உள்ளடக்கத்துக்குச் செல்

கருத்துக் கண்காட்சி/தமிழில் ஒப்புமைக் கலை

விக்கிமூலம் இலிருந்து

கலைகளின் தாய்ப் பகுதி

18. தமிழில் ஒப்புமைக் கலை

(1. ஒப்புமைக்கலை; 2. தமிழில் ஒப்புமைக்கலை; 3. தொல்காப்பியத்தில் ஒப்புமைக்கலை; 4. பிற்கால நூல் களில் ஒப்புமைக்கலை;5.ஒப்புமைக் கலையின் எதிர்காலம்)

1. ஒப்புமைக் கலை

ஒப்புமை இலக்கணம்

(1) ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’-(1)

என ஒப்புமை விளக்கத்துடன் திருவள்ளுவர் திருக்குறளைத் தொடங்கியுள்ளார். எல்லா எழுத்துகளும் ‘அ’ என்னும் எழுத்தை முதலாக உடையன; அதுபோல உலகம் இறை வனை முதலாக உடையது'-என்பது குறள் கருத்து. நன்கு தெரியாத ஒன்றை விளக்குவதற்கு இது போன்றது. அது’ என நன்கு தெரிந்த ஒன்றை மாதிரியாக எடுத்துக்காட்டு வதுதான் ஒப்புமை எனப்படுவது. இதனை உவமம், உவமை என்றும் கூறுவர். ‘அகர முதல எழுத்தெல்லாம் என்பது உவமம். அதன் வாயிலாக விளக்கப்படும் பொருள் ஆதி பகவன் முதற்றே உலகு என்பது.

ஒப்புமை ஒரு கலை:

(2) பேச்சிலோ எழுத்திலோ பொருள் விளக்கத்திற்குப் பொருத்தமான ஒர் உவமம் எடுத்துக்காட்டும் திறமையில் ஒப்புமைக் கலை பிறக்கிறது. ஒருவர் தாம் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்குக் கையாளும் ஒப்புமை யின் நுட்பச்சிறப்பைக் கொண்டு உயர்ந்த எழுத்தாளராக 

சிறந்த பேச்சாளராக மதிக்கப்படுவது உண்டு. வள்ளுவரின் உவமைகள், கம்பரின் உவமைகள், காளிதாசரின் உவமைகள், சேக்சுபியரின் உவமைகள் முதலிய தலைப்பு களில் எழும் சொற்பொழிவுகளும் எழுத்துப்படைப்புகளும் ஒப்புமை காட்டும் திறனை ஒரு கலையாக்கிக் காட்டி, ஒப்புமை ஒரு கலை என்பதற்குப் போதிய சான்றுகளாய் ‘நிற்கின்றன.

இயற்கைக் கலை:

(3) ஒப்புமைக்கலை கற்றறிந்த அறிஞர்களின் தனியுடை மையன்று. ஒப்புமைக்கலை ஒர் இயற்கைக்கலை; விலை கொடுத்துக் கல்விகற்றுத் தெரிந்து கொள்ள வேண்டாத ஒர் எளிய கலை. கல்லாத-எழுத்தறிவேயில்லாத எளிய மக்களும் கையாளும் ஒர் உயிர்க்கலை. மக்களிடையே பேச்சுக்குப் பேச்சு-கருத்துக்குக் கருத்து நாவில் ஒப்பு மைக்கலை நடமிடுவதைக் காணலாம்.

மக்கள் கலை:

