருபவர் யாவர்? எத்துணையர்? இந்த இரங்கத்தக்க எளிய நிலையில் ஒருசிலராயினும் படிக்க உதவும் வகையில், பொருளைப் பொருட்படுத்தாது துணிந்து, பழம்பெருந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பனையோலையிலிருந்து தாளில் அச்சிட்டுத் தந்த முதல் பெருமை நம் மதிப்பிற்கு உரிய சி.வை. தாமோதரனா ருடையதாகும்.

தமிழில் தொல்காப்பியம், தொல்காப்பிய உரைகள், இறையனார் களவியல், வீரசோழியம், இலக்கண விளக்கம், கலித்தொகை, சூளாமணி, தணிகைப் புர்ாணம், நீதிநெறி விளக்கம் முதலியவை மிக்க உயர்தரமுடைய இன்றி யமையாத நூல்கள் என்பதை நாம் அறிவோம். இந் நூல்களை முதல் முதலாக ஒலைச் சுவடியிலிருந்து அச்சில் பதிப்பித்தவர் நம் தாமோதரம் பிள்ளையவர்களே. இவர் கி.பி. 1881ஆம் ஆண்டு வீரசோழியமும், 1883-இல் தணிகைப் புராணமும், 1885-இல் தொல்காப்பியமும், 1887-இல் கலித்தொகையும், 1889-இல் இலக்கண விளக்கமும் சூளாமணியும் அச்சில் பதிப்பித்தார். தொல் காப்பியத்தின் மூன்று பகுதிகளும் இவரால் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இது விலை மதிக்கவொண்ணாத தமிழ்த் தொண்டாகும். இங்கே, ‘தமிழ்த் தாத்தா' எனத் தமிழ் மக்களால் செல்லமாக அழைக்கப்பெறும் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் பதிப்பிலே உள்ள சிறப்பு என்ன? அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்புரையும், ஆராய்ச்சி முன்னுரையும், அடிக்குறிப்புகளுமே அவர்தம் பதிப்பிற்குச்சிறப்பு அளிப்பன வாகும். இத்தகைய சிறப்பு, இந்தத் துறையில் முன்னோடியாக விளங்கிய தாமோதரம் பிள்ளையவர்களின் பதிப்புகளில் முன்னமேயே இடம் பெற்றிருந்தது. நூல்கட்கு முன்னால் பிள்ளையவர்கள் எழுதியுள்ள ஆராய்ச்சி உரைகள், படிப்போர்க்கு நூல்களை நன்கு அறிமுகம் செய்து அந்நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டின. மற்றும் இந்த ஆராய்ச்சிக் குறிப்புகள், தமிழ்மொழி இலக்கிய - இலக்கண ஆராய்ச்சியாளருக்கும் பெருந்துணை புரிவன வாகும். இவர்தம் ஆராய்ச்சி உரைகள் மிகவும் வன்மையும் நுண்மையும் வாய்ந்தவை; படிப்போரை இனிய நகைச் சுவை நடையாலும் இன்புறுத்துபவை.

தாமோதரனார் நூல்களை ஓலைச் சுவடிகளிலிருந்து அச்சில் பதிப்பிக்கும் பணியில் அரும்பாடு பட்டுள்ளார். ஒரே நூலின் பல ஓலைச் சுவடிப் படிகளை ஒத்திட்டு நோக்கிப் படித்துப் பார்ப்பார்: பெரும்பான்மையான சுவடிகளில் ஒரே மாதிரியாயிருக்கும் பாடத்தையே உண்மையான பாடமாக எடுத்துக்கொள்வார். சிறுபான்மையான சுவடிகளில் உள்ள வேறுபாட்டைப் பாட வேறுபாடுஅதாவது, பாடபேதம்-பிரதிபேதம் என்னும் பெயரில் அடியில் குறிப்பிடுவார். இவரது பதிப்பின் அடிக்குறிப்புகள் (Foot Notes) ஆராய்ச்சியாளர்க்குப் பேருதவி புரிவனவாகும். உரையிடையே காணப்படும் மேற்கோள் செய்யுள் ‘இன்ன நூலில் உள்ள இத்தனையாவது செய்யுளாகும்’

என்று தெரிவிக்கும் விவரம், அருஞ்சொல் உரை விளக்கம் முதலியனவும் இவரது அடிக்குறிப்பில் காணப்படும்.

