கருத்துக் கண்காட்சி/நாலடியார் ஆசிரியர் நக்கீரரா?
நீதிமன்றப் பகுதி
5.நாலடியார் ஆசிரியர் நக்கீரரா?
பெயர்க் காரணம்
நான்கு அடிகள் கொண்ட வெண்பாக்களால் ஆன நூல் ஆதலின், இந்நூல் ‘நாலடியார்’ எனப்பட்டது. இதில் நானூறு பாக்கள் உள்ளதால், இதனை நாலடி நானுாறு: என்றும் வழங்குவர். தமிழரின் மறைநூல் என்ற பொருளில் இது வேளாண் வேதம்’ என்றும் வழங்கப்படுகிறது. 'பதினெண் கீழ்க்கணக்கு' எனப்படும் சங்க காலம் சார்ந்த பதினெட்டு நூல்களுள் பெரும்பாலானவை நாலடி வெண் பாக்களால் ஆனவையாயிருப்பினும், இந்நூல் மட்டும் நாலடியார் என வழங்கப்படுவதிலிருந்து இதன் தொன்மை புலப்படுகிறது. இந்நூலுக்கு முதலில் நாலடியார் என்னும் பெயர் வைத்து விட்டதால், பின்வந்த நாலடிப் பாடல் நூல்கட்கு இப்பெயர் வைக்க முடியாமற் போயிற்று.
நூல் தொகுப்பு வரலாறு
மதுரையில் எண்ணாயிரம் சமண முனிவர்கள் ஆளுக்கு ஒரு பாடலாக எழுதி வைத்துவிட்டுப்போன எண்ணாயிரம் பனையோலைச் சுவடிகளை, என்னவோ குப்பை என்று எண்ணிப் பாண்டிய மன்னன் வைகையாற்றில் எறியச் செய்ய, அவற்றுள் நானூறு பாடல்கள் மட்டும் எதிர்த்து நீந்திக் கரையேறி வந்ததாகவும், அவற்றின் அருமையுணர்ந்து அவற்றைத் தொகுத்து நாலடியார்’ என்னும் பெயருடைய நூலாக்கியதாகவும் கதை கூறப்படுகிறது. ஆமாம்-கதையேதான் இது.இந்தக் கதையிலிருந்து நாம் அறியக்கூடிய கருத்தாவது:- 'திருக்குறள் திருவள்ளுவர் என்னும் ஒருவராலே இயற்றப்பட்டது போல், நாலடியார் ஒருவராலேயே இயற்றப்படவில்லை; பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பே நாலடியார்’ என்பதாகும். நாலடியார், பதுமனார் என்னும் புலவரால் தொகுக்கப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. எனவே, நாலடியார் ஒரு தொகைநூல் என்பது போதரும்.
புதுக் கொள்கை:
பலர் பாடல்களின் தொகுப்பு நாலடியார் என்னும் கருத்து இதுகாறும் கூறப்பட்டு வந்தது. இப்போது ஒரு புதுக்கருத்து புகலப்படுகிறது. அதாவது,-நர்லடியார் பலர் பாடல்களின் தொகுப்பு அன்று; நக்கீரர் என்னும் ஒரே புலவரால் இயற்றப்பெற்ற நூலே நாலடியார்:இந்த உண்மை யாப்பருங்கல விருத்தி உரையிலிருந்து அறியப்பட்டுள்ளது-என்பதே அந்தப் புதுக்கருத்தாகும்.
யாப்பருங்கல விருத்தியுரையால் கிடைக்கும் குறிப்பு தவறாகவும் இருக்கலாம். பொதுவாக நாலடியாரின் அமைப்பினை நோக்குங்கால், நானுாறு பாடல்களும் ஒரு வராலேயே பாடப்பட்டவையாகத் தோன்ற வில்லை. சில கருத்துகள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுள்ளன. சில கருத்துகள் ஒன்றுக்கொன்று முரணாயுள்ளன. திருக்குறளில் ஒவ்வொரு தலைப்பையும் சேர்ந்த பத்துப் பத்துப் பாடல்களும் அந்தந்தத் தலைப்போடு, பொருந்தியுள்ளன. ஆனால், நாலடியார் முழுவதையும் கூர்ந்து நோக்கின், சில பாடல்கள் தலைப்போடு பொருந்தாதிருப்பதை அறியலாம். இதிலிருந்து தெரிதலாவது;- நானூறு உதிரிப் பாடல்களைப் பத்துப் பத்துப் பாடல்கள் வீதம் எப்படி யாவது நாற்பது தலைப்புகளில் அடக்கிவிட வேண்டும் என ஒருவர் திட்டமிட்டுச் செய்து தொகுத்தமத்துள்ளார்-என்பதுதான். அறிஞர்கள் மிகவும் ஆராய வேண்டிய செய்தி இது.
