கருவூரார் பூசா விதி
நூல் வரிசை எண் 24
கருவூரார் பூசா விதி / பூஜா விதி
நூல் பக்க எண் 329
காப்பு
[தொகு]எண்சீர் விருத்தம்
தெளிவு தனில் தெளிவு தரும் அருளும் காணும்
- செணத்திலே சிவ மயமும் சேரத் தோணும்
வழி அதனில் நல்ல வழி ஞானம் கூடும்
- மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும்
ஒளிவு தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார்
- உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும்
வெளி அதனில் வெளியாகி நாதத்து உள்ளே
- விளங்கி நின்ற வாலைப் பெண்ணாதி காப்பே
1-5
[தொகு]நூல்
1
ஆதி அந்தம் வாலையவள் இருந்த வீடே
- ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு
சோதியந்த நடுவீடு பீடமாகிச்
- சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப் பெண்ணாத்தாள்
வீதியந்த ஆறு தெரு அமர்ந்த வீதி
- விளையாடி நின்றதிரு மாளி கண்டாய்
பாதி மதி சூடியே இருந்த சாமி
- பத்து வயதாகும் இந்த வாமி தானே
2
வாமியிவள் மர்மம் வைத்துப் பூசை பண்ண
- மதியுனக்கு வேணுமடா அதிகமாக
காமிவெகு சாமி சிவ காமி ரூபி
- காணரிது சிறுபிள்ளை கன்னி கன்னி
ஆம் இவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
- அறிந்தாலும் மனம் அடக்கம் அறிய வேணும்
நாம் இவளைப் பூசை பண்ண நினைத்த வாறு
- நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே
3
காணப்பா இவளுடைய கற்பு மெத்த
- கண்டவர்க்குப் பெண்ணரசு நானே என்பாள்
ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டி வைப்பாள்
- உள்வீட்டுக்கு உள்ளிருந்து மேலே ஏறப்
பூணப்பா மனமுறைந்து வா வா என்பாள்
- புத்திரனே என்மகனே என்று சொல்லி
வேணப்பா வேணது எல்லாம் தருவேன் என்பாள்
- வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும் தானே
4
தானென்ற வாலையிவள் ரூபம் காணச்
- சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானும் உண்டோ
பானென்ற வாமத்துக்கு உள்ளே யப்பா
- பராபரையாள் பலகோடி விதமும் ஆடித்
தேனென்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம்
- சிறுபிள்ளை பத்து வயதுள்ள தேவி
ஊனென்ற உடலுக்குள் நடுவும் ஆகி
- உத்தமியாள் வீற்றிருந்த உண்மை தானே
5
உண்மையிவள் நாணமில்லாது இருந்த வீடே
- ஊருக்குள் நடுவீடே உற்றுப் பாரு
செம்மையாய்க் கண்டவர்கள் உண்டோ அப்பா
- செகசால வித்தை இவளாடும் வித்தை
உண்மையடா பஞ்சவண்ணம் ஆகிநின்ற
- உலகதனில் அலைந்தவர்கள் கோடா கோடி
நின்மலமாய்க் கண்டவர்கள் சொல்லார் அப்பா
- நேசமுடன் எனக்குரைத்த நிசம் கண்டேனே
6-10
[தொகு]6
கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு
- கால்மேலும் தலைகீழும் நடுவுமாகி
அண்டரொடு முனிவர்களும் கண்டு போற்ற
- ஆதவனும் அம்புலியும் அதிலே நின்று
தொண்டு பண்ணும் அவர்களிலே நாலு பேர்கள்
- சுகம் பெறலாம் என்று சொன்ன வாசல் நாலு
கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்று ஆறு
- கொள்கையெனக் காத்து இருந்த குறிப்பைப் பாரே
7
பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய்ப்
- பலநூலைப் படித்துப் படுகுழியில் வீழ்வார்
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே
- ஏழைமதி போகாதே என் தாய் பாதம்
போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய்ப்
- புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம்
பூத்தமலர் எடுத்து திருப் பாதம் போற்றப்
- பொறி ஐந்து கருவி கரணாதி போமே
8
போச்சுதடா மனமாய்கை வீறு போச்சு
- பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு
ஏச்சுதடா வென்று மனம் இறக்கல் ஆச்சு
- எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு
வாய்ச்சுதடா மனமடங்க வங்கென்றோர் சொல்
- வாய்பேசா மவுனத்தை அதிலே சேர்க்கக்
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை யூன்று
- கனியாகும் அக்கனியைக் கண்டு கொள்ளே
9
கொள்ளுதற்கு இங்கு இன்னமொரு குறிப்பைக் கேளு
- கோடியிடி மின் முழங்கும் கண்ணை மூடு
விள்ளுதற்கு மனம் அடங்காப் பூதம் காணும்
- விள்ளாதே யுள்ளபடி சிங்கென் றோர்சொல்
விள்ள விமே யுபாயம் அதால் நடுவே நில்லு
- வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு
கள்ளரைப் போல் மயங்காதே மவுனத் தூன்று
- கண்ணிணையும் திறக்காதே கருதிப் பாரே
10
பாரேது புனலேது அனலும் ஏது
- பாங்கான காலேது வெளியுமாகும்
நாரேது பூவேது வாசமேது
- நல்ல புட்பம் தானேது பூசை யேது
ஊரேது பேரேது சினமும் ஏது
- ஓகோகோ அதிசயந்தான் என்ன சொல்வேன்
ஆறேது குளமேது கோயில் ஏது
- ஆதிவத்தை அறிவதனால் அறியலாமே
11-15
[தொகு]11
ஆமெனவும் ஊமெனவும் இரண்டும் கூட்டி
- அப்பனே ஓமென்ற மூன்றும் ஒன்றாய்
நாமெனவும் தாமெனவும் ஒன்றே யாகும்
- நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான்
வாமம் வைத்துப் பூசைபண்ண இந்த மார்க்கம்
- வந்தவர்க்குச் சத்திசிறு பிள்ளை வாலை
சோமநதி அமுதம் உண்ண வாவா என்பாள்
- சுகம் உனக்கு பரமசுகம் அருள் செய்வாளே
12
செய்குவாய் பூசையது செய்யும் போது
- செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும்
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம்
- ஊமை யென்ற நடுத்தீயை அதிகம் கொண்டால்
பைகுவாய் அரவுவிடம் பொசுங்கிப் போகும்
- பங்கம் உனக்கு இல்லையடா அங்கமீதில்
ஐகுவாய் உள்ளடங்கிப் பேச்சை விட்டே
- அழைத்திடவே அஞ்சுமது கொஞ்சும் காணே
13
காணாத காட்சி யெல்லாம் கண்ணிற் காணும்
- கலங்காதே மெய்ம் மயக்கம் மெத்த வாகும்
பூணாத பணிபூண்டு சிறு பெண்ணாகப்
- போதமெனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய்
வாணாளை மடக்கியிவள் ரூபம் கண்டு
- மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு
கோணாத முக்கோணக் குறியைப் பாரு
- கூசாதே கண்கூசும் கூசுங்காணே
14
கூச்சமற்றும் பார்க்கையிலே இருள் போல் மூடும்
- கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம் போடு
வாய்ச் சமர்த்துப் பேசாதே மவுனத் தூன்று
- வாவா என்றே நீயும் வருந்திக் கூவச்
சூட்சமது இருந்த இடம் சொல்ல லாமோ
- சொல்லுதற்கு வாய்விட்டுச் சொல்ல லாமோ
தாய்ச் சமர்த்துப் பாராதே தாயைப் போற்று
- சற்குருபோல் உற்பனத்தைத் தாய் சொல்வாளே
15
சொல்வதற்கு இங்கு இவளையலால் சுகம் வேறுண்டோ
- சூட்சம் எல்லாம் இவளை விடச் சூட்சம் உண்டோ
நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி
- நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி
வல்லவர்க்கும் வல்லவளும் நானே யென்பாள்
- வரமவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி
புல்லர்க்கு இங்கு ஆயுதமும் புல்லேயாகும்
- புத்தி கெட்ட லோபிகட்கு புகல் ஒணாதே
16- 20
[தொகு]16
புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று
- பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவும் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே
- அறிவு கெட்டே ஊர்தோறும் சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு
- சடைமுடியும் காசாயம் தன்னைச் சாற்றி
இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய்
- எண்ணம் எல்லாம் பெண்ணாசை பூசை தானே
17
பூசையது செய்வம் என்று கூட்டம் கூடிப்
- புத்தி கெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
- படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார்
ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே
- அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி
- புரட்டு உருட்டாய் நினைவுதப்பிப் பேசு வானே
18
பேச்சென்றால் வாய்ச் சமர்த்தாய்ப் பேசிப் பேசிப்
- பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதும் காணார்
- நிர்மூடர் அனேகவித சாலம் கற்றே
ஆச்சென்றால் அதனாலே வருவது ஏது
- ஆத்தாளைப் பூசித்தோன் அவனே சித்தன்
மூச்சென்ன செய்யுமடா நரகில் தள்ளும்
- மோசமது போகாதே முக்கால் பாரே
19
முக்காலும் பொருந்தும் என்று சொன்ன போதே
- மோசமில்லை சூட்சமது மொழிந்து கூடும்
தக்காமல் போனபேர் அநேகர் உண்டு
- சமர்த்து அறிந்தால் அவன் வாமியவனே சித்தன்
எக்காலும் நடந்திரு நீகாலும் உன்னி
- இருந்தடங்கி உள்ளிருந்து வெளியில் போன
அக்காலைக் காணாமல் அலைந்தே யோடி
- அழிந்து கெட்டுப் போனவர்கள் அறிந்து கொள்ளே
20
அறிந்தகுறி அடையாளம் காண வேண்டும்
- அக்குறியில் சொக்கி மனம் தேற வேண்டும்
அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும்
- அலகையது வழிபாதை அறிய வேண்டும்
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண
- மயக்கத்தைக் கண்டு உனையும் மதிக்க வேண்டும்
நிறைந்தமதி குறைந்த வகை அறிய வேண்டும்
- நிச்சயத்தை அறிவார்க்கு முத்தி தானே
21-25
[தொகு]21
முத்தி தரும் என்று மனம் புத்தி யற்று
- மோசமது போகாதே பாசம் கையில்
சித்தமதில் சந்திரனை நிறுத்திக் கொண்டு
- செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கிச்
சுத்தியுடன் ஆதியந்தம் வைத்துச்
- சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி
நித்யமலர் அர்ச்சனை செய் பாதம் போற்றி
- நீயுமதி மதியுமதில் அதிகம் ஆமே
22
மதிபெருகுங் கதிபெருகும் வாதம் வாதம்
- வருந்தாதே யந்தமுறை யாகா தப்பா
நிதிபெருகும் இவள் குறியே வாத மாகும்
- நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி
நதிகள் தனை அறியாமல் சலத்தில் மூழ்கி
- நானே நான் என்று வாய் மதங்கள் பேசி
உரிய பொருள் உள்ள தெல்லாம் சுட்டுச் சுட்டே
- உட்பொருளைப் பாராமல் அழிந்திட்டாரே
23
இட்டகுறி நாதவிந்து ரூபங் காண
- இயலறியாச் சண்டாளர் சுட்டு மாய்வார்
விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும்
- விதியில்லார்க்கு எத்தனை தான் வருந்தினாலும்
பட்டுமனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை
- பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ் போக்காதே
திட்டமதாய் பாணம் வைத்துத் தேவி பூசை
- சீர்பெற்றார் பதினெட்டுச் சித்தர் தாமே
24
எட்டிரண்டும் ஒன்றுமது வாலை யென்பார்
- இதுதானே பரிதிமதி சுழுனை யென்பார்
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார்
- உதித்தெழுந்த மூன்றெழுத்தை அறியா ரையோ
கொட்டும் ஒரு தேளுருவாய் நிற்கும் பாரு
- கூட்டம் இட்டுப் பாராதே குறிகள் தோன்றும்
சுட்டசுடு காடுமது வெளியும் ஆகும்
- சொல்லுவதற்கு வாய் விளங்காச் சூட்சந்தானே
25
சூட்சம் இவன் வாசமது நிலைத்த வீடு
- சொல்லு தற்கே எங்குமாய்நிறைந்த வீடு
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு
- சித்தாந்த சித்தர் அவர் தேடு வீடு
ஓசைமணிப் பூரமதில் உதிக்கும் வீடு
- ஓகோகோ அதிசயங்கள் உள்ள வீடு
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு
- அவன் அருளும் கூடி விளையாடும் வீடே
26-30
[தொகு]26
வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல்
- வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல்
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல்
- திறமையான பன்னிருவர் காக்கும் வாசல்
ஆடுகிற புலியாகி நின்ற வாசல்
- அரகர சிவசிவா வாசி வாசல்
கூடுகிற முக்கோணப் பரங்கள் ஆகிக்
- குறுகுமதி பெருகுமதி கூற ஒண்ணாதே
27
ஒண்ணாகி இரண்டாகி விளைவும் ஆகி
- உத்தமியாள் உட்கருத்தை அறியப் போமோ
தின்னாத விடக்கெடுத்துத் தின்னச் சொன்னாள்
- செத்தசவம் போலிருந்து செபிக்கச் சொன்னாள்
பண்ணாத பணக் கோடிப் பண்ணி வைத்தாள்
- பார்த்திருந்து கழுத்தறுக்கப் பார்த்தாள் பாவி
எண்ணாது எண்ணி மனம் ஏங்கி நாளும்
- எனக்கபயம் ஏதெனவே எழுந்திட்டேனே
28
எழுந்திட்ட சிவன் பார்த்துத் தொடர்ந்து கூடி
- என்னையுமே இழுத்து மடி பிடித்துக் கொண்டு
கொழுந்து விட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டிக்
- குடிகேடி சத்துருப் போல் கூச்சலிட்டாள்
அழுதேனே முக்தியினி அந்த ஊரில்
- அரகரா துணை எனக்கே யாருமில்லை
எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப் போனார்
- என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே
29
ஏங்கினேன் ஈடழிந்தேன் விடும் அற்றேன்
- என்னைத் தான் கண்டவர்கள் சீசீ எயன்னத்
தூங்கினேன் காலறிந்து மடக்க மாட்டேன்
- துணை எனக்கு யாருமில்லை சூழ்ச்சியாக
வாங்கினேன் காலறிந்து மடக்க வேண்டும்
- வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னேன்
தேங்கினேன் முன்னுவள் பின்னு மாகத்
- திடம் எனக்குச் சொன்னது இந்தத் தெளிவுதானே
30
தெளிவதற்குச் சூட்சமிது தெளிவாய்ப் பாரு
- சிவனிருந்து விளையாடும் தெருவைப் பாரு
மொழிவதற்கு இந்நூலைவிட வேறொன்று இல்லை
- முன்னதி அந்தமொடு நடுவும் சொன்னோம்
சுழியதற்குள் சுழியிருந்த சூட்சம் சொன்னோம்
- சொல்லாத மவுனமுதல் கருவும் சொன்னோம்
ஒளிபிறக்கும் உறுதியிந்த உறுதி சொன்னோம்
- உற்பனமாய்ப் பார்த்தவர்கள் சித்தர் தாமே
முற்றும்