தாமோதரனார் பழம்பெரும் புலவர்களின் நூல்களைப் பதிப்பித்து இலக்கிய-இலக்கணம் காத்தவர் என்னும் பெருமைக்கு உரியவரானதன்றி, தாமும் பல நூல்கள் இயற்றித் தமிழை வளப்படுத்தியுள்ளார். இவர் இயற்றிய நூல்களுள் கட்டளைக் கலித்துறை, ஆதி ஆகம கீர்த்தனம், நட்சத்திர மாலை, சூளாமணி வசனம், சைவ மகத்துவம், ஆறாம்ஏழாம் வகுப்புகட்கு உரிய வாசகப் பாடநூல்கள் முதலிய படைப்புகள் சிறப்பாகக் குறிப்பிடற்பாலன. இவரது நூல் நடையில் உவமை, உருவகம் முதலிய அணிகளின் சிறப்புகளைக் கண்டு களிக்கலாம்.

இவர் முழு நூல்கள் பல இயற்றியதன்றி, பல பொருள்கள் பற்றித் தனிப்பாடல்கள் பலவும் பாடியுள்ளார். தமிழ்ப்பேர்றிஞர்களின் மேல் பாடல் பாடுவதில் இவருக்குப் பெரு மகிழ்ச்சி உண்டு. தம் தமிழாசிரியர் சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயர் மேல் இவர் பல பாடல்கள் பாடியுள்ளார். தாம் அச்சில் பதிப்பித்த ஒவ்வொரு நூலின் முன்னுரையிலும் தம் தமிழாசிரியர் மீது நன்றி வணக்கப்பாடல்கள் பாடிச் சேர்த்துள்ளார். கம்பர் தமக்குப் பொருளுதவி புரிந்து ஆதரித்த சடையப்ப வள்ளலைத் தம் இராமாயண நூலிலும், வில்லி புத்துாரார் தம்மை ஆதரித்த வரபதியாட் கொண்டானைத் தம்பாரத நூலிலும் நடு நடுவே பாடி நன்றிக் காணிக்கை செலுத்தியிருப்பதை நாமறிவோம். மற்றும், பல்வேறு புலவர்கள் தம்மைப் பொருளுதவியால் புரந்த புரவலர்கள்-வள்ளல்கள் -குறுநிலமன்னர்கள்-முடியுடைப் பேரரசர்கள் முதலானோரைப் பாடி நன்றிக்கடன் செலுத்தியிருக்கும் வரலாறு நாடறிந்ததே. ஆனால், தமக்குத் தமிழ் கற்பித்த

தமிழாசிரியரைப் பற்றி ஒவ்வொரு நூலிலும் பாடியுள்ள புதுமையாளரை - புரட்சியாளரை நாம் தாமோதரம் பிள்ளையின் வடிவத்தில் முதல் முதலாகக் கண்டு பெரு வியப்பு எய்துகிறோம். ஐரோப்பியக் கல்வி முறை வந்து விட்டமையால், தமிழின மாணாக்கர்களே தமிழாசிரியர்களை எள்ளி நகையாடிப் புறக்கணிக்கத் தொடங்கிய காலத்தில், ஆங்கிலம் கற்று B.A., B.L., பட்டம் பெற்ற தாமோதரம் பிள்ளையவர்களால் இந்தப் புதுமைப் புரட்சி நடந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அவ்வளவு ஏன்? பிள்ளையவர்கள் தம் தமிழாசிரியரை வணங்கிப் பாடியுள்ள ஒரு நேருக்கு நேர் பார்த்துத் தான் விடுவோமே:

“எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்தசெந் நாவினன்
முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சுன்னா
கத்துயர் மரபினோன் முத்துக் குமார
வித்தகன் அடிதலை வைத்து வாழ்த் துவனே.”