ஏன், யாப்பருங்கல விருத்தியுரைப் பகுதியையே சிறிது ஆராய்ந்து பார்ப்போமே! யாப்பருங்கல் விருத்தியுரையின் பவானந்தம் பிள்ளை பதிப்பில், செய்யுளியலிலுள்ள 'செப்பல் இசையன வெண்பா’ என்னும் (4ஆம்) நூற்பாவின் உரையிடையே, சில வெண்பாக்கள் எடுத்துக் காட்டுகளாகத் தரப்பட்டுள்ளன. இறுதி வெண்பா அரக் காம்பல் நாறும் வாய்’ என்னும் நாலடியார்ப் (396) பாடலாகும். இதன் கீழே பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:
‘இன்னவை பிறவும் நக்கீரர் நாலடி நானூற்றில் வண்ணத்தால் வருவனவும் எல்லாம் துங்கிசைச் செப்ப லோசை, பிறவும் அன்ன’-
இந்தப் பகுதியில், 'நக்கீரர் நாலடி நானுாறு’ என்றிருப்பதைக் கொண்டு, நானுாறு பாடல் கொண்ட நாலடியாரை நக்கீரர் இயற்றினார் என்று ஒருசாரார் கூறுகின்றறனர். இந்த உரைப் பகுதியை ஊன்றி நோக்கவேண்டும். ‘இன்னவை பிறவும்' என்னும் தொடர் மேலே உள்ள நாலடியார்ப் பாடல் முதலியவற்றைக் குறிக்கிறதெனவும்’ 'நக்கீரர் நாலடி நானுாற்றில் வண்ணத்தால் வருவனவும், என்னும் தொடர், மேலேயுள்ள நாலடியார்ப் பாடல் முதலியவற்றைக் குறிக்காமல், வேறு ஏதோ ஒரு நூற் பாடலைக் குறிக்கிறதெனவும் உய்த்துணரலாம்.
இந்த உரைப் பகுதியே கூட, தமிழக அரசின் கீழைக் கலை ஒலைச் சுவடி நூலக நிறுவனத்தால் (Government
Orient Manuscripts Library, Madras) 1960 4b 4org) வெளியிடப்பட்டுள்ள பதிப்பில், 'நக்கீரர்’ என்னும் பெயர் இன்றி,
“இன்னவை பிறவும் நாலடி நானூற்றில் வண்ணத் தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை, பிறவும் அன்ன"--
என்றே உள்ளது. எனவே, சுவடிக்குச் சுவடி பாட வேறுபாடு உள்ளமை புலப்படலாம். யாப்பிலக்கணம் பற்றி வெண்பாவால் இயற்றப்பெற்ற “நக்கீரர் நாலடி நாற்பது’ என்னும் நூல் ஒன்று யாப்பருங்கல விருத்தியுரையால் நன்கு அறியப்பட்டுள்ளது. அந்த நினைவை வைத்துக் கொண்டு, சுவடி பெயர்த்து எழுதியவர், நாலடி நானூறு என்பதையும் நக்கீரர் 'நாலடி நானூறு’ என எழுதிவிட்டிருப்பாரா? ஒருவேளை, சமணமுனிவர் எழுதிய நாலடியாரினும் வேறானதாய் நக்கீரரால் ‘நாலடி நானூறு’ என்னும் பெயரில் வேறொரு நூல் எழுதப்பட்டிருக்கக் கூடுமா? சிலர் இவ்வாறு கூறியும் உள்ளனர். அதாவதுநானுாறு வெண்பாக்களால் நக்கீரர் யாப்பிலக்கண நூல் ஒன்று இயற்றியுள்ளார்-என்பதாகக் கூறுகின்றனர். இது உண்மையாயிருக்க முடியுமா? 