(4)ஒரு நாள் காலை ஒரு சிற்றுாரில் நாட்டு மருத்துவர் ஒருவரிடம் நான் சென்றிருந்தேன். அப்போது எளிய தோற்ற முடைய அம்மையார் ஒருவர் இரு குழந்தைகளுடன் அங்கு வந்தார். அவர் மருத்துவரிடம் சிறிய குழந் தையைக் காட்டி இதற்கு இரவெல்லாம் ஈயச்சட்டிகாய்ந் தாற் போல் காய்ந்தது என்றும், பெரிய குழந்தையைக் காட்டி இதற்குஇரவெல்லாம் பெருச்சாளிக்குஇரைத்தாற். போல் இரைத்தது’ என்றும் கூறினார். எத்துனை பொருத் தமான உவம்ைகள் என எண்ணி யான் வியந்தேன். நாட்டு மருத்துவரிடம் காய்ச்சல் மானி (தெர்மாமீட்டர்)இல்லை. எனவே, காய்ச்சலின் அளவை நுனித்தறியக் காய்ந்த ஈயச்சட்டி ஒப்புமையாய் நின்று துணைபுரிகின்றது. இந்ததுறையில்பெருச்சாளி புரியும் பணியும் பெரியதே. இவ்வாறு மக்களின் பேச்சு வழக்கில் எடுத்ததற் கெல்லாம் ஒப்புமைச் சுவையைக் காணலாம். எந்த ஒப்புமையும் திடீ ரென உள்ளத்தில் தோன்ற வில்லையெனில், ‘என்னமோ சொல்லுவாங்களே அது போல’ என இனந் தெரியாத ஒப்புமையாவது மக்கள்கூறுவது இயல்பு. எனவே, ஒப்புமைக் கலை மக்கள் கலை என்பது போதரும்

தாய்மைக் கலை:

(5) ஒப்புமை ஒரு கலையாகத் - திகழ்வதன் றிப் பல் வேறு கலைகளின் தாயாகவும் விளங்குகிறது. ஒப்புமைக் கலையிலிருந்து பல கலைகள் பிறந்தன என்று கூறுவதனி னும், ஒப்புமைக் கலையே பல கலைகளாக மாறி உருவெ டுத்துள்ளது என்றுகூடக் கூறிவிடலாம் இசை, நடனம், நாடகம், ஒவியம், சிற்பம் முதலிய கலைகள் ஒப்புமைக் கலையின் அடிப்படையில் உருவானவையே. குறவஞ்சி குறி சொல்லுவதுபோல் இசையரங்கில் பாடுவதும்-நடன அரங் கில்ஆடுவதும்-நாடக அரங்கில்நடிப்பதும் உண்மையல்லவே.ஒப்புமையே யன்றோ? குறவஞ்சிபோல் தீட்டப்பட்ட ஒவிய மும்-அவளைப் பார்த்துப் பிடித்த புகைப்படமும்-அவள் போல் செதுக்கப்பட்ட சிற்பமும்-செய்யப்யட்ட சிலையும் பொம்மையுருவமும் உண்மையல்லவே-ஒப்புமைகள் தாமே! எனவே, இசை,நடனம், நாடகம்,நாட்டிய நாடகம், திரைப் படம், ஒவியம், புகைப்படம், சிற்பம், சிலை, வார்பப்டம், பொம்மை, கம்மியம், ஒப்பனை (அலங்காரம்) முதலிய கலைகளின் தாய்க்கலை ஒப்புமைக்கலையே என்பது தெளிவு

(6) ஈண்டு சிறப்பாக ஒவியக்கலையை எடுத்துக் கொள்வோம். ஒவ்வுவது ஒவியம், ஒவ்வுவது என்றால்  ஒத்திருப்பதுஎன்று பொருளாம். ஒவியத்திற்கு ஒவு, ஒவி, ஒவம் ஆகிய பெயர்களும் இலக்கியங்களில் உள்ளமை குறிப் பிடத்தக்கது.

(6.அ) சர்க்கரையின் இனிப்புச் சுவையைப் பல்வேறு இனிப்புப் பண்டங்களில்-பல்வேறு மாதிரிகளில் காண்பது போல, ஒப்புமைக்கலையைப் பல்வேறு கலைகளில்-பல்வேறு உருவங்களில் காண்கிறோம். அன்பே கடவுள்’ என்பது போல ஒப்புமையே கலைகள்’ என்று கூறிவிடலாம்போல் தோன்றுகிறது.

