உள்ளடக்கத்துக்குச் செல்

கருத்துக் கண்காட்சி/கம்பர் காட்டும் கயிறு இழுப்புப் போட்டி

விக்கிமூலம் இலிருந்து

போட்டி விளையாட்டுப் பகுதி

21. கம்பர் காட்டும் கயிறு இழுப்புப்
போட்டி

கயிறு இழுப்புப் போட்டிகளைப் பலரும் பார்த்திருக்கலாம். காட்டாக, இருவர் பெயர்களை எடுத்துக் கொள்ளலாம். கண்ணன் ஒருவன், கடம்பன் மற்றொருவன் கண்ணனுக்கும் கடம்பனுக்கும் கயிறு இழுப்புப் போட்டி நடப்பதாக வைத்துக் கொள்வோம்.

குறிப்பிட்ட ஒரு திடலின் தெற்குப் பக்கம் கண்ணன் நிற்கிறான்; அவன் எதிரே-வடக்குப் பக்கம் கடம்பன் நிற்கிறான். இருவரும் வன்மையான ஒரு கயிற்றின் முனைகளைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறார்கள். அதாவது, கயிற்றின் ஒரு நுனி கண்ணன் கையிலும் மற்றொரு நுனி கடம்பன் கையிலும் உள்ளன. இருவரும் வலிமை கொண்ட மட்டும் எதிர்-எதிர்ப் பக்கம் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருவ்ரும் ஒத்த வலிமை உடையவராயின் கயிறு அறுபடும்; அல்லது. கயிறு அறுபடாமல், இருவரும் இருந்த இடத்திலேயே நின்று கொண்டிருப்பார்கள்.

கண்ணன் கடம்பனைக் காட்டிலும் மிக்க வலிமை உடையவனாயிருப்பின், கடம்பனை இழுத்துத் தன் பக்கம் போட்டுக் கொள்வான். கடம்பன் கண்ணனைக் காட்டிலும் மிக்க வலிமை உடையவனாயிருப்பின், கண்ணனை இழுத்துத் தன் பக்கம் போட்டுக் கொள்வான். இவற்றுள் ஏதாவது ஒன்றுதான் நடைமுறையில் நிகழக் கூடும்.

இவ்வாறின்றி, இருவரும் வன்மையுடன் கயிற்றை எதிர்-எதிர்ப் பக்கலில் இழுக்கும்போது, கண்ணன் கடம்பன் இருக்கும் இடத்திலும் கடம்பன் கண்ணன் இருக்கும் இடத்திலும் மாறி வந்து நிற்பார்கள் என்றால், அது மிகவும் வியப்பிற்கு உரியதல்லவா? இத்தகைய வியப்பைத்தான் கம்பர் காட்டும் கயிறு இழுப்புப் போட்டியில் காணமுடிகிறது. இதன் விளக்கம் வருமாறு:-

இங்கே கயிறு இழுப்புப் போட்டி நடத்துபவர்கள் இராமனும் சீதையும் ஆவர். விசுவாமித்திரருடன் இராமன் மிதிலைத் தெரு ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருக்கிறான். அந்தத் தெருவில் உள்ள ஒரு மாளிகையின் மாடியில் சீதை நின்றுகொண்டிருக்கிறாள். ஒருவரை யொருவர் உற்று நோக்குகின்றனர். இருவரின் கண்களும் ஒன்றை யொன்று கவ்வி உண்ணுகின்றன; உணர்வு ஒன்றிய நிலையில் அண்ணலும் அவளை நோக்கிக்கொண்டிருக்கிறான்-அவளும் அவனை நோக்கிக்கொண்டிருக்கிறாள்.

கூரிய நுனி உடைய வேல் போன்ற அவளுடைய கண் பார்வை அவனுடைய தோள்களில் ஆழ்ந்து பதிந்து விட்டன. அவனுடைய பார்வை அவளுடைய மார்பகத்தில் தைத்துக் கொண்டன. இவற்றை அறிவிக்கும் கம்ப ராமாயணப் பாடல்களாவன:

"எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்."

"நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல்இணை
ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன;
வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும்
தாக்கணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே”

இவை, பால காண்டம்-மிதிலைக் காட்சிப் படலத்தில் உள்ள பாடல்கள். இனிமேல்தான் கயிறு இழுப்புப் போட்டி அறிவிக்கப்படுகிறது:-

இருவரும் பற்றி இழுக்கும் கயிறு என்பது இருவரின் நோக்குதான்-பார்வைதான்; இழுக்கும் கைகள் இருவரின் உள்ளங்களே. இராமன் தன் உள்ளமாகிய கைகளால் நோக்காகிய கயிற்றைக் கொண்டு சீதையைத் தன் பக்கம் இழுக்கிறான்; சீதையும் தன் உள்ளமாகிய கைகளால் தன் நோக்காகிய கயிற்றைக் கொண்டு இராமனைத் தன் பக்கம் இழுக்கிறாள். இருவரும் சமமான காதல் வலிமை உடையவா்கள்.

உலகத்தில் நடைபெறாத இந்த வியத்தகு கயிறு இழுப்புப் போட்டியில், இராமன் சீதையின் இதயத்திலும், சீதை இராமனது இதயத்திலுமாக இடம் மாறிப் புகுந்து அடைகின்றனர். இதை அறிவிக்கும் பாடலாவது:

"பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து;
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்”.

மேற் கூறிய பாடல்களின் அடுத்த பாடல் இது. இப் பாடலில், பாசம் என்பது கயிறு ஆகும். ஈர்த்தல் என்பது இழுத்தல் ஆகும். நோக்கம் கயிறாகும்; உள்ளம் கைகளாகும்.

ஆங்கிலத்தில் “Tug of War" என்று கூறப்படும் கயிறு இழுப்புப் போட்டி, இவ்வாறு எங்கேயாவது இடம் மாறி அடையும்படி நடந்திருக்கிறதா?

இந்த இடமாற்றம், கம்பன் காட்டும் கயிறு இழுப்புப் போட்டியில் நடைபெற்றிருப்பது வியப்பிற்கு உரியதன்றோ!




சுந்தர சண்முகனாரின்
உழைப்புகளுள் சில:

ரூ. கா
மலர் மணம் (புதினம்) 015 00
தமிழ் அகராதிக் கலை (தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது) 035 00
தமிழ் இலத்தீன் பாலம் 020 00
பணக்காரர் ஆகும் வழி (இந்திய அரசின் பரிசு பெற்றது) 005 00
தமிழ் நூல் தொகுப்புக் கலை 030 00
History of Tamil Lexicography (தமிழக அரசின் பரிசு பெற்றது) 005 00
கெடிலக்கரை நாகரிகம் 050 00
அம்பிகாபதி காதல் காப்பியம் 020 00
கெடில வளம் 010 00
மர இனப் பெயர்த் தொகுதி I 200 00
மர இனப் பெயர்த் தொகுதி II 200 00
கௌதமப் புத்தர் காப்பியம் (புதுவை அரசின் ஐயாயிரம் ரூபாய் பரிசு பெற்றது) 030 00
உலகு உய்ய! 030 00
பாரதிதாசரொடு பல ஆண்டுகள் 012 00
இனியவை நாற்பது-இனிய உரை 003 00
கருத்துக் கண்காட்சி 024 00
உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு 015 00
இலக்கியத்தில் வேங்கட வேலவன் 006 00