உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி/சயங்கொண்டார்

விக்கிமூலம் இலிருந்து

சயங்கொண்டார்


கலிங்கத்துப்பரணியைப் பாடிக் குலோத்துங்கன் புகழையும் அவன் தலைமைச் சேனாதிபதி கருணாகரத் தொண்டைமானின் பெருமையையும் இந்நிலவுலகில் என்றும் நிலை பெறச் செய்தவர் சயங்கொண்டார் என்ற புலவர் பெருமான். அவர் குலோத்துங்க சோழனின் அவைக்களத்தை அணி செய்த ஒப்பற்ற புலவர் மணி. அவர் கலிங்கத்துப் பரணியைப் பாட வேண்டிய சந்தர்ப்பத்தை முன்னர்க் குறிப்பிட்டோம்.[1] அவ்வரலாற்றை மெய்யெனக் கொண்டால் அவரது இயற்பெயர் ' சயங்கொண்டான் ’ என்ற பெயர் அன்று என்பது சொல்லாமலே போதரும்.

சயங்கொண்டாரது ஊர்,அவரது இயற்பெயர் இன்னது என்பது அறியக் கூடவில்லை. அது போலவே அவரது பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை வரலாறு முதலிய செய்திகளும் நன்கு புலப்படவில்லை. ஆனால்,

செய்யும் வினையும் இருளுண் பதுவும்
தேனும் நறவும் ஊனும் களவும்
பொய்யும் கொலையும் மறமும் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்



கையும் முகமும் இதழும் விழியும்
காலும் நிறமும் போலும் கமலம்
கொய்யும் மடவார் கண் வாய் அதரம்
கோபம் கமழும் தீபங் குடி.[2]

என்ற ஒரு பாடலில் அவரது ஊர் 'தீபங்குடி' என்ற செய்தி கிடைக்கின்றது. ஆனால் தீபங்குடி என்ற பெயருடன் தொண்டை நாட்டில் ஓருரும் சோழ நாட்டில் ஓருரும் உள்ளன. தஞ்சைமாவட்டத்துக் கல்வெட்டொன்று "இளங்கா நாட்டுத் தீபங்குடி” என்று ஓர் ஊரைக் குறிக்கின்றது.[3] இவற்றுள் சயங்கொண்டார் எந்த ஊரைச் சார்ந்தவர் என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனினும், இவர் முதற் குலோத்துங்கனைச் சிறப்பித்திருப்பதால் சோழநாட்டுத் தீபங்குடியினர் என்று கோடல் பொருந்தும்.

சமயம்

இவர் எச்சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும் நிச்சயிக்கக் கூடவில்லை. 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்[4] என்ற திருவாய் மொழிப்படி இவர் குலோத்துங்கனைத் திருமால் அவதாரம் என்று கூறுகின்றனரேனும்,[5] இவரை வைணவர் என்று கொள்ள இயலாது. கலிங்கத்துப் பரணியிற் கூறப்பெற்றுள்ள,

புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்
தொழில் காட்டப் புவன வாழ்க்கைச்
செயல்வண்ணம் நிலைநிறுத்த மலைமகளைப்
புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்[6]

என்ற தாழிசையாலும், திருமால் முதலிய ஏனைய தேவர்க்கும் வணக்கம் கூறப் பெற்றிருப்பினும் சிவ பிரானது வணக்கம் முதலில் கூறப் பெற்றிருப்பதாலும், உமாதேவி, ஆனைமுகன், முருகவேள், உமா தேவியின் அம்சமாகிய அன்னையர் எழுவர் ஆகியோருக்கெல்லாம் தனித்தனி வெவ்வேறு வணக்கம் கூறப் பெற்றிருப்பதாலும் இவரைச் சைவ சமயத்தினர் என்று சற்று உறுதியாகவே கூறலாம். நான்முகன், திருமால் முதலியவர்கட்கும் வணக்கம் கூறியிருப்பதால் இவர் சமரச நோக்கென்னும் பொது நோக்குடையவர் என்பதையும் அறியலாம்.