கருவிக்கலை (Tool Art):

(7) பேச்சுக்கலை, இலக்கியக்கலை, கற்பிக்குங்கலை முதலிய கலைகளின் வெற்றிக்கு ஒப்புமைக்கலை தக்க கருவியாய்ப் (ஆயுதமாய்ப்) பயன்படுகிறது. பேச்சாளரோ, எழுத்தாளரோ, இலக்கியப் புலவரோ, பாடம் பயிற்றும் ஆசிரியரோ, ஒப்புமைக்கலையின் உதவியின்றித் தம் தொழி லில் வெற்றி காணலரிது. இக்கலைஞர்கள் குறிப்பிட்ட ஒரு கருத்தை விளக்க, காலத்தோடு காலம்-இடத்தோடு இடம் -ஆளோடு ஆள்-பொருளோடு பொருள்-நிகழ்ச்சியோடு நிகழ்ச்சி ஆகியவற்றை ஒப்பிட்டுக்காட்டித் தம் தொழிலில் உயர்வு பெறுகின்றனர். எனவே தான், ஒப்புமைக்கலை ஒரு கருவிக்கலை’ எனப்படுகிறது.

வாழ்க்கைக் கலை:

(8) உயிர் வாழ்க்கையே ஒப்புமைக்கலையின் அடிப்படையின் மேல்தான் நடக்கிறது. குழந்தைகள் பிறரைப் பார்த்துப் பின்பற்றி அவர்கள் செய்வதுபோல் செய்து தான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்கின்றனர். பெரியவர் களுங்கூட ஒருவரைப் பார்த்து ஒருவர் வாழ்கின்றனர். சூழ்நிலையின்உணர்வைத் தாமும் கொள்ளும் 'ஒத்துணர்வு’ (Sympathy), பிறர் குறிப்பறிந்து அவர் விரும்புவதுபோல் நடக்கும் குறிப்பறிதல்’ (Suggestion), பிறர் நடப்பதைப் பார்த்து அதுபோலவே நடக்கும் பின்பற்றல் (Imitaiton), பெரியவர்கள் உண்மையாகச் செய்வதைப் பார்த்துக் குழந் தைகள் தாமும் அதுபோல் கற்பனையாக விளையாடும் விளையாட்டு (Play) ஆகியவற்றை உளவியலார் (Psychologists)உள்ளத்தின்பொதுப்போக்குகள் (GeneralTendencies) எனக் குறிப்பிடுகின்றனர். இந்தப் பொதுப் போக்குகளின் தொகுப்பே வாழ்க்கை எனலாம், உயிர்வாழ்க் கையின் அடிப்படையாகிய இந்தப் பொதுப் போக்குகட்கு அடிப்படை ஒப்புமைக்கலையே. எனவே, ஒப்புமைக்கலை வழிகாட்டும் வாழ்க்கைக் கலையாகும்.

(9) இதுகாறுங் கூறியவற்றால், ஒப்புமைக்கலையின்றி வேறு கலைகள் இல்லை என்பது மட்டுமன்று; ஒப்புமைக் கலையின்றி உயிர்வாழ்க்கையே இல்லை-உலக நடை முறையே இல்லை என்பதும் வெளிப்படை.

2. தமிழில் ஒப்புமைக்கலை

ஒப்புமைக் கலையின் தொன்மை

(10) இன்னும் உலகில் எத்தனையோ மொழிகட்குச் சொந்த எழுத்துகூட இல்லாத நிலையில், இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்டு முன்பே, அனைத்தும் தானாக உள்ள ஒப்புமைக்கலை தமிழ் மொழியில் பெற்றுள்ள-நம்ப முடியாத ஆனால் உண்மையான பெருவளர்ச்சியை எண் ணும் போது வியப்பினால் மெய்சிலிர்க்கிறது. இதுவரை முழு உருவில் கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் முதன்மையானது தொல்காப்பியர் இயற்றியதொல்காப்பியம் ஆகும். இஃது இற்றைக்கு மூவாயிரம்(கி.மு. 1000) ஆண்டுக்கு முற் பட்டது, இந்தப் பழம் பெரு நூலில் ஒப்புமைக்கலை சிறப் பிடம் பெற்றுள்ளது.'ஒப்புமை குறித்து முன்னோர்கள் இவ் விவ்வாறு கூறியுள்ளனர்’ என்று தொல்காப்பியர் கூறியிருப் பதிலிருந்து, அவருக்கும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஒப்புமைக் கலை தமிழில் சிறந்திருந்தது என உணரலாம். எனவே, தமிழ் ஒப்புமைக்கலையின் வயது ஐயாயிரத்திற் கும் மேற்பட்டதாகும் என உய்த்துணரலாம்.

