உள்ளடக்கத்துக்குச் செல்

கருத்துக் கண்காட்சி/கோடீசுவரர் ஆக வேண்டுமா?

விக்கிமூலம் இலிருந்து

பொருளியல் பகுதி

15. கோடீசுவரர் ஆக வேண்டுமா?

நம் பாட்டன். பூட்டன் காலத்தில் ஆயிரம் உரூபா பெறுமானம் உள்ள உடைமைக்கு உரியவர் பெரிய பணக்காரராக மதிக்கப் பெற்றார். நாளடைவில் ஆயிரக்கணக்கு போய், பதினாயிரக் கணக்கில் உடையவரே பெருஞ் செல்வராகக் கருதப் பெற்றார். இந்த அளவும் மதிப்பு இழந்து போக, நம் காலத்தில் நூறாயிரக் (இலட்சக்) கணக்கில் பொருள் உடையவரே பெருஞ் செல்வராக மதிக்கப் பெறுகிறார்-அதாவது, இலட்சாதிபதி எனப் போற்றப் பெறுகிறார். இப்போது இந்த அளவும் அடிபட்டு விட்டதாகத் தெரிகிறது. கோடிக் கணக்கில் பொருள் உடையவரே இனிச் செல்வர் என்னும் பெயர் பெற முடியும். இது இன்றைய நம் நாட்டுச் சூழ்நிலை, அயல் நாடுகள் சிலவற்றில் கோடீசுவரர்கள் என்றோ பெருகி விட்டனர்.

இலட்சத்திற்கு உரியவர்கள் அதிபதி அதாவது அரசர் (இலட்சாதிபதி) என்னும் பெருமைக்கு உரியவராகக் கருதப் பட்டனர். கோடிக்கு உரியவரோ, ஈசுவரர்” அதாவது ‘கடவுளர்’ (கோடி- ஈசுவரர்=கோடீசுவரர்) என்னும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

உலகில் தாம் கோடீசுவரர் ஆகவேண்டும் என விரும்பாதவர் எவரும் இலர் என்று அடியேன் அடித்துக் கூறுவேனேயாயின், ஒரு சிலர் என்மேல் சினம் கொள்ளக் கூடும். எனவே, தாம் கோடீசுவரர் ஆகவேண்டும் என விரும்பாதவர் ஒரு சிலரே என்றாவது கூறி அடியேன் தப்பித்துக் கொள்ளும் வழியைப் பார்க்கவேண்டும்.

அவா யாரை விட்டது; எவ்வளவு சேர்ந்தாலும் போதவில்லை; ஆம்-போதவேயில்லை, என்ன செய்வது! அதனால்தான் திருமூலர், அவா அறுங்கள் என,

“ஆசை அறுமின் ஆசை அறுமின்!
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்!”

என்று தம் திருமந்திர நூற்பாடல் வாயிலாக அறிவுறுத்தி யுள்ளார், திருமூலர் என்றோ எழுதி விட்டாரே! எவரேனும் ஆசையை விட்டார்களா? மக்களின் ஆசை வெள்ளத்தை அணைபோட்டு அடக்கிவிட முடியாது. அவர்களை எந்த வகையிலாயினும் கோடீசுவரர்களாக ஆக்கியே தீரவேண்டும். அதற்குப் பல வழிகள் உள்ளன; அவற்றுள் அரிய வழிகளும் உள்ளன- எளிய வழிகளும் உள்ளன. இப்போது நமக்குத் தேவை எளிய வழியே-கோடீசுவரர் ஆவதற்கு ஓர் எளிய வழி கண்டுபிடிப்போமே! ஆனால், அதைக் கண்டுபிடிக்கும்.அரிய முயற்சியும் நமக்குத் தேவையில்லை. திருவள்ளுவர் ஓர்எளிய வழியைக் கண்டுபிடித்துக் கூறிச் சென்றுள்ளார். இதோ அந்த வழி:

"இல்லையென மறைப்பாரிடம் அல்ல-மறைக்காது கொடுப்பவரிடத்தும், மனம் கசந்து கொடுப்பவரிடம் அல்ல-மனம் கசக்காது கொடுப்பவரிடத்தும், முன் பின் அறியாத யாரோ ஒருவரிட மல்ல-மறைக்காமல் மனம் உவந்து கொக்கக் கூடிய கண்போன்ற வள்ளல்களிடத்துங் கூட ஒன்று வேண்டும் என இரந்து கேட்காதவரே கோடீசுவரர் ஆவார்"-என்பதுதான் வள்ளுவர் கூறியுள்ள எளிய வழி. இந்தக் கருத்து,

‘கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்’-(1061)

என்னும் குறளில் பொதிந்து கிடக்கிற தல்லவா? இதிலிருந்து இன்னொரு கருத்தும் தெரிய வருகிறது."எவ்வளவு செல்வம் பெற்றிருப்பினும், இன்னொருவரிடம் சென்று ஓர் உதவிநாடுபவர் ஏழையாகவே கருதப்படுவர்-என்பதுதான் அந்தக் கருத்து.