காலம்

முதலாம் குலோத்துங்கன் (கி. பி. 1070-1118) கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். இரண்டாம் கலிங்கப் போர் நடைபெற்றது கி. பி. 1112-ல். இந்தப் போரைத்தான் சயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியின் காவியப் பொருளாகக் கொண்டார், எனவே, சயங்கொண்டாரின் காலமும் குலோத்துங்கனின் காலமும் ஒன்றே என்று கொள்ள வேண்டியுள்ளது. இப்படிக் கொண்டால் இக்கவிஞர் கம்பருக்கு முந்தியவர் என்பது பெறப்படுகின்றது. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் கம்பர் தன் காவியத்தை கி. பி. 1178-ல் பாடி முடித்து கி. பி. 1185-ல் அரங்கேற்றினர் என்பதைப் பல சான்றுகளுடன் நிறுவியுள்ளமை இவ்டத்தில் நினைவு கூரத் தக்கது.[7]

புகழ்க்கொடை

சயங்கொண்டார் அபயன் என்ற முதற் குலோத்துங்கனுக்களித்த நிலைத்த புகழ்க்கொடை அவன் அவருக்கு உதவியிருக்கக் கூடிய நிலையாப் பொருட் கொடையினும் பல்லாயிரம் மடங்கு பெரிது என்பதை விதந்து கூற வேண்டியதில்லை. ஒரு சமயம் இவர் அபயன் மீது முனிவு கொண்டு பாடியதாக தமிழ் நாவலர் சரிதையில் காணப்பெறும் வெண்பாவாலும் இதனை நன்கு அறியலாம்.

அவ்வெண்பா :

        காவலர் ஈகை கருதுங்கால் காவலர்க்குப்
        பாவலர் நல்கும் பரிசுஒவ்வா—பூவில் நிலை
        யாகாப் பொருளை அபயன் அளித் தான்புகழாம்
        ஏகாப் பொருள் அளித்தேம் யாம் [8]

ஒருகால் சோழன் தனக்குச் செய்த சிறப்புச் சிறிது குறைந்து தன் மனத்தைப் புண்படுத்தவே அதனைப் பொறாராய்ச் சினங்கொண்டு சயங்கொண்டார் இதனைப் பாடினர் என்று கூறுவர்.

கவித்திறமை

சயங்கொண்டாரது பாக்களனைத்தும் பத்தழகுங் கொண்டனவாய் மிளிர்கின்றன. முன்னர்க் காணப் பெறும் ஆராய்ச்சிக் கட்டுரைகளால் இவர் பாடல்களில் சொல் நயமும் பொருள் நயமும் சந்த வின்பமும் கொப்புளித்து நிற்பதை அறியலாம். கலிங்கத்துப் பரணியில் 54-சந்த பேதங்கள் காட்டப்பெறுகின்றன. இவை பற்றியே பிற்காலத்தராகிய பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பார் இவரது கவித்திறமையை ஏனைய சிலருடைய கவித்திறமையுடன் ஒப்ப வைத்து,

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர்
        சயங்கொண்டான்; விருத்த மென்னும்
ஒண்பாவில் உயர்கம்பன்; கோவைஉலா
        அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
        வசைபாடக் காளமேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காச
        லாலொருவர் பகரொ ணாதே [9]

என்று சிறப்பித்து ஓதியுள்ளார்,

இவர் பாடிய மற்றொரு நூல்

இப்புலவர் பிரான் கலிங்கத்துப் பரணியைத் தவிர புகார் நகரத்து வணிகரைச் சிறப்பித்து 'இசையாயிரம்’ என்ற மற்றொரு நூலும் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையால் அறியக் கிடக்கின்றது. அந்நூலில் "செட்டிகள் மேல் இசையாயிரம் பாடிய போது செக்கார் 'புகார் தங்கட்கு ஊர்' என்று பாடச் சொல்லச் சயங்கொண்டார் பாடியது” என்ற தலைக்குறிப்புடன் காணப்படும்,

        ஆடுவதும் செக்கே அளப்பதுவும் எண்ணெயே
        கூடுவதும் சக்கிலியக் கோதையே-நீடுபுகழ்க்
        கச்சிச்செப் பேட்டிற் கணிக்குங்காற் செக்கார்தாம்
        உச்சிக்குப் பின்புகார் ஊர் [10]

என்ற வெண்பாவால் இதனை அறியலாம்.



  1. இந்நூல்-பக்கம்-15
  2. தமிழ் நாவலர் சரிதை-செய் 117. இப்பாடல் தீபங்குடிப் பத்தென்னும் நூலில் சில பாட வேறுபாட்டுடன் மூன்றாவது பாட்டாகவுள்ளது.
  3. A. R. No. 28 of 1917
  4. திருவாய்மொழி நாலாம்பத்து.செய்.8,
  5. தாழிசை,232,
  6. தாழிசை-1.
  7. 7. எஸ். வையாபுரிப்பிள்ளை: தமிழ்ச்சுடர் மணிகள்— கம்பர். பக்கம்-130.
  8. தமிழ் நாவலர் சரிதை செய்-116
  9. தனிப்பாடல்
  10. 10. தமிழ் நாவலர் சரிதை செய். 119