மூன்று இலக்கணங்கள்:

(11) தொல்காப்பியத்தின் முப்பெரும் பிரிவுகளுள் முதலாவதான எழுத்ததிகாரத்தில் எழுத்துக்களைப் பற் றிய எழுத்திலக்கணமும் இரண்டாவதான சொல்லதிகாரத் தில் சொற்களைப் பற்றிய சொல்லிலக்கணமும், மூன்றாவ தான பொருளதிகாரத்தில் வாழ்க்கையைப்பற்றிய பொரு ளிலக்கணமும் கூறப்பட்டுள்ளன. இறுதியான பொருளதி காரத்திலேயே ஒப்புமிைக் கலை இடம்பெற்றுள்ளது.

. :12)’,( பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத் தின்ண்யியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப் பர்ட்டியல், உவமஇயல், செய்யுளியல், மரபியல் என ஒன் பது உட்பிரிவுகள் உள்ளன. இவ்வொன்பதனுள் முதல் ஐந்து இயல்கள் அகவாழ்வு-புறவாழ்வுஆகியஅகப்பொருள்புறப்பொருள்பற்றியன.மெய்ப்பாட்டியல் உள்ளத்துஉணர்ச் சிகளைப் பற்றியது. ஒப்புமை காட்டிக் கருத்து விளக்கம் செய்வது பற்றியது உவம இயல். செய்யுளியலோ, செய்யுள் இயற்றும் யாப்பு முறைகளைக் கூறுவது. இன்னின்ன பொருளை இப்படியிப்படி அழைப்பதுதான் மரபு என்று அறிவிப்பது மரபியல். இவற்றின் தொகுப்பே பொருள் இலக்கணமாகும். நான்கு இலக்கணங்கள்:

(13) இப்படியாகத் தொல்காப்பியக்காலம் வரை-ஏன் அதற்குப்பின்னும் பல நூற்றாண்டுகள் வரை தமிழிலக் கணம் மூன்று பிரிவாகக்கொள்ளப்பட்டுவந்தது. இடையில் ‘இறையனார் அகப்பொருள் என்னும் நூலின் உரைகார்ர் காலத்தில்-அதாவது சங்ககாலத்தை ஒட்டி, செய்யுளியற் றும் யாப்பு முறை, பொருளிலக்கணத்திலிருந்து பிரிந்து ‘யாப்பிலக்கணம் எனத் தனியிலக்கணப் பெயர் பெற்றி ருந்தது. எனவே இலக்கணம் நான்கு பிரிவின தாயிற்று.

ஐந்து இலக்கணங்கள்

(14) கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப பின், தொல் காப்பியப் பொருளதிகாரத்திலுள்ள உவம இயலையும் மெய்ப்பாட்டியல், செய்யுளியல் ஆகியவற்றிலிருந்து சில செய்திகளையும், சொல்லதிகாரத்தில் ஆங்காங்கே யுள்ள சில செய்திகளையும் பிரித்துத் தொகுத்தாற் போன்ற ஓர் உருவத்தில் அணியிலக்கணம்’ என ஒர் இலக்கணம் பிரிந்து எழுந்தது. இஃதுஞ் சேர இலக்கணம் ஐந்தாயிற்று. .