ஆனால், உலகச் சமுதாய வாழ்க்கையில் வாணாள் முழுதும் ஒரு முறையாயினும் ஒருவரிடமாயினும்-ஓர் உதவியாயினும் நாடாமல் இருப்பது எவர்க்கும் இயலாத தொன்றாகும்-என்னும் இமாலயப் பேருண்மை தெரியாமல் இல்லை-புரியாமல் இல்லை. எனினும், இயன்றமட்டும் இன்னொருவரிடம் சென்றுயாதோ ருதவியும்வேண்டா திருப்பதே சாலச் சிறந்தது என உறுதியாக உணர்ந்து, அதற் கேற்ப முயன்று உழைத்துத் தம் சொந்தக் காலில் நிற்கப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த ஆற்றல் பெற்றவர் ஒன்றும் இலராயினும் கோடீசுவரரே யாவார் என்பது வள்ளுவர் கருத்து என்றாலும், கோடியின் பெறுமான் அளவை வள்ளுவர் அறியாதவர் அல்லர்.

'ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பிறபிற' (337)

‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’(377)

'அடுக்கிய கோடி பெறினும் குடிப் பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்’-(954).

‘கொடுப்பது உம் துய்ப்பது உம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்’-(1005)

முதலிய குறள்களால், வள்ளுவர் உணர்ந்துள்ள கோடியின் பெறுமான மதிப்பு நமக்குப் புரியாமற் போகவில்லை. இருப்பினும்,கோடிக்கணக்கில் செல்வம்இருந்தும் இன்னொருவரிடம் உதவிவேண்டுபவரினும் ஒன்றும் இல்லாவிடினும் ஒருவரிடம் சென்று உதவி வேண்டாதவரே உண்மையான கோடீசுவரர் என்னும் கருத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ளல் வேண்டும்.

‘இரவாமை கோடியுறும்' என்னும் குறள்பகுதியிலுள்ள 'கோடி’ என்னும் சொல்லுக்குப் பரிதியார், காலிங்கர் ஆகிய பழைய உரையாசிரியர்களைப் போல, அடியேன், கோடி செல்வம் எனப் பொருள் கொண்டுள்ளேன். ஆனால் பரிமேலழகர் கோடி மடங்கு எனப் பொருள் கொண்டுள்ளார். இது பொருந்தாது. இவர்,

'பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி யுறும்’- (816)

“நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்-" (817)

முதலிய குறள்களில் கொண்டாற்போல் ஈண்டும் கோடி மடங்கு எனப் பொருள் கொண்டிருப்பது பொருந்தாது. இந்தக் குறள்களில், இன்னாரது நட்பினும் இன்னாரது பகை கோடி மடங்குமேல்’ என்னும் கருத்து அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பு.

‘கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்’ (1061)

என்னும் குறளில் இல்லை என்பதை, ஆழ்ந்த இலக்கியப் பயிற்சி உடையோர் எளிதில் உணரலாம். எனவே, பரி மேலழகரின் பக்தர்கள் எளியேன்மேல் பாயாமல் நடுநிலை நின்று ஆய்ந்து உண்மை காண்பாராக!

இங்கே பரிமேலழகரை மறுத்துள்ளதின் காரணம் 'இரவாதவர் கோடீசுவரர் ஆவர்’ என்னும் உண்மைக் கருத்து-அதாவது, ஆசிரியர் வள்ளுவர் சொல்ல எண்ணிய கருத்து நமக்குத் தெளிவாகக் கிடைக்காது'-என்பதேயாம். வேண்டுமானால் பரிமேலழகரின் உரைப்பகுதி முழுவதையும் இங்கே தருகிறேனே!:

‘தமக்கு உள்ளது கரவாது, இவர் வரப் பெற்றேம் என்று மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல், இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று என்றவாறு' -

பரிமேலழகர் உரையில், வள்ளுவனார் எண்ணிய கருத்து தெளிவுபடுத்தப்பட வில்லை என்பது புலனாகுமே! அவர் இரந்து செல்வம் எய்தலின் என்பதை வலிந்து வரவழைத்து எழுதியுள்ளார். வேண்டாத இந்த வலிந்த வரவழைப்பு இல்லையேல், அவரது கருத்து சரிவராது. எனவேதான், மாபெருஞ் சிறப்பிற்கு உரிய பரிமேலழகரை மறுத்து உண்மைக் கருத்தை உணர்த்த வேண்டியதாயிற்று.

உலகில் உண்மையான கோடீசுவரர்கள் உருவாவதற்கு எளிய முறையில் வழி வகுத்துத் தந்த வள்ளுவனார் புகழ் வண்தமிழுடன் வாழ்க!