இப்பாடல் வீர சோழிய நூற் பதிப்புரையின் முகப்பில் உள்ளது.

தாமோதரனார் பிற பேரறிஞர்களைப் பாராட்டிப் பாடியிருப்பது போலவே, இவரையும் பிற பேரறிஞர்கள் சிலர் பாராட்டிப் பாடியுள்ளனர். பிள்ளையவர்களின் அச்சுப் பதிப்பின் சிறப்பினை, குமாரசாமி புலவர் என்பார் பின்வருமாறு புகழ்ந்து பாடியுள்ளார்:

“ஏட்டில் இருந்த அருந்தமிழ் நூல்கள் எனைப்பலவும்
தீட்டி வழுக்களைந்து அச்சினில் ஆக்குபு செந்தமிழ்
சேர்
நாட்டில் அளித்துயர் தாமோ தரேந்திரன் நண்ணு
புகழ்
பாட்டில் அடங்கும் தகைத்தோ புலவர்கள் பாடு
தற்கே”

குமாரசாமி புலவரேயன்றி, பரிதி மாற் கலைஞர் என அழைக்கப் பெறும் வி.கோ. சூரிய நாராயண சாத்திரி ,

“காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போல்
நாமோது செந்தமிழின் நன்னூல் பல தொகுத்த
தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றஎவர்
தாமோ தரமுடையார்தண்டமிழ்ச் செந் நாப்புலவீர்”

என இருபொருள் படப் பாடி, தாமோதரம் பிள்ளை என்னும் பெயரை வைத்து விளையாடியுள்ளார். தஞ்சாவூர் சதாவதானச் சுப்பிரமணிய ஐயர் என்பவரோ, மிக நயமாகப் பாடியுள்ளார்:

“சொல்துளைத்த நாவலர்கள் எழுதிவைத்த முதுவீர
சோழி யத்தைச்
செல்துளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி விரவாத
சென்னா ளேட்டிற்
பல்துளைத்து வண்டுமணல் உழுதவரி எழுத்தெனக்
கொள் பரிசி னாய்ந்து
கல்துளைத்த எழுத்தா அச் சிட்டனன்தா மோதர
னாம் கலைவல் லோனே”

எத்துணை அழகான புகழ்ச்சி பாருங்கள்! இம்மட்டுமா! தாமோதரனாரின் அச்சுப் பதிப்பின் சிறப்பினை இன்னும் புலவர் பலர் பலவாறு பாராட்டிப் பாடியுள்ளனர். புரசை அஷ்டாவ தானம் சபாபதிப் புலவர் என்பார், இராமன் கல்லை மிதித்து அருந்ததி, ஆக்கினாற் போல, தாமோதரர் சிறந்த ஒலைச் சுவடிகளை அழகிய அச்சு நூல்களாக ஆக்கியுள்ளார் என்று பாடியுள்ளார். கோப்பாய் வித்துவான் சபாபதி பிள்ளை என்பவரோ, தாமோதரரால் ஒலையிலிருந்து அச்சு நூல் வெளி வந்தது,மாயையிலிருந்து உலகம் வந்தது, போலவும்-ஒரு வகை