உவமை அணி:

(15) அணி என்பதற்கு அழகு, நகை (ஆபரணம்), அலங்காரம் முதலிய பொருள்கள் உள்ளன. கருத்துக்களை அழகாக-சுவையாக-அலங்காரமாக வெளியிடும் முறை களைக் கூறுவது அணியிலக்கணம். பிற்கால அணியிலக்கண நூல்களில் உவமை, உருவகம் முதலியனவாக நூறு அணி கள்வரை கூறப்பட்டுள்ளன. அணிகளுள் சிறந்தது-தலைமை யானது உவமை அணி. அதனால்தான் தொல்காப்பியர் உவமையை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக்கொண்டு ‘உவம இயல் என அதற்குத் தனியே ஓர் இயலே (chapter) செலவிட்டிருக்கிறார். மற்றும், அகத்திணையியல், பொருளியல் ஆகியவற்றிலும் உவமத்தைப் பற்றி ஒரளவு கூறியுள்ளார்.

ஒப்புமைக் கலை நூல்கள்:

(16) தொல்காப்பியத்திற்குப் பல நூற்றாண்டு கட்குப் பின் எழுந்த இலக்கண நூல்களுள் அணியிலக்கணமும் தனிப் பிரிவாக இடம் பெற்றுள்ளது. அணியிலக்கணத்தைப் பற்றிமட்டும் கூறும் நூல்களும் சில உள. சில நூல்கள் வடமொழி நூல்களைத் தழுவியுள்ளன. அணியிலக்கணம் கூறும் அனைத்து நூல்களும் உவமையைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளன. அந்நூல்களைப் பற்றிய விவரங்களைக் கால வாரியாகக் காண்பாம்:

(அ)அணியியல்-இஃது அணியிலக்கணம் மட்டும் கூறுவது; பிற்கால நூல்களுள் முந்தியது. ஆசிரியர் பெயரும் காலமும் தெரியவில்லை. நூலும் முழுதும் கிடைக்கவில்லை.

(ஆ) வீரசோழியம்-இஃது ஐந்து பிரிவுகளில் ஐந்திலக் கணமும் கூறுவது. ஆசிரியர் புத்தமித்திரனார். காலம் கி.பி. பதினோராம் நூற்றாண்டு. -

(இ) தண்டியலங்காரம்-இஃது அணியிலக்கணம் மட்டும்கூறுவது; வடமொழியிலுள்ள காவிய தரிசனம்’ என்னும்நூலைத் தழுவியது. ஆசிரியர் தண்டியாசிரியர். காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.

(ஈ) நன்னூல்-இஃது ஐந்திலக்கணமும் கூறுவது என்று சிலரும், எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றிலக் கணமே கூறுவது என்று சிலரும் மொழிகின்றனர். இப் போது நன்னூலின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரு பிரிவுகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர். காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு.

(உ) மாறனலங்காரம். இஃது அணியிலக்கணம் மட்டும் கூறுவது. ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர். காலம் கி.பி. பதினாறாம் நூற்றாண்டு.

(ஊ) இலக்கண விளக்கம்-இது தொல்காப்பியம் போல் பொருளதிகாரத்தில் அணியிலக்கணம் கூறுவது. ஆசிரியர் வைத்திய நாததேசிகர்-17 ஆம் நூற்றாண்டு.

(எ) தொன்னூல் விளக்கம்-ஐந்து பிரிவுகளில் ஐந்திலக் கணமும் கூறுவது. ஆசிரியர் பெஸ்கி (Beschi) என்னும் வீரமா முனிவர்-18 ஆம் நூற்றாண்டு.

(ஏ) முத்து வீரியம்-ஐந்து பிரிவுகளில் ஐந்திலக்கணமும் கூறுவது. ஆசிரியர் முத்து வீரநாவலர்-19 ஆம் நூற்றாண்டு

(ஐ) சந்திரா லோகம்-அணியிலக்கணம் மட்டும் கூறுவது. வடமொழி பெயர்ப்பு. ஆசிரியர் விசாகப் பெருமாள் ஐயர் -19 ஆம் நூற்றாண்டு. இவரே ஐந்திலக்கண வினாவிடை’ என்னும் ஐந்திலக்கண நூலும் எழுதியுள்ளார்.