'நாலடி நாற்பது' என்னும் பெயரில் நாற்பது வெண்பாக்களால் நக்கீரர் இயற்றியுள்ள யாப்பிலக்கண நூலை, நாலடி நானுாறு எனத்திரி’ பாக உணர்ந்து கொண்டு இவ்வாறு கூறுகின்றனரர்? மேலும், 'நக்கீரர் அடிநூல்' என்னும் பெயரில் யாப்பிலக் கண நூல் ஒன்று இருப்பதாகத் தொல்காப்பிய உரைகளிலிருந்து அறியப்படுகிறது; இந்நூலைச் சேர்ந்த 'ஐஞ்சி ரடுக்கலும்' என்னும் நூற்பா தொல்காப்பிய உரைகளில் எடுத்தாளப்பட்டுள்ளது-என்னும் செய்தியும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.மற்றும், நக்கீரர் ஒருவரா-பலரா என்ற சிக்கலும் ஈண்டு எழுகிறது. எட்டுத்தொகை-பத்துப்பாட்டில் பாடல்கள் எழுதியுள்ள நக்கீரரும் நாலடியார் இயற்றியதாகத் கூறப்படும் நக்கீரரும் நாலடி நாற்பது என்னும் யாப்பிலக்கணநூல் எழுதியதாகக் கூறப்படும் நக்கீரரும், நாலடி நானூறு என்னும் யாப்பிலக்கணநூல் எழுதியதாகச் சொல்லப்படும் நக்கீரரும், நக்கீரர் அடிநூல் என்னும் யாப்பிலக்கணம் எழுதிய நக்கீரரும் ஒருவரா-அல்லது- வெவ்வேறானவரா?
மற்றும், நாலடியாரை நக்கீரர் இயற்றியதாகக் கூறுபவர்கள், ‘இந்த நக்கீரர் பத்துப் பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப் படையை இயற்றிய நக்கீரர் அல்லர்; இவர் ஒரு சமண முனிவர் என்று கூறுகின்றனர். நாலடியார் இயற்றிய நக்கீரர் ஒரு சமண முனிவர் ஆதலின் நாலடியாரைச் சமண முனிவர் இயற்றியதாகக் கூறி வந்தனர்; பின்னர்ச் சமணமுனிவர்கள் இயற்றியதாகக் கூறத் தொடங்கிவிட்டனர்-என்பதாக இக்கொள்கையினர் கருதுகின்றனர்.
எது சரி? எது தவறு? ஒரே குழப்பமாயுள்ளது. இங்கே இன்னொரு கருத்தும் கூறுதற்கு இடம் உண்டு. யாப்பருங்கலம்-உறுப்பியலில் உள்ள, ‘இரண்டாம் எழுத்து ஒன்றுவதே எதுகை’ என்னும் (4ஆம்) நூற்பாவின் விருத்தியுரையிடையே,
(இன்னிசை வெண்பா)
“ஊசி யறுகை யுறுமுத்தம் கோப்பனபோல்
மாசி யுகுபனிநீர் வந்துறைப்ப-மூசும்
முலைக் கோடு புல்லுதற்கொன் றில்லாதான்
காண்மோ
விறக்கோடு கொண்டெரிக்கின் றேன்”
இந் நற்கீரர் வாக்கினுள் கடையிரண்டையும் மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டு கொள்க”
என்னும் உரைப் பகுதி உள்ளது. மேலே உள்ள பாட்டு ‘நக்கீரர் வாக்கு’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்தவெண்பா அகப்பொருள் பற்றியதாகும். இவ்வாறு நக்கீரர் நானூறு வெண்பாக்கள் பாடி ‘நாலடி நானூறு’ என்னும் பெயரில் ஒருநூல் படைத்திருக்கலாம். இந்த நக்கீரர் நாலடி நானூறு என்னும் நூலை யாப்பருங்கல விருத்தியுரை சுட்டியிருக்கலாம். அங்ஙனமாயின், இந்த நாலடி நானூறு வேறு என்பதும் உய்த்துணரப்படலாம்.
நடுநிலையுடன் பல கோணங்களிலும் நின்றுஆராய்ந்து நோக்குங்கால், நாலடியார் பலர் பாடிய பாடல்களின் தொகுப்புநூல் என்றே தோன்றுகிறது. இது நீதியான தீர்ப்பு.