இந்திரசாலம் போலவும் இருக்கிறது என்று பாடியுள்ளார். திரிசிர புரம் சோடாவதானம் சுப்புராயச் செட்டியார் என்பவரோ, சுந்தரர் நீர் இல்லாத குளத்திலிருந்து நீரையும் முதலையையும் வரவழைத்து, அம் முதலை வாயிலிருந்து, அம் முதலை முன்பு விழுங்கிய சிறுவனை மீட்டுக் கொடுத்தாற் போல, ஒடிந்தும் மக்கியும் சிதைந்து போன ஒலைச் சுவடிகளிலிருந்து உயரிய நூல்களைத் தாமோதரனார் உரிய முறையில் மீட்டுத் தந்தார் என்று பாடியுள்ளார். சொர்ண நாதபுரம் சதாவதானம் இராமசாமி செட்டியார் என்பவர், ஞான சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கியது போல் தாமோதரர் துளை போட்ட ஒலைச் சுவடிகளை விலை போட்ட அச்சுச் சுவடிகளாக ஆக்கியுள்ளார் என்று பாடியுள்ளார். கல்லைப் பொன்னாக்கும் ஒருவகை இரசவாதம் போன்றது, தாமோதரரின் அச்சுப் பதிப்பு முயற்சி, என்று சுன்னாகம் அ.குமாரசாமி புலவர் கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் இருக்கட்டும்! தாமோதரம் பிள்ளை இறுதி எய்தியபோது, பழம் பெரும் பனையோலைச் சுவ்டிப் பதிப்பின் மாமன்னராகப் போற்றப் பெறும் டாக்டர் உ.வே.சாமிநாந ஐயர் அவர்களே, ‘பாம்பின கால் பாம்பறியும்’ என்றபடி, தாமோதரரின் பதிப்பின் சிறப்பைப் போற்றிப் புகழ்ந்து பாடி, அவரது பிரிவினால் ஏற்பட்ட தமது ஆற்றாமையை அறிவித்துள் ளார்கள். இதோ பாடல்

‘தொல்காப் பியமுதலாம் தொன்னூல் களைப்பதிப்
பித்து
ஒல்காப் புகழ்மேவி உயர்ந்தபண்பின்-அல்காத
தாமோ தரச்செல்வன் சட்டக நீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே’

இவ்வாறாகப் பதிப்பாசிரியர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களாலேயே பாராட்டப் பெற்ற தாமோதரரின் பதிப்பின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக, அவர் தொடக்கத்தில் பதிப்பித்த வீரசோழியத்தை எடுத்துக் கொள்வோம். இது, 1881 ஆம் ஆண்டு-தமிழ் விசு ஆண்டு சித்திரைத் திங்களில் பதிப்பிக்கப் பெற்றது. நூலின் முகப்பில் ‘டிம்மி’ தாள் அளவில் முப்பது பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிப் பதிப்புரை எழுதியிருக்கிறார் தாமோதரர். இந்த ஆராய்ச்சியைக் கொண்டு தாமோதரர் எத்தகையவர் என நாம் படம் பிடித்துக் கொள்ளலாம். அவர்தம் ஆராய்ச்சியான புரட்சிக் கருத்துகளைக் கொண்டு அவரை அடையாளம் கண்டுகொள்ளலாம். பதிப்புரையின் தொடக்கத்தில் கடவுள் வணக்கம், கலைமகள் வணக்கம், தமிழாசிரியர் வணக்கம், அவையடக்கம் ஆகிய நான்கும் முறையே இடம் பெற்றுள்ளன.

பதிப்புரையைத் தொடர்ந்து, அதிகார அகராதி, படல அகராதி, செய்யுள் முதற்குறிப்பு அகராதி ஆகியன அமைத்துள்ளார். நூலின் இடையிடையே, பக்கங்களின் அடியில் தமது சொந்தக் குறிப்பு எழுதியுள்ளார். அந்த அடிக்குறிப்பில் பயனுள்ள பல்வேறு வகை விளக்கங்கள் உள்ளன. பதிப்பின் இறுதியில் பிழை திருத்தமும் அச்சிட்டுள்ளார். இந்த அச்சுப் பதிப்பிற்காக அவர் பட்ட பாட்டினைப் பற்றி அவரே எழுதியுள்ள வரிகள் வருமாறு;

'...எனக் கிடந்த ஏட்டுப் பிரதிகளோடு பட்ட பிரயாசைக்குப் பிரயாசை என்னும் சொல் போதுமா? முதலினின்று முடிவு வரைக்கும் ஒரொரு வரி ஒரொரு நொடியாகவே கொண்டுழைத்தோம் ... பிரதிகளின் ஏடுகளை ஒன்றை விட்டு ஒன்று பிரித்து எடுத்ததே பேரற்புத மாயிற்று ...'