- (ஒ) தண்டியலங்காரசாரம்- அணியிலக்கணம் மட்டும் கூறுவது. ஆசிரியர் தி.ஈ. சீநிவாசராகவாசாரியார்-19-29 -ஆம் நூற்றாண்டு.

அணிகளின் எண்ணிக்கை:

(17) பொருள் அணிகள் என்னும் பெயரில் தண்டியலங் காரத்தில் முப்பத்தைந்து அணிகளும், மாறனலங்காரத்தில் அறுபத்து நான்கு அணிகளும், சந்திரா லோகத்தில் நூறு அணிகளும் பேசப்பட்டுள்ளன. ஆசிரியர் ஒவ்வொருவரும் 

தாம் அழகென எண்ணியவற்றை யெல்லாம் அணிகள் என்க் கூறிவிட்டனர். ‘வாழ்க வாழ்க’ என வாழ்த்துவது வாழ்த்து அணியாம். இதனால்தான், ‘உட்கார்ந்தால் ஒர் அணி-ஓடினால் ஓர் அணியா’ என்று கேட்பவர்போல் தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் அணியிலக்கணக்காரர்களைச் சாடுகிறார். பிற்காலத்தில் புற்றீசல்கள்போல் எழுந்த அணிவகைகளை அணிகள் எனக் கூறப் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் ஒத்துக் கொள்ளவில்லை.

தலைமை அணி:

(18) பிற்கால ஆசிரியர்கள் அணிகள் என்னும் பெயரில் தெரிவித்திருக்கும் பல செய்திகளைத் தொல் காப்பியர் பல விடங்களில் வேறு பல பெயர்களில் வெளி யிட்டுள்ளார். மற்ற ஆசிரியர்கள் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று’ என்ற முறையில் பல அணிகளுள் ஒன்றாக உவமையைக் கூறியிருக்க, தொல்காப்பியர் உவமைக்குத் தனி இயல் (Section) வகுத்திருப்பது, ‘அணி களுள் த்லைமையானது உவமையணியே; அதிலிருந்துதான் வேறு பல அணிகள் பிரிந்தன என்னும் உண்மையை வலியுறுத்துகிறது. உவமை என்னும் நாட்டியக்காரி காவி யம் என்னும் நாட்டிய அரங்கில் பல்வேறு உருவம் தாங்கி நாட்டியம் ஆடுகிறாள், என்று சித்திர மீமாம்சை’ என்னும் நூலில் (16 ஆம்நூற்றாண்டு) அப்பைய தீட்சதர் என்னும் வடமொழி யாசிரியர் கூறியிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

3. தொல்காப்பியத்தில் ஒப்புமைக்கலை

உவமை இலக்கணம்:

(19) எந்த ஒருகலையும் பல்லாயிரம் ஆண்டு காலம் மக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து நின்ற பின்னரே எழுத்தாளர்களால் ஏட்டில் இடம்பெறும். பின்னர், அக்கலையை இப்படித்தான் கையாளவேண்டும் என்ற இலக்கண வரையறையும் ஏற்படும். அவ்வாறே ஒப்புமைக் கலைக்கும் தொல்காப்பியத்தில் இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது.

(20) நன்கு தெரியாத ஒரு பொருளை விளக்க, அப் பொருளோடு வினை(செயல்),பயன்,மெய் (வடிவ அமைப்பு), உரு (நிறம்) ஆகிய நான்கனுள் ஒன்றோ பலவோ ஒத்துள்ள நன்கு தெரிந்த வேறொரு பொருளை மாதிரியாக எடுத் துக்காட்டுவது உவமம் ஆகும். ஒப்புமை கூறுவது உவமம்ஒவ்வுவது உவமம்.

"வினைபயன் மெய் உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்.”
'விரவியும் வரூஉம் மரபின என்ப.'

என்பன தொல்காப்பிய நூற்பாக்கள். வினை, பயன், மெய், உரு ஆகியவை, சொல்ல வந்த பொருளுக்கும் ஒப்புமைப் பொருளுக்கும் இடையே உள்ள பொதுத் தன்மைகளாகும் என்னும் கருத்து, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஒப்புமைக் கலை பெற்றுள்ள உயர் வளர்ச்சியின் நுட்பத்தை அறிவிக்கிறது. எடுத்துக்காட்டுகள்:புலி யெனப் பாயும் மறவன்-இது வினையுவமம்; பாய்தல் -வினை. மழைபோல் பயன்படும் கை-இது பயன் உவமம். உடுக்கை போன்ற இடுப்பு-இது மெய் உவமம். பொன் போன்ற மேனி-இது உரு (நிறம்) உவமம். கலை நுட்பக் கருத்துக்கள்:

(21) உவமம் பற்றி இன்னும் எத்தனையோ கலை நுட்பக் கருத்துக்கள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில வருமாறு:

உவமை கூறுவதாயின் உண்மையான ஒப்புமைப் பொருத்தம் இருத்தல் வேண்டும். சொல்லவந்த பொருளை விட ஒப்புமை உயர்ந்ததாக இருக்கவேண்டும். உலக வழக்கை யொட்டி ஒரு பொருளை உவமையின் வாயிலாக மிகவும் பெரிது படுத்தவும்-சிறிது படுத்தவும் செய்யலாம். வெளிப்படையாகக் கூறாவிடினும், ஒப்புமைப் பொருளுக்கு உரிய தன்மைகளை யெல்லாம் சொல்லவந்தபொருளுக்கும் ஏற்றிக்கொள்ளவேண்டும். தாமரை போன்ற முகம் என்று கூறும் வழக்கத்தை மாற்றி, முகம் போன்ற தாமரை என்று கூறியும் பொருளுக்குப் பெருமை யளிக்கலாம். முகத்தைத் தாமரை ஒவ்வாது- அவ்வளவு உயர்ந்த முகம் என மறுத்துக் கூறியும் வேடிக்கை செய்யலாம். பாரி பாரி என்று பாரியையே புலவர்கள் புகழ்கின்றனரே-மாரியைப் (மழை யைப்) புகழவில்லையே-என மறைமுகமாகவும் பாரிக்கு மாரியைச் சுவைபெற உவமிக்கலாம்.

உவம உருபுகள்:

(22) புலி யன்ன மறவன், பொன் போன்ற மேனி! என உவமையையும் பொருளையும் பாலமாக இணைக்கிற ‘அன்ன’, ‘போன்ற என்னும் ஒப்புமைச் சொற்களை “உவம உருபு என்பர். தொல்காப்பியர் இவற்றைப் போல் முப்பத்தாறு உருபுகள் கூறியுள்ளார்; இவ்வுருபுகளுள் இன்னின்னவை வினை, பயன், மெய், உரு ஆகிய உவமங்கட்குத் தனித்தனியே உரியவை எனப் பங்கும் பிரித்துள்ளார் இது, மிக மிக வளர்ச்சி பெற்ற ஒரு கலை நுட்பச் செய்தியாகும், உள்ளுறை உவமம்: (23)

தமிழ் ஒப்புமைக் கலையின் உயர் எல்லையை உலகிற்குப் பறைசாற்ற இன்னொரு சுவையானசெய்தி காத்துக் கிடக்கிறது. தொல்காப்பியர் அகத்திணையியலில் உவமத்தைப் பொதுவாக உள்ளுறை உவமம், ஏனை உவமம் என இரண்டு வகைப்படுத்தி அவற்றிற்கு இலக்கணமும் வகுத் துள்ளார். ஏனை உவமம் என்பது, உவமையையும் பொருளையும் வெளிப்படையாகச் சொல்லும் வெளிப்படை உவமமாகும். 'ஒருவர் மாடு இன்னொருவர் வைக்கோலை மேயும் ஊரினன் இவன்’ என உவமையை மட்டும் கூறி, அதன் வாயிலாக"இவன் மாற்றார் உடைமையைக் களவாடுபவன்’, என்னும் கருத்தைக் குறிப்பால் உணரவைப்பது உள்ளுறை உவமம். அதாவது, சொல்ல வந்த கருத்து உள்ளே உறையும் உவமம் உள்ளுறை உவமமாகும். இஃதல்லாத ஏனைய (மற்றைய) உவமம் ஏனை உவமமாகும்.