இவ்வாறு இவரே எழுதியிருப்பதைக் கொண்டு இவரது அச்சு முயற்சியின் அருமைப் பாட்டினை அறியலாம். இவர் எழுதியுள்ள பல பகுதிகளைக் கொண்டு, இவர் பல கோணங்களில் தமிழுக்குப் பணிகள் பல புரிந்துள்ளமை புலனாகும். பெரிய வள்ளலாகவும் திகழ்ந்த இவருக்குத் தமிழ்மீது முறுகிய பற்று இருந்தது. ‘தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்று பாவேந்தர் பாரதிதாசனார் இருபதாம் நூற்றாண்டில் பாடினார். ஆனால், தாமோதரனாரோ, இதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே செயலில் செய்து காட்டினார். எவரேனும் தமிழ் மொழியைத் தாழ்த்திப் பேசுவரேல், தாமோதரர் சிறிதும் பொறார். அவர்களை வன்மையாகக் கண்டித்து இடித்துரைப்பார்.

இதோ இன்னொரு தமிழ்த் தொண்டு: கல்லூரியில் அன்று தமிழ் எடுத்துப் படித்தோருக்கு-ஏன்- இவ்வாறு கூறும் போதே வியப்பாயிருக்கிறதா? ஆம்! இன்றும் தமிழர் சிலர், முதல் மொழியாக ஆங்கிலத்தையும் இரண்டாவது மொழியாகத் தமிழ் அல்லாத வேறு ஏதேனும் ஒரு மொழியையும் கற்று, தமிழ் அறியாமலேயே தப்பித்துக் கொண்டு போவதைக் காணும் போது, அன்று, பலர், கல்லூரியில் தமிழ் எடுத்துப் படிக்காததில் வியப்பு இல்லை.

இந்த நிலையில், அன்று, கல்லூரியில் தமிழ் எடுத்துப் படித்தோருக்கு, தாமோதரனார் பேச்சுப் போட்டியும் பாட்டுப் போட்டியும் கட்டுரைப் போட்டியும் வைத்துப் பரிசளித்து வந்தார். அவ்வாறு இவரிடம் பரிசு பெற்றவர்களுள் பரிதி மாற் கலைஞராம் சூரியநாராயண சாத்திரியாரும் ஒருவராவார்.

இன்னும் இவர், சுன்னாகம் குமார சாமி புல்வரைக் கொண்டு, யாழ்ப் பாணத்தில் உள்ள கீரிமலைச் சிவன் மேல் ‘நகுலேசர் ஊஞ்சல்’ என்னும் நூல் இயற்றச்செய்து தம் கைப்பொருள் உதவியால் வெளியிடுவித்தார். அச்சிவன்கோவிலில் ஆண்டு தோறும் விழா நடைபெற்று வர நிலையான நிதியும் எழுதிவைத்துள்ளார்.

தாமோதரனாரின் மற்றொகு தமிழ்த் தொண்டும் ஈண்டு குறிப்பிடத் தக்கது. இவர் யாழ்ப்பாணத்திலே ‘ஏழாலை’ என்னும் இடத்தில் ஒரு தமிழ்ப் பள்ளி நிறுவினார். அதில் குமாரசாமி புலவர், முருகேசப் பண்டிதர் ஆகியோரை ஆசிரியர்களாய் அமர்த்திப் பலர்க்கும் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்பிக்கச் செய்து தமிழ்க் கல்வி முறையைப் பரப்பினார். அன்று இது மிகப் பெரிய தமிழ்த் தொண்டாகும்.

தாமோதரனார் பரந்த பண்பும் நண்பும் கொண்டு பழகுவதற்கு இனியவராகவும் திகழ்ந்தார். இவர்பால் தமிழால் நட்புப் பிணிப்புண்டு பழகி வந்த பெரியார்கள் மிகப் பலர். அவர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள், திருவாவடுதுறை ஆதீனத்துத் தலைவர் சுப்பிரமணிய தேசிக அடிகளார், பூண்டி-அரங்கநாத முதலியார், உ.வே. சாமிநாத ஐயர், வேதநாயகம்பிள்ளை, சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயர், பீதாம்பரப் புலவர், சேனாதிராயர், சுன்னாகம் அ. குமாரசாமி புலவர் முதலியோராவர். பிள்ளையவர்கள், புலவர் பெருமக்களுடன் கலந்து உறவாடி-உரையாடி அளவளாவி,

"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்’

என்னும் குறளுக்குச் சிறந்த இலக்கியமாகத் திகழ்ந்தார். இவரது சிறப்பிற்கு இன்னும் சான்றுகள் வேண்டுமா!