(24)"உள்ளுறை உவமம் அமைத்துப் பேசுவதும் எழுதுவதும் இக்காலத்திலும் சுவைத்துப் பாராட்டப்படுகின்றன. காதலன், காதலி, தோழி, செவிலி ஆகியோருள் இன்னின்னார் இப்ப்டியிப்படித்தான் உள்ளுறையுவமம் கூறவேண்டும் எனவும் தொல்காப்பியம் கூறுவதை நோக்குங்கால், ஒப்புமைக் கலையின் சல்லிவேறாம் புலப்படுகிறது.உள்ளுறை யுவமத்தின் அழகினைச் சங்ககால அகப்பொருள் நூல்களில் சுவைக்க வேண்டுமே!

4 பிற்கால நூல்களில் ஒப்புமைக் கலை

(25) வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங் காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் முதலிய பிற்கால நூல்களுள் பெரும்பாலானவை தொல் காப்பியத்தை ஒட்டியே உவம இலக்கணம் கூறியுள்ளன. சிறுபான்மை வேற்றுமையும் இருக்கலாம். தொல்காப்பியர் கூறியுள்ள வினை, பயன் என்னும் இரு பொதுத் தன்மை களையும் எல்லா நூல்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. அவர் கூறும் மெய், உரு என்னும் இரண்டையும், தண்டியலங் காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகிய நூல்கள், பண்பு’ என்னும் ஒன்றில் அடக்கியுள்ளன. வடிவும் நிறமும் பண்புகளே. இஃது ஒரு பெரிய வேற்றுமை யாகாது. பிற்கால நூல்களில் உவமையின் வகைகள் சிறிது விரிவாகக் கூறப்பட்டுள்ளன; ஈண்டு விரிப்பிற் பெருகும்.

5. ஒப்புமைக் கலையின் எதிர்காலம்

(26) அனைத்தும் தானாக உள்ள ஒப்புமைக் கலைக்கு நல்ல எதிர்காலம் காத்துக்கிடக்கிறது. அதன் வளர்ச்சியில் நாட்டம் செலுத்தவேண்டும். ஒப்புமைக் கலை குறித்துப் புதிய முறையில் தனி நூல்கள் எழவேண்டும். பழந்தமிழ் நூல்களிலுள்ள உவமைகளையும், சிறந்த பேச்சாளர்களின்-எழுத்தாளர்களின் உவமைகளையும் ஒன்றுதிரட்ட வேண்டும். தமிழ்ப் பழமொழிகளில் உள்ளுறை உவமம் அடங்கியிருப்பதை ஆராய்ந்து விளக்க வேண்டும். தமிழ் உவமைகளைப் பிற மொழிகளிலும், பிற மொழி உவமை களைத் தமிழிலும் பெயர்த்தல் வேண்டும். பாடத்திட்டத் தில் ஒப்புமைக்கலை உரிய இடம் பெறவேண்டும். ஒப்புமைக் கலைச் சுவை அமையப் பேசவும் எழுதவும் கற்பிக்கவும் பயிற்சியளிக்க வேண்டும். இலக்கியங்களிலுள்ள உவமை களைப் பற்றித் திறனாய்வு செய்யும் திறமையை வளர்க்க வேண்டும். பிற கலைகளில் ஒப்புமைக்கலை ஊடுருவி நிற்பதை ஆராய்ந்து உணரச் செய்யவேண்டும். பிற கலைகளின் வளர்ச்சிக்கு ஒப்புமைக் கலையைப் பயன்படுத்தும் முறையை ஆராய்ந்து செயல் படுத்தவேண்டும். இவ்வாறு எதிர்காலத்தில் ஒப்புமைக் கலை வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகள் நிரம்ப உள்ளன. செய்வோமாக! உயர்க ஒப்புமைக் கலை!