ஐயையோ! இங்கே இன்றியமையாத இன்னொரு பகுதியை மறந்துவிட்டோமே! அதுதான் தாமோதரம் பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பகுதி. இதோ அது:-

அப்போது இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்திருந்த இலங்கையில், சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவ நாதப்பிள்ளை என்பார்க்கு, கி.பி. 1832 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் இவர் பிறந்தார். பட்டுக்கோட்டையில் ‘செமினரி’ என்னும் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற தாமோதரர், சித்திரக் கவியில் வல்ல சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயரிடம் தனியே இலக்கிய இலக்கணங்களை முறையாகத் திறம் பெறக் கற்றுத் தேர்ந்தார். பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகம் 1857 ஆம் ஆண்டு முதல் முதலாக நடத்திய B.A. தேர்வில் முதல் முதலாக இவர் தேர்ச்சி பெற்றார். B.A. பட்டத்தைத் தொடர்ந்து B.L. பட்டமும் பெற்றார்.

இவர் தம் வாழ்க்கையில் பல்வேறு தொழில்கள் புரிந்துள்ளார். நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் பாடலாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் விளங்கிய தாமோதரனார் கல்வி பயிற்றும் ஆசிரியராகவும் பணி புரிந்தார். முதலில் இவர் 1852 ஆம் ஆண்டு கோப்பாய் என்னும் ஊரில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர்களைப் பயிற்றும் ஆசிரியர்க்கு ஆசிரியராய்ப் பணியாற்றினார். 1857 ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையில் உள்ள அரசினர் கல்லூரியின் முதல்வர் பதவி ஏற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் குழுவிலும் (Board of Examiners) இடம்பெற்றிருந்தார். மற்றும் இவர் பத்திரிகை ஆசிரியர் பதவியையும் விட்டுவைக்க வில்லை. ‘தினவர்த்த மானி’ என்னும் தமிழ் இதழின் ஆசிரியராகவும் வேலை செய்தார்.

இம்மட்டுமா? சிறிது காலம் சென்னையில் ‘அரசியல் வரவு செலவுக் கணக்கு’ நிலையத்தின் தலைவராக நற்பெயருடன் தொண்டாற்றினார். B.A., B.L. பட்டம் பெற்ற இவர், சில்லாண்டுகள் வழக்கறிஞர் வேலை பார்க்கவும் தவறவில்லை. 1887 ஆம் ஆண்டு முதல் புதுக்கோட்டை உயர்நீதி மன்றத்தின் நீதியந் தலைவராய்ப் பொறுப்பேற்று, சமன்செய் துலாக்கோல்போல் அமைந்து, ஒருபால் கோடாது, காய்தல்-உவத்தல் அகற்றி, நடுநிலைத் தீர்ப்பு வழங்கி நற்புகழ் பெற்று விளங்கினார்.

அன்றைய அரசாங்கம் இவரது பண்பினைப் பாராட்டு முகத்தான், இவருக்கு ‘இராவ் பகதூர்’ என்னும் சிறப்புப் பட்டம் அளித்துச் சிறப்பு பெற்றது.

இவ்வாறாக, தாமோதரனார் ஏறக்குறைய அறுபத்தொன்பதாண்டு காலம் சிறப்புடன் வாழ்ந்து 1901 ஆம் ஆண்டு சனவரி முதல்நாள் இயற்கை எய்தினார். அந்தோ! இறக்கும் தறுவாயில் அகநானூறு பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அது முடியுமுன்பே தாம் முடிந்து \விட்டார். இயற்கையை யாரால் வெல்ல